யாழ் விபத்துகள் -III

அருமையான உயிர்கள் அநியாயமாகப் பலியாவதைத் தடுக்க யாழ் மக்களுக்குச் சில பணிவான விதந்துரைகள்.

(1) இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களை பெற்று சனசமூக நிலையங்கள் முதலிய இடங்களில் காட்சிப்படுத்துங்கள்.
(2) மோட்டார் சயிக்கிள் மற்றும் சயிக்கிள் ஓடுவோர் எல்லா நேரங்களிலும் மஞ்சள் கோட்டுக்கு இடது புறம் (அதாவது வீதியின் மருங்கில் ) பயணியுங்கள். இது குறிப்பாக மோட்டார் சயிக்கிள் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வெறுப்பாகவே இருக்கும். என்ன செய்வது? நடுவீதியால் மோட்டார் சைக்கிள் ஓடிய காலம் மலையேறிவிட்டது. மோட்டார் சைக்கிளும் வாகனமும் மோதினால் உயிராபத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கே.
(3) கிளை வீதியால் வந்து பிரதான வீதியில் ஏறும்போது நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு ஏறுங்கள். நீங்கள் ஏற வேண்டும், மற்றையோர் வழிவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முக்கியமாக, நீங்கள் காரில் வந்தாலும் பிரதான வீதியால் செல்லும் சைக்கிளுக்கு வழிவிடத்தான் வேண்டும். அதுதான் வீதி ஒழுங்கு.
(4) இரவில் பயணம் செய்யும்போது பிரகாச வெளிச்சம் (high beam) பாவிக்காதீர்கள். அப்படிப்பாவித்தாலும் எதிரில் வாகனம் வந்தால் அணையுங்கள்.
(5) உங்கள் மிருகங்களை வீதியில் செல்ல அனுமதிக்காதீர்கள்.
(6) வேகமாக வாகனம் ஓடுவது பெரும் தப்பில்லை. தகுந்த பயிற்சி இன்றி வேகமாக ஓடுவது தான் பெரும் பெரும் தப்பு. உங்கள் வாகனத்தில் கை படியும்வரை வேகமாக ஓடாதீர்கள். x km/h வேகத்தில் உங்களுக்குப் பூரண தைரியம் வரும்வரை x+10 km/h வேகத்திற்குப் போகாதீர்கள்.

இவ்வளவு செய்தாலே விபத்துகள் பத்தில் ஒன்றாகக் குறையும். செய்வீர்களா?

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.