தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக நடந்து வந்த போர்களால் வீரப் பெருங்குடிகள் பல அழிந்து விட்டன. வீர ரத்தம் வற்றிக்கொண்டு வந்துவிட்டது. ராஜேந்திரன் முதலிய பேரரசர்களால் நொறுக்கப்பட்ட சோழர்களின் எதிரிகள் நாலா பக்கத்திலும் பழி வாங்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் சோழ சாம்ராஜ்ஜியம் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டது. இத்தைகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் மூன்றாம் குலோத்துங்கன் முடி சூடினான் (1178 AD) . “சோழப்பேரரசின் அழிவைத் தனது சொந்தத் திறமைகளால் சுமார் நாற்பது ஆண்டுகள் பின்போட்டவன்” என்று இவனை வரலாற்றாசிரியர்கள் புகழுகின்றனர். சொந்தத்திறமையென்பது போர், நிர்வாகத் திறமை மட்டுமல்ல. அவன் ஒரு சிறந்த இராஜதந்திரியும் கூட. எப்படி என்று சுருக்கமாகப் பார்ப்போம். (அவன் செய்த இராஜதந்திரங்கள் எல்லாம் அற வழியிலானவை என்று நான் சொல்ல வரவில்லை. அவன் நல்ல ராஜதந்திரி என்பதையே சொல்ல வருகிறேன்).

* பாண்டிய நாட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குப் பிரித்தாளும் தந்திரத்தையும் ‘அதிகாரப் பரவலாக்கல்’ தந்திரத்தையும் கையாண்டது: மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாண்டிய நாடு விடுதலை அடைந்தது. அதற்கு முன்பே அது விடுதலை அடையாததற்குக் காரணம் குலோத்துங்கனின் ராஜதந்திரம். ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற வலிமை மிகுந்த சோழப்பேரசர்களின் காலத்தில் பாண்டியநாடு சோழப்பேரரசின் நேரடி ஆட்சியின்கீழ் இருந்தது. இதனால் பாண்டியர்கள் ஓரளவு ஒற்றுமையாகச் சோழர்களை எதிர்த்து நின்றனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்களின் பலம் குறைந்து விட்டது. எனவே குலோத்துங்கன் ‘அதிகாரப்பரவலாக்கல்’ தந்திரத்தைக் கையாண்டான். அதாவது, சுதந்திரம் கேட்பவர்களிடம் சிறியளவு அதிகாரத்தைக் கொடுத்து அதை யார் அனுபவிப்பது என்பதில் போட்டியையும் உருவாக்கிவிட்டால், அவர்கள் பிறகு அதிகமாக எதுவும் கேட்கமாட்டார்கள் என்னும் தந்திரம். சோழர்களின் மேலாட்சிக்குக் கீழ் பாண்டியர்கள் மதுரையில் முடிசூடி ஆட்சி செய்ய அனுமதி கொடுத்து, தனது அமைச்சர் ஒருவரை மேற்பார்வைக்கு வைத்தான். இதனால், இந்த அதிகாரமற்ற அரசை யார் ஆள்வது என்பதில் பாண்டியர்களுக்குள் அரசுரிமைப்போட்டி ஏற்பட்டு, விக்கிரம பாண்டியனும் வீர பாண்டியனும் தமக்குள் மோதிக்கொள்ளலாயினர். குலோத்துங்கன் விக்கிரமன் பக்கம் நின்று வீர பாண்டியனைத் தோற்கடித்தான். இதனால் விக்கிரமனும் அவன் மகன் குலசேகரனும் குலோத்துங்கனிடம் நன்றி உள்ளவர்களாயிருந்தனர். மேலும் பாண்டியருக்குள் ஏற்பட்ட உட்பகையால் அவர்களின் வலிமையையும் குறைந்தது. இதனால், இன்னும் 40 ஆண்டுகளுக்குச் சோழப்பேரரசு தாக்குப்பிடித்தது.

* தெலுங்குச் சோழர், வேணாட்டுச் சோழர், சோழ கங்கர் முதலியவர்களின் கூட்டணி: ராஜராஜன் காலத்திலிருந்தே சோழநாட்டு அரசிளங்குமாரிகள் அரசியல் காரணங்களுக்காக வேறு நாட்டு மன்னர்களை மணந்தனர். பரம்பரை பரம்பரையாக இவ்வாறு நடந்ததால் மத்திய இந்தியாவிலும் தக்கணத்திலும் இருந்த பல அரச வம்சங்களில் சோழ இரத்தம் பெருமளவு கலந்ததோடு சோழ அல்லது சோட என்ற பெயருடைய கிளை அரச வம்சங்கள் உருவாயின. இவை சோழ நாட்டுக்கு வடதிசையில் அரணாக நின்றதோடு சோழ எதிரிகளுடன் போர்செய்வதில் இவை குலோத்துங்கனுடன் அடிக்கடி கூட்டுச் சேர்ந்தன. இதனால் குலோத்துங்கன் தமிழ் வீரர்களை மட்டுமல்ல, தெலுங்கு மற்றும் ஒடிய வீரர்களையும் தன் போர்களில் உபயோகப் படுத்தினான்.

* இலங்கை ஆக்கிரமிப்பும் இழப்புகளைக் குறைப்பதற்கான ராஜதந்திரமும்: குலோத்துங்கன் காலத்தில் இலங்கை சோழர் பிடியிலிருந்து விடுபட்டிருந்தது. இவன் காலத்திலேயே கலிங்க மாகன் இலங்கை மேல் படையெடுத்தான் (1215 AD). இதைப்பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன். இந்தக்கலிங்க மாகன் சோழகங்க வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது இப்போது ஓரளவு தெளிவாகத் தெரிகிறது. இவனுக்குத் திருமண வழியில் இலங்கை இராஜவம்சத்துடனும் தொடர்புண்டு. சோழர் ஆதரவின்றி இவன் கடல்வழித் தரையிறக்கம் ஒன்றை இலங்கையில் (காரைநகரில்) மேற்கொண்டிருப்பது சாத்தியமில்லை. மேலும் அப்போது பொலநறுவையில் ஆண்ட, வீரபாண்டியனின் மகனான பராக்கிரம பாண்டியனை இவன் கண்களைத் தோண்டிக் கொன்றிருக்கிறான். எனவே இவனைக் குலோத்துங்க சோழன் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதேவேளை, மாகன் சிங்கள இராஜவம்சத்துடன் கொண்டிருந்த திருமண உறவினால் இவனுக்குச் சில சிங்களவர்களின் ஆதரவும் ( ஆரம்பத்தில்) கிடைத்திருக்கும். நேரடியாகச் சோழர் படையெடுத்திருந்தால் அப்படிப்பட்ட ஆதரவு கிடைத்திருக்காது. எனவே இழப்புகள் அதிகமாக இருந்திருக்கும். எனவே என் ஊகங்கள் உண்மையானால் இது குலோத்துங்கனின் அருமையான ராஜதந்திரம்.

* ஹொய்சாளருடனான கூட்டணி: குலோத்துங்கனின் தந்தை, பாட்டனார் காலத்தில் சோழருக்குப் ( அவர்களுக்கு முன் பல்லவர்களுக்கும்) பரம்பரைப் பகைவர்களாக விளங்கி வந்த சாளுக்கியர்கள் வீழ்சசியடைந்தனர். அவர்களின் இடத்தில் ஹொய்சாளர்கள் எழுச்சி பெற்றனர். ஹொய்சாளர்களுடன் ஆரம்பத்தில் மோதல்கள் ஏற்பட்டாலும், இறங்குமுகத்தில் இருந்த சோழர்கள் ஏறுமுகத்தில் இருக்கும் ஹொய்சாளர்களுடன் அதிக நாள் மோத முடியாது என்பதை விளங்கிக்கொண்ட குலோத்துங்கன் தனது சகோதரியை ஹௌசாள வல்லாளதேவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து அவர்களைத் தனது நண்பர்கள் ஆக்கிக்கொண்டான். குலோத்துங்கன் காலத்தின் இறுதியில் (அல்லது அவன் மகன் காலத்த்தின் தொடக்கத்தில்) சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டை மீட்டதோடு சோழ நாட்டையும் தாக்கிக் கைப்பற்றியபோதும், ஹொய்சாள வீர நரசிம்மன் தலையிட்டுச் சோழநாட்டை மீட்டுக்கொடுக்குமளவு இவ்வுறவு பலமாக இருந்தது. இதனால் இன்னும் ஒரு அறுபது ஆண்டுகள் சோழ நாடு ஒரு சாம்ராஜ்யமாக இல்லாவிட்டாலும் ஒரு தேசமாகத் தாக்குப் பிடித்தது.

இங்கே அழுத்திச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்: திருமண ராஜதந்திரமானது சோழர்களின் ராஜ தந்திரத்தின் ஒரு பகுதியாகப் பராந்தகன் காலத்திலிருந்தே இருந்தாலும், இதை ‘முந்தானை ராஜதந்திரம்’ என்று இழிவு படுத்த முடியாது. ஏனெனில் சோழப்பெண்கள் அரசிகளாகப் பிற நாடுகளுக்குப் போனார்களே அன்றி வேறெவ்வகையிலும் (அதாவது தாசிகளாக, அடிமைகளாக ) வேறு மன்னர்களின் அந்தப்புரங்களை நிரப்பியதாக வரலாறு இல்லை. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் முடிக்குரிய இளவரசர்களாகவே பிறந்ததுடன் அக்காலத்துப் பிதாவாழிச் சமூக அமைப்பையே அசைக்குமளவு சோழ ராஜவம்சத்தின் ரத்தத்துக்கு, அது பெண்வழி ரத்தமாயினும் கூட, வெளிநாடுகளில் மரியாதை இருந்திருக்கிறது. வேணாட்டுச் சோழர், தெலுங்குச் சோழர், சோழகங்கர் என்று ராஜவம்சங்களின் பெயர்களையே சோழர்களின் பெண்வழி இரத்தம் மாற்றியிருக்கிறது. அதேபோல இராஜவம்ச வழக்கங்களுக்கு மாறாக சோழ நாட்டு இளவரசிக்குப் பிறந்தவனை ‘உபய குலத்தவன்’ (அதாவது இரண்டு குலத்தவன்: தந்தை வழி மட்டுமில்லை, தாய்வழியும் கூட ) என்று சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. எனவே சோழர்கள் திருமணம் என்ற சமூக நிறுவனத்தைத் தமது ராஜதந்திரத்திற்குப் பாவித்திருக்கிறார்களே அன்றிப் பெண்களை இழிவான முறையில் பாவித்துத் தமது நோக்கங்களை அடையவில்லை (அப்படிச் செய்த அரசர்கள் வேறு வம்சங்களில் உண்டு. அறிவார் அறிவர்).

[ மூன்றாம் குலோத்துங்கனுக்குப்பிறகு அவன் மகனும் மகா கோழையுமான மூன்றாம் இராஜராஜன் அரசனாக (சக்கரவர்த்தியாக அல்ல) சோழநாட்டை ஆண்டான். அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் திறமையுடைய மன்னனாக இருந்தும் பாண்டியர்களின் எழுச்சியை நிறுத்த முடியவில்லை. இறுதியில், 1279 AD யில் சோழ நாடு உலகப்படத்தில் இருந்து அழிந்தது (‘ஆயிரத்தில் ஒருவன் ‘ படத்தில் காட்டியிருக்கிறார்கள் ). அவர்களை வென்று மேலோங்கிய பாண்டியர்கள் அதன்பின் அறுபது ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ கற்பனைப்படமாக இருந்தாலும் அதில் தினையளவு உண்மை இருக்கிறது. அதாவது, மூன்றாம் இராஜேந்திரன் 1279 இற்குப்பின் தனக்கு நெருக்கமானவர்களுடன் சீனாவுக்கு ஓடியதாகவும் அங்கே கோயில்கள் சிலவற்றைக்கட்டியதாகவும் கருத இடமிருக்கிறது. அதைப்பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.) ]

எனவே, மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரத்தில், போர்த்திறமையில் மட்டுமின்றி இராஜதந்திரத்திலும் மிகச் சிறந்தவனாக இருந்திருக்கிறான் என்பதும், அவன் இராஜதந்திரம் சோழப்பேரரசின் அழிவைப் பல தசாப்தங்கள் பின் போட்டிருக்கிறது என்பதும் வரலாற்று உண்மைகள்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *