கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – III

இவ்விடயம் பற்றிய மேலும் சில அவதானங்கள்

பழைய கால அரசர்களுக்கிடையிலான யுத்தங்கள் இனமோதல்கள் என்பதை விட, வம்ச மோதல்கள், அரசர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல்கள், மத மோதல்கள் என்ற பல பரிமாணங்கள் உடையவை. இன்றைய தேசிய உணர்வாளர்கள் (எல்லா இனத்திலும் தான்) இந்த உண்மைகளை ஒத்துக்கொள்ளத் தயங்கவே செய்வர். சில உதாரணங்கள்:

– மகா பராக்கிரமபாகு பாண்டியநாட்டில் தலையிட்டதற்குக்காரணம் அவன் தாய் பாண்டியத் தமிழச்சி. எனவே அவன் அரைத் தமிழன்.
இதுபோக விஜயனின் இராணியும் அவனது நண்பர்களின் மனைவியரும் பாண்டியர்கள் எனவே மகாவமிசம் சொல்கிறது. எனவே அவர்கள் வம்சத்தில் வந்த பராக்கிரமபாகு அரைவாசிக்கும் மேலே தமிழன்.
– அவனது மனைவியும், இலங்கையின் புகழ்பெற்ற ஆட்சிசெய்த ராணியுமான (Ruling Queen) லீலாவதி முழுத் தமிழச்சி. அதேபோல ராணி (Ruling Queen) கல்யாணவதியும் அவளுக்கு முன் ஆண்ட கணவன் நிசங்க மல்ல மன்னனும் முழுக்கலிங்கர்.
– கோட்டை ராசதானியில் ஆண்ட பல அரசர் தமிழர்கள் என்பதோடு சில சந்தர்ப்பங்களில் அரண்மனை மொழி தமிழாகவும் இருந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட கோட்டை இளவரசன் சண்பகப்பெருமாள் இந்துத் தமிழன். எனவே, கோட்டை – யாழ்ப்பாண மோதல் ஓர் இனமோதலன்று. மதமோதலுமன்று. வமிச மோதலே.
– இதே வரலாறு கண்டி ராச்சியத்திலுமுண்டு என்பது அனைவரும் அறிந்ததே.
– கலிங்க மாககனைப்பற்றி நாம் இன்றைக்கு குழம்புவதற்கு அடிப்படைக்காரணம் என்னவெனில் பொலன்னறுவை ராஜவம்சத்தில் கலிங்கர்,
பாண்டியர் என்ற இருவகை ரத்தங்கள் கலந்ததும், அவையிரண்டும் ஆட்சி உரிமைக்காக மாறி மாறிக் கொன்று கொள்ளத் தொடங்கியதும், அதே நேரத்தில் பாண்டியரின் பரம வைரிகளான சோழர்களும் கலிங்கத்துடன் மணவுறவு கொண்டிருந்ததும் ஆகும். எனவே மாகன் சோழரத்தம் உடையவனும் அதேநேரம் இலங்கைச் சிம்மாசனத்துக்கு உறவுவழியில் உரிமை உடையவனும் ஆகிறான். எனவே, தங்களது பலம் குன்றிவந்த நிலையில், சோழர்கள், ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்கள் போல நேரே இலங்கையை ஆக்கிரமிக்கத் திராணியற்று, இலங்கைச் சிங்களவர்களில் ஒரு பகுதியினையேனும் தன்பக்கம் இழுக்கக் கூடிய மாகனை அனுப்பியிருக்கலாம் (இப்பவும் இந்தத் தந்திரம் செய்கிறார்கள் அரசியலில் – ஹாஹாஹா ) அவனது முரட்டுப் போர்முறையால் அது வெற்றியளிக்காமல் போயிருக்கலாம்.
– மாகன் வந்து மூன்றாண்டுகளில் சோழப்பேரரசு வீழ்ந்து விட்டது. அதன்பிறகு மாகன் இலங்கையில் அரசிழந்தான். அவனைத் தோற்கடிப்பதில் தமிழ் வீரர்கள் உதவியதாகச் சூளவம்சம் ஒத்துக்கொள்கிறது. இவர்கள் பாண்டியராதல் வேண்டும்.
– இதேபோலக் கலிங்கப் போரும், வம்சம், மதம், சம்பந்தப் பட்டதே. பன்னிரண்டாம் நூற்றாண்டில் – சைவ வைணவப் பூசல் உச்சத்தில் இருந்தது (தசாவதாரம் படத்தில் காட்டியிருக்கிறார்). வைணவ ராமானுஜர் முன்பு சைவனாக இருந்த கலிங்க அனந்த வர்மனை வைஷ்ணவராக மாற்றியதாகத் தெரிகிறது. இராமானுஜருடன் சைவரான சோழர்கள் பெரும் பகையுடையவர்கள் (கூரத்தாழ்வான் குருடான கதை etc) தனது தந்தைவழி உறவினனான அனந்தவர்மன் மீது முதலாம் குலோத்துங்கன் படையெடுப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
– ஆகமொத்தம், நீங்கள் சொன்னதுபோல பழையகால அரசர்களின் மோதல்களை இனமோதல்களாக மட்டும் சித்தரித்து விட முடியாது. இதில் இன்னுமொரு சிரிப்பு என்னவென்றால், பழைய ராஜகுலத்தவர்கள் (முக்கியமாகச் சிங்கள ராஜகுலத்தவர்கள்) தமது நாட்டுச் சாதாரண மக்கள் அல்லது பிரபுக்கள் குடும்பங்களில் பெண் எடுக்கமாட்டார்கள்; ஆனால், பரம வைரிகளான வேறு ராஜ குலங்களில் பெண் எடுப்பார்கள். எனவே, அவர்கள் இன்றைக்கு அடித்துக்கொள்வதும், நாளைக்கு உறவுகொண்டாடுவதும் வழமை. அரசன் சந்ததி இல்லாமல் இறக்குமிடத்து முழு வெளிநாட்டுக்காரன் ஒருவனை (அதாவது குறித்த நாட்டுக்கு வெளியில் பிறந்தவன்) அவன் அரச வம்சத்தில் பிறந்தவன் என்ற காரணம் பற்றி அரசனாகவும் அவர்கள் தயங்கியதில்லை. உதாரணங்கள் குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன், கண்டி நாயக்க வம்சத்தினர்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.