பேய்த்தேர்

“விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர்; அந்நீர்ச்
சுழி சுழல வருவதெனச் சூறை வளி சுழன்றிடுமால்”

— கலிங்கத்துப் பரணி

பழைய காலங்களில் யுத்த வாகனமாகத் தேரை உபயோகப்படுத்தினார்கள். பெரும் வீரர்கள் பலவிதப்படைக்கலங்களுடன் தேரின் மீது வீற்றிருந்து போர் செய்யும் மரபு இருந்தது. மகாபாரதத்தில் “அதிரதர்கள், மகாரதர்கள் ” என்றவாறு தேரைக்குறிப்பிட்டே படைத்தலைவர்களை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள். போரில் வெற்றியடைவதற்குத் தேர்ச்சாரதிகளும் மிகவும் முக்கியம் என்று உணர்ந்தே அருச்சுனன் கண்ணனையும் கர்ணன் சல்லியனையும் தேர்ச்சாரதிகளாக அமைத்தார்கள். அருச்சுனனைக் கண்ணனும் கண்ணனைச் சத்தியபாமாவும் உயிராபத்தான வேளைகளில் தேர்ச்சாரதிகள் என்ற வகையிலே காப்பாற்றியிருக்கிறார்கள். பாரசீகர்கள், கானானியர்கள் முதலியோரும் வரலாற்றிலே பிரசித்தி பெற்ற தேர்ப்படைகளைக் கொண்டிருந்தார்கள். சில வேளைகளில் இவர்களின் தேர்களுக்கு வலிமையான கவசங்களும் நீண்ட வாள்கள் பொருத்திய சில்லுகளும் கூட இருந்திருக்கின்றன. இந்திரஜித்து பேய்கள் பூட்டிய ரதத்தில் அமர்ந்து விண்ணிலே மறைந்து போர் செய்தான் என்கிறது ராமாயணம். எனவே தேரானது வெறுமனே வீரர்கள் பயணிக்கும் ஒரு வாகனமாக இல்லாமல் யுத்தத்தில் வீரன் ஒருவனுக்கு அனுகூலத்தைத் தரும் யுத்த வாகனமாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது. பிற்காலத்தில் இந்த இடத்தை டாங்கிகளும் கவச வாகனங்களும் பெற்றன.

“பேய்த்தேர்” என்ற சொற்தொடர் கலிங்கத்துப்பரணியிலே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. அது இந்திரஜித்தின் தேரைக்குறிக்கவில்லை. மாறாக, இவ்வுலகின் பௌதீக விதிகளுக்கு முற்றிலும் உட்பட்ட ஒரு தோற்றமான, பாலைவனத்தில் ஏற்படும் கானல் நீரைக் குறிக்கிறது. கானல் நீரை (mirage)க் குறிப்பிடும் இந்த அருமையான சொல் தமிழ் இலக்கியத்தில் வேறெங்கும் பாவிக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை.

சமீபத்தில் The White Tiger என்ற அருமையான ரஷ்ய மொழிப்படத்தைப் பார்த்தேன். இந்தப்பதிவு உண்மையில் இந்தப்படத்திற்கு ஒரு விமர்சனம் தான். படக்கதையை நான் முழுதாக இங்கே சொல்லவில்லை. இருந்தாலும் நீங்கள் உடனே படம் பார்க்க விரும்பினால், இந்த இடத்தில் நிறுத்தி விட்டு, பார்த்து முடித்தபின் அப்பால் வாசிக்கலாம். இல்லை வாசித்து விட்டுப் படம் பார்க்கிலும் பார்க்கலாம்.

மேம்போக்காகப்பார்த்தால், இது இரண்டாம் உலக யுத்த காலத்துச் சண்டைப்படம். குறிப்பாக டாங்கிச் சண்டை பற்றிய ஒரு படம். “வைட் டைகர்” என்பது, ஜெர்மனியர்களின், வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட, “டைகர்” தாங்கி ஒன்றைக்குறிக்கிறது. இந்த டைகர் டாங்கிகள் யுத்தத்தின் பின்பகுதியில் ரஷ்யர்களுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவை. ஜெர்மானியர்களின் ஆரம்பகால டாங்கிகள் panzer எனப்பட்டன. இது ஆங்கிலத்தில் panther (அதாவது, சும்மா மேம்போக்காகச் சொன்னால், குகைச் சிங்கம்) என்பதை ஒத்திருக்கிறது. இதனாலோ என்னவோ ஜெர்மானிய மொழியில் டாங்கிகளை பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த வனவிலங்குகளாக (சிங்கம், புலி, சிறுத்தை இப்படி) சித்தரித்தார்கள். எனவே panzer ஐ விட மேம்பட்ட ஒரு டாங்கியைத்தாயாரித்த போது அதற்கு tiger (புலி) என்று பெயர் வைத்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் முடியும்வரை இதற்கு நிகரான டாங்கிகள் நேச அணியிடம் இருக்கவில்லை. வானத்தால் நொருக்கித்தள்ளித்தான் இந்தப் புலி டாங்கிகளைச் சமாளித்தார்கள். ரஷ்யப்போர்முனையில் பனிக்காலமாக இருந்ததால் புலி டாங்கிக்கு வெள்ளை வர்ணம் அடித்திருப்பார்கள். வெள்ளைப்புலி என்று ஒரு புலி இனமும் உண்டு. எனவே படத்தின் பெயர் வைட் டைகர்.

ஆனால் இது ஒரு பேய்க்கதையும் கூட. எனவே, இந்தப்படத்தை யாரும் தமிழில் டப்பிங் செய்தால், பேய்த்தேர் என்று பெயரிடுவது பொருத்தமாக இருக்கும். இன்னும் ஆழமாகப்பார்த்தால் படக்கதைக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. போர்க்கதை, பேய்க்கதை, இவற்றுக்கு மேலே குறியீட்டுக்கதை.

இரண்டாம் உலக யுத்தத்தின் உச்சியிலே, திடீர் திடீரென்று போர்முனையில் மர்மமாகத் தோன்றும் வெள்ளை நிற (ஜெர்மானிய) டைகர் டாங்கியொன்று ஒவ்வொரு முறையும் பல ரஷ்ய டாங்கிகளை அழித்து விட்டுப்போய் விடுகிறது. ‘வெள்ளைப்புலி’ என்று அழைக்கப்படும் இந்த டாங்கியைப்பற்றி மர்மமான, அமானுஷ்யமான வதந்திகள் பல உலாவுகின்றன. அதனால் அழிக்கப்பட்ட ரஷ்ய தாங்கி ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பிப்பிழைக்கும் ரஷ்ய வீரன் ஒருவன் தனது நினைவாற்றலை இழப்பதோடு பயித்தியம் பிடித்தவன்போல் ஆகிறான். அதே நேரத்தில் அவனுக்கு ‘வெள்ளைப்புலி’ தாங்கி எந்த நேரத்தில் எங்கே நிற்கிறது என்பதை உள்ளுணர்வாக அறியும் ஆற்றல் ஒன்று ஏற்படுகிறது. ரஷ்ய இராணுவத்தளபதியின் உத்தரவின் பேரில் அந்த வீரனுக்கு (இவான்) விசேட கவசங்கள் பொருத்திய ரஷ்ய தாங்கி ஒன்று வழங்கப்பட்டு அவன் ‘வெள்ளைப்புலியை’ வேட்டையாட அனுப்பப் படுகிறான்.வெள்ளைப்புலிக்கும் அவனுக்கும் நடக்கும் போராட்டம் மிச்சக்கதையை அமைக்கிறது.

‘பேய்க் கப்பல்’ என்ற கற்பனையை வைத்துப் பல நாட்டு இலக்கியங்களிலும் கதைகளும் திரைப்படங்களும் (Pirates of the Carribbean முதலிய படங்கள் ) வெளிவந்திருக்கும் நிலையில் “பேய் டாங்கி” என்பது சுவாரஸ்யமான கற்பனை. யதார்த்தமான உலக யுத்தக்கதையா அல்லது பேய்க்கதையா என்று தெரியாமல் படம் நகர்ந்தாலும் கூடப், பார்த்து முடிந்தபின் முழுக்க யதார்த்தமான உலக யுத்தக்கதையாக விரும்பினால் எடுத்துக்கொள்ள முடியுமாயிருப்பது கதாசிரியரின் கெட்டித்தனம். உதாரணமாக இவான் ‘ உள்ளுணர்வினால் ‘ வெள்ளைப்புலி எங்கே நிற்கிறது என்று கண்டுபிடிப்பதாகக் காட்டினாலும் இந்த ‘உள்ளுணர்வு’ ஆனது போர் அனுபவம், கூர்மையான புலன்கள், அதிஷ்டம் ஆகியவற்றின் கலவை என்றும் சொல்லப் படம் இடம் தருகிறது. இவான் பல இடங்களில் டாங்கியை நிறுத்தி வேறு டாங்கியின் ஒலி கேட்கிறதா என்று காது கொடுத்துக்கேட்டபின் மேலே செல்கிறான். மேலும், கனமான டைகர் தாங்கி நிலத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளைக் கிரகிப்பதும் சாத்தியமே. இவான் ‘டாங்கிகளின் கடவுளை’ நோக்கிப் பிரார்த்திப்பதாகக் கதையில் வந்தாலும் அக்கடவுள் அவனுக்கு வெளிப்படையாக உதவி செய்ததாகக் காட்டவில்லை. எனவே அது அவனுடைய பயித்தியத்தின் வெளிப்பாடே எனலாம். வெள்ளைப்புலி திடீர் திடீரென்று வெளிப்பட்டு வந்தாலும் அது திறமையான உருமறைப்பின் விளைவாயிருக்கலாம். எனவே, வெறும் சண்டைப்படப் பிரியர்களுக்கு இது அருமையான டாங்கிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த சாதாரண உலக யுத்தப் படம். இது படத்தின் முதலாவது முகம்.

இரண்டாவது முகத்தில், பேய்க்கதைப் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல திகில் படம். பனி மூட்டத்தில் இருந்து வெள்ளைப்புலி தாங்கி வெளிவரும் காட்சிகளும், இறுதிவரை டாங்கியினுள் மனிதர்கள் யாரையும் காட்டாததும் திகிலை அதிகரிக்கின்றன. “இந்த தாங்கி பற்றி ஜேர்மன் இராணுவத்தில் குறிப்புகள் ஏதுமில்லை” என்று ஜேர்மன் அதிகாரிகள் சொல்லும்போது திகில் கூடுகிறது. ஒரு ஹிட்ச்கொக் படம் போல, இறுதிவரை திகிலைத் தக்க வைக்கிறது படம். இந்த இரண்டு முகங்களுடன் படத்தை ரசித்து விட்டுப் போய்விடுவார்கள் பலர். ஆனால் மூன்றாவது முகம் தான் உண்மையிலேயே முக்கியமானது. அதுவே படத்தின் முடிவையும் நியாயப்படுத்துகிறது. இது ஒரு குறியீட்டுப்படம்.

இவான் சொல்லுகிற பல வசனங்கள் (அவன் ஒரு பயித்தியம் போலக்காட்டப்பட்டாலும் ) இந்தக் குறியீட்டுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. “வெள்ளைப் புலி சாகவில்லை. அது ஒரு சேற்று நிலத்தில் மறைந்திருக்கிறது. சமயத்தை எதிர்பார்த்திருக்கிறது. இன்னும் இருபது, ஐம்பது, நூறு வருடங்களில் அது மறுபடியும் வெளிவரும்” என்று சொல்லுகிறான் இவான். இதோடு படத்தின் இறுதியில் ஹிட்லர் யத்தத்தின் அவசியத்தை நியாயப்படுத்திச் சொல்லுகிற வசனங்களைச் சேர்த்துப்பார்த்தால் படத்தின் குறியீடு புரியும். வெள்ளைப்புலி என்பது வெறும் ஜெர்மானிய தாங்கி அல்ல. அது, பாசிசம், நாசிசம், இனவாதம் என்பவற்றின் குறியீடு. மனித மனங்களின் சேற்றுக்குள் அது மறைந்திருக்கிறது. அது எதிர்பார்க்காத நேரங்களில் வெளிவரும். அதை எதிர்த்துச் சாதாரண மனிதர்கள் தங்கள் மனங்களுக்குள்ளும் புற உலகத்திலும் சண்டையிட வேண்டி இருக்கிறது.

இந்தக்குறியீடு புரிந்துவிட்டால் படம் முழுவதிலும் அது விரவி நிற்பது தெரியும். வெள்ளைப்புலியை எதிர்த்துச்சண்டை செய்பவர்கள் சாதாரண மக்கள் என்பதை உணர்த்தவே கதாநாயகனுக்கு Ivan Ivanovich Naidyanov என்று பெயரிட்டுள்ளனர். இவான் என்பது ரஷ்ய மொழியில் மிகப்பொதுவான ஒரு பெயர். (ஆங்கிலத்தில் ஜோன் என்பதுபோல). இந்தப்பெயர் ரஷ்ய மொழியில் மிகப்பொதுவாக இருந்ததால் ரஷ்யர்களைக் குறிப்பதற்கே ‘இவான்’ என்று சொல்வார்கள் போர்க்களத்தில். அதாவது ‘இவான் வருகிறான்’ என்றால் ரஷ்யர்கள் வருகிறார்கள் என்று அர்த்தம். Ivanovich என்றால் இவானின் மகன். அதாவது இன்னுமொரு முக்கியமற்ற சாதாரணனின் மகன். Naidyonov என்றால் ‘ கிடந்தெடுத்தவன், அனாதையாகக் கிடந்து கண்டுபிடிக்கப் பட்டவன், அநாதை’ என்பதுபோல. இந்த இவான் வெள்ளைப்புலியைகுறித்துப்பேசும் போது “அது மனிதர்களால் ஓடப்படும் தாங்கி அல்ல. அதனுள் யாருமில்லை” என்று சொல்வான்.

பேய்க்கதை அல்லது பைத்தியத்தின் உளறல் போலத்தோன்றினாலும் இதனுள் உள்ள குறியீடு பாசிசம், இனவாதம் இவை மனிதத் தன்மை அற்றவை என்பதே. மக்களுடைய ஞாபக சக்தி குன்றும்போது இனவாதம் மேலெழுகிறது என்பதைக்காட்டிடவே இவானை ஞாபக மறதி உள்ளவனாகச் சித்தரிக்கிறார்கள்.

தீமைக்கும் நன்மைக்குமான போராட்டம் முடிவின்றித் தொடர்வதென்பதும் மக்கள் சற்றுக் கவனமற்று இருந்தால் தீமை மறுபடி தலைதூக்குமென்பதும் பல கலாச்சாரங்களிலும் மதங்களிலும் சொல்லப்பட்டே வருகின்றன. கண்ணன் கீதையில் சொல்கிறான்:

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே!

நல்லவர்களை ரட்சிப்பதற்காக, தீயவர்களை அழிப்பதற்காக, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, நான் யுகங்கள் தோறும் தோன்றுகிறேன்!

நடராஜர் காலுக்குக்கீழே முயலகனை வைத்திருக்கிறார். ஏனென்றால் அவனை அடக்கித்தான் வைத்திருக்கலாம், அழிக்க முடியாது என்று சொல்லப்படுகிறது.

Lord of the Rings என்னும் பிரபல ஆங்கில இலக்கியத்தில் துர்த்தேவதையான Melkor அழிக்கப்பட்டதைச் சொல்லும்போது Yet the lies that Melkor (the mighty and accursed, Morgoth Bauglir, ) the Power of Terror and of Hate, sowed in the hearts of (Elves and) Men are a seed that does not die and cannot be destroyed; and ever and anon it sprouts anew, and will bear dark fruit even unto the latest days. என்று குறிப்பிடப் படுகிறது. இன்னுமோர் இடத்தில் “Other evils there are that may come; for Sauron is himself but a servant or emissary. Yet it is not our part to master all the tides of the world, but to do what is in us for the succour of those years wherein we are set, uprooting the evil in the fields that we know, so that those who live after may have clean earth to till. What weather they shall have is not ours to rule.” என்று கூறப்படுகிறது.
வெள்ளைப்புலி என்ற ரஷ்ய மொழிப்படத்தின் செய்தியைச் சுருக்கமாகச் சொல்வதற்கும் இந்த வரிகள் பொருந்தும்.

இன்றைக்கு மேற்குலகத்தில் வாழ்கிறவர்கள், கடந்த சில ஆண்டுகளில் இனவாதம், நிறவெறி, அவற்றிலிருந்து பிறக்கும் நியோ- நாசிசம் என்பவற்றின் அதிகரிப்பை (குறிப்பாகச் சில வெள்ளையின மக்கள் மத்தியில்) அவதானித்ததே இருப்பார்கள். இந்தச் சூழலில் ‘வெள்ளைப்புலி’ என்ற படம் சொல்லும் செய்தி மிக முக்கியமாக அமைகிறது. எனவே இது பார்க்க வேண்டிய ஒரு படம். அதேநேரம் இந்தப்படத்தை எடுத்தவர்களும் வெள்ளையர்களே என்பது நம்பிக்கை தருகிறது!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.