ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு

அறிமுகம்

‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கதைகள் 2014 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பௌதிகம், உயிரியல் ஆகிய துறைகளைப்பற்றிய பயனுள்ள தகவல்கள் பல இக்கதைகளில் பொதியப்பட்டுள்ளன.

வைத்தியர், எழுத்தாளர் எம். கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய அணிந்துரை

ஆச்சரியமும் புதுமையும் கொண்ட விடயங்களை அறிந்து கொள்வதில் மனிதர்களுக்கு என்றுமே வற்றாத மோகம் உண்டு. குழந்தைகளின் உலகில் தேவதைகளின் கதைகள் எப்படி விரும்பப்படுகின்றனவோ அதேபோல வளர்ந்தவர்களையும் புதினமான கதைகள் கவர்கின்றன. புஸ்பக விமானமும் அசுரர்களும் பத்துத் தலையுடைய மனிதர்களும் எமது இதிகாசங்களில் பரவலாக வருகின்றன.

எத்தனை தடவைகள் கேட்டாலும் படித்தாலும் இன்றுதான் புதிதாக அறிவது போன்ற ஆச்சரியத்தை இவை கிளறுவனவாகவே இருக்கின்றன. மறுபுறம் எரிக் வான் டேனிக்கென் எழுதிய Chariots of Gods போன்றவை மறக்க முடியாதவை.

அதேபோல பிரவீணனின் ஏலியன் கதைகள் என்ற இந்த நூலைக் கையில் எடுத்த போது கீழே வைக்க முடியாதவாறான ஈர்ப்புடன் வாசிக்க நேர்ந்தது. ஆனால் இவருடைய படைப்புகள் வெற்றுக் கட்டுக் கதைகள் அல்ல. விஞ்ஞானத் தகவல்களை கற்பனைகளுடன் அற்புதமாகக் கலந்து நேர்த்தியான சுவை தரும் படைப்புகளாக இருக்கின்றன.

பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன. கோடானுகோடி நட்சந்திரங்களையும், கோள்களையும் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வேறு எங்காவது இருக்கின்றனவா, அவை எத்தகையவை போன்ற அறிவுபூர்வமாக கேள்விகள் மனித மனத்தை, அவன் யோசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அலைக்களிக்கின்றன. பூர்வீக மனிதர்களின் இத்தகைய சிந்தனைகள் கட்டுக் கதைகள் எனவும் புராண இதிகாசங்கள் எனவும் ஒதுக்கப்பட்ட காலம் போய் இன்று அது ஒரு விஞ்ஞானமாக வளர ஆரம்பித்திருக்கிறது. Exobiology எனவும் Astrobiology எனவும் புதுப்புதுப் பெயர்களுடன் கற்கை நெறிகளாக அங்கீகாரம் பெறுகின்றன.

ஏலியன் (Alien) என்ற ஆங்கிலப் பெயரைத் தெரியாத வேற்றுமொழி தெரியாத நபர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு ஹொலிவூட் எமது மூளையில் தகட்டோலைப் பதிவுகள் போலப் பதியச் செய்துவிட்டன. ஏலியன் என்றால் வெளியார் எனப் பொருள்படும். சற்று தெளிவாகச் சொல்வதற்கு வேற்றுலக உயிரினங்கள் (Extraterrestrial life) என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரவீணன் இந்த விடயத்தை பல்வேறு கோணங்களில் அணுகுகிறார். அவை பலதரப்பட்ட கதைகளாகப் பரிணமிக்கின்றன.

மனிதர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையில் ஏலியன்களைத் தற்செயலாக அவை எவை எனப் புரிந்தும் புரியாமலும் காணுவதாக அமையும் கதைகள் முதல் வகையானவை.

இவை விஞ்ஞான அறிவு வளராத பூர்விக மனிதனின் பார்வையாகவும், நவீன தொழில் நுட்ப விஞ்ஞான அறிவு கொண்ட இன்றைய மனிதர்களதும், அறிவு முதிர்ச்சி பெற்ற நாளைய மனிதர்களதும் பார்வைகளாக அமைகின்றன. அவர்களது காலத்தில் நிலவும் அறிவு மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் கதைகளை நுட்பமாக நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.

வேற்று உலக ஜீவராசிகளைத் தேடுவன மற்றொரு வகையானவை.

இதில் தமது அறிவு மற்றும் தொழில் நுட்ப ஆற்றலுடன் வேற்று உலக ஜீவராசிகளைத் தேடியலைந்து கண்டு பிடிக்கும் மனிதர்களின் கதைகள் மட்டுமின்றி, வேற்றுலக உயிரனங்களின் அதே போன்ற தேடல் முயற்சிகளின்போது பூமியில் மனிதர்களைக் காண முடிவதும் அடங்கும்.

விஞ்ஞானத்தின் பல்வேறு கூறுகளில் பிரவீணனுக்கு இருக்கும் அறிவும் அவருடைய தேடல் முயற்சிகளும் ஆச்சரியப்பட வைக்கின்றன. வானவியல் இருக்கிறது, கணிதம் இருக்கிறது, உயிரியல், சரித்திரம், பூகோளவியல். என்று இன்னும் பல கதையோடு கதையாக கலந்து வருகின்றன. எது உண்மை எது கற்பனை என்ற மயக்கம் வாசகர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது

தனது அறிவியல் கைகொடுக்க மரபணுக்களின் ஊடே வந்த இலக்கிய ஆற்றல் மெருகூட்ட, சுவார்ஸ்யமாக கதைகளை நகர்த்துகிறார்.

ஒரு உதாரணம் – வெட்ட வெளியில் அவன் படுத்திருக்கிறான். கிழக்கு வானில் பூரண நிலவு எழுந்து வருகிறது. அதன் அழகில் கிறங்கியிருக்கும் அவன்; தற்செயலாக மறுபக்கம் பார்க்கும்போது, என்ன அதிசயம் அங்கு மற்றொரு

அரைநிலவு. இவ்வாறு செவ்வாய்க் கிரகத்தை அறிமுகப்படுத்துகிறார். ஒரு மர்மக் கதைக்குரிய திகிலுடனும், விஞ்ஞானத் தரவுகளுடனும் கதை நகர்கிறது.

இவை கதைகளாக இருந்தாலும் அவற்றில் சில பாடங்களும் எமக்குள்ளன.

2020 ல் தனியார் ரொக்கற்றுகள் விண்வெளிக்குச் சென்று அங்கிருக்கும் விண்கலங்களுக்கு விநியோகங்கள் மேற்கொண்டு வருவதை ஒரு கதை சொல்கிறது. அவ்வாறு செல்லும் போது வேற்றுலகவாசிகளிடம் சிக்குகிறார்கள். மனிதர்களை விட அறிவாற்றலும் தொழில் நுட்பத்திறமையும் கொண்டவர்களாக வேற்றுலகவாசிகள் இருக்கிறார்கள். இருந்தபோதும் மூளை அறிவை நம்பி உடல் உழைப்பைத் தொலைத்ததால் உடல் வலு இழந்து கைகால்கள் சூம்பிவிட்டன. அத்துடன் சக்தி வளத்தை முழுமையாக பயன்படுத்தித் தீர்த்துவிட்டதால் அவர்களது கிரகத்தில் எரிபொருள் சக்தி அரிதாகிப்; போய்விட்டது. கதையைப் படியுங்கள். தொப்பியை எமது தலையில் போடுங்கள் கதை சொல்லும் செய்தி புரியும்.

வேற்றுலக உயிரினங்கள் என்பவை மனிதரை ஒத்த தோற்றம் உடையவையாக இருக்க வேண்டும் என்றில்லை. மற்றொரு புறம் பயங்கர தோற்றமுடைய இராட்சத மிருகங்கள் எங்கள் கண்ணின் முன் வரும்.

தண்ணீரைத் தேடி செய்வாய்க் கிரகத்திற்கு சென்ற வீரர்களில் ஒருவன் திடீரென நோய் உறுகிறான். அவன் நோயுற்றதால் இவர்களைப் பயம் கலக்குகிறது. ஆனால் மறுபுறம் ஆனந்தம். நண்பன் நோயுற்றதால் ஆனந்தமா? இல்லை. அங்கு உயிரினம் இருப்பதற்கான ஆதாரம் கிட்டிவிட்டதால் வந்த ஆனந்தம். அவன் நோயுற்றதற்குக் காரணமே அந்த உயிரினம்தான். ஆம். வைரஸ் போன்ற தொடக்க கால நுண்ணுயிர் எமது உலகுக்கு அப்பால் இருப்பதைக் கண்டறிந்து விட்டார்கள். மிகவும் சுவார்ஸமாகச் சொல்லப்பட்ட கதைகளில் இதுவும் ஒன்று.

விஞ்ஞான விரிவுரையாளரான பிரவீணனின் இந்த இலக்கிய முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது. தமிழில் விஞ்ஞானக் கதைகளுக்கான ஒரு புதிய பாதையைத் திறந்து விட்டுள்ளார்.

அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
30.12.2013

 

நூல்

கதை 1:

டநியுப் நதி

ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. மாலை மயங்கும் வேளைகளிலே பரந்து விரிந்து வருகிற இந்த டநியுப் நதியைப் பார்ப்பதில் எனக்கொரு இன்பம். சிறிய வயதில் சமூகக் கல்வி படித்த பொழுதே, என்ன காரணத்தாலோ இந்த “டநியுப்” என்கிற பெயர் பிடித்துப் போயிருந்தது. நான் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்ததில்லை. செல்வதிரவியம் வாத்தியாரிடம் எத்தனையோ தரம் அடி வாங்கியிருக்கிறேன். ஒரு தடவை ஐரோப்பாக் கண்டதிலே ஓடுகிற நதிகளையெல்லாம் கீறிக் குறிக்கும்படி கேள்வி தந்தபோது கிழக்குப் பக்கத்தில் மட்டும் ஒரு தனிக்கோடு இழுத்து, “டநியுப்” என்று எழுதியதாக ஞாபகம். அப்போதெல்லாம் இந்த ஆற்றை என்னுடைய கண்களால் ஒரு நாள் காண்பேன் என்று கற்பனை கூடச் செய்ததில்லை. ஆனால், இயல்பாகவே எனக்கு ஆறுகள், குளங்கள் முதலிய இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும் கண்கள் இருந்தன. கவிதை என்ற பெயரில் எதையாவது கிறுக்கும் பழக்கமும் இருந்தது.

பிறகு காலத்தின் கோலத்தினால் நானும் அகதி ஆனேன். தரை மார்க்கமாகப் பிரான்சு செல்ல என வந்த நான் ஹங்கேரியில் தடைப்பட்டு அங்கேயே குடியுரிமையும் பெற்றுக்கொண்டேன். புடாபெஸ்ட் நகரத்தின் அழகும் அமைதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அந்த நகரத்தைக் குறுக்கறுத்துப் பாய்வது டநியுப் நதிதான் என்று தெரிந்து கொண்டபின் எனக்கு அந்த நகரம் இன்னும் பிடித்துக்கொண்டது.

நகரத்தின் மத்தியில் இருந்த “ஐபிஸ்” ஹோட்டலில் பரிசாரகனாக வேலைக்குச் சேர்ந்தேன். ஹங்கேரிய மக்களின் எளிமையான போக்கும், பாரம்பரியத்தோடு ஒன்றிய இயல்பும் எம்மூரில் இருப்பது போன்ற பிரமையை எனக்குக் கொடுத்தன. ஒவ்வொரு நாள் மாலையும் நகரின் மத்தியில் இருந்த ஆற்றங் கரைக்கு வருவேன். ஹங்கேரிப் பாராளுமன்றத்தின் அழகிய கட்டிடம் நதியில் மின்னித்தெரியும் அழகைப் பார்த்துக்கொண்டிருப்பேன். சிலவேளை படகில் ஏறி நதியில் மேலும் கீழும் போய் வருவேன். நதியின் அகலமான படித்துறையில் அமர்ந்துகொண்டு காற்று வாங்குவேன். என்னுடைய நண்பர்கள் என்னை பிரான்சுக்கோ, சுவிசுக்கோ வருமாறு கூப்பிடுக்கொண்டிருந்தார்கள். எனக்கோ இந்த நிம்மதியான, பிக்கல் பிடுங்கல்கள் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் போலவே இருந்தது.

அன்றும் அப்படித்ததான் “பெஸ்ட்” பக்கத்திலிருந்த அகன்ற படித்துறையில் விச்ராந்தியாக அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். சிலுசிலுத்து வந்த நதிக்காற்றோடு சேர்ந்து அருமையான நறுமணம் ஒன்று என் நாசியில் வந்து அறைந்தது. எனக்குச் சிறு வயதிலிருந்தே கூர்மையான நாசி. நாலு பக்கமும் சுற்றிப்பார்த்தேன். உள்ளுர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளுமாகப் படித்துறை கலகலவென்றிருந்தது. உல்லாசப் படகுகளில் இருந்து பயணிகள் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிடுந்த ஒரு பெண் மீது என்ன காரணத்தாலோ என் கண்கள் சென்றன.

நீளமான அவளது பொன்னிறக் கூந்தல், காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சற்றும் அசையாமல் இமையா நாட்டத்துடன் அந்த ஆற்றில் ஓடிய தண்ணீரைப் பார்த்தவாறிருந்தாள். தன்னைச் சுற்றி நடமாடிய மக்கள் மீது எந்த அக்கறையும் அவள் காட்டியதாகத் தெரியவில்லை. தங்கச் சிலை தானோ எனும்படி ஆடாமல் அசையாமல் அவள் நின்றாள். இந்த உலகத்துக்குப் பொருத்தமில்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருததாக எனக்குத் தோன்றியது. அவள் நின்ற திசையில் இருந்து தான் அந்த நறுமணம் வந்ததாகத் தோன்றியது.

சின்ன வயதில் வாசித்த “சந்தனு- பரிமளகந்தி” கதை எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது. “டநியுப்” நதிக்கரையில் நின்ற அந்த நங்கைக்குப் “பரிமளகந்தி” என்று நான் மனதிற்குள் நாமகரணம் செய்தேன். ஐரோப்பாவில் அகதி வாழ்வு வாழ்கிற நான் போகிற வருகிறவர்களுக்கு மகாபாரதத்திலிருந்து பெயர்கள் வைப்பது குறித்து மனசுக்குள் ஒரு குரல் என்னைக் கேலி செய்து சிரித்தது. இந்தப் பெண்ணில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறதே- அது என்ன என்று கண்டு பிடிக்க மனதின் இன்னொரு பகுதி போராடிக்கொண்டிருந்தது.

என்னுடைய பார்வையை அந்தப் பெண் உணர்ந்திருக்க வேண்டும். சிலை போல் நின்று கொண்டிருந்தவள் சட்டென்று என்திசை நோக்கித் திரும்பினாள். அத்தனை பேருக்குள் என்னைக்கண்டு பளீரென்று என் கண்களுக்குள் பார்த்தாள். எனக்கு உரோமம் சிலிர்த்தது. வலது கையை உயரத்தூக்கி “மூன்று” என்பதாக விரல்களால் காட்டினாள். அடுத்த கணம் பட்டென்று திரும்பிச் சடக் கென்று விரைந்து நடந்து ஜனங்களுக்கிடையில் மறைந்து விட்டாள்.

எனக்கு ஒரே அதிசயமாகப் போய்விட்டது. முன் பின் தெரியாத பெண் அப்படி என்னைப்பார்த்துச் சைகை செய்ய வேண்டிய காரணம் என்ன? “மூன்று” என்பதற்கு அர்த்தம் என்ன? தனிமை என்னைப் பாதிக்கத் தொடங்கி இருப்பதால் கண்டபடி நான் அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறேனா? மெதுவாக எழுந்து வீட்டுக்கு வந்தேன்.

அடுத்த நாளும் வழக்கம் போல் அற்றங்கரைக்குச் சென்றேன். சென்ற உடனேயே என்னுடைய கண்கள் நாலு பக்கமும் சல்லடை போடுச்சலித்தன. அந்தப் பெண் எங்கும் இல்லை. எனுடைய வழக்கமான படித்துறையில் சென்று அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் நேற்று வீசிய அதே நறுமணம் என் நாசிகளைத் தாக்கியது. நிமிர்ந்து பார்த்த பொது சற்றுத் தூரத்தில் அவள் நின்றாள். எவ்வாறு அங்கே வந்தாள் என்று தெரியவில்லை. அதே மாதிரிச் சிலை போல நின்று ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என் பார்வை விழுந்ததும் வலக் கையை தூக்கி “இரண்டு” என்று விரல்களால் காட்டினாள். அடுத்த வினாடி ஜனக் கூட்டத்தினுள் புகுந்து மறைந்தாள்.

ஏதோ ஒரு உந்தலில் சட்டென்று எழுந்து அவள் சென்ற திசையை நோக்கிச் சென்றேன். அவளின் நாமமே இல்லை. அவ்வாறு சீக்கிரம் எப்படி மாயமாக மறைந்தாள்?

இந்தக் கூத்து எனக்கு விசித்திரமாக இருந்ததாயினும் பய உணர்ச்சி எதுவும் எனக்கு ஏற்படவில்லை. சொல்லப் போனால் ஹங்கேரி என்ற அந்நிய தேசத்தில் யோசனயைத்தவிர வேறு பொழுது போக்கு இல்லாமலிருந்த எனக்கு இது வாழ்வில் ஒரு சுவாரிசயத்தைக் கொண்டு வந்தது.

அடுத்த நாள் இன்னும் வேளைக்கே சென்று காத்திருந்தேன். வெகு நேரமாக அவளின் “சிலமன்” எதுவும் இல்லை. நான் கொஞ்சம் அலுத்துப் போய் மனதை வேறு எங்கோ ஓடவிட்டிருந்த நிலையில் “குப்” என்று அவளின் நறு மணம் எனது நாசியில் அறைந்தது. நிமிர்ந்து பார்த்த நான் கொஞ்சம் திடுக்கிட்டுப் போய் விட்டேன். நான் இருந்த இடத்திற்கு வெகு அருகாமையில் அவள் நின்றாள். என் கவனிப்பின்றி எப்படி அவ்விடம் வந்தாள் என்று தெரியவில்லை. முன்பு போலவே ஒரு சிலை போல ஆற்றை நோக்கியவாறிருந்தாள். சில வினாடிகள் ஆற்றைப் பார்த்துவிட்டு வலது கையைச் சட்டென்று உயரத் தூக்கி, “ஒன்று” என்ற பாவனையில் காட்டினாள். என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அடுத்த செக்கன் “வெடுக்” கென்று நடந்து சனக் கூட்டத்திற்குள் புகுந்தாள். நான் துள்ளி எழுந்து அவளைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அத்தனை சமீபம் நின்று விட்டுப் போயிருந்தும் என்னால் அவளை ஜனத்திரள் இடையே கண்டு பிடிக்கவே முடியவில்லை. மாயமாய் மறைந்து விட்டாள்!

பாரதியாரின் “குயில்பாட்டு” இப்போது எனக்கு ஞாபகம் வந்து தொலைத்தது. மூன்று, இரண்டு, ஒன்று என்று அந்தப் பெண் கணக்குக் காட்டி வருவதன் அர்த்தம் என்ன? அது நாள்களைக் குறிக்கிறதா? நாளைக்கு எதாவது அதிசயம் நடக்கப் போகிறதா? அல்லது எனக்குத்தான் எதாவது நடக்கப் போகிறதா? முதல் முறையாக இவற்றையெல்லாம் பற்றி மனம் விட்டுப் பேச நண்பன் ஒருவன் அருகில் இல்லை என்று வருத்தப் பட்டேன்.

அடுத்த நாள் காலையில் கண் விழிக்கும் போதே “நான்காம் நாள் பேடைக்குயில் என்னைப்… போந்திடவே கூறிய நாள்” என்ற பாரதியாரின் கவிதை வரிகளோடு விழித்தேன். நேரம் ஆக ஆக இன்று ஆற்றங் கரைக்குப் போகமலே விட்டு விடுவோமா என்று ஒரு மனம் போரடத்தொடங்கியது. அந்தப் பெண்ணில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று என் மனம் எனக்குத் தெளிவாகச் சொன்னது. ஆனால் போகாமல் விட்டு விடுவது என்று நினைத்ததும் பழைய சாரமற்ற “போறிங்” வாழ்க்கைக்குள் மறுபடியும் போவதையும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் ஊழ்வினை வந்து உறுத்த “மேலைச் செயல் அறியா வெள்ளறிவிற் பேதையேன்” ஆகிய நானும் பாய்ந்தோடும் டானியுப்பின் கரைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

படித்துறையில் எனது வழக்கமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டு, வேண்டுமென்றே அங்கும் இங்கும் பார்க்காமல் ஆற்றுத் தண்ணீரை உற்று நோக்கியவாறு இருந்தேன். சரியாக ஐந்தரை மணிக்கு அந்த இனிய சுகந்தம் என் நாசிகளுக்குள் புகுந்தது. திடமாகத் திரும்பிப் பார்த்தேன். அஸ்ததமித்த சூரியனின் வெளிச்சத்தில் ஜோலித்தவாறு அவள் நின்றாள். எனது பார்வை பட்டதும் திரும்பி எனது கண்களுக்குள் ஊன்றிப் பார்த்தாள். அவளது பார்வையில் இன்று ஒரு வித்தியாசம் இருந்த்தது. அடுத்த கணம் சைகை எதுவும் செய்யாமலேயே வடக்குப் புறம் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினாள். நான் எனது இடத்திலிருந்து குதித்து எழுந்து அவளைத் தொடர்ந்தேன்.

முந்திய நாள்கள் போல இன்று அவள் “வெடுக்கென்று” சனங்களுக்குள் புகுந்து மறையவில்லை. என்னுடைய வேகத்திற்குத் தக்கபடி தானும் வேகத்தை அதிகரித்தும் நிதானித்தும் என்னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திலே அவள் சென்றுகொண்டிருந்தாள். நதியின் குறுக்கே இருந்த பாரிய பாலத்தைக் கடந்து நகரின் மறு பகுதியான, “புடா” பகுதியை நோக்கி அவள் செல்லத் தொடங்கினாள். “புடா” பகுதி மலைப் பாங்கானது. பழைய காலத்திய கோட்டைகளும் கொத்தளங்களும் நிறைந்தது. அந்தக் கோட்டைகளின் சந்து பொந்துகள் வழியாக அவள் புகுந்து செல்ல, நானும் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

மேலும் மேலும் மலைச் சரிவுகளுக்குள் ஏறிச் செல்லத் தொடங்கிய அவள் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த கோட்டை ஒன்றை அடைந்ததும் நான் சற்று நிதானித்தேன். முன் பின் தெரியத் மர்மமான பெண்ணொருத்தியைத் தொடர்ந்து பாழடைந்த கோட்டைக்குள் செல்லும்படி முற்றாக என் அறிவு மழுங்கிப் போய்விடவில்லை. சட்டென்று பழைய பீரங்கி ஒன்றுக்கு அருகில் ஒளிந்து கொண்டேன். இதுவரை அவள் நான் பின்னால் வருகிறேனா என்று திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது சட்டென்று ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள். பிறகு எதுவும் நடவாதது போலத் தொடர்ந்து சென்று மறைந்தாள்.

அவள் சென்ற ஒற்றையடிப் பாதையிலிருந்து சற்று விலகி, புதர்களில் ஒளிந்தும் மறைந்தும் மெதுவாக அவள் சென்ற திசையில் சென்றேன். சற்று நேரத்தில் அந்தப் பாதையில் என்னை நோக்கி மூன்று நபர்கள் வருவதைக்கண்டேன். அவர்கள் பார்பதற்கு ஹங்கேரிய ஆண்கள் போலிருந்தாலும் அவர்களிடமிருந்தும் ஒரு விதமான நறுமணம் வந்துகொண்டிருந்தது. மோப்பம் பிடிப்பது போல அவர்கள் தங்கள் நாசிகளால் ஆழமாகச் சுவாசித்துக்கொண்டு வந்தார்கள். நான் மறைந்து இருந்த புதரைக்கவனிக்காதது போல அவர்கள் கடந்து செல்லத் தொடங்கினார்கள். பிறகு சட்டென்று நின்று, ஒரே நேரத்தில் என் மேல் பாய்ந்தார்கள்.

இந்த இடத்தில் என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஆறடிக்கு மேல் உயரமான நான் பார்ப்பதற்கு மெலிந்த தொற்றத்தைக் கொண்டிருந்தேன். ஆனால் ஊரிலேயே “கராத்தே” யில் கருப்புப் பட்டி வாங்கி இருந்தேன். புடாபெஸ்டில் நான் வழமையாக “ஜிம்” முக்குப் போவதுண்டு. என் மேல் பாய்ந்தவர்களிடமிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முதலில் போராடினாலும், அவர்களின் நகர்தல்கள் அவ்வளவு ஸ்திரமில்லாமல் இருப்பதையும் அவர்களது கைப்பிடி வலிமையின்றி இருந்ததையும் சீக்கிரத்தில் கண்டு கொண்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கையாலும் காலாலும் அவர்களைப் பதம் பார்க்க ஆரம்பித்தேன். அவர்களோ இந்த எதிர்ப்பை எதிர் பார்க்கவில்லை. ஒருவன் வயிற்றில் பலமான உதை ஒன்று வாங்கிச் சுருண்டு விழுந்தான். மற்றைய இரண்டு பெரும் தப்பி ஓடினார்கள். விழுந்தவன் எழ முயன்றபோது நான் அவனது கழுத்தைப் பிடித்துக்கொண்டு பிடரியில் குத்தினேன். அவன் மயங்கி விழுந்து விட்டான்.

எனக்குக் கொஞ்சம் பயமாகப் போய் விட்டது. அவனது மூக்கடியில் கை வைத்துப் பார்த்தேன் மூக்கின் உட்புறத்தில் தோல் சவ்வுகள் நாசியை மூடியும் திறந்தும் கொண்டிருந்ததை அப்போதுதான் கண்டேன். அவனது மூக்கில் எனது கை பட்ட போது ஏதோ வழு வழுப்பாக இருந்தது. அவனது செட்டைப் பிரித்துப் பார்த்தபோது மீனுக்கு இருப்பது போலச் செதில்கள் அவன் முதுகை மூடியிருந்தன. அவனது கை, கால் விரல்கள் கூட ஒன்றோடொன்று சவ்வுகளால் இணைக்கப் பட்டிருந்தன. சண்டை பிடிப்பதற்குத் தக்க கைகள் அல்ல அவை!.

அவனை அதே இடத்தில் அவனது செட்டைப் பாவித்துக் கட்டிப் போட்டேன். பிறகு மற்றவர்களைத் தொடர்ந்து ஓடினேன். சற்றுத் தூரத்தில், பாழடைந்த மதில் ஒன்றுக்கு அப்பால் நெருப்பு எரிவதையும், அதைச் சுற்றி ஆறு பேர் நிற்பதையும் கண்டேன். நான் கண்ட ஆற்றங்கரைப் பெண்ணும் வேறோடு பெண்ணும் அங்கே இருந்தார்கள். நெருப்பைச் சுற்றி விசித்திரமான உபகரணங்கள் பல இருந்தன-ஒரு இரசாயன ஆய்வுகூடம் போல!.

பதுங்கிப் பதுங்கி நான் அருகில் சென்ற போதும் பயன்படவில்லை. நான் அருகில் நெருங்கியதும் ஏத்தாற்போல ஒரே கணத்தில் அத்தனை பெரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். பிறகு மலையின் சரிவில் இறங்கி ஓடத் தொடங்கினார்கள். நான் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அந்த இடத்தில் செங்குத்தான பள்ளத் தாக்கு ஒன்று அவர்கள் வழியை மறித்திருந்தது. கீழே சுமார் முந்நூறு மீற்றர் ஆழத்தில் டநியுப் நதி சென்றது. அந்த இடத்தில் எப்படியும் அவர்களைப் பிடித்து விடலாம் என்று எண்ணி ஓடினேன். சரிவின் விளிம்பில் ஒரு கணம் அவர்கள் நிற்கத்தான் செய்தார்கள். அடுத்த கணம் ஒருவர் பின் ஒருவராகக் கீழே அதல பாதாளத்தில் ஓடிய ஆற்றினுள் பாய்ந்தார்கள்!

நான் திகைத்துப் போய் சரிவில் நின்று கீழே எட்டிப் பார்த்தேன். கீழே ஓடிய ஆற்றில் இருந்து எந்தத் தலைகளும் மேலே வரவில்லை. அனால் ஓரிடத்தில் தண்ணீருக்குள்ளே மீன்கள் நீந்திச் செல்வது போல மங்கலாக ஏதோ தெரிந்தது.

நான் அடித்து வீழ்த்தியவனைக் கட்டிப் போட்ட இடத்திற்கு வந்து பார்த்தேன். அங்கே அவனைக் காணவில்லை. சற்று நேரத்தில் மலைச் சரிவுக் காட்டில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சம் ஒன்று எழுந்து சென்றதைக்கண்டேன்.

நான் கண்ட உயிரினங்கள் என்ன? அவை எங்கிருந்து வந்தன என்பது குறித்து எவ்வளவோ மூளையைக் குழப்பிப் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை. “வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க” நான் பாரதியும் அல்ல.

அடுத்த வாரமே நான் நண்பர்களின் அழைப்பை ஏற்றுப் பிரான்சுக்கு வந்து விட்டேன். பாரிஸ் வாழ்க்கையும் நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நான் ஆறுகள், குளங்கள் பக்கம் போவது குறைவு.

 

கதை 2:

நிலவைத் தேடி….

யன்னலுக்கு வெளியே நிலவு எழுந்து கொண்டிருந்தது. வாஷிங்க்டனில் இப்போது இலை உதிர் காலம். வளைந்து நெளிந்து செல்லும் போடோமாக் நதியில் நிலவின் கதிர்கள் மின்னிக் கொண்டிருந்தன. நதிக்கரையில் ஆழகான வெள்ளை இரண்டு மாடி வீடுகள் – நெருப்புப் பெட்டி போல வரிசை வரிசையாக இருந்தன. நகரின் இந்தப் பகுதி, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாயிரமாம் ஆண்டளவில் இருந்தது போல இன்றைக்கும் அப்படியே இருந்தது. வீடுகளைச் சுற்றியிருந்த உயரமான மரங்களின் இலைகள் பொன் நிறமாகவும் பழுப்பு நிறமாகவும் ஊதா நிறமாகவும் இருந்தன.

வீட்டுக்குள்ளே இருந்த நானும் நிலவைப் பற்றித்தான் எண்ணித் தலையை உடைத்துக் கொண்டிருந்தேன். வெறுமனே எங்கள் நிலவைப் பற்றி மட்டுமல்ல – சூரியக் குடும்பத்திலிருந்த எல்லா நிலவுகளையும் பற்றி! அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரியான நான் பூமியின் எதிர் காலத்தையே பாதிக்கப் போகும் முக்கிய முடிவொன்றை அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் எடுக்க வேண்டி இருந்தது.

நான் தமிழ் மூதாதயருக்குப் பிறந்தேன். இப்போது எனக்கு நாற்பது வயதாகிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு எனது காலத்தில் தான் மனிதர்களாகிய நாங்கள் வேற்றுக் கிரக வாசிகளை முதன் முதலில் சந்தித்தோம். எம் பூமியில் இருந்து சுமார் இருபது ஒளியாண்டு தூரத்தில் லிப்ரா உடுத்தொகுதியில் உள்ள கிளயிஸ் 581 நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள கிரகங்கள் சிலவற்றில் நுண்ணறிவுள்ள உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்த வருடத்தை என்னால் மறக்கவே முடியாது! அப்பப்பா தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் இணையத்தில் எல்லாம் எவ்வளவு பரபரப்பு! அவர்களுக்கு நாங்கள் “நெடோன்ஸ்” என்று பெயர் சூட்டினோம். அவர்கள் வாழ்ந்த கிரகங்கள் தூரப் பார்வைக்குச் சிவப்புநிறமாக ஒளிர்ந்ததால்! அந்த நேரத்தில் விஞ்ஞானிகள் பப்பிஸ் உடுத்தொகுதியில் 285G நட்சத்திரத்தைச் சுற்றிய HD65830b கோளிலும், கடகத் தொகுதியில் 55 கடகம் நட்சத்திரத்தைச் சுற்றிய 55 கடகம் C கோளிலும் கூட உயிர்கள் இருக்கக் கூடுமென்று எதிர் பார்த்தார்கள். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்தன. இதுவரை “நெடோன்ஸ்” மட்டுமே விண்வெளியில் எங்களுக்கு அயலவர்களாக இருந்தார்கள்.

துரதிஷ்ட வசமாக “நெடோன்ஸ்’ உடன் மனிதர்களுக்கு ஏற்பட்ட உறவுகள் நல்ல விதமாக அமையவில்லை. நாகரிக வளர்ச்சில் இரண்டு இனங்களும் ஒரேயளவு முன்னேற்றப் படியில் இருந்ததும், இரண்டு கிரகங்களிலுமே கடுமையான பொருளாதார நெருக்கடியும் வளங்களுக்கான தேவையும் இருந்ததும், இதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். குரங்குகள் போல, நாலு கால்களில் ஓடித்திரியும் “நெடோன்ஸ்” மூர்க்க குணம் மிகுந்தவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் விண்கலங்கள் சிலவற்றை அவர்களது கலங்கள் ஏவுகணை வீசித் தாக்கியதற்குப் பின் இரண்டு கிரகங்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. “வேர்ம் – ஹோல்” எனப்படும் துளைகளைப் பயன்படுத்தி ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யும் முறையை இரு இனங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கண்டு பிடித்தன. அதன் பிறகு எமது கலங்கள் அவர்களுக்கு அருகிலும், அவர்களது கிரகங்கள் பூமிக்கு அருகிலும் வருவது எளிதாயிற்று.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, “நெடோன்ஸ்” இன் பெரிய விண்கலக் கூட்டமொன்று பூமிக்கு அருகே வந்து பூமியின் பெரிய நகரங்கள் சிலவற்றைப் பயங்கரமான அணு ஆயுத ஏவுகணைகளை வீசித்தாக்கியது. எங்களது தடுப்பு ஏவுகணைகள் அவற்றை வானத்திலே தடுத்து நிறுத்தினாலும் கதிர் வீச்சினால் பூமியில் பல நகரங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாயின. ரோக்யோ, ஷாங்காய், இத்தாலியின் மிலானோ போன்ற நகரங்கள் கிட்டத்தட்ட முழுவதும் அழிந்தன. நாளாக ஆக, அவர்களின் ஏவுகணைகளைத் தடுப்பதில் நாங்கள் முன்னேறினாலும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்பே அவர்களது விண்கலங்களைப் பூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து முழுவதுமாக விரட்ட முடிந்தது.

இதற்குப் பிறகு நாங்கள் பாரிய விண்கலக் கூட்டம் ஒன்றைத் தயார் செய்தோம். ஏவுகணைத் தொழில் நுட்பத்தையும் மேம்படுத்திக் கொண்டு “நெடோனியா” என்று நாங்கள் நாமகரணம் செய்திருந்த கிளயிஸ் 581g கோளின் மீது படை எடுத்துச் சென்றோம். அந்தக் கோளின் நாலில் ஒரு பங்கை முழுவதுமாக அழித்தோம். ஆனால் விநியோகப் பிரச்சினைகள் காரணமாக எங்கள் தாக்குதலைத் தொடர முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் மேலதிகமாக அனுப்பிய கலங்களை நடுவழியிலேயே “நெடோன்கள்” தடுத்து விட்டனர். இதற்குப் பிறகு எமது யுத்தத்தில் ஒரு மந்த நிலை இருந்தது. எமது சூரியக் குடும்பத்தை நாங்களும் அவர்களது சூரியக் குடும்பத்தை அவர்களும் மிகக்கவனமாகக் காவல் புரிந்து வந்தோம். இரண்டு கோள்களிலும் இருந்து ஏவப்படுகின்ற போர்க்கலங்கள் விண்வெளியில் அங்காங்கே மோதிக்கொண்டிருந்தன.

இந்தத் தேக்க நிலையை மாற்றக் கூடிய சம்பவம் ஒன்று நேற்று மாலை நடந்திருந்தது. புளுட்டோவுக்கு அப்பால் உள்ள ஏரிஸ் என்ற குள்ளக் கோளில் (செராஸ், புளுட்டோ, ஹாமியா, மாகெமாகே, ஏரிஸ் ஆகிய கிரகங்களை நாங்கள் இவ்வாறு குள்ளக் கோள்கள் என்று அழைத்து வந்தோம். இதனால் எமது சூரியக் குடும்பத்தில் பிரதான கிரகங்கள் எட்டு. புதன், வெள்ளி,பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நேப்டியூன் ஆகியவை) இருந்து புறப்பட்டு நெடோனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த நெடோன்சின் வேவுக் கலம் ஒன்றை நாங்கள் கைப்பற்றியிருந்தோம். அதில் இருந்த நெடோன்சை விசாரித்ததில், பயங்கரமான கார்பன் ஏவு கணைகள் சூரியக் குடும்பத்தில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

மனிதன் அணுக்குண்டைக் கண்டு பிடித்தபோது, அணுப்பிரிகையின் மூலம் சக்தியை உருவாக்கவே முதலில் அறிந்திருந்தான். யுரேனியம், தோரியம், போன்ற கனமான அணுக்கரு உடைய மூலகங்கள் இதற்குப் பயன்பட்டன. அனால் சூரியன் முதலிய நட்சத்திரங்கள் அணுச்சேர்க்கையின் மூலமே சக்தியைப் பெற்று வந்தன. சூரியனில் ஐதரசன் அணுக்கள் சேர்ந்து ஹீலியமாக மாறும்போது சக்தி வெளியாயிற்று. இதே தத்துவம் மனிதன் கண்டுபிடித்த ஐதரசன் குண்டில் தாக்கத் தொடரை உருவாக்குவதற்கும் பயன்பட்டது. சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தமது வாழ்க்கை வட்டத்தின் பிற்காலத்தில் ஹீலியத்தை ஓட்சிசனாகவும் கார்பனாகவும் மாற்றி அதிக சக்தியை உற்பத்தி செய்யும். இதை விடப் பெரிய நட்சத்திரங்கள் கார்பன் மற்றும் ஓட்சிசனை நியோன், சோடியம், மக்னீசியம், முதலிய மூலகங்களாக மாற்றுவதன் மூலம் இன்னும் அதிக சக்தியை உற்பத்தி செய்யும். ஆவர்த்தன அட்டவணையில் இரும்புக்கு கீழ் இருக்கும் எந்த மூலகமும் அணுச் சேர்க்கை மூலம் வேறு மூலகமாக மாறுவதுடன் சக்தியை வெளியிடலாம். அதற்கு மேலுள்ள மூலகங்கள் சேர்க்கையின் போது சக்தியை உள்ளெடுக்கும். பிரிகையின் போதே வெளிவரும்.

கார்பன் மூலகத்தின் சேர்க்கையின் மூலம் பயங்கரமான சக்தியை வெளிவிடும் ஏவுகணைகளை உருவாக்கும் தொழில் நுட்பத்தை நெடோன் சாதியார் கடந்த சில வருடங்களாக அறிந்திருந்தார்கள். முழுப் பூமியையும் நாசமாக்குவதற்கு இத்தகைய சில ஏவுகணைகள் போதும்! ஆனால் மிகப் பாரமான இந்த ஏவுகணைகளைத் தங்கள் விண்கலங்களில் இருந்து ஏவுவதற்கு அவர்களுக்கு முடியவில்லை. இதனால் ஞாயிற்றுத் தொகுதியில் எங்கோ இவற்றைக்கொண்டு வந்து ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று நெடோன்சின் ஒற்றன் தெரிவித்தான். சென்ற நூற்றாண்டில், அமெரிக்கர்களுக்கு எதிரான ஏவுகணைகளைச் சோவியத் யூனியன் கியூபாவில் நிறுத்தி வைத்தது போல! மேலும் அவனை விசாரித்ததில், குறைந்த ஈர்ப்பு சக்தியைப்பயன்படுத்தி, இலகுவாக ஏவும் நோக்கத்துடன், சூரியக் குடும்பத்திலுள்ள துணைக்கோள் – நிலவு- ஒன்றில் அவை வைக்கப்பட்டிருப்பதாகவும் அவன் சொன்னான். அவனுக்கு உண்மையிலேயே அது தெரியவில்லை! பூமி நேரப்படி நாளைக் கலை ஆறு மணிக்கு அவை ஏவப்படும் என்று அவன் தெரிவித்தான்.

இதனால் தான் நான் சூரியத் தொகுதியின் நிலவுகளின் பட்டியலை எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு தலையுடைத்துக் கொண்டிருந்தேன். ஏவுகணைகள் ஏவப்பட்டு விட்டால் பரந்த விண் வெளியில் அவற்றைக் கண்டுபிடித்து இடை மறிப்பது என்பது கடலில் ஊசி தேடுவது மாதிரி! தரையில் வைத்தே அழித்து விடுவது தான் உத்தமம். அதற்கு இன்னும் எட்டே எட்டு மணித்தியாலங்கள் தான் இருந்தன.

கோள்களில் தாழப் பறந்து ஏவுகணைகளை வீசும் சக்தியுள்ள விண்கலங்கள் சூரியக்குடும்பத்தில் அப்போது மூன்று தான் இருந்தன. மற்றயவை நெடோனில் இருந்து இன்னும் திரும்பவில்லை. ஒன்று பூமியிலும் மற்றைய இரண்டும் யுரேனசுக்கு அண்மையிலும் இருந்தன. இவற்றைப்பயன்படுத்தி எல்லா நிலவுகளையும் நாளைக் காலைக்கு முன் தேட முடியாது.

நிலவுகள் பட்டியலைப் பார்த்தேன் புதனுக்கும் வெள்ளிக்கும் நிலவுகள் இல்லை. பூமிக்கு ஒன்று- சந்திரன். செவ்வாய்க்கு இரண்டு – மிகவும் சிறிய நிலவுகள், போபோஸ், டைமோஸ். வியாழனுக்கு நான்கு பெரிய நிலவுகள், அயோ, யூரோப்பா, கனிமீட், கனிஸ்ரா, மற்றும் 62 சிறிய நிலவுகளும் இருந்தன. யூரேனசுக்கு ஒபரோன், டைடானிய, ஏரியல், உம்பீரியல், மிரண்டா. நெப்டியூனுக்கு 13 குள்ளக் கோள்களுக்கும் நிலவுகள் இருந்தன. எங்களது விண் கலங்களில் மிகச் சக்தி வாய்ந்த “நேவிகேசன் சிஸ்டம்” களும் தேடற் காமராக்களும் இருந்தன. இருந்தாலும் ஒரு நிலவின் மேற்பரப்பைத் தேடி முடிப்பதற்கு அளவைப் பொறுத்து, சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.

உண்மையில் நான் தீர்க்க முயன்று கொண்டிருந்தது “பயணம் செய்யும் வியாபாரி” வகையைச் சேர்ந்த “ஒப்ரிமை சேஷன் புறப்ளம்” என்பது எனக்கு நினைவு வந்தது. அதாவது என்னுடைய தகப்பனார் காலத்தில் கற்றுக்கொண்டது போல ஒரு வியாபாரி ஒரு குறித்த நாளில் தனது இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அதிக பட்சம் எந்தெந்த நகரங்களுக்குப் போக வேண்டும் என்பது தான் பிரச்சினை. நானும் அதைத் தான் தீர்க்க முயன்று கொண்டிருந்தேன். அதிகபட்சமான நிலவுகளில் தேடவேண்டுமானால் மூன்று விண் கலங்களும் எந்தப் பாதையை எடுக்க வேண்டும்?

இப்படியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ‘ஒப்ரிமைசேசன் அல்கோரிதம்” எனப்பட்ட வழி முறைகள் இருந்தன. நான் எனது கணனியைத் திறந்து தரவுகளை “பீட்” செய்தேன்.”ஜெனரிக் அல்கோரிதம்” “சிமுலேடட் அனீலிங்” ஆகிய முறைகளைத் தெரிவு செய்தேன். சீக்கிரத்தில் ஒவ்வொரு விண்கலமும் செல்ல வேண்டிய பாதைகள் ஒவ்வொரு வழி முறையிலும் கணக்கிடப்பட்டுத் திரையில் தெரிந்தன. எந்த வழிமுறையிலும் பத்து அல்லது பன்னிரண்டு நிலவுகள் விடுபட்டுத்தான் இருந்தன. அவற்றில் ஏவுகணைகள் இருந்தால் அம்போதான். ஆனால் நம்மிடம் இருந்த மூன்று விண்கலங்களை வைத்துக்கொண்டு செய்யக்கூடியது அவ்வளவு தான் என்று கணணி சொன்னது.

இருந்தாலும் எனக்குத் திருப்தி உண்டாகவில்லை. “நெடோன்ஸ் தமது ஏவுகணைகளை நாம் எதிர்பாராத எங்காவது ஓரிடத்தில் தான் வைத்திருப்பார்கள் என்று என் அறிவு சொன்னது. அதனால் திட்டம் வகுத்தலைக் கணனியிடம் விட்டுவிட எனக்கு மனம் வரவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இரண்டு வின்கலங்களைக் கணனிகள் வகுத்த பாதையில் தேட விடுவது என்றும் மூன்றாவது விண்கலத்தை நான் எடுத்துக்கொண்டு என் உள்ளுணர்வு கூறிய பாதையில் தேடிப் பார்ப்பது என்றும் முடிவு செய்தேன். இந்த முடிவுக்கு வந்ததும் விறுவிறென்று உத்தரவுகளைப் பிறப்பித்தேன்.

அடுத்த மணித்தியாலத்தில் எனது விண்கலம் வியாழனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வியாழனில் உள்ள சிறிய நிலவு ஒன்றில்தான் கார்பன் ஏவுகணைகள் இருக்கும் என்று என் மனம் சொன்னது. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்த நாங்கள் இரண்டு மணித்தியாலங்களில் வியாழனுக்கு அருகில் சென்றோம். அங்குள்ள குட்டி நிலவுகளை என் விண்கலம் தேட ஆரம்பித்தது. காலை ஆறு மணியை நேரம் நெருங்கியது. ஏவுகணைகள் தட்டுப்படவில்லை. பெரிய நிலவுகளில் ஒன்றுக்குப் போய்ப்பார்க்கலாம். ஏதோவொரு உந்துதலில் நான் ‘யுரோப்பா’ நிலவுக்குள் சென்றேன். யுரேனஸ் பக்கமிருந்து வந்த இன்னொரு விண்கலம் தேட்குப்பக்கத்தில் தேடத் தொடங்கியிருந்தது. ஆறு மணிக்குச் சில நிமிடங்களே இருந்தன. நான் வடக்குப் பக்கத்தில் தேட ஆரம்பித்தேன். ஐந்து ஐம்பத்தெட்டுக்குள் கார்பன் ஏவுகணைகளைக் கண்டு பிடித்தேன்! “ஐரோப்பாக்” கண்டத்தைக் குறி பார்த்து “யுரோப்பா” நிலவில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நெடோன்சின் நகைச்சுவை!

அடுத்த சில நிமிடங்களில் ‘யுரோப்பா’ நிலவைப்பெரும் ஒளி வெள்ளம் சூழ்ந்தது. ஐரோப்பாக் கண்டம் பெரும் அபாயத்திலிருந்து பிழைத்தது.

அடுத்த சில நாள்களில் அமெரிக்க ஜனாதிபதி அதி உயர் விருதொன்றை எனக்கு வழங்கிக் கௌரவித்தார். அதே வேளையில் கார்பன் ஏவுகணைகளை விஞ்சக்கூடிய ‘ஒட்சிசன்’ ஏவுகணைகளை பூமி விஞ்ஞானிகள் தயாரித்து முடித்திருந்தார்கள்.

முழு நூலை வாங்க இங்கே அழுத்தவும்

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.