மானிப்பாய் மதவடி

மானிப்பாய் மதவடி

(திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு இப்படியும் ஒரு உரை )

மானிப்பாய் மதவடி – I

— விழிமைந்தன் —

இது நடந்தது சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு. மானிப்பாய்க் கிராமத்தின் ஒழுங்கையிலுள்ள மதவொன்றில் நானும் நண்பனும் அமர்ந்து, கால்களை ஆட்டிக்கொண்டு போகிற வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது நான் ரொம்பவும் அப்பாவி. புத்தகப் படிப்பின்றி வேறொன்றைப்பற்றியும் பெரிதாகத் தெரியாது (இப்பவும் கிட்டத்தட்ட அப்பிடித் தான்!) நண்பன் அப்படியல்ல. படிப்பிலும் கெட்டிக்காரன். அத்தோடு உலகம் அறிந்தவன். நல்லது கெட்டது, நாலு காசு சம்பாதிக்கும் வழி, பொருளாதாரம், அரசியல், காதல், கத்தரிக்காய் எல்லாவற்றைப்பற்றியும் ரொம்பவே தெரிந்து வைத்திருந்தான். அந்தக் காலத்தில் அவன் ஒரு பெண்ணை “சைட்” அடித்துக் கொண்டிருந்தான். உண்மையில் அவள் வருவதை எதிர்பார்த்துத் தான் அந்த மதகிலே குந்தி இருந்தான். எனக்கோ இந்த “சைட்” அடிக்கிற விஷயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள ரொம்பவும் ஆர்வம். எனவே நான் அவனைக் கெஞ்சிக் கேட்டேன்:

“மச்சான், ஒரு பெட்டையை “சைட்” அடிக்கிறதெண்டா என்ன? அது என்ன மாதிரி இருக்கும்? எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாடா ப்ளீஸ்!”

நண்பன் ஒரு சிரிப்புச் சிரித்தான். “இதுகூடத் தெரியாத அப்பாவியா இருக்கிறியே?” என்ற நக்கல் சிரிப்பு. இவனுடன் பழகுவதென்றால் இந்த நக்கல் நளினங்களைக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளத்தான் வேணும். என்னை ஏற இறங்கப் பார்த்தான். என்மேல் அவனுக்குக் கொஞ்சம் அனுதாபம் பிறந்திருக்க வேண்டும். ஒரு காலை மடித்து வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பல்கலைக் கழகத்தில் விரிவுரை எடுக்கும் பெரிய பேராசிரியர் பாணியில் சொல்லத் தொடங்கினான்.

“மச்சான், சைட் அடிக்கிறது எண்டுறது ஒரு பிச்சலான அனுபவமடாப்பா. அது அனுபவிச்சுப் பாத்தவனுக்குத் தான் விளங்கும்.

முதன் முதல்லை அவளைப் பாத்தவுடனை திகைச்சுப் போனண்டாப்பா. இவள் என்ன தெய்வப் பெண்ணோ, நடனமாடுற வடிவான மயிலோ, அல்லது மானுடப் பெண் தானோ எண்டு நினைச்சன். அவ்வளவு வடிவாயிருந்தாள் (1).

தொடக்கத்திலை நான் அவளைப் பாக்கேக்குள்ளை அவள் பாக்க மாட்டாள். தலையைக் குனிஞ்சு கொண்டு போயிடுவாள். அப்பவே எனக்கு பயங்கர பீலிங்கா இருக்கும். பிறகு ஒரு நாள் திரும்பி ஒரு லுக்கு விட்டாள் பார்…அண்டையோடை பிரண்டன். காளிதேவியோடை தனியாவே மனிசன் போர் செய்து வெல்லேலாது. அப்பிடிப் பட்ட காளி ஒரு படையையும் கொண்டு வந்து ஒரு தனி மனுஷனை அட்டாக் பண்ணினா எப்பிடி இருக்கும்? அப்படி இருந்துச்சு (2).

உண்மையிலை அவளின்ரை கண்ணடாப்பா… எப்பிடிச் சொல்ல? பெட்டையள் பாவமெண்டு உலகம் சொல்லுது. ஆனால் அவள் தன்ரை லுக் ஆலேயே இளம் பெடியளைக் கொலை பண்ணிடுவாள் மச்சான் (3). யமன் எண்டவனை எனக்கு முந்தித் தெரியாதடாப்பா. இப்ப ஆராவது என்னை யமன் எப்படி இருப்பான் எண்டு கேட்டால், பெண் வடிவத்திலை, கொலை செய்யிற பெரிய கண்களோடை இருப்பான் எண்டுதான் சொல்லுவன்(4).

அதிலையுமொரு விசித்திரமடாப்பா. சிலநேரந்தான் அவளின்ரை பார்வை அப்பிடிக் கொடுமையாயிருக்கும். சில நேரம் மான் குட்டி மாதிரி மருண்டும் பாப்பாள். சில நேரம் சாதாரணப் பெண் மாதிரியும் இருக்கும். மூண்டு லுக்கும் அவளின்ரை கண்ணில இருக்கு மச்சான் (5).

சிலவேளை நினைப்பன்… இவளுக்கு கண்புருவம் ஏன் இப்பிடி வில்லுமாதிரி வளைஞ்சு போய்க் கிடக்கு எண்டு. சிலவேளை கொஞ்சம் நேரான புருவமாயிருந்தால் அவளின்ரை லுக் என்ரை மனசுக்குள்ளை அப்பிடி அம்புமாதிரிப் பாயாதோ என்னமோ…(6)

இப்ப இப்ப சிலவேளை நகையளும் போட்டுக்கொண்டு வருவாள். சிலவேளை நான் பாக்கிறன் எண்டு தான் செய்யிறாளோ என்னவோ. ஆனால் அவளுக்கு நகை தேவையில்லை மச்சான். அவளின்ரை அந்த மான் மாதிரி லுக்குக்கும், வெக்கம் வரேக்க முகம் சிவக்கிற பொலிவுக்கும்… நகையெல்லாம் ஒரு தூசு.(7)

அடங்காத மத யானைக்கு முகத்தில துணியைப்போட்டு மறைச்ச மாதிரி அவளின்ர… சீ… சிலவேளை என்ரை சிந்தனைகள் போற போக்கைப்பாக்க எனக்கே பயமாக்கிடக்கு மச்சான். (8)

கவிண்டு போனன் மச்சான். உனக்குத் தெரியும் முந்தி நான் ஒண்டுக்கும் கிறுங்காத பெடியன். எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்திட்டுப் போயிட்டே இருப்பேன். ஒரு பெடிப்பயல் வாலாட்ட முடியாது என்னோடை. அப்படிப்பட்ட என்னை வெறும் பார்வையாலேயே கவித்திட்டாளே!! (9)

எண்டாலும் ஒண்டு மச்சான். நான் ஒருக்கா ரெண்டுதரம் கூவில் பக்கம் சங்கராக்களோடை போய் கொஞ்சம் கள்ளு அடிச்சுப் பாத்திருக்கிறன். அது குடிச்சாத்தான் வெறிக்கும். இவளைச் சும்மா றோட்டிலை கண்டாலே வெறி வந்தமாதிரி இருக்கு மச்சான். என்ன செய்யிறன் ஏது செய்யிறன் எண்டு எனக்கே தெரியேல்லை.” (10)

இப்பிடி இவன் சொல்லிக்கொண்டிருக்கேக்கை வாசுகி ரோட்டாலை வரவும், இவன் கதையை டக்கெண்டு கட் பண்ணிப்போட்டு அவளை சைட் அடிக்க வெளிக்கிட்டான். வாசுகி தான் இவன் பாத்த அந்தப் பெட்டையின்ரை பேர். சும்மா சொல்லக்கூடாது நல்ல வடிவான பெட்டை.

நண்பனுக்குப் பெயர் வள்ளுவன். சும்மா லேசானவனில்லை, ஆள் பெரிய மாதா.

(பிறகென்ன நடந்ததெண்டு நாளைக்குச் சொல்லுறன். வரவே? )

மானிப்பாய் மதவடி – II

— விழிமைந்தன் —

வணக்கம் எல்லோருக்கும். மானிப்பாய் மதவடி பற்றிய கதையை ரொம்ப சுவாரஸ்யமாகவே கேட்க்கிறீர்கள். எங்கு விட்டேன்? ஆ..நண்பன் சைட் அடிப்பதைப்பற்றி எனக்கு விரிவுரை எடுத்துக்கொண்டிருந்தபோது வாசுகி வந்தாள்.. அவ்விடத்தில்.

வாசுகி வருவதைக்கண்டதும் நான் எதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று நினைத்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இவன் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். வாசுகி தலையைக் குனிந்துகொண்டே வந்தது. இவனைப் பார்த்த மாதிரியும் இருந்தது. பார்க்காத மாதிரியும் இருந்தது. எங்களைக் கடந்து போகும்போது இவன் மெல்லிய குரலில் எதோ சொன்னான். வாசுகி தலையை நிமிர்த்தி இவனை முறைத்துப் பார்த்து, “உப்பிடிக் கதைச்சியளேண்டா அப்பாட்டை போய்ச் சொல்லிப் போடுவன்!” என்று பேசி விட்டுப் போய்விட்டது. கடந்து போகும்போது கொஞ்சம் கொடுப்புக்குள் சிரித்தமாதிரி இருந்தது. அவ்வளவுதான்.

வாசுகி போனதும் நான் நண்பனைப் பார்த்துக் கேட்ட்டேன்.

“மச்சான் – உண்மையாவே உந்தப்பெட்டை உன்னை லவ் பண்ணுதோ?”

“ஓம்!” என்று நெஞ்சை நிமிர்த்தித் திமிராகச் சொன்னான் அவன்.

“உனக்கு எப்பிடித் தெரியும்? உன்னட்டைச் சொன்னவளோ? அல்லது லெட்டர் கிட்டர் ஏதும் போட்டவளோ? அவள் வலு முராலாக் கதைச்சுப்போட்டுப் போறாளே?” என்று நான் கேட்டேன். இந்தக் கேள்வி கேட்க்கும்போதே, குமரன் சேரிடம் “F = ma ” இல் m என்றால் என்ன என்று கேட்பதுபோல அடிப்படை அறிவின்றிய அசட்டுத்தனமான கேள்வி கேட்கிறோம் என்று மனசுக்குள் எதோ சொன்னது.

வள்ளுவன் மறுபடியும் ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு மதகில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, வாசுகியை அப்போதுதான் பார்த்ததால் அவனுக்கு ஏற்பட்டிருந்த மிதமிஞ்சிய உற்சாகத்துடன் லெக்சர் அடிக்கத் தொடங்கினான்.

“டேய் மச்சான்.. இப்பிடியான விஷயமெல்லாம் சொல்லித்தான் தெரியவேணும் எண்டு இல்லையடாப்பா. குறிப்பறிதல் எண்டு ஒண்டு இருக்கு. வாசுகி என்னைப் பாக்கிற பார்வையையும் சிரிக்கிற சிரிப்பையும் வைச்சே எனக்குத்தெரியும் – அவளும் கட்டாயம் என்னை லவ் பண்ணுறாள் எண்டு.

நான் அவளைப் பாக்கேக்கை அவள் என்னைப் பாக்கமாட்டாள். தலையைக் கவிட்டுக் கொண்டு நிப்பாள். பிறகு நான் பாக்காதநேரம், அவள் இஞ்சை பாத்து, மெல்லச் சிரிப்பளடாப்பா (11).

சிலவேளை, நேரை என்னைப் பாக்காட்டியும் ஒரு கண்ணைச் சிறக்கணிச்சதுபோலை சுருக்கிக்கொண்டு கடைக்கண்ணாலை பாத்துச் சிரிப்பாள் (12).

சிலநேரம், நேருக்கு நேர் ஒருக்காப் பாத்திட்டு டக்கெண்டு தலையைக் குனிஞ்சு கொள்ளுவாள். அது எங்கடை காதல் செடிக்கு அவள் ஊத்துற தன்னியடாப்பா(13).

வேறை சில நேரம், நான் பாக்கேக்கை அதுக்கு இரக்கப்பட்டு மெல்லச் சிரிப்பாள். அந்த நேரத்தில அந்தப் பூங்கொடிக்கு இருக்கிற வடிவு…. அது வேற லெவெலடாப்பா (14).

உண்மையில் அவளின்ரை மைதீட்டிய கண்களிலை இரண்டு லுக் இருக்கு மச்சான். ஒரு பார்வை பாத்தாளெண்டால் எனக்குக் காதல் வலி பிச்சசுக்கொண்டு போகும். அந்த வலியில உயிரே போறதுமாதிரி இருக்கும். பிறகு இன்னொரு பார்வை பாத்தாளெண்டால் அந்த வலிக்கு அந்தப்பார்வை ஆறுதலாகவும் இருக்கும். இப்பிடி அவள் பார்வை தாற வருத்தத்துக்கு அவள் பார்வையே மருந்து மச்சான் (15).

இப்பிடியெல்லாம் கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ளுற பாஷை இருக்கும்போது வெறும் வாய்ச்சொல்லில என்ன பிரயோசனமாடாப்பா? (16)

உண்மையாச் சொல்லுறன் மச்சான்… இப்பிடிக் களவாகக் கண்ணோடு கண் சேர்கிற அந்தச் சில கணங்கள்.. அது சின்ன விஷயமில்லையடாப்பா. ஒரு சோடியின்ரை காதல் சரித்திரத்திலை, அவை பிறகு கதைச்சுக் கூடித் திரிஞ்சு கலியாணம் கட்டிப் பிள்ளைகள் பெத்து வாழ்ந்தாலும்.. இந்தக் கண்ணும் கண்ணும் சேர்கிற சில கணங்கள் அவையின்ரை காதல் கதையிலை அரைவாசி.. இல்லை, அதுக்கு மேலை பெறுமெண்டுதான் நான் சொல்லுவன் (17).

அவள் இண்டைக்குக் கவனிக்காதமாதிரிப் போறாள், பேசிப்போட்டுப் போறாள் எண்டு நீ நினைக்காதை. சிலவேளை ஆளையாள் தெரியாதமாதிரிப் பொதுப்பார்வை பாக்கிறது காதலருக்கு வழக்கம் மச்சான் (18).

அந்நியர் மாதிரிப் பேசுறதும், கோபப் பட்டவை மாதிரி முறைக்கிறதும், சேராதது மாதிரிக் காட்டிக்கொண்டு மனத்தாலை சேந்தவையின்ரை குறிப்பு மச்சான் (19). உறவில்லாதவை போலப் பேசிப்போட்டுப் போனாலும், மனத்திலை கோபமில்லாதவை எண்டது மனதுக்கு டக்கெண்டு விளங்கும் மச்சான் (20)”

இதையெல்லாம் கேட்க எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. இந்தக் கோதாரியைவிட வெக்டர் மாஸ்டரின் காவிப் பாடமும், மகாதேவா சேரின் ஓர்கானிக் கெமிஸ்ட்ரியும் கூட எவ்வளவோ சுகம் மாதிரியும் இருந்தது. “சரி மச்சான்.. வாற கிழமை சந்திப்பம். வாசுகியோடை உன்ரை லவ் எப்படிப் போகுதெண்டு அப்ப சொல்லன்!” என்று கூறி விட்டு, மெதுவாக மதகிலிருந்து இறங்கி நழுவினேன்.

மானிப்பாய் மதவடி – III

— விழிமைந்தன் —

வணக்கம் பாருங்கோ. உந்த மானிப்பாய் மதவடிக்கதையை கொஞ்சநாள் சொல்லாமை விட்டிட்டன். எங்கை நேரம்? இப்ப பெப்பிரவரி பதின்னாலும் அதுவுமாத்தான் ஞாபகம் வருகுது.

பின்னை இவன் வள்ளுவன் கதைச்சிட்டுப்போன சில நாளையாலை வள்ளுவனுக்கு வாசுகி செட்டாயிட்டுதெண்டு கேள்விப்பட்டம். இவன் லெட்டர் குடுத்ததெண்டும், அவள் வாங்கினதெண்டும், பிள்ளையார் கோயில் மூலை அல்லிக் குளத்துக்குப் பக்கத்திலை மகிழ மரத்தடியிலை சந்திச்சுக் கதைச்சதெண்டும் அறிஞ்சம். அடுத்த சனிக்கிழமை, செக்கல் படுகிற நேரம், வள்ளுவன் மதவடிக்கு வாயெல்லாம் பல்லா வந்தான்.

“மச்சான், எப்பிடி உன்ரை சரக்கு?” எண்டு ஒரு வார்த்தை தான் கேட்டன். இவன் பாவி சும்மா பொழிஞ்சு தள்ளத் தொடங்கினானே பொழிஞ்சு! வர்ணனையைக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு.

“அடே, அவள் அந்தப்பிள்ளையார் கோயில் குளத்தடிக்கு வரேக்கை, குளத்திலை இருந்த குவளைப்பூவெல்லாம் தலையைக் கவுட்டு விட்டுதடாப்பா. அவளின்ரை கண்ணைப்போல தாங்கள் வடிவில்லை எண்டுதான் (21).

அவளின்ரை பல்லு முத்தெடாப்பா. மைதீட்டின கண்கள் வேல்போலை. தோள்கள் மூங்கில் மாதிரியடாப்பா. அவள் பக்கத்தில வரேக்க அவளின்ரை வாசனையே தனியடாப்பா. (22)”

இந்த ரேஞ்சிலை வர்ணனை போக, எனக்கு அலுத்துப் போச்சு. என்ரை முக எக்ஸ்பிரசனிலை அவனுக்கும் அது விளங்கி இருக்க வேணும். ஆனால் அவன்பாவி நிப்பாட்டினால் தானே. இவ்வளவுநேரம் என்னைப் பாத்துக் கதைச்சவன் இப்ப கண்ட கண்ட பொருளையெல்லாம் பாத்துக் கதை சொல்ல வெளிக்கிட்டிட்டான்.

நித்திய கல்யாணிப் பூவைப் பாத்து – “அவளின்ரை கண்ணும் உன்னை மாதித் தான். ஆனால் உன்னை எல்லாரும் பாக்கினமே! அதுமாதிரி அவளையும் பெடியன்கள் பாப்பாங்களோ?” (23)

அனிச்ச மரத்தைப்பாத்து – “அனிச்சப்பூவே… நீ மென்மைதான். ஆனால் உன்னை விட அவள் மென்மை. (24)

இந்த அனிச்சப் பூவும், அன்னத்தின்ரை இறகும்கூட அவள் காலுக்கு நெருஞ்சி முள்ளு போலத்தான் இருக்கும். அவ்வளவு மென்மையானவள். (25)

நேற்று இந்த அனிச்சம் பூவைப்பிடுங்கி அதின்ரை காம்பைப் பிடுங்காமல் தலையில வைச்சுக்கொண்டு போனவள். ஒருவேளை பாரம் தாங்காமல் இடுப்பு ஒடிஞ்சிருக்குமோ?” (இதைக்கேட்க எனக்குப் பிரக்கடிச்சுப் போட்டுது! ) (26)

கடைசியா நிலவையும் நட்சத்திரங்களையும் பாத்து:

“இந்த நட்சத்திரங்கள் ஓரிடத்திலை நிக்காமல் வானத்திலை அலைஞ்சு திரியுதே ஏன்? ஒருவேளை நிலவையும் அவளின்ரை முகத்தையும் பாத்து எது எதெண்டு அறியாமல் குழம்பி இருக்குங்களோ? (27)

சீச்சீ.. அப்பிடி இருக்காது. இந்தப் பூரண சந்திரனிலை களங்கம் இருக்கு. ஆனால் அவளின்ரை முகத்தில களங்கம் ஏது? (பார்றா!!) (28)

நிலவே..நீ அவளின்ரை முகம் அளவுக்கு ஷைனிங் ஆ இருப்பியெண்டால், உன்னையும் நான் லவ் பண்ணுவன்! (29)

ஆனா ஒண்டு சொல்லிப்போட்டன்! அவளுக்கு நீ ஒப்பாக விரும்பினால் இனிமேல் கண்ட எல்லாரும் பாக்கும்படி வானத்திலை வரக்கூடாது. எனக்கு மட்டுமா இருக்கவேணும்! செய்வியோ?” (30)

இது முத்தின கேஸ் எண்டு எனக்கு நல்லா விளங்கிப்போச்சு. ஆள் அப்படியே நிலவோடை கதைச்சுக் கொண்டிருக்க, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்திட்டன்.

மானிப்பாய் மதவடி – IV 

— விழிமைந்தன் —

காதல் கதை எண்டால் எல்லாருக்கும் கேட்கிறதிலை ஒரு கிளுகிளுப்புத்தான் பாருங்கோ. எல்லாக் காலத்திலையும் எல்லாத் தேசத்திலையும் மனுசருக்கு இருந்த, இருக்கிற, இருக்கப்போற ஒரு பொதுவான உணர்ச்சி எண்டால் அது இந்தக் காதல்தான் இல்லையோ? அதுதான் வள்ளுவன் வாசுகி காதல் கதையை வலு ஆர்வமாக் கேட்கிறியள்.

கதையும் இவ்வளவுநாளும் பம்பலாய்ப் போச்சு. நானும் விளையாட்டு விளையாட்டாய்ச் சொன்னன். நீங்களும் கேட்டியள். இதுக்குமேலை சொல்லக் கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கு. ஏனெண்டால் இனித்தான் கதையிலை வில்லங்கங்கள் விபரீதங்கள் இருக்கு. இருந்தாலும் முடிஞ்சவரை மேலை சொல்லுறன். இடையில விட்டிட்டால் கோபப்படக் கூடாது.

பின்னை இப்பிடி வள்ளுவன் வாசுகி காதல் நாளொரு லெட்டரும் பொழுதொரு மரத்தடியுமாக வளர்ந்து கொண்டிருக்கேக்கை, எங்களுக்கும் டியூஷனுகள் மும்முரமாய்த் தொடங்கி விட்டுது. எனக்கும் படிப்புகளோடை பிஸியாய்ப் போச்சு. வள்ளுவனிட்டைப் போனாலும் எந்த நேரமும் வாசுகியின்ரை கதைதான் கதைப்பான் என்று தெரியும். அதாலை போனமுறை சொன்னமாதிரி இவன் நிலவைப் பார்த்துப் புலம்பிக்கொண்டு நிண்ட அண்டைக்குப்பிறகு ஒரு மாதமாய் நான் மானிப்பாய் மதவடிப் பக்கம் போகேல்லை.

பிறகும் மனங் கேளாமல் (அவன் என்னெண்டாலும் சின்னனிலை இருந்து என் சிநேகிதன்!) ஒரு சனிக்கிழமை சைக்கிளை எடுத்துக்கொண்டு மானிப்பாய்ப் பக்கம் போனன். இவன் வாசுகியைப் பின்னேரக் கையா ஒரு அஞ்சு மணிபோலதான் சந்திக்கிறவன் எண்டு எங்களுக்குத் தெரியும். அதுக்குப் பிறகு போனால் ஒரே வாசுகி நினைவிலை இருப்பான். அதாலை வேளையோடை சந்திச்சிட்டு வருவம் என்று போனன். அங்கதான் ஒரு பெரிய பிழையை விட்டன்!

நான் போன நேரம் இவன் மதகிலதான் இருந்தான். வாசுகியைச் சந்திக்க ரெடியா நல்ல ஸ்டைலா வெளிக்கிட்டு வந்திருந்தான். நாலு பிளீட் வைச்ச ட்ரவுசர் போட்டு, பெனியன் தெரியும்படி நல்ல விலையான “பேப்பர் மாட்டின்” சேட்டும் ஒண்டு அடிச்சு, தலைமயிரை மேவி இழுத்திருந்தான். பொக்கட்டிலை சிவப்புப் பேனை ஒன்று, நீலப் பேனை ஒன்று செருகி இருந்தான். இதுதான் அந்தக் காலத்து அதி உச்ச ஸ்டைல். டெனிம் ஜீன்ஸ், ரே-பான், கூக்கி இதெல்லாம் கிடையாது. கேள்விப்படேல்லை.

நான் போய் இறங்கினவுடனேயே குமரன் சேர் இப்ப பௌதீகவியல் கடலிலை எந்த செக்சன் படிப்பிக்கிறார் என்றுகூடக் கேட்காமல் (இவன் இப்ப டியூஷனுக்கும் ஒழுங்கா வாறேல்லை!) வாசுகியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லிக் கொன்றிருந்தான் எண்டாலும் சரி தான். நானும் பொழுதுபோகட்டும் என்று கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டிருந்தன். 

“மச்சான்! அவளும் நானும் இப்ப எனியில்லையெண்ட க்ளோஸ் எடாப்பா. உடம்புக்கும் உயிருக்கும் இருக்கிற தொடர்பு எண்டுதான் எங்கள் இரண்டுபேருக்கும் இடையில இருக்கிற காதலைச் சொல்ல வேணும்.  (32)

ஒவ்வொருமுறையும் அவள் என்னைச் சந்திக்க வரும்போதும், என்ரை உயிருக்கு வாழ்வு வந்தமாதிரி இருக்கடாப்பா. ஒவ்வொரு முறையும் அவள் என்னைப் பிரிஞ்சு போகும்போது, நான் அந்த இடத்திலையே செத்துப்போற மாதிரி இருக்கு. பிறகு மறுபடியும் சந்திக்கும்போதுதான் அந்த உயிர் திரும்ப வருகுது. (34)

அவளை என்னுடைய கண்ணுக்குள்ளேயே வைச்சுப் பார்க்க வேணும் மாதிரி இருக்கடாப்பா. இந்தக் கண்ணுக்குள்ளை ஆடுற பாவை இருக்கெல்லோ? அதைக் கழட்டி எறிஞ்சு போட்டு அதுக்குப் பதிலா அவளை வைச்சா என்ன எண்டு யோசிக்கிறன்!” (33)

இதைக் கேட்டதும் நான் பயந்துபோய், “பொறு பொறு. அப்பிடி எல்லாம் அளவுக்கு மிஞ்சிக் கதைக்கக் கூடாது!” என்று சொன்னன். பிறகு, “அதுசரி! நீ வாசுகியை ஒருநாளைக்கு எத்தனை தடவை நினைப்பாய்?” என்று கேட்டன்.

இதைக் கேட்டதும் வள்ளுவன் ஒரு பைத்தியச் சிரிப்புச் சிரிச்சுப்போட்டு “அவளை அடிக்கடி நினைக்க எனக்கும் ஆசைதான் மச்சான்! ஆனால், அவளை மறந்தால் தானே மறுபடியும் நினைக்க முடியும்? பளிச் பளிச்சென்று சண்டையிலை வாள் மினுங்கிறமாதிரி மினுங்கிற அவளின்ரை கண்களை ஒரு கணம்கூட என்னாலை மறக்கமுடியேல்லையே? பிறகு எப்படி மறுபடியும் நினைக்கிறது?” எண்டான். (35)

“இதென்ன கோதாரி” என்று நான் நினைக்குறதுக்குள்ளை அவனே மறுபடியும், “கண்கள் மட்டுமா? அந்த உதடுகள்… பாலும் தேனும் கலந்தது மாதிரி…” என்று முணுமுணுத்தான். (31)

“உது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேக்கிறமாதிரி நான் வள்ளுவனை முறைச்சுப் பார்த்தன். அவனுக்கும் தான் ரூ மச்சாய்ப் போயிட்டன் எண்டு விளங்கிவிட்டது போலை. ஆளுக்குக் கொஞ்சம் அந்தரமாய்ப் போச்சு. அதைச் சமாளிக்கிறதுக்குச் சட்டென்று எழும்பி, “சரி மச்சான். நேரம் போகுது. வாசுகி வந்திருப்பாள். நீயும் அதிலை வாவன்! சிலவேளை வாசுகியும் அவளின்ரை பிரென்ட், அந்த இணுவில்ப் பிள்ளை, என்னபேர் தயா, இரண்டுபேரும் அந்த மகிழ மரத்தடியிலை இருந்து கதைச்சுக் கொண்டிருப்பினம். என்னைப் பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருப்பினம். அதை ஒளிச்சிருந்து கேட்க எனக்கு நல்ல விருப்பம். நீயும் வா, கேட்கலாம் fun ஆக இருக்கும்” எண்டான்.

“ஐயையோ நான் வரேல்லை” எண்டு ஓடப் பாத்தன். ஆனால் வள்ளுவன் சைக்கிளைப் பூட்டித் திறப்பை எடுத்துப் போட்டான். வள்ளுவனிலை ஒரு குணம் எந்த ஒரு விஷயத்தையும் பிடிச்சால் பிடிச்சதுதான். குரங்குப் பிடி. கடைசியா என்னையும் அந்த மகிழ மரத்தடிக்கு இழுத்துக்கொண்டு போட்டான்.

நாங்கள் போகேக்கை சூரியன் மறைகிற நேரம். வள்ளுவன் சொன்னதுமாதிரியே வாசுகியும் தயாவும் அந்த மகிழ மரத்தடியிலை இருந்து சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு இருந்துதுகள். இவன் வாயிலை விரலை வைச்சு “சத்தம் போடாதை” எண்டு சைகை காட்டிப் போட்டு என்னையும் இழுத்துக்கொண்டு மரத்துக்குப் பின்னாலை போய் நிண்டிட்டான். அதிலை நிண்டு கேட்க அங்காலை கதைக்கிறது நல்லாக் கேக்கும்.

அப்ப தயா வாசுகியைப் பார்த்து “வாசுகி, நீ கொஞ்சநாளா நல்ல ஸ்டைல் ஆ வந்து நகைகள் எல்லாம் போட்டு லிப்ஸ்டிக் ஐ-டெக்ஸ் எல்லாம் போட்டாய். இப்ப திடீரென்று கண்ணுக்கு மை போடுறதை மட்டும் நிப்பாட்டிப் போட்டாய் ஏன்?” எண்டு கேட்டுது. அதுக்கு வாசுகி “அதோ? அதடி இப்ப என்ர கண்ணிலை எப்ப பார்த்தாலும் அவரின் உருவம் தான் தெரியுது. மை போடுற நேரத்தில அவர் மறைஞ்சு போடுவார் இல்லையோ? அதுதான் நான் மை போடுறதில்லை!” எண்டு சொல்லிச்சுது. (37) உடனை இரண்டு பேரும் சேர்ந்து கிண்கிணி கொட்டின மாதிரிச் சிரிச்சினம். அந்த நேரத்திலை வள்ளுவன் முகத்திலை வந்த பெருமையைப் பாக்க வேணுமே.

உடனை தயா “அப்படியாடி! அப்படியெண்டால் நீ கண்ணை இமைச்ச உடனை உன்ரை அவர் மறைகிறாரோ? அப்பிடி எண்டால் அவர் அன்பில்லாதவர் எடி! உண்மையான அன்புள்ளவர் எண்டால் வள்ளுவன் அப்படியெல்லாம் மறையக்கூடாது!” (39) எண்டு போட்டிச்சுது ஒரு போடு. உடனை பேந்தும் “கிக்கிக்கீக்கி” எண்டு சிரிப்பு.

வாசுகி உடனை வள்ளுவனை விட்டுக் குடுக்காமல் “சீச்சீ அவர் நல்லவர் அடி. அவர் என் கண்ணுக்குள்ளை இருந்து ஒருநாளும் போறதில்லை. நான் கண்ணை இமைச்சால் அதுபற்றிக் கவலைப் படுறதும் இல்லை. இமைச்ச உடனை மறுபடியும் அவர் உருவம் என் கண்ணிலை பொலியுதடி” (36) எண்டிச்சுது. இதைக் கேட்க, வள்ளுவன் மாதிரியே வாசுகிக்கும் பைத்தியம் நல்லா முத்தி விட்டுது எண்டு எனக்குத் தெரிஞ்சு போச்சு. வள்ளுவனுக்கெண்டால் இதையெல்லாம் கேட்க ஒரே புழுகம்.

வாசுகி பேந்தும் ” எடியே! நான் இப்ப இப்ப சுடச்சுட எதையாவது சாப்பிடுறதைக் கூட விட்டிட்டன். ஏன் தெரியுமே? அவர் எப்பவும் என் நெஞ்சிலை இருக்கிறார் அடி. சூடாகச் சாப்பிட்டால் அவருக்குச் சுட்டுப் போடுமே! அதுதான்!!” (38) எண்டுது. சாப்பாட்டு விரும்பியான எனக்கு இதைக் கேட்க ஒரே கவலை.

இந்த வசனத்தை வாசுகி சொல்லிச்சுதோ இல்லையோ பக்கத்திலை ஏதோ சத்தம் கேட்க நான் டக்கென்று திரும்பிப் பார்த்தன். வாசுகியின் தகப்பன் காரன் இடுப்பில கையை வைச்சுக்கொண்டு அத்தனை விஷயத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவற்றை கண் கோபத்திலை கோவைப் பழம் மாதிரிச் சிவந்திருந்தது.

வாசுகியின் தகப்பன் லேசானவரில்லை. இயமன் சதாசிவம் என்று நல்ல உயரமும் பருமனும் கிருதா மீசையுமான ஒரு ஆள். சும்மாவே சரியான வில்லங்கம் பிடிச்ச மனுசன்!

மானிப்பாய் மதவடி – V 

— விழிமைந்தன் —

‘அட்வான்ஸ்ட் லெவல்’ படிப்புகள் மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன. இரண்டு கோளங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய பிறகு உந்த மாற்றத்துடன் எதிரெதிர்த் திசைகளில் உருண்டு செல்லும் கணக்குகளை வேலாயுதம் சேர் வெளுத்தெறிந்து கொண்டிருந்ததார். மணியம் சேர் பிஸிக்கல் கெமிஸ்ட்ரி செக்சனுக்குள் இறங்கி விட்டார். குமரன் சேர் ‘எலக்ட்ரிசிட்டி’ செக்சன் தொடங்கி விட்டார். சும்மா ‘பார்த்திட்டு விடை சொல்லும்’ முறைகளால் தடைகளை இலகுவாகக் கணிப்பிட்டு இத்தனை ‘ஓம்’ என்று சொல்லும் முறைகளை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்.

வள்ளுவனாலும், அவனுக்குப் பார்வையால் ‘ஓம்’ என்று விடைசொன்ன வாசுகியாலும் தடைகளைக் கணிப்பிட்டுத் தாண்ட முடியவில்லை. அவர்களுக்கிடையில் இருந்த ‘கெமிஸ்ட்ரி’ ஒருநாள் ‘பிஸிக்கல் கெமிஸ்ட்ரி’ ஆவதற்கான வாய்ப்புகள் அருகிவந்தன. காதலால் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர்கள் வேகத்துடன் எதிரெதிர்த் திசைகளில் உருண்டு கொண்டிருந்தார்கள். 

வள்ளுவனும் வாசுகியும் சந்தித்த இடத்துக்கு வாசுகியின் தகப்பன் வந்து அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்ததற்குப் பிறகு அவர்கள் இருவருக்குமே பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு விட்டன. அவ்வளவு நாளும் ஓரளவு இரகசியமாக இருந்த அவர்களின் காதல் கதையும் ஊரெல்லாம் பரவி விட்டது. டியூஷன், இருவரும் படித்த பாடசாலைகள், ஊர், மற்றும் நம்மை விட இளம் வயதினர் மத்தியில் கூடக் கொஞ்சநாள் இதே பேச்சாக இருந்தது. இதற்கிடையில் இரு வீட்டுக்காரருமே பெரும் உக்கிரத்தில் இருந்தார்கள். வாசுகியை டியூஷனுக்கு அனுப்பாமல் மறித்து, வீட்டிலேயே தனிப்பட்ட வகுப்புகள் ஏற்பாடு செய்துவிட்டார்கள். வள்ளுவன் வீட்டாரோ ஒருபடி மேலே சென்று, அவனைக் கொழும்பில் இருக்கும் வள்ளுவனின் மாமா வீட்டிற்கு அனுப்பிக் கொழும்பில் ஒரு பாடசாலையில் சேர்த்துப் படிப்பிக்க முடிவு செய்து விட்டார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. படிப்பிலே கெட்டிக்காரனாக இருந்த வள்ளுவனின் பாட அடைபேறுகள் அண்மைக் காலமாகக் குறைவடைந்து வந்ததை எல்லாரும் அவதானித்தே வந்தார்கள். இப்போது அதற்கான பழியை வாசுகியின் மேல் தூக்கிப் போட்டதோடு, இடத்தை மாற்றினால் வாசுகியை வள்ளுவன் மறந்து விடுவான் என்றும் முடிவு செய்தார்கள். வள்ளுவன் சொல்லித் தந்த பாடத்தில் அவன் குரு, நாங்கள் கற்றுக்குட்டிகள் என்றாலும் வள்ளுவன் ‘இப்பிடிப் போனதுக்கான’ பழியில் ஒரு பங்கை அவன் நண்பர்களாகிய எங்களுக்கும் பகிர்ந்தளிக்கவும் வள்ளுவனின் பெற்றோர் தவறவில்லை. மகிழ மரத்தடிச் சம்பவம் நடந்த பிறகு ஒரு தடவை வள்ளுவன் வீட்டுக்குப் போனபோது அவனது அம்மா முகம் கொடுத்துப் பேசாததால் நானும் அவன் வீட்டுக்குப் போவதைக் குறைத்துவிட்டேன்.

இப்படிச் சில மாதங்கள் சென்றபிறகு ஒருநாள் தற்செயலாக மானிப்பாய்ப் பக்கம் போனபோது எங்களது பழைய மதவடியில் வள்ளுவன் உட்கார்ந்து கால்களை ஆட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். வாசுகியை அடிக்கடி காண முடியாததால் வள்ளுவன் கொஞ்சம் விரக்தியாக இருப்பான் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவன் உற்சாகமாகவே இருந்தான். என்னைக் கண்டதும் சைக்கிளை மறித்து, என்னை இழுத்துத் தன் பக்கத்தில் இருத்த்திக்கொண்டான். அதேவேளை தாசன், உதயன், சாண்டோ, குளிப்பறை முதலியவர்களும் மற்றப் பக்கத்தால் சைக்கிளில் வந்தனர். அவர்களைக் கண்டதும் வள்ளுவன் இன்னும் உற்சாகம் ஆகிவிட்டான். உண்மையில் முன்பு இவர்களோடெல்லாம் வள்ளுவனுக்கு அதிகமாகப் பழக்கமில்லை. ஆனால் வள்ளுவனின் லவ் மாட்டர் வெளியில் வந்ததில் இருந்து எங்கள் பாடசாலை, ஊர், டியூஷன் எல்லாவற்றிலுமே அவனுக்கு ஒரு ஹீரோ ஸ்டேட்டஸ் வந்துவிட்டது. இது வள்ளுவனுக்கு உற்சாகம் அளித்ததாகவே தோன்றியது. 

குளிப்பறை சைக்கிளில் இருந்து இறங்கும்போதே, “என்ன மச்சான் வள்ளுவன்? உன்ரை லவ் மாட்டர் சிக்கலிலை போகும்போலை கிடக்கு? என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இறங்கினான். 

“உன்ரை பேரும் நல்லா ரிப்பேர் ஆயிட்டுது. வீட்டிலையும் உனக்கு நல்ல ஏச்சாம் என்ன?” என்றான் சாண்டோ.

இதற்கு வள்ளுவன் பதில் சொல்ல முன்னரே, “அப்ப இனி என்ன செய்யப்போறாய்? பேசாமல் அவளைக் கை விடுகிற பிளானோ?” என்று கேட்டான் உதயன்.

இது பிழையான கேள்வி. இதற்குப் பதிலாக வள்ளுவனிடம் இருந்து பெரிய லெக்சர் ஒன்று வருமென்பதை அவனை நன்றாக அறிந்திருந்த நான் எதிர்பார்க்கவே செய்தேன். ஆனால், நல்ல காலமாக வள்ளுவன் கோபப்படவில்லை. சற்று நிமிர்ந்து உட்க்கார்ந்து கொண்டு, “டேய்! நெருப்புப் பத்தி ஏரியேக்கை, பெட்ரோல் ஊத்தி அதை அணைக்க நினைக்கிறவன் பேயனெடாப்பா!” என்றான். (48)

வள்ளுவன் கதைக்கும் பாணி அறியாத குளிப்பறை முதலியவர்கள் இது கேட்டுக் குழம்ப, அவனே ” அதுமாதிரித்தான், ஆக்கள் கதைக்கிற கதையளால எங்கடை காதல் நெருப்புத் தணியாது. இன்னும் பத்திக்கொண்டு எரியும்!” என்று விளக்கம் தந்தான்.

“எடே! இவனைப்பார்த்தால் வாசுகி தன்ரை ஆளெண்டு ஊர் முழுக்கத் தெரிஞ்சது இவனுக்குப் புழுகம் போலை எல்லோ கிடக்கு!” என்றான் தாசன்.

“இல்லையெண்டு சொல்ல மாட்டன். கள்ளு அடிக்க அடிக்கத்தான் சந்தோஷமடாப்பா. அதுமாதிரி லவ் மாட்டர் வெளியிலை வரேக்கை தானே சந்தோசம்!” (45) என்று சிரித்தான் வள்ளுவன். அவன் இடைக்கிடை சங்கராக்களோடு கூவில் பக்கம் போய் வருகிறவன் என்று தெரிந்திருந்ததனால் இந்த உதாரணம் எனக்கு வியப்பை அளிக்கவில்லை.

மேலும் வள்ளுவன், “உண்மையில மச்சான் நான் இப்ப அவளைக் காணுறதில்லை. அதாலை கொஞ்சம் கவலைதான். இப்ப ஊராக்கள் எங்களைச் சேர்த்துக் கதைக்கிற கதைகளைக் கேட்க அதிலை வாற சந்தோஷத்திலைதான் சீவிக்கிறன். நல்ல காலம் சனத்துக்கு அது விளங்கிறதில்லை” (41) என்றான்.

தெடர்ந்து அவனே, “ஊரறிய விஷயம் வெளிப்பட்டாப்போலை, அவளைச் சந்திக்க ஏலாமல் போயிட்டுது. ஆனால் முந்தி அவளைச் சந்திச்ச நினைவுகளை ஆக்கள் எடுத்துப் பேசுறதாலை, இப்பவும் அடிக்கடி அவளைச் சந்திக்கிறமாதிரியே ஒரு பீலிங். இது எனக்கு மணி தானே! (43)

உண்மையிலை, ஆக்கள் கதைக்காமல் விட்டால் இம்மடைக்கு அவளைக் கொஞ்சம் மறந்திருப்பனோ தெரியாது. ஆனால், ஆக்கள் எடுத்தெடுத்துக் கதைக்கிறதாலையும், அதைக்கேட்டு வீட்டிலை ஏசுறதாலையும், என்ரை மனசிலை அவளின் நினைவுகள் திரும்பத் திரும்ப மலருது மச்சான் (44)” என்று லெக்சர் அடித்தான்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, “கதைக்கிறவைக்குத் தெரியுமே, அவளின்ரை அருமையும், எங்கடை அன்பின்ரை தன்மையும்! தெரியாதவை என்னவும் கதைக்கலாம். எங்கடை உறவைப்பற்றி எங்களுக்குத்தான் தெரியும் (42)” என்று முடித்தான்.

தாசன் முதலியவர்களுக்கு இவன் கதைப்பதெல்லாம் பெரிய புதினமாய் இருந்தது. உதயன் ஆழ்ந்த சிந்தனையில் காணப்பட்டான். குளிப்பறை இதையெல்லாம் பெரிய பகிடியாக எடுத்து விழுந்து விழுந்து சிரித்தான். 

வள்ளுவனுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சிரிப்பது அதுதான் கடைசித் தடவையாக இருக்கும் என்று நாங்கள் யாருமே நினைத்திருக்கவில்லை.

*-*

இது நடந்து நாலாம் நாளே வள்ளுவனைக் கொழும்புக்கு அனுப்பி விட்டார்கள். வள்ளுவனின் மாமா வந்து கையோடையே கூட்டிக்கொண்டு போய் விட்டார். வேண்டுமென்றே கடைசி நேரம்வரை இரகசியமாக வைத்திருந்து, கிட்டத்தட்ட ஒரு ஆட்கடத்தல் மாதிரி நிறைவேற்றி விட்டார்கள். வாசுகிக்கு எந்த விதமான செய்தியும் அனுப்ப வள்ளுவனுக்கு இடமே இருக்கவில்லை.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை, நானும் சாண்டோவும் அந்தி சாயும் நேரத்தில் மறுபடியும் மானிப்பாய் மதகில் அமர்ந்திருந்தோம். வள்ளுவன் இல்லாததால் அந்த இடமே வெறித்த மாதிரி இருந்தது. வள்ளுவன் விவகாரத்தைத் தான் நாங்கள் மதகில் இருந்து அலசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு இந்த விவகாரம் முழுவதும் ஒரு பக்கம் பூராயமாகவும் இன்னொரு பக்கம் சீரியஸாகவும் இருந்தது.

அன்று சந்திர கிரகண நாள். மாலை ஆறு மணிக்குப் பூரண நிலவு கிழக்கு வானத்தில் எழும்போதே கிரகணம் பிடிக்கத் தொடங்கி விட்டது. மறையும் சூரியனின் அந்தி வெளிச்சமும் கீழ்வானில் எழுந்த நிலவின் சோகை பிடித்த செந்நிற வெளிச்சமும் படர்ந்துவந்த இரவின் இருளும் சேர்ந்து ஒரு விசித்திரமான ஒளி-இருட் கலவை நிலத்தை ஆக்கிரமித்திருந்தது.

அந்த நேரத்தில் வாசுகியும் தயாவும் எம்மை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தோம். வழமைபோலவே வாசுகி குனிந்த தலை நிமிராமல் எங்களைக் கடந்து போய்விடும் என்று நினைத்தேன். ஒருவேளை வள்ளுவன் இங்கே இருக்கலாம் என்று தேடிக்கொண்டு வருகிறதோ என்றும் எண்ணினேன். ஆனால் இரண்டும் நடக்கவில்லை. வாசுகி நேராக எம்மை நோக்கி நடந்து வந்தது. அதன் முதற் கேள்வியே “அவர் இப்ப எங்கை?” என்பதாகத்தான் இருந்தது. 

நான் கொஞ்சம் தடுமாறிவிட்டு, “எங்கையோ வெளி மாவட்டம் போட்டான் போலை. உங்களுக்கு எதுவும் சொல்லேல்லையோ?” என்று கேட்டேன். வள்ளுவன் கொழும்புக்குப் போய்விட்டான் என்ற தகவலை வாசுகிக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருந்தது. அதே நேரம், பொய் சொல்லவும் மனம் வரவில்லை.

“இல்லை. என்னை வீட்டிலை வைச்சு அடைச்சுப் போட்டினம். இண்டைக்குத்தான் இவள் தயா வீட்டை போக விட்டவை. அதுவும், அவர் ஊரிலை இல்லை எண்டு தெரிஞ்ச பிறகுதான் விட்டிருக்க வேணும். அவரை எங்கயோ அனுப்பிப் போட்டினம் எண்டு இவள் தயா சொல்லுறாள். இவளுக்கும் அதுக்கு மேலை தெரியேல்லை. அதுதான் இதிலை நீங்கள் யாரும் இருந்தால் கேட்கலாம் எண்டு வந்தன்” என்று வாசுகி சொன்னது. 

உண்மையில் வாசுகி இதற்கு முன்பு எங்கள் யாரோடும் இப்படி நின்று கதைத்ததே இல்லை. வாசுகியைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. ஆனால், கவலையில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லுவதென்பது அப்போது (இப்போதும் தான்!) எனக்கு அவ்வளவு கைவந்த கலையல்ல.

“ஆக்கள் கண்டபடி கதைக்கிறதாலை உங்களுக்கும் சரியான கஷ்டமாய் இருந்திருக்கும்” என்று ஏதோ என் மனதில் பட்டதை, தேறுதலாக இருக்கும் என்ற எண்ணத்தில், சொன்னேன். 

வாசுகி நிலவை வெறித்தது.

“எங்களைப் பற்றி ஆக்கள் காது, மூக்கு வைச்சுக் கதைக்கிற கதைகளைக் கேட்க எனக்கு ஒரே நேரத்திலை சிரிப்பாயும் அழுகையையாயும் இருக்கு. உண்மையிலை, நாங்கள் அந்த மகிழ மரத்தடியிலை கூட ஒரே ஒரு நாள் தான் ஆறுதலாய்க் கதைச்சிருக்கிறம். அது அவர் கடிதம் தந்த அந்த முதல் நாள் தான். அண்டைக்கு நான் டியூஷனுக்கு வரேல்லை எண்டு வீட்டிலை யாரோ போட்டுக் குடுத்திட்டினம். அதுக்குப்பிறகு டியூஷன் முடிஞ்சபிறகு தான் அவரை மீட் பண்ணுறனான். சிலவேளை இவள் தயாவும் கூட இருப்பாள். கனக்கக் கதைக்கேலாது.

இப்பிடி ஒரு நாள் உருப்படியா மீட் பண்ணின எங்களைப் பற்றி ஆக்கள் கதைக்கிற கதை இருக்கே… ஏதோ நாங்கள் கலியாணம் கட்டிப் பிள்ளையும் பெத்த மாதிரி… இந்த நிலவை இண்டைக்குக் கிரகணம் பிடிச்ச மாதிரி என்ரை பெயரையே இவையின்ரை கதை கெடுத்துப்போட்டுது!” (46)

இப்படிச் சொல்லும்போது வாசுகியின் முகத்தில் தெரிந்தது நாணமா? மகிழ்ச்சியா? சோகமா? கோபமா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாம் கலந்த ஒரு கலவை உணர்வு!

“ஒவ்வொரு நாளும் காலையிலையே ஊர்ப் பொம்பிளைகள் ஆராவது வந்து என்னையும் அவரையும் பற்றி இல்லாதது பொல்லாதது ஏதாவது இயற்றிச் சொல்லி வத்தி வைச்சுப்போட்டுப் போகினம். அம்மா, அதைக்கேட்டுப் பகல் முழுவதும் கரிச்சுக் கொட்டிக்கொண்டே இருக்கிறா.. ஆனால் என்னவவோ தெரியேல்லை. இத்தனை பழிச்சொல்லும் ஏச்சுப்பேச்சும் கேட்டும் அவரின்ரை ஞாபகம் கொஞ்சம் கூடக் குறையேல்லை. உண்மையிலை, இந்தக் காதல் பைத்தியம் பழிச்சொல்லையே எருவாகவும். அம்மாவின் ஏச்சைத் தண்ணியாகவும் எடுத்து மனசிலை இன்னுமின்னும் வளருதே!” (47) இப்படிச் சொல்லும்போது வாசுகியின் கண்கள் கலங்கின.

“ஒருவழியிலை, இப்பிடிக் கெட்ட பெயர் வந்தது எனக்கும் சந்தோசம் தான். ஏனெண்டால், என்ரை நிலைமையை அவர் அறிஞ்சால், இப்பிடிக் கெட்ட பெயரை எனக்குத் தந்திட்டு அவர் சும்மா இருக்க மாட்டார். அவர் உண்மையான ஆம்பிளை எண்டால், என்னை வந்து கூட்டிக்கொண்டு போக ஏதாவது செய்வார். (50) இஞ்சை எனக்கிருக்கிற கஷ்டத்தையும், என்னுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கிற பழியையும் நீங்கள் தான் அவருக்கு எப்படியாவது அறிவிக்க வேண்டும்” என்று வாசுகி கேட்டுக்கொண்டது. இதைக்கேட்டதும், முதல் வாரத்தில் “பெயர் கெடுவது எனக்கு மகிழ்வே” என்று வள்ளுவன் சொன்னது எனக்கு நினைவு வந்தது. உண்மையிலேயே இவர்கள் ஒத்த மனதுடைய காதலர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னெண்டாலும் நீங்கள் இரண்டு பேரும் இப்பிடிப் பேரைக் கெடுத்துப்போட்டு நிக்கிறியளே, அதுவும் நீங்கள் பொம்பிளைப் பிள்ளை. உங்களுக்குப் பயமா இல்லையோ?” என்று கேட்டேன்.

“படப்பிடாதை பயப்பிடாதை எண்டு சொல்லிக் கொண்டிருந்தார். இப்ப அவரே விட்டிட்டுப் போயிட்டாராம். அதுக்குப்பிறகு ஊரின்ரை பழிச்சொல்லுக்குப் பயந்து என்ன ஆகப்போகுது?” (49)

இப்படிச் சொல்லும்போதே, வாசுகிக்கு விம்மலுடன் அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அதை எங்களிடமிருந்து மறைப்பதற்காக, வாசுகி முகத்தைச் சட்டென்று மற்றப் பக்கம் திருப்பிக் கொண்டு, தயாவையும் இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடி விட்டது.


(1) அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

(2) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

(3) கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

(4) பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

(5) கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

(6) கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

(7) பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

(8) கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

(9) ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

(10) உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

(11) யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

(12) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

(13) நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

(14) அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

(15) இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

(16) கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

(17) கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

(18) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

(19) செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

(20) உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

(21) காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

(22) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

(23) மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

(24) நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

(25) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(26) அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

(27) மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

(28)அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

(29) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

(30) மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

(31) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்.

(32) உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு

(33) கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்.

(34) வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

(35) உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

(36) கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.

(37) கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.

(38)நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

(39) இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(40) உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.

(41) அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

(42) மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

(43) உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

(44) கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

(45) களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

(46) கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

(47) ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

(48) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

(49) அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

(50) தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

3 கருத்துக்கள்

  1. எட கறுமகாண்டத்தை!
    என்னதொரு கற்பனை!
    என்னதொரு விளக்கம்!
    உதை வாசிச்சாப்பிறகு எந்த மரமண்டைக்கு
    திருக்குறளை அதுகும் இங்கினை வாசிச்ச
    காமத்துப்பால் வரிகள் பிடிபடாதாம்?

    ந.குணபாலன்

  2. எட கறுமகாண்டத்தை!
    என்னதொரு விளக்கம்!
    உதை வாசிச்சாப்பிறகு எந்த மரமண்டைக்கு
    திருக்குறளை அதுகும் இங்கினை வாசிச்ச
    காமத்துப்பால் வரிகள் பிடிபடாதாம்?

    ந.குணபாலன்

Leave a Reply to ந.குணபாலன் Cancel reply

Your email address will not be published.