அதிராஜேந்திரன் மரணம்: கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது?

கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது?

சோழ சாம்ராஜ்யத்தின் மேல் மட்டத்திற்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த தீய சக்தி ஒன்று 1070 ஆம் ஆண்டில் மேலே வந்தது. 1070 க்கு முற்பட்ட பல தசாப்தங்களுக்கு, சோழ சாம்ராஜ்யத்தில் மேம்போக்காகப் பார்த்தால் எல்லாமே நன்றாயிருந்தது. சோழப்படைகள் கங்கையையும், கடாரத்தையும் கைப்பற்றி, இன்னும் முந்நீர்ப்பழந்தீவு பன்னிரண்டாயிரத்தையும், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தையும், சாவகத்தையும் பிடித்து, பிலிப்பைன் தீவுவரை சென்று, தமிழர்களுக்கு இணையில்லாப் பெருமையை அளித்தன. இந்திய உபகண்டத்தில் அன்றைக்கு மிகப்பெரும் பேரரசாக இருந்த மேலைச் சாளுக்கியத்தின் முதுகை முறித்தன. மான்யகேடத்தையும், கல்யாணியையும் கைப்பற்றி, போர்க்களத்தில் சாளுக்கியரை ஒன்றல்லப் பல முறைகள் முறியடித்து, அவர்களின் பெண்டுபிள்ளைகளையும் செல்வங்களையும் கைப்பற்றி, சாளுக்கிய மாமன்னன் அவமானம் தாங்காமல் பரமயோகம் செய்து உயிர்விடவும் அவன் மகன் காலில் விழுந்து கெஞ்சி அரசுரிமை அடையவும் வைத்தன. தென்னாசியாவில் இணையற்ற வல்லரசாகச் சோழ நாடு விளங்கியதோடு இந்து சமுத்திரத்தில் பெரும் கடலாதிக்கத்தை நிலைநிறுத்தியது. தஞ்சைப் பெரிய கோயில் முதலிய மகோன்னத ஆலயங்களும், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய பெரு நகரங்களும் எழுப்பப்பட்டன. சைவமும் தமிழும் கவின்கலைகளும் என்றுமில்லாதவாறு வளர்ந்தன. இப்படியாக வெளிப்பார்வைக்கு ஓஹோ என்று இருந்த சோழ சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தினுள்ளே ஏதோ ஒன்று புகைந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு தீமை வடிவம் பெற்று வளர்ந்து, வெளியேறி வரச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. அது என்னவென்று இற்றைவரை வரலாற்று ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை. கிபி 1070 இல் அது மேலெழுந்து வந்து, சோழ நாட்டிலே பெரு நாசத்தை விளைவித்தது. விஜயாலய சோழனின் குலத்தைப் பூண்டோடு அழித்தது. சோழ சாம்ராஜ்யத்தையே அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது. அது என்னவென்று ஊகிக்க முயல்வதுதான் இந்தக்கட்டுரையின் நோக்கம்.

சோழ சாம்ராஜ்யம் மேம்போக்குக்கு வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தாலும், கிபி 1070 இற்கு முற்பட்ட சில ஆண்டுகளிலேயே மர்மமான சில நிகழ்ச்சிகள் அந்தப் பேரரசில் ஏற்படத் தொடங்கியிருந்தன. இன்னும் வரலாற்றாசிரியர்களால் சரியான விளக்கம் அளிக்கப்படாத அந்த நிகழ்ச்சிகள், 1070 இல் ஏற்பட்ட பயங்கர விளைவுகளுக்குக் கட்டியம் கூறுவனவாக அமைந்திருந்தன. அவற்றுள் சில:

– சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் இரண்டாம் ராஜேந்திரனும், அவன் மகன் ராஜமகேந்திரனும் கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் (1063) மரணமடைந்தது. இரண்டாம் ராஜேந்திரன் கிபி 1003 இல் பிறந்ததால் அறுபது வயதை அடைந்த அவன் மரணம் இயற்கையானதாக இருக்கலாம். ஆனால், அவனது மகனும், ஏற்கனவே முடிக்குரிய இளவரசுப்பட்டமும் கல்வெட்டுகள் எழுதும் உரிமையும் அளிக்கப்பட்டுத் தந்தையோடு ஆட்சி செய்து வந்தவனுமான ராஜமகேந்திரன் தந்தைக்கு முன்பு அல்லது தந்தையோடு எப்படி இறந்தான்? அவன் போர்க்களத்தில் இறந்திருந்தால், சோழ வம்சத்தினரின் மெய்க்கீர்த்தி எதுவும் அவன் போரில் வீரமரணம் அடைந்ததைக் கூறவில்லை. சாளுக்கியர்கள் அவனைக் கொன்றதாகப் பெருமை அடித்துக்கொள்ளவும் இல்லை ( ஒப்பீட்டுக்காக, முதலாம் ராஜாதிராஜன் கொப்பம் போரில் வீழ்ந்ததை சோழ, சாளுக்கிய ஏடுகள் மிக விரிவாகக் கூறுகின்றன என்பதைக் கவனிக்க.) எனவே, இராஜமகேந்திரன் இளமையில் இறந்தது எவ்வாறு? அதுபற்றிச் சோழரின் கல்வெட்டுகள் மௌனம் காப்பது ஏன்?

– சோழர்கள் பரம்பரைச் சைவர்கள். அவர்களில் சிலர் மற்றைய சமயங்களையும் ஆதரித்தாலும், சைவத்திற்கு மேலே எந்த ஒரு சமயத்தையும் வைக்கவில்லை. அவ்வாறிருக்க, ராஜமகேந்திரன் திருவரங்கப் பெருமாளுடைய பாம்புப்படுக்கைக்கு இரத்தினங்கள் அணிவித்தது ஏன்? அதை அவன் செய்த தலையாய பணியாகப் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடுவது ஏன்? அது ஒரு பக்கம் போக, தந்தையுடன் சேர்ந்து ஆண்டதல்லாது தனியாக ஆட்சி செய்திராத ராஜ மகேந்திரனுக்குச் சோழர் வம்சாவளியில் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டது? ஆதித்த கரிகாலனையும், ராஜாதித்யனையும் குறிப்பிடாத சோழ இலக்கியங்கள் ராஜ மகேந்திரனை, முக்கியமாக அவனது அறம் தவறாத ஆட்சியைச் சிறப்பித்துக்கூறுவது எதனால்?

(இந்த வினாவைப் புரிந்து கொள்வதற்கு, ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகியோர் ராஜ மகேந்திரனைப்பற்றிச் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

“பாடவரத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடரவப் பாய லமைத்தோனும் ” — ஒட்டக்கூத்தர்

“பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்” – ஜெயங்கொண்டார்.

ஜெயங்கொண்டார், ராஜமகேந்திரனைப்பற்றி அதிகம் சொல்வதற்காக, கலிங்கத்துப்பரணியில் அதுவரை தாம் கைக்கொண்ட ‘தளை’ யை நீக்கி அதிகச் சீர்கள் உள்ள புதுத் தளையைத் தெரிவு செய்கிறார். )

– ராஜாதிராஜனுடைய சந்ததிகள், சிம்மாசன உரிமையில் புறக்கணிக்கப்பட்டது ஏன்? ராஜாதிராஜன் போர்க்களத்தில் இறக்கும்போது அவனுக்கு வயது 54. பேரரசனாகிய அவனுக்குப்பல மனைவிகளும், பல ஆண்மக்களும் இருந்திருப்பார்கள். ராஜாதிராஜனுடைய தம்பிகள் அவனுடைய பிள்ளைகளை விட வயதில் மூத்தவர்களாக இருந்திருப்பதாலும், சாளுக்கியருடன் நடந்த கடுமையான போரில் ஸ்திரமான அனுபவமிக்க தலைமைத்துவம் தேவையாக இருந்ததாலும், ராஜாதிராஜனுக்குப்பின் அவனது தம்பியர் பட்டத்துக்கு வந்ததை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால், அத்தம்பியர்களின் பிள்ளைகள் (இரண்டாம் ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன், வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரன்) முடிக்குரிய இளவரசர்களாக நியமிக்கப்பட முன்னர் மூத்தவரின் வம்சத்துக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஏன் வழங்கப்படவில்லை?

-வீரராஜேந்திர சோழன், கிபி 1068 இற்குப்பிறகு தன் மருமகனான அநபாயனைக் கைவிட்டுப் பரம எதிரியான சாளுக்கிய விக்கிரமதித்தனுக்குத் தன் மகளைக்கொடுத்ததற்கும் வேங்கி சிம்மாசனத்தை அநபாயனிடம் இருந்து பறித்ததற்கும், இராஜதந்திரம் தவிர வேறு காரணங்கள் உண்டா?

– வைஷ்ணவ குருபரம்பரை வரலாற்றில் கிட்டத்தட்ட இந்தக் காலப்பகுதியில் ‘கிருமி கண்ட சோழன்’ சோழ நாட்டை ஆண்டதாகவும், அவன் ராமானுஜருக்கும் அவரின் சிஷ்யர்களுக்கும் பெரும் கொடுமைகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் ‘கிருமி கண்ட சோழன்’ யார்?

இப்படியான மர்மங்கள், மேற்பார்வைக்கு வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த சோழப்பேரரசின் மேற்பரப்பின் கீழே ஏதோ ஒரு தீமை விழித்தெழத் தொடங்கியதை அறிவிக்கின்றன. இந்தத் தீயசக்தி 1070 ஆம் ஆண்டு மேலெழுந்து வந்தது. அதற்கு உடனடிக் காரணம், மன்னர் மன்னனும், சாளுக்கியர்களை அறுதியாகவும் இறுதியாகவும் முறியடித்த ஒப்பற்ற வீரனுமான வீர ராஜேந்திரனின் மரணம். தனது மகன் அதிராஜேந்திரனுக்கு 1067 யிலேயே இளவரசனாக முடி சூட்டி, கல்வெட்டு சாசனம் எழுதும் உரிமையும் கொடுத்திருந்த வீரராஜேந்திரன், 1070 இல் தனது 60 ஆவது வயதில் இறந்தான். வீர ராஜேந்திரனின் மரணத்தை அடுத்துச் சோழ நாட்டில் இருள் சூழ்ந்தது. பெரும் குழப்பங்களும் கலகங்களும் நேர்ந்தன. அடுத்த சில மாதங்களுக்குச் சோழ நாட்டில் தீமை தலைவிரித்தாடியது. இலங்கை இளவரசன் முதலாம் விஜயபாகு கூட, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே சோழர் ஆட்சியில் இருந்து ராஜரட்டையை விடுவித்தான். இதெல்லாம் வரலாற்றில் தெளிவாக அறியப்பட்ட சம்பவங்கள் என்றாலும் கூட, வீரராஜேந்திரனின் மரணத்தை அடுத்துச் சோழ நாட்டில் பெரும் கலகமும் குழப்பமும் நேர்ந்ததற்கான காரணத்தை மட்டும் எவருக்கும் கூற முடியவில்லை.

இந்தக்குழப்ப காலத்தைப்பற்றி மூன்று விதமான மூலங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களைச் சொல்கின்றன. காரணம், இந்த மூன்று மூலங்களும் ஒன்றுக்கொன்று பகையான சக்திகளின் வாக்குமூலங்கள். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தமிழக ஸ்ரீவைஷ்ணவர்கள் குரு பரம்பரை வரலாறு சொல்வது:

ராமானுஜருக்குப் பல தீமைகளைச் செய்த கிருமி கண்ட சோழன், கொடிய நோய் வந்ததனால் புழுத்து இறந்தான்.

ஸ்ரீ வைஷ்ணவக் குருபரம்பரை வரலாறு வாய்மொழி வழக்கானதால், இதனுடன் சேர்ந்த பல உபகதைகள் பலப்பல விதங்களில் வழங்கி வருகின்றன. கிருமி கண்ட சோழன் குஷ்ட ரோகம் வந்து இறந்தான் என்று ஒரு கதையும், அவன் கண்டமாலை என்ற நோய் வந்து கழுத்து வீங்கிப் புழுத்து இறந்தான் என்று இன்னொரு கதையும் சொல்கின்றன. ராமானுஜர் “உன் வம்சமே அழியும்” என்று சாபம் இட்டது பலித்து, விஜயாலய சோழனின் வம்சம் கிருமி கண்ட சோழனுடன் அழிந்ததாக ஒரு கதை சொல்கிறது. ராமானுஜரை வதைத்ததால் சோழ வம்சம் அழியும் என்று திருவாரூர் சிவன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது (வைஷ்ணவர்கள் நம்பிக்கையின்படி சிவன் விஷ்ணுவுக்கு உபதெய்வமாகவும் அவர் கட்டளைகளைச் செய்பவராகவும் இக்கதையில் காட்டப்படுகிறது).

சாளுக்கிய விக்கிரமாதித்தன் வரலாறு சொல்வது:

விக்கிரமாதித்தனின் மாமனாகிய வீர ராஜேந்திரன் இறப்பின் பின்னர் சோழ நாட்டில் குழப்பமும் கலகமும் நேர்ந்தன. இவற்றைச் சமாளித்து, தனது மைத்துனன் அதிராஜேந்திரனுக்கு முடி சூட்டி வைப்பதற்காக விக்கிரமாதித்தன் சோழ சாம்ராஜ்யம் சென்றான். முதலில், காஞ்சிபுரத்திற்குச் சென்று அங்கே தீயவர்களை அடக்கினான். அதன்பிறகு, கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் சென்று அங்கே கலகக்காரர்களை அடக்கி அதிராஜேந்திரனுக்கு முடிசூட்டி வைத்தான். அதன்பிறகு துங்கபத்திரை நதிக்கரைக்குத் திரும்பினான். ஆனால், அவன் திரும்பிச் சில நாள்களிலேயே மறுபடியும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கலகங்கள் மூண்டு, அவற்றில் அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான். இதனால் ஏற்பட்ட இடைவெளியைப்பயன்படுத்தி ராஜேந்திர சாளுக்கியன் (அநபாயன் / முதலாம் குலோத்துங்கன்) சிம்மாசனம் ஏறி விட்டான்.

 

அநபாயனாகிய முதலாம் குலோத்துங்கன் வரலாறு சொல்வது:

அநபாயன் ஆகிய முதலாம் குலோத்துங்கன் வடநாட்டில் போர் செய்து கொண்டிருக்கையில் வீர ராஜேந்திரன் இறந்தான். இதையடுத்துச் சோழ நாட்டில் குழப்பமும் கலகமும் நேர்ந்தன. மனுதர்மம் பாழாயிற்று. கலி இருள் சூழ்ந்தது. எனவே அநபாயன் சோழ நாடு திரும்பி, இருளை நீக்கும் உதய சூரியன் போல அமைதியை உண்டாக்கிக் சிம்மாசனம் ஏறினான்.

( கலிங்கத்துப் பரணியின் பின்வரும் வரிகளில் இது விளக்கப்படுகிறது.

“மாவுகைத் தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம்.

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே 

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்து போயே

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே 

கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே..

….மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. ” )

இந்த மூன்று தரப்பினருமே ஏதோ சில உண்மைகளை மறைத்துத் தமக்குச் சார்பான வரலாற்றைக் கூறுகிறார்கள் என்பது உண்மை. இதிலே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், அநபாயன் காலத்திலே எழுந்த கலிங்கத்துப்பரணி அதிராஜேந்திரன் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும், வீரராஜேந்திரன் அநபாயனுக்கு இளவரசுப்பதவி கொடுத்ததாக ஒரு கதையையும் சொல்கிறது (இசையுடன் எடுத்த கொடி அபயன், அவனிக்கு இவனை இளவரசில் வைத்த பிறகே, திசை அரசருக்குரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே). ஆனால், அதிராஜேந்திரன் கல்வெட்டுகள் 1067 இல் இருந்து கிடைப்பதால் அவன் 1067 முதல் தந்தையின் இறப்பு வரை பட்டத்திளவரசனாக இருந்திருக்கிறான் என்பதும், அதனால் அநபாயன் இளவரசனாக இருந்திருக்க முடியாது என்பதும் புலப்படும். அநபாயன் மகன் விக்கிரமன் காலத்தில் வந்த ஒட்டக்கூத்தர் அதிராஜேந்திரனைப் பெரிதாய்ப் பாடா விட்டாலும், “அங்கவன்பின் காவல் புரிந்தவனி காத்தோனு மென்றிவர்கள் பூவலய முற்றும் புரந்ததற்பின்…” என்ற வரி மூலம் அதிராஜேந்திரன் ஆட்சியை ஒத்துக்கொள்கிறார். எனவே அதிராஜேந்திரன் ஆண்டது உண்மையென்பதும், அநபாயன் காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அதிராஜேந்திரன் ஆட்சி பற்றிப்பேசுவது தவிர்க்கப்பட்டது என்பதும் பெறப்படும்.

எனவே, அதிராஜேந்திரன் அற்பாயுளில் இறந்ததற்கும், அதன் முன்னர் / பின்னர் ஏற்பட்ட கலகங்கள் அல்லது உள்நாட்டுப் போருக்கும், விஜயாலய சோழன் வம்சம் அழிந்து பட்டதற்கும் அல்லது அதன்பிறகு ஆட்சிக்கு வராதததிற்கும், மூன்று வெவ்வேறு காரணங்களை நாம் ஊகிக்கலாம்.

– அநபாயனான முதலாம் குலோத்துங்கன் ஆட்சி பீடம் ஏறும் ஆசையால் அதிராஜேந்திரனைக் கொன்றான்.

– அதிராஜேந்திரன், சைவ – வைஷ்ணவ மதக் கலவரத்தில் அல்லது உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்டான்.

– அதிராஜேந்திரன், மர்மமான கொடிய நோய் ஏதோ பீடித்து இறந்தான்.

இதில், காரணம் எதுவாயிருந்தாலும், அது அதிராஜேந்திரனைக் கொன்றதோடு, அவனது ஆண்வழி உறவினர்களையும் கொன்றிருக்கிறது அல்லது பட்டத்திற்கு வராமல் தடுத்திருக்கிறது என்பது வெளிப்படை. ஏனெனில், நான் குறிப்பிட்டது போல, ராஜாதிராஜனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் இருப்பதென்பதும், இரண்டாம் ராஜேந்திரன் அல்லது வீர ராஜேந்திரனுக்கு வேறு ஆண்பிள்ளைகள் இல்லாமல் இருப்பதென்பதும் அவ்வளவு சாத்தியமில்லை. இவர்கள் ஒவ்வொருவருமே பேரரசர்களாக இருந்தவர்கள். பல மனைவிகளை மணந்திருப்பார்கள். இறக்கும்போது இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐம்பது வயதுக்கு மேல். எனவே இவர்கள் ஒவ்வொருவருக்கும் பல ஆண் சந்ததிகள் இருந்திருப்பார்கள்.

மேலும், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோரின் மெய்க்கீர்த்திகள் அவர்களுக்கு (வேறு பல) சகோதரர்களும் ஆண் பிள்ளைகளும் இருந்ததாகத் தெரியப்படுத்துகின்றன. இரண்டாம் ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில், அவன் தான் கைப்பற்றிய நாடுகளிற்கு ஆளுநர்களை நியமித்தது பற்றிச் சொல்லுகையில்,

தன்
சிறிய தாதை யாகிய எறிவலி
கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல்
இருமுடிசோழ னென்றும் பொருமுரண்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழைத் தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க் 
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலி தடக்கை மதுராந் தகனைச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகல் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய இராசனென்றும் 
திருஉளத்து அன்பொடு கருது காதலருள்
இத்தலம் புகழ் ராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றும் தொத்தணி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து 
ஏழுஉயர் களிற்றுச் சோழ கேரளனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராச னென்றும் கனைகடல் 
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றும் செந்தமிழ்
பிடிகலி இரட்ட பாடிகொண்டசோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கன்ன
குச்சி ராச னென்றும் பின்னும்தன்
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப னென்றும்
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச்
சுடர்மணி மகுடஞ் சூட்டிப்

என்று வருதலால், இரண்டாம் ராஜேந்திரனுக்குச் சிறிய தந்தை ஒருவனும், ராஜாதிராஜன், வீர ராஜேந்திரன், தவிர இன்னும் இரண்டு ஆண் சகோதரர்களும், ஆறு ஆண் மக்களும், இரண்டு ஆண் பேரப்பிள்ளைகளும் (அவன் உயிரோடிருக்கையில்) இருந்ததாகத் தெரிகிறது. இந்த ஆறு ‘மகன்கள்’ என்பது பெறா மக்களையும் சேர்த்தே குறிக்கிறது என்று வைத்தால் கூட, ராஜமகேந்திரன், அதிராஜேந்திரன் தவிர ராஜேந்திர சோழனுக்கு வேறு நான்கு பேரப்பிள்ளைகள் இருந்துள்ளார்கள். அதேபோல, வீர ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில், அவன் தான் கைப்பற்றிய நாடுகளிற்கு ஆளுநர்களை நியமித்தது பற்றிச் சொல்லுகையில்,

தன்திருப் புதல்வனாகிய மதுராந் தகனை
வாளேந்து தானை சோளேந் திரனென
எண்திசைத் திகழ எழில்முடி சூட்டித்
தொண்டைமண் டலங்கொடுத் தருளித் திண்திறல்
மைந்த னாகிய கங்கை கொண்ட சோழனை
ஏழுய ரியானைச் சோழபாண்டியன் என்று
ஈண்டுயர் மணிமுடி இசைபெறச் சூட்டிப்
பாண்டிமண் டலங்கொடுத் தருளி ஆண்டகை
வடிகொண்ட கதிர்வேல் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழனெனச் சுடர்முடி சூட்டி
அந்தமில் பெருஞ்சிறப் பருளித் தன்கிளை
எவ்வேறு உலகத் தவர்க்குரிய
வேறுவேறு அருளி இகலிமுனை யிருந்து…..

என்று வருதலால், வீரராஜேந்திரனுக்கு மகன்மார் அல்லது மகன்முறையானவர் மூவர் இருந்தது பெறப்படுகிறது. இவர்களுள் மதுராந்தகன் என்ற பிள்ளைத் திருநாமம் பெற்றவன் அதிராஜேந்திரன் ஆகலாம். அதிராஜேந்திரனுக்குச் சொந்த / ஒன்று விட்ட சகோதரர் இருவரேனும் வீர ராஜேந்திரன் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

ஆகவே, ராஜராஜ சோழன் வம்சத்தில் வந்த பல ஆண்மக்கள் இருந்திருக்க வேண்டும். அதிராஜேந்திரனுக்குப் பிறகு இவர்கள் எல்லோருக்கும் பட்டம் மறுக்கப்பட்டுப் பெண்வழி வந்த அநபாயன் பட்டம் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சோழ சாம்ராஜ்யத்தின் அடியில் புகைந்து கொண்டிருந்து 1070 இல் வெளிப்பட்டு, பேரரசன் அதிராஜேந்திரனைக் கொன்று, அவன் ஆண்வழி உறவினர்கள் அனைவரையும் கொன்று அல்லது அவர்களுக்குப் பட்டம் இல்லாமல் செய்து, விஜயாலயன் வம்சத்தை அழித்து, பெரும் உள்நாட்டுப் போரை ஏற்படுத்திய அந்தக் காரணி எது? (1) ஆண்வழிச் சோழ வம்சத்தினருக்கும் பெண்வழி வம்சமாகிய கீழைச் சாளுக்கியருக்கும் (முக்கியமாக அநபாயனுக்கும் ) இடையில் இருந்த அதிகாரப் போட்டியா? (2) சைவ – வைஷ்ணவப் பூசலா? (3) சோழ வம்சத்தில் தலைதூக்கிய கொடிய நோயா? இவற்றில் பலவா?

(1) அதிகாரப்போட்டியே காரணம்

இப்போது நாம் பேசுவது சோழ வம்சத்தைத் தவிர வேறொரு வம்சம் பற்றியாயின், அதிகாரப்போட்டியும் அநபாயனின் சாம்ராஜ்ய ஆசையுமே அதிராஜேந்திரனின் இறப்புக்கும் உள்நாட்டுப்போருக்கும் காரணம் என்று நிச்சயமாக முடிவு செய்துவிடலாம். நிகழ்வுகளை மேம்போக்காகப் பார்க்கும்போது இது சாத்தியமாகவே தோன்றும். கலிங்கத்துப்பரணியில் அதிராஜேந்திரனைப்பற்றிச் சொல்லப்படாமல் மறைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கும். ஆனால், சோழ வம்சத்தில் அதுவரை யாரும் சிம்மாசனத்துக்காக உறவினரைக் கொன் றதில்லை. குலோத்துங்கன் சிம்மாசனத்துக்காக அதிராஜேந்திரனை மட்டுமல்ல அவனது ஒன்று விட்ட சகோதரர்களையும் கொன்றிருந்தால் அவன் அமைதியாக அதன்பிறகு ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்ய (1070 – 1120) முடிந்திருக்குமா என்பதையும் நோக்கவேண்டும். இவற்றைவிட முக்கியமாக, குலோத்துங்கனின் பரம எதிரி விக்கிரமாதித்தனின் வாக்குமூலமே குலோத்துங்கங்கனை நிரபராதி ஆக்குகிறது. அநபாயனாகிய குலோத்துங்கன் விக்கலானாகிய விக்கிரமாதித்தனுக்கு ஆதிமுதல் எதிரி. வேங்கியில் பல போர்களில் விக்கிரமாதித்தனைத் தோற்கடித்தவன். பிறகு, விக்கிரமாதித்தன் வீரராஜேந்திரனுடன் பேரம் பேசி, குலோத்துங்கனின் வேங்கிச் சிம்மாசனத்தைப்பறித்துத் தன்சார்பான விஜயாதித்தனுக்குக் கொடுத்தான். விக்கிரமாதித்தனுக்கு ” விருதராஜன்” என்ற பேர் இருந்ததாலேயே குலோத்துங்கன் “விருதரராஜ பயங்கரன்” என்ற விருதுப்பெயரைச் சூடிக்கொண்டான். குலோத்துங்கன் முடி சூடிய பிறகும், விக்கிரமாதித்தனுடன் போர் செய்து அவனைத் தோற்கடித்தான்.

இவ்வாறு குலோத்துங்கனின் பரம எதிரியான விக்கிரமாதித்தனின் வரலாற்றில், தனது மைத்துனன் அதிராஜேந்திரனின் கொலைக்காகக் குலோத்துங்கன் மீது குற்றம் சாட்டப்படவில்லை. “தீயவர்கள் கலகம் செய்து, அதிராஜேந்திரனைக் கொன்றனர். அந்தச் சந்தர்ப்பத்தைப்பாவித்து அநபாயன் முடிசூடிக்கொண்டான்” என்றே சொல்லப்படுகிறது. உண்மையில் அநபாயன் அதிராஜேந்திரனைக்கொன்றிருந்தால், அல்லது கொன்றதாகச் சந்தேகமாவது இருந்திருந்தால் அந்தப்பழியை விக்கிரமாதித்தன் நிச்சயமாக அநபாயன் மீது போட்டிருப்பான். எனவே, அதிராஜேந்திரன் அநபாயனால் கொல்லப்படவில்லை என்பதும், கொலை செய்தது யார் என்பதும் அந்தக்காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, அவனது எதிரியின் ‘வாக்குமூலம்’ அநபாயனை ஓரளவு விடுவிப்பதோடு, வெறும் அதிகாரப்போட்டியால் உள்நாட்டுப்போர் விளைந்தது என்பதை அவ்வளவு சாத்தியம் அற்றதாக்குகிறது.

(2) சைவ – வைஷ்ணவப் பூசலே காரணம்

சோழர் காலத்தில் சைவ – வைஷ்ணவப் பூசல் இருந்ததற்கு இலக்கிய ஆதாரங்கள் அதிகம் இல்லாதபோதும், கர்ணபரம்பரைக் கதைகளும் செவிவழிச் செய்திகளும் நிறையவே இதைப்பற்றிப் பேசுகின்றன. இப்படியான செய்திகளையே கல்கியும் ‘பொன்னியின் செல்வன்’ இல் உபயோகித்துள்ளார். மேலும், ராமானுஜர் சம்பந்தமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்லும் கதைகள், சோழ மரபின்மீது கடும் வெறுப்பைப் பிரதிபலிக்கின்றன. எனவே, சோழர் காலத்தில் சைவ- வைஷ்ணவப்பூசல் இருந்தது என்பதும் சில சோழ மன்னர்களாவது சைவர்களுக்குப் பக்கச்சார்பாக நடந்துகொண்டனர் என்பதும் உண்மையென்று துணியலாம். பிற்காலத்தில் வந்த இரண்டாம் குலோத்துங்கனாகிய திருநீற்றுச் சோழன், தில்லையில் இருந்த பெருமாள் சிலையைக் கடலுக்குள் எறிந்தான் என்பதற்கு இலக்கிய ஆதாரம் கூட உண்டு (” தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து”, ” புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின் மூழ்குவித்த சென்னி” — ஒட்டக்கூத்தர்). எனவே, வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் அல்லது இருவருமே சைவர்களுக்குச் சார்பாக வைஷ்ணவரை ஒடுக்கி இருக்கலாம்.

Youtube video: “புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடல் அகழில் மூழ்குவித்த சென்னி”.   இரண்டாம் குலோத்துங்கன் தில்லையின் விஷ்ணு சிலையைக் கடலுள் எறிதல்: “தசாவதாரம்” திரைப்படத்தில் காட்டப் பட்டவாறு.

இந்தச்சமயப்போர் காரணமாக வைஷ்ணவர்கள் சோழப்பேரரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத்துணிவார்களா என்று பார்த்தால், கடுமையான சமய விசுவாசம் நிலவிய அந்நாட்களில் இது சாத்தியமே எனலாம். அத்தோடு, படைகளிலும் வைஷ்ணவர்கள் இருந்திருப்பார்கள். முக்கியமாக, பல அந்தணப் படைத்தலைவர்கள் (மாராயன் அருள்மொழி / பிரம்ம மாராயன் போன்றவர்களின் மரபினர்) வைஷ்ணவர்களாக இருந்திருப்பார்கள். ஆகவே, உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் மேல் சோழ மன்னர்களின் கொடுமைகள் அளவு மிஞ்சிப்போகின்றன என்று இவர்கள் கருதி இருந்தால், ராஜ விசுவாசத்தை விட்டுக் கொதித்து எழுந்திருக்கலாம். அதிராஜேந்திரன் கடுமையான கொடுமைகளை செய்திருந்தால், அவன் பேரரசனாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில் வைஷ்ணவர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள். எனவே, விக்கிரமாதித்தன் பெயர் குறிப்பிடாமல் சொல்லும் கலகக்காரர்கள் வைஷ்ணவர்களாக இருக்கலாம்.

இந்த ‘ சமயப்போர்’ கருதுகோளுக்கு எதிரான வாதம், அதைக் குலோத்துங்கன் கால ஏடுகள் ஏன் வெளிப்படையாகக்கூறவில்லை என்பதும், குலோத்துங்கன் ஏன் அதிராஜேந்திரன் அரசாட்சியை மறைக்க முயன்றான் என்பதுமாகும். மேலும், பேரரசன் அதிராஜேந்திரனைக் கொன்றவர்களைக் குலோத்துங்கன் ஏன் தண்டிக்கவில்லை என்றும் கேட்கலாம். கலிங்கத்துப்பரணி சைவ மதம் சார்ந்த நூலாக இல்லாமல் வைணவத்துக்கும் முக்கியம் கொடுக்கும் நூலாக இருப்பது ஏன் என்றும் கேட்கலாம். வைஷ்ணவனான கருணாகரத் தொண்டைமானை, குலோத்துங்கன் படைத்தலைவனாக வைத்திருந்தது ஏனென்றும் கேட்கலாம். மேம்போக்காகப்பார்த்தால், இந்தக்கேள்விகள் யாவும், சமயச்சண்டை கருதுகோளை பொய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன.

ஆனால், அநபாயனாகிய குலோத்துங்கன், பழிவாங்கும் நோக்கத்தைவிட, நல்லிணக்கத்தை (reconciliation) உருவாக்கும் நோக்கம் கொண்ட புத்திசாலியான பேரரசன் என்ற எடுகோளைத் துணைக்கொண்டால், இவ்வினாக்களுக்கு இலகுவாக விடைகூறலாம். அநபாயன் சிறந்த ராஜதந்திரி: நிதானமானவன்: மூர்க்கமற்றவன்: தேசாபிமானி என்று நீலகண்ட சாஸ்திரியார் முதலிய அறிஞர்கள் எண்ணுகின்றனர். அவ்வாறாயின், சைவ – வைணவச் சண்டை சோழ சாம்ராஜ்யத்தை நாசமாக்க வல்லது என்பதும், வைணவர்களைப்பழி வாங்குவதைவிட நல்லிணக்கத்தை உருவாக்குவதே தனக்கும் சோழ சாம்ராஜ்யத்த்துக்கும் நல்லது என்பதும் அவனுக்குப் புரிந்திருக்கும். ஒருவேளை, வைணவர்களுடன் பகைத்துக்கொண்ட விஜயாலயன் வம்சத்தினர் சிம்மாசனம் ஏறி நாட்டை ஒருமைப்படுத்த முடியாது என்பதால், அதிராஜேந்திரனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தாங்களே விட்டுக்கொடுத்து அநபாயனைச் சிம்மாசனம் ஏற்றியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால், அநபாயன் ஒருவேளை கலகத்தின் தலைவர்களை மட்டும் தண்டித்து, மற்றவர்களை விடுவித்து, எதிர்கால வரலாற்று ஏடுகளில் அதைப்பற்றிச் சொல்லாமல் விட்டிருக்கலாம். வைணவர்களின் மனத்தைப் புண்படுத்தி, பழைய ரணங்களை மறுபடியும் கிளறி, உள்நாட்டு யுத்தத்தை மூட்டக்கூடாது என்பதற்காகவே அதிராஜேந்திரன் வரலாறு குலோத்துங்கனால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இந்த எண்ணத்தோடு கலிங்கத்துப்பரணியை மறுபடி வாசித்தால், சைவ – வைணவ நல்லிணக்கத்துக்கும் வைணவர்கள் குலோத்துங்கனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்கும் அது முயற்சி செய்திருப்பதைக்காணலாம். அதன் கடவுள் வாழ்த்தே முதலாவதாகச் சிவனுக்கும், அடுத்ததாக விஷ்ணுவுக்கும், பிறகு முறையே மாற்றத்தெய்வங்களுக்குமாக, சமய சமரச நோக்கில் அமைந்திருக்கிறது. இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால், சிவனைப்பாடும் கடவுள் வாழ்த்திலேயே, ‘புயல் வண்ணன்’ என்று விஷ்ணுவைக் குறிப்பிட்டுத் தொடங்கியதோடு, சிவனின் மைத்துனர் தான் விஷ்ணு என்பதையும் ஜெயங்கொண்டார் சொல்லிக்காட்டி விட்டதைப்பார்த்தால், அவரது அரசியல் அறிவை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! (புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன் தொழில்காட்டப் புவன வாழ்க்கைச் செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம். ). மேலும், கலிங்கத்துப்பரணியிலே, அநபாயன் திருமாலின் அவதாரம் என்று தெளிவாகக் கூறுவது, வைஷ்ணவர்கள் அவனை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி எனலாம். ( “அன்றிலங்கை பொருதழித்த அவனேயப் பாரதப்போர் முடித்துப், பின்னை வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான்!”, “தேவரெலாங் குறையிரப்பத் தேவகி தன் திருவயிற்றில் வசுதேவற்கு மூவுலகுந் தொழ நெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை, இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன் அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி, ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள!” ). இன்னும் ஒருபடி மேலே சென்று, ஸ்ரீவைஷ்ணவனும், குலோத்துங்கன் படைத் தலைவனுமான கருணாகரனைத் “திருமாலின் சக்கரம் போன்றவன்” என்று ஜெயங்கொண்டார் சொல்லி விடுகிறார் ( “தண்ணா ரின் மலர்த் திரள் தோளபயன் தானேவிய சேனை தனக்கடையக் கண்ணாகிய சோழன சக்கரமாம் கருணாகரன் வாரணமேற் கொளவே” ).  இவையெல்லாம், சைவ – வைஷ்ணவ உள்நாட்டுப்போரின் பின் சோழ நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு குலோத்துங்கன் செய்த முயற்சிகள் எனலாம்.

இந்த எண்ணப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, ராஜமகேந்திரன் திருவரங்கக் கோயிலுக்கு மணி அரவப்படுக்கை அமைத்துக்கொடுத்ததும், வைஷ்ணவர்களை ஓரளவு குளிர்வித்து உள்நாட்டுப்போரைத் தவிர்க்கச் செய்த முயற்சியாக இருக்கலாம். இதை நினைவுபடுத்தி, வைஷ்ணவர்களுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ராஜமகேந்திரன் பற்றிக் கலிங்கத்துப்பரணி விரிவாகப்புகழ்கிறது எனலாம். ‘நீதி தவறாத ஆட்சி’ என்று சொல்வதும்கூட, ‘ சைவர் – வைஷ்ணவர்’ மத்தியில் பேதம் பாராட்டாத ஆட்சி என்பதைக் குறித்திருக்கலாம். இந்த ஊகங்கள் எல்லாம் உண்மையாயின் சோழ மன்னர்களுள் ராஜராஜன், ராஜேந்திரன், ராஜமகேந்திரன்,  முதலாம் குலோத்துங்கன் முதலியோர் சமயங்களில் பேதம் காணாத அரசர்களாகவும், வீர ராஜேந்திரன், அதிராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சிலர் தீவிர சைவமத ஆதரவாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும்.

எனவே, சைவ- வைஷ்ணவப் பூசலில் அதிராஜேந்திரன் இறந்தான் என்பது நம்பக் கூடியதே.

3) மர்மமான கொடிய நோயே காரணம்

ராமானுஜருக்கும் சோழப்பேரரசனுக்கும் இடையிலான பகையைப்பற்றி பல செவிவழி வரலாறுகள் வைஷ்ணவர் மத்தியில் இருந்தபோதும், சோழ அரசன் ஒருவன் கடுமையான நோய்கண்டு இறந்தான் என்பதிலும், அதனால் “கிருமிகண்ட சோழன்” என்று அழைக்கப்பட்டான் என்பதிலும் எல்லாக்கதைகளும் உடன்படுகின்றன. எனவே, இதன்பின்னால் ஏதோ ஒரு உண்மை இருக்கவே வேண்டும். சோழ அரசகுல வரலாறுகள் இதை மறைத்ததில் அதிசயமில்லை. கிருமிகண்ட சோழன் வீர ராஜேந்திரனாகவோ, அதி ராஜேந்திரனாகவோ, அல்லது பின்னால் வந்த இரண்டாம் குலோத்துங்கனாகவோ இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இது அதிராஜேந்திரனாக இருந்திருந்தால், அவன் இறப்பதற்குக் கடுமையான நோய் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கிருமி கண்ட சோழனுக்குக் குஷ்ட ரோகம் வந்தது என்று சில வைணவக்கதைகளும், கண்டமாலை வந்தது என்று வேறு சில கதைகளும் சொல்கின்றன. இந்த நோய் உண்மையில் புற்றுநோயாகவோ, தொழு நோய் / குன்ம நோய் / குஷ்ட நோய் ஆகவோ (Leprosy), வேறு கடுமையான தொற்றுநோயாகவோ, மரபியல் நோயாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது பார்த்தவர்கள் அருவருக்கும்படியான நோயாக இருக்கவேண்டும். எனவே தான், வைஷ்ணவர்கள் இதனைத் தெய்வ சாபமாக உருவாக்கப்படுத்துவது எளிதாக இருந்திருக்கிறது.

இந்த இடத்தில் தான், தமிழக வைஷ்ணவர்கள் அறிந்திருக்க முடியாததும், ஈழத்துச் சைவர்கள் மத்தியில் பரவலாக அறியப் பட்டதுமான மாருதப்புரவீக வல்லி கதையைப் பார்க்க வேண்டும். மாருதப்புரவீக வல்லி காலம் கிபி 1050 – 1200 வரை என்று இன்னுமொரு பதிவில் காட்டியிருக்கிறேன். எனவே அவளது காலம் அதிராஜேந்திரன் காலமாக அல்லது பெரும்பாலும் அதற்குச் சற்றுப் பின்னால் இருக்க்க வேண்டும். அவள் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள் என்று கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன. சோழர் குலத்தில் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் இருவருக்கு கடுமையான நோய் இருந்திருந்தால், அந்தக்குடும்பத்தில் வேறு பலருக்கும் அந்நோய் இருந்திருக்கலாம்.

அரச வம்சங்களில் குடும்பத்துள் விவாகம் (inbreeding ) அதிகமென்பதால், மரபணு அடிப்படையிலான நோய்கள் வருவதும் அதிகம். இது மேலைத்தேய அரசகுடும்ப வரலாறுகளை வாசித்தவர்களுக்குத் தெரியும். Kingdom of Heaven படம் பார்த்தவர்கள் ஜெருசலேமின் Baldwin அரசருக்குக் குஷ்ட ரோகம் இருந்ததென்பதையும், இது அவரின் முகத்தை விகாரமாக்கியதால் அவரின் சமயரீதியான எதிரிகள் (முஸ்லிம்கள்) இது இறைவனின் சாபம் என்று இகழ்ந்ததையும், அவருக்குப்பிறகு அவரின் மருமகனுக்கு அதே நோய் வந்ததுமான வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி அறிந்திருப்பார்கள். கிருமி கண்ட சோழன் கதைக்கும் இக்கதைக்கும் உள்ள ஒற்றுமைகளைக் காண்பது கடினமல்ல.   மேலும், விகாரமாக்கும் பரம்பரை நோய்கள் சிலவுமுண்டு. இவை autosomal dominant ஆக இருந்திருக்கலாம். உதாரணம் Type 1 Neurofibromatosis. சோழர் அரசவம்சத்தில் இப்படி ஒரு நோய் இருந்திருந்தால், ராஜ மகேந்திரன் அகாலத்தில் இறந்ததற்கும் அந்த நோய் காரணமாக இருந்திருக்கக்கூடும். இது ஒரு மானக்கேடான விஷயம் என்று கருதப்பட்டதால் வரலாற்றில் பதியப்படாமல் விடப்பட்டிருக்கலாம். இப்படி சோழ வம்சத்தில் சிலபேருக்கு புறத்தோற்றத்தை விகாரமாக்கும் நோயொன்று வந்திருந்தால், அது உண்மையிலேயே பரம்பரை நோயோ
இல்லையோ, அது பரம்பரை நோயாக இருக்குமென்று சோழ அரச குலத்தினர் அஞ்சி இருக்கலாம். இதனால், விஜயாலய சோழனின் வம்சத்தில் சிலர் மிஞ்சி இருந்திருந்தாலும் அவர்கள் தவிர்க்கப்பட்டு, பெண் வம்சத்தில் வந்தவனும் வேங்கி (மற்றும் சிலவேளை ஸ்ரீவிஜய) இரத்தக் கலப்பு உடையவனுமான அநபாயனுக்குப் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம். சோழர்கள் இதை அறிந்திருந்தார்களோ இல்லையோ, எவ்வளவு தூரம் வித்தியாசமான மரபணுக்கள் கலக்கின்றனவோ அவ்வளவு தூரம் கூர்ப்பில் மேம்பட்ட, மரபணு நோய்களின் தாக்கங்கள் குறைந்த வாரிசுகள் உருவாகச் சந்தர்ப்பம் உண்டென்பது விஞ்ஞானம் சொல்லும் உண்மையாகும்.

Picture: King Baldwin  IV of Jerusalem (1161 –  1185) is being identified as a Leper by his tutor: By Unknown painter- mid-13th Century MS of the Estoire d’Eracles, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=1553628

 

மேலும், அதிராஜேந்திரன் முடிக்குரிய இளவரசனாக்கப் பட்டு சாசனங்கள் வழங்கும் உரிமை அளிக்கப் பட்ட மூன்றாம் ஆண்டில், அதாவது 1070 இல், அவனுக்கு உடல் நலம் அருள வேண்டி கூகூர் என்ற கோயிலில் தினம் இருமுறை திருமுறைகள் பாடப்பட்டதற்கான குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதுவும், அதிராஜேந்திரன் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தான் என்பதை வலியுறுத்துகிறது.

எனவே, அதிராஜேந்திரன் குஷ்டரோகம் அல்லது புற்றுநோய் மாதிரியான நோயொன்றால் இறந்தான் என்பதற்கும், அவனது குடும்பத்தில் வேறு பலருக்கும் அந்த நோய் இருந்துள்ளது என்பதற்கும் சாத்தியங்கள் உண்டு. அல்லது, வீர ராஜேந்திரன் கடுமையான நோயினால் இறந்தபிறகு, அவனது மகனும், அவனைப்போலச் சமயக் கடும்போக்கு உள்ளவனுமான அதிராஜேந்திரன் பட்டத்திற்கு வருவதற்கு எதிராக வைஷ்ணவர்கள் கலகம் செய்து அவனைக்கொன்றிருக்கவும் கூடும்.

 

Youtube video:  இறப்பின்போது பால்டுவின் அரசரின் முகம், A kingdom of heaven திரைப்படத்தில் காட்டப்பட்டவாறு. அதிராஜேந்திர சோழனின் முகமும் இறப்பின்போது இப்படித்தான் இருந்திருக்குமா?

 

எனவே, சோழ சாம்ராஜ்யத்தின் உள்ளிருந்து எழுந்துவந்து 1070 இல் பெரும் உள்நாட்டுப்போரையும் நாசத்தையும் விளைவித்த காரணி குடும்பப்பகை அல்லவென்றும், சைவ- வைஷ்ணவப்பூசல், கடுமையான அருவருக்கத்தக்க நோய், அல்லது இவையிரண்டும் என்று நாம் முடிவு செய்யலாம். சைவ வைஷ்ணவச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில், அரச குடும்பத்தில் கடுமையான நோய் ஏற்பட்டால், அது விஷ்ணுவின் தண்டனை என்றே வைஷ்ணவர்கள் முடிவு செய்திருப்பார்கள் என்பதிலும் பேரரசனுக்கு எதிராகக் கலகம் செய்வதற்கான உத்வேகத்தை அதன்மூலம் அடைந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. எனவே, நாட்டை ஒருமைப்படுத்தவேண்டிய தேவை இருந்ததாலும், விஜயாலயன் மரபினர் மேல் வைஷ்ணவர்களுக்குப் பெரிய வெறுப்பு இருந்ததாலும், விஜயாலயன் குடும்பத்தில் சிலருக்குக் கடுமையான நோய்கள் இருந்ததாலும், அதிராஜேந்திரன் மரணத்திற்குப்பின்னர் அவனது சகோதரர்கள் / ஒன்று விட்ட சகோதரர்கள் தவிர்க்கப்பட்டுப் பெண்வழிச் சோழ மரபினனான அநபாயனுக்குப் பட்டம் வழங்கப்பட்டது அல்லது பட்டத்தை அவன் கைப்பற்றிக்கொள்ளும் சூழல் உருவானது எனலாம். சைவ – வைஷ்ணவ பகையை மறுபடியும் கிளறக்கூடாது என்பதால் குலோத்துங்கன் அதிராஜேந்திரன் மரணத்தை விசாரிக்காமல் அல்லது விசாரித்து வழங்கிய தண்டனைகளை செப்பேட்டில் பதியாமல் விட்டான் எனலாம்.

 

*****

கொசுறுத் தகவல்: ஏறத்தாழ கிபி 960 அளவில் இலங்கைத்தீவில் சோழர்கள் நுழைந்ததைத் தொடர்ந்து நூறு ஆண்டுகள் இலங்கைத்தீவு அவர்களின் ஆட்சியில் இருந்தது. ரோஹண இளவரசனான முதலாம் விஜயபாகு கிபி 1066 இல் பொலன்நறுவையை மீளக்கைப்பற்ற முயன்றும் வீரராஜேந்திர சோழனால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. சந்தர்ப்பம் பார்த்திருந்த விஜயபாகு கிபி 1070 இல் சோழநாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரைப் பயன்படுத்திப் பொலன்னறுவையை மீட்டான். இவ்வாறு, இலங்கைத்தீவில் சோழர்கள் பிடி தளர்வதற்கும் கிபி 1070 இல் சோழநாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளே வழி வகுத்தன.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.