சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

“வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில்
மெலியார்மேற் செல்லும் இடத்து.”

என்பது வள்ளுவர் வாக்கு.

காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள் வலியவர்களாக இருந்தார்கள். தங்களிலும் மெலியவர்களை, குறிப்பாக எதிரிநாட்டுப் பெண்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

சோழர்களைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவர்களது படைத்துறைச் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவர்களது தந்திரோபாய நகர்வுகள் உச்சமானவை. அவர்களது கட்டிடக்கலை உலகை இன்றும் வியக்க வைப்பது. அவர்களது காலத்தில் செய்யப்பட்ட தமிழ் இலக்கியங்களின் இனிமைக்கும் தரத்துக்கும் உலகில் ஈடிணை காண்பது அரிது. இதைப்பற்றியெல்லாம் நானே எழுதியிருக்கிறேன். ஆனால், எந்த ஒரு விடயத்திலும் நாங்கள் சமநிலை நின்று உண்மையைப் பார்க்க வேண்டும். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால் கோடாமை, சான்றோர்க்கு அணி. அப்படிப்பார்க்கின்ற போது, சோழர்கள் செய்த போர்க்குற்றங்களையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பற்றிப்பேசாமல், தெரிந்து கொள்ளாமல் சோழர் வரலாறு முழுமை பெறாது.

சோழர்கள் ஏன் இவற்றைச் செய்தார்கள் என்பதற்குச் சில காரணங்கள் இருக்கலாம். சில நியாயப்படுத்தல்களும் முன்வைக்கப்படலாம். முதலில் சம்பவங்களைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, பின்னர் அவற்றின் காரணங்களைப் பற்றிப் பேசுவோம்.

சோழர்களின் சாம்ராஜ்ய விரிவாக்கம் விஜயாலய சோழனின் காலத்தில் (848 –  891 AD) ஆரம்பித்து முதலாம் குலோத்துங்கன் காலம் வரை (1070 – 1120 AD)  ஓரளவு நடந்து வந்திருந்தது. கிபி 1120 இலிருந்து சோழர்களுக்குத் தேய்பிறை. விஜயாலயன் காலத்தில் சோழநாடு சுதந்திர அரசாகியதில் இருந்து, பல்லவ நாடு, பாண்டிய நாடு, இலங்கை, சேர நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, முந்நீர்ப்பழந்தீவுகள், கங்கை வரையான கீழ்க்கரையோர நாடுகள், ஸ்ரீவிஜயம், கீழைக்கடல் தீவுகள், தென் சாளுக்கிய சாம்ராஜ்யம், சாவகம், கலிங்கம் என்றிவ்வாறாகச் சோழர்களின் படையெடுப்புகள் விரிந்து சென்றன. படையெடுப்புகள் விரிய விரியச், சோழர்களின் கொடூரமும் அதிகரித்துச் சென்றதாகத் தெரிகிறது.

தமிழ்கூறும் நல்லுலகிற்குள்ளே சோழர்கள் செய்த போர்களில் அவர்கள் பெருமளவில் போர்க் குற்றங்களைச் செய்ததாகத் தெரியவில்லை. முதன்முதலில் சோழர்கள் தொண்டை மண்டலத்தை ஆக்கிரமித்த போது அவர்கள் பல்லவ அரசகுலத்துடன் சண்டையிட்டார்களே அன்றி, தமிழர்களாகிய தொண்டைநாட்டு மக்களுக்கும் சோழர்களுக்கும் விரோதம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆதித்த சோழன் காலத்தில் (891 –  907 AD) தொண்டைமண்டலம் கைப்பற்றப் பட்டதில் இருந்து மூன்றாம் குலோத்துங்கள் காலத்தில் சோழர்கள் வீழ்ந்தது வரை (1218 AD)  தொண்டைமண்டலத்தில் சோழர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி எதுவும் தோன்றவில்லை. வடக்கேயிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படும் பல்லவர் ஆட்சியை விடச் சோழர் ஆட்சியை மக்கள் விரும்பி இருக்கவும் கூடும். பல்லவ அரசர்கள் சோழ வம்சத்தவர்கள் என்று ஒரு கதையும் உண்டு. எவ்வாறோ, தொண்டைமண்டலத்தில் சோழர்கள் கொடுமைகள் எதுவும் செய்ததாக இல்லை என்பதோடு தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டது.

அடுத்ததாகக் கைப்பற்றப் பட்டது பாண்டிய நாடு. பாண்டிய மன்னர்கள் சோழர்களின் பரம வைரிகள் என்பதோடு அவர்கள் என்றும் சோழர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும், பாண்டிய நாட்டு மக்களை சோழர்கள் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் பெரியளவில் இல்லை – பாண்டிய நாட்டு அரச குடும்பப் பெண்களைச் சிறைப்பிடித்தது தவிர. முக்கியமாக, பாண்டியநாட்டில் சோழர்கள் ஆரம்பத்தில் (அதாவது முதலாம் குலோத்துங்கன் காலத்திற்கு முன் ) செய்த போர்களில் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. குலோத்துங்கனுக்குப் பிற்காலத்தில் பாண்டிய நாட்டில் சோழர்கள் செய்த போர்களின் தன்மையைக் கீழே காண்க.

இதேபோல, (அடுத்ததாகக் கைப்பற்றப் பட்ட) இலங்கையிலும் கூடச் சோழர்கள் பெரிய கொடுமைகளை சாதாரண மக்களுக்கு எதிராகச் செய்ததாகத் தெரியவில்லை. இதனை, இலங்கை வரலாற்று நூலாகிய சூளவம்சமே மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது. ஏனெனில், பிற்காலத்தில் கலிங்க மாகன் போன்ற படையெடுப்பாளர்கள் செய்த கொடுமைகளை (விகாரைகளை இடித்தது, புத்த பிக்குகளைக் கொன்றது, குளங்களை உடைத்தது, அதிகளவு வரிகளை விதித்தது இப்படி) சூளவம்சம் மிக விரிவாகக் கூறுகிறது. சுந்தர சோழன், ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களில் நடத்தப்பட்ட சோழப்படையெடுப்புகள் குறித்து இப்படியான குற்றச்சாட்டுகளை சூளவம்சம் முன்வைக்கவில்லை. மேலும், சுமார் நூறு ஆண்டுகள் வரை (960 – 1070) சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தில், சோழர்காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட / உருவாக்கப்பட்ட பௌத்த மதச்சின்னங்கள் பல இன்றைக்கும் இருக்கின்றன. மகா விகாரை, அபயகிரி விகாரை, ருவன்வலி சாய, லோவமகாபாய, புனித அரச மரம் இப்படி. சோழர்கள் நினைத்திருந்தால் இவற்றையெல்லாம் தரைமட்டம் ஆகியிருக்க முடியும். ஆனால் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதேபோல, சேர நாட்டிலும் சோழர்கள் பெரிய கொடுமைகளைச் செய்ததற்கு ஆதாரமில்லை.

இதுவரை குறிப்பிட்ட படையெடுப்புகள் எல்லாம், ராஜராஜ சோழன் (இளவரசன் ஸ்தானத்தில் இருந்து) படைத்தலைமை வகித்த காலத்திலோ (அதாவது கிட்டத்தட்ட கிபி 965 – 985 வரை) அதற்கு முன்போ நடந்தவை. அருள்மொழி வர்மனாகிய ராஜராஜசோழன் மிகவும் பெருந்தன்மையும் தயாளமும் உடையவன் எனவும், முடிந்தவரையில் குடிமக்களை பாதுகாத்து போர்களைச்செய்தவன் என்றும் ஒரு விம்பத்தை கல்கி முதலியவர்களின் நாவல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. இது எவ்வளவுதூரம் உண்மையோ தெரியாது. ஆனால், ராஜராஜன் காலம்வரை சோழர்கள் செய்த போர்குற்றங்களுக்குச் சான்றுகளை அதிகம் காண முடியவில்லை என்பது உண்மை.

சோழர்களின் மூர்க்கம் (முதலாம்) ராஜேந்திர சோழனின் படையெடுப்புகளோடு தொடங்குகிறது. இதே காலத்தில் தான் மேலைச் சாளுக்கியப் பேரரசு எழுச்சி பெற்று, அவர்களுடனான சோழர்களின் சமர்களும் தொடங்குகின்றன. சாளுக்கியர்களுடன் சோழர்கள் போரிட்டபோது என்ன காரணத்தாலோ அவர்களின் போர்முறைகளின் கொடூரம் அதிகரித்திருக்கிறது. இதற்குக்கிடைக்கும் முதலாவது சான்று, ராஜராஜன் ஆட்சிக்காலத்தில், அவனது மகன் ராஜேந்திர சோழனின் தலைமையில் தென்கர்நாடகம் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு. இந்தச்சமரில் போர்முறைகளைப் பட்டத்து இளவரசனாகிய ராஜேந்திரனே வகுத்தபடியால் கையாளப்பட்ட போர்முறைகளும் ராஜராஜனை விட ராஜேந்திரனின் ஆளுமையைப் பிரதிபலிக்கின்றன என்றே நான் நினைக்கிறேன். இக்காலத்தில் (கிபி 1008 அளவில்)எழுதப்பட்ட சாளுக்கியக் கல்வெட்டு ஒன்று “ராஜராஜ நித்ய வினோத ராஜேந்திர வித்யாதரன், சோழர்களின் முடிமணி போன்றவன், ஒன்பதரை இலட்சம் வீரர்கள் கொண்ட பெரும்சேனையுடன் இடைதுறை நாட்டில் (துங்கபத்திர நதிக்கு வடக்கே சாளுக்கியரின் அப்போதைய தலைநகரான மான்யகேடம் வரையுள்ள பகுதி) புகுந்து பெருநாசத்தை விளைவித்தான். அந்தணர்களைக் கொன்றான். பெண்களைச் சிறைப்பிடித்தான். மனுநீதியும் தர்மமும் அழியும்படி செய்தான் ” என்று குற்றம் சாட்டுகிறது. இது போரில் தோற்ற எதிரிகளின் கூற்று என்பதையும், ராஜேந்திர சோழனை விருதுப்பெயர்களுடன் மிகுந்த மரியாதையுடனேயே இந்தக் கல்வெட்டு குறிக்கிறது என்பதையும் நோக்கவேண்டும். இருந்தாலும், போர்க் குற்றங்கள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கும் முதல் ஆதாரம் இது.

அடுத்ததாக உறுத்தும் விடயம், ராஜேந்திர சோழனின் ” மனைவிகளின்” எண்ணிக்கை. பேரரசர்கள் பல மனைவிகளை மணப்பது அக்காலத்தில் சாதாரண விடயம் என்பதோடு குறித்த பெண்களின் விருப்பத்துடன் நடந்திருந்தால் குற்றங்களுமல்ல. ராஜேந்திரனுக்கு ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் மனைவியர் இருந்ததாக சோழ வரலாற்று மூலங்கள் குறிப்பதோடு அவர்கள் மூலம் பிற்காலத்தில் அறியணையேறிய மூன்று வீரப்புதல்வர்கள் பிறந்திருக்கிறார்கள் (முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன்). ஆனால், இந்தக் கணக்கைத் தவிர, கைப்பற்றிய தொலைதூர நாடுகளில் அவனுக்கு மனைவிகளும் அவர்கள் மூலம் மகன்களும் இருந்ததாக வெளிநாட்டு வரலாற்று மூலங்கள் கூறுகின்றன. சோழ வரலாற்று மூலங்களில் இவர்கள் குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக, செஜாரா மலையு என்ற மலேசிய கிரந்தத்தை எடுத்துக்கொண்டால், அது, ராஜேந்திரன் கங்கையைக் கைப்பற்றிய பிறகு “புத்திரி கங்கா” என்ற இளவரசியை மணந்ததாகவும், அதேபோல ஸ்ரீவிஜயத்திலிருந்து “புத்தரி ஒனங் கியூ”என்ற இளவரசியை மணந்ததாகவும், மேலும் கீழ்கடல் தீவுகளில் இளவரசிகளை மணந்ததாகவும் அவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொண்டதாகவும் கூறுகிறது.

இது கொஞ்சம் உறுத்துவதற்குக் காரணம், ராஜேந்திர சோழன் படைவலு மூலம் கைப்பற்றிய நாடுகளின் இளவரசிகள் இவர்கள் என்பது. வீரமும் வெற்றியும் உடையவர்களை, அவர்கள் எதிரிகளாகவே இருந்தாலும், பெண்கள் விரும்புவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டுதான் வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஐரோப்பாவின் பல நாடுகளை ஜெர்மானியர்கள் கைப்பற்றிய போது அந்தந்த நாடுகளில் எல்லாம் ஜெர்மனிய வீரர்களுடன் அந்நாட்டுப் பெண்கள் பலர் விரும்பியே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர் என்பது தெரிந்தது தான். ஆனால், ராஜேந்திரனின் இந்தத் “திருமணங்கள்” (நடந்திருந்தால் அவை) பலவந்தத் திருமணங்களாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. வெற்றிபெற்ற பேரரசன் தோல்வியுற்ற நாட்டின் இளவரசியை மணக்க விரும்பினால் பெண்ணின் விருப்பத்தை யார் கேட்டிருக்கப் போகிறார்கள்?

இருந்தாலும், “செஜாரா” ஒரு நம்பக்கூடிய வரலாற்று மூலமல்ல. அதில் சொல்லப் பட்ட விடயங்கள் குறியீடுகளாக இருக்கலாம். சோழ மன்னர்கள் கங்கையைக் கைப்பற்றியதை “மணந்ததாகச்” சொல்லும் குறியீடு தமிழிலக்கியத்திலும் நெடுங்காலமாக உண்டு. “திங்கள் மாலை வெண்குடையான் சென்னி (சோழ மன்னன்) செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” என்றவாறு இந்த symbolism சிலப்பதிகார காலத்திலேயே உருவாகி விட்டது. அதேபோல மற்றைய இடங்களை ராஜேந்திரன் கைப்பற்றியதையும் அவ்வூர் இளவரசிகளை மணந்ததாக உருவகப்படுத்தி இருக்கலாம். அல்லது இத்திருமணங்கள் வெறும் கற்பனையாகவும் இருக்கலாம். ஆகவே, இப்படியான செய்திகளை வைத்து ராஜேந்திர சோழனை நாம் குற்றம் சாட்டிவிட முடியாது. எனவே, இதனைக்கடந்து சென்று விடலாம்.

அதேபோல, ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை மன்னனாக அப்போதிருந்த மகிந்தனின் “தேவியர்” கைப்பற்றப் பட்டுச் சோழ நாட்டுக்கு கொண்டுபோகப் பட்டதாக சூளவம்சம் கூறுகிறது. ஆனால், மகிந்தனும் சிறைக்கைதியாக அப்போது கொண்டுசெல்லப்பட்டதால், அரச குடும்பம் என்ற ரீதியில் அவனது மனைவிமார் கவுரவமாக நடத்தப் பட்டிருக்கவும், மகிந்தனோடு ஒன்றாகவே அவர்கள் சோழநாட்டில் வாழ்ந்திருக்கவும் சந்தர்ப்பமுண்டு. தவிரவும், சூளவம்சம் கூறுவதை முழுதாக நம்பவும் முடியாது. ஆகவே, இதையும் கடந்து சென்று விடுவோம்.

முதலாம் ராஜாதிராஜன்  அரியணை ஏறியதற்குப் பிற்பட்ட காலம் (கிபி 1044 இற்குப் பின்)

(முதலாம்) ராஜேந்திர சோழனின் மகன்கள் காலத்தில், அதாவது முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் இருந்து, கடந்து செல்லமுடியாத ஆதாரங்கள் சோழர்கள் செய்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக வெளிப்படத் தொடங்குகின்றன. “கடந்து செல்லமுடியாத” என்று நான் சொல்வதற்குக் காரணம், சோழர்கள் சார்பான வரலாற்று மூலங்களிலேயே இவை சொல்லப்படத் தொடங்குவது. ராஜேந்திரனின் புதல்வர்களான ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகிய மூவரும் மாவீரர்கள். ஆனால், இவர்கள் தங்களது பாட்டன் அல்லது தந்தை அளவுக்கு அரசாட்சியினுடைய மற்றைய அங்கங்களில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. வாழ்நாள் முழுவதையும் போர்முனைகளில் கழித்தவர்கள் இவர்கள். இவர்களது காலத்தில், சோழ- சாளுக்கியச் சமர்களும் உச்ச நிலையை அடைந்திருந்தன. எனவே, இவர்களது ஆட்சியில் மனித உரிமைகள் பற்றிய விழுமியங்கள் சோழப்படைகளிடம் குறைந்து சென்றிருப்பது இயல்பானதே. எனவே இவர்களின் காலத்தில், சோழப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் பற்றிச் சோழ சாசனங்களே பெருமையுடன் சொல்லத் தொடங்குகின்றன.

உதாரணமாக, முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் கன்னோஜ் (கன்யாகுப்ஜம்) இளவரசனாகிய ஜகதிபாலனுக்கு நடந்ததைக் கூறலாம். வட இந்தியாவின் கூர்ஜர – பிரதிகார வம்சம் அரசாண்ட கன்யாகுப்ஜம் உட்பட்ட பகுதிகளை (இன்றைய உத்தரப் பிரதேசம் ) கஜனி முகம்மது கைப்பற்றியதாலும், அதற்கு அருகாமையில் இருந்த பகுதிகளை அரையன் ராஜராஜன் தலைமையிலான சோழ சைனியங்கள் கைப்பற்றியதாலும், நாடிழந்த இளவரசன் ஜகதிபாலன் இலங்கைக்குத் தப்பியோடி வந்து ரோஹணக்காடுகளில் மறைந்து வாழ்ந்தான். இவனது இன்னுமொரு பெயர் வீர சலமேகன். ஒரு கட்டத்தில், சிங்கள இளவரசர்கள் பலர் சோழர்களால் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதால் ரோஹண நாட்டில் மறைந்து வாழ்ந்து சோழர்களை எதிர்த்து வந்த சிங்களப் படைகளுக்கு ஜகதிபாலன் தலைமை ஏற்றான். சமரொன்றில் அவன் சோழர்களிடம் தோற்று ஓடியபோது அவனது தாய், மனைவி, மகள் முதலிய பெண்கள் சோழர்களிடம் பிடிபட்டனர். ஜகதிபாலன் தப்பியோடி ஒளிந்து கொண்டான். அவனை வெளிப்படுத்திப் போருக்கு வரச்செய்து கொல்வதற்கான ஒரு உபாயமாக சோழர்கள் அவன் தாயின் மூக்கை அறுத்தனர். இந்த அவமானம் தாங்காமல் ஜகதிபாலன் மறுபடியும் போர்க்களத்துக்கு வந்து போர்செய்து சோழர்களால் கொல்லப்பட்டான். அவனது மனைவி, மகள் முதலியோரைச் சோழர்கள் பிடித்துச் சென்றனர். இதனை,

“தன்னது ஆகிய கன்னக்குச்சியினும்
ஆர்கலி ஈழம் சீரிதென் றெண்ணி
உளங்கொள் நாடு தன்னுறவோடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீரசலா மேகன்
பொருகளத்தஞ்சித் தன் கார்களிறிழந்து
கவ்வையுற் றோடிக் காதலி யொடுந்தன்
றவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய
ஆங்கவமானம் நீங்குதற்காக
மீண்டும் வந்து வாட்டொழில் புரிந்து
வெங்களத்து உலந்த அச் சிங்களத் தரைசன்….”

என்று முதலாம் ராஜாதிராஜன் மெய்க்கீர்த்தி ஒத்துக்கொள்வதோடு அது குறித்துப் பெருமையும் கொள்கிறது. போர்க்களத்தில் கைப்பற்றப் பட்ட ராஜ குடும்பத்துப் பெண்களைச் சித்திரவதை செய்து, அதனை ஒரு போர் உபாயமாகச் சோழர்கள் பயன்படுத்தி எதிரியை வெளியே வரச்செய்து கொன்றது தற்கால வரைவிலக்கணப்படி தெளிவான போர்க் குற்றம் ஆகும்.

பல வருடங்களுக்குப்பின்பு இலங்கையரசன் முதலாம் விஜயபாகு இந்தப்பெண்களை விடுவித்ததோடு ஜகதிபாலன் மகளை மணந்தும் கொண்டான் என்பது உபரிச் செய்தி. எனவே அநேகமாக அதுவரை இவர்கள் பொலநறுவையில் சிறை வைக்கப்பட்டு இருந்திருக்கலாம்.

சில ஆண்டுகள் கழித்து, இதேமாதிரிச் சம்பவம் சோழ- சாளுக்கிய போர்க்களத்திலும் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாகக் ‘கூடல் சங்கமச் சமர்’ என்று அழைக்கப்படும் இரண்டாம் கூடல் சங்கமச் சமரில் (கிபி 1064) வீர ராஜேந்திர சோழன் சாளுக்கியப் படைகளை நிர்மூலமாக்கினான். சாளுக்கிய மாதண்ட நாயகனாகிய சாமுண்ட ராயன் போர்க்களத்தில் கொல்லப்பட, சாளுக்கியப்பேரரசன் ஆகவமல்லனும், அவனது சிற்றரசர்களாகிய இருகையன் முதலியவர்களும் முதுகு காட்டி ஓடினர். சாமுண்டராயன் மகளும் இருகையன் மனைவியுமான நாகலை என்பவள் சோழர்களிடம் பிடிபட்டாள். சோழர்கள் அவளது மூக்கை வெட்டினர். இதற்கு யுத்த தந்திரோபாய ரீதியிலான காரணம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும், அந்தப்பெண்ணின் அழகைச் சிறப்பித்துக்கூறி, அப்படிப்பட்ட அழகியின் முகத்தை அலங்கோலம் செய்ததைப் பெருமையாகச் சோழர்கள் கூறி இருக்கின்றனர்.

“மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவன்
ஒருமகளாகிய விருகையன் தேவி
நாகலை என்னுந் தோகையஞ் சாயலை
முகத்தொடு மூக்கு வேறாக்கி…. ”

என்று வீர ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. “மயில்போல அழகான பெண் அவள். அவளது மூக்கை நாங்கள் அறுத்துவிட்டோம்” என்று சொல்லுவது மிகவும் கொடூரமாக இருக்கிறது.

இதேபோல, முதலாம் ராஜேந்திரன் காலத்தில் (AD 1014 –  1044)  இருந்து, தாங்கள் வென்றுவந்த நாடுகளில் இருந்தெல்லாம் செல்வங்கள், யானை குதிரைகள் என்பவற்றோடு பெருந்தொகையான பெண்களையும் சோழர்கள் பிடித்துச் சோழ நாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பது அநேகமாக எல்லா சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்படி வென்ற நாடுகளில் இருந்தெல்லாம் சோழர்கள் கவர்ந்து வந்த பெண்களின் நிலைமை என்னவாக இருந்தது என்பதற்குத், தெளிவான விடையைக் கலிங்கத்துப்பரணி  (AD 1110  –  1120) தருகிறது. அந்த விடை என்னவென்றால், இப்படிக்கவர்ந்து வரப்பட்ட பெண்கள் திருமணம் செய்து குடும்பமாக வாழ அனுமதிக்கப் படவில்லை; ஒரு ஆண்மகனுக்கு விரும்பியோ விரும்பாமலோ திருமணத்திற்கு அப்பாற்பட்ட பெண்டாக வாழக்கூட அனுமதிக்கப்படவில்லை; மாறாக, இவர்கள் உல்லாச மாளிகைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, பேரரசன் உட்பட்ட சோழநாட்டின் முக்கியஸ்தர்களுக்கும், தளபதிகளுக்கும், போர்வீரர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரப் பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இவ்வாறு கொண்டுவந்து அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் பத்துப்பேர் நூறுபேர் அல்ல; இந்த வழக்கமும் ஒன்றிரண்டு நாடுகளில் அல்லது குறிப்பிட்ட சில வருடங்களில் சோழர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டதுமல்ல. மாறாக, ஹிட்லருடைய யூத இன அழிப்புப் போல நன்கு திட்டமிடப்பட்டுப் பல தசாப்தங்களாக ஒரே சீராக நடைமுறைப்படுத்தப்பட்ட வழக்கம் இது.  இவ்வாறு கொண்டுவந்து அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் பல ஆயிரக் கணக்கானவர்கள். இந்த உண்மைகளைக் கலிங்கத்துப் பரணி வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இவர்களை அடைத்து வைத்திருந்த மாளிகைகள் “வேளங்கள் ” எனப்பட்டன.

போரிலே கவரப் பட்டு மட்டுமல்ல, வேற்றுநாட்டு அரசர்களால் விரும்பியே “திறைப்பொருள்கள்” ஆக அனுப்பப் பட்டும் சோழநாட்டுக்குப் பெண்கள் வந்திருக்கிறார்கள்.  இவ்வாறு “திறையாகச்”  சோழப்பேரரசர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெண்களின் நிலைமை வேறு திறைப்பொருள்களான யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றை விட எவ்விதத்திலும் மேம்பட்டிருக்கவில்லை. அவர்கள் உயர்திணையாகக் கருதப்படவுமில்லை. “பொருள்கள்” என்ற வகையிலேயே அவர்கள் கருதப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு போரில் வெற்றிகொள்ளப்பட்ட பொருள்களாக அல்லது திறைப்பொருள்களாகக் கொண்டுவரப்பட்டு அடைத்துவைக்கப்பட்ட பெண்களில் பாண்டிய நாட்டுப்பெண்கள், சேர நாட்டுப்பெண்கள், சாளுக்கியப் பெண்கள் (அதாவது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்) என்போர் பிரதானமாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்.

பாண்டிய நாட்டுப் பெண்களின் நிலைமையை “மீனக்கொடி உடைய பாண்டியர்கள் அழுது கொண்டு ஓடிக் காட்டுக்குள் ஒளிய, அவர்களது பெண்கள் வேளத்தில் அடைக்கப்பட்டனர்” என்று எகத்தாளமாக ஜெயங்கொண்டார் குறிப்பிடுகிறார். (“மீனம்புகு கொடி மீனவர் விழியம்புகவோடிக் கானம்புக வேளம்புகு மடவீர்..”). அதேபோல, குலோத்துங்க சோழனுக்குத் திறையாகச் சேரநாட்டுப்பெண்கள் கொடுக்கப்பட்டதை, “அலைநாடிய புனல் நாடுடை அபயர்க்கிடு திறையாம் மலைநாடியர் துளுநாடியர்…” என்கிறார். கைப்பற்றி வரப்பட்ட சாளுக்கியப் பெண்கள் மொழி தெரியாமல் கன்னடமும் தமிழும் கலந்து குழறிக் குழறிப் பேசுவதை, “மழலைத் திரு மொழியிற் சில வடுகுஞ் சில தமிழுங் குழறித்தரு கருநாடியர்” என்று வர்ணிக்கிறார். தவிரவும், “கடைதிறப்பு” என்கிற அத்தியாயம் முழுவதும் இந்தப்பெண்கள் பற்றிச் செய்யப்படும் காமரசம் நிரம்பிய வர்ணனைகள், இந்தப்பெண்கள் முற்றுமுழுதாகப் போகப்பொருள்களாக நடத்தப்பட்டதற்குச் சான்றாயிருக்கின்றன. இந்தப்பெண்கள் விரும்பியே சோழர்குல ஆடவர்களுடன் சேர்ந்தார்கள் எனவும், அவர்களின் தொடுகைக்காகத் தவங்கிடந்தார்கள் எனவும் ஜெயங்கொண்டார் காட்ட முயல்கின்ற போதும், உண்மை அவ்வாறு இருந்திருக்காது என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இதில் மிகவும் சோகம் என்னவென்றால், இந்தப்பெண்களின் நிலைபற்றிச் சொல்லுகின்ற கவிதை வரிகளில் தனது கவித்திறமையின் உச்சத்தை ஜெயங்கொண்டார் காட்டியிருப்பது தான். அவரது தமிழ், தமிழ் அறிந்தவர்களுக்கு அமுதம் போன்ற சுவையுடையது. அந்த அமுதத் தமிழ்க் கவிதையில், சோழர்களின் போர்க்குற்றங்களை அவர் நியாயப்படுத்த முயன்றிருப்பது பெரிய சோகம்.

இவற்றையெல்லாம்விட, ஜெயங்கொண்டார் கற்பனையாகப் பாடுகிற ஒரு பாட்டிலே, நிஜ வாழ்வில் எதிரிநாட்டுப் பெண்களின் நிலையை நாம் தெளிவாக ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. அதாவது, காளிதேவியாகிய பராசக்திக்குப் பேய்கள் ஏவல் செய்து வருவதாக ஜெயங்கொண்டார் கற்பனை செய்து பாடுகிறார். பேய்களுக்குள்ளும், பாண்டிநாட்டுப் பேய்கள், சோழ நாட்டுப் பேய்கள் என்று பிரிவினை உண்டு என்று அவர் கற்பனை செய்கிறார். குலோத்துங்க சோழன் பாண்டி நாட்டை அழித்தபோது, சோழ நாட்டுப் பேய்களும் பாண்டி நாடு சென்று அங்கிருந்த பெண்பேய்களைத் தூக்கிக்கொண்டு வந்து அவற்றைக் கூடினவாம். இதனால் அந்தப் பாண்டி நாட்டுப் பெண்பேய்களுக்குப் பிள்ளைகளும் பிறந்தனவாம். “பண்டு தென்னவர் சாய வதற்குமுன் பணிசெய் பூத கணங்களனைத்தையுங் கொண்டு வந்த பேய் கூடிய போதிலக் குமரி மாதர் பெற… ” என்று நீண்டு செல்கிறது ஜெயங்கொண்டார் கற்பனை. இங்கே சும்மா மரியாதைக்குத் தன்னும் “திருமணம்” என்ற சொல்லை ஜெயங்கொண்டார் பயன்படுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். “கொண்டு வந்த பேய் கூடிய போதில் …” அவ்வளவுதான். பாண்டிநாட்டுப் பெண் பேய்களுக்கே (ஜெயங்கொண்டார் கற்பனையில்) இந்தக் கதி என்றால், பாண்டிநாட்டுப் பெண்களுடைய கதியை ஊகிப்பது சிரமமல்ல.

இவையெல்லாம்போக, வெற்றிகொள்ளப்பட்ட கலிங்க நாட்டில் கருணாகரத் தொண்டைமானால் கைப்பற்றப்பட்ட “பொருள்கள்” பற்றிச் சொல்லும்போது, “நடை வயப்பரி யிரத மொட்டகம் நவநிதிக் குவை மகளிரென் றடைத வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவை கணிப்பதுமருமையே.” என்று கலிங்கத்துப்பரணி பெருமை கொள்கிறது. அதாவது, “அழகான நடையுடைய குதிரைகள், ரதங்கள், ஒட்டகங்கள், நவரத்தினங்களின் குவியல், பெண்கள் என்று இவ்வாறாக, அந்நேரத்தில் சோழப்படையினர் கைப்பற்றிய செல்வங்களாகிய அவற்றைக் கணக்கிடுவது அருமை” என்றவாறாம். எனவே பெண்கள் கைப்பற்றப் பட்ட ” செல்வங்களுக்குள்” ஒன்றாகச் சொல்லப்படுவது மட்டுமின்றி, மனித ஜென்மங்களாகிய பெண்களும் வேறு உயிரினங்களாகிய குதிரைகள் ஒட்டகங்களும் உயிரற்ற ரதங்கள் இரத்தினங்கள் முதலிய பொருட்களும் ஒரே வரையறைக்குள் கொண்டுபோய்த் தள்ளப்படுவதும், சற்றும் தயக்கமின்றி “அவை” என்று அஃறிணையில் விழிக்கப்படுவதும், எதிரிநாட்டுப்பெண்கள் தொடர்பில் சோழர்களின் மனப்பான்மையை மிகத் தெளிவாகவே காட்டுகின்றன.

பாண்டிய நாட்டுப்போர்களின் தன்மை

ஒப்பீட்டளவில், சக தமிழர்களாகிய பாண்டியர்கள் மேல் சோழர்கள் அதிக கொடூரங்களைச் செய்ததாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். குறைந்தபட்சம், ஆரம்பகாலப் போர்களிலாவது (910 –  1070 AD) இது உண்மை. சோழர்களினால் அடிக்கடி பந்தாடப்பட்டவர்கள் பாண்டியர்கள். இந்தப்போர்களில், முதலாம் பராந்தகன் செய்ததுதான் (910 AD) உண்மையான ஆக்கிரமிப்புப்போர். அதன்பின், காலத்திற்குக் காலம் பாண்டியர்கள் கிளர்ச்சி செய்வதும், அவற்றை அடக்குவதற்காகக் சோழர்கள் படைவலுவைப் பிரயோகிப்பதும் நடந்திருக்கின்றன.

இந்த அடக்குமுறைப்போர்களில், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்து (1070 AD) கொடூரம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பேரரசர்களுக்குப் பாண்டியர்களை அடக்குவது நுளம்பை அடிப்பதுபோல. ஆனால், குலோத்துங்கனுக்கு அவ்வாறில்லை. ஏனெனில், உள்நாட்டுப் போரின் காரணமாகச் சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே கேள்விக்குறியான ஒரு தருணத்தில் பாண்டியர்கள் புரட்சி செய்திருக்கிறார்கள். இது குலோத்துங்கனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். எனவே, அவன் தனது நிலையை சோழநாட்டில் ஸ்திரப்படுத்திக்கொண்டதும் உச்சப் படைவலுவைப் பாவித்துப் பாண்டியர்களை அடக்கி இருக்கவேண்டும். மேலும், தனது “இமேஜை” சோழ நாட்டு மக்களிடம் ஸ்திரப்படுத்துக் கொள்வதற்காகவும் அவன் பெரிய அரிவாள் ஒன்றெடுத்துப் பாண்டிப் பனங்கிழங்கைப் பிளந்திருக்கலாம். முதலாம் குலோத்துங்கன் காலத்திற்குப்பின் சோழச் சக்கரவர்த்திகள் பலவீனமடையத் தொடங்கி இருக்கிறார்கள். பலவீனமானவன் கோபப்படுவது இயல்பு. தங்கள் மூதாதையர்கள் போல வடதிசையில் வெற்றிகளைக் குவிக்க முடியாத சாளுக்கிய சோழர்கள் பாண்டி நாட்டில் தங்களது வீரத்தைக்காட்ட முயன்றிருக்கலாம்.

இதைவிட, சோழர்களின் கொடூரம் அதிகரித்ததற்கு வேறொரு காரணமும் இருக்கலாம். அதிராஜேந்திரன் காலம்வரை (1070 AD), தமிழர்களாகிய பாண்டியர்களை நிரந்தரமாகத் தங்களுடன் இணைத்துக்கொண்டு தங்கள் படைகளிலும் சேர்த்திருக்கொள்ளும் நோக்கம் சோழர்களுக்கு இருந்தது. இதனால், சோழ இளவரசர்கள் “சோழ பாண்டியன்” என்ற பெயருடன் பாண்டிய நாட்டில் முடிசூடி ஆட்சி செய்தனர். வடதிசையில் மென்மேலும் படையெடுத்துக்கொண்டு போன சோழர்களுக்குப் பாண்டிய ஆட்பலமும் தேவையாக இருந்திருக்கலாம். இதனால், பாண்டிய மக்களை விரோதிக்க அவர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள்.

முதலாம் குலோத்துங்கன் இந்த உபாயத்தை மாற்றி, பாண்டிய மன்னர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை அளித்தான். இது ஒருவகையில் பெருந்தன்மையான நடவடிக்கை ஆனாலும், பாண்டிய மக்களின் கோபத்தில் இருந்து சோழ மன்னர்களை இது பாதுகாத்தது. எனவே இப்படிச் சுயாட்சி வழங்கப்பட்ட பாண்டிய மன்னர்கள் பூரண சுதந்திரம் கோரிக் கலக்கம் செய்த நேரங்களில் அவர்களை மிக மூர்க்கமாகப் பழி வாங்க அதன்பிறகு வந்த சோழ அரசர்கள் தயங்கவில்லை. இதனால் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்காகத் தமது மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டி இருந்தவர்கள் பாண்டிய மன்னர்களே. இதில் மேலும் சோகம் என்னவெனில் கலகம் செய்த பாண்டிய அரசர்கள் சாளுக்கிய சோழர்களால் கடுமையான போரின்மூலம் அடக்கப்பட்ட பின் சிலவேளை அவர்களுக்கு அல்லது அவர்களின் புதல்வர்களுக்கு அரியணை மறுபடியும் சோழர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, “தக்க பாடம் படிப்பித்த பிறகு” மன்னித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட “பாடங்களால்” உயிரையும் உடமைகளையும் மானத்தையும் இழந்தவர்கள் பாண்டிய மக்களே.

எவ்வாறாயினும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டிநாட்டில் சோழர்கள் நடத்திய போர்களில், அவர்களின் முந்திய பாண்டிப் போர்களை விடப் போர்க்குற்றங்கள் அதிகரித்திருந்தன எனலாம்.

போர்க் கைதிகளையும் தூதர்களையும் அவமானப்படுத்துதல்

சோழர்கள் தங்களிடம் உயிரோடு சிறைப்பட்ட போர்க்கைதிகளை அல்லது சரணடைந்தவர்களைக் கொன்றதாக எச்சந்தர்ப்பத்திலும் சோழர்களோ அல்லது அவர்கள் எதிரிகளோ குற்றம் சாட்டவில்லை. எனவே, போர்க்கைதிகள் எச்சந்தர்ப்பத்திலும் கொல்லப்படவில்லை என்று துணிந்து கூறலாம். ஆண்களை அடிமைகளாகச் சோழ நாட்டுக்குக் கொண்டுவந்து அவர்களைக்கொண்டு வேலை வாங்குவது சில சந்தர்ப்பங்களில் நடந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முக்கியமாகத் தூர நாடுகளில் சரணடைந்த ஆண்கள், படைவீரர்கள் உட்பட, வெறுமனே விடுதலை செய்யப்பட்டுத் துரத்தி விடப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, கலிங்கப்போரின் இறுதியில் கலிங்க வீரர்கள் பலர் சமணர்கள் போலும், பவுத்த துறவிகள் போலும், அந்தணர்கள் போலும், பாணர்கள் போலும் நடித்து உயிர்பிழைத்தார்கள் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இது சொல்லப்படும் தொனியில், இவர்கள் எல்லாம் சோழர்களை ஏமாற்றித் தப்பியவர்கள் அல்ல, மாறாக உயிர்ப்பிச்சை கேட்டதால் கண்டும் காணாமலும் சோழ வீரர்களால் தப்ப அனுமதிக்கப்பட்டவர்கள் என்பதும், இவ்வாறு எதிரிகள் பல வேடங்கள் அணிந்து வந்து உயிர்ப்பிச்சை கேட்பது சோழ வீரர்களுக்கு வேடிக்கையாக இருந்தது என்பதும் புரிகிறது.

பொதுவாக, பெண்களைக் கொண்டுவருவதில் காட்டிய அக்கறையை ஆண் போர்க்கைதிகளைச் சோழநாட்டுக்குக் கொண்டுவருவதில் சோழர்கள் காட்டியதாக இல்லை (சிறைப்பட்ட மன்னர்குலத்தவர்கள் விதிவிலக்கு). எனவே, சிறைப்பட்ட ஆண்களை விடச் சிறைப்பட்ட பெண்களின் கதி மோசமானதாக இருந்திருக்கிறது.

இவ்வாறு, சிறைப்பட்டவர்களைச் சோழர்கள் கொல்லாமல் விட்டாலும், அவர்களை அவமானப்படுத்த அல்லது அவமானம் கொடுக்கும் சித்திரவதைகளைச் செய்யத் தயங்கவில்லை. உதாரணமாக,

-முதலாம் ராஜாதிராஜன், தன்னிடம் தோற்ற சேர மன்னனைக் கட்டி வைத்து யானையின் காலால் உதைப்பித்திருக்கிறான்.

– பூண்டூர்ப் போர்க்களத்திலே, சாளுக்கிய ஆகவமல்லனது ஒற்றர் சிலரை முதலாம் ராஜாதிராஜன் சிறைசெய்தபோது, அவர்கள் மார்பிலே ஆகவமல்லனை அவமானப்படுத்தும் வசனங்களை எழுதித் துரத்தி விட்டிருக்கிறான். ஓலையும் எழுத்தாணியும் கொண்டு எழுதப்பட்ட அக்காலத்திலே “மார்பில் எழுதியது” என்பது எழுத்தாணி அல்லது வேறு கூரிய ஆயுதத்தால் இரத்தம் வருமாறு எழுதியதாகவே இருக்க வேண்டும்.

-அதேபோல, முதலாம் ராஜாதிராஜன் கல்யாணி நகரத்தை ஆகவமல்லனிடமிருந்து கைப்பற்றச் சற்று முன்பு, சிறைசெய்த இரண்டு சாளுக்கியப் படைத் தலைவர்களில் ஒருவனை மொட்டை அடித்து, இன்னொருவனுக்குப் பெண்ணுடை உடுத்தி, “தலை நகரத்தை இழந்து ஏழ்மைப்பட்ட ஆகவமல்லனும் அவன் மனைவியும்” என்று அறிவித்து, ஆகவமல்லனிடம் அனுப்பி இருக்கிறான்.

-வீரராஜேந்திரன், பாண்டிய வம்சத்தவனான ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியனின் மகனைக் கட்டி வைத்து யானையால் உதைப்பித்திருக்கிறான்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளெல்லாம் சோழர்களின் மெய்க்கீர்த்திகளிலேயே சொல்லப்பட்டிருப்பதால் அவற்றின் உண்மைத்தன்மை பற்றிச் சந்தேகப்பட ஏதுமில்லை.

இதேபோல, சாளுக்கிய ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு முதலாம் விஜயபாகு அனுப்பிய தூதர்களை முதலாம் குலோத்துங்கன் துன்புறுத்தியதாகச் சூளவம்சம் கூறுகிறது. சூளவம்சம் சோழர்களைப்பற்றிக் கூறுவதை அப்படியே நம்பமுடியாதாயினும், மேற்குறிப்பிட்ட நடத்தைக் கோலங்களோடு இது பொருந்துவதால் இச்சம்பவமும் உண்மையில் நடந்திருக்கலாம்.

கோட்டைகள், நகரங்கள், நாடுகளைக் கொளுத்தியது அல்லது தரைமட்டமாக்கியது

சோழர்கள் பல சந்தர்ப்பங்களில் எதிரி மன்னர்களின் கோட்டைகள், நகரங்கள், நாடுகளைத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள் அல்லது கொளுத்தி இருக்கிறார்கள். இப்படியான செயற்பாடுகளின்போது கொளுத்தப்பட்டவை படைத்துறை இலக்குகளா அல்லது சாதாரணப் பொதுமக்களும் அங்கிருந்தார்களா என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. அதேபோல, யுத்த தந்திரோபாய அவசியம் காரணமாக இந்நகரங்கள் கொளுத்தப்பட்டனவா, அல்லது பழிவாங்கும் நோக்கில் அல்லது பயத்தை விளைவிக்கும் நோக்கில் கொளுத்தப்பட்டனவா என்பதையும் நாம் சொல்லமுடியாது. ஆனால், இப்படி நகரங்கள், கோட்டைகள் கொளுத்தப் பட்ட போது சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருத்தல் மிகவும் சாத்தியம். எனவே, இவை யுத்தக்குற்றங்கள் ஆகலாம். இச்சம்பவங்கள் பெரும்பாலும் கர்நாடகத்தில் நடந்திருக்கின்றன. உதாரணங்கள்:

முதலாம் ராஜாதிராஜன் குல்பாக் கோட்டையைக் கொளுத்தியது ( “கொள்ளிப் பாக்கை உள்ளொளி மடுப்பித்து” – அவன் மெய்க் கீர்த்தி ), கம்பிலி நகரிலிருந்த சாளுக்கியர் மாளிகையைத் தகர்த்தது (“வம்பலர் தருபொழில் கம்பிலி நகருள் சளுக்கியர் மாளிகைத் தகர்ப்பித்து” – அவன் மெய்க் கீர்த்தி ), இரட்டபாடியை அல்லது வட கர்நாடகத்தைக் கொளுத்தியது (“இரட்ட பாடி யெரி மடுத்து” – அவன் மெய்க் கீர்த்தி ), கல்யாணி நகரத்தைத் தரைமட்டமாக்கியது ( “கல்யாண புரம் என்னுந்தொல்நகர் துகளெழத் தகைப்பித் தன்னகர் அரசுறை கருமா ளிகைப்பொடி யாக்கி” – அவன் மெய்க் கீர்த்தி ).

இதேபோல வீரராஜேந்திரன் (மறுபடியும்) இரட்டபாடியை (வட கர்நாடக நாடு) கொளுத்தியது ( “இரட்ட பாடி ஏழரை இலக்கமும் முரட்டொழில் அடக்கி முழங்கெரி யூட்டி” – அவன் மெய்க் கீர்த்தி ).

முதலாம் குலோத்துங்க சோழன், சாவகத்தின் கடாரி நாட்டை எரித்தது (“பரக்கும் ஓதக் கடாரம் எரித்த நாள்”- கலிங்கத்துப்பரணி), பாண்டிய நாட்டின் “கோட்டாறு” என்னும் இடத்தைக் கொளுத்தியது (“முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட முன்னொருநாள் வாள் அபயன் முனிந்த போரில் வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம்” – கலிங்கத்துப்பரணி. இங்கே “வெள்ளாறு” என்பது ஒரு ஆறு எனவும் “கோட்டாறு” என்பது அதனருகில் ஓர் இடமெனவும் உரையாசிரியர்கள் பொருள் கூறி உள்ளனர்)

இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவைபோலப் பல இடங்களில் எதிரிகளின் நாடுகள் நகரங்களைக் கொளுத்தியதை அல்லது தரைமட்டமாக்கியத்தைப் பெருமையாகச் சோழர்கள் கூறி உள்ளனர். இவையெல்லாம் சோழர்களின் “வாயிலிருந்து” (அதாவது அவர்களின் கல்வெட்டுகள், இலக்கியங்களில் இருந்து) வருவதால் அவற்றின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சந்தேகப்பட ஏதுமில்லை.

சோழர்கள் மிகவும் கொடூரமானவர்களா?

வரலாற்றினைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்வது முக்கியம். இதனால்தான் சோழர்களின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் பற்றி மிகவும் சங்கடத்துடன் எழுதலாயினேன். மேற்குறிப்பிட்ட விடயங்கள் வரலாற்று ரீதியில் உண்மையென்பதில் அதிகம் சந்தேகமில்லை. ஆனால், அதன் அடிப்படையில் சோழர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்று முடிவு செய்வதன்முன் வேறு சில விடயங்களையும் கவனிக்க வேண்டும்.

இங்கு “போர்க்குற்றங்கள்” என்று நான் வகைப்படுத்துவன தற்போதைய நாகரிக உலகின் ஐ. நா சபை முதலிய நிறுவனங்களின் வரைவிலக்கணத்தின் அடிப்படையில் போர்க்குற்றங்களாகக் கூறத் தக்கவற்றையே. தற்போதைய உலகின் வரைமுறைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழர்கள் மேல் ஏற்றுவதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கலாம். மேலும், அப்போதிருந்த மற்றைய அரசுகள் எப்படியான போர்க்குற்றங்களைச் செய்தன, அல்லது வெற்றி அவர்கள் பக்கம் இருந்திருந்தால் எப்படியான குற்றங்களை அவர்கள் செய்திருப்பார்கள் என்பது எமக்குத் தெரியாது. அநேகமாக அவர்கள் சோழர்களை விட மோசமான குற்றங்களைச் செய்திருக்கலாம்.

கர்நாடகப் பகுதிகளில் நடந்த போர்களில் சோழர்களின் உச்சகட்டக் கொடூரம் வெளிப்பட்டது என்று கூறியிருந்தேன். இதற்குக் கன்னடர்கள் கையாண்ட போர்முறைகளும் காரணமாக இருக்கலாம். பிற்காலச் சோழர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் சாளுக்கியப் புலிகேசி தமிழகத்திற்குப் படையெடுத்து வந்தபோது பெரும்கொடுமைகளைச் செய்தான் என்றும், இதற்குப் பழிவாங்கவே பல்லவ நரசிம்மன் வாதாபி நகரை எரித்தழித்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். புலிகேசியின் வழிவந்த மேலைச் சாளுக்கியரின் போர்முறைகள் தயாளம் மிகுந்தவையாக இருந்திருக்கும் என்று எண்ண இடமில்லை. ஆனால், சோழ- சாளுக்கியப்போர்கள் கன்னட நாட்டில் நடந்ததால் தமிழ்மக்களுக்கு எதிராகக் குற்றங்களை செய்வதற்குச் சாளுக்கியரால் முடியாமல் போயிருக்கலாம்.

அதேபோலப் பாண்டியரை எடுத்துக்கொண்டால் அவர்கள் சோழர்களிடம் பலமுறை தோற்றபோதும், இறுதியாகப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (1217 AD) சோழர்களை வென்றபோது சோழநாட்டில் பல கொடுமைகளைச் செய்தார்கள். அது குறித்துப் பெருமையும் அடித்துக்கொண்டார்கள். மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 –  1238 AD) சோழ நாட்டிலே சகல கட்டிடங்களையும் தரைமட்டம் ஆக்கினான் என்றும், தமிழ்மொழி மீதான மதிப்பினால் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை அரங்கேற்றிய மண்டபத்தை மட்டும் விட்டுவைத்தான் என்றும் ஒரு பழம்பாடல் கூறுகிறது.

“நெறியார் தவளத் தொடைச் செயமாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை; கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுதூண் பதினாறுமே அங்கு நின்றனவே”

என்பது அப்பாடல். எனவே, கைப்பற்றிய நாட்டைத் தரைமட்டமாக்குவதில் பாண்டியர்களும் சோழர்களுக்கு இளைத்தவர்களாக இருக்கவில்லை.

பெண்களைக் கவர்ந்து வருவதற்குச் சோழர்களுக்கு மிகுந்த அவசியம் இருந்தது. ஏனெனில், தொடர்ந்து நடந்துவந்த போர்களில் சோழவீரர்கள் பெருந்தொகையில் மடிந்து வந்தனர். இந்த இறப்புக்களை ஈடுசெய்து, படைகளின் ஆட்பலத்தை அதிகரிப்பதற்கு, மக்கள் தொகையை விரைவாகப் பெருக்கிக்கொள்வதும், முக்கியமாக வீரமிக்க மன்னர்கள், தளபதிகள் போன்றவர்களின் வம்சாவளிகள் பல்கிப்பெருகுவதும் அவசியமாயிருந்தது. இதற்கு இனப்பெருக்க வயதுடைய பெண்கள் பெருமளவில் தேவைப்பட்டனர். இது பெண்களைக் கவர்ந்து வந்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவில்லை ஆனாலும், அப்படிப் பெண்கள் தூக்கி வரப்பட்டதற்குக் காமம் தவிர வேறு காரணங்களும் இருந்தன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மேல் குறிப்பிட்ட வாதங்கள் சோழர்களின் செயற்பாட்டை நியாயப்படுத்தவல்ல.  மாறாக, அவர்கள் அவர்களின் காலத்தோடு ஒப்பிடுகையில் பிற்போக்கானவர்களா என்று ஆராய்வதற்கே. சோழர்கள், வரலாற்றைப் பல வழிகளில் முன்கொண்டு சென்றவர்களாக இருந்தார்கள். எல்லா வழிகளிலும் அவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிரிநாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பேணுவதில் அவர்கள் முன்னுதாரணமாக இருந்ததாகத் தெரியவில்லை. அதற்காக, அக்காலத்தின் மற்றைய அரசுகளைவிட மோசமாக இருக்கவும் இல்லை. அந்த விஷயத்தில் அவர்கள் சாதாரணர்களாக இருந்தார்கள் அவ்வளவுதான். எனவே இது ஒட்டுமொத்தமாகச் சோழர்கள் மீதான விமர்சனம் என்று சொல்வதை விட, உண்மை நிலையைப் பற்றிய ஒரு தெளிவுபடுத்தல் என்பது அதிகம் பொருந்தும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

    1. “வேளம்” என்ற சொல்லுக்குப் பலவிதமான பொருள்கள் இருந்திருக்கலாம். பொதுவாக அதன்பொருள் “மாளிகை”. கலிங்கத்துப் பரணியில் “பெண்களைச் சிறைவைத்துள்ள மாளிகை” என்ற சிறப்புப்பொருள் வெளிப்படுகிறது. வேளக்காரப்படை என்பது “மாளிகையைப் பாதுகாக்கும் படை”. அதாவது அரச மாளிகையின் காவற்படை. பிறகு அது அரசனின் மெய்க்காவற்படை என்ற அர்த்தத்தில் பாவிக்கப் பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.