அந்தக் காலம்

வடைக்கு மலாயன் கபேயைத் தெரியும் 

வான வில்லின் ஸ்பெஷலைத் தெரியும் 

உடைக்கு நதியா சில்க்கைத் தெரியும்

ஊரை அளக்க லுமாலா தெரியும் 

மடைக்குக் கவுணா வத்தை தெரியும்

மட்டன் ரோல்சா? ரொலெக்ஸைத் தெரியும். 

கடைக்கண் பார்வை வீசும் கலைக்குக் 

கன்னி உன்னைத் தான் தெரியும்!

கோவில் என்றால் நல்லூர் தெரியும் 

குழப்படி செய்ய ‘பிக் மாட்ச்’ தெரியும் 

கூவில் என்றால் கள்ளுத் தெரியும் 

குளிராய்க் குடிக்க லிங்கம் தெரியும் 

சாவில் அதிரும் பறையைத் தெரியும் 

சவர்க்காரம் ‘மில்க் வைட்’ டைத் தெரியும் 

பாவில் வடிக்க முடியா அழகாய்ப் 

பாவை உன்னைத் தான் தெரியும்!

எடுப்புக் காட்ட உடுவில் தெரியும் 

இதமாய்ப் பேச மெதடிஸ்ட் தெரியும் 

வெடுக்கெனப் பேச வேம்படி தெரியும் 

வெட்கப் படவே கான்வென்ட் தெரியும் 

கடுப்பேத்திடவே பெரிய புலமும்

கவரச் சுண்டுக் குழியும் தெரியும் 

கொடுப்புக்குள்ளே சிரித்துக் கொல்லக் 

குமரி உன்னைத் தான் தெரியும்!

பாட்டுக் குழுவா ராஜன்ஸ் தெரியும் 

பாணுக்கென்றால் “தினேஷைத்” தெரியும் 

போட்டில் செல்லக் கிளாலி தெரியும் 

போட்டோ எடுக்க “ஞானம்ஸ்” தெரியும் 

நாட்டு நடப்பா உதயன் தெரியும் 

நாகர் கோயில் மணலைத் தெரியும் 

நீட்டுக் குழலால் நெஞ்சை மயக்க 

நின்னை அன்றி யார் தெரியும்?

குளத்தில் இரணை மடுவைத் தெரியும் 

குளிக்கக் கீரி மலையைத் தெரியும் 

பழத்தில் கறுத்தக் கொழும்பான் தெரியும் 

பனையின் கிழங்கின் துவையல் தெரியும் 

வளத்தில் சிறந்த எங்கள் மண்ணை 

வடிவாய்த் தெரியும். அந்நாளில் நீ 

உளத்தில் என்ன நினைத்தாய் என்றே 

உண்மையில் இன்னும் தெரியவில்லை!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.