செங்கை ஆழியான்

எழுத்தாளர்கள் வரிசை – 1

செங்கை ஆழியான்

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு மிக்க கனதியானதாகும். நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். தொழில் முறையில் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்து பலகாலம் உதவி அரசாங்க அதிபராகவும், சிலகாலம் யாழ் பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும் பதவி வகித்தார்.

ஈழத்து நாவல் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய இவர் பெருந்தொகையான நாவல்களை எழுதியுள்ளார். இவற்றில் சமூக நாவல்கள் மட்டுமன்றி வரலாற்று நாவல்களும் அடங்கும். சமூக நாவல்கள் வரிசையில் கிடுகுவேலி, நந்திக்கடல், ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, யானை, கொத்தியின் காதல், மழைக்காலம், நடந்தாய் வாழி வழுக்கியாறு, கங்கைக் கரை ஓரம் முதலியன அடங்கும். அதேபோல வரலாற்று நவீனங்களாக சித்திரா பௌர்ணமி, கந்தவேள் கோட்டம், கடல் கோட்டை, மழைக்காலம், குவேனி முதலியவற்றை எழுதியுள்ளார். சிறுவர் புதினங்களாக பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் என்பவரையும், வரலாற்று ஆய்வுகளாக யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், 24 மணிநேரம், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், ஈழத்தவர் வரலாறு, ஈழத்துச் சிறுகதை வரலாறு என்பவற்றையும் எழுய்தியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகப் புவியியல் பட்டதாரியான இவர் அடிப்படைப் புவியியல்: உலகம்-இலங்கை, இலங்கைப் புவியியல் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றைத்தவிர, யுத்தகாலத்தில் நிலவிய அச்சுத்தாள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மாணவர்கள் நலன் கருதிப் புவியியல், வரலாறு, விண்ணியல், பொது அறிவு முதலிய துறைகளில் கணக்கற்ற கைநூல்களை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கிடைக்கக்கூடிய மாட்டுத்தாள், மணிலாத்தாள், கோடிட்ட நிறக்காகிதங்கள் முதலியவற்றில் எல்லாம் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இணையம் முதலிய வசதிகள் இல்லாத அக்கால கட்டத்தில் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு இச்சிறு நூல்கள் பெரும் பங்காற்றியுள்ளன. இந்த நூல்களை மட்டுமல்ல நூல்களின் பெயர்ப்பட்டியல்களைக் கூட நாம் இன்று பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை துரதிஷ்டமே. அசுர வேகத்தில் எழுத்து முயற்சிகளைச் செய்து குவிக்கும் ஆற்றல் இவரின் தனிச்சிறப்பு. அதற்குத் தேவையான மனோவலிமையும் உற்சாகமும் இவருக்கு இருந்தன. உதவி அரசாங்க அதிபராகப் பொறுப்பு மிகுந்த பணியாற்றிய இவர் இரவில் நீண்டநேரம் விழித்திருந்து எழுதும் வழக்கம் உடையவராக இருந்ததாகத் தெரிகிறது. அதேவேளை, அவசரமாக எழுத்துவதாலோ என்னவோ, இப்படியான நூல்களில் பொருட்பிழைகள், தவறான செய்திகள் இருக்கக்கூடாது என்பதை இவர் அவ்வளவு நுணுக்கமாகக் கவனித்ததாகத் தெரியவில்லை. (இந்தக் கருத்தை அவரது முகத்துக்கு நேரேயே சொல்லியிருக்கிறேன்; அவரும் அதை மறுக்கவில்லை. )

அவர் எழுதிய நாவல்களில் பல சமூக நாவல்களாக இருந்தாலும் அவரது வரலாற்று நாவல்கள் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியன. இதற்கு இரண்டு காரணங்கள். (1) அவரது வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் இலங்கையைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டவை. இப்படியான வரலாற்று நாவல்கள் தமிழில் அரிதினும் அரிது. (2) இலங்கை எழுத்தாளர்களில் துணிந்து வரலாற்று நாவல்களைத் தொட்ட மிகச்சிலரில் இவர் ஒருவர். சமூக நாவல்களை வேறு பலர் எழுதியுள்ளனர். ஆனால் இவர் அளவுக்கு வரலாற்று நவீனங்களை வேறு ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் எழுதியதாக இல்லை.

யாழ் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நிறுவிய இவர் பலகாலம் அதன் முக்கிய பதவிகளை வகித்து நடத்திச் சென்றுள்ளார். இவரது நூல்கள் பல யாழ் இலக்கிய வட்டத்தினாலும், இவர் நடத்திய கமலம் பதிப்பகத்தாலும் வெளியிடப் பட்டுள்ளன.

தமது பிற்காலத்தில் ஈழத்து எழுத்த்தாளர்களின் இலக்கிய முயற்சிகளைத் தொகுத்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டு செயற்பட்ட இவர் மல்லிகைச் சிறுகதைகள் – 1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர் ஆவார்.

ஈழத்துச் சிறுகதை, நாவல் எழுத்தாளர்கள் மத்தியில் பொதுமக்களால் மிக அதிகம் அறியப்பட்ட எழுத்தாளர் என்று செங்கை ஆழியானைக் கூறினால் மிகையாகாது. மிக அதிகமான நூல்களை வெளியிட்ட எழுத்தாளரும் இவராகத் தான் இருக்கமுடியும் (இது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்). இக்காரணங்களாலும், ஏனைய எழுத்தாளர்களின் நூல்களைத் தொகுப்பதற்கு இவர் ஆற்றிய தொண்டினாலும், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிற்பட்ட ஈழத்து எழுத்தாளர்கள் பட்டியலில் முதலாவதாக இவர் பெயரையே கூற முடியும்.

ஸ்ரீ லங்கா அரசினால் வாழ்நாள் இலக்கிய சேவைக்குரிய அதி உயர் விருதான ‘சாஹித்ய ரத்னா’ பட்டம் வழங்கிக் கெரவிக்கப்பட்ட செங்கை ஆழியான் யாழ் பல்கலைக்கழகத்தினால் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கப் பெற்றவர். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.