தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை – III

அலை கொண்ட கடல் அன்று துயில் கொண்டதுண்டு
அலைகின்ற மென் தென்றல் நிலை கொண்டதுண்டு
வலை கொண்டு படகோடு கடல் ஓடுவார்கள்
வருகின்ற தறியாது மையல் கொண்டதுண்டு

நெடுவானில் உடை வாளோடு அலைவான் ஓர் ஆயன் (Orion)
நினைவென்ன கொண்டானோ விரைவில் மறைந்தான்
கடி நாயும் அவன் பின்னால் அடி வானம் போகும்
தனியாக விடி வெள்ளி நிலவோடு மேயும்

விடி காலை வரும் நேரம் கடல் மீது மாற்றம்
மிக நின்ற தண்ணீரும் பின்னோக்கிப் போக
அடி நீள மணல் மீது பல மீன்கள் துள்ள
அட என்ன இது என்று பலர் பார்க்கப் போகக்

கருவண்ணம் உருவான சுவரோ இதென்ன
தலை நூறு படம் தூக்கி வரும் நாகம் என்ன
நர மானிடர் மீது ஒரு சாபம் என்ன
நாடெல்லாம் இனி வெள்ளக் காடாகும் என்ன

உருவாகி நெடு வானில் உயரே எழுந்து
உயிர் கொல்லி என வந்த தலை ஒன்று – நீளக்
கரை எங்கும் உரு வந்த கடல் நீர் புகுந்து
கனி காய் பூ என இன்றி உயிர் கொன்ற தன்று

கடலோடும் வலைஞர்கள் பல வீடும் அங்கு
கவிழ்த்துக் கிடந்திட்ட சிறு தோணி யாவும்
உடையான் ஏழ் உலகெல்லாம் உறைகின்ற கோவில்
ஒரு மாதா மரியன்னை உறை கோவிலோடு

கடை கண்ணி கல்லூரி விளையாட் டரங்கம்
கரையோரம் தலை தூக்கி நிலை நின்ற யாவும்
மட மானிடன் கண்ட கனவோடு சேர்த்து
வதை செய்ய வெறி கொண்ட கடல் கொண்ட தன்று..

கடல் கரையிலே நின்ற சிறுசெடி
கடலின் கோபம் தப்பியது ஆயினும்
அதனைச் சுற்றித் தழுவிய பூங்கொடி
அலையில் பட்டுத் துவண்டு விழுந்தது
கனியும் பூவும் சிதறிக் கிடந்ததைக்
கண்டவன் கண் நதி கடலில் கலந்தது
மனைவி மக்களை அள்ளிக் கொடுத்தவன்
மனம் இடிந்தனன்; வானம் இருண்டது

நாட்கள் சென்றொரு மாதம் கடந்தது
நரனின் தோணி கடலில் மிதந்தது
பாழ்க் கடல் செய்த பாவம் பயந்திடான்
‘பாரை’ வெல்ல மறுபடி போகிறான்
ஆழ நெஞ்சில் இரக்கம் இல்லாக் கடல்
அன்னை சீறினள் ஆயினும் மானிடன்
வேலை இன்றிச் சோம்பிக் கிடப்பதோ?
வேலை மறுபடி ஆள விழைகிறான்

வெறி கொண்ட கடல் வந்து தரை மோதினாலும்
மிக வாழ்ந்த எம் வாழ்வை அலை கொண்ட போதும்
“எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனின் என்ன அதை வென்று செல்வார்”*
முறிகின்ற தடிகள் தான் மனிதர். ஆனாலும்
மோசங்கள் வரல் கண்டு சாயாது மனிதம்!
கருமை கொள் இரவொன்று வருமாயின், பின் வை
கறை ஒன்று கீழ்வானில் எழும் என்று கண்டோம்.

—————————————————————————————————————-
*இவ்விரு வரிகள் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்கள் எழுதியவை. பொருத்தம் நோக்கி ஒரு மேற்கோள் போல இங்கே எடுத்தாளப் பட்டுள்ளன.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.