விடியும் வரை கனவுகள்

எழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை

அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல்

எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து
இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர்
தம்மை, நம் தமிழ்த் தாய்க்கு அருந்தவப் புதல்வன்
இவன் எனல் வழக்கு; எனில் இந்த
அம்பியோ ‘அறிவி லாதவன்’; உலகில்
ஆதியாம் தமிழ் மகளுக்குத்
தம்பி எனத் தகையோன்; அவன் பாதம்
தலை மிசை வைத்தனன் யானே.

அவை அடக்கம்

செந்தமிழில் மூழ்கித் திளைத்த கவிஞர் பலர்
தம் கவிதை தந்தார்கள்; அன்னவரின், மாரிஎனக்
கொட்டும் தமிழில் குளிர்ந்தாடி நாம் மகிழ
எட்டுப் பிறவிகளில் என்ன தவம் செய்தோமோ?
சொட்ட நனைந்து சுகித்திருக்கும் உங்களுக்கு
நட்ட நடுவிலே நான் வந்து நிற்கின்றேன்
பாடும் வகை அறியேன்! பாவலனாய் நின்றறியேன்!
நாடும் பொருட்சுவையும் சொற்சுவையும் நானறியேன்
ஏதோ வரிகள் சில எழுதிக் கொணர்ந்தவற்றைக்
காதோடு சொல்லுகிறேன்! கவனித்து ஏற்று அருள்க!

கருப்பொருள்

கவிதை எழுதக் கருப்பொருளைத் தேடுகையில்
அவலமுறும் எம் மக்கள் அழுகுரலே நெஞ்சில் வரும்!
வாழுகின்ற நாடு வளம் மிகுந்த நாடு எனினும்
தாழுகின்ற நாடான தாய் நாட்டை நான் நினைந்தேன்.
எங்கள் திரு நாட்டில் ஒரு சில வருடம் முன்பு,
எப்போதும் போல ஒரு நாள் கழிந்த பின்பு,
செங்கதிரும் கடல் மடியில் சென்று தலை மூழ்கச்
சிற்றடிகள் வைத்து மிக மெல்ல வரும் இரவு.

திக்குகள் நடுங்க வரும் செயற்கை இடி முழக்கம்
சிறிய இடை வெளி கொடுக்க எங்கள் இனம் தூங்கும்
சொக்கி வரும் நித்திரைச் சுகத்தினில் மகிழ்ந்து
சொப்பனங்கள் காணுகிறார் எம் இளைஞர் நால்வர்

ஒருவன் கல்வி விழிகிற மாணவன்
ஒருவன் புதிதாய்க் காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் வெளிநாடு செல்ல அலைபவன்
ஒருவன் இலட்சியக் குன்றிலே நின்றவன்

மாணவன் கனவு:

கொட்டில் தோறும் ஓட வேணும்
கொழுத்த டியூஷன் எடுக்க வேணும்
எட்டி சிலபஸ் முடிக்க வேணும்
எல்லா செக்சன் உம் படிக்க வேணும்

படிக்க வேணும்…. படிக்க வேணும்…

படிச்சு ‘போர் ஏ’ எடுக்க வேணும்
பல்கலைக் கழகம் போக வேணும்
எடுக்க வேணும் ‘பெஸ்ட் ஷை’ தன்னில்
எனக்கு ‘சுப்ப மெரிட்’ உம் வேணும்

மெரிட் உம் வேணும்……மெரிட் உம் வேணும்

மெடிக்கல் ஸ்டுடென்ட் ஆய் ஆக வேணும்
வெள்ளை சட்டை போட வேணும்
குடுக்க வேணும் ராக்கிங் நானும்
கொழும்பு முழுக்க அளக்க வேணும்

அளக்க வேணும்……அளக்க வேணும்

ஊரார் எல்லாம் மதிக்க வேணும்
ஒழுங்கையில் உமாவும் பார்க்க வேணும்
பேரும் புகழும் சேர வேணும்
பெரிய்ய்ய டாக்டர் ஆக வேணும்

ஆக வேணும்….ஆக வேணும்

வெளி நாடு செல்லும் இளைஞன் கனவு

சந்நிதியனுக்கு அப்பர் தேங்காய் உடைச்சிருப்பர்
இந்த முறை என்றாலும் சரியாய் வர வேணும்
தங்கை கலியாணம் தள்ளிப் போட ஏலாது
அங்காலை சின்னவளும் அடுத்து வளர்ந்திடுவாள்
பத்து லட்சம் கட்டிப் படுபாவி ஏஜெண்டு
நட்ட நடுக் கடலில் நமை இறக்கி விட்டானே
அடுத்த முறை, நானும் அமெரிக்கா செல்வதற்கு
நடுக்கும் பனிக் குளிரில் நாள்கள் பல நடந்து,
கொண்டயினர் உள்ளே குளிரில் விறைத்து,பொலிஸ்
கண்டதனால் ஆப்பிட்டு, கடுஞ்சிறையில் வாடி, அவன்
டிப்போட் செய வந்து சேர்ந்தேன். விதி எனக்கு
எப்படியோ இந்த முறை? ஏதும் சரி வருமோ?
லண்டன் போய்ச் சேர்ந்து விட்டால் நாசமாய்ப் போவான் ஏஜெண்டு
அள்ளி விழுங்கிய காசு அவளவும் உழைத்த பின்னர்
தங்கையின் காரியத்தை தப்பில்லாமல் முடித்து
எங்களின்டை வீட்டையும் இடிச்சுக் கட்டிட வேணும்.
பிறகென்ன நானும் ஒரு ‘பென்ஸ்’ காரையும் எடுத்தால்
குறை இன்றி லண்டனிலை குபேரன் போல் வாழ்ந்திடலாம்.

காதலன் கனவு

கடுங்குளிர் நிலவும் ஓர் பொழுதினில் தனிமையில்
கண்கள் கலந்ததுண்டு
தனியொரு மரநிழல் அருகு புல்வெளியினில்
ஒருநாள் அமர்ந்ததுண்டு
அருவியின் கரையினில் ஆதவன் மறைகையில்
ஒருநாள் நடந்ததுண்டு
அமுதமே பொழிகிற விழிகளின் நிலவினில்
ஒருநாள் நனைந்ததுண்டு

இதயங்கள் மொழிந்ததை இதழ்கொண்டு பேசிட
ஏன்தான் தாமதமோ?
இதம்போல வலியொன்றும் வலிபோல இதம் ஒன்றும்,
இனிமையே, தந்ததேனோ?
இறுக்கித் தாழ்ப்பாழிட்ட இதயத்தின் கதவினை
இடித்து உள் நுழைந்து விட்டு
எட்ட ஓர் முறை நின்றும் கிட்ட ஓர் முறை வந்தும்
ஏளனம் செய்வதேனோ?

கடலிலும் நிலவிலும் கனவிலும் நினைவிலும்
காண்பதுன் முகம் தானடி
தனிமையின் இனிமையில் நனைகையில் வரும் தமிழ்க்
கவிதையும் நீதானடி
கணக்கிட்டு மதிப்பிட்டுப் பார்த்தது போதும், உன்
மெளனம் கலைத்து விடு.
கனியிதழ் மொழிந்திட வார்த்தைகள் இல்லையேல்
கண்களைப் பேசவிடு.

நாலாமவன் கனவு

……………………………………………

இந்தக்கனவு நான் எழுதிய நாளிலே,
இருந்த கனவு; இன்று எரிந்து நீறானது.
எரிந்த கனவை நினைவினில் மீட்டியே
எழுத முயன்று, என் பேனா அழுகுது.

முடிவு

கனவுகள் யாரும் கண்டிட முடியும். கண்டவை நனவென ஆகக்
கன இருள் நீங்கி விடிந்திட வேண்டும். காலமும் கனிந்திட வேண்டும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *