திருப்புகழில் அர்த்தங்கள் – IV

அதிகப் பிரபலமில்லாத ஆனால் அருமையான ஒரு திருப்புகழ் ‘கன்றிலுறு மானை’. தருமபுரம் ஸ்வாமிநாதன் அவர்கள் அழகாகப்பாடியிருக்கிறார்.

கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு முலையாலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு மதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாதருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு மணிகூர்வாய்
கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு மைந்தஅம ரேசர் பெருமாளே.

இந்தத்திருப்புகழில் பல அருமையான உவமைகள் உண்டு. உதாரணமாகத் தம்மைப்பற்றிக் கூறும் போது, “நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாதருடனாடி, நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனையருள்பாராய்” என்கிறார். அதாவது, கைப்பொருள் தீரும்படி விலைபேசித் தம் உடலை விற்று, தமது அன்பு உண்மையானது என்று நம்பச்செய்கின்ற விலைமாதருடன் உறவாடி, நஞ்சுடைய பாம்பினால் விழுங்கப்பட்ட தேரைபோல உடல் நலிவுற்று நைந்துபோன என்னை நீ கடைக்கண் நோக்கி அருள்செய்ய வேண்டும் என்கிறார்.
அருணகிரிநாதர் இளமைப்பருவத்தில் பல விலைமாதருடன் சிநேகம் வைத்திருந்தார் என்பதும், அதனால் கொடிய (பால்வினை) நோய்களுக்கு உள்ளானவர் என்பதும் கர்ண பரம்பரைச் செய்திகள். தமது நடத்தைக்கான பழியை முழுவதும் விலைமாதர்களிலேயே போட்டுவிடுகிற தன்மை அவரது திருப்புகழ்களில் உண்டு. பொதுமகளிரில் கடுமையான கோபமும் அதேநேரம் அவர்களை அளவுக்கதிகமாக வர்ணிப்பதும் அவரது ஆரம்பகாலத் திருப்புகழ்களின் தன்மைகள். இது அவரது மனத்தில் இன்னமும் நடந்துகொண்டிருந்த போராட்டத்தின் வெளிப்பாடாயிருக்கலாம். பிற்காலத்தில் அருளியதாகக் கூறப்படும் பாடல்களில் இந்தக் கோபம் தணிந்து, ‘ஆசா நிகளம் துகளாயினபின், பேசா அநுபூதி பிறந்ததுவே’ என்கிற அமைதி காணப்படுகிறது.
பாம்பு தனது உணவை விழுங்கிய பின் சிலநேரங்களில் வெளியே கக்கிவிடும். அப்படிக் கக்கப்பட்ட உணவைப்பார்ப்பது கண்ணுக்கு அழகான காட்சியல்ல. பாம்பின் விஷமும் எச்சிலும் இரைப்பைச் சுரப்புகளும் சேர்ந்து மிகவும் அருவருக்கத் தக்க நிலையிலேயே அந்த இரை இருக்கும். சாதாரணமாகவே கொஞ்சம் அருவருக்கத் தக்க தோலுடைய தவளை தேரை முதலியவை பாம்பின் வயிற்றுக்குள் போய் வெளிவந்தால் பார்க்க எப்படியிருக்கும் என்று சொல்லவே வேண்டாம். மற்றவர்கள் பார்த்து அருவருக்கும்படி கொடிய நோய்களால் பீடிக்கப்பட்ட தன்னை ‘நஞ்சுபுசி தேரைக்கு’ ஒப்பிட்டிருப்பது அருமையான உவமை. தன்னைத் தேரையென்றதால் விலைமாதரைப் பாம்புக்கு ஒப்பிட்டிருக்கிறார். மனத்தில் விஷமுள்ளோர் என்பதாலும், ஒரு மனிதனை விழுங்கி அவனிடத்து இருந்த பொருளை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு வெறும் சக்கையாக அவனை உமிழ்ந்துவிட்டுப் போகிறவர்கள் என்பதாலும் பாம்பென்றார் போலும்!
அடுத்ததாக முருகனைப் பற்றிச் சொல்கிறார். முருகனைச் சொல்ல வந்தவர் அவனது வாகனமாகிய மயிலைப்பற்றியும், அந்த மயில்
உண்ணும் உணவாகிய பாம்பைப் பற்றியும் சொல்கிறார். “குன்றிமணிபோலக் கொடிய சிவந்த கண்களையுடையது படமெடுத்து ஆடும் நாகம். அந்த நாக பாம்பைக் கொத்தி வைத்திருக்கின்ற அழகிய கூர்வாயை உடைய மயில் மீது ஏறி, அசுரர்களைக் கொன்ற முருகப்பெருமானே!” என்கிறார். ” குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசுமணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச, குருநாதா!” என்பது திருப்புகழ். நாகப்பாம்பின் கண்களைக் குன்றிமணிக்கு உவமித்தது அருமை!
ஆனால், இந்தத் திருப்புகழின் சிறப்பு, அருணகிரியார் பாவித்துள்ள உவமைகளும் வர்ணனைகளும் அல்ல. அவற்றை அடுக்கியிருக்கும் முறையேயாகும்.
முதல் வரியில் தம்மை “நஞ்சுபுசி தேரைக்கு” ஒப்பிட்டவர், அடுத்த வரியில் முருகனைப் பேசும்போது அவனின் மயிலையும் அது கொத்தி விழுங்கும் பாம்பையும் பற்றிச் சொல்வது தற்செயலானதல்ல. தேரை, பாம்பு, மயில் என்று ஒரு ‘உணவுச் சங்கிலியை” அடுக்கியிருக்கிறார். அதேபோல ” அருணகிரி, உலக ஆசைகள், பரம்பொருளான முருகன்” என்று ஒரு “ஆன்மீக உணவுச் சங்கிலி” இந்தத் திருப்புகழைப் பிணைத்திருக்கிறது. எனவே “நஞ்சுடைய பாம்பு தேரையை விழுங்குவதுபோல உலக ஆசைகள் என்னை விழுங்கி எனக்குக் கொடிய நோயையும் தந்திருந்தன. அந்தப் பாம்பைக் கொத்திக்கொண்டு பறக்கும் மயில்போல நீ வந்து உலக ஆசைகளைக்கொன்று என்னை விடுவித்தாய்” என்பது உவமைகள் மூலம் அவர் சொல்லுகின்ற செய்தி. அருமையான சந்தம் அவரது திருப்புகழ்களிலே விரவி நின்றாலும் வெறும் ஓசையின்பத்துக்காக அவர் பாடவில்லை. ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு உவமையையும் பற்றி யோசித்திருக்கிறார்.
இப்படியான ஒரு தமிழ்க்கவிஞர் பல்லவர் காலத்திலோ சோழர் காலத்திலோ பிறந்திருந்தால் அவரைக்கொண்டு பெரும் காவியங்கள் இயற்றுவித்திருப்பார்கள். கம்பருக்கு அருணகிரி சளைத்தவர் என்று நான் நினைக்கவில்லை. அவரது கெட்ட நேரம், தமிழ்நாடு நலிவடைந்து வடக்கே முஸ்லிம்களும் தெற்கே பிறமொழிச் சிற்றரசர்களும் அரசாண்ட காலத்தில் அவர் பிறந்தார். யாரோ ஒரு குறுநில மன்னனை – அவன் பெயர்கூடத் தமிழ்ப்பெயரல்ல – “உதய தாம மார்பான பிரபுட தேவ மாராயன்”என்று புகழ நேர்ந்தது துயரம். “விண்ணளவுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்ட மன்னா” என்று கெஞ்சிய பாரதியின் துயரம் போல.
ஆக, அருணகிரியார் இளமையிலே ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்ந்திருக்கலாம் (இதை அவரே ஒத்துக் கொள்கிறார்). பிற்காலத்திலும் அவர் முழுதாகத் திருந்தினாரா, அப்படியானால் எப்பொழுது என்பதில் வாதப் பிரதிவாதங்கள் செய்ய இடமிருக்கிறது. ஆனால் மனிதர் கெட்டிக்காரர். அவருடைய மொழியாட்சிக்கும் சொல்லாட்சிக்கும் கற்பனை வளத்துக்கும் ஈடு இணை காண்பது அபூர்வம்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.