வெற்றி கொண்ட தாய்

சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று
சொன்ன சொல் காலையிற் கேட்டேன்
சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார்
செவியெலாம் இனித்தது அம்மா
பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும்
பாங்குற மிளிரும் நின் கோலம்
கண்டிடத் துடித்தன கண்கள்; நான் வருவேன்
காற்றினில் ஏறி, என் தாயே.

பன்னிரு வருடம் அலைந்தனை அம்மா
பாடுகள் யாவையும் பட்டாய்
சின்னதோர் கிடுக்குக் கொட்டிலில் இருந்தாய்
சிறியவர் பொறாமையில் வெந்தாய்
சன்னதம் கொள்ளும் புயல் மழை இருளில்
சன்னமாய் மினுங்கும் ஓர் விளக்காய்
வெம்பெரும் போரின் அடி பல வீழ்ந்தும்
கல்வியின் ஒளியினைக் காத்தாய்

அடி உதை பட்டும், உதைபந்து அடித்தும்
அதிபரின் அறிவுரை கேட்டும்
படி பல தாண்டிப் போட்டிகள் வென்றும்
பதக்கங்கள் ஏச்சுகள் பெற்றும்
கடியதோர் சோதனை எழுதியும், முடிவு
கண்டபின் மகிழ்ந்தும், நாம் உந்தன்
மடியினில் வளர்ந்து மனிதர்கள் ஆனோம்
மாண்புறு தெல்லியூர் வராமல்.

வாசலில் ஓங்கி வளர்கிற மரங்கள்
மைந்தனை அறியுமா? அங்கே
வாசனை வீசும் நாகலிங்கப் பூ
வருவதார் என்று கேட்டிடுமா ?
பாவியின் கால்கள் புண்ணிய மண்ணில்
பதிந்திடும் போது, அது பார்த்து
யாரடா மகனே, கண்டதே இல்லை,
நவிலுக உன் பெயர் எனுமோ ?

துளைகிற காற்றில் அன்னையின் துவஜம்
துலங்கியே பறப்பது கண்டோம்
உலகினில் மைந்தர் எங்கு சென்றாலும்
உந்தன் வெல்கொடியினைக் காப்போம்
தலை நிமிர்ந்து எம்மை வாழ வைத்தவளே,
தருமமே, இறுதியில் வென்றாய்.
விலை பல கொடுத்தும் கல்வியைக் காத்தாய்.
வென்றனை, வென்றனை அம்மா!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இடப்பெயர்வின் பின் சொந்தவூர் அடைந்த போது எழுதியது

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.