தமிழி

பெயரைப் பார்த்ததும் நீங்கள் நினைக்கக் கூடியது போல இது தமிழி வரிவடிவத்தைப் பற்றிய பதிவல்ல. அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.தமிழ் ஆட் பெயர்களில் இடம்பெறக்கூடிய – முக்கியமாகச், சங்க காலத்தில் அதிகம் இடம்பெற்றிருந்த – ‘இ’கர விகுதி தொடர்பான பதிவு தான் இது. அதிலும் குறிப்பாக, ஆண்பால் ஆட்பெயர்களில் இடம்பெற்றிருந்த ‘இ’கர விகுதி பற்றிப் பார்ப்பது இப்பதிவின் நோக்கம்.

இன்னொரு விடயம் முதலே சொல்லவேண்டும் – இப்பதிவில் பதில்களை விடக் கேள்விகள்தான் அதிகம். ஆனால், நல்ல கேள்விகளைக் கேட்பது, ஆராய்ச்சியில், அல்லது நடுநிலையான அறிவுத் தேடலில், வள்ளுவர் சொன்னதுபோல, ‘செம்பாகம் அன்று, பெரிது’. நல்ல கேள்விகள் கேட்கப்பட்டால் சரியான பதில்கள் காலப்போக்கில் வரும்.

எனவே, இந்தத் தமிழ் ‘இ’……

சங்ககாலத் தமிழ் ஆண்பாற் பெயர்களைப் பார்த்தால் பழையன், சாத்தன், எயினன், மூவன், பாரி, ஓரி, காரி, கட்டி இவ்வாறு வருகிறது. இவற்றில் பல தற்போதைய தமிழ் ஆண்பால் விகுதியான ‘அன்’ விகுதி உள்ளவை. சரி. ஆனால், வேறு பல பெயர்கள் ‘இ’ விகுதியோடும் உள்ளன.தற்காலத்தில் தமிழர்கள் வைக்கும் பெயர்களைப் பார்த்தால் சுதர்சன், பிரதீபன், அகிலன், ஐங்கரன், வாசன் இப்படி பெரும்பாலான பெயர்கள் ‘அன்’ விகுதியோடு முடிகின்றன. இந்த இடத்தில் ‘இவையெல்லாம் வட சொற்கள், தமிழல்ல’ என்று பலர் ஒப்பிப்பார்கள். இங்கு பிரச்சினை அதுவல்ல. அடி எவ்வாறாயினும் ‘அன்’ விகுதி தமிழ்தான். ஆகவே தற்காலத் தமிழ்ப் பெயர்களில் (ஆண்கள்) ‘அன்’ விகுதி மிகப் பெரும்பான்மையாக இருக்கிறது.

சமஸ்கிருதப் பெயர்களில் (ஆண்கள்) ‘ஆ’ விகுதி முதன்மை பெறும். ராமா, கிருஷ்ணா, கர்ணா, பீஷ்மா இப்படி. இதை ‘அ’ வுக்கும் ‘ஆ’ வுக்கும் இடைப்பட்ட விகுதி என்றும் சொல்லலாம். சிங்களத்தில் இன்னும் சற்றுக் குறுக்கி ‘அ’ விகுதியாகவே பாவிப்பார்கள். சத்துர, சாந்த, தர்ஷன இப்படி. தற்போதைய இந்தியில் இந்த விகுதியை அறவே தவிர்த்து விட்டுப் பெயர்களை எழுதுகிறார்கள். ரிஷிகேஷ், ராஜேஷ் இப்படி. உதாரணமாக என்னுடைய பெயர் பழைய சமஸ்கிருதத்தில் ப்ரவீண(அ / ஆ ) என்றும் சிங்களத்தில் ப்ரவீண என்றும் இந்தியில் ப்ரவீன் / பிரவீன் என்றும் தமிழில் பிரவீணன் என்றும் எழுதப்படலாம். ஆகவே தமிழ் ஆண் பெயர்களில் உள்ள ‘அன்’ விகுதி வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்ததுபோலத் தெரியவில்லை. 

பெண்களின் பெயர்களுக்கு தற்காலத்தில் அநேகமாக எல்லா மொழிகளிலும் ‘ஆ’ விகுதி பொதுவாக இருக்கிறது. பல பெயர்களில் ‘இ’ விகுதியும் உண்டு. காமாட்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி, வைஷாலி, கண்ணகி, மாதவி, செவ்வந்தி இப்படி. ஆனால், சங்ககாலத்தில் ஆண் பெயர்களுக்குப் பாவிக்கப்பட்ட ‘இ’ விகுதிகள் எங்கிருந்து வந்தன? இப்போது அவை ஏன் பாவிக்கப்படுவதில்லை? (கிராமிய வழக்கில் சிலவேளை சிதம்பரி, சின்னவி இப்படிப் பாவிப்பார்கள். எழுதப்பட்ட பெயரைப் பார்த்தால் சிதம்பரம் அல்லது சிதம்பரன், சின்னவன் இவ்வாறு இருக்கும்)

சரி. ‘இ’ விகுதி உள்ள பெயர்கள் உலகின் எந்தக் கலாசாரங்களில் தற்போதும் உள்ளன? என்று பார்த்தால், மத்திய கிழக்கின் ஆண்பாற் பெயர்களில் இவ்விகுதி இன்றும் மிகுதியாக இருப்பதைக் காணலாம். குறிப்பாக ஈராக் தொடக்கம் ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடுகளில் ஆண்களின் குடும்பப் பெயர்களில் இவை மிகுதியாக உள்ளன (முதற்பெயர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்த பெயர்கள் ஆகிவிட்டன). அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கு ஊர்ப்பெயர்களைக் குடும்பப் பெயர்களாக வைப்பதைக் காணலாம். “இவ்வூரவன்” என்று சுட்டும் முகமாக, அவ்வூர்ப் பெயருடன் “இ” விகுதியைச் சேர்த்து வைப்பார்கள். உதாரணமாக திக்ரிதி (திக்ரித்), கிலானி (கிலான்), மொயினி (மொயின்), அப்ரிடி (அப்ரிட்), கானி (கான்) கொமெய்யினி (கொமெயின்), கடாபி (கடாப்) இவ்வாறாக வரும். இவர்களில் கடாபி லிபியாவையும், கொமெய்னி இரானையும், கானி ஆப்கானிஸ்தானையும், திகிரிதி இராக்கையும் ஆண்டது (அவர் தான் சதாம்!) எல்லோருக்கும் தெரியும். காந்தி ஆண்டது எந்த நாட்டை என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்தந்த நாட்டுக்காரைரைக் குறிப்பதற்கும் மத்திய கிழக்கில் ‘இ’ விகுதிதான். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தமிழன். ஆனால்.. ஆப்கானைச் சேர்ந்தவன் ஆப்கானி. ஈரானைச் சேர்ந்தவன் ஈரானி. ஈராக்கைச் சேர்ந்தவன் ஈராக்கி. குவைத்தைச் சேர்ந்தவன் குவைத்தி. இஸ்ரேலைச் சேர்ந்தவன் கூட இஸ்ரேலி.சவூதியைச் சேர்ந்தவன் சவூதி என்று சொல்லவே வேண்டாம். சவுத் அரச குடும்பத்தைவர்கள் தம்மை சவுதிகள் என்கிறார்கள். அவர்கள் ஆள்வதால் சவூதி அரேபியா. பிறகு சவூதி அரேபியாவைச் சேர்ந்தவன் சவூதி. அப்புறம், யேமனி, பஹ்ரைனி, ஓமானி.. என்று நீளும். ஈரானி என்பது குடும்பப் பெயராகவும் உள்ளது (டோனி ஈரானி). சாம்பிராணிகள் என்று சொல்லப்படும் பாய்கள் விற்றதால் அந்த நறுமணப் புகை சாம்பிறாணிப் புகை ஆனது. “மடைச் சாம்பிராணி” என்று இகழும் வழக்கமும் வந்தது. இல்லையென்றால் புகையை யாராவது இகழ்வார்களா?ஆகமொத்தம் மெசப்பொத்தேமியா முதல் ஆப்கானிஸ்தானம் வரை ஆண் பெயர்களில் “இ” விகுதி உண்டு. இது இஸ்லாம் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கு முற்பட்டது.

இப்போது ஆரியரின் மகாபாரதத்துக்கு வருவோம். சமஸ்க்ருத ஆண் பெயர்களுக்கு “இ” விகுதி இல்லை. மகாபாரதத்தில் பெண்களை காந்தாரி (காந்தாரத்தில் இருந்து வந்தவள், அதாவது தற்போதைய கந்தகார், ஆப்கானிஸ்தானத்தின் இரண்டாவது பெரிய நகரம்), பாஞ்சாலி (அதாவது பாஞ்சாலத்தில் இருந்து வந்தவள், சொந்தப்பெயர் திரௌபதி), குந்தி (குந்திபோஜ நாட்டில் இருந்து வந்தவள்) இவ்வாறு இ விகுதியோடு அழைத்தார்கள். ஆனால் அக்கால ஆண் பெயர்களுக்கு இ விகுதி இல்லை. காங்கேய, தேவவிரத, பீஷ்ம, துரோண, யுதிஷ்ட்டிர, பீம, அர்ஜுன, நகுல, சஹாதேவ, துரியோதன, துச்சாதன இப்படி இப்படி. ‘அ’ வுக்கும் ‘ஆ’ வுக்கும் இடைப்பட்ட விகுதி தான் சம்ஸ்கிருத ஆண் பெயர்களுக்கு. ஒரேயொரு விதிவிலக்கு மட்டும் இருக்கிறது. அதுதான் சகுனி.

ஆனால் சகுனி குருவம்சத்தவன் கிடையாது. அவன் ஆப்கானி. காந்தார நாட்டில் இருந்து காந்தாரியுடன் வந்தவன். நம்ம அஷ்ரப் கானியுடைய முப்பாட்டன்.

சகுனி ஆரியனா?

இந்த இடத்தில் ஆரியர், திராவிடர் என்றால் என்னவென்று கொஞ்சம் பார்க்கவேண்டும். நடுநிலையான, பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளும் ஆராய்ச்சிகளின் படி ஆப்பிரிக்காவில் கூர்ப்படைந்த ஹோமோ சேப்பியன்களின் இரண்டாவதும் மிகப்பெரியதுமான குடிபெயர்ச்சி ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி அரேபியப் பாலைவனத்தை அடைந்தபின் இரண்டாகப் பிரிந்தது (சுமார் கி. மு. 40,000 – 30,000 ஆம் ஆண்டளவில்). ஒரு பகுதியினர் மெசப்பொத்தேமியா, ஈரான், ஆப்கானிஸ்தான் / சிந்துவெளி ஊடாக இயந்தியாவுக்குள் வந்தார்கள். அவர்கள் திராவிடர். இந்தியாவுக்குள் வந்த பிறகு அவர்கள் ஏற்கனவே அங்கே இருந்த நாகர் முதலியவர்களோடு கலந்திருக்கலாம்.இன்னொரு பகுதியினர், இஸ்ரேல், லெபனான், துருக்கி ஊடாக ஐரோப்பாவில் நுழைந்தார்கள் (Cro-magnons). அங்கிருந்த நியாண்டதால்களோடு கொஞ்சம் கலந்தார்கள். அவர்களில் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு பகுதியினர் பிற்காலத்தில் தெற்கு நோக்கி வந்து ஆப்கான் மலை வாசல்கள் ஊடாக இந்தியாவில் நுழைந்தார்கள். அவர்கள் ஆரியர்.

இரண்டு பகுதியினரும் வெவ்வேறு காலங்களில் ஆப்கானுக்குள் வந்திருந்தாலும் திராவிடர் மேற்கில் இருந்தும் ஆரியர் வடக்கில் இருந்தும் ஆப்கானுக்குள் வந்திருக்க வேண்டும். ஆரியர் சித்தார்யா, அமுதார்யா நதிப் படுகைகளை வந்தடைந்தபோது அவர்களின் ஆண் பெயர்கள் குரு (அதுதான் பிறகு குரு வம்சம் – கௌரவர்) , புரு இவ்வாறு “உ” விகுதியில் முடிவதாக இருந்தன. “அ/ஆ” விகுதி உடைய பெயர்களும் இருந்தன. “இ” விகுதி அநேகமாக மேற்கில் இருந்து கிழக்காக வந்த திராவிடருடனேயே வந்திருக்க வேண்டும். ஆகவே தான் அது இப்போதும் அவர்கள் வந்த பாதையெங்கும் பெருவழக்காக இருக்கிறது.

சிந்து வெளியில் இருந்து தமிழர்களின் மூதாதையர் ஆரியரால் நெருக்கப்பட்டுத் தென்னிந்தியாவில் வந்து நிறைந்த போதே “அன்” விகுதி பெருவழக்கடையத் தொடங்கி இருக்கலாம். அது நாகர்களிடம் இருந்து திராவிடர் பெற்றுக் கொண்ட விகுதியாகவும் இருக்கலாம்.பிறகு தொல்காப்பியம் முதலியவை எழுதப்பட்டபோது “அன்” என்பதை ஆண்பால் விகுதியாக ஏற்றுக்கொண்டு அப்படியே எழுதி விட்டார்கள். வழக்கில் இருப்பது தான் இலக்கணமாகுமே அன்றி இலக்கணத்தில் இருந்து வழக்கு வருவதில்லை.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.