நதியே நதியே

மாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம்.
மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள
சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே
தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன்

சிற்றலைகள் ஓடுகிற ஆற்று நீரில்
செவ்வந்திச் சூரியனின் முகத்தைப் பார்த்தேன்
புற்தரையில் சிறுதாரா நடந்து போகும்
புதர் புதராய் ரோஜாக்கள் பூத்து நிற்கும்
தத்தி வரும் அலைகளிலே தவழ்ந்து வீசும்
காற்றின் இதம் தானென்ன? கரையின் மீது
எத்திசையும் மின்விளக்கு வெளிச்சம். இங்கே
இயற்கையொடு செயற்கையும் சேர் இதம்தான் என்ன?

படகுகளில் வலம்செய்து மகிழ்கின்றாரும்
பாதைகளில் நடப்பாரும், ஓடுவாரும்
மரநிழலில் சாய்ந்திருந்து கதைகள் பேசி
மகிழ்வாரும், ‘பார்பகியூ’ வைக்கின்றாரும்
நடைபயிலும் அன்னத்தின் பின்னால் ஓடும்
மழலைகளும், நண்பர்களோடு உலாவுவாரும்
மடைதிறந்து குதித்தோடும் ‘ரொரன்ஸ்’ பேர் கொண்ட
மடநல்லாள் அணைப்பினிலே மகிழ்கின்றாரே.

சலசலத்தும், மின்விளக்கு வெளிச்சம் தன்னில்
தகதகத்து மின்னியும், மென்காற்றை வீசிக்
கலகலத்து நகைத்தும், பூம்படுக்கை நட்ட
கரைகளுக்கு நடுவில், ‘ரொரன்ஸ்’ என்னும் ஆறு
அலைசிலுப்பிப் புன்னகைத்து நெளிந்து செல்லும்
அழகிதனைக் காணுகையில், இலங்கை நாட்டில்
மலைகளுக்கு நடுவில் முன்னொரு நாள் கண்ட
‘மகாவலி’ என்றொரு நங்கை மனதில் வந்தாள்.

கரைகளிலே மின்விளக்கு வெளிச்சம் இல்லை.
கரு நாணல் புதர்களுக்கு நடுவே, சீறி
நுரையடித்துப் பெருகுகிற ஆறு! பாறை
நூறு கருமுகம் நீட்டி நிற்கும், நீரில்.

செம்மண்ணின் நிறத்தினிலே கலங்கல் தண்ணீர்
சீறிவரும். கரையெல்லாம் சேறு, சேறு!
மண்டி நிற்கும் புதர்கள் கரையெங்கும். வானில்
மழைமேகம் சூரியனை மறைத்துச் செல்லும்.

கரையினில் ஓர் மாமரத்தின் உச்சிக் கொம்பில்
தனித்திருந்த கிளி ஒன்று, தலையைச் சாய்த்து,
மரகதம் போல் இறகுகளைக் கோதிக்கொள்ளும்;
மகாவலியும் இரைச்சலுடன் சுழன்று போகும்

இருந்தாலும், ஆற்றினில் ஓர் மடுவில், ஆட்கள்
இறங்கி நின்று குளித்தார்கள். துணிகள் தோய்த்தார்
குடங்களிலே நீர் மொண்டு பெண்கள் சென்றார்
குடிப்பதற்கும் சமயத்தில் உதவும் என்றார்

மறுபடியும் நனவிற்கு வந்து, முன்னால்
மகிழ்ச்சியுடன் ஓடுகிற ‘ரொரன்ஸ்’ ஐப்பார்த்தேன்
கருமை நிற எண்ணையொடு பொலித்தீன் பைகள்
தண்ணீரில் மிதந்து கொண்டு செல்லல் கண்டேன்

ஆசையுடன் தண்ணீரில் காலை வைத்த
மழலை ஒன்றைத் தாய் இழுத்துச் செல்லல் கண்டேன்
‘மாசடைந்த ஆற்றினிலே நீந்தல் வேண்டாம்!’
மரப்பலகை அறிவித்தல் கரையில் கண்டேன்

சிலுசிலுத்துப் பாய்கின்ற ‘ரொரன்ஸ்’ ஆம் ஆற்றில்
செத்துவரும் மீன்களினைக் கண்கள் காணும்
மலை அடுத்த மகாவலியின் கரையில், ஓர்நாள்
மாமரத்தில் இருந்த கிளி மனதில் நிற்கும்.

(கலப்பை இதழில் வெளியானது. Torrens: Australiaவின் Adelaide நகரத்திலுள்ள ஒரு நதி)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *