யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்

ஐம்பதுகள் தொடக்கம் எழுபதுகள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைத் தேடி இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்தார்கள். இதற்குக்காரணம், இப்பாடசாலைகளில் கட்டடங்கள், ஆய்வுகூட, நூலக வசதிகள் போன்ற பௌதீக வளங்கள் அதிகமாயிருந்தன. ஆசிரிய ஆளணி வளமும் ஒப்பீட்டளவில் உயர்தரமாயிருந்தது. இதனால் செயின்ட் ஜோன்ஸ், செயின்ட் பற்றிக்ஸ், யாழ் இந்து, மத்திய கல்லூரி முதலிய நகரப்புறப் பாடசாலைகள் மட்டுமின்றி ஹாட்லிக்கல்லூரி, மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி, ஸ்கந்தா முதலிய கிராமப்புறப் பாடசாலைகளும் இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்களை ஈர்த்தன. போர்க் காலத்தில் இந்நிலை தலைகீழாகி, யாழ்ப்பாணப் பாடசாலைகள் வளங்களைப் பொறுத்தவரை இலங்கையில் கடைநிலைக்கு வந்தன.

இப்போது பௌதீக வளங்களைப்பொறுத்தவரை யாழ் பாடசாலைகள் மறுபடி முன்னணி வகிக்கும் காலம் ஆரம்பமாகி இருக்கிறது. இதற்குப்பிரதான காரணம் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்கள். போர்க் காலத்தில் சேதமடைந்த / இழந்த வளங்களை மீளப்பெற்றுக்கொள்ளுதல் என்ற பெயரில் பாடசாலைகள் பழைய மாணவர்களிடம் முக்கியமாக மேற்குலகத்தில் வசிப்பவர்களிடம் நிதி கேட்கின்றன. புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் அனுதாபம், ஒரு வகையான குற்ற உணர்வு, தம் பாடசாலை நாட்களை இரைமீட்பதிலும் பழைய மாணவர் சங்கச் செயற்பாடுகளாலும் உண்டாகும் மனத்திருப்தி, நனவிடைத்தோய்தல், அயற் பாடசாலைகளுடன் போட்டி, தமது பாடசாலைக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்களுடன் போட்டி எனப் பல காரணங்களால் உந்தப்பட்டுத் தாம் பாடுபட்டுத் தேடிய பொருளை வாரி இறைக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெரிய பாடசாலைகளில் இன்று பௌதீக வசதிகள் போர்க்காலத்தில் இழந்ததை இட்டு நிரப்புவது என்ற நிலையை எப்போதோ தாண்டி, பாடசாலையின் வரலாற்றிலேயே பௌதீக வளங்களைப் பொறுத்தவரை இது ஒரு பொற்காலம் என்ற நிலைக்கு வந்துவிட்டன. யாழ்ப்ப்பாணத்தின் மக்கள் தொகை எண்பதுகளின் இறுதியில் இருந்தளவு இப்போதில்லை. அதன்பிறகு வன்னிக்கும், கொழும்புக்கும், வெளிநாடுகளுக்கும் அரைவாசிக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். இந்த இடைவெளியை மக்கள் தொகை அதிகரிப்பு இன்னும் பூர்த்தி செய்யவில்லை. ஆனால், கட்டிடங்கள் முன்பு எப்போது இருந்ததை விடவும் அதிகமாயிருக்கின்றன. ஆகவே பெரும்பாலான கல்லூரிகள் தேவைக்கு அதிகமான கட்டிடங்களை வைத்திருக்கின்றன. இதற்கு, பழைய மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஆர்வக்கோளாறும், ‘தமது காலத்தில் கட்ட வேண்டும், தமது பெயரைச் சூட்ட வேண்டும்’ என்ற அதிபர்களின் விருப்பமும் காரணமாக இருக்கின்றன. சில கல்லூரிகளில், பெரும் பணம் புரளும் கட்டட வேலைகளைச் செய்வதன்மூலம் ஊழல்கள் செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்வதும் ஒரு காரணமோ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. நோக்கம் எதுவானாலும், தேவைக்கு அதிகமான கட்டட உருவாக்கங்கள் நடந்து கொண்டிருப்பது பெரும்பாலான பாடசாலைகளில் யதார்த்தம். அதேபோல, விளையாட்டுத் துறையில் நிறையப் பணம் செலவிடப்படுவதும், விளையாட்டு அணிகள் பெரு வெற்றிகளைப் பெற்று வருவதும் பெரும்பாலான பாடசாலைகளில் யதார்த்தம். இவையெல்லாம் (ஊழல் நடந்தால் அது தவிர ) ஒரு விதத்தில் நல்லதுதான்.

அதேவேளையில், யாழ் இந்து, வேம்படி, ஹார்ட்லி போன்ற ஒருசில கல்லூரிகள் தவிர, பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி அடை பேறுகள் அவற்றின் பொற்காலங்களில் மட்டுமல்லப் போர்க்காலங்களில் இருந்ததை விடவும் இன்றைக்குக் குறைவாக இருக்கின்றன. மூளை வெளியேற்றம், அதாவது புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் கல்வி அடைபேறுகளில் சராசரியை விட உயர்ந்தவர்களாயிருந்தது, இதற்கு ஒரு காரணம். இதனால் மரபணு ரீதியில் மீத்திறன் உடைய மாணவர்கள் யாழ் பாடசாலைகளில் குறைந்து வருவது உண்மை. ஆனால், ஆசிரிய மற்றும் கற்பித்தல் தொழிற்பாடுகளுக்கு வளங்களை வழங்குவதில் பழைய மாணவர்கள் கவனம் செலுத்தினால் இதை ஓரளவு முன்னேற்றலாம். எனவே, பௌதீக வளங்களை விட மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், ஊக்குவிப்புப் பரிசில்கள், ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசில்கள், நூல்கள், மேலதிக வகுப்புக் கொடுப்பனவுகள் முதலியவற்றில் அதிக பணத்தைப் பழைய மாணவர் சங்கங்கள் செலவிட வேண்டியது காலத்தின் தேவை.

அதே போல, தாம் வழங்கும் பணம் ஊழல்கள் அற்ற முறையில் செலவிடப் படுகிறதா என்பதையும் பழைய மாணவர் சங்கங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். காலத்துக்குக் காலம் கணக்கறிக்கைகள் முதலியவற்றைக் கோருவதுடன் சுதந்திரமான கணக்காய்வாளர்களை நியமிப்பதற்கும், கல்லூரிச் சமூகத்திடம் இருந்து பல மூலங்களினூடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கூடப் பழைய மாணவர் சங்கங்கள் தமது நிதி மூலங்களில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். ஊழலுக்குப்புறம்பாக, தமது நிதியுதவியின் பலாபலன்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விழுமியங்களுக்கு அமைவாக உபயோகிக்கப்படுகின்றனவா என்பதையும் பழைய மாணவர் சங்கங்கள் கவனிக்கவே வேண்டும். உதாரணமாக, தமது நிதியுதவியினால் பெறப்பட்ட கணனிகள் பொருத்தமில்லாத திரைப்படங்களை அல்லது ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கு உபயோகிக்கப் படுகின்றனவா, தம்மால் வேதனம் வழங்கப்படும் விளையாட்டுப் பயிற்சியாளர் அல்லது ஆசிரியர் மாணவர்களுக்குச் சட்டவிரோதமான பௌதீகத் தண்டனைகள் வழங்குகிறாரா, தமது பணத்தில் வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமாக இருக்கிறதா என்பதெல்லாம் பழைய மாணவர் சங்கங்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்பதோடு இவை பற்றிக் கேள்வி கேட்பது அவற்றின் உரிமையுமாகும். ஏனெனில், இப்படியான சந்தர்ப்பங்களில், கேள்வி இன்றி வழங்கப்படும் நிதியுதவி நன்மையை விடப் பலமடங்கு தீமையைச் செய்வதோடு இழைக்கப்படும் தீமைக்கு நிதி வழங்குவோரும் பொறுப்பானவர்களாவர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கல்லூரி நிர்வாகத்திற்குப் பழைய மாணவர்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை ஆனாலும்,  நிதிப் பங்களிப்பை வழங்கும் எந்த ஒரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் தமது நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்பதும் உண்மையே. எனவே பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலை நிர்வாகத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கோருவதென்பது, மூன்றாம் உலக நாடுகளின் அரச நிர்வாகத்தில் உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் தலையிடாமல் இருக்கவேண்டும் என்று கோருவது போன்றது. கருத்தியல் ரீதியில் சரியானாலும், நடைமுறையில் ஓரளவுக்கே சாத்தியம்.

இறுதியாக, பழைய மாணவர் சங்கங்கள் வெறுமனே பணம் காய்ச்சி மரங்கள் என்ற எண்ணப்பாட்டிலிருந்து பாடசாலை நிர்வாகங்கள் விலகுவதும் அவசியம். பணம் அனுப்புவது தவிர வேறு பல உதவிகளையும் சேவைகளையும் பழைய மாணவர்கள் தமது பாடசாலைக்குச் செய்ய முடியும். உதாரணமாக அவர்கள் விடுமுறைகளில் செல்லும்போது ஆங்கிலம் போதித்தல், விளையாட்டுத் துறைகளில் விசேட பயிற்சிகள் வழங்குதல், சிரம தானம், ஒன்றுகூடல்களில் சிறப்புரைகள், விசேட செயலமர்வுகள் முதலியவற்றை வழங்கலாம். பழைய மாணவர்கள் வெறும் பொருளாதார வளங்கள் மாத்திரமல்ல; அவர்கள் மனித வளங்களுமாவார். எனவே, ஒரு பழைய மாணவர் தான் கற்ற பாடசாலைக்குச் சென்றால் பாடசாலை அவருக்கு மாலை மரியாதை செய்தல், அவர் கேட்டுக்கேள்வியின்றி ஒரு கற்றை பணத்தை அதிபரின் கையில் கொடுத்துவிட்டு வருதல் என்ற ‘பார்முலா’வில் இருந்து பாடசாலைகளும் பழைய மாணவர்களும் வெளியில் வரவேண்டும். யாழ் பாடசாலைகளுக்கும் அவற்றின் பழைய மாணவர்கள் / ப. மா. சங்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் தற்போதுள்ளதை விட ஆழமும், அகலமும், வெளிப்படைத்தன்மையும், பன்னோக்குப்பார்வையும் பெற வேண்டும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

4 கருத்துக்கள்

 1. யாழ் மாவட்ட பாடசாலையும் பழைய மாணவர் ….. என்ற தலைப்பில் எழுதிய உங்கள் கட்டுரைக் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. இதை நீங்கள் தொகுத்து பல வெளி நாடுகளில் வாழும் யாழ் பழைய மாணவர்களுக்கு விபரமாக எழுதியமைக்கு நன்றி.
  மேலும் மேலும் உங்கள் கருத்துகளை தொகுத்து வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.

 2. பிரவீணன் உங்கள் கட்டுரையில் பல நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள். எனினும் நீங்கள் தவறவிட்ட கருத்துக்களை கீழே தருகின்றேன்:

  1. நீங்கள் குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத, யாழ் குடாநாட்டில் மட்டுமல்ல, இலங்கை தழுவிய பல கல்லூரிகளில் பாடசாலை அனுமதிக்காக பெருந்தொகையில் நன்கொடை என்ற பெயரில் பணம் அறவிடப்படுகின்றது. அதாவது வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்கள் சங்கங்களிடமிருந்து பெருமளவு நிதியுதவிகள் கிடைத்தும், யாழ் குடாநாட்டிலுள்ள பாடசாலைகளிலும் இந்த நன்கொடைகள் அறவிடப்படுகின்றன. உள்ளுரில் பாடசாலைகள் மாணவர்களின் பெற்றோர்களை நிர்ப்பந்தித்து பணம் வசூலித்தல் என்பது இலங்கையின் இலவசக்கல்வி முறைக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட பாடசாலையின் அனுமதி பெறுவதற்கான கிராக்கிக்கேற்ப, நன்கொடையும் அதிகரித்து சென்ற வண்ணமேயுள்ளது.
  2. புதிய கட்டிடங்களைக் கட்டும்போது யாழ் குடாநாட்டைச் சேர்நத பல பிரபல பாடசாலை அதிபர்கள் கட்டிட ஓப்பந்தக்காரர்களுடன் நேரடியாக அல்லது இடைத்தரகர்கள் ஊடாக கழிவு (commission) பெற்றுக்கொள்வது தொடர்பாக பேரம் பேசுவது நடைமுறையிலுள்ளது. இந்தக் கழிவு சிலவேளைகளில் 20% வரை செல்கின்றது. அதாவது 10 மில்லியன் ரூபா கட்டிட ஓப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும்போது, உண்மையில் 8 மில்லியன் ரூபாயே கட்டிட ஓப்பந்தக்காரரை சென்றடைகின்றது.
  3. போர் நிறுத்தப்பட்டு 9 வருடங்களாகிவிட்டன. ஒரு காலத்தில யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்துப் பிரபல பாடசாலைகளுக்கும், ஆரம்பக்கல்வி மூலம் திறமையுள்ள மாணவர்களை வாரி வழங்கிய கிராமத்துப் பாடசாலைகள் போதியளவு அபிவிருத்தியடையாது பின்தங்கிய நிலையிலேயே இன்னமும் உள்ளன. இதனால் கிராமத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்காது பிரபல பாடசாலைகளை நோக்கி வசதியுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். இதன் காரணமாக கிராமத்துப் பாடசாலைகள் வறிய மாணவர்களின் பாடசாலையாக உருவாகியுள்ளது.
  4. யாழ் குடாநாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு பணம் வழங்குவதை உடனடியாக பழைய மாணவர் சங்கங்கள் நிறுத்த முன்வர வேண்டும். அரச கல்வி நிறுவனங்களில் அளவுக்கதிகமான வெளியாரின் பணப்புழக்கம் தீமையையே ஏற்படுத்தும். எனவே பழைய மாணவர் சங்கங்களே, தீமைக்குத் துணைபோக வேண்டாம்! கல்விக்காக நிதியுதவி வழங்க விரும்பும் வெளிநாட்டுத் தமிழ் வாசிகளே, நீங்கள் அல்லது உங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் படித்த கிராமத்துப் பாடசாலைகளையும் அதில் கல்வி கற்கும் வறிய மாணவர்களையும் மனதிற் கொள்ளுங்கள்!! எல்லோருமாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்வோம்!!!

 3. யாழ் மாவட்ட பாடசாலையும் பழைய மாணவர் என்ற தலைப்பில் எழுதிய உங்கள் கட்டுரை
  100 % உன்மை, எங்கள் புலம் பெயர்ந்த பழைய மானவர்களின் போட்டி , பெறாமையும்,
  தங்கள் பெயர் முன்னுரிமை பெற வேண்டும் என்ற பெருமை,
  மாறி, மாறி, வரும் அதிபர்கள் வறுமைகோட்டின் கீழ் இருந்து கல்வி பயிலும்மானவர்கழை
  உதவி செய்து தூக்கி விட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், தாங்கள் இருக்கும்
  வரையும் தேவை இல்லாத கட்டிடம் எல்லாம் கட்டி விட்டு . தங்கள் பெயருக்கு பெருமை
  சேர்க்கிறார்கள்,
  அதேபோல் நம் தாயகத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இடம்காசுகழை
  வேண்டி ஆடம்பரமாக கோவில்களை கட்டுகிறார்கள், ஒவ்வொரு கிராமங்களிலும்,
  அங்கே வீடுகழளை இழந்த மக்கள் வீட்டை கட்டி குடியேறுவதற்கு உதவி செய்து, அவர்களை
  கொணர்ந்து இருக்க விடவேண்டும் என்று இல்லை, போட்டிபோட்டு கொண்டு கோவில்கள்
  கட்டப்படுகிறது,
  வறுமையில் இருப்பவர்களை சிந்தியுங்கள் ?

 4. பெயருக்கும் புகழுக்கும் செய்பவர்கள் பழைய மாணவர் சங்கங்களிலிருந்து நீக்கப்படவேண்டும். அவர்களைத் தட்டிக்கேட்க முன்வரவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *