கலிங்க மாகன் யார்? — ஒரு மீள்பார்வை

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு ஒரு காட்டுத்தீ போன்றவனும், கொடுங்கோல் அரசில் இன்புறுகின்றவனுமாகிய ஒருவன் வந்து இறங்கினான்.” – சூளவம்சம்

லிங்க மாகன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான, அதேநேரம் மிக மர்மமான பாத்திரம். அவனது பெயரைப் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருப்பார்கள். அதேநேரம் அவன் யாரென்று முழுதாக அறிவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது. யாழ்ப்பாணத்தமிழர்கள் தமது உண்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கலிங்க மாகன் யார் என்ற புதிரை அவிழ்ப்பது மிகவும் முக்கியம்.

கலிங்க மாகனைப்பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியிருந்தேன். அந்த நேரத்தில் பல ஐயப்பாடுகளையும், வினாக்களையும் எழுப்பியிருந்தேன். அதற்குப் பிற்பட்ட காலத்தில் செய்த வாசிப்புகள் மூலம் பல விடயங்களை உய்த்தறியவும் தெளியவும் முடிந்தது. அதன் அடிப்படையிலான மீள்பார்வை இது.

[ இங்கே நிறைய விடயங்களைச் சொல்கிறேன். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டு. அவ்வாதாரங்களை இங்கே வரிசைப்படுத்தினால் இப்பதிவு மிகமிக நீண்டுவிடும். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொண்டால் ஆதாரங்கள், மூலங்களைத் தெளிவு படுத்துகிறேன். ]

– கலிங்க மாகன், கலிங்க மா கோன், விஜய காலிங்கன், கூழங்கைச் சக்கரவர்த்தி, கூழங்கைச் சிங்கையாரியன், சோழகங்க தேவன், குளக்கோட்டன் என்பவை ஒரே அரசனைக் குறிப்பதற்கு வெவ்வேறு மூலங்கள் பாவிக்கின்ற பெயர்களாகும். இவற்றில் பெரும்பாலானவை காரணப்பெயர்கள். பெயர்க்காரணங்கள் கீழே வாசிக்கும்போது புரியும்.

– கலிங்க மாகன் சோழகங்க (அல்லது சோடகங்க in Odiya ) வம்சத்தில் தோன்றிய அரசனாவான். சோழகங்க வம்சமானது, வட கிழக்கு இந்தியாவின் கங்க வம்சத்தைச் சேர்ந்த அரசன் இராஜராஜ தேவேந்திர வர்மனை, சோழப் பேரரசன் வீர ராஜேந்திர சோழனின் மகள் ராஜசுந்தரி (அநேகமாப கிபி 1060களில்) மணந்ததால் உருவான வம்சமாகும். அநேகமாக இந்தத் திருமணம் நடந்தபோது கங்க வம்சத்தின் ஆட்சிக்குப்பட்ட பகுதிகள் (வட கலிங்கம், அதாவது ஒடியா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பகுதிகள்) சோழப் பேரரசின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தன. படையெடுப்பால் கைப்பற்றப்பட்ட இடங்களின் ஆதிக்கத்தைத் திருமண உறவுகளின் மூலம் பலப்படுத்திக் கொள்வது சோழர்களின் வழக்கம். அவ்வகையில், அநேகமாக இராஜராஜ தேவேந்திர வர்மனை தங்கள் ஆளுகை வட்டத்திற்குள் வைத்திருப்பதற்காக சோழர்கள் பாவித்த ஒரு உபாயமாக இந்தத் திருமணம் இருந்திருக்கலாம். திருமணத்தின் பின்னர் வம்சத்தின் பெயர் மாற்றப்பட்டு “சோழகங்க வம்சம்” என்ற பெயர் பாவிக்கப்பட்டதும் இதை உறுதி செய்கிறது. சாதாரணமாக அரசர்கள் வேறு அரசகுமாரிகளையே மணப்பது வழக்கமானாலும் பிறக்கும் பிள்ளைகள் தந்தையின் வம்சப்பெயராலேயே அறியப் படுவர். ஆனால், சோழர்கள் மேலாதிக்கம் பெற்றிருந்த இடங்களில் தங்கள் பெண்களைக் கொடுக்கும்போது பிறக்கும் அரச குமாரர்கள் பாதிச் சோழர்களாகவே இருப்பார்கள்.

– இராஜசுந்தரிக்குப் பிறந்த மகன் தான் கலிங்க அரசன் அனந்தவர்மன் சோட கங்க தேவன். இவன் ஆரம்பத்தில் சோழர்களுக்கு அடங்கியே இருந்தான். ஆனால், பிற்காலத்தில் இவன் இராமானுஜரின் போதனையால் வைஷ்ணவ மதத்தைத் தழுவினான். அதனாலோ, தனது தாய் மாமனான அதிராஜேந்திர சோழன் உயிரிழந்து அவனுக்குப் போட்டியான குலோத்துங்க சோழன் சோழ சிம்மாசனம் ஏறியதாலோ, இவன் பிற்காலத்தில் சோழர்களின் மேலாதிக்கத்திற்கு அடங்க மறுத்தான். முதலாம் குலோத்துங்க சோழன் கிபி 1110 இல் கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரும் படைகளைக் கலிங்கத்துக்கு அனுப்பி அனந்த வர்மனை வென்றான். இப்படையெடுப்பே பிரசித்தி பெற்ற கலிங்கத்துப் பரணி என்ற இலக்கியத்தின் தோற்றுவாய் ஆயிற்று. ஆனால் போரில் அனந்தவர்மன் தோற்று ஓடினானே தவிர இறக்கவில்லை. அவன் (அநேகமாக சோழர்களுடன் சமாதானம் செய்துகொண்டு) கிபி 1150 வரை கலிங்கத்தை ஆண்டிருக்கிறான்.

-இந்த அனந்தவர்மனின் வம்சத்தில் வந்தவனே கலிங்க மாகன். அநேகமாக இவன் அனந்தவர்மனின் பூட்டன் அல்லது பூட்டனின் மகன். அநேகமாக அனந்தவர்மனின் பூட்டனாக இருக்கக்கூடிய மூன்றாம் ராஜராஜன் கிபி 1198 இல் கலிங்கத்தின் சிம்மாசனம் ஏறியிருக்கிறான். முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் இருந்து 13ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சோழப்பேரரசு கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமடைந்து வந்தாலும் கன்னியாகுமரியில் இருந்து வங்காளம் வரை இந்தியாவின் கிழக்குக் கரையோரம் முழுவதும் அவர்களின் மேலாதிக்கம் இருந்தது. வட இந்தியாவிலோ முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வடமேற்கிலிருந்து நுழைந்த முஸ்லிம்கள் (துருக்க – மொங்கோலியர்கள்) மென்மேலும் பலமடைந்து வந்தார்கள். டெல்லியில் தங்கள் அரசைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு வங்காளத்தையும் கைப்பற்றித் தங்கள் அரசொன்றை அங்கே நிறுவிக் கொண்டார்கள். தாங்கள் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் கோயில்களை அழித்தும் விக்கிரகங்களை உடைத்தும் வந்தார்கள். இப்படியான ஒரு நிலையிலேயே மூன்றாம் ராஜராஜன் (சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜன் வேறு) கலிங்க சிம்மாசனம் ஏறியிருக்கிறான். இவன் சிம்மாசனம் ஏறியபோது சோழப்பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன். 

– மூன்றாம் இராஜராஜன் சிம்மாசனம் ஏறிய சிறிது காலத்துக்குள், அதாவது கிபி 1206 இல், வங்காள முஸ்லிம்கள் கியாசுத்தின் இவாஸ் கில்ஜியின் தலைமையில் கலிங்கம் மீது படையெடுத்து வந்திருக்கிறார்கள். அநேகமாக இவர்களிடம் மூன்றாம் ராஜராஜன் தோல்வி அடைந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் கலிங்கம் பெயரளவில் சோழர்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தாலும் சோழப்பேரரசு ஓரளவு பலவீனமான நிலையை அடைந்திருந்தது. சோழப்பேரரசிற்குப் பெயரளவில் திறை செலுத்தி வந்த தெலுங்குச் சோழர்களும், காகதீயர்களும், நெல்லூர்ச்சோழர்களும் காஞ்சிக்கு வடக்கே தங்களிஷ்டம் போல நடக்கத் தொடங்கி இருந்தார்கள். தெற்கே பொலநறுவையின் சிங்கள அரசர்களிடமிருந்து வந்த அபாயத்தைச் சமாளிப்பதிலும் பாண்டியர்கள் கிளர்ச்சி செய்யாமல் பார்த்துக் கொள்வதிலும் மூன்றாம் குலோத்துங்க சோழன் முனைந்திருந்தான். அவன் கலிங்கத்துக்கு உதவி செய்யும் நிலையில் இருக்கவில்லை.

– இந்தப் படையெடுப்புக்குச் சமீபத்திய காலத்தில், அதாவது கிபி 1206 அளவில், கலிங்க மாகன் கலிங்கத்தில் இருந்து தப்பி ஓடி சோழ சாம்ராஜ்யத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. அநேகமாக முஸ்லீம் படையெடுப்பில் இருந்து தப்பியோடி அடைக்கலம் தேடி அவன் வந்திருக்கலாம். கலிங்க மாகனுக்கும் மூன்றாம் இராஜராஜனுக்கும் உள்ள உறவு தெளிவாயில்லை. அவன் அநேகமாக மூன்றாம் ராஜராஜனின் மகனாக அல்லது சகோதரனாக இருக்கலாம். அல்லது மாகனும் மூன்றாம் ராஜராஜனும் ஒருவராகக் கூட இருக்கலாம். எவ்வாறாயினும் மாகன், சோழ கங்க வம்சத்தின் நேர்க்கிளையில் வந்த ஒரு அரசன்.

– ராஜசுந்தரி கலிங்கத்து அரசன் இராஜராஜ தேவேந்திர வர்மனை மணந்த பிறகும் சோழர்களுக்கும் சோழகங்கர்களுக்கும் இடையே திருமணத்தொடர்புகள் அநேகமாக இருந்திருக்கின்றன. இது சோழர்கள் வேறு நாடுகளை தங்கள் பிடியில் வைத்திருப்பதற்காகக் கையாண்ட ஒரு ராஜதந்திரம். அதாவது படைகொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டின் அரசவம்சத்தினன் ஒருவனை ஒரு பொம்மை அரசனாக நியமித்து சோழவம்சப் பெண் ஒருத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுத்து விடுவார்கள். அந்தப்பெண்ணுக்குப் பிறக்கும் மகனுக்கே அரசாட்சி உரிமை என்று ஒரு நிபந்தனையையும் போட்டு,தமது படைப்பலத்தால் அதை உறுதியப்படுத்தியும் கொள்வார்கள். பிறக்கும் இளவரசன் பாதிச் சோழனாக இருப்பதால், சோழர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவேண்டும் என்று நினைக்கமாட்டான். மேலும், அவனது தாயின் சகோதரன் சோழப்பேரரசனாக வருகின்ற போது, கங்கை கொண்ட சோழபுரத்தில் இவனுக்கு இளவரசி ஒருத்தி முறைப்பெண்ணாக (மச்சாளாக) இருப்பாள். இந்த மச்சாளை சோழர்கள் இவனது தலையில் கட்டி அவனை அரசனாக்குவார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை முக்கால்வாசி சோழனாக இருப்பான். அவனது மகனோ முக்காலே அரைவாசி சோழனாக இருப்பான். இதைச் சோழர்கள் வெற்றிகரமாக வேங்கியிலே செய்தார்கள். அநேகமாகக் கலிங்கத்திலும் இதைச் செய்திருப்பார்கள். இவ்வாறான ஒரு வம்சத்தில் வந்த கலிங்கமாகன் தூய ஆண்வழியில் கலிங்கன் ஆனாலும் இரத்தத்தாலும் விசுவாசத்தாலும் அநேகமாக முழுத் தமிழனாக இருந்திருப்பான். (தனியாக இலங்கை மூலங்களை மட்டும் வைத்துக்கொண்டு கலிங்க மாகன் வரலாற்றை ஆய்வு செய்பவர்களால் இதை ஒருநாளும் புரிந்துகொள்ள முடியாது). மேலும் அநேகமாக கலிங்க மாகன் சோழப்பேரரசன் மூன்றாம் குலோத்துங்கனின் மருமகன் அதாவது சகோதரி மகன் என்று தெரிகிறது. இவ்வாறான நெருக்கமான உறவாலேயே கலிங்க மாகன் முஸ்லீம் படையெடுப்புக்குத் தப்பி சோழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். அவன் வரும்போது, சைவ கோயில்கள் தனது நாட்டில் முஸ்லிம்களால் இடித்தழிக்கப்பட்டதைக் கண்டதாலும், அவர்களிடம் போரில் தோற்ற வலியாலும், கடுமையான மத அடிப்படை வாதமும், பழிவாங்கும் குணமும் உடைய ஒருவனாக வந்திருக்கிறான். 

– மாகன் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்து சிறிது நாட்களில் சோழர்களுக்கு உட்பட்டு மதுரையை ஆண்ட பாண்டிய அரசன் குலசேகர பாண்டியனும் அவனது சகோதரன் சுந்தர பாண்டியனும் சோழர்களுக்கு எதிராகப் புரட்சிக் கொடியை உயர்த்தினார்கள். இந்தப் புரட்சி சோழர்களால் மூர்க்கத் தனமாக அடக்கப் பட்டது. அநேகமாக இந்தக் கிளர்ச்சியை அடக்கச் சென்ற சோழப்படைக்கு மாகன் தலைமை வகித்துச் சென்றிருக்கலாம். மூன்றாம் குலோத்துங்கன் அப்போது வயதானவாயிருந்தான். அவனது மகன் மூன்றாம் ராஜராஜன் (முன்பு சொன்ன கலிங்க மன்னன் வேறு) பெரிய வீரனல்ல என்பது வரலாற்று அறிஞர்கள் யாவரும் ஒப்புக்கொள்ளும் விடயம். இந்த நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் தனது மருமகனிடம் படைத்தலைமையை அளித்திருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

– பாண்டிய நாட்டுப்போரில் மாகன் ஒரு கையை இழந்ததாக அல்லது ஒரு கை கடுமையாகச் சேதமடைந்ததாக அறியமுடிகிறது. இவ்வாறு மாகன் “கூழங்கையன்” ஆனான். ஏற்கனவே கலிங்கத்திலிருந்து கொண்டுவந்த வன்மத்தோடு கையை இழந்ததால் வந்த கோபமும் சேர, பாண்டிய நாட்டில் சோழர்கள் இதுவரை செய்யாத கொடுமைகளை மாகன் அரங்கேற்றி இருக்கிறான். பாண்டிய மன்னர்களின் புராதனமான முடிசூட்டு மண்டபத்தை – இதுவரைகாலப் போர்கள் எதிலும் சோழர்கள் கைவைக்காத மண்டபத்தை – தரைமட்டமாக்கியதும் இதற்குள் அடங்கும். (குலசேகர பாண்டியனுடனான இந்தப்போரில் சோழர்கள் வழமையை விட மிக்க கொடூரமாக நடந்து கொண்டதை பல வரலாற்று அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருந்தாலும் மாகனை யாரும் சந்தேகிக்கவில்லை. சோழப்பேரரசு பலவீனமடைந்து வந்ததால், இயலாமையால் ஏற்பட்ட கோபத்துடன் நடந்துகொண்டதாகக் குலோத்துங்கன் மேல் பழியைப் போட்டு விட்டனர்). படையெடுப்பு நிறைவடைந்த பின், சோழர்களின் பிரதிநிதியாக மாகன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கிறான். 

-இந்நேரத்தில் தான், இலங்கையின் பொலநறுவை மன்னர்களையும் அடக்குவதற்கு மூன்றாம் குலோத்துங்கன் திட்டம் வகுத்திருக்க வேண்டும். இலங்கை மன்னன் முதலாம் பராக்கிரமபாகுவும் மூன்றாம் குலோத்துங்க சோழனும் பரம எதிரிகள். மூன்றாம் குலோத்துங்கனின் இளமைக்காலத்தில் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தில் இருந்த சோழர் சார்பு தமிழ் அரசை வீழ்த்தியதோடு பாண்டிய அரியணைப் போட்டியைச் சாக்காக வைத்துத் தமிழகத்தின் மீதும் படையெடுத்தான். ஒரு கட்டத்தில் சிங்களப்படைகள் பாண்டிய நாட்டை முழுதாகக் கைப்பற்றி சோழ நாட்டின்மீதே பாய்வதற்கு ஆயத்தமாகி இருந்தன. மூன்றாம் குலோத்துங்கன் இறுதியில் பராக்கிரமபாகுவின் படைகளை முறியடித்து விரட்டினாலும் இலங்கை மீது கைவைக்க முடியவில்லை.

– ஆனால் முதலாம் பராக்கிரமபாகு இறந்தபின் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரியணைப் போட்டிகளால் பொலநறுவை அரசு மிகப்பலவீனமடைந்தது. பராக்கிரமபாகுவிற்கு முன்பிருந்தே பல சிங்கள அரசர்கள் சோழர்களின் பரம வைரிகளான பாண்டிய அரச குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து வந்தனர். உண்மையில் முதலாம் பராக்கிரமபாகுவின் தாயும் பட்டத்தரசியும் பாண்டிய இளவரசிகள். இந்த உரிமையைச் சாட்டியே பராக்கிரமபாகு பாண்டிய நாட்டில் தலையிட்டிருந்தான். பாண்டிய அரசகுடும்பத்தில் பெண் எடுக்காத போது கலிங்க அரச வம்சத்தில் சோழர்களிடம் விரோதப்பான்மையுடன் இருந்த (அனந்தவர்மன் போன்ற) அரசர்களின் புத்திரிகளைச் சிங்கள அரசர்கள் திருமணம் செய்திருந்தனர். இதனால் பொலநறுவையில் பாண்டிய சார்பு, கலிங்க சார்பு அரச குமாரர்கள் இருந்ததுடன் இவர்களுக்கிடையில் அரியணைப் போட்டியும் இருந்தது. கிபி 1215 அளவில் பராக்கிரபாகுவின் மனைவி அரசி லீலாவதி பொலன்னறுவையில் ஆட்சி செய்தபிறகு அவளது உறவினனான பாண்டிய வம்சத்தவன் ஒருவன் சிம்மாசனம் ஏறினான். அவன் தன்னை வெளிப்படையாகவே “பராக்கிரம பாண்டியன்” என்று அழைத்துக்கொண்டான். இலங்கையின் வரலாற்றில் தமிழகத்து அரச வம்சம் ஒன்றின் பெயரை வெளிப்படையாகத் தாங்கி, சிங்கள மக்களின் ஒப்புதலுடன் சிங்கள சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஒரேயொரு மன்னன் இவனாவான்.

– இப்படிப் பொலநறுவை பலவீனப்பட்டிருந்த நிலையை மூன்றாம் குலோத்துங்க சோழன் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், மிகவும் பலவீனப்பட்டு அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் அதற்குத் தேவையான படைபலம் இருக்கவில்லை. எனவே, தந்திரத்தில் மிகச்சிறந்தவன் என்று வரலாற்று ஆச்சிரியர்கள் போற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஒரு தந்திரம் செய்ய முயன்றிருக்கிறான். அதுதான் மாகனின் “கலிங்கத்” தொடர்ப்பைப் பாவித்துக் கொள்வது. அதாவது மாகனைப் படைத்தலைவனாக அனுப்பி, அவனை ஒரு கலிங்கனாகக் காட்டினால் பொலநறுவையில் இருந்த கலிங்க சார்புப் பிரதானிகள் ஆதரவு அவனுக்குக் கிடைக்கும், எனவே சிங்களப் படைகளில் ஒருபகுதி அவனை எதிர்க்காது என்று மூன்றாம் குலோத்துங்கன் திட்டம் போட்டிருக்கலாம். 

-ஆனால் சிக்கல் என்னவென்றால், மாகன் தமிழ்பேசும் சோழப்படைகளுடன் போய் இறங்குவானாக இருந்தால் அவன் பொலன்நறுவைச் சிம்மாசனத்துக்கு உரிமையுள்ள கலிங்கன் என்று சிங்களவர்கள் நம்புவது கடினமாக இருக்கும். எனவே அப்போது சோழப்பேரரசுக்கு உட்பட்ட சேரநாட்டின் பகுதிகளில் இருந்து மலையாளம் பேசும் வீரர்கள் கூலிப்படையினராகத் திரட்டப்பட்ட்டிருக்கலாம். 

-இவ்வ்வாறாகவே கலிங்க மாகன், 1215ம் ஆண்டு, 24000 சேர போர்வீரர்களுடன் காரைநகரில் சென்று இறங்கினான். ஆனால், மூன்றாம் குலோத்துங்கன் என்ன நினைத்திருந்தாலும், மாகனின் மூர்க்கமான போர்முறை அவன் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் சாத்தியத்தை இல்லாமல் செய்துவிட்டது. மாகன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்ததும் முதலில் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்து முதலாம் பராக்கிரமபாகுவால் கைப்பற்றப்பட்ட சிங்கைநகர் (வல்லிபுரம்) சென்று அதை விடுவித்தான். பின்னர் பொலநறுவை நோக்கி முன்னேறினான். அவனது படைவீரர்கள் பெரும்பாலும் சைவர்களான வட இலங்கைத் தமிழர்களுக்கு தீங்குகள் ஏதும் விளைவிக்காவிட்டாலும் கூட, வட இலங்கையில் இருந்த பௌத்த சின்னங்களை அழிக்கத் தவறவில்லை. ராஜரட்டையின் சிங்கள பௌத்த பிரதேசங்களுக்கும் நுழைந்ததும் மாகன் மிக்க கொடூரமான தாக்குதலை ஆரம்பித்தான். கலிங்கத்திலே பிற மதத்தவர்கள் இந்துக்கோயில்களை அழித்ததைக் கண்டதால் ஏற்பட்ட கோபம், தமிழ்நாட்டில் பல அழிவுகளை செய்த பராக்கிரமபாகுவின் நாட்டின்மீது பழிவாங்கும் உக்கிரம், தனது கையை வெட்டிய பாண்டியர்களின் வம்சத்தினன் ஒருவன் பொலன்னறுவையை ஆண்டு கொண்டிருந்ததால் வந்த கோபம் எல்லாமாகச் சேர்ந்து மாகனைப் பெரும் காட்டுத்தீ ஆக்கியது. முக்கியமாக, கண்ணில்பட்ட விகாரைகளை எல்லாம் தரைமட்டம் ஆக்கவும், புத்த பிக்குகளைக் கொல்லவும் மாகன் தவறவில்லை. பொலன்னறுவை வீழ்ந்தபோது, அதை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியனைச் சிறைப்பிடித்து அவனது இரண்டு கண்களையும் பிடுங்கி மாகன் கொன்றதாகத் தெரிகிறது.

– மாகனின் படையெடுப்புக்குப் பயந்து ராஜரட்டையின் சிங்களவர்களில் பலர் தென்மேற்கு இலங்கைக்கு ஓடிச்சென்றனர். மாகனுக்குப்பிறகு சிங்கள அரசர்கள் யாரும் இராஜரட்டையில் நிரந்தரமாக ஆட்சி செய்யவில்லை. மாகன் இராஜரட்டையில் தனது அரசை ஸ்திரப்படுத்திக்கொண்ட பிறகு வட இலங்கையில் பல சைவக்கோவில்களைக் கட்டுவித்தான். கந்தளாய்க் குளம் முதலிய குளங்களையும் வெட்டுவித்தான். முக்கியமாக கோணேஸ்வரர் கோவிலை இவன் மீளக்கட்டி கிபி 1223 ஆம் ஆண்டு புதுவருட தினத்தன்று அக்கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகத் தெரிகிறது. திருகோணமலைப் பிரதேசத்தில் குளமும் (கந்தளாய்க்குளம்), கோட்டமும் (அதாவது கோயில்: கோணேசர் கோயில்) அமைத்ததால் குளக்கோட்டன் எனும் பெயர் இவனுக்கு ஏற்படுவதாயிற்று. அவனது வம்சத்தின் பெயரால் “சோழகங்க தேவன்” எனவும் அறியப்பட்டான்.

-தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மாகன், தமிழகத்துத் தமிழர்கள் பலரை, முக்கியமாக வறண்ட தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த முதலியார்களை, வட இலங்கைக்குக், குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து குடியேற்றியதாகத் தெரிகிறது. 

– மாகனின் படையெடுப்பு நடந்த சில வருடங்களில் தென்னிந்தியாவில் சோழப்பேரரசு அஸ்தமித்து விட்டது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டைச் சுதந்திர அரசாக்கியதுடன் சோழர்களையும் சோழமண்ணிலேயே முறியடித்தான். ஹோய்சால மன்னர்களின் தயவினால்தான் சோழர்கள் தமது நாட்டையே மீட்க முடிந்தது. எனவே மானைப்பற்றிக் கவலைப்பட சோழர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அதேவேளை சிங்கள அரச வம்சத்தவர்கள் தம்பதெனியாவைத் தமது தளமாக்கிக்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டனர். முடிவில் கிபி 1236இல் சிங்கள மன்னன் மூன்றாம் விஜயபாகு இராஜரட்டை மீது படையெடுத்து வந்தான். அதேநேரம் பாண்டியப்படைகள் சேதுக்கரையில் கரையில் இருந்து மன்னாரில் வந்திறங்கி, மாகன் வடமேற்காக இந்தியாவிற்குள் பின்வாங்குவதைத் தடை செய்தன. ஆகவே வட கிழக்காக முல்லைத்தீவு, சுண்டிக்குளம் ஊடாக யாழ்க் குடா நாட்டுக்குள் பின்வாங்குவதே மானுக்கு இருந்த ஒரே வழியாக இருந்தது. வட இலங்கையில் இருந்த தமிழர்களின் ஆதரவு அவனுக்கு இருந்திருக்கலாம். மூன்றாம் விஜயபாகுவைப் பொறுத்தவரையில் இராஜரட்டையை விடுவிப்பதே அவனது முக்கிய குறிக்கோளாக இருந்ததால், தமிழர்கள் செறிந்து வாழ்ந்த வட இலங்கைக்குள் மாகனைத் துரத்திக்கொண்டு வருவதில் அவன் அக்கறைப் படவில்லை. எனவே யாழ்ப்பாணத்தின் பழைய தலைநகரான சிங்கை நகரில் (வல்லிபுரம்) மாகன் தனது அரச பீடத்தை நிறுவிக் கொண்டான். யாழ்ப்பாணத் தமிழர்கள், ஒப்பீட்டளவில் வட இந்தியாவை (அதாவது கலிங்கத்தைச்) சேர்ந்த மாகனை “ஆரியன்” என்று அழைத்திருக்கலாம். கூழங்கையை உடைய, சிங்கை நகரில் இருந்து ஆண்ட ஆரியன் என்பதால் அவன் “கூழங்கைச் சிங்கையாரியன்” என்று அறியப்பட்டான். “கூழங்கைச் சக்கரவர்த்தி” என்பது அவனது இன்னொரு பெயராயிற்று. 

-யாழ்ப்பாணத்தில், கிபி 1250 களின் நடுப்பகுதி வரை மாகன் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.