என் திருவாசிரியத் தொகை

தேவாசிரிய மண்டபத்தின் முன் சுந்தரர் பாடியது திருத் தொண்டத்தொகை. அவர் போலப் பாடும் ஆற்றல் இல்லாத அடியேன் எனது ஆசிரியர்களைப் போற்றி எழுதுவது திருவாசிரியத் தொகை.

(1)

விண்ணுலகில் வாழ்கின்ற என் பாட்டன், கிருஷ்ணன்,

மேனியிலே மால் அனையான், வெள்ளை மனம் உடையான்,

எண்ணடங்காப் பெரும்பணிகள் கூட்டுறவிற் செய்தோன்,

அரசடி ஆசிரியன், இவன் அடியார்க்கும் அடியேன்.

மண்ணுலகிற் திருநீறே சிறந்த பொருளென்று 

வாழ்ந்திருந்த மறு பாட்டன், தமிழறிஞன், சான்றோன்,

சிந்தனையும் திருவுருவும் ஆடையுமே வெண்மை 

திகழ்ந்தவனாம் சிவசுப்ர மணியனுக்கும் அடியேன்.

(2)

தமிழ் மொழியை நகைச் சுவையாய்த் தந்த பெரும் அறிஞன்,

தமிழ்க் கடலும் வட மொழியும் கடந்த அதி தீரன்,

இமைப்பதன் முன் இலக்கணநூல் பலசொலவும் வல்லோன்,

இசை மிகுந்த பாட்டன் உமா மகேஸ்வரனுக்கு அடியேன்.

நமக்கெல்லாம் சிறுவயதில் அரிவரியைத் தந்த 

நமசிவாயப் பெயரான் பாட்டனுக்கும் அடியேன்.

அமைப்போடு கணிதத்தை அழகாகத் தந்த 

அம்மா சின்னம்மா, தங்கம்மாவுக்கு அடியேன்.

(3)

முத்தான முதல் வெற்றிக்கு அருள்செய்த பெருமான், 

மூதறிஞன், சைவநெறிக் கழகத்து முதல்வன்,

இரத்தின மா விநாயகனின் அடியார்க்கும் அடியேன்;

இன்முகத்து ஆசிரியை நளினிக்கும் அடியேன்;

மெத்த மன விருப்புடனே மூன்று வருடங்கள் 

மிகக்கவனமாக எனக்கு அறிவமுது தந்த 

வித்தகராம் அப்பாதுரை ஆசிரியைக்கு அடியேன்;

விழிமைந்தன் குருமார்கள் பதம் போற்றுகின்றேன்.

(4)

தத்தினதோம் தரிகிடதோம் தகிடதக என்று 

தாளகதி தவறாது மிருதங்கம் பயில 

வைத்த பிரான் சின்னராச மன்னவனுக்கு அடியேன்.

மங்காத சங்கீத வன்மையினை உடையார் 

தித்திக்கும் சங்கீதம் சிறுவயதில் தந்த 

சிறப்புமிகு நாகம்மா ஆசிரியைக்கு அடியேன்.

அத்தகையார் மாணவி என் ஆசிரியை ஆன

ஆனந்திப் பேருடையார் அவருக்கும் அடியேன்.

(5)

ஐந்தான வகுப்பினிலே அழகொடு கற்பித்து,

ஆருக்கும் பிந்தாத நிலையில் எனை வைத்த,

சிந்தையிலே சிறந்த செல்வ ராசாவுக்கு அடியேன். 

சிறப்புடைய பரமேசு வரி அவர்க்கும் அடியேன்.

முந்தியே ஆங்கில அறிவெனக்குத் தந்த 

முழுமதி நேர் முகமுடைய டுவைட் அவர்க்கும் அடியேன். 

இன்தமிழார் இராஜேசு வரி அவர்க்கும் அடியேன்.

எளியவன் யான் பெரியவர்கள் பதம் போற்றுகின்றேன்.

(6)

ஆறாகத் தமிழ்மொழியை ஆறினிலே தந்த 

அன்புமிகு குரு செல்வ ராசாவுக்கு அடியேன். 

ஊரவராம் குணரத்னம் அடியார்க்கும் அடியேன்.

உறுப்பெழுத்தில் மிகும் ராஜ சேகரனார்க்கு அடியேன்.

ஏறாத மாணவற்கும் ஏறிடவே கீதம் 

இனிமையுடன் கற்பித்த ரூபிக்கும் அடியேன்.

மாறாத குரல் வளம் சேர் மாலாவுக்கு அடியேன்.

மாணவன் நான் ஆசிரியர் புகழ் பாடுகின்றேன்.

(7)

சத்தமொடு பண்ணிசையைப் போட்டியிலே பாடச், 

சங்கீதத் திறனுடையோர் மிகுந்த அணிதன்னில்,

சுத்தமென என்குரலும் சுருதியதும் கொண்டு,

சொந்தமகன் இருந்திடவும் எனை முன்னில் வைத்து,

வித்தகநீ வெறுங்கழுத்தாய்ப் பாடிடவோ என்று,

விரைவாகத் தன்கழுத்துச் சங்கிலியைத் தந்து,

வைத்தகுரு வடிவாம்பாள் ஆசிரியைக்கு அடியேன்.

மாணவன் நான் மாபெரியோர் அடிபோற்றுகின்றேன்.

(8 )

குருவாகி வாழ்த்திசைத்த குமார தேவர்க்கு அடியேன்.

குணநலம் சேர் தமிழ் ரேணுகாவிற்கும் அடியேன்.

திரு நேரும் ஞானேசு வரி அவர்க்கும் அடியேன்.

திருமதியாம் நகுலேசுவரன் அவர்க்கும் அடியேன்.

உருவாக்கி மாணவரை வளர்த்தெடுத்த தாயாம் 

உயர் ‘ரோணி டீச்சர்’ எனும் உத்தமர்க்கும் அடியேன்.

எருவாக்கித் தன்னை, நமைப் பயிராக வளர்த்தான் 

இரத்தின மா விநாயகனுக்கு இருமடியும் அடியேன்.

(9)

“நீ வரலே நன்கொடையாம், வேறெதுவும் வேண்டேன்.

நிழல் தருவேன். வருக” வென யூனியனில் என்னை 

ஆவலுடன் சேர்த்தவனாம், அறிவுடைய அதிபன்,

அரும் கந்த சாமியவன் அடியார்க்கும் அடியேன்.

சேவை புரி மனமுடைய கல்லூரி முதல்வன் 

திகழ் கமல நாதனெனும் தேவனுக்கும் அடியேன்.

பாவம் அறியா ஞானப் பிரகாசர்க்கு அடியேன்.

படித்தவன் நான் கற்பித்தோர் பதம் போற்றுகின்றேன்.

(10)

கருத்துடனே ஆங்கிலத்தைக் கற்பித்த குருவாம் 

கடமையிலே கண்ணான ஜெய சீலர்க்கு அடியேன்.

குருத்தினிலே என் ஆற்றல் தனைக் கண்டு மகிழ்ந்து 

கொண்டாடி ஊக்குவித்த சடாதரற்கும் அடியேன்.

திருத்தமிகு கணிதத்தைத் கற்பித்த ராஜ 

சேகரற்கும், யோகேசு வரி தமக்கும் அடியேன். 

உரித்திடுவேன் தோலையென வெருட்டுவர் ஆனாலும் 

உள்ளத்தில் அன்பினர் கெங்கா தரர்க்கும் அடியேன்.

(11)

செந்தமிலார் மங்களா ஆசிரியைக்கு அடியேன்.

சீற்றமிலா இளையதம்பி அடியார்க்கும் அடியேன்.

சந்ததமும் எண்ணுகிற சங்கீத ஆசான் 

தாயனைய கோமளத்தின் அடியார்க்கும் அடியேன்.

பந்தமிகு குணபால சிங்கர்க்கும் அடியேன்.

பால சர சுவதிக்கும் பாகுவுக்கும் அடியேன்.

விந்தைமிகும் இசைதந்த லேகாவுக்கு அடியேன்.

விழிமைந்தன் உளியானார் புகழ் பாடுகின்றேன்.

(12)

நெடுந்தெருவில் வருகையிலே, சிநேகிதன் என்றெண்ணி,

“நீ” என்று சொன்னதன்பின், நெஞ்சு மிக நொந்து, 

நடுங்கி மிக மொழி குழறி நான் வருந்த முன்பு,

“நான் அறிவேன், உம்முடைய குருபக்தி நன்று!

விடும் தம்பி, வாய் தவறிச் சொல்லி விட்டீர் போலும்;

விந்தையென்ன இதில்?” என்று மென்முறுவல் செய்த,

அருந்தமிழாள் குணதாசன் ஆசிரியைக்கு அடியேன்.

ஆகியவன் ஆக்கியவர் அடிகள் பணிகின்றேன்.

(13)

பிடிப்புடனே போட்டிகளுக்கு எமை அழைத்துச் சென்று,

பிட்டுத்தான் இவன் விருப்பம் இடியப்பம் தின்னான் 

கொடுத்திடுவீர் அவன் விரும்பும் உணவையெனக் கேட்ட 

கொற்றப் புண்ணிய சீல அதிபருக்கும் அடியேன்.

நடிப்பினிலே வாகைபுனை பத்ம காந்தர்க்கும் 

நல்லன்பின் குரு செல்வ ராணிக்கும் அடியேன்.

துடிப்புடனே கற்பித்த கிரிதரனுக்கு அடியேன்.

துளிபெற்ற நிலமாய் நான் மழை பாடுகின்றேன்.

(14)

அந்தமிலா மகாதேவன், இரசாயனத்தின் வேந்தன்,

அழகுதமிழ் ஆசிரியன் அடியார்க்கும் அடியேன்.

விந்தைமிகக் கணிதத்தில் செய்கிறவன், வெக்டர் 

வித்தகன், வேலாயுதனின் அடியார்க்கும் அடியேன்.

சிந்தனையில் மாணவர்கள் சிறப்பு என்றும் எண்ணும் 

சீர்மிகுந்த குணசீலத் தேவனுக்கும் அடியேன்.

எந்தவிதக் கேள்விக்கும் முறுவலுடன் பதிலை 

இயம்புகிற குமரன் என் ஆசானுக்கு அடியேன்.

(15)

சிறுவயதில் குருவாகி, நாம் வளரல் கண்டு,

சிறப்புடனே கணிதத்தை ஏறிவந்து தந்து,

பெறுபேறு வேண்டுமென அறிவுரைகள் கூறிப்,

பிறகெமக்கு உயர்தரத்தில் ஆசானும் ஆகிப்,

பொறுமையொடு உயர்தர மாணவர்மன்றம் நடத்திப்,

பொங்குகிற அன்பினொடு என்றும் எமை வாழ்த்தும்,

கருணைமிகு சண்முகனாம் ஈஸ்வரனுக்கு அடியேன்.

கற்றவனும் கற்பித்தோர் இசை பாடுகின்றேன்.

(16)

அன்புடை நெஞ்சார் லோக நாதர்க்கும் அடியேன்.

ஆசிரியர் புகழ்ச் சந்த்ர சேகரற்கும் அடியேன்.

இன்பமுறு புன்னகையார் சுகுமாரர்க்கு அடியேன்.

இசைச் சத்ய மூர்த்தி எனும் எண்கணிதர்ற்கு அடியேன்.

புன்னகை செய் பானுமதி ஆசிரியைக்கு அடியேன்.

புகழ்மிக்க சிவத்திரற்கும் ஐங்கரர்க்கும் அடியேன்.

என்னாசான் பஞ்சாட்ச ரத்துக்கும் அடியேன்.

ஏறியவன் ஏணிகளின் இசை பாடுகின்றேன்.

(17)

கடல் சூழ்ந்த கண்டத்தில் கால்வைத்த நாளில் 

கணனிக் கல்விகள் தந்த ‘லியபெல்ட்டுக்கு’ அடியேன்.

கடமையிலே கண்ணான ‘லாங் வைட்டுக்கு’ அடியேன்.

கருத்துடையோர் சார்லிக்கும் அலிசனுக்கும் அடியேன்.

படற் பாடம் பலசொல்லிப், பல விடைகள் சொல்லிப்,

பாதியிரா விழித்திருந்தும், பயில்வோரின் பெயர்கள் 

திடத்துடனே சொல் டேவிட் நைட் அவர்க்கும் அடியேன்.

சிறியேன்யான் பெரியோரின் சீர் பாடுகின்றேன்.

(18)

மென்பொருளும் வன்பொருளும் இடைப்பொருளும் பேசும் 

வியப்புமிகு கணணியியல் மேற்படிப்பில் ஆய,

அன்புடனே எனை அழைத்து, ஆற்றலினை ஊக்கி,

ஆய்வினிலே வந்ததடை அவைகடக்கச் செய்து, 

என்றும் மிக வாஞ்சையுடன் வழிநடத்தி வந்தோன்,

இன்றுவரை அக்கறையாய் அறிவுரைகள் சொல்லும்

அன்புடையான் அல்பேட் வை. சொமாயாவுக்கு அடியேன்.

ஆகியவன் ஆசிரியர் அடி பரவுகின்றேன்.

(19)

நெல்லியடிப் பள்ளியிலே போர்க் காலம் தன்னில் 

நேயமுடன் கற்பித்தோர் அனைவருக்கும் அடியேன்.

அல்லெனவும் பகலெனவும் பாராதே ஆயும் 

அடிலெயிட் பேராசிரியர் அனைவருக்கும் அடியேன்.

நல்லாசான் கள் நானும் சொல்லாதே மறந்த 

நவில் பெரிய புகழுடையார் அனைவருக்கும் அடியேன்.

தொல்லுலகின் ஆய்வறிஞர் அனைவருக்கும் அடியேன்.

துளியறிவோன் கடலறிவோர் புகழ் பாடுகின்றேன்.

(20)

தென்னை, பனை, மா, கமுகு, தேக்கு பல நிற்கும் 

திகழ் விழிசைச் சோலையிலே வாழுகிற குயிலாம்,

சொன்ன பல திறனுடைய கோகில மாதேவி,

சொல் செயலால் நம்மவர்கள் துயர்துடைக்கும் அன்னை,

மன்னவனாம் மகேந்திரன் முன்னாள் அதிபன், இவர்கள் 

மகிழ்கின்ற புதல்வன், அறம் மறவாத மனத்தோன்,

அன்னவனாம் விழிமைந்தன் அடிமை கேட்டு உவப்பார் 

ஆசிரியர் ஆசியினால் அழகுற வாழ்வாரே.

விழிமைந்தன்

06. 10. 2023.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.