கவிராட்சசன்

 
 
சோழர் காலமென்பது பலவகைகளில் தமிழர்களின் பொற்காலமென்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது  படைத்துறை, பூகோள  அரசியல்,  ராஜதந்திரம்,  கடலாதிக்கம்,  வெளிநாட்டு வர்த்தகம்,  கட்டடக்கலை, லலித  கலைகள், தமிழ் இலக்கியம் இவையெல்லாவற்றுக்குமே ஒரு பொற்காலம் அது.  பொதுவாக, ஒரு பேரரசின் இலக்கிய / கலைத்துறைப்  பொற்காலமானது அதனுடைய படைத்துறைப் பொற்காலத்திற்குச் சற்றுப் பிற்பட்டே  அமையும். அதாவது, போர்களில்  வெற்றிபெற்று, எல்லைகளை  விஸ்தரித்து, வெளிநாடுகளில் இருந்து செல்வங்களைக் கொண்டுவந்து குவித்து, மக்கள் யாவரும் பாதுகாப்புடனும் செழிப்புடனும் வாழுகின்ற நிலை ஒன்று ஏற்பட்ட பின்னரே கலைகளும் இலக்கியங்களும் உச்சத்தைத் தொடும்.  எனவே சோழர்களின் படைத்துறைப் பொற்காலம் என்பது முதலாம் ராஜராஜன் காலத்தில் இருந்து முதலாம் குலோத்துங்கன் காலத்தின்  இறுதி வரை (அதாவது கிபி 985 –  கிபி 1120) என்று சொன்னால்,  அவர்களின்  இலக்கியப்  பொற்காலம் என்பது முதலாம் குலோத்துங்கன்  காலத்தின்  பிற்பகுதியில்  இருந்து மூன்றாம் குலோத்துங்கன் காலத்தின் இறுதிவரை (அதாவது கிபி 1100 –  1217) என்று சொல்லலாம். ஜெயங்கொண்டார்,  ஒட்டக்கூத்தர், புகழேந்தி, சேக்கிழார்,  ஒளவையார் (அதாவது சோழர்கால ஒளவையார்: ஒளவையார் பலர்! ), கம்பர் முதலிய மிகப்பெரும் கவிஞர்கள் இக்காலத்தில்  வாழ்ந்திருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டும்   இருந்திருக்கின்றனர். இவர்களின் கவிதைகளின் பாடுபொருள்கள் வேறுபட்டிருந்தாலும் இவர்களுக்கிடையில் இருந்த பொதுவான அம்சம் அவர்களின் அதிசயிக்க வைக்கின்ற சொல்வளமும், மொழி ஆளுமையும் (இதற்கு ஒளவையார் ஓரளவு விதிவிலக்கு).  தமிழ்மொழி இவர்களுக்கு வசப்பட்டதுபோல, வளைந்தது  கொடுத்ததுபோல, இவர்களுக்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட  காலத்தில் வந்த எந்தக்  கவிஞருக்கும்  வசப்படவில்லை;  வளைந்து  கொடுக்கவில்லை: அருணகிரிநாதர் ஒருவரைத் தவிர.  திருவள்ளுவர், இளங்கோ, பாரதி முதலியோர் யுக கவிஞர்கள்.   அவர்களது பாடுபொருள்களின் காரணமாகத்  தமிழ்மொழியின் மேலும்  தமிழ் மக்களின்மேலும் (திருவள்ளுவரைப்  பொறுத்தவரை, உலகமக்கள் மேல் என்றுகூடச் சொல்லலாம் ) அவர்கள் செலுத்திய தாக்கம் மகத்தானது. ஆனால், அவர்களுக்குக்கூட சோழர் காலக் கவிஞர்கள் அளவுக்கு மொழி ஆளுமை இருந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.  வாழ்க்கையில் எப்போதாவது கவிதை எழுத முயற்சி செய்தவர்கள்தான் சோழர்காலக் கவிஞர்களுக்குத் தமிழ்மொழி எவ்வளவு தூரம் வசப்பட்டிருக்கிறது என்பதை முழுதாகப் புரிந்துகொள்ள கொள்ள  முடியும்.
 
 
இந்தக் கவிஞர்களுக்குள்ளே,  கம்பருக்கு முன்பே “கவிச்சக்கரவர்த்தி” என்று பட்டம்பெற்றுப் புவிச்சக்கரவர்த்திகளாகிய சோழ மன்னர்களின் மதிப்பைப் பெற்று வாழ்ந்த கவிஞர் ஒருவர்  உண்டு. அவரது கவிதைகள் தற்காலத்தில் அதிகம் கவனம்  பெறுவதில்லை. அவர்தான் ஒட்டக் கூத்தர். இவர் விக்கிரம சோழன் (கிபி 1120 –  1135), அவன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கன் (கிபி 1135 –  1150), அவன் மகனாகிய இரண்டாம் ராஜராஜன்  (கிபி 1150 –  1173 ) ஆகிய மூன்று சோழ சக்கரவர்த்திகளின்  அவையிலே தலைமைக் கவிஞராக அமர்ந்திருந்த முதுபெரும் கவிஞர் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பேரரசர்களின் ஆட்சிக்காலங்களின் கூட்டுத்தொகை ஐம்பது ஆண்டுகளே இருப்பதனால் இது  சாத்தியமே. இந்த மூன்று அரசர்கள் மீதும் இவர் பாடிய உலாப்   பிரபந்தங்களும், இரண்டாம் ராஜராஜன் மீது பாடப்பட்ட “தக்கயாகப்பரணி” என்ற பரணியும் இவர் பாடிய முக்கியமான காவியங்களாகும். இவற்றைத்தவிர “உத்தர  ராமாயணம்” எனும் ராமாயணத்தின் பகுதியை இவர் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இவற்றைத்தவிர, இவர் எழுதியதாகச் சொல்லப்படும் தனிப்பாடல்கள்  பலவுண்டு. இவரைப்பற்றிப் பல  செவிவழிக் கதைகளுமுண்டு. கம்பர், ஒளவையார், புகழேந்தி முதலியவர்களோடு இவர் போட்டியிட்டதான கதைகளும் உண்டு. இதனாலும், இவருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் வித்துவச் செருக்காலும்,  இவரைக் கொஞ்சம் ‘வில்லத்தனமான’ கவிஞராகவே பலர் எண்ணுகின்றனர்.
 
இவரைப்பற்றி  ஏற்கனவே  நிறையக்  கேள்விப் பட்டிருக்கிறேன். இருந்தும் அவரது கவிதைகளை ஆற அமரப்  படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. சமீபத்தில் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்குத் தயார் படுத்திக்கொண்டிருக்கையில் தான் அவரது கவிதைகளைக் கண்டறிந்தேன். உண்மையிலே அவரது சொல்வளமும் அதில் வழியும் தமிழின்பமும், அருணகிரியார் போல, ஜெயங்கொண்டார் போல, அதிசயிக்க வைக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு மகாகவிஞரை ஏன்  தமிழுலகம் அதிகம் கண்டுகொள்வதில்லை என்று யோசிக்க வைக்கின்றன. பொருளைப் பொறுத்தவரையில் மன்னரைத் துதிபாடும் அடிவருடல்தனம் தான். இருந்தாலும், அதில்கூடப் பக்தி என்ற பெயரில் அந்நிய வடதேசத்து மன்னனின் அடிவருடிய மற்றைய கவிச்சக்கரவர்த்தியை விடத் தமிழர்களாகிய சோழர்களின் அடிவருடிய இந்தக் கவிச் சக்கரவர்த்தி எவ்விதத்தில் குறைவென்றும் தோன்றியது. அவரது மொழிவளத்துக்கு உதாரணமாகச் சில இடங்கள்:
 
தனது காலத்துக்கு  முற்பட்டவனும், தனது பாட்டுடைத் தலைவனாகிய  விக்கிரம சோழனின் தந்தையுமான முதலாம் குலோத்துங்கனை அவர் வர்ணிப்பதைப்   பாருங்கள்.
 
“சேலைத் துரந்து, சிலையைத் தடிந்து, இருகால்
சாலைக் களமறுத்த தண்டினான் – மேலைக்
 
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுங் கைக்கொண்
டடல்கொண்ட மாராட்டி ரானை – உடலை
 
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமும் மாற்றி – அறத்திகிரி
 
வாரிப் புவனம் வலமாக வந்தளிக்கும்
ஆரிற் பொலிதோ ளபயன்….”
 
வாவ்!
 
தொடர்ந்து தொடர்ந்து தொடுத்துச் செல்லும் கவியமைப்பு அகவல் மாதிரி இருக்கிறது. ஆனால் இது அகவல் அல்ல.   ஏனெனில், இரண்டு அடிக்கு ஒரு முறை வரியின் இறுதியில் வரியை முறித்து மேலும் ஒரு எதுகையை வைக்கிறார். இதனால் ஓசையின்பம் பிரமாதமாக இருக்கிறது. இது கலி  வெண்பா. இப்படி எழுதிக்கொண்டு போவதற்கு  எவ்வளவு சொல்வளமும் மொழி ஆளுமையும் வேண்டுமென்று மரபுக் கவிதை எழுதிப் பார்த்தால்  தெரியும்.  ஆனால் மனிதர் தனது மூன்று உலாப்பிரபந்தங்களையும் அதாவது பல நூற்றுக்கணக்கான வரிகளை இப்படியே எழுதி  இருக்கிறார். அதற்காகப் பிற்காலப் புலவர்கள் (முக்கியமாக ஐரோப்பியர் ஆட்சிக்காலங்களில் வாழ்ந்தவர்கள்)  செய்ததுபோல, தேவையில்லாத அல்லது பொருத்தமில்லாத சொற்களை வலிந்து ஓசைநயத்திற்காகச் சேர்க்கவில்லை. மிக அனாயாசமாகத் தொடுத்துக்கொண்டு போகிறார். இடது கையாலேயே இப்படி எழுதக்கூடியவர் என்று வாசிக்கும்போதே புரிகிறது. ஒரு கற்றுக் குட்டிக் கவிஞனாக எனக்கு ஏற்பட்ட வியப்பு இன்னும் மாறவில்லை. 
 
இதற்குப் “பொருள்” சொல்வது அவரது  சொல்வளத்துக்கும், ஓசை நயத்துக்கும் செய்யும்  துரோகம்.  கவிதையைக் கவிதையாகவே வாசித்து அடைகிற இன்பம் அதனை வசனமாக்கி வாசிப்பதில்  கிடைக்காது. அது, நல்ல மொரமொரப்பான முறுக்கை மருமகள்  ஆக்கிவைக்க, பல்லில்லாத மாமியார் அதைச் சுடுநீரில் கரைத்துக் களியாக்கித் தின்பதுபோல. “முறுக்குக்  களியைச்” சாப்பிட்டுவிட்டு முறுக்கின் சுவையை மதிக்க  முடியுமா?  இருந்தாலும், ஆர்வம் உள்ளளவு அறிவைப்பெறச் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்காகப் பொருளை விரித்துச் சொல்லுகிறேன்.
 
(பாண்டியர்களின்) மீனை  அழித்து, (சேரர்களின்) வில்லை  உடைத்து, சாலைப்  போர்க்களத்திலே (சேரர்களின் கடற்படையை / கடற்படைத் தளத்தை  /  கப்பல் கட்டும் தளத்தை ) இருமுறை அழித்த சைனியத்தை உடையவன், வீரம் மிகுந்த மகாராஷ்ட்டிர மன்னனைக் (சாளுக்கிய விக்கிரமதித்தனை) கொன்று  (அல்லது  தோற்கடித்து, துரத்தி  அடித்து),  மேலைக் கடல் (அரபிக் கடல்) வரை கைப்பற்றி, கொங்கணத்தையும் கன்னடத்தையும் வெற்றிகொண்டு, வடக்கிலுள்ள (இமய /விந்திய) மலை வரை கைப்பற்றி, உலகில் கலியின்  ஆட்சியை நீக்கி, கடல் வணிகத்திற்குச் சுங்க விலக்கு   அளித்து, தனது தர்மசக்கரமானது கடல்சூழ்ந்த உலகம் முழுவதும் ஆணை செலுத்தும்படி ஆளுகின்ற, ஆர்த்திமாலையினாலே பொலிகின்ற  தோள்களையுடைய  அபயன். அபயன் என்பது முதலாம் குலோத்துங்கனின் விருதுப் பெயர்களில் ஒன்று.
 
 அடுத்ததாக, பாட்டுடைத்தலைவனாகிய  விக்கிரம சோழனுக்கு வருவோம். “உலா” என்ற வகைப் பிரபந்தம் தலைவனின் ஒரு நாள் நடவடிக்கைகளை  விரித்துரைப்பது. மாலையிலே அவன் நகர் உலா வர, இளம்பெண்கள் அவனது தோற்றத்தைக்கண்டும் புகழைக் கேட்டும் மனதைப்  பறிகொடுப்பதுதான் பிரதான  அம்சம். இருந்தாலும், அதிகாலை நேரத்தில் இருந்து தலைவனின் நடவடிக்கைகள் பற்றிச்   சொல்லவேண்டும். அதாவது பேரரசன் விழித்தெழுவதில் இருந்து தொடங்க வேண்டும். தூங்குபவன்தானே விழிக்க முடியும்? எனவே விக்கிரம சோழன் தூங்குகிற அழகை ஒட்டக்கூத்தர்  சொல்கிறார். அவனது  தூக்கத்தைப் பாடுகிற சாக்கிலேயே அவன் பெருமையைச்  சொல்லிவிடுகிறார். எவ்வாறு?  மூன்று பெண்களுடன் தூங்குகிறானாம் விக்கிரமன். அதற்காக அவன் கேவலமான பெண்பித்தன்  என்பதல்ல. ஏனெனில், மூன்றுபேரில் ஒருத்திதான் மானிடப்பெண்.
 
“தன்னுடைய ஆணைச்  சக்கரத்தையே மேகலையாக அணிந்த அல்குலை உடைய ( அதாவது தனது ஆட்சிக்கு அடங்கிய ) நிலமடந்தையின்  தோள்களிலும்,  ஏழுலகம் உடைய குலமங்கையாகிய மகாராணியின்  கொங்கைகளிலும், தாமரைப்பூவில் வாழ்கின்ற லக்ஷ்மிதேவியின் நீண்ட கண்களிலும் அவன் தூங்குகிறான்”  என்கிறார். விக்கிரம சோழன் தூங்குகிற போதுகூட உலகம் எப்போதும் அவன் பிடியில் இருக்கிறது; அவன் மனைவியின் அன்பு எப்போதும் அவனுக்கு இருக்கிறது; செல்வங்களைத் தரும் லக்ஷ்மிதேவியின் கடைக்கண் பார்வை எப்போதும் அவன்மேல் இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்.
 
“மேய திகிரி விரிமே கலையல்குற்
றூய நிலமடந்தை தோள்களினும் – சாயலின்
 
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் – போதில்
 
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள்….”
 
இப்படி உறங்கிய விக்கிரமசோழன் எழுந்து காலைக்கடன்களை முடித்துச் சிவனை வணங்குகிறான்.  இதனை,
 
“மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மௌலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் – கறைக்களத்துச்
 
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி…”
 
என்று அழகாகச் சொல்லுகிறார்.
 
அடுத்ததாகப் பாட்டுடைத் தலைவன்  உலாவருகிறான். அவனைக்கண்டு மயங்கும் பெண்களை ஒட்டக்கூத்தர் வர்ணிக்கிறார். சாதாரணமாகக் கவிஞர்கள் அழகிய பெண்களை வர்ணிக்கும்போது கிளியைப்போன்ற  மொழியுடையவள், முல்லை போன்ற  சிரிப்புடையவள், மான்போன்ற மருண்ட பார்வை உடையவள், மாதவிக்கொடிபோல மெலிந்த இடையை உடையவள் என்றெல்லாம்  வர்ணிப்பார்கள்.  ஆனால், ஒட்டக்கூத்தருடைய கதாநாயகியின் தரத்துக்கு இப்படி வர்ணனைகள் போதாது. ஒட்டக்கூத்தரின் தரத்துக்கும் இவை போதாது. எனவே, ஒட்டக்கூத்தர் ஒரு reverse  engineering  செய்கிறார்.
 
ஒட்டக்கூத்தரின்  கதாநாயகி  கிளியைப்போல்  மொழிபேசவில்லை. கிளிதான்  அவளைப்போலப் பேசுகிறது!
 
ஒட்டக்கூத்தருடைய கதாநாயகி முல்லைபோல  நகைசெய்யவில்லை. முல்லைதான் அவளது நகையைப்போலப்  பூக்கிறது!
 
ஒட்டக்கூத்தருடைய கதாநாயகி மான்போன்ற பார்வையுடையவள் அல்ல. மான்தான் அவளைப்போல மருண்டு  பார்க்கப்  பார்க்கிறது!
 
ஒட்டக்கூத்தருடைய கதாநாயகி மாதவிக்கொடி போல இடையைக்  கொண்டிருக்கவில்லை. மாதவிக்கொடிதான் அவள் இடைபோல  மெல்லியதாய் இருக்கிறது!
 
இப்படித்  தன்  கதாநாயகியின் அழகை உயர்த்திச்  சொல்லியும் ஒட்டக்கூத்தருக்குத் திருப்தி  உண்டாகவில்லை. ஆகவே இன்னுமொன்று செய்கிறார்.
 
தனது கதாநாயகி இளமைப்பருவத்தில் இருக்கும்போது மிக அழகாக இருந்தாள். பிறகு அவள் வளர்ந்து வந்தபோது தனது குதலைமொழியைக் கிளிக்கும், நகையை  முல்லைக்கும், பார்வையை  மானுக்கும், இடையின் துடிப்பை மாதவிக்கொடிக்கும் கொடுத்துவிட்டாள்  என்கிறார். இப்படித் தானம் செய்துவிட்டதால் அவளது அழகு குறைந்துவிட்டதா? அதுதான் இல்லை! ஏனென்றால்…
 
அவள் தனது மழலையைக் கிளிக்குக்  கொடுத்துவிட்டு, பதிலாகக் குழலின் இனிமையைத் தன் குரலில் வாங்கிக்கொண்டு விட்டாள்!
 
சிரிப்பை முல்லைக்குக்  கொடுத்துவிட்டு, பதிலாக முத்தின் ஒளியைத் தனது புன்னகையில்  வாங்கிக்கொண்டாள்!
 
கள்ளமறியாத  மருண்ட பார்வையை மானுக்குக்  கொடுத்துவிட்டு, கள்ளம் மிகுந்த கடைக்கண் பார்வையிலே வேல்போன்ற கூர்மையைக்காட்டி வீசுவதற்குக்  கற்றுக்கொண்டாள்!
 
இடையின் மென்மையான அசைவை மாதவிக்கொடிக்கு  அளித்துவிட்டு, மின்னலென இடை ஒடியும்  நடையைக் கற்றுக்கொண்டாள்!
 
என்கிறார். 
 
“மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசை கவர்ந்து கொண்டாள் – நிழல்விரவு
 
முன்னர் நகை தனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் – கன்னி
 
மடநோக்கந் தான்வளர்த்த மானுக் களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் – சுடர்நோக்கும்
 
தானுடைய மெய்ந்நுடக்கந் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள்….”
 
ஒரு இளம் பெண்ணின் அழகு அவளது வளர்ச்சியோடு அதிகரித்து வருவதை மிக அழகாக இவ்வரிகள் காட்டுவதோடு, சின்னப்பெண்ணின் வஞ்சமற்ற இயல்பான  அழகு போய்க்,  கன்னிப்பெண்ணின் கள்ளம் மிகுந்த, கவனத்தை எதிர்பார்க்கின்ற அழகு கதாநாயகிக்கு வந்துவிட்டது என்பதும் ஊடுபொருளாகக் கவிதையிலே தொக்கு நிற்கிறது.
 
குலோத்துங்கனின் உலாவைப்பார்க்கும் இன்னொரு இளம்பெண்னைப்  பற்றிச் சொல்ல வருகிறார்.  இவளோ உலகம் அறியாத சிறு பேதை. மயக்கும் அழகுடையவள்  ஆனாலும், கள்ளம் அறியாத அழகு  அவளுடையது. அவளைப்பற்றிச் சொல்லும்போது “இவள் இடி இடிப்பதோடு மழை வரும்  அறிகுறி கண்டு ஆடி அறியாத  மயில். இன்னும் மலராத தாமரை மொட்டு. பேசி அறியாத சிறுகிளி. இன்னும் தளிர்க்காத சூதம். தழையாத  இளைய  வஞ்சிக்கொடி. வளர்ந்து குளிர்நிலவை வீசாத  பிறைநிலா. வண்டுகள் இன்னும் வந்து மொய்க்காத  பூங்கா. ருசிக்கப்படாமல் மரத்தில் இருக்கின்ற தேன்.” என்கிறார்.
 
” இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை – கனைமுகினோர்
 
ஆடாத தோகை யலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை – சூடத்
 
தளிராத சூதந் தழையாத வஞ்சி
குளிராத திங்கட் குழவி – அளிகள்
 
இயங்காத தண்கா விறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி!”
 
“ஆளான ஒரு சேதி   அறியாமலே அலைபாயும் சிறுபேதை” என்ற தற்காலச்  சினிமாப்பாடல் நினைவில்  வருகிறது.  இந்த மனிதர் மேலுள்ளபடி வசனமாக எழுதியிருந்தால் தற்காலப்  புதுக்கவிதைப்  பூஷணங்கள்  “ஆகா அருமையான கவிதை. என்ன படிம அழகு. எப்படி உவமைகள்” என்று  மாய்ந்திருப்பார்கள்.  பாவம் ஓசை  நயமுடைய  கலிவெண்பாவில் எழுதும் அதீத திறமையின் சாபத்தால் இவர் கவிதைகள் கவனிப்பாரற்றுக்  கிடக்கின்றன.
 
ஒரே விடயத்தை மறுபடி மறுபடி வர்ணிக்கும்போது வெவ்வேறு விதமான உவமைகளையும்  உருவகங்களையும்  கையாள வேண்டும். உலாப்பாடல்களோ பெண்ணழகை மறுபடி மறுபடி வர்ணிக்க வைக்கும்  இயல்புடையன. ஒரே உலாவிலேயே அரிவை, தெரிவை  முதலிய ஏழு விதமான பெண்களின் அழகை வர்ணிக்க வேண்டும். ஆனால் ஒட்டக்கூத்தருக்கோ கற்பனை வறுமை ஏற்பட்டதாகவே  தெரியவில்லை. ஒரே பிரவாகமாகப் பொங்கிப் பெருகுகிறது கவி.
 
மடந்தைப்பருவப் பெண்ணை அவர் வர்ணிக்கும் விதத்தைப்பார்ப்போம்.
 
காமதேவன் சிவன் கோபத்திற்கு இலக்காகி  எரிந்தபோது வெப்பம் தாங்காமல் அவன் கண்கள் சிவந்தனவாம்.  அப்படிச் சிவந்த கண்களின் சிவப்பே, இந்த மடந்தையின் இதழ்களில் வந்து நிரந்தரமாகத்  தங்கி விட்டதாம். “சயந்தொலைய வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு வந்து திரண்டனைய வாயினாள்” என்கிறார். பெண்களின் இதழுக்கு இப்படி ஒரு உவமையை யாரும்  சொன்னதுண்டா? மனிதன் ராட்ஷசன்! அதனால்தான் “கவி ராட்ஷசன்” என்று இன்னுமொரு பட்டப்பெயர் கொடுத்தார்கள் போலும்.
 
விளங்காதவர்க்கு விளக்க முடியாது. விளங்கிக்கொள்பவர்க்குத் தமிழ் இன்பம் முடியாது! என்ன கவித்துவம்! என்ன சொல்வளம்!! அத்தோடு சோழர் கால வாழ்க்கைமுறை பற்றிப் பல பயனுள்ள செய்திகளை இவரது காவியங்கள் மூலம் அறிய முடிகிறது.
 
இவரது “தக்கயாகப் பரணி” யைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னும்  கிடைக்கவில்லை. “ஈட்டி எழுபது” நூலைப் புரட்டிப்  பார்த்தேன். தனக்கு உதவிசெய்த சிறு வள்ளல்களைப் (அல்லது தான் பிறந்த கைக்கோளர் மரபை?)  போற்றி ஒட்டக்கூத்தர் பாடியிருக்கும் அந்நூலில் அவரது  உலாப்  பாடல்களில் வழியும் சொல்நயம், பொருள்நயத்தைக் காண  முடியவில்லை. கம்பர் எழுதியதாகக் கூறப்படும்  “ஏர்  எழுபது” கூட இப்படித்தான். பெரும் கவிஞராக இருந்தாலும்,  வயிற்றுப்பாட்டுக்காகச் சிறிய வள்ளல்களை அர்த்தமின்றிப் புகழும்போது  கவித்துவமும் வற்றிப்போகும்  போலும்! அல்லது இவை இப்பெருங்கவிஞர்களின் ஆரம்பகாலப் பாடல்களாக இருக்கலாம். சோழப்  பேரரசர்களின் கவனம் பெறமுன்பு  சிறிய வள்ளல்கள் இவர்களை ஆதரித்திருக்கலாம்.
 
இவரைப்பற்றிய சுவாரசியமான செவிவழிக்கதைகள் பல உண்டு. அக்கதைகளில் வரும், இவர் இயற்றியதாகக்கூறப்படும்  தனிப் பாடல்களும் உண்டு. எனினும், இக்கதைகள் உண்மையான வரலாறா என்று தெரியதபடியாலும், ஒட்டக்கூத்தர் கவிதைகளின் இனிமையை அறிமுகம்  செய்வதே இப்பதிவின் பிரதான நோக்கமாதலாலும், அவற்றை  நான் இங்கே தரவில்லை. 
 
புவிச்சக்கரவர்த்திகள் கோயில்கள் கட்டுவதுண்டு. ஆனால், தனதூரில் கலைமகளுக்குக் கோயில் கட்டிய கவிச்சக்கரவர்த்தி இவர். “வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்” என்ற கம்பரின் வரிகள் நினைவு  வருகின்றன. அந்தக்கோயில் இன்றும் உள்ளது.  கோயில் கட்டுகிற அளவு செல்வத்தை ஒரு கவிஞனுக்குக்  கொடுத்து அவனை மதித்த சோழர்களின் பெருங்குணமும் போற்றுதற்குரியதே.
 
 நேரமிருந்தால் இவர் கவிதைகளை நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
 
 

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *