கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – I

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு ஒரு காட்டுத்தீ போன்றவனும், கொடுங்கோல் அரசில் இன்புறுகின்றவனுமாகிய ஒருவன் வந்து இறங்கினான்.” – சூளவம்சம்

சாதாரணமாக மிகவும் சுருக்கமாகவும் உணர்ச்சியின்றியும் வரலாற்றை (தங்கள் பார்வையில்) நடந்தது நடந்தபடி வர்ணித்துச் செல்வதாகிய சூளவம்சம், மேற்கூறிய விஸ்தாரமான வர்ணனையுடன் கலிங்க மாகனை அறிமுகம் செய்கிறது.

யாழ்ப்பாணத்தமிழர்கள் தமது உண்மையான வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கலிங்க மாகன் யார் என்ற புதிரை அவிழ்ப்பது மிகவும் முக்கியம். சிலபேருக்கு வில்லனாகவும் இன்னும் சிலபேருக்குக் கதாநாயகனாகவும் இருக்கும் இவனது உண்மையான வரலாறு மிகவும் மர்மமாகவே இருக்கிறது. இவனைப்பற்றிய சில புதிர்கள்.

1 – யாழ்ப்பாண அரசின் முதலாவது அரசன் என்று சொல்லப்படும் கூழங்கைச் சக்கரவர்த்தியும் கலிங்க மாகனும் ஒருவரா?

2 – கலிங்க மாகனின் போர்வீரர்கள் உண்மையில் எவ்வினத்தவர்கள்? சூளவம்சமே இதில் குழம்பிப்போய் ஓரோரிடத்தில் இவர்களை “24000 கலிங்கப் போர்வீரர்கள்” என்றும், தமிழ் வீரர்கள் என்றும், கேரள வீரர்கள் என்றும் சொல்கிறது. எனவே, கலிங்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு இளவரசன் சேரப் போர்வீரர்களுடன் வந்ததாகக் கருதலாமா?

3 – இவன் படையெடுத்தபோது தமிழகத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் சோழப்பேரரசு ஸ்திரமாகவே இருந்தது. அவ்வாறிருக்கையில் இவன் சோழர்களின் ஆதரவின்றி காரைநகரில் வந்து இறங்கியிருக்க முடியுமா? பொலன்னறுவையில் அப்போது ஆண்டுகொண்டிருந்த பாண்டிய வம்ச அரசனை இவன் “கண்களைத் தோண்டிக்” குரூரமாகக் கொன்றான் என்று சூளவம்சம் சொல்வதால் இவன் சோழர்களின் ஆதரவு பெற்றவனா?

4 – இவனது படையெடுப்புக்கு முற்பட்ட சில ஆண்டுகள் பொலன்னறுவையில் அரசுரிமைக்குழப்பங்கள் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன. இந்தக்குழப்பங்களில் பாண்டியரும் சோழரும் தலையிட்டதாகவும் பாண்டிய, சோழ இளவரசர்கள் குறுகிய காலங்களில் பொலன்நறுவையை ஆண்டதாகவும் சூளவம்சம் சொல்கிறது. இதில் ஒரு விசித்திரம், அக்காலத்தில் தம் சொந்த நாட்டிலேயே நாடற்றுச் சோழர்களுக்கு உட்பட்டிருந்த பாண்டியர்கள் இலங்கை மேல் படையெடுத்து வந்தது. இன்னுமொரு விசித்திரம், அப்படி வந்த பாண்டியர்களையும் சோழர்களையும் மிக நல்ல வார்த்தைகளால் (!) சூளவம்சம் வர்ணிப்பது. மாகனுக்கு மட்டுமே மிகக்கடுமையான வார்த்தைகளை சூளவம்சம்
பாவிக்கிறது. எனவே மாகன் யார்?

5 – மாகனுக்குப் பின் வந்த யாழ்ப்பாண அரசர்கள் தம்மை ‘ஆரியச் சக்கரவர்த்திகள்” என்று சொல்லிக்கொண்டார்கள். இதில் ‘ஆரிய’ என்பதன் பொருளென்ன? உண்மையில் இவர்கள் மாகனின் வம்சத்தவரா அல்லது வேறு வம்சமா? இவர்கள் “பிராமண க்ஷத்திரியர்கள்” அதாவது போர்த்தொழிலை மேற்கொண்ட பிராமணர்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

இந்தப் புதிர்களை ஆதாரங்களுடன் விடுவித்தால் யாழ்ப்பாணத் தமிழரின் வரலாற்றில் பாதி தெளியும்.

இப்பதிவின் இரண்டாம் பாகத்தைக் காண இங்கே அழுத்துக.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.