கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – III

இராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம் தெற்றெனப் புலப்பட்டிருக்கும். அது என்னவென்றால் – இராசேந்திர சோழன் நிறுவ முயன்றதும் ஓரளவு வெற்றிகரமாக நிறுவியதும் ஒரு தரைப்பேரரசு அல்ல: அது ஒரு கடற்பேரரசு!

பரந்த தரைப்பிரதேசங்களைக் கைப்பற்றுவது இராஜேந்திரனின் மூலோபாயமாக இருக்கவில்லை. குறிப்பாக, மனித சஞ்சாரமில்லாத காட்டுப்பிரதேசங்களையும் சதுப்பு நிலங்களையும் கைப்பற்றுவதில் அவன் என்றுமே படைகளை வீணடிக்கவில்லை. மத்தியப்பிரதேசத்தின் தண்டகாரண்யம், பர்மாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் போன்றவற்றை அவன் தவிர்த்தே முன்னேறியிருக்கிறான். பரந்த தரைப்பகுதிகளைக் கைப்பற்றுவது அவனது குறிக்கோளாக இருந்திராவிட்டாலும் பரந்த கடல்பகுதிகளைக் கைப்பற்றுவது அவனது குறிக்கோளாக நிச்சயமாக இருந்திருக்கிறது. அவனைப்பொறுத்தவரையில் கடல்பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எந்த எந்தத் தரைப்பகுதிகளின் கட்டுப்பாடு அவசியமோ அவற்றையெல்லாம் அவன் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறான்.

பகுதி II இல் சொன்னது போல வங்காளம் வரை அரையன் ராஜராஜனால் கைப்பற்றப்பட்ட பிறகு வங்காள விரிகுடாவின் மேற்குக் கரை முற்று முழுதாக இராஜேந்திரன் வசமானது. அதே வேளையில் தூர கிழக்கு – முக்கியமாக ஸ்ரீவிஜயம், ராஜேந்திரனின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். முதலாம் ராஜராஜன் காலத்தில் ஸ்ரீவிஜயத்திற்கும் ராஜராஜனுக்கும் நட்புறவு நிலவியிருக்கிறது. இதற்குப்பிரதான காரணம் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில் இருந்ததால் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பில் ஒன்றுடன் ஒன்று முட்டுப்படும் நிலையில் இருக்கவில்லை. ராஜராஜனைப் பொறுத்தவரை ஸ்ரீவிஜயத்தின்மீது படையெடுத்துக் கைப்பற்றுவதென்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு விடயமாக இருந்தது. ஸ்ரீவிஜயத்திற்கும் அப்படித்தான். எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாகவோ பகைவராகவோ நினைக்கவில்லை. ஸ்ரீவிஜய மன்னனான மாற விஜ்யோத்துங்க வர்மன் ஒரு பௌத்தன் என்ற வகையில், நாகபட்டினத் துறைமுகத்துக்கு வரும் தனது வணிகர்கள் வழிபடுவதற்கு சூடாமணி விகாரத்தைப் புதுக்கி அமைத்தான். இதை அவன் ராஜராஜனின் அனுமதியுடனும் நட்புடனும் செய்தான். இதே போலச் சீன தேசத்திலும் இவன் விகாரைகளை அமைத்திருக்கிறான்.

அதேவேளை, சீனப்பேரரசு வெளியுலகுடன் வர்த்தகம் செய்வதற்கிருந்த கடல் வழிகளில் ஸ்ரீவிஜயம் முழு ஆதிக்கம் பெற்றிருந்தது. மலாக்கா அல்லது சுந்தா தொடுகடலின் ஊடாகவே சீனாவில் இருந்து வரும் எந்தக் கப்பலும் சோழநாட்டுக்கோ அப்பாஸியப் பேரரசுக்கோ ரோம சாம்ராஜ்ஜியத்துக்கோ செல்ல வேண்டும். இதனால் இவ்வழியில் செல்லும் கப்பல்கள் ஸ்ரீவிஜயத்திற்குக் கப்பம் செலுத்த வேண்டியிருந்தது. சீனாவில் தாங் வம்ச ஆதிக்கம் முடிந்து சோங் வம்ச ஆதிக்கம் தொடங்கிய 10ஆம் நூற்றாண்டில் அவர்களது பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றம் ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் ஸ்ரீலங்காவிலும் நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியாவிலும் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தை ஒருவாறு ஒத்தது. அதாவது, மூடிய தன்னிறைவான பொருளாதாரக் கொள்கைக்குப் பதிலாகத் திறந்த, வரிகள் குறைவான, சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் கொள்கை ஏற்பட்டது. குவாங்சௌவில் ‘சுதந்திர வர்த்தக வலயம்’ அமைக்கப்பட்டது. ராஜேந்திரன் காலத்தில் இருந்து சோழநாடும் இப்படியான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்கலாம் (‘சுங்கம் தவிர்த்த சோழன்’ ஆகிய முதலாம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதித் தீர்வைகள் நீக்கப்பட்டதோடு இந்தத் திறந்த பொருளாதாரக் கொள்கை பூரணம் பெற்றதெனலாம்). எனவே சோழ நாட்டுக்கும் சீனாவுக்கும் மத்தியில் இருந்த ஸ்ரீவிஜயம் கப்பல்களுக்குக் கடுமையான கடவு வரிகள் விதிப்பதைச் சீனாவோ, சோழ நாடோ விரும்பவில்லை. அக்காலச் சோழ தேசமானது பாரிய கடல் வியாபாரக் கம்பெனிகளைக் கொண்டிருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வணிகர்கள் ஒன்று சேர்ந்து முதலிட்டு, பல கப்பல்களையும் அவற்றைப் பாதுகாக்கப் படைகளையும் வாங்கி / அமர்த்தி, கடல் கடந்த வாணிபம் செய்து பெரும் லாபம் ஈட்டும் குழுமங்கள் இவை. எனவே இந்த வகையிலும் சோழநாடானது ஐரோப்பியக் காலனி ஆதிக்கத்துக்கு (கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு) முன்னோடியாக இருந்திருக்கிறது. அஞ்சு வண்ணத்தார், நாலா தேச திசை அய்யாயிரத்து ஐந்நூற்றுவர, மணிக்கிராமத்தார் போன்றவை இந்தக் கம்பெனிகளின் பெயர்கள். மிகுந்த பண பலம் வாய்ந்த இவர்கள் ஸ்ரீ விஜயத்தைப் பணிய வைக்கும்படி இராஜேந்திரனுக்கு நெருக்குதல் கொடுத்திருக்கலாம்.

இது இவ்வாறிருக்கையில், கெமர் பேரரசனான முதலாம் சூரியவர்மன் (கிபி 1006 – 1050) தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். கிரா தீபகற்பத்தின் கழுத்துப்பகுதியில் இருந்த லாவோ நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு மேலும் தெற்கு நோக்கி வந்தபோது ஸ்ரீவிஜயத்தின் பகுதியான அல்லது சிற்றரசான தாமிரலிங்க நாட்டுடன் அவன் மோத வேண்டியதாயிற்று. தாமிரலிங்க நாட்டினரும், பொதுவாக ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியமும் பௌத்த மதத்தைக் கடைப்பிடித்தன. முதலாம் சூரியவர்மன் பௌத்தனானாலும் அவனது நாட்டினர் பெரும்பாலோர் சைவர்கள். தாமிரலிங்கத்தைத் தான் ஆக்கிரமிப்பதானால் ஸ்ரீவிஜயப்பேரரசுடன் மோதல் ஏற்படும் என்பதையும் அதனைத்தான் தனித்துச் சமாளிக்க முடியாது என்பதையும் சூரியவர்மன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இதனால் அவன் சமய ஒற்றுமையைக்காரணம் காரணம் காட்டிச் சைவர்களான சோழர்களுடன் உறவை வளர்த்துக்கொண்டு, ஸ்ரீவிஜயத்தைத் தாக்க அவர்களிடம் உதவி கோரினான். தனது சொந்த ரதத்தையே ராஜேந்திர சோழனுக்குப் பரிசாகவும் அனுப்பினான்.

எனவே கிபி 1024 ஆம் ஆண்டளவில் ஸ்ரீவிஜயத்தைத் தாக்க மூன்று காரணங்கள் ராஜேந்திரனுக்கு இருந்தன.

1 – சாம்ராஜ்ய விஸ்தரிப்பு மற்றும் வல்லாதிக்க ஆசை.
2 – ஸ்ரீவிஜயத்தின் வணிகத் தீர்வைகள் சோழ நாட்டின் கடல் வர்த்தகத்தைப் பாதித்ததும், இதன் விளைவாக சோழநாட்டுக் ‘கம்பெனிகள்’ இராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கக்கூடிய அழுத்தமும்
3 – சூரியவர்மனின் நட்பும் அவன் கோரிக்கையும்

இவ்வாறு வலிமையான மூன்று காரணங்களினாலேயே தனது தந்தையின் காலத்தில் நிலவிய சுமூகமான உறவுகளை உடைத்துக்கொண்டு ராஜேந்திரன் ஸ்ரீவிஜயத்தின்மேல் படையெடுத்தான். அதே நேரம், சீனப்பேரரசும் ஸ்ரீவிஜயத்தின் கடலாதிக்கத்தை விரும்பவில்லை என்பது பற்றிய சூசகங்கள் ராஜேந்திரனுக்குக் கிடைத்திருக்கலாம். கிபி 1015 அளவில் வரலாற்றில் முதன்முறையாக சோழ – சீன நேரடி ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனாலும், சீனர்களிடம் வலிமையான தரைப்படை இருந்த அளவு கடற்படை வலிமையற்றிருந்ததாலும், சீனா சோழ ஆக்கிரமிப்புக்கு எதிராகக் களமிறங்காது என்பதை ராஜேந்திரன் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டிருக்க வேண்டும்.

ராஜேந்திரனின் கோபத்தை ஸ்ரீவிஜயம் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. கிபி 1012 இல் ராஜேந்திரன் சிம்மாசனம் ஏறியதிலிருந்து கிபி 1025 இல் அவனது படையெடுப்பு வரை சோழ – ஸ்ரீவிஜய உறவுகள் மோசமாக்கிக்கொண்டு சென்றிருக்கும். ஆனாலும், சோழர்களின் கோபமானது ராஜதந்திர அடிப்படையில் வெளிப்படுமேயன்றி நேரடிப்படையெடுப்பாக வெளிப்படும் என்று ஸ்ரீவிஜயம் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனெனில், உலக வரலாற்றிலேயே அவ்வளவு நீண்ட தூரம் கடல்கடந்து சென்று கடல்வழிப் படையெடுப்பொன்றை அதுவரை யாரும் செய்திருக்கவில்லை. அதற்குப்பிறகு கூட, இற்றை வரை, அவ்வளவு பெருமெடுப்பிலான கடல்வழித் தரையிறக்கம் அவ்வளவு தூரம் கடல்கடந்து இடம்பெற்றதில்லை (இரண்டாம் உலக யுத்தத்தின் நோர்மாண்டி தரையிறக்கம் போன்றவை அதிகளவு படைகளை ஈடுபடுத்தி இருந்தாலும், அப்படைகள் கடந்த கடல்வழித் தூரம் ராஜேந்திரன் படைகள் கடந்ததை விட மிகக்குறைவாகும். ) எனவே இலட்சக்கணக்கான படைகளுடன் அவ்வளவு தொலைதூரம் கடல்தாண்டி ஒரு மன்னன் வரக்கூடுமென்று ஸ்ரீவிஜயம் எதிர்பார்த்திருக்காது. அப்படியே கடல்வழிப்படையெடுப்பு ஒன்று ஏற்பட்டாலும் அது மலாக்காத் தொடுக்கடல் வழியேதான் ஏற்படுமென்று ஸ்ரீவிஜயம் எதிர்பார்த்ததாகத் தெரிகிறது. இதற்குக்காரணங்களும் இருந்தன. சோழப்பேரரசில் இருந்து சீனாவுக்குச்செல்லும் வணிகக்கப்பல்கள் பெரும்பாலும் நாகப்பட்டினம் அல்லது மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு நேர் கிழக்காகப் பயணம் செய்து கடாரத்திற்குச் சென்று, அங்கே உணவு, நீர் முதலியவற்றை மீள் நிரப்பிக்கொண்டு மலாக்காத் தொடுகடலினூடாக ஸ்ரீவிஜயத்தின் ஏனைய நகரங்களுக்கும் அங்கிருந்து கேமருக்கும் சீனாவுக்கும் சென்றன. எனவே அதே பாதையில் தான் படையெடுப்பு வந்தால் வருமென்று ஸ்ரீவிஜயம் எதிர்பாத்திருக்கலாம்.

ஆனால், ஸ்ரீவிஜயம் எதிர்பாராத வழியில் ராஜேந்திரன் தாக்குதல் அமைந்தது. அவனது போர்க்கப்பல்கள் சற்றே தென் கிழக்காகப் பயணம் செய்து சுமாத்திராவின் மேற்குக்கரையில் இருந்த பாருஸ் என்ற துறைமுகத்தை முதலில் அடைந்தன. அவ்வளவு முக்கியமற்ற அந்தத் துறைமுகத்தில் தமிழ் வர்த்தகர் பலர் இருந்ததோடு ஸ்ரீவிஜயத்தின் கடற்படை அத்துறைமுகத்தைப் பாதுகாக்கவில்லை. அங்கே உணவும் நீரும் பெற்றுக்கொண்ட சோழர் போர்க்கப்பல்கள் தென்கிழக்காக மேலும் பிரயாணம் செய்து சுந்தா தொடுகடலினூடாக ஸ்ரீவிஜயத்தின் கடல்பகுதிக்குள் பிரவேசித்தன. இதனால் மூன்று தந்திரோபாய நன்மைகள் ராஜேந்திரனுக்குக் கிடைத்தன.

1) ஸ்ரீவிஜயத்தை ஏதிர்பாராத திசையிலிருந்து தாக்க முடிந்தமை.
2) ஸ்ரீவிஜயத்தின் தலைநகரை முதலாவதாகத் தாக்க முடிந்தமை
3) அப்போது வீசிக்கொண்டிருந்த தென்கீழ்ப் பருவக்காற்றைப்பயன்படுத்தி வட மேற்காக, அதாவது ஸ்ரீவிஜயத்தின் கடற்கரை ஓரமாக வேகமாகப் பிரயாணம் செய்ய முடிந்தமை. இதனால், தலைநகரம் தாக்கி அழிக்கப்பட்டதும் மற்றைய நகரங்களுக்கு சுதாரித்துக்கொள்ள நேரம் இருக்காது.

இந்த மகத்தான தந்திரோபாயத்தின்படி ராஜேந்திரன் முதலில் ஸ்ரீவிஜய நாட்டின் இதயப்பகுதியையும் தலைநகரையும் தாக்கிக் கைப்பற்றினான். ஸ்ரீவிஜயத்தின் தலைநகர் அன்று ஸ்ரீ விஜயம் என்றே அழைக்கப்பட்டது. அது மூசி நதி முகத்துவாரத்தில் உள்ள தற்போதைய பலிம்பாங் நகராகும். இப்போரில் பேரரசன் சங்கிராம விஜயோத்துங்க வர்மன் (மாற விஜயோத்துங்கனின் மகன்) உயிரோடு பிடிக்கப் பட்டதுடன் பல செல்வங்களும் கைப்பற்றப்பட்டன. அதன்பிறகு ஸ்ரீவிஜயத்திற்கு உட்பட்ட சிற்றரசுகளையும் நகரங்களையும் ஒவ்வொன்றாகச் சோழர் கடற்படை தாக்கி அழித்தது. அரசனை இழந்த ஸ்ரீவிஜய நகரங்கள் மிக விரைவாகப் பருவக்காற்றோடு நகர்ந்த சோழர் படையைச் சமாளிக்க முடியவில்லை. இவ்வாறாக சாவகத்தில் இருந்த பந்தூர் (தற்போதைய Batu Jaya ), ஹரி நதி முகத்துவாரத்தில் இருந்த மலையூர் (தற்போதைய Jambi), இன்னும் வடக்கே இருந்த பண்ணை (தற்போதைய Labuhan Batu ), சுமாத்திராவின் வட முனையான அட்ஷயமுனையும் (தற்போதைய Banda Aceh ) அதை உள்ளிட்ட சிற்றசரான இலாமுரி தேசமும் ( தற்போதைய Aceh Province ), நக்கவாரத் தீவு (தற்போதைய Niccobar ), கடாரம் (தற்போதைய Kedah ), இலங்காசோகச் சிற்றரசு (தற்போதைய Pattani அண்ட் Surroundings ), தாமிரலிங்க அரசு, அதற்குட்பட்ட தக்கோலம் (தற்போதைய Takua Pa ), மாயிருடிங்கம் (தற்போதைய Chaiya ), பர்மாவின் மாபாப்பாளம் ( Mon State ) ஆகிய இடங்களை சோழர் கடற்படை கைப்பற்றியது. இவ்விடங்களின் அமைவைப் படம் 1 இல் காண்க.

 

படம் 1: ராஜேந்திரன் கடற்படை கைப்பற்றிய இடங்கள். Srivijaya Ports Raided by Rajendra Chola

மேலே நான் குறிப்பிட்டதற்கு ஆதாரங்கள் ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தியும்இந்தோனேசிய மற்றும் மலேசிய வரலாற்று மூலங்களுமாகும். இவற்றில் பெரும்பாலான இடங்களின் அமைவுகள் வரலாற்றாசிரியர்களினால் ஒப்புக்கொள்ளப்பட்டவை ஆயினும் சிற்சில இடங்கள் பற்றி விளக்கம் தேவை. ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட…

என்று குறிப்பிடப்படுகிறது. இதிலே குறிப்பிடப்பட்ட இடங்கள் மேலும் கீழுமாக அமைவதால் ராஜேந்திரன் படையெடுத்த ஒழுங்கில் இவை குறிப்பிடப்பட்டிருக்க முடியாது என்பது தெளிவு. ஸ்ரீவிஜயத்தை முன்பு குறிப்பிட்டுப் பிறகு பல வரிகளுக்கு அப்பால் “இலிம்பங்கம்” என்றொரு ஊரைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த “இலிம்பங்கம்” எதுவென்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடவில்லை. நான் பெயரொற்றுமை கருதி இதைப் ‘பாலிம்பங்’ என்று கருதுகிறேன். அவ்வாறாயின் முதற்குறிப்பிட்ட ஸ்ரீவிஜயம் நாட்டையும் பிறகு குறிப்பிட்ட “இலிம்பங்கம்” ஸ்ரீவிஜய நகரையும் ( ‘பாலிம்பங்’) குறைத்திருக்கலாம். அதேபோல “விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்” என்ற வரியில் குறிப்பிடப்பட்ட ஊரை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காணவில்லை. இதற்கு, அவர்கள் “வளைப்பந்தூர்” என்றொரு இடத்தைத் தேடிக்கொண்டிருப்பதும் காரணமாகலாம். ஆனால், “கடுமுரண் கடாரமும்”, “துறைநீர்ப் பண்ணையும்”, “தொன்மலை யூரும்” முதலிய வரிகளை வைத்துப்பார்க்கும் போது வரியின் இரண்டாம் பகுதியிலும் அடைமொழிகள் இருக்கின்றன. எனவே, “விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்” என்ற வரியில் ஊரின் பெயர் “பந்தூர்” ஆகக்கூட இருக்கலாம். இந்த ஊர் எங்கே இருக்கும் என்று அடுத்து யோசித்தேன். மலாக்கா மற்றும் சுந்தாத் தொடுகடல்களைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர இராஜேந்தின் விரும்பி இருந்தால் இவ்விரு தொடு கடல்களின் இரண்டு பக்கங்களையும் தாக்கியிருப்பான். மலாக்காத் தொடுக்கடலின் இரு கரைகளிலும் ராஜேந்திரன் பிடித்த இடங்களை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருந்தாலும் சுந்தாத் தொடுகடலின் மறுகரையில் அதாவது சாவகத்தில் இடங்கள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. எனவே “பந்தூர்” சாவகத்தில் இருக்கலாமா? இவ்வாறு தேடியபோது உடனடியாகவே இரண்டு ஊர்கள் கிடைத்தன. ஒன்று Batu Jaya. இந்த இடத்தில் பல இந்துத் தொல்பொருள் எச்சங்கள் கிடைத்துள்ளன. “ஜெயா” என்ற பிற்சேர்க்கை பல மலேசிய, இந்தோனேசிய நகரங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது அதை விட்டுப்பார்த்தால் Batu. அதேபோல Bantung என்றொரு பெருநகரமும் தற்போதைய சாவகத்தில் உண்டு. எனவே இவற்றில் ஒன்றே “விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்” என்ற வரியில் குறிக்கப்பட்டுள்ளது என்பது எனது தீர்மானம்.

இவைதவிர மற்றைய இடங்களின் அமைவுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆதலால் அதைப்பற்றிய ஆதாரங்களைத் தவிர்க்கிறேன். ஆனால் இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், படம் 1 ஐப்பார்க்கும் போது ஸ்ரீவிஜயத்தின் பகுதிகளை ஒன்று விடாமல் மிகத்திட்டமிட்ட வகையில் ராஜேந்திரன் கைப்பற்றி இருப்பது தெரிகிறது. அத்தோடு வடக்கே ஒரு தனிப்புள்ளி இருக்கிறது (மாபாப்பாளம்). இது தனித்திருப்பதற்குக் காரணங்கள் இரண்டு.

1) மாபப்பாளத்திற்கும் தாமிர லிங்கத்திற்கும் இடையில் இருந்த கடற்கரையை சோழர்களின் நேச அணியான கெமர்கள் கைப் பற்றி இருந்தது.

2) பர்மாவின் பல பகுதிகள் மனித சஞ்சாரமற்ற காடுகளாக இருந்ததால் அப்பகுதியில் துறைமுகங்கள் இல்லாது இருந்தது.

எனவே இவற்றை விட்டுப்பார்த்தால், ஸ்ரீவிஜயப்படையெடுப்பின் வெற்றியுடன் இந்து சமுத்திரத்தில் அசைக்க முடியாத கடல் ஆதிக்கத்தை இராஜேந்திரன் பூரணப் படுத்தி இருக்க வேண்டும். கீழே உள்ள படங்களைப்பாருங்கள். இவை ராஜேந்திர சோழன் படையெடுத்த்து வென்ற இடங்கள். நான் முன்னர் குறிப்பிட்டது போல இந்த எல்லா இடங்களையும் ஒரே படத்தில் அமைத்துப் பார்க்கும்போது ராஜேந்திர சோழன் மிகுந்த திட்டமிடலுடன் ஒரு கடற்பேரரசை அமைத்திருக்கிறான் என்பதும், அதன்மூலம் இந்து சமுத்திரத்தில் பெரும் கடலாதிக்கம் உள்ள உலக வல்லரசாக சோழ நாடு அவன் காலத்தில் மிளிர்ந்திருக்கிறது என்பதும் தெளிவாக விளங்குகிறது. சீனர்களின் “முத்துக்களின் தொடர்” மூலோபாயத்தைப்பற்றி இப்போது பேசுகிறோம். கீழே உள்ள படங்களில் காண்பது ராஜேந்திரனின் முத்துக்களின் தொடர்!

படம் 2: ராஜேந்திரனின் முத்துக்களின் தொடர்!  Rajendra’s ‘String of Pearls’

 

படம் 3: ராஜேந்திரனின் முத்துக்களின் தொடர்!  Rajendra’s ‘String of Pearls’-  Zoomed version

 

படம் 4:  Rajendra’s conquests west of the Bay of Bengal

 

படம் 5:  Rajendra’s conquests east of the Bay of Bengal

 

படம் 6:  The battle of Kedah, as depicted in a Siamese painting. By Everdawn at en.wikipedia – Transferred from en.wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16275150

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *