சோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு: கிபி 1068

சோழர்களின் கடாரப்படையெடுப்பு எனும்போது எல்லோருக்கும் நினைவு வருவது ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு. இது கிபி 1025 அளவில் நடந்தது. இதில் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள் பற்றி அவனது மெய்க்கீர்த்தி விரிவாகக் குறிப்பிடுவதாலும், வேறுபல இந்தோனேசிய, மலேசிய, சீன வரலாற்று மூலங்களாலும், ஆய்வுகளாலும் இந்தப்படையெடுப்பு குறித்த விபரங்கள் கிடைக்கின்றன.

இதுபோலல்லாமல், வீர ராஜேந்திர சோழனின் (இவர் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன்) காலத்தில் நடந்த இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு மர்மங்கள் நிறைந்ததாயிருக்கிறது. இதுபற்றி பெரும்பாலும் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் அறியக் காரணம் சாண்டில்யனின் கடல்புறா என்ற நாவல். கடல்புறாவில் இந்தப்படையெடுப்பு விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டிருந்தாலும் அப்படி ஒரு படையெடுப்பு நடந்தது என்ற உண்மை ஒன்றைத்தவிர மற்றெல்லாம் சாண்டில்யனின் கற்பனையே. இந்தப்படையெடுப்பு எந்தெந்த இடங்களைக்கைப்பற்றியது, படையெடுப்பின் காரணங்கள் எவை, தளபதிகள் யார் இவையெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன.

இந்தக் கடாரப் படையெடுப்பைப்பற்றி வீரராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி கூறும்போது, “தன்கழல் அடைந்த மன்னவர்க்குக் கிடாரம் எறிந்து கொடுத் தருளி..” என்று கூறுகிறது. ஆகவே, கடாரத்து மன்னன் ஒருவன் தனது நாட்டை மீட்பதற்கு வீரராஜேந்திரனின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்பதும், அவ்வாறு நாடிய மன்னனின் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டது என்பதும் புலப்படுகிறது. கடாரத்து மன்னன் ஒருவன் தன்னாட்டை மீட்பதற்கு வீரராஜேந்திரன் உதவியை நாடியிருந்தால், அதற்குப் பெரும்பாலும் குடும்பச்சண்டை காரணமாக இருக்கும் என்பதும், அதிலும் அநேகமாகத் தனது சகோதரன் ஒருவனது சிம்மாசன உரிமைக்கு அல்லது சிம்மாசனப் பறிப்புக்கு எதிராக அவ்வுதவி நாடப்பட்டிருக்கும் என்பதையும் ஊகித்துக்கொள்ளலாம். இப்படையெடுப்பைப்பற்றி ஓரளவு நேரடியாகத் தெரிய வருவது இவ்வளவுதான்.

அநபாயன் கடாரப்படையெடுப்பில் பங்கெடுத்தானா?

கடல்புறா நாவலின்படி, அநபாயன் (பிற்காலத்து முதலாம் குலோத்துங்க சோழன்) கடாரப்படையெடுப்பில் பங்கெடுத்தான் அல்லது அதற்குத் தலைமை வகித்தான். இது உண்மையா என்று ஆராய்வதற்கு, வீரராஜேந்திரனுக்கும் அவனது மருமகன் அநபாயனுக்கும் இடையில் இருந்த மிகச் சிக்கலான உறவை விரிவாகப் புரிந்து கொள்வது பயன்தரும். அநபாயன், வீரராஜேந்திரன் சகோதரியான அம்மங்கா தேவிக்கும் கீழைச் சாளுக்கிய (வேங்கி) மன்னன் இராஜராஜ நரேந்திரனுக்கும் பிறந்த மகன். அம்மங்காதேவியின் தாய்  ‘ஒனங் கியூ’ என்ற பெயருள்ள ஒரு கடாரத்து / ஸ்ரீவிஜய இளவரசி என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதினாலும் இதற்கான உறுதியான ஆதாரங்களில்லை. அம்மங்காதேவியின் தாய் யாராக இருந்தாலும் அவளின் தந்தை ராஜேந்திர சோழன் என்பதிலும், எனவே அவள் வீரராஜேந்திரனின் சகோதரி என்பதிலும் சந்தேகமில்லை. அநபாய சோழன் கிபி 1040 களில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவன் பிறந்த இடம் தாய்வீடாகிய கங்கைகொண்ட சோழபுரம் என்றும், அவன் தனது தாய்வழி உறவினர்களுடன் வளர்ந்ததாகவும் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இது உண்மையாக இருந்தாலும், ராஜேந்திர சோழனுக்குப் பல ஆண் மக்களும் ஆண் பேரப்பிள்ளைகளும் இருந்ததால் அநபாயன் சோழ சிம்மாசனம் ஏறுவான் என்று அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

கிபி 1061 இல் ராஜராஜ நரேந்திரன் இறந்ததும், வேங்கி சிம்மாசனம் காலியானது. வழமை போலவே, மேலைச் சாளுக்கியர்கள் (கல்யாணி சாளுக்கியர்கள்) தமது ஆதரவும் தமது இரத்தமும் கொண்ட ஒருவனை வேங்கிச் சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றனர். இம்முறை அவர்களின் தெரிவாக அமைந்தவன் அநபாயனின் சித்தப்பன் முறையானவனான ஏழாம் விஜயாதித்தன். அநபாயன் வயதில் சிறியவனாக இருந்ததும் மேலைச் சாளுக்கியர்களுக்கு அனுகூலமாக இருந்திருக்கலாம். சோழர்கள், இயல்பாகவே, தமது இரத்தமாகிய அநபாயனை வேங்கிச் சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றிருப்பார்கள். இதனால், சில வருடங்களுக்கு வேங்கியில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது. இந்தக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு வழமைபோலவே மேலைச்சாளுக்கிய அரசன் ஆகவமல்லன் தனது படையை வேங்கிக்குள் கிபி 1064 அளவில் அனுப்பினான். ஆகவமல்லனின் இளையமகன் விக்கலன் தலைமையில் வந்த இப்படையை அப்போது சோழப்பேரரசனாக இருந்த வீரராஜேந்திரனும் அவனது ஆதரவு பெற்ற அநபாயனும் முறியடித்தனர். இதன்பின் அநபாயன், ராஜேந்திர சாளுக்கியன் எனும் பெயருடன் வேங்கியில் முடிசூடினான். இவ்வளவும், அநபாயனின் பாட்டனான விமலாதித்தன் முடிசூடிய கதையையும், அநபாயன் தந்தை ராஜராஜ நரேந்திரன் முடிசூடிய கதையையும் ஒத்திருந்தன. அதாவது, சோழர் ஆதரவும் மேலைச்சாளுக்கியர் ஆதரவும் பெற்ற இரு இளவரசர்கள் வேங்கி சிம்மாசனத்திற்குப் போட்டியிடுவதும், தமது பக்க இளவரசன் சார்பாக மேலைச்சாளுக்கியர் வேங்கிக்குள் நுழைவதும், உடனே சோழர்களும் தமது பக்க இளவரசன் சார்பாக வேங்கியில் நுழைந்து, மேலைச்சாளுக்கியரை முறியடித்து, தமது சார்பு இளவரசனுக்குப் பட்டம் கட்டி வைப்பதும் மூன்றாவது தலைமுறையாகவும் நடந்தது. இதற்குப்பிறகு முடிசூடிய இளவரசன் சோழ இளவரசி ஒருத்தியை மணப்பதும் நடந்தது. அதாவது, ராஜராஜன் தன் மகள் குந்தவையை விமலாதித்தனுக்குக் கொடுத்ததுபோல், ராஜேந்திரன் தன் மகள் அம்மங்கா தேவியை ராஜராஜ நரேந்திரனுக்குக் கொடுத்ததுபோல், வீரராஜேந்திரன் தன் மகளும் அநபாயன் முறைப்பெண்ணுமான மதுராந்தகியை அநபாயனுக்குக் கொடுத்தான். எனவே, ராஜேந்திர சாளுக்கியனான வேங்கி மன்னன் அநபாயன், வீர ராஜேந்திர சோழனுக்குச் சகோதரி மகனும் மகளை மணந்த மாப்பிள்ளையுமாக இருவழியில் மருமகனானான். இதன்பிறகுதான் மாமன் – மருமகன் உறவில் சிக்கல்கள் தோன்றின.

சிக்கலுக்குக்காரணம், மேலைச்சாளுக்கிய அரசன் ஆகவமல்லனின் (முதலாம் சோமேஸ்வரன்) தற்கொலை. வீரராஜேந்திரன் தலையிலான சோழப்படைகளிடம் பலமுறை தோற்ற ஆகவமல்லன், அவமானம் தாங்காமல் 1068 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி மஞ்சிரா நதியில் மூழ்கி இறந்தான். அவனுக்குப்பின், அவனது மூத்த மகனும், போர்க்களத்தில் நின்று சோழர்களுடன் போர்செய்தறியாதவனுமான சோமேஸ்வரனுக்கு (II) அரசு சென்றது. இது, இளையவனும், ஆனால் வீரமுடையவனும், பல களங்களில் தந்தைக்கு உதவியாகச் சோழர்களுடன் போரிட்டவனுமான விக்கலனுக்குப் (ஆறாம் விக்கிரமாதித்தன்) பிடிக்கவில்லை. விக்கிரமாதித்தன் சோழர்களிடம் பலமுறை தோற்றிருந்தாலும் வடநாட்டரசர்கள் பலரை வெற்றிகொண்ட இளவரசன். அவன், சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழத் தீர்மானித்தான். பல களங்களில் தன்னை முறியடித்த வீர ராஜேந்திர சோழனிடம், சாளுக்கிய அரசு முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியையேனும் தனக்குப் பெற்றுத்தருமாறு கோரித் தூதனுப்பினான்.

சாளுக்கிய நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட வீரராஜேந்திரன் விரும்பியிருக்க மாட்டான் என்பது தெளிவு. அது சோழர்களின் தலையாய எதிரியான மேலைச் சாளுக்கியத்தை நிரந்தரமாகப் பலவீனப்படுத்தக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். எனவே, அவன் விக்கிரமதித்தனுடன் பேச்சுவார்த்தையிலும் பேரத்திலும் இறங்கியிருப்பான். அநேகமாக, சாளுக்கியப்பேரரசில் அதுவரை சோழர்கள் பிடித்திருந்த பகுதியில் கொஞ்சத்தை விக்கிரமாதித்தனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைப்பதாகக் கூறியிருப்பான். சாளுக்கிய சாம்ராஜ்யத்தில் கல்யாணி நகரம்வரை (அதாவது தற்போதைய கர்நாடக முழுவதையும்) சோழர்கள் ஏற்கனவே கைப்பற்றியிருந்தாலும் கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைப்பது அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. அத்துடன், அங்கு வாழ்ந்த கன்னடர்கள் சோழர் ஆட்சிக்கு எதிராகவே இருந்திருப்பார்கள். ஆகவே, கைப்பற்றிய பகுதியில் கொஞ்சத்தை விக்கலனுக்கு விட்டுக்கொடுத்து, சாளுக்கிய சாம்ராஜ்யத்தையும் சாளுக்கியப் படைகளையும் இரண்டாகப் பிரிப்பது புத்திசாலித்தனம் என்று வீரராஜேந்திரன் எண்ணியிருந்தால் அதில் வியப்பில்லை.

ஆனால், விக்கிரமாதித்தனும் கடுமையான பேரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. முக்கியமாக, வேங்கி சிம்மாசனத்தில் உரிமையுடையவனும், தான் முன்பு வேங்கியில் தலையிடக் காரணமானவனுமான விஜயாதித்தனை அவன் காப்பாற்ற விரும்பினான். எனவே, விக்கிரமாதித்தனுக்கும் வீரராஜேந்திரனுக்கும் இடையிலான பேரத்தில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டதாக ஊகிக்க முடிகிறது.

– துங்கபத்திரைக்குத் தெற்கே இருந்த சாளுக்கிய சாம்ராஜ்யப்பகுதிகள் (கங்கவாடி, நுளம்பபாடி போன்றவை: தற்போதையை மைசூர் அல்லது தென் கர்நாடகம் ) சோழ சாம்ராஜ்யத்துடன் நிரந்தரமாக இணைதல். இப்பகுதிகள் ராஜராஜன் காலத்திலிருந்தே சோழர் ஆட்சியில் இருந்தாலும் சாளுக்கியர் அப்பகுதிகளை உரிமை கோரி வந்ததோடு குழப்பங்களையும் கலகங்களையும் உருவாக்கி வந்தார்கள். அவற்றை நிறுத்துவதாக விக்கிரமாதித்தன் உறுதி கூறி இருக்கலாம்.

– துங்கபகுதிரைக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் சோழர் கைப்பற்றிய பகுதிகளுக்கு (அதாவது இரட்டை மண்டலம், அல்லது தற்போதைய வட கர்நாடகம்) விக்கிரமாதித்தன் அரசனாக முடி சூடுதல். சோழர் கைப்பற்றாத சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள் (அதாவது மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசத்தின் பகுதிகள்) இரண்டாம் சோமேஸ்வரன் வசம் இருந்ததால் இவ்வேற்பாடு சாளுக்கிய சாம்ராஜ்யத்தைத் துண்டாடியதற்குச் சமனானது.

– விஜயாதித்தன் வேங்கிக்கு அரசனாக முடி சூடுதல்.

– விஜயாதித்தன் வேங்கியில் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளல்.

– வீரராஜேந்தரனின் மகளை விக்கிரமாதித்தன் மணப்பதுடன், அவர்களுக்குப் பிறந்த குழந்தை சாளுக்கிய சிம்மாசனம் ஏறுதல்.

இந்தப்பேரம் அநபாயனுக்கு உவப்பாயிருந்திருக்க முடியாது. ஏனெனில், பேரத்தின்படி அவன் தனது தந்தையின் நாட்டை, தனது பகைவனான விஜயாதித்தனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், சோழ சாம்ராஜ்யத்துக்கு இந்தப் பேரத்தால் நன்மை விளையும் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். எனவே, அவன் எதிர்ப்பின்றியே தனது வேங்கி அரியணையை விஜயாதித்தனுக்கு விட்டுக்கொடுத்ததாகத் தெரிகிறது. “எனக்குத் திக்விஜயம் செய்ய மனவிருப்பம் ஏற்பட்டதால் வேங்கி அரியணையைச் சித்தப்பாவிடம் ஒப்படைத்துத் தேசங்களை வெல்லக் கிளம்பினேன்” என்று அநபாயன் தனது மகனிடம் பின்னாளில் சொல்லியிருக்கிறான். இந்தக் கூற்றை அப்படியே நம்பிவிட முடியாதாயினும், போரின்றி வேங்கி அரசு கைமாறியது என்பதை நம்பலாம். இதற்குக்காரணம் தென்னிந்திய அரசியலில் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகளே. எனவே, புத்திசாலியும், ஓரளவு பெருந்தன்மை உள்ளவனுமான அநபாயன், தனக்கு உரிமையான அரியணையைத் தனது மாமன் தூண்டுதலால் / கட்டளையால் விருப்பமின்றியே விட்டுக்கொடுத்து, தகுந்த காலத்தை எதிர்நோக்கி இருந்தான்.

அடுத்திருந்த சில வருடங்களில் அநபாயன் செய்திருக்கக்கூடியவை இவை:

– அவன் வடநாட்டில் போர்களில், அல்லது அவன் டாம்பீகமாகக் குறிப்பிட்டதுபோலத் “திக்விஜயத்தில்” ஈடுபட்டிருந்திருக்கலாம்.

– அவன் சோழ நாடு சென்று சோழ அரசவையில் வாழ்ந்திருக்கலாம்.

– அவன் சோழர்கள் சார்பாகக் கடல்கடந்த போர்களில் / ராஜதந்திரத்தில் ஈடுபட்டிருந்திருக்கலாம்.

– இவற்றில் ஒன்றிக்கு மேற்பட்டவற்றை அவன் செய்திருக்கலாம்.

அநபாயன் “சக்கரக்கோட்டத்தை” (தென் சத்தீஸ்கர் மாநிலம்) வெற்றிகொண்டதாகக் கலிங்கத்துப்பரணி பல இடங்களில் குறிப்பிடுகிறது. இது ராஜேந்திரனின் கங்கைப்படையெடுப்பின் போது நடந்திருக்க முடியாது. அப்போது அநபாயன் பிறந்திருக்கவில்லை. எனவே இது பிற்காலத்தில் வீரராஜேந்திரன் சார்பாக அநபாயன் நடத்திய போராக இருக்கவேண்டும் அல்லது தன்முனைப்பிலேயே நடத்திய போராக இருக்கவேண்டும். அநபாயன் சக்கரக் கோட்டத்தை வென்றதோடு, அதைச்சுற்றி இருந்த பிரதேசங்களில் தனக்கென ஒரு சிற்றரசை உருவாக்கிக்கொண்டு அரசியல் நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்காகக் காத்திருந்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இதையே ‘வடதிசையில் திக்விஜயம் செய்ததாக’ அவன் பின்னர் குறிப்பிட்டிருந்திருக்கலாம்.

கலிங்கத்துப்பரணியிலும், வீரராஜேந்திரன் அநபாயனை சோழ நாட்டின் இளவரசனாக நியமித்ததாகவும், அதன்பிறகு அநபாயன் வடதிசை அரசர்கள் மேல் படையெடுத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வீரராஜேந்திரனுக்கு அதிராஜேந்திரன் எனும் மகன் இருந்தான். அவனுக்கு, 1067 முதல் பட்டத்து இளவரசன் பதவியும் தன்பெயரில் கல்வெட்டுச்சாசனங்கள் எழுதும் உரிமையும் கூட வழங்கப்பட்டிருந்தன. எனவே, அநபாயனுக்கு இளவரசுப்பதவி அளிக்கப்பட்டது பொய்யாக இருக்கவேண்டும் அல்லது “அதிராஜேந்திரனுக்குப்பிறகு அரசாட்சி உரிமை உள்ளவன்” என்று நிச்சயிக்கப்பட்டு இரண்டாவது இளவரசனாக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வடதிசை அரசர்கள் மேல் படையெடுத்துச்சென்றது உண்மையாக இருக்கலாம். அவ்வாறாயின், 1968 முதல் 1970 வரை அநபாயன் வடதிசையில் போர்களில் ஈடுபட்டிருந்தான் எனலாம்.

அதேவேளை, அநபாயன் கடாரத்தில் போரில் ஈடுபட்டதாகவும், கடாரத்தை எரித்ததாகவும் கலிங்கத்துப்பரணி நிச்சயமாகக் கூறுகிறது. ஆனால் இது எப்போது நடைபெற்றது என்பதைக் கலிங்கத்துப்பரணி கூறவில்லை. கடாரத்தின்மேல் சோழர்கள் படையெடுத்த சந்தர்ப்பங்கள் இரண்டுதான். இவற்றினுள் 1025 அளவில் அநபாயன் பிறந்திருக்க முடியாது ஆகையால் இது 1068 அளவிலேயே நடந்திருக்க வேண்டும். மேலும், இக்காலப்பகுதியில் ஸ்ரீவிஜயத்தை ஆண்ட மன்னனின் பெயர் “தேவகுலோ” (குலோத்துங்க தேவன் – அதாவது அநபாயன்) என்று சீன அரசவைக்குறிப்புகள் கூறுகின்றன. இங்கே “ஆண்ட” என்ற சொல்லுக்கு “மன்னர்களுக்கும் மேலாக இருந்த அல்லது மேலாதிக்க நிலையில் இருந்த” என்று அர்த்தம் கொள்ளலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். எனவே அநபாயன் தன் மாமனாகிய வீரராஜேந்திரன் சார்பாகவும், வீரராஜேந்திரனிடம் உதவி கோரிய கடாரத்து அரசன் சார்பாகவும் கடாரத்தின்மேல் படையெடுத்துச் சென்று கைப்பற்றியதோடு, அங்கே சிறிதுகாலம் மேலாதிக்க நிலையிலே தங்கியிருந்து ஸ்ரீவிஜய மன்னர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி வைத்ததோடு சோழப்பேரரசின் நோக்கங்களையும் நிறைவேற்றி வைத்திருக்கலாம் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இக்காலத்தில் ஸ்ரீவிஜயத்திலிருந்து சீன அரசவைக்குத் தூதுக்குழு ஒன்றும் போயிருக்கிறது. அந்தத் தூதுக்குழு பற்றியும், அது சொன்ன தகவல்கள் குறித்தும் சீன வரலாற்று மூலங்கள் பெரிதும் குழம்பி இருக்கின்றன. சோழ ரத்தமும், சாளுக்கிய ரத்தமும், சிலவேளை ஸ்ரீவிஜய ரத்தமும் கொண்ட அநபாயன், சோழர் பிரதிநிதியாக ஸ்ரீவிஜயத்தை ஆண்டிருந்தால், அப்படிப்பட்டவனிடம் இருந்து சீனாவுக்குத் தூதுக்குழு ஒன்று போயிருந்தால், சரியான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் இருந்திருக்கக்கூடிய அக்காலத்தில், அந்தத் தூதுக்குழு யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதைப்பற்றிச் சீனர்கள் குழம்பி இருக்கக்கூடியது இயல்பே. இவையெல்லாம் அநபாயன் கடாரப்படையெடுப்பில் கலந்துகொண்டதை அல்லது அதற்குத் தலைமை தாங் கியதை உறுதி செய்கின்றன. ஆனால், அவன் 1068 – 1070 இற்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் வட இந்தியாவிலும் தூர கிழக்கிலும் படையெடுப்புகளில் ஈடுபடுவது அவ்வளவு சாத்தியமில்லை. எனவே, அநபாயன் கடாரப்படையெடுப்புக்குத் தலைமை தாங்கி இருக்கக்கூடியது சாத்தியமே; ஆனால் நிச்சயமில்லை.

கருணாகர பல்லவன் கடாரப் படையெடுப்பில் பங்கெடுத்தானா?

“கடல் புறா” நாவலின் கருப்பொருளே கருணாகரன் தூர கிழக்கில் செய்த சாகசங்கள் தான். ஆனால் இது உண்மையில் நடந்திருக்குமா? அநபாயன் 1040 களில் பிறந்திருந்தால், 1110இல் நடந்த கலிங்கப்படையெடுப்பின் போது அவன் 70 வயதை நெருங்கிக்கொண்டிருக்க வேண்டும். அவனது மூத்த மனைவி மதுராந்தகி அப்போது இறந்து விட்டாள் என்பதில் இருந்தும், மகன் விக்கிரமன் கலிங்கப்போரில் பங்கெடுத்தான் என்பதில் இருந்தும், அநபாயன் அப்போது முதியவன் என்பது புலப்படுகிறது. ஆனால், கலிங்கப்போருக்குத் தலைமை தாங்கிச் சென்றவன் கருணாகர பல்லவன். அவனுக்கு அப்போது 70 வயது நெருங்கியிருந்தால் இது அவ்வளவு சாத்தியமில்லை. மேலும், அநபாயன் மகன் விக்கிரமன் முடிசூடிய பின்னர் அவனது தளபதியாகவும் கருணாகரன் பணியாற்றி இருக்கிறான். எனவே கருணாகரனுக்கு அநபாயனை விட இருபது வயதாவது குறைவாக இருந்திருக்க வேண்டும். எனவே 1068 இல் கருணாகரனுக்கு அதிகபட்சம் ஐம்படைத்தாலிப் பருவமே. அநேகமாக அவன் பிறந்திருக்கவே மாட்டான். எனவே அவன் 1068 இல் ஸ்ரீவிஜயத்தைத் தனது தந்திரங்களால் வென்று ஒன்றுக்கு இரண்டு ஸ்ரீவிஜய அழகிகளைத் திருமணம் செய்வதெல்லாம் சாத்தியமில்லை. கடல்புறா நேயர்கள் மன்னிக்கவும்!

வீரராஜேந்திரனிடம் உதவி கோரிய கடாரத்து அரசன் யார்?

சோழர்களின் முதலாவது படையெடுப்பின் பின்னர் (1025) ஸ்ரீவிஜயத்தில் சைலேந்திரர் வம்சம் அழிந்து பட்டதோடு ஸ்ரீவிஜயத்தின் பகுதிகள் சில காலத்திற்காவது சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சங்கிராம விஜயோத்துங்க வர்மனுக்குப்பின் சைலேந்திர அரசர்கள் பெயர்களை இந்தோனேசிய வரலாற்று ஏடுகள் குறிப்பிடவில்லை. ஆனால், கிழக்குச் சாவகம் ஸ்ரீவிஜயத்தின் பகுதியல்ல. அதைச்சோழர்கள் கைப்பற்றவுமில்லை. ச. வி. வர்மனின் மகள் ஒருத்தியை கிழக்குச் சாவகத்தின் அரசனான ஏர்லங்கன் என்பவன் மணந்ததாகவும், இவ்விளவரசி 1025 இல் சோழர்களின் படையெடுப்பில் ஸ்ரீவிஜயம் கைப்பற்றப்பட்டு ச. வி. வர்மன் சிறைப்படுத்தப்பட்ட பிறகு கிழக்குச் சாவகத்தில் அடைக்கலம் புகுந்தவள் என்றும் இந்தோனேசிய வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. அத்தோடு, 1025 இற்குப்பின்னர் கிழக்குச்சாவகத்தில் ‘காஹூரிப்பான்’ என்ற ஏர்லங்கனின் அரசு எழுச்சி பெற்றதாகவும் தெரிகிறது. ஆகவே, கிபி 1025 இற்குப்பின் ஸ்ரீவிஜயம் சிலகாலத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சோழர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது என்பதும், சைலேந்திர வம்ச அரசர்கள் அதைத் திரும்பப்பெறவில்லை என்பதும் உணரப்படும். எனவே, 1068 இல் வீரராஜேந்திரனிடம் உதவி கோரிய அரசன் (சாண்டில்யன் ஊகித்தது போல) சைலேந்திர அரசனாக இருக்கமுடியாது.

மறுதலையாக, ‘காஹூரிப்பான்’ அரியணையில் இருந்து ஏர்லங்கன் 1045 இல் இறங்கி  வானப்பிரஸ்தம் சென்றதாகவும், அதற்குப்பிறகு அவனது அரசு அவன் மகன்களுக்கிடையே இரண்டாகப் பிரிக்கப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் முழு அரசையும் பெறுவதற்காக ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டதாகவும் இந்தோனேசிய வரலாறு சொல்கிறது. ஆகவே, இந்த மகன்களில் ஒருவன், அல்லது அவனது வழிவந்தவர்கள் 1068 இல் வீரராஜேந்திரனிடம் உதவி கோரியிருப்பது சாத்தியம். ஆனால், இம்மன்னர்களின் பெயர்கள் நேரடியாகத் தெரியவில்லை (மாபஞ்சி அலஞ்சுங், சமரோத்சகா ஆகியவர்களில் ஒருவராக இருக்கலாம்.  கீழே பார்க்க). ஆனால், இவர்கள் கிழக்குச் சாவகத்தின் இஸ்யான வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சைலேந்திரர்கள் அல்ல. ஏர்லங்கன் சைலேந்திர இளவரசி தர்ம பிரசாத உத்துங்க தேவியை மணந்திருந்தாலும், அவன் மகன்கள் வேறு அரசிக்குப் பிறந்தவர்கள். எனவே தாய்வழியிலும் அவர்கள் சைலேந்திரர் அல்ல.

வீரராஜேந்திரன் வெற்றி கொண்ட ‘கடாரம்’ எது?

வீரராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில் வரும் கடாரம் என்பது வழமையாக அப்பெயரால் அறியப்படும் மலேசியாவின் கெடா மாநிலம் (Kedah) என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதி வருகின்றனர். இது ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் பகுதியுமாகும். ஆனால், இது கிழக்கு சாவகத்திற்கு மிகவும் தூரத்தில் உள்ளது. அரசன் ஏர்லிங்கன் கிழக்கு சாவகத்தை மட்டும் ஆண்டவன். அவன் நிச்சயமாக சுமாத்திராவின் எந்தப்பகுதியையும் ஆளவில்லை. எனவே அவன் மலாயக் குடாநாட்டுக்கு அருகில் கூடச் சென்றிருக்க முடியாது. எனவே, அவன் மகனொருவன் அல்லது பேரன் ஒருவன் 1068 இல் கடாரத்தை ஆள்வதென்பது சாத்தியமில்லை.

ஆனால், ஏர்லிங்கனின் ‘காஹூரிப்பான்’ அரசு இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது, அது ஜங்களா மற்றும் கெடிரி (அல்லது கடிரி) என்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது. 1049 இல் ஏர்லிங்கன் இறந்தபின் ஜங்களாவிற்கும் கடிரிக்கும் இடையே போர்மூண்டு அது 1052 வரை தொடர்ந்திருக்கிறது. இவ்வருடத்தில் கடிரியின் அரசன் மாபஞ்சி அலஞ்சுங், ஜங்களாவைக் கைப்பற்றி இருக்கிறான். பிறகு ஏர்லிங்கனின் மருமகனான சமரோத்சகா ஜங்களாவை விடுவித்து, 1059 இல் அங்கே முடிசூடி இருக்கிறான். எனவே 1068 அளவில் கதிரியைக் கைப்பற்றுவதற்காக சமரோத்சகாவோ, அல்லது அவன் கதிரியைக்கைப்பற்றி அதை மீட்பதற்காக மாபஞ்சி அலஞ்சுங்கோ வீரராஜேந்திரனின் உதவியைக்கோரி இருக்கலாம். எவ்வாறு நடந்திருந்தாலும், வீர ராஜேந்திரன் கைப்பற்றிக்கொடுத்த ‘கடாரம்’ மலேசியாவின் Kedah அல்ல, கிழக்கு ஜாவாவின் Kediri (Kadiri) தான்.

 

படம்: கிபி 1048 இல் கிழக்கு சாவகத்தின் (Eastern Java, in present day Indonesia) அரசியல் நிலை.

By Gunkarta Gunawan Kartapranata – Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=12602102

இந்தக் கெடிரி உண்மையில் ஒரு சிறிய அரசு. எனவே, வீரராஜேந்திரன் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் மெய்க்கீர்த்தியில் ஒரு வரியில் சொல்லி விட்டுப்போனது நியாயமே. வாய்க்குள் நுழையாத சாவக மன்னர்களின் காவி பாஷைப் பெயர்களை மெய்க்கீர்த்தியில் தவிர்த்ததும் புரிந்து கொள்ளக்கூடியதே.

எனவே, சோழர்களின் இரண்டாவது ‘கடாரப் படையெடுப்பு’ வரலாற்று ஆசிரியர்கள் கருத்துவதுபோல அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. இது ஸ்ரீவிஜயத்தினை மீளக் கைப்பற்றியதல்ல. ஆனால், சோழர்களின் பலம் ஸ்ரீவிஜயத்தில் தளராமல் இருந்திருந்தால் மட்டுமே அவர்கள் கிழக்கு சாவகத்தில் தலையிட்டிருப்பது சாத்தியம். எனவே, ஏற்கனவே மேற்கு சாவகம் வரை (பந்தூர் – Batu Jaya) கைப்பற்றி வைத்திருந்த சோழர்கள் மத்திய சாவகத்தையும் கைப்பற்றியதாகவே இப்படையெடுப்பைக் கருத முடியும். இவ்வகையில் சோழர்களின் பலம் மிக உயர்நிலையில் இருந்ததை இப்படையெடுப்பு எடுத்துக் காட்டுகிறது எனலாம்.

எனவே, சோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு குறித்துச் செய்யக்கூடிய முடிவுகள்

– இது மத்திய / கிழக்கு சாவகத்தில் நடத்தப்பட்டது

– இது நடந்தபோது ஸ்ரீவிஜயம் ( கடாரம் – Kedah / மலாயாக் குடாநாடு ,  சொர்ணபூமி / சுமாத்திரா,  மேற்கு சாவகம்) சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது

– இது பெரும்பாலும் கடல்வழிப் படையெடுப்பல்ல. மேற்கு சாவகத்தில் இருந்து நடத்தப்பட்ட (சிறியளவிலான) தரைவழிப் படையெடுப்பே

– அநேகமாக அநபாயன் இதற்குத் தலைமை வகித்திருக்கிறான்

– இந்தப்படையெடுப்பு வென்றபின் அநபாயன் ஸ்ரீவிஜயத்தில் சோழ ஆளுநராகச் சிலகாலம் இருந்ததோடு, சீன சக்கரவர்த்திக்குத் தூதுக்குழுவையும் அனுப்பி இருக்கிறான்

– கருணாகர பல்லவன் இப்படையெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இம்முடிவுகளின் அடிப்படையில் சாண்டில்யனின் கடல்புறா பிழையான வரலாற்று எடுகோள்களின் அடிப்படையில் எழுதப்பட்டதென்று வருத்தத்துடன் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

3 கருத்துக்கள்

 1. Today i come across one of you historical articles, and after long time i read a excellent and informative article(One on Second war on Ketha by Cholas).
  It has been interesting to read your views on researchers internal thought process in Tamil historical area, but this has been like this for long time and been seen as a pride, but we tamils are travel loving and have a global hand for more than 2400 years, hope you will write more on Tamil history.

  Thanks again.

  Regards,

  Arunan

  1. Thanks, Arunan. These days I regularly write about Cholar history, but it is of course ameteur (not professional) research. You can read many of my other articles on my page here.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.