அறிமுகம்

‘விழி மைந்தன்’ என்ற பெயரில் தமிழில் எழுதி வரும் பேராசிரியர். ம. பிரவீணன் (M. Piraveenan) அவர்கள் தொழில்முறையில் ஒரு விஞ்ஞானியும் பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆவார். இவர் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக் கழகத்தில் கணணிப் பொறியியல் துறையில் முதல்வகுப்புப் பட்டமும் சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அத்துறையில் கலாநிதி / முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றவர். இப்போது சிட்னிப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவுஸ்திரேலியாவின் பொதுநலவாய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியலாளராகவும், விஞ்ஞானியாகவும் கடமையாற்றியுள்ளார். தற்சமயம் நோய்ப்பரவலியலைக் கணனியில் வடிவமைத்தல், வலையமைப்புகள், போட்டிக்கோட்பாடு முதலிய துறைகளில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் பௌதிகம், கணனி விஞ்ஞானம், நோய்ப்பரவலியல் முதலிய துறைகளிலுள்ள முன்னணி ஆராய்ச்சி ஏடுகளில் வெளிவந்துள்ளதோடு இத்துறைகளில் உலகளவில் கணிக்கப்படுகிற ஒரு ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

விழிமைந்தன் எழுத்துத் துறையில் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஒருவர். அறிவியல் கருத்துக்களைத் தமிழில் தருவதும், மனிதத்துவம், அறம் என்பன பற்றிய தனது சிந்தனைகளைக் கலையழகுடன் பகிர்ந்து கொள்வதும், இவர் தமிழில் எழுதுவதற்கான உந்துசக்திகளாகும். இவரது எழுத்து முயற்சிகள் சிறுகதை, விஞ்ஞானப் புனைகதை, கவிதை, கவிவிதை, வரலாற்றுப் புதினம், நாடகப் பிரதிகள், வலைப்பூப் பதிவுகள் அல்லது சிறுகட்டுரைகள் என்றவாறு விரிந்து செல்கின்றன. இவைதவிர, தமிழ் / ஆங்கில விவாதங்கள், மேடைப்பேச்சு, மேடை நாடகம், நிகழ்ச்சித் தொகுப்பு, வானொலி / தொலைக்காட்சி அளிக்கைகள் முதலிய கலைகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். கர்நாடக சங்கீதத்திலும் மிருதங்கக்கலையிலும் தேவாரப்பண்ணிசையிலும் அடிப்படைப் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. பரத நாட்டிய சாஸ்திரத்தில் ஆர்வம் மட்டும் உண்டு.

இவரது ‘ஏலியன் கதைகள்’ தொடர் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தபின் நூலுருப்பெற்றிருக்கிறது. இவரது இரண்டாவது நூலான ‘கவிவிதைகள்’ உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமைகளை உள்ளடக்கியிருக்கிறது. ‘ஷக்தி’ தொலைக்காட்சியில் இவர் ஆற்றிய தொடர் உரைகள் ஒலிப்பேழையாக வெளிவந்திருக்கின்றன.

கலையுலகத்திற்கு வெளியே, இயற்கையை ரசித்தல், சதுரங்கம், பயணங்கள், விண்ணியல், துடுப்பாட்டம் என்பவற்றில் ஆர்வமிக்கவர் விழி மைந்தன். இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவையெல்லாம் அவரது எழுத்தாக்கங்களில் பாதிப்புச் செலுத்தக் காணலாம்.