நாட்டுப்பாட்டு – VI


They lie, the men who tell us in a loud decisive tone 
That want is here a stranger, and that misery’s unknown.

Henry Lawson, Australian poet.

கனமிகுந்த சொக்கிலேட்டும் 

கனடா தந்த பளபளப்பும் 

பணமும் கொண்டு வருபவரைக் கண்டு  –  நீயும் 

பறந்திடற்கு  நிற்கிறாயே  மண்டு   –  நீயும் 

பறந்திடற்கு  நிற்கிறாயே  மண்டு.

லட்சக்  கணக்கில் உழைப்பதாக 

நமக்கு இங்கே  தோன்றினாலும் 

மிச்சம் அங்கே  வருதல் ரொம்பக்  கஷ்டம்  –  ஆனால் 

வேலையுமோ ரொம்ப ரொம்பக் கஷ்டம்  –  செய்யும் 

வேலையுமோ ரொம்ப ரொம்பக் கஷ்டம்.

கள்ள  ஏஜென்ட்  தன்னை நம்பிக் 

காசை நீயும் இழந்து  விட்டால் 

வெள்ளை  நெஞ்சாய்  உனக்குப் பட்டை நாமம்  –  உந்தன் 

வீடுவாசல் ஈட்டில்  மாளும்  சோகம் – உந்தன் 

வீடுவாசல் ஈட்டில்  மாளும்  சோகம்.

ஊரில்  போலே  வெப்பம் இல்லை 

உறைபனியால்  முற்றும் தொல்லை 

காரிற்  போக வெளிக்கிட்டு நின்றாலும்  –  முதலில் 

கதவடைக்கும் பனியை  அள்ள  வேணும்  – முதலில் 

கதவடைக்கும் பனியை  அள்ள  வேணும்.

இருபதில்  போய்  வேலை செய்தே 

இளைஞர் வாழ்வில்  உயர்ந்து நின்றார் 

அறுபதில்  போய்  என்ன செய்வாய் நீயும்  –  அண்ணை 

அதையதை  ஓர்  வயசில் செய்ய வேணும்  – அண்ணை 

அதையதை  ஓர்  வயசில் செய்ய வேணும்.

அரசு உன்னை அழைப்பதெல்லாம் 

அன்பு உன்னில் கொண்டு இல்லை 

சிரம வேலை செய்ய ஆள்கள் வேண்டும்  –  அவர்கள் 

சிறந்து வாழ நீயும் மாள  வேண்டும்  – அவர்கள் 

சிறந்து வாழ நீயும் மாள  வேண்டும்.

ஆடிக்காற்றில் பறந்ததம்மி 

அடட  நீயும் போனால் நம்பி 

நீடிக்காது ஸ்டுடென்ட் விசாவும் தம்பி  –  திரும்ப 

நேரக்  கூடும் நெஞ்சு மிக  வெம்பி – திரும்ப 

நேரக்  கூடும் நெஞ்சு மிக  வெம்பி.

பலரும் ஒன்றாய்ச்  சென்றிறங்கிப் 

பார்த்தால் அங்கே  வேலை இல்லை 

டொலரில் நீயும் வாடை கட்ட நேரும்   –  நீயும் 

நொடித்து  விட்டால் உதவிக்கில்லை யாரும்  – நீயும் 

நொடித்து  விட்டால் உதவிக்கில்லை யாரும்.

கனடா சென்று வாழ்ந்திட்டாலும் 

காரைதீவில் வாழ்ந்திட்டாலும் 

கடின வேலை செய்யார் வாழ்வில் வெல்லார்  –  வெற்றுக் 

கதையளப்போர்  சரித்திரத்தில் நில்லார்  –  வெற்றுக் 

கதையளப்போர்  சரித்திரத்தில் நில்லார்.

கஷ்டப்பட்டு வேலை செய்யும் 

கடின நெஞ்சம் உனக்கிருந்தால் 

இஷ்டப்பட்டே ஊரில்  வேலை செய்வாய்  –  சரியாய் 

இலக்கு வைத்தே முயற்சி அம்பை எய்வாய்  – சரியாய் 

இலக்கு வைத்தே முயற்சி அம்பை எய்வாய்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.