யாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்?

உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவன்.

என்னுடைய மாருதப்புரவீகவல்லி பற்றிய பதிவில் ஏற்கனவே உக்கிரசிங்கனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இவன் மாருதப்புரவீகவல்லியின் கணவன் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன.

உக்கிரசிங்கன் கிபி 795 இல் “வடதிசையில் இருந்து பெருந்தொகையான சேனைகளைக் கொண்டுவந்து போராடி இலங்கையில் அரைவாசி வரைக்கும் பிடித்து ஆண்டுவந்தான். தென்னிலங்கையை வேறு அரசன் ஆண்டு வந்தான்” என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. ஆனால், உக்கிரசிங்கன் காலத்தில் கருணாகரத்தொண்டைமான் யாழ்ப்பாணம் வந்ததாலும், வேறுபல ஏதுக்களாலும், உக்கிரசிங்கன் காலம் குறித்து யாழ்ப்பாண வைபவமாலை கூறுவது பொருந்தாது என்றும், அவன் பதினோராம் நூற்றாண்டு இறுதி அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்திருக்கவேண்டும் என்றும் காட்டியிருக்கிறேன். தனி ராச்சியத்தை நிறுவியதனால் ” சிவத்துரோகி” என்று முதலாம் குலோத்துங்க சோழனால் (கிபி 1070 – 1120) குறிப்பிடப்பட்டவனும், கருணாகரத்தொண்டைமானை அனுப்பிக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட படைத்தலைவனும் உக்கிரசிங்கனாகவே இருக்கவேண்டும் என்றும் காட்டியிருக்கிறேன்.

உக்கிரசிங்கனைப்பற்றி மேலும் ஊகிப்பதற்கு முதலாம் விஜயபாகுவின் (1055 –  1110) சரிதத்தைக் கவனித்தல் பிரயோசனப்படும்.

சுந்தர சோழரின் காலத்தில் (கிபி 957 – 970 ) இலங்கையின் சில பகுதிகளை சோழப்படைகள் கைப்பற்றின. இது கிபி 960 அளவில் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம். அதன்பிறகு அனுராதபுரம் சில தடைவைகள் கைமாறி, பிறகு நிலையாகச் சோழர்களின் கைக்குள் வந்தது. கிபி 1017 அளவில் முழு இலங்கையும் சோழர் வசமாயிற்று. கிபி 1057 அளவில் ரோகணத்தில் சிலபகுதிகளை விஜயபாகு மீட்டுக்கொண்டாலும் அங்கே நிலையான அரசொன்றை அமைக்க முடியவில்லை.

இந்நிலையில், வீரராஜேந்திர சோழன் காலத்தில், கிபி 1066 அளவில், அதாவது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் சோழர் ஆட்சியின் கீழ் ராஜரட்டை இருந்ததன்பின், ராஜரட்டை உட்பட்ட முழு இலங்கையையும் சோழர்களிடம் இருந்து மீட்பதற்கான முயற்சியை முதலாம் விஜயபாகு செய்தான். இது சோழ – சாளுக்கியப்போர்கள் உக்கிர நிலையில் இருந்த காலம். எனவே இலங்கையில் சோழர் படைகளின் பலம் குறைவடைந்திருக்கும் என்று விஜயபாகு கருதி இருக்கலாம். ஆரம்பத்தில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது என் சூளவம்சமும், சோழர் வரலாற்று மூலங்களும் உறுதி செய்கின்றன. ஆனால், அவன் பொலன்நறுவையைக் கைப்பற்றிய பிறகு, வீரராஜேந்திரன் அனுப்பிய ஒரு பெருஞ்சேனை வந்து பொலன்நறுவையை மீட்டுக்கொண்டது. விஜயபாகு கதிர்காமப்பகுதிக்குப் பின்வங்கி, தக்க சமயம் பார்த்த்திருந்தான்.

கிபி 1070 இல் சோழ நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப்போரைப் பயன்படுத்தி, விஜயபாகு பொலன்னறுவையை மறுபடி தாக்கினான். சோழ நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் காரணமாக இலங்கைக்கு உதவிப்படை ஏதும் வராது என்று அவன் கணித்தான். எனவே பொலநறுவையில் இருந்த 95,000 சோழ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல, சோழ நாட்டின் உள்நாட்டுப்போர் சமயம் சம்பந்தப்பட்டதாக இருந்ததால், பொலநறுவையில் இருந்த சோழ சைனியத்தினுள்ளும் விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் என்று அவன் கணித்திருக்கலாம்.

இருந்தாலும், விஜயபாகு சான்ஸ் ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் மூன்று சைனியங்களை ராஜரட்டை நோக்கி அனுப்பினான். ஒரு படை மாதோட்டத்துறைமுகம் நோக்கிச்சென்று, அதைக்கைப்பற்றி, சோழ நாட்டில் இருந்து உதவிகள் வந்தால் அதைத்தடுப்பதற்காக நிலைகொண்டது. இன்னுமொரு படை, கிழக்கிலங்கை ஊடாக நகர்ந்து பொலன்னறுவையைக் கிழக்கில் இருந்து தாக்கியது. விஜயபாகுவின் தலைமையிலான மூன்றாவது பிரதான படை, மஹியங்கனை ஊடாக நகர்ந்து பொலன்னறுவையைத் தெற்கில் இருந்து தாக்கியது.

விஜயபாகுவின் கணிப்புப் படியே எல்லாம் நடந்தது. சோழ நாட்டில் இருந்து உதவி ஏதும் வராததால், மாதோட்டத்திற்குச் சென்ற அவனது படையின் ஒரு பெரும்பிரிவு கிழக்கே திரும்பி, அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பொலன்னறுவையை மேற்கில் இருந்து தாக்கியது. சோழ வேளக்காரப்படைகளில் ஒரு பகுதியும் விஜயபாகுவுக்கு உதவி செய்திருக்கலாம். இதைச் சொல்வது சோழர்களுக்கோ விஜயபாகுவுக்கோ கௌரவம் இல்லை என்பதால் இரண்டு பகுதியுமே இதை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால், பிற்காலத்தில், வேளக்காரப்படை வீரர்கள் விஜயபாகுவுக்கு எதிராகக் ‘கலகம்’ செய்தார்கள் என்பதைச் சூளவம்சம் விரிவாகக்குறிப்பிடுகிறது. அப்படிக்கலகம் செய்வதானால் அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் விஜயபாகுவின் பக்கம் சேர்ந்திருக்க வேண்டும். சோழர்களும், அதிலும் விசுவாசமிக்க முன்னணிப்போர்வீரர்களுமான வேளக்காரர் விஜயபாகு பக்கம் சேர்வதானால், அதற்குச் சோழநாட்டின் உள்நாட்டுப்போரும் அதனால் எழுந்த கசப்புணர்வுகளுமே காரணமாக இருந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம்.

இப்படி, தனிமைப்படுத்தப்பட்டு, வெளிப்பகையாலும் உள்பகையாலும் சூழப்பட்டாலும் பொலநறுவையில் இருந்த சோழ வீரர்கள் ஏழு மாதங்களுக்கு எதிர்த்து நின்றார்கள். அதற்குப்பின் பொலநறுவை வீழ்ந்தது. விஜயபாகு ராஜரட்டையில் அரசனானான். ஆனால், இலங்கையின் வட பகுதிகளை விஜயபாகு கைப்பற்றியதாகவோ, அல்லது முழுச் சோழர் படைகளையும் அழித்ததாகவோ சூளவம்சம் தெளிவாகக்கூறவில்லை. அவர்களைப்பொறுத்தவரையில் ராஜரட்டையும், பொலன்னறுவையுமே முக்கியமாக இருந்தன. இது புரிந்து கொள்ளக்கூடியதே.

ஆனால், யாழ்ப்பாண வைபவ மாலை, கிட்டத்தட்ட இதே காலத்தில் (அதாவது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், கிபி 1070 – 1120 வரை ) உக்கிர சிங்கன் யாழ்ப்பாணத்தைக் கதிரை மலையில் இருந்து (கந்தரோடை) ஆண்டதாகக் கூறுகிறது. அக்காலத்தில் கருணாகரத்தொண்டைமான் வந்து, தொண்டைமானாற்றை வெட்டியதாகவும், கருணாகரப் பிள்ளையார் கோயிலைக்கட்டியதாகவும் கூறுகிறது.

அதேவேளை சோழர் வரலாற்றை எடுத்துக்கொண்டால், சோழ நாட்டின் படைத்தலைவன் ஒருவன், சோழ நாட்டில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டதைப் பயன்படுத்தி, இலங்கையில் சுதந்திர அரசு ஒன்றை ஸ்தாபித்ததாகவும், இத்துரோகத்தினால் முதலாம் குலோத்துங்கன் (கிபி 1070 – 1120) கோபமடைந்து அப்படைத்தலைவனைச் “சிவத்துரோகி” என்று ஏசியதாகவும், கருணாகரத்தொண்டைமான் இலங்கைக்கு வந்து அந்தப் படைத்தலைவனை அடக்கியதாகவும் அது கூறுகிறது. இராஜத் துரோகம் செய்த ஒருவனைச் “சிவத்துரோகி” என்று முத்திரை குத்தியதன் காரணம், அக்காலத்தில் ஏற்பட்டிருந்த மதம் சார்ந்த (சைவ- வைஷ்ணவ) உள்நாட்டுப்போரின் தாக்கம் என்பது ஊகிக்கக்கூடியதே.

எனவே, சிங்கள, யாழ்ப்பாண, சோழ வரலாற்று மூலங்களை ஒப்புநோக்குவதன்மூலம் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடியும்.

– உக்கிரசிங்கன் ஒரு சோழப்படைத்தலைவன். அவன் பெரும்பாலும் வீரராஜேந்திரனாலோ, அல்லது முதலாம் குலோத்துங்கனாலோ படையுடன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். மிகப்பெரும்பாலும் அவன் வீரராஜேந்திரனால் பொலன்னறுவையை மீட்பதற்கு 1066 இல் அனுப்பப்பட்ட படையின் தலைவனாக இருக்கலாம்.

– முதலாம் விஜயபாகு 1070 இல் பொலன்னறுவையைக் கைப்பற்றிய போதும், வட இலங்கையை குறிப்பாக யாழ்ப்பாணத்தை மீளக்கைப்பற்றவில்லை. பொலநறுவையில் இருந்த சோழப்படைகளில் ஒரு பகுதியேனும் வட இலங்கைக்குப் பின்வாங்கி இருக்கவேண்டும்.

– இதற்குப்பிறகு, வட இலங்கையின் அரசனாக உக்கிரசிங்கன் முடிசூடிக்கொண்டிருக்க வேண்டும். இதை அவன், தனது சுயநலத்தினால் செய்திருக்கலாம். சோழ நாட்டில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டதால் மனக்கசப்பு அடைந்து அல்லது உள்நாட்டுப்போரின் முடிவு தான் சார்ந்த தரப்புக்குச் சாதகமாக அமையாது என்று கருதிச் செய்திருக்கலாம். அல்லது, மெய்யாகவே சோழ நாடு இனிமேல் இலங்கைத்தீவில் அக்கறை கொள்ளாது / கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்றும் நினைத்துச் செய்திருக்கலாம்.

– எவ்வாறாயினும், குலோத்துங்க சோழன் உள் நாட்டுப்போரின் முடிவில் தன்னை சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப்போரைப்பயன்படுத்திக் கலகம் செய்யப்புறப்பட்ட சேரர், பாண்டியர்களை அடக்கி பரதகண்டத்தில் சோழப்பேரரசை மறுபடியும் ஸ்திரப்படுத்தியபின்னர், இறுதியாக இலங்கை நோக்கிக் கவனம் செலுத்தி இருக்கலாம். அவனது நம்பிக்கை மிக்க (“திருமாலுக்குச் சக்கரம் போன்ற”) படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானின் யாழ்ப்பாண விஜயம், உக்கிரசிங்கனை அடக்கி சோழ ஆதிக்க வட்டத்தினுள் கொண்டு வருவதற்கே என்பது தெளிவு. உக்கிரசிங்கன் பெரும்பாலும் திறைசெலுத்தும் சிற்றரசனாக யாழ்ப்பாணத்தை ஆள அனுமதிக்கப் பட்டிருக்கலாம்.

– இப்படியான சூழ்நிலையில்தான் மாருதப்புரவீகவல்லி உக்கிரசிங்கனை மணந்திருக்கிறாள். அவள் யாருடைய மகளாயிருந்தாலும் சோழர் குல இளவரசி என்பதில் சந்தேகமில்லை. அவளை உக்கிரசிங்கனுக்கு மணம்செய்து கொடுத்தது அவனை முழுதாகச் சோழர்களுக்கு அடங்கச் செய்வதற்காக இருக்கலாம். சோழர்கள் படைத்துறையில் மிகவும் வலுவானவர்கள் ஆனாலும், “திருமண அடக்குமுறை” யையும் பாவிப்பதற்குத் தயங்கியவர்கள் இல்லையென்பது வேங்கியின் வரலாற்றைப் பார்த்தாலே நன்கு தெரியும். எனவே குலோத்துங்கனும் அதே தந்திரத்தைக்கையாண்டு, உயிர்ச்சேதமின்றியே உக்கிரசிங்கனை அடக்கி இருக்கலாம். மறுவளமாக, உக்கிரசிங்கன் பலவந்தமாக மருதப்புரவீகவல்லியை அடைந்தபிறகு வேறுவழியின்றித் திருமணம் நடத்தப்பட்டும் இருக்கலாம்.

– முதலாம் குலோத்துங்கனின் மகள் சுத்தமல்லி என்பவள் இலங்கை இளவரசன் ஒருவனை மணந்ததாகச் சோழர் வரலாறு கூறுகிறது. எனவே, சுத்தமல்லியும் மாருதப்புரவீக வல்லியும் ஒருவராகவும் இருக்கலாம்.

– உக்கிர சிங்கன் காலத்திற்குப் பின்னர் அவனது மகன் வாலசிங்கன் சிங்கை நகரிலிருந்து (வல்லிபுரம்) ஆண்டதாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. அதன்பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள்) யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடக்கவில்லை என்பது உண்மை. இதை யாழ்ப்பாண வைபவ மாலையும் ஒத்துக்கொள்ளுகிறது. இதற்குப்பிறகு பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி மழவன் என்ற யாழ்ப்பாணத்துப்பிரபு மதுரைக்குப்போய் கலிங்க மாகனை அழைத்து வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. அதேவேளை, முதலாம் பராக்கிரம பாகுவின் காலத்தில் ஊர்காவற்துறையில் அவனது படைகள் நிலைகொண்டிருந்ததாகச் சூளவம்சம் தெரிவிக்கிறது (இதேமாதிரியான கூற்று விஜயபாகுவின் காலத்தைப்பற்றிச் சூளவசம்சத்தில் இல்லை என்பதைக் கவனிக்க). கலிங்கமாகன் காரைநகரில் வந்து இறங்கி அதன்பிறகு வல்லிபுரத்திற்கும் சென்றே அதன்பிறகு ராஜரட்டை மீது படை எடுத்துச் சென்றிருக்கிறான். கருணாகரத்தொண்டைமான் குலோத்துங்கனுக்கும் அவனது மகன் விக்கிரம சோழனுக்கும் (1120 – 1135) பணி செய்தவன். எனவே அவன் காலத்திய உக்கிர சிங்கன் மிஞ்சிப்போனால் கிபி 1140 வரை வாழ்ந்திருக்கலாம். அதற்கு சில தசாப்தங்கள் முன்பும் இறந்திருக்கலாம். அவனது மகன் வாலசிங்கன் யாழ்ப்பாணத்தை ஆண்டிருந்தால் மிஞ்சிப்போனால் கிபி 1170 வரை ஆண்டிருக்கலாம். அதற்கு சில தசாப்தங்கள் முன்பும் இறந்திருக்கலாம். கலிங்கமாகன் வந்திறங்கியது கிபி 1215 இல். முதலாம் பராக்கிரமபாகுவின் காலம் கிபி 1153 – 1186. எனவே இந்தக்கால அட்டவணைகள் மிக அழகாகப் பொருந்துகின்றன. எனவே கிபி 1150 – 1215 வரையான இரண்டு தலைமுறைகள் யாழ்ப்பாணத்தில் தமிழராட்சி இருக்கவில்லை எனலாம்.

எனவே, உக்கிரசிங்கன் வரலாறானது யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் இருந்த முக்கிய இடைவெளியொன்றை நிரப்புகிறது. அவனைப்பற்றி அறிந்து கொள்வதன்மூலம், கிபி 960 அளவில் இருந்து (அல்லது அதற்குச் சற்று முன்பிருந்து) யாழ்ப்பாணம் தமிழர் ஆட்சியில் இருந்தது என்பதையும், இதில் ஒரேயொரு இடைவெளி 1150 – 1215 அளவில் ஏற்பட்டது என்பதையும், நாம் துணியலாம். சாதாரணமாக யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்கம் என்று சொல்லப்படுவது பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. எனவே பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் தமிழ் ஆட்சியின்கீழ் இருந்தது என்கின்ற முடிவு மிகவும் முக்கியம். அதேபோல, நல்லூருக்கு உடனடியாக முற்பட்ட காலத்தில் கந்தரோடை, வல்லிபுரம், கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, காரைநகர் முதலிய இடங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதைக் கவனிப்பதும் முக்கியம்.

பிற்குறிப்பு:

உக்கிர சிங்கன் ஒரு சோழப்படைத்தலைவன் என்பதையும், அவன் காலத்தில் சோழப்படைகள் வடஇலங்கையில் நிலைகொண்டிருந்தன என்பதையும், கலிங்க மாகனின் படையில் பெரும்பாலோர் சேரர்கள் என்பதையும், மாகனின் காலத்தில் சோழப்பேரரசுக்கு உட்பட்ட தொண்டைமண்டலத்து வேளாளர்களை (முதலியார்கள்) அவன் கொண்டுவந்து குடியேற்றினான் என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுவதையும், மாகனுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் பாண்டிய அமைச்சர்களாக இருக்கலாம் என்பதையும் தொகுத்துப்பார்க்கின்ற போது, யாழ்ப்பாணத் தமிழர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவத் தமிழர்கள் அடங்கிய ஒரு கதம்பக்கூட்டம் என்பது புலப்படுகிறது. இதுபற்றி இன்னுமொரு பதிவு விரைவில்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.