மானிப்பாய் மதவடி

மானிப்பாய் மதவடி

(திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு இப்படியும் ஒரு உரை )

மானிப்பாய் மதவடி – I

— விழிமைந்தன் —

இது நடந்தது சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு. மானிப்பாய்க் கிராமத்தின் ஒழுங்கையிலுள்ள மதவொன்றில் நானும் நண்பனும் அமர்ந்து, கால்களை ஆட்டிக்கொண்டு போகிற வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது நான் ரொம்பவும் அப்பாவி. புத்தகப் படிப்பின்றி வேறொன்றைப்பற்றியும் பெரிதாகத் தெரியாது (இப்பவும் கிட்டத்தட்ட அப்பிடித் தான்!) நண்பன் அப்படியல்ல. படிப்பிலும் கெட்டிக்காரன். அத்தோடு உலகம் அறிந்தவன். நல்லது கெட்டது, நாலு காசு சம்பாதிக்கும் வழி, பொருளாதாரம், அரசியல், காதல், கத்தரிக்காய் எல்லாவற்றைப்பற்றியும் ரொம்பவே தெரிந்து வைத்திருந்தான். அந்தக் காலத்தில் அவன் ஒரு பெண்ணை “சைட்” அடித்துக் கொண்டிருந்தான். உண்மையில் அவள் வருவதை எதிர்பார்த்துத் தான் அந்த மதகிலே குந்தி இருந்தான். எனக்கோ இந்த “சைட்” அடிக்கிற விஷயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆர்வம். எனவே நான் அவனைக் கெஞ்சிக் கேட்டேன்:

“மச்சான், ஒரு பெட்டையை “சைட்” அடிக்கிறதெண்டா என்ன? அது என்ன மாதிரி இருக்கும்? எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாடா ப்ளீஸ்!”

நண்பன் ஒரு சிரிப்புச் சிரித்தான். “இதுகூடத் தெரியாத அப்பாவியா இருக்கிறியே?” என்ற நக்கல் சிரிப்பு. இவனுடன் பழகுவதென்றால் இந்த நக்கல் நளினங்களைக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளத்தான் வேணும். என்னை ஏற இறங்கப் பார்த்தான். என்மேல் அவனுக்குக் கொஞ்சம் அனுதாபம் பிறந்திருக்க வேண்டும். ஒரு காலை மடித்து வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பல்கலைக் கழகத்தில் விரிவுரை எடுக்கும் பெரிய பேராசிரியர் பாணியில் சொல்லத் தொடங்கினான்.

“மச்சான், சைட் அடிக்கிறது எண்டுறது ஒரு பிச்சலான அனுபவமடாப்பா. அது அனுபவிச்சுப் பாத்தவனுக்குத் தான் விளங்கும்.

முதன் முதல்லை அவளைப் பாத்தவுடனை திகைச்சுப் போனண்டாப்பா. இவள் என்ன தெய்வப் பெண்ணோ, நடனமாடுற வடிவான மயிலோ, அல்லது மானுடப் பெண் தானோ எண்டு நினைச்சன். அவ்வளவு வடிவாயிருந்தாள் (1).

தொடக்கத்திலை நான் அவளைப் பாக்கேக்குள்ளை அவள் பாக்க மாட்டாள். தலையைக் குனிஞ்சு கொண்டு போயிடுவாள். அப்பவே எனக்கு பயங்கர பீலிங்கா இருக்கும். பிறகு ஒரு நாள் திரும்பி ஒரு லுக்கு விட்டாள் பார்…அண்டையோடை பிரண்டன். காளிதேவியோடை தனியாவே மனிசன் போர் செய்து வெல்லேலாது. அப்பிடிப் பட்ட காளி ஒரு படையையும் கொண்டு வந்து ஒரு தனி மனுஷனை அட்டாக் பண்ணினா எப்பிடி இருக்கும்? அப்படி இருந்துச்சு (2).

உண்மையிலை அவளின்ரை கண்ணடாப்பா… எப்பிடிச் சொல்ல? பெட்டையள் பாவமெண்டு உலகம் சொல்லுது. ஆனால் அவள் தன்ரை லுக் ஆலேயே இளம் பெடியளைக் கொலை பண்ணிடுவாள் மச்சான் (3). யமன் எண்டவனை எனக்கு முந்தித் தெரியாதடாப்பா. இப்ப ஆராவது என்னை யமன் எப்படி இருப்பான் எண்டு கேட்டால், பெண் வடிவத்திலை, கொலை செய்யிற பெரிய கண்களோடை இருப்பான் எண்டுதான் சொல்லுவன்(4).

அதிலையுமொரு விசித்திரமடாப்பா. சிலநேரந்தான் அவளின்ரை பார்வை அப்பிடிக் கொடுமையாயிருக்கும். சில நேரம் மான் குட்டி மாதிரி மருண்டும் பாப்பாள். சில நேரம் சாதாரணப் பெண் மாதிரியும் இருக்கும். மூண்டு லுக்கும் அவளின்ரை கண்ணில இருக்கு மச்சான் (5).

சிலவேளை நினைப்பன்… இவளுக்கு கண்புருவம் ஏன் இப்பிடி வில்லுமாதிரி வளைஞ்சு போய்க் கிடக்கு எண்டு. சிலவேளை கொஞ்சம் நேரான புருவமாயிருந்தால் அவளின்ரை லுக் என்ரை மனசுக்குள்ளை அப்பிடி அம்புமாதிரிப் பாயாதோ என்னமோ…(6)

இப்ப இப்ப சிலவேளை நகையளும் போட்டுக்கொண்டு வருவாள். சிலவேளை நான் பாக்கிறன் எண்டு தான் செய்யிறாளோ என்னவோ. ஆனால் அவளுக்கு நகை தேவையில்லை மச்சான். அவளின்ரை அந்த மான் மாதிரி லுக்குக்கும், வெக்கம் வரேக்க முகம் சிவக்கிற பொலிவுக்கும்… நகையெல்லாம் ஒரு தூசு.(7)

அடங்காத மத யானைக்கு முகத்தில துணியைப்போட்டு மறைச்ச மாதிரி அவளின்ர… சீ… சிலவேளை என்ரை சிந்தனைகள் போற போக்கைப்பாக்க எனக்கே பயமாக்கிடக்கு மச்சான். (8)

கவிண்டு போனன் மச்சான். உனக்குத் தெரியும் முந்தி நான் ஒண்டுக்கும் கிறுங்காத பெடியன். எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்திட்டுப் போயிட்டே இருப்பேன். ஒரு பெடிப்பயல் வாலாட்ட முடியாது என்னோடை. அப்படிப்பட்ட என்னை வெறும் பார்வையாலேயே கவித்திட்டாளே!! (9)

எண்டாலும் ஒண்டு மச்சான். நான் ஒருக்கா ரெண்டுதரம் கூவில் பக்கம் சங்கராக்களோடை போய் கொஞ்சம் கள்ளு அடிச்சுப் பாத்திருக்கிறன். அது குடிச்சாத்தான் வெறிக்கும். இவளைச் சும்மா றோட்டிலை கண்டாலே வெறி வந்தமாதிரி இருக்கு மச்சான். என்ன செய்யிறன் ஏது செய்யிறன் எண்டு எனக்கே தெரியேல்லை.” (10)

இப்பிடி இவன் சொல்லிக்கொண்டிருக்கேக்கை வாசுகி ரோட்டாலை வரவும், இவன் கதையை டக்கெண்டு கட் பண்ணிப்போட்டு அவளை சைட் அடிக்க வெளிக்கிட்டான். வாசுகி தான் இவன் பாத்த அந்தப் பெட்டையின்ரை பேர். சும்மா சொல்லக்கூடாது நல்ல வடிவான பெட்டை.

நண்பனுக்குப் பெயர் வள்ளுவன். சும்மா லேசானவனில்லை, ஆள் பெரிய மாதா.

(பிறகென்ன நடந்ததெண்டு நாளைக்குச் சொல்லுறன். வரவே? )

மானிப்பாய் மதவடி – II

— விழிமைந்தன் —

வணக்கம் எல்லோருக்கும். மானிப்பாய் மதவடி பற்றிய கதையை ரொம்ப சுவாரஸ்யமாகவே கேட்க்கிறீர்கள். எங்கு விட்டேன்? ஆ..நண்பன் சைட் அடிப்பதைப்பற்றி எனக்கு விரிவுரை எடுத்துக்கொண்டிருந்தபோது வாசுகி வந்தாள்.. அவ்விடத்தில்.

வாசுகி வருவதைக்கண்டதும் நான் எதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இவன் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். வாசுகி தலையைக் குனிந்துகொண்டே வந்தது. இவனைப் பார்த்த மாதிரியும் இருந்தது. பார்க்காத மாதிரியும் இருந்தது. எங்களைக் கடந்து போகும்போது இவன் மெல்லிய குரலில் எதோ சொன்னான். வாசுகி தலையை நிமிர்த்தி இவனை முறைத்துப் பார்த்து, “உப்பிடிக் கதைச்சியளேண்டா அப்பாட்டை போய்ச் சொல்லிப் போடுவன்!” என்று பேசி விட்டுப் போய்விட்டது. கடந்து போகும்போது கொஞ்சம் கொடுப்புக்குள் சிரித்தமாதிரி இருந்தது. அவ்வளவுதான்.

வாசுகி போனதும் நான் நண்பனைப் பார்த்துக் கேட்ட்டேன்.

“மச்சான் – உண்மையாவே உந்தப்பெட்டை உன்னை லவ் பண்ணுதோ?”

“ஓம்!” என்று நெஞ்சை நிமிர்த்தித் திமிராகச் சொன்னான் அவன்.

“உனக்கு எப்பிடித் தெரியும்? உன்னட்டைச் சொன்னவளோ? அல்லது லெட்டர் கிட்டர் ஏதும் போட்டவளோ? அவள் வலு முராலாக் கதைச்சுப்போட்டுப் போறாளே?” என்று நான் கேட்டேன். இந்தக் கேள்வி கேட்க்கும்போதே, குமரன் சேரிடம் “F = ma ” இல் m என்றால் என்ன என்று கேட்பதுபோல அடிப்படை அறிவின்றிய அசட்டுத்தனமான கேள்வி கேட்கிறோம் என்று மனசுக்குள் எதோ சொன்னது.

வள்ளுவன் மறுபடியும் ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு மதகில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, வாசுகியை அப்போதுதான் பார்த்ததால் அவனுக்கு ஏற்பட்டிருந்த மிதமிஞ்சிய உற்சாகத்துடன் லெக்சர் அடிக்கத் தொடங்கினான்.

“டேய் மச்சான்.. இப்பிடியான விஷயமெல்லாம் சொல்லித்தான் தெரியவேணும் எண்டு இல்லையடாப்பா. குறிப்பறிதல் எண்டு ஒண்டு இருக்கு. வாசுகி என்னைப் பாக்கிற பார்வையையும் சிரிக்கிற சிரிப்பையும் வைச்சே எனக்குத்தெரியும் – அவளும் கட்டாயம் என்னை லவ் பண்ணுறாள் எண்டு.

நான் அவளைப் பாக்கேக்கை அவள் என்னைப் பாக்கமாட்டாள். தலையைக் கவிட்டுக் கொண்டு நிப்பாள். பிறகு நான் பாக்காதநேரம், அவள் இஞ்சை பாத்து, மெல்லச் சிரிப்பளடாப்பா (11).

சிலவேளை, நேரை என்னைப் பாக்காட்டியும் ஒரு கண்ணைச் சிறக்கணிச்சதுபோலை சுருக்கிக்கொண்டு கடைக்கண்ணாலை பாத்துச் சிரிப்பாள் (12).

சிலநேரம், நேருக்கு நேர் ஒருக்காப் பாத்திட்டு டக்கெண்டு தலையைக் குனிஞ்சு கொள்ளுவாள். அது எங்கடை காதல் செடிக்கு அவள் ஊத்துற தன்னியடாப்பா(13).

வேறை சில நேரம், நான் பாக்கேக்கை அதுக்கு இரக்கப்பட்டு மெல்லச் சிரிப்பாள். அந்த நேரத்தில அந்தப் பூங்கொடிக்கு இருக்கிற வடிவு…. அது வேற லெவெலடாப்பா (14).

உண்மையில் அவளின்ரை மைதீட்டிய கண்களிலை இரண்டு லுக் இருக்கு மச்சான். ஒரு பார்வை பாத்தாளெண்டால் எனக்குக் காதல் வலி பிச்சசுக்கொண்டு போகும். அந்த வலியில உயிரே போறதுமாதிரி இருக்கும். பிறகு இன்னொரு பார்வை பாத்தாளெண்டால் அந்த வலிக்கு அந்தப்பார்வை ஆறுதலாகவும் இருக்கும். இப்பிடி அவள் பார்வை தாற வருத்தத்துக்கு அவள் பார்வையே மருந்து மச்சான் (15).

இப்பிடியெல்லாம் கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ளுற பாஷை இருக்கும்போது வெறும் வாய்ச்சொல்லில என்ன பிரயோசனமாடாப்பா? (16)

உண்மையாச் சொல்லுறன் மச்சான்… இப்பிடிக் களவாகக் கண்ணோடு கண் சேர்கிற அந்தச் சில கணங்கள்.. அது சின்ன விஷயமில்லையடாப்பா. ஒரு சோடியின்ரை காதல் சரித்திரத்திலை, அவை பிறகு கதைச்சுக் கூடித் திரிஞ்சு கலியாணம் கட்டிப் பிள்ளைகள் பெத்து வாழ்ந்தாலும்.. இந்தக் கண்ணும் கண்ணும் சேர்கிற சில கணங்கள் அவையின்ரை காதல் கதையிலை அரைவாசி.. இல்லை, அதுக்கு மேலை பெறுமெண்டுதான் நான் சொல்லுவன் (17).

அவள் இண்டைக்குக் கவனிக்காதமாதிரிப் போறாள், பேசிப்போட்டுப் போறாள் எண்டு நீ நினைக்காதை. சிலவேளை ஆளையாள் தெரியாதமாதிரிப் பொதுப்பார்வை பாக்கிறது காதலருக்கு வழக்கம் மச்சான் (18).

அந்நியர் மாதிரிப் பேசுறதும், கோபப் பட்டவை மாதிரி முறைக்கிறதும், சேராதது மாதிரிக் காட்டிக்கொண்டு மனத்தாலை சேந்தவையின்ரை குறிப்பு மச்சான் (19). உறவில்லாதவை போலப் பேசிப்போட்டுப் போனாலும், மனத்திலை கோபமில்லாதவை எண்டது மனதுக்கு டக்கெண்டு விளங்கும் மச்சான் (20)”

இதையெல்லாம் கேட்க எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. இந்தக் கோதாரியைவிட வெக்டர் மாஸ்டரின் காவிப் பாடமும், மகாதேவா சேரின் ஓர்கானிக் கெமிஸ்ட்ரியும் கூட எவ்வளவோ சுகம் மாதிரியும் இருந்தது. “சரி மச்சான்.. வாற கிழமை சந்திப்பம். வாசுகியோடை உன்ரை லவ் எப்படிப் போகுதெண்டு அப்ப சொல்லன்!” என்று கூறி விட்டு, மெதுவாக மதகிலிருந்து இறங்கி நழுவினேன்.

மானிப்பாய் மதவடி – III

— விழிமைந்தன் —

வணக்கம் பாருங்கோ. உந்த மானிப்பாய் மதவடிக்கதையை கொஞ்சநாள் சொல்லாமை விட்டிட்டன். எங்கை நேரம்? இப்ப பெப்பிரவரி பதின்னாலும் அதுவுமாத்தான் ஞாபகம் வருகுது.

பின்னை இவன் வள்ளுவன் கதைச்சிட்டுப்போன சில நாளையாலை வள்ளுவனுக்கு வாசுகி செட்டாயிட்டுதெண்டு கேள்விப்பட்டம். இவன் லெட்டர் குடுத்ததெண்டும், அவள் வாங்கினதெண்டும், பிள்ளையார் கோயில் மூலை அல்லிக் குளத்துக்குப் பக்கத்திலை மகிழ மரத்தடியிலை சந்திச்சுக் கதைச்சதெண்டும் அறிஞ்சம். அடுத்த சனிக்கிழமை, செக்கல் படுகிற நேரம், வள்ளுவன் மதவடிக்கு வாயெல்லாம் பல்லா வந்தான்.

“மச்சான், எப்பிடி உன்ரை சரக்கு?” எண்டு ஒரு வார்த்தை தான் கேட்டன். இவன் பாவி சும்மா பொழிஞ்சு தள்ளத் தொடங்கினானே பொழிஞ்சு! வர்ணனையைக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு.

“அடே, அவள் அந்தப்பிள்ளையார் கோயில் குளத்தடிக்கு வரேக்கை, குளத்திலை இருந்த குவளைப்பூவெல்லாம் தலையைக் கவுட்டு விட்டுதடாப்பா. அவளின்ரை கண்ணைப்போல தாங்கள் வடிவில்லை எண்டுதான் (21).

அவளின்ரை பல்லு முத்தெடாப்பா. மைதீட்டின கண்கள் வேல்போலை. தோள்கள் மூங்கில் மாதிரியடாப்பா. அவள் பக்கத்தில வரேக்க அவளின்ரை வாசனையே தனியடாப்பா. (22)”

இந்த ரேஞ்சிலை வர்ணனை போக, எனக்கு அலுத்துப் போச்சு. என்ரை முக எக்ஸ்பிரசனிலை அவனுக்கும் அது விளங்கி இருக்க வேணும். ஆனால் அவன்பாவி நிப்பாட்டினால் தானே. இவ்வளவுநேரம் என்னைப் பாத்துக் கதைச்சவன் இப்ப கண்ட கண்ட பொருளையெல்லாம் பாத்துக் கதை சொல்ல வெளிக்கிட்டிட்டான்.

நித்திய கல்யாணிப் பூவைப் பாத்து – “அவளின்ரை கண்ணும் உன்னை மாதித் தான். ஆனால் உன்னை எல்லாரும் பாக்கினமே! அதுமாதிரி அவளையும் பெடியன்கள் பாப்பாங்களோ?” (23)

அனிச்ச மரத்தைப்பாத்து – “அனிச்சப்பூவே… நீ மென்மைதான். ஆனால் உன்னை விட அவள் மென்மை. (24)

இந்த அனிச்சப் பூவும், அன்னத்தின்ரை இறகும்கூட அவள் காலுக்கு நெருஞ்சி முள்ளு போலத்தான் இருக்கும். அவ்வளவு மென்மையானவள். (25)

நேற்று இந்த அனிச்சம் பூவைப்பிடுங்கி அதின்ரை காம்பைப் பிடுங்காமல் தலையில வைச்சுக்கொண்டு போனவள். ஒருவேளை பாரம் தாங்காமல் இடுப்பு ஒடிஞ்சிருக்குமோ?” (இதைக்கேட்க எனக்குப் பிரக்கடிச்சுப் போட்டுது! ) (26)

கடைசியா நிலவையும் நட்சத்திரங்களையும் பாத்து:

“இந்த நட்சத்திரங்கள் ஓரிடத்திலை நிக்காமல் வானத்திலை அலைஞ்சு திரியுதே ஏன்? ஒருவேளை நிலவையும் அவளின்ரை முகத்தையும் பாத்து எது எதெண்டு அறியாமல் குழம்பி இருக்குங்களோ? (27)

சீச்சீ.. அப்பிடி இருக்காது. இந்தப் பூரண சந்திரனிலை களங்கம் இருக்கு. ஆனால் அவளின்ரை முகத்தில களங்கம் ஏது? (பார்றா!!) (28)

நிலவே..நீ அவளின்ரை முகம் அளவுக்கு ஷைனிங் ஆ இருப்பியெண்டால், உன்னையும் நான் லவ் பண்ணுவன்! (29)

ஆனா ஒண்டு சொல்லிப்போட்டன்! அவளுக்கு நீ ஒப்பாக விரும்பினால் இனிமேல் கண்ட எல்லாரும் பாக்கும்படி வானத்திலை வரக்கூடாது. எனக்கு மட்டுமா இருக்கவேணும்! செய்வியோ?” (30)

இது முத்தின கேஸ் எண்டு எனக்கு நல்லா விளங்கிப்போச்சு. ஆள் அப்படியே நிலவோடை கதைச்சுக் கொண்டிருக்க, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்திட்டன்.


(1) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

(2) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

(3) கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

(4) பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

(5) கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

(6) கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

(7) பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

(8) கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

(9) ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

(10) உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

(11) யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

(12) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

(13) நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

(14) அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

(15) இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

(16) கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

(17) கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

(18) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

(19) செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

(20) உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

(21) காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

(22) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

(23) மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

(24) நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

(25) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(26) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

(27) மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

(28)அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

(29) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

(30) மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

3 கருத்துக்கள்

 1. எட கறுமகாண்டத்தை!
  என்னதொரு கற்பனை!
  என்னதொரு விளக்கம்!
  உதை வாசிச்சாப்பிறகு எந்த மரமண்டைக்கு
  திருக்குறளை அதுகும் இங்கினை வாசிச்ச
  காமத்துப்பால் வரிகள் பிடிபடாதாம்?

  ந.குணபாலன்

 2. எட கறுமகாண்டத்தை!
  என்னதொரு விளக்கம்!
  உதை வாசிச்சாப்பிறகு எந்த மரமண்டைக்கு
  திருக்குறளை அதுகும் இங்கினை வாசிச்ச
  காமத்துப்பால் வரிகள் பிடிபடாதாம்?

  ந.குணபாலன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *