திருப்புகழில் அர்த்தங்கள்-III

இந்தத் திருப்புகழில் மேலும் பல கதைகள் அடங்கி நிற்கின்றன. அவற்றில் ஒன்று, “அவளோடு அன்று அதிர வீசி வாதாடும்” என்ற வரியில் உள்ள கதை.

தில்லை அம்பலத்தில் கோயில் கொண்டு நடனம் ஆடுவது யார் என்பதில் சிவனுக்கும் காளிக்கும் போட்டி ஏற்பட்டதாம். இருவரும் போட்டிக்கு நடனம் ஆடுகின்றனர். சிவன் பல புதுமையான நடனக்கோலங்கள் காட்டுகிறார். காளியும் சளைக்காமல் அவை ஒவ்வொன்றையும் பிரதி செய்கிறாள். ( முதல் வரியில் ‘அபின காளி தானாட’ என்று அருணகிரியார் சொன்னது இதையே குறிப்பிடுகிறது எனலாம். அதாவது சிவதாண்டவத்துக்கு மாறுபாடு இல்லாமல் – ஏட்டிக்குப்போட்டியாக ஒவ்வொரு அசைவையும் பிரதிபலித்து ஆடினாள் எனலாம். இன்றைக்கும் கோயில் திருவிழாக்களில் தவில் வித்துவான்கள் இப்படிப்போட்டி இடுவதைக் காணலாம். அதாவது ஒருவர் தவிலில் காட்டும் ‘கிருதா’க்களை மற்றவர் திருப்பி அடிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் தோற்றவர் ஆவார். சங்கீதக்கச்சேரிகளில் கற்பனா ஸ்வரம் பாடும் வித்துவானுக்கும் வயலின்காரருக்கும் கூடச் சிலசமயம் இப்படிப் போட்டி வருவதுண்டு). வெகுகாலம் போட்டி நீடித்த பிறகு சிவன் ஒரு யுக்தி செய்கிறார். தன் குண்டலத்தைக் கீழே விழுத்தி, அதை நடனத்தை நிறுத்தாமலேயே தன காலால் தூக்கிக் காதில் மாட்டுகிறார். இந்த ஊர்த்துவ தாண்டவத்தைப் பெண்ணாகிய காளி பிரதிபண்ண முடியவில்லை. எனவே தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். தில்லைக்கு வெளியே சென்று எல்லைக் காளியாக அமர்கிறாள்.
இந்தக்கதையில் வேறு ‘பாடபேதங்களும்’ உண்டு.

திருப்புகழ் ஒரு பக்கம் இருக்க, இக்கதையின் ரிஷிமூலம் என்ன? இந்தக்கதையை யாராவது ஆணாதிக்க மனோபாவம் உள்ளவர் கட்டியிருப்பாரா என்பது ஒரு கேள்வி. அதைவிட முக்கியமான கேள்வி, தில்லையில் காளிகோயில் கட்டுவதற்கு எப்போதாவது முயற்சி நடந்ததா என்பது. தில்லையில் விஷ்ணுவும் கோயில் கொண்டிருந்தார் என்பதும், (மூன்றாம்?) குலோத்துங்க சோழன் காலத்தில் சைவ – வைணவச் சண்டைகளால் விஷ்ணு விக்கிரகம் அகற்றப்பட்டதென்பதும் வரலாறு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் காட்டியிருக்கிறார். இதைத்தான் ‘மன்னுக தில்லை, வளர்க நம் பக்தர்கள், வஞ்சகர் போயகல’ என்று திருப்பல்லாண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். உத்தம சோழன் காலத்தில் சேர தேசத்தில் இருந்து வந்து தில்லையில் குடியேறிய நம்பூதிரிப் பிராமணர்களையும் இது (வஞ்சகர் என்ற பதம்) குறிக்கலாம். ஆதித்த கரிகாலன் கொலையில் அவர்களுக்குத் தொடர்பிருந்ததாகவும், இதனால் சோழ மன்னர்களுக்கும் அவர்களுக்கும் ஆகாது என்றும் எண்ண இடமிருக்கிறது. பல சரித்திரக் கதையாசிரியர்கள் தங்கள் ஊகங்களை வைத்துக் கதைகளைப் புனைந்திருந்தாலும் உண்மைச் சரித்திரம் கொஞ்சம் இருட்டாகவே இருக்கிறது. அது நிற்க: தில்லையை விட்டுக் காளியைச் சிவன் துரத்திய கதைக்கும் இப்படி மூலம் ஏதும் இருக்கும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.