தமிழ்ப் புது வருடம் எப்போது? – ஒரு விஞ்ஞானப் பார்வை

தமிழ்ப் புது வருடம் எப்போது என்பது பற்றிய சர்ச்சைகள் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றன. இதுபற்றி தமிழ் கலாசார, வரலாறு, ஆரிய-திராவிட, திருவள்ளுவர் ஆண்டு, தி.மு.க – அ. தி.மு.க கருத்தியல் நிலைகளில் நின்று நிறைய எழுதியிருக்கிறார்கள். எனக்கும் இது சம்பந்தமாக அபிப்பிராயங்கள் இருந்தாலும் விரிவஞ்சி அந்தக் கருத்தியல் நிலைகளுக்குள் நான் போகவில்லை. இது சம்பந்தமான விஞ்ஞானப்பார்வைகள் அரிதாக இருப்பதால், அதை மட்டும் தர விழைகிறேன்.

பூமி சூரியனைச்சுற்றிய சுற்றுப்பாதையில் ஒரு ‘வட்டம்’ செல்வதையே ஒரு வருடம் என்கிறோம். இந்த வட்டத்திற்குத் (orbit, not circle) தொடக்கமோ முடிவோ இல்லாததால், விஞ்ஞான ரீதியில் வருடத்தின் தொடக்கம் என்று ஒன்றும் இல்லை. ஆனால், பூமியின் அச்சானது நிலைக்குத்துடன் 23 1/2 பாகை சாய்ந்திருப்பதனாலும், அதன் சுற்றுப்பாதை நீள்வட்ட வடிவில் இருப்பதாலும் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தின் தொடக்கமே புது வருடம் என்று எடுத்துக்கொண்டால், புது வருடம் எந்த நாள் என்று கணிக்க முடியும். இது, ஒருவர் பூமியின் எந்தப் பகுதியில், முக்கியமாக எந்த அகலாங்கில் (latitude) இருக்கிறார் என்பது குறித்து வேறுபடும்.

சரி, எந்தக் காலத்தின் தொடக்கத்தைப் புது வருடம் எனலாம்? இது மிகவும் சுவாரஸ்யமான, தத்துவார்த்த ரீதியான கேள்வி. இது, நீங்கள் இன்றைக்குச் சந்தோஷமாக இருப்பதை விரும்புகிறீர்களா, அல்லது முன்னேற்றத்தின் தொடக்கத்தை விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது. இது ‘சந்தோஷமென்றால் என்ன?’ என்பதன் வரைவிலக்கணத்தில் சென்று உதைக்கும் கேள்வி. உதாரணத்திற்கு, ஒரு ஊரிலே, பணம், கல்வி, கேள்வி, முதலிய பதினாறும் பெற்ற குடும்பம் ஒன்று இருக்கிறது என்று வைப்போம். ஏழைக்குடும்பம் ஒன்றும் இருக்கிறது. பெரிய குடும்பம் நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. அதாவது, வாழ்ந்து கெட்ட குடும்பம். ஏழைக்குடும்பம் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. ஆனால், தற்போதும் பெரிய குடும்பம் ஏழைக்குடும்பத்தை விடச் சிறப்பாகவே இருக்கிறது. உதாரணமாக, பெரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் பத்துக்கார்கள் இருந்தன. குடும்பத்தலைவர் ஊர்த்தலைவராக இருந்தார். இன்றைக்கு அந்தக்குடும்பத்தில் இரண்டு கார்கள் மட்டும். குடும்பத்தலைவர் ஊர்ப்பிரமுகர், ஆனால் தலைவரல்ல. ஏழைக்குடும்பத்திலோ, ஒரு காலத்தில் நடந்தே சென்றார்கள். இன்று மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். அடுத்த வருடம் கார் வாங்க யோசிக்கிறார்கள். காறித் துப்பப் பட்டது போய், இன்றைக்கு ஓரளவு சம மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இன்றைய நிலையில் எந்தக்குடும்பம் ஒப்பீட்டளவில் சந்தோஷமாக இருக்கும்? மேலே இருப்பவர்களோ? அல்லது மேலே வருபவர்களோ? இரண்டு பக்கமாகவும் வாதிக்கலாம். இதைப்பற்றி என்னுடைய ‘கவிவிதைகள்’ நூலிலுள்ள இரண்டு கவி விதைகளில் எழுதியிருக்கிறேன் (நம்பிக்கை, காலங்கள். நூலின் இணைப்பு இங்கே).

புதுவருடத்தையும் இப்படி இரண்டு விதமாகவும் வரையறுக்கலாம். மிகச் சந்தோஷமான காலத்தின் உச்சி, அல்லது சந்தோசம் தொடங்குகிற, அதாவது ஏறுமுகம் தொடங்குகிற காலம். பூமியில் உயிருக்கு முதலானது சூரியன். மனிதர்கள் சூரியனின் அருகாமையை விரும்புகிறார்கள். கடும் குளிரை வெறுக்கிறார்கள். ஆகவே, சூரியன் மிக அருகில் இருக்கிற ஒரு காலம், அல்லது சூரியன் அருகாமையில் வரத்தொடங்குகிற காலம், பல கலாச்சாரங்களில் புது வருடமாக இருக்கிறது.

இனி, ‘சூரியன் அருகாமையில் இருத்தல் அல்லது அருகில் வரல்’ என்றால் என்னவென்பதை விஞ்ஞானப்படி பார்ப்போம். இந்தப்பிரபஞ்சத்திலுள்ள விண்பொருட்கள் அனைத்தும் அண்டவெளியில் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சில
பொருள்கள் சார்புரீதியில் வேறு விண்பொருள்களைச் சுற்றி வருகின்றன. வீதியில் நீங்கள் நடந்து செல்லும்போது உங்கள் பிள்ளை மிக
வேகமாக உங்களைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டு ஓடுவது போன்றது இது. இதேபோலத்தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. எனவே சூரியன் அசையாமல் நிற்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், சூரியக்குடும்பத்தை மட்டும் எடுத்துப் பார்க்கும்போது சூரியன் அசையாமல் நிற்பதாகவும் பூமி உட்பட்ட கோள்கள் நீள்வட்டப்பாதையில் அதைச் சுற்றி வருவதாகவும் சொல்லலாம். எனவே சூரியன் பூமியை நோக்கி வருவதில்லை. பூமிதான் சூரியனை நோக்கியும் சூரியனில் இருந்து விலகியும் செல்கிறது. இதற்கு அதன் நீள்வட்டச் சுற்றுப்பாதை காரணமாகும். மேலும், பூமியானது நிலைக்குத்தில் இருந்து 23 1/2 பாகைகள் சரிந்து சுற்றுவதால் நீள்வட்டத்தின் ஒரு எல்லையில் பூமியின் கீழ்ப்பகுதியும், நீள்வட்டத்தின் இன்னுமொரு எல்லையில் பூமியின் மேற்பகுதியும் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும். அருகாமையில் இருக்கும் பிரதேசங்களில் கோடையும், மிகத்தள்ளி இருக்கும் பிரதேசங்களில் குளிர் காலமும் ஏற்படும். இதனால்தான் வட அரைக்கோளத்தில் ( கனடா, அமெரிக்கா, பிரிட்டன்) குளிர்காலம் நிலவும்போது தென் அரைக்கோளத்தில் ( அவுஸ்திரேலியா, நியூ சிலாந்து ) கடுங்கோடை நிலவுகிறது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் பூமியின் வடபக்கம் சூரியனை மிக நெருங்கும்போது 23 1/2 பாகை வட அகலாங்கும், பூமியின் தென்பக்கம் சூரியனை நெருங்கும்போது 23 1/2 பாகை தென் அகலாங்கும் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். இவ்வகலாங்குகளையே கடகக்கோடு (Tropic of Cancer), மகரக்கோடு (Tropic of Capricorn) என்கிறோம். ஜூன் மாதம் 21ம் திகதி கடகக் கோடும், டிசம்பர் மாதம் 21ம் திகதி மகரக் கோடும் சூரியனுக்கு மிக அருகில் வருகின்றன.

எனவே, பூமியின் சார்பில் பார்க்கும்போது, சூரியன் கிழக்கு- மேற்காக ஒவ்வொருநாளும் சென்றாலும் அதன் சுற்றுப்பாதை தெற்கு – வடக்காக நகர்வதாகத் தோன்றும். எனவே ஜூன் மாதம் 21ம் நாள் கடகக்கோட்டில் சூரியன் உச்சம் கொடுக்கும். பிறகு தெற்காக நகர்ந்து டிசம்பர் 21ம் நாள் மகரக்கோட்டில் உச்சம் கொடுக்கும். பிறகு வடக்காக நகர்ந்து அடுத்த ஜூன் 21இல் கடகக் கோட்டில். இப்படி வடக்குத் தெற்காக நகரும்போது பூமத்திய கோட்டை மார்ச் 22ம் திகதியும், பின்னர் செப்டெம்பர் 23ம் திகதியும் கடந்து செல்லும். கடக, மகர கோடுகளில் உச்சம் கொடுப்பதை கடக, மகர சங்கிராந்தி (solstice ) என்றும் பூமத்திய கோட்டில் (Equator) உச்சம் கொடுப்பதை Equinox என்றும் சொல்வார்கள். ஜூனில் இருந்து தெற்கே நகர்வதை தட்ஷணாயனம் என்றும் டிசம்பரில் இருந்து வடக்கே நகர்வதை உத்தராயணம் என்றும் சொல்வார்கள். எனவே உத்தராயன காலம் தொடங்குவது ஜனவரி 14 (தை 1) அல்ல. உண்மையில் அது டிசம்பர் 21 ஆகும். தமிழ்நாடு, இலங்கை முதலிய நாடுகள், பூமத்திய கோட்டுக்கு கொஞ்சம் வடக்கே இருப்பன. எனவே இந்நாடுகளில் ஏப்ரல் முதலாம், இரண்டாம் வாரங்களிலும் மறுபடி செப்டெம்பர் முதலாம், இரண்டாம் வாரங்களிலும் சூரியன் உச்சம் கொடுக்கும்.

நான் முன்னர் கூறியபடி, உலகின் சில கலாசாரங்களில் சூரியன் உச்சம் கொடுக்கின்ற நாளையும், வேறு சில கலாசாரங்களில் சூரியன்
தங்களை நோக்கி வரத்தொடங்குகின்ற வரத் தொடங்குகின்ற நாளையும் புது வருடமாகக் கொண்டாடினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகள் செவ்வையாக அமையாததால் அவர்களின் புதுவருடங்கள் குறித்த நாளைவிடச் சற்று விலகின. எனவே, மேற்கத்தைய நாகரிகத்தில் (வடவரைக்கோளம்) உத்தராயணத்தின் தொடக்கம் புத்தாண்டாக (சனவரி 1) ஆகினாலும் கணிப்புப் பிழையால் ஏழெட்டு நாள்கள் தள்ளிப்போயிற்று. குளிர் குறையத் தொடங்குவதாக (உச்சத்தில் இருந்து கீழே வருவதாக) அவர்கள் கருதிய நாளில் அவர்கள் புத்தாண்டை வைத்தனர்.

இதில் இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் கடகக் கோடானது மத்திய இந்தியா, வட ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ முதலிய பிரதேசங்களூடாகச் செல்கிறது. அதற்கு வடக்கே வாழ்பவர்களது நாடுகளிலே சூரியன் உச்சம் கொடுப்பதில்லை. எனவே சூரியன் தங்களைக் கடக்கும் நாளை அவர்கள் புதுவருடமாக அறிவிக்க முடியாது. எனவே உத்தராயணத்தின் முதல் நாள், குளிர் குறையத்தொடங்கும் நாள், அவர்களுக்குப் புது வருடமாயிற்று.

இந்தியா, ஈரான் மற்றும் கிழக்கு ஆசியா முதலிய பிரதேசங்களில் சூரியன் தங்களைக் கடப்பதாக அவர்கள் கருதிய நாளை அவர்கள் புத்தாண்டாக வைத்தனர். இந்த நாள் அகலாங்குக்குத் தக மாறுபடும். எனவே தான் பல இந்தியக் கலாசாரங்களில் புத்தாண்டு கிட்ட க்கிட்ட ஆனால் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. இதோடு கணிப்புப்பிழைகளும், அன்னியக் கலாசாரங்களின் தாக்கங்களும், இனக்குழுக்கள் இடம்பெயரும்போது தங்கள் பழைய வழக்கங்களைப் பின்பற்றுவதும், சூரியன் உச்சம் கொடுப்பதில் இருந்து பூமி சூடேற எடுக்கும் நாள்களும் சேர்ந்து கொண்டால் குழப்பத்திற்குச் சொல்லவா வேண்டும்?

எனவே விஞ்ஞான ரீதியில் தமிழர்களுக்குப் புத்தாண்டு எது? ஒன்றில் டிசம்பர் 22 (மார்கழி 15) – இது உத்தராயணம் தொடங்கும் நாள். இல்லை ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் ஒரு நாள். இது சூரியன் உச்சம் கொடுக்கும் நாள். இது அந்தந்த இடங்களின் அகலாங்குக்குத் தக்கபடி வெவ்வேறு நாட்களில், உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 1, மதுரையில் ஏப்ரல் 5, சென்னையில் ஏப்ரல் 14 இப்படி வரும். எனவே எல்லோருக்கும் பொதுவான ஒரு நாளாக ஏப்ரல் 14 அனுஷ்டிப்பதில் தப்பில்லை.

மேலும் உத்தராயணம் தொடங்கும் அதாவது குளிர் குறையத்தொடங்கும் நாளானது குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்களுக்குத்த்தான் முக்கியம். வட இந்தியர்களுக்கு இது பொருந்தும். மத்திய கோட்டுக்கு அண்மையில் வாழும் தமிழர்களுக்கு வருடம் முழுவதும் குளிரில்லை. எனவே சூரியன் எம்மைக்கடக்கும் நாள்தான் முக்கியம். எனவே பகிடி என்னவென்றால் விஞ்ஞானப்படி பார்த்தால் வட இந்தியர்களுக்கு மகர சங்கிராந்தியும் (அதாவது பொங்கலுக்கு அருகில்), தமிழர்களுக்கு ஏப்ரல் தொடக்கமும் அதிகப் பொருத்தமான புது வருடங்களாகும்.

இதற்காக நான் சித்திரைப் புதுவருடத்தைத்தான் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நான் முன்பே சொன்னதுபோல இது விஞ்ஞான ரீதியான பார்வை மட்டும்தான். அரசியல், கலாசார, பண்பாட்டுக் காரணிகளையும் கணக்கில் எடுத்துத்தான் புதுவருடம் எதுவென்று தீர்மானிக்க முடியும். ஆனால், விஞ்ஞான ரீதியில் மேற்கண்ட விஷயங்களை எல்லாம் புரிந்துகொண்ட பிறகு, இந்தச் சர்ச்சை குறித்து அதிகமாக உணர்ச்சிவசப்பட எதுவுமில்லை என்று புரியும். ஜனவரி 14 (தை முதல்நாள் ) என்று தீர்மானித்தாலென்ன, ஏப்ரல் 14 (சித்திரை 1) என்று தீர்மானித்தாலென்ன, இரண்டு நாள்களும் விஞ்ஞான ரீதியில் ஓரளவு எழுந்தமானமாகத் தெரிவுசெய்யப்பட்ட நாள்களாகவே இருக்கும்.

— விழி மைந்தன் —

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.