தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா?

தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா?

யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை, வரத்துப் பளை, தும்பளை இப்படி. இவற்றில் தெல்லிப்பழையும் வற்றாப்பளையும் பிரசித்தமானவை. தெல்லிப்பழை, துர்க்கை அம்மன் ஆலயம், யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி முதலிய நிறுவனங்களாலும், அவ்வூரில் அமைந்துள்ள முக்கியமான வீதிச்சந்திப்பினாலும், பலாலி விமான நிலையத்துக்கும் காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கும் போகும் பாதையில் அமைந்த பிரதான சந்தி என்பதாலும், சான்றோர் பலரைத் தந்த ஊர் என்பதாலும் யாழ்ப்பாணத்துக்கோர் திலகமாய் விளங்குவது. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலும் பிரசித்தம்.

இக்காலத்தில் பளை, புலோப்பளை, வற்றாப்பளை முதலிய இடங்களுக்குக் கொம்பளவு தான் பாவிக்கிறார்கள். தெல்லிப்பழையைப்பொறுத்தவரை அவ்வூரிற் பிறந்த சான்றோர் நானறிந்தவரை தெல்லிப்பழை என்றே எழுதி வருகிறார்கள். துர்க்கை அம்மன் ஆலயம், யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி முதலிய நிறுவனங்களும் அவ்வாறே பயன்படுத்துகின்றன. இருந்தாலும், இப்பெயர்கள் எல்லாவற்றுக்கும் அடி ஒன்றாகவே இருக்கவேண்டும். எனவே, தெல்லிப்பழையா? அல்லது தெல்லிப்பளையா? என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

பழை அல்லது பளை என்ற சொல்லுக்கு அடி என்ன?பழை என்பது பழனம் என்ற சொல்லில் இருந்து வருவது. பழனம் என்றால் வயல். எனவே பழை என்றால் வயலுக்குள் அமைந்த குளம், நீர்நிலை, வயலுக்கு நீர்வழங்கும் வாவி என்று பொருள்படும்.

“கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் 

பழன வாளை கதூஉம்” (குறுந்தொகை, 8: 1-2)”

வயலுக்குள் நிற்கின்ற மாமரத்தில் பழுத்த பழத்தை வயற் குளத்தில் வாழும் வாளை மீன் கௌவுகின்ற…” என்று பொருள்படும்.

“பைந்நிறப் பழனம் பசியிலாது அளிக்க மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு” – பாரதியார். 

“பழையன்” என்ற பெயர் சங்க இலக்கியத்தில் சாதாரணம். இது பொதுவாகக் குறுநிலத் தலைவர்கள், தளபதிகள் முதலியோருக்கு இருந்திருக்கிறது. உதாரணமாகச் சங்ககால சோழத் தளபதி ஒருவனுக்குப் பெயர் பழையன். இவன் கணைக்கால் இரும்பொறையை வென்றவன்.

“வெங்கோல் மாரி அம்பின், வல்வில் பழையன்..” ( அகநானூறு, 346: 19).

ஒரு மனிதனுக்குப் பழைமையானவன் என்று யாராவது பிறக்கும்போது பெயர் வைப்பார்களா? பழையன் என்றால் வயலுக்கு, வயலுக்கு நீர் வழங்கும் நீர்நிலைக்கு உரியவன். வேளாளத் தலைவன்.

அல்லிப்பழை என்றால் அல்லிகள் நிறைந்த நீர்நிலை. வற்றாப் பழை என்றால் வற்றாத நீர்நிலை. தவிரவும், வற்றாப் பழைக்கு அருகில் உள்ள தண்ணீரூற்றில் வற்றாத நீர்நிலை, நீரூற்று இருப்பதை இன்றைக்கும் காணலாம். நான் போய்ப் பார்த்திருக்கிறேன். எனவே பெயர்க்காரணம் வெளிப்படையாகவே தெரிகிறது. வரத்துப் பழை என்றால் வேறு இடத்தில் இருந்து நீர் வரத்து அமையப்பெற்று நீர் நிறையும் இரண்டாம் பட்ச நீர்நிலை. தவிரவும், வரத்துப் பழை கரவெட்டிக் கிராமத்தின்கண் அமைந்த தும்பழை (தும்பளை) யில் உள்ளது. எனவே இவ்வூர்ப்பெயர்கள் எல்லாம் “நீர்நிலை” என்ற கருத்தில் அமைந்த “பழை” என்ற அடியில் இருந்தே வந்தன என்பது வெளிப்படை. 

தவிரவும், தெல்லிப்பழைக் கிராமத்தின் ஆதிப்பெயர் “தெல்லிப்பழை” என்றே அமைந்திருந்தது (தெல்லிப்பளை அல்ல) என்பதற்கு யாழ்ப்பாணத்தில் எழுந்த மிகப்பழைய இலக்கியங்களிலே சான்றுகள் உள. உதாரணமாக:

“வாவிநகர் வேளாளன் செண்பக மாப்பாணனையும், அவன் ஞாதியாகிய சந்திரசேகர மாப்பாணனையும், கனகராயன் எனும் செட்டியையும் தெல்லிப்பழையில் இருத்தினான்” – யாழ்ப்பாண வைபவ மாலை.

“செண்பக மாப்பாணனையும் …மாப்பாண பூபனையும் …கனகராயனையும்..தெல்லிப்பழையிற் திகழ வைத்து” (கைலாயமாலை, 165-170)”

வாவி மேவிடு தெல்லிப்பழை” (தண்டிகைக் கனகராயன் பள்ளு, 51)

என்பவற்றைக்கூறலாம்.(இவற்றில் முதலிரு மூலங்களில் கூறப்பட்ட குடியேற்ற காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி அதாவது கலிங்கமாகன் படையெடுப்புக்குச் சற்றுப் பிற்பட்ட காலமாகும். இவர்களில் செண்பக மாப்பாணன் முதலியோர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்தவர்கள் எனவும் கனகராயன் செட்டி காரைக்காட்டு நகரத்தவர் எனவும் குமாரசாமிப்பிள்ளை முதலிய அறிஞர்கள் கூறுவர்.) 

எனவே, தெல்லிப்பளை அல்ல, தெல்லிப்பழை என்றே எழுதவேண்டும். ஒரே பெயரடியில் இருந்து வருவதால் மற்றைய ஊர்களையும் பழை, வற்றாப் பழை, வரத்துப் பழை, அல்லிப் பழை, புலோப் பழை, தும்பழை என்றிவ்வாறு எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

சரி, “தெல்லிப்பழை” என்ற சொல்லிலே “தெல்லி” என்பதன் பொருள் என்ன? இதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் இருக்கலாம். “தெல்லுக் காரர்” என்றால் பல்லக்குச் சுமப்பவர்கள் என்று பொருள். “தெல்லு” என்பது அவர்கள் ஆறியிருந்து செல்ல அமைந்த சத்திரம் – வழித்தங்கும் இடம். அப்படியான இடத்திலே அவர்களின் தேவைக்காக நீர்நிலையும் இருக்கும். இன்றும் தெல்லிப்பழைப் பெருங்கிராமத்தில் அமைந்த புன்னாலைக்கட்டுவன் முதலிய ஊர்களில் “தெல்லுக்குத் தெல்லு” என்ற சொற்றொடர் வழக்கில் உண்டு. இதை “இடத்துக்கு இடம், அடிக்கடி, ஒவ்வொரு இடத்தில்” என்ற அர்த்தத்தில் பாவிக்கிறார்கள். எனவே, பல்லக்கு அல்லது சுமை காவுபவர்கள் கைமாற்றிக்கொள்ளும் இடம் தெல்லு எனலாம்.தெல்லிப்பழை என்பது முக்கியமான வீதிச்சந்திப்பாக ஆதிகாலத்தில் இருந்து விளங்கியதால், அங்கே பல்லக்குக் காவுபவர்களின் வசதிக்காக ஆறும் இடமும் நீர்நிலையும் அமைந்திருக்கலாம். எனவே அது தெல்லுப்பழை / தெல்லிப்பழை என்றாயிற்று. தவிரவும், பல்லக்குச் சுமப்பவர்கள் சிலர் தெல்லிப்பழையில் வீதிச் சந்திப்புக்கு அருகில் குடியேறி வாழ்ந்ததாக வையாபாடல் (44) சுட்டுகிறது.

.தெல்லி என்ற சொல்லுக்கு வரம்பு, அல்லது வரம்பினால் சூழப்பட்ட சிறிய வயல், பாத்தி என்றும் பொருள் உண்டு. “தெல்லுக் கட்டுதல்” என்ற யாழ்ப்பாணத்துத் தொடருக்கு வரம்பு கட்டுதல், பாத்தி கட்டுதல் என்று பொருள்.எனவே வரம்பு கட்டப்பட்ட வயல்களை அமைந்த ஊர் என்றும் “தெல்லிப்பழை” பொருள்படும்.

எவ்வாறானாலும், தெல்லிப்பழை “பழைய” ஊர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர், முக்கியமான வீதிச் சந்திப்புக்கள் அமைந்த ஊர், விவசாய வளம்பெற்ற ஊர், யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றிருந்த ஊர் என்பதையெல்லாம் இப்பெயர் ஆராய்ச்சியில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

— கலாநிதி. இ. பாலசுந்தரம் எழுதிய “இடப்பெயர் ஆய்வு: காங்கேசன் கல்வி வட்டாரம்” (1988) என்ற நூலில் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன —

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.