இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம் – போர்
என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே.
மனிதரை மனிதர்களே – கொன்று
மடிவதுவும், பெண்கள் கதறுவதும்
துணி பட உடல் சரியச் – செங்
குருதி ஓர் ஆறென ஓடுவதும்
இனி எமதுலகில் இல்லை – எங்கும்
இன்பமே பொங்குக என்றிசைப்போம்

மலைகளின் நடுவினிலே – கதிர்
மறைகையிலே, முழு மதியும் வரக்
குலவிடும் தென்றலிலே – உளம்
குளிர்ந்திட வரும் ஒரு நிறைவு! அதை
விலைசொல்லி வாங்கலாமோ? – புவி
மீதினில் துன்பத்தை விதைத்தவர் நாம்.
கொலைவெறி ஒழித்துவிடின் – இங்கு
கொட்டிக் கிடந்திடும் இன்பமடா

இனியொரு விதி செய்வோம் – இங்கு
ஏழையென்று ஒருவரும் இல்லை என்றே.
மனிதர்கள் ஓர் ஜாதி. இதில்
மாட்சிமை பேசுதல் மடமை அன்றோ!
துணிவு கொண்டு எழுந்து விட்டால் – மிகத்
தொலைவுள்ள வானையும் தொட்டிடலாம்
மனிதர்கள் ஒன்று பட்டால் – இந்தப்
பூமியில் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம்

அச்சத்தை ஒழித்திடலாம் – பெரும்
அகங்காரப் பேயினைக் கொன்றிடலாம்
மெத்திய வஞ்சகத்தை – அடி
வேரறத் தொலைத்து நாம் விரட்டிடலாம்
புத்தியின் வலிமையினால் – இந்தப்
பூமியை வான் எனப் புரிந்திடலாம்
இச்செயல் செய்து விட்டால் – கலி
இடிபட்ட சுவரென வீழ்ந்திடுமே

1997 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக் கவியரங்கில் வாசிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் சில மாற்றங்களுடன் மீள எழுதியது

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.