சோழர் வரலாறு – சில அவதானங்கள்

சோழர் வரலாற்றை அடியொற்றி சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் உணர்ச்சி மிகுந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவித்த வரலாற்று ஆதாரங்கள் பெரும்பாலும் சோழர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள். வேற்றுநாட்டவர்களின் வரலாற்று மூலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் வசதி அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. இதனால் அவர்கள் சோழர்கள் பெருமையை மிகைப்படுத்தி எழுதியிருப்பார்களோ என்றால், அது தான் இல்லை. மறு வளமாக, சோழப்பேரரசைப்பற்றி மிகச் சமீபத்தில் வெளிவந்திருக்கும், வெளிநாட்டவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகள் சோழர்களின் பெருமையை இன்னும் ஒருபடி உயர்த்தி இருக்கின்றன. சமீபகால ஆராய்ச்சியில் வெளிவந்திருக்கும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்:

– சீனாவின் குவாங்சௌ நகரத்தில் சோழர் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் பல இந்துக்கோவில்கள் இருந்திருக்கின்றன. ஒரு கோவிலில் சுமார் முன்னூறு சிலைகளும் தமிழ்-சீன இருமொழிக் கல்வெட்டு ஒன்றும் (!!!!!) கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
– இராஜராஜ சோழர் சீனாவின் சோங் வம்ச சக்கரவர்த்திக்குத் தூதுவர்களை அனுப்பியிருக்கிறார். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதுவர்கள் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு (ஹாஹா ). இந்தப்பெரிய தூதுகோஷ்டியைப்பார்த்து மிரண்டுபோன குவாங்சௌ நகராதிபதி “இனிமேல்பட்டு ஒருநாட்டின் தூதுகோஷ்டியில் இருபது பேருக்கு மேல் அனுமதிக்க வேண்டாம். இவர்களுக்கு உரிய மரியாதைகள் செய்வது பெரிய தொல்லையாக இருக்கிறது” என்று சோங் சக்கரவர்த்தியைக் கேட்டிருக்கிறார். ஆனால், சக்கரவர்த்தி அதை நிராகரித்துவிட்டார்.

– சீன அரசாங்கம் அன்றைய உலகின் வல்லரசுகளாக மதித்த நான்கு அரசாங்கங்கள் அராபியர், சோழர், ஸ்ரீவிஜயம் மற்றும் ஜாவா நாட்டினர். வட இந்தியர்களைப்பற்றி அக்காலச்சீனர்கள் கவலைப்படவில்லை. அவர்களைப்பொறுத்த வரையில் இந்தியா என்பது சோழ நாடாக இருந்திருக்கிறது.

— முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏற முன்பு ஸ்ரீவிஜய மன்னர்களுக்கு மேல்நாயகனாக (overlord) ஸ்ரீவிஜயத்திலும், பின்பு சோழ தூதுவனாகச் சீனாவிலும் இருந்திருக்கிறான் (இது சாண்டில்யன் காலத்திலேயே தெரிந்தது – இப்போது மேலும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன)

— இன்றைக்குச் சீனர்கள் கையாளும் “முத்துக்களின் கோர்வை (string of pearls) ” மூலோபாயம் போன்றதொரு மூலோபாயத்தைச் சோழர்கள் கையாண்டு, இந்து சமுத்திரத்தில் பெரும் கடலாதிக்கத்தை நிறுவியிருக்கிறார்கள். ஆகவே, அவர்களின் பேரரசின் அளவானது வெறுமனே அவர்கள் கைப்பற்றிய நிலங்களின் அளவைக்கொண்டு நிர்ணயிக்க முடியாதது. கேரளத்துறைமுகங்கள், இலங்கை, மாலைதீவுகள், அந்தமான், விசாகப்பட்டினம், கலிங்கம், வங்காளம், கம்போடியா, கடாரம், மலாசியாவின் இரு கரைகள், சுமாத்திராவின் இரு கரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியதன் மூலம் அன்றைக்கு உலகின் மிக முக்கிய சமுத்திரமான இந்து சமுத்திரத்தில் அசைக்க முடியாத கடலாதிக்கத்தைச் சோழர்கள் நிறுவி இருக்கிறார்கள். அன்றைக்கு உலகின் மிக முக்கிய வர்த்தகப் பாதையாக இருந்த ஐரோப்பா –அரேபியா –இந்தியா — ஸ்ரீவிஜயம் –சீனா வர்த்தகப் பாதையின் நட்ட நடுவில் பெரும் ஆதிக்கத்தை வைத்திருந்திருக்கிறார்கள்.

— எனவே சோழர்கள் ஸ்ரீவிஜயத்தைத் தாக்கிக் கைப்பற்றியது வெறுமனேஇன்னொரு நாட்டைக் கைப்பற்றியதன்று. அன்றைய உலகின்இன்னுமொரு வல்லரசைக் கைப்பற்றியதாகும்.

— பொதுவாக அதிகாரச் சமநிலையில் பெரிய மாற்றம் நேரும்போது மற்றைய வல்லரசுகள் தலையிடும். ஸ்ரீவிஜய நாட்டினர் முடிந்த வரை சீனச் சக்கரவர்த்தியின் நட்பைப் பெறப்பார்த்திருக்கிறார்கள். இருந்தும், ராஜேந்திர சோழன் ஸ்ரீவிஜயத்தைத் தாக்கிய போது சீனா கூடத் தலையிடவில்லை

எனவே, கல்கி, சாண்டில்யன் நினைத்தது போல, எழுதியது போல, சோழர்கள் தமது பலத்தின் உச்சத்தில் வெறுமனே இந்தியாவின் முக்கியமான ஒரு அரசாக மட்டும் இருக்கவில்லை. அன்றைய நாகரிக உலகின் ஒரு முக்கியமான வல்லரசாக இருந்திருக்கிறார்கள்.

கடைசியாக ஒரு குறிப்பு: இந்த மாதிரி ஒரு பதிவை முகப்புத்தகத்தில் பார்த்திருந்தால் நான் கூட நம்பியிருந்திருக்க மாட்டேன். ஆனால், இது ஆதாரமற்ற ஒரு பதிவு அல்ல. தமிழ்ப்பேராசிரியர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையிலானதும் அல்ல.

வெளிநாட்டுப்பேராசிரியர்கள் ஹெர்மன் குல்க், சென் மற்றும் பலரின் 2010 களில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலானது. ஆதாரம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.