கீழிருந்து மேலான அபிவிருத்தி (Bottom up development)

வளர்ச்சியென்பது கீழிருந்து மேலாக இருத்தல் எப்போதும் நன்று.

எல்லா வளர்ச்சியும் கீழிருந்து மேலாகத் தானே அமைய முடியும் என்று கேட்கலாம்.சில வேளைகளில் அது உண்மை. உதாரணமாக ஒரு தாவரம் வளர்வதானால் நிலத்திலிருந்து மேல்நோக்கித் தண்டு, கிளை, இலை, பூ, கனி என்று தான் வளர முடியும். நாலு பழம், மூன்று இலை, இரண்டு கிளை என்று கொண்டுவந்து ஒட்டி ஒரு தாவரத்தை உருவாக்க முடியாது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அதிகமாக “கீழிருந்து மேலாக” நிகழ்வதுதான்.கடலில் வாழ்ந்த ஒற்றைக்கல உயிரினங்கள் கூர்ப்படைந்து பாக்டீரியா ஆகிப் புழுவாகி மீனாகி ஊர்வனவாகிப் பறவையாகி மிருகமாகி மனிதன் தோன்றினான். ஆனால் செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபோடிக்ஸ் என்று வரும்போது மனிதனை அப்படியே பிரதிபண்ணி இயந்திரங்கள் செய்ய முயன்றோம். அதனால் தான் பல தசாப்தங்கள் ஆகியும் ரோபோடிக்ஸ் எதிர்பார்த்தளவு வளரவில்லை. ஆதர் கிளார்க் போன்றவர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் நமது கலக்சி முழுவதயும் ஆளப்போகிறோம் என்று எழுதி வைத்தார்கள். ஆனால் நாம் சந்திரனில்கூட இன்னும் காலடி வைக்கவில்லை இந்த நூற்றாண்டில். இதற்கு ஒரு காரணம் ரோபோடிக்ஸ் துறை மேலிருந்து கீழாக வளரப் பார்த்தது. தற்போது விஞ்ஞானிகள் இந்தத் தவறை உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) எனும் துறையைப் பின்தள்ளி செயற்கை உயிரியல் (artificial life) எனும் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இது ஒரு bottom up approach.

இதேபோலவே, மனித குல அபிவிருத்தி, அல்லது இனமொன்றின் வளர்ச்சி அல்லது தேசம் ஒன்றின் அபிவிருத்தி என்று வருகிறபோது, சிலவேளைகளில் அபிவிருத்தி மேலிருந்து கீழாக (top-down) வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். உதாரணமாக, நல்லதொரு அரசாங்கம் அமையவேண்டும், அவர்கள் திட்டங்களைத் தீட்டவேண்டும், அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும், நாடு முழுவதும் அவற்றைச் செயற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் இப்படி.இது நல்லதல்ல. அத்தோடு அதிகம் சாத்தியமும் அல்ல. மேலும், ஒவ்வொரு தனி மனிதரும் தனது சமூகத்துக்காக அல்லது நாட்டுக்காகத் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விலகிக்கொண்டு பாரத்தைத் தலைமையின் மேல் போட்டுவிடும் சுயநலமும் இதில் அடங்கியிருக்கிறது.

பொதுவாகவே ஆசிய மக்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு குணம் உண்டு; நல்ல தலைமை அமைந்துவிட்டால் மற்ற எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது. அப்படிச் சரிவரா விட்டால், தலைமை மீது பாரத்தைப் போடுவது; அல்லது தலைமையை மாற்றுவது.பல ஆயிரம் ஆண்டுகளாக முடியாட்சியின்கீழ் வாழ்ந்ததால் இந்தப்பண்பு ஊறியிருக்கலாம். ஆனால், அடிப்படையில் இது சுயநலம்: தமது பங்களிப்பைச் செலுத்த விரும்பாத சோம்பேறித்தனம்.தலைமையில் அளவுக்கதிகமான நம்பிக்கை வைப்பது, பின்பு அந்த நம்பிக்கை பொய்யாகும்போது அளவுக்கதிகமாகக் கோபப்படுவது, தனிநபர்களின் கையில் பெருமளவு அதிகாரங்களை ஒப்படைப்பது, தனிமனித வழிபாடு இவையெல்லாம் ஒரு சமூகத்தின் முதிர்ச்சியின்மையையே பிரதிபலிக்கின்றன.

நமது அரசியலிலும் இந்தப் பண்பு உண்டு. “தலைமை யார் வகிக்கவேண்டும்” என்பதைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்போம். ஏதோ தலைமை சரியாக அமைந்தால் எல்லாமே தானாக நடந்துவிடும் போல. எந்தத் தலைமையின் கீழும் நாம் செய்யவேண்டிய விடயங்களைச் செய்யமாட்டோம். 

சில சில சந்தர்ப்பங்களில் ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தலைமை வகித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு ஆரோக்கியமான சமூகம் இதைப் புரிந்து கொள்ளும். மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனிடம் இருந்தும் வரவேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் சொன்னார்: “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேளாதே. நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்!” நாட்டின் அல்லது சமூகத்தின் அபிவிருத்திக்கு ஒவ்வொருவரும் பங்களிக்கும்போது “கீழிருந்து மேலான அபிவிருத்தி” என்பது தானே நிகழும். 

இதை ஆப்பிரகாம் லிங்கனுக்கு முன்னரே நமது ஒளவையார், ஒரே ஒரு சொல்லில், மிக அழகாகச் சொல்லிச் சென்றார்.

“வரப்புயர!”

அரசாங்கம் நன்றாக இருக்குமெனில் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்பது சரியல்ல. மக்கள் சரியாக வாழ்ந்தால், சரியாக நடந்தால், சரியான முடிவுகளை எடுத்தால் அரசு நன்றாக அமையும்.

அதைத்தான் ஒளவையார் சொன்னார்:

வரப்புயர நீர் உயரும்.

நீர் உயர நெல் உயரும்.

நெல் உயரக் குடி உயரும்.

குடி உயரக் கோன் உயரும்.

“அரசன் உயர்வான்” என்பதல்ல: அரசாங்கம் சரியாக நடக்கும். அதனால்தான் கோன் “உயரும்” என்று அல்திணையில் சொன்னார்.

ஒளவையார் சொன்ன “வரப்புயர” என்பது இந்த “bottom up approach” தான். அதாவது, ஒவ்வொருவரும் தனது வரப்பை உயர்த்த வேண்டும். சிறிய பங்களிப்புத் தான்; ஆனால் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது.திட்டமிடல், வழிகாட்டல், தூரநோக்கு ஆகியவற்றைத் தலைமைகள் வழங்கலாம்.

சரி: தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட ஒவ்வொரு குடிமகனும், குறுகிய, மத்திய, மற்றும் நீண்டகால நோக்கில் (நான் இலங்கையின் வடமாகாணத்தைப்பற்றி முக்கியமாக யோசிக்கிறேன்) செய்யக்கூடியவை என்னென்ன?

இதுபற்றித் தனிப்பதிவு ஒன்று விரைவில் எழுதுகிறேன்.சுருக்கமாக, நாம் இவ்வாறானதொரு ஒரு தொலைநோக்குப்பார்வையை வைத்திருக்கலாம்:

1)சக்திப்பயன்பாட்டில் தன்னிறைவு. வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு வீடும் சூரியப் படல்கள் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்தல்; காற்றாடிகள், மற்றும் மெதேன் வாயு மூலம் தொழிற்சாலைகள், இதர தேவைகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்தல்.

2)பகுதியளவு உணவுத் தன்னிறைவு: தேவையான முழு உணவையும் விளைவிக்க முடியாவிட்டாலும், அவசர காலப் பயன்பாட்டுக்குத் தேவையான மரவள்ளி, சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டிலும் விளைவித்தல்.

3) பொதுப்போக்குவரத்து அபிவிருத்தி: வடமாகாணத்தின் பிரதான நகரங்களை (யாழ்ப்பாணம், சுன்னாகம், தெல்லிப்பழை, காங்கேசன்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்) இணைக்கும் மின்சார தரைக்கீழ் ரயில் போக்குவரத்து.

4) நீர் வடிகால் அமைப்பு: கிராமிய மட்டத்தில் குளங்களைப் புனரமைத்தலும், ஒவ்வொரு வீதியின் பக்கமும் நீர் வடிகால் அமைப்பொன்றை ஏற்படுத்துவதும்.

5) மர நடுகை: ஒவ்வொரு மனிதருக்கும் பத்து நிழல்தரு மரங்கள்.

6) சேவைகள் அடிப்படைப் பொருளாதாரம்: கணனி மென்பொருள், வணிக சேவைகள், துறைமுக சேவைகள் முதலியவற்றை ஆசியா முழுவதற்கும் வழங்கும் பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தல்.

இது எல்லாவற்றையும் செய்யப் பணம் எங்கே என்று கேட்கலாம்.பணம் அமெரிக்காவோ ஜப்பானோ கடனாக வழங்கும் என்று எதிர்பபார்ப்பது நல்லதல்ல. அது தான் இவ்வளவுநாளும் செய்தோம்.

பணம் நாமாகவே உருவாக்கலாம். புலம்பெயர் தமிழர்கள், தங்களது முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்குமானால் ஒரு பகுதியை வழங்குவார்கள். மிகுதி வட மாகாணத்தில் இருந்தே வரவேண்டும்.

சின்ன உதாரணம் சொல்கிறேன்.வட மாகாணத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு காருக்கும் வருடாந்த வரி ஒரு லட்சத்தால் அதிகரிக்கப்பட்டால், எவ்வளவு பணம் சேரும்? அந்தப்பணத்தை மின் ரயில் திட்டத்திற்குப் பாவிக்கலாம். போதுமா, போதாதா என்பது வேறு விடயம். இது கொள்கையளவிலான உதாரணம் மட்டுமே. கார் வைத்திருப்பவர்களை இது பாதிக்கும். அதை அவர்கள் தாங்கிக்கொண்டால், நீண்டகால அடிப்படையில் எல்லோருக்கும் நன்மை. ஆகவே, வெளிப்பார்வைக்குப் பெரு முதலீடு தேவைப்படுவதாகத் தென்படும் திட்டங்களைக் கூட, கடன் இல்லாமல் சமூகப்பங்களிப்பின் மூலம் நிறைவேற்றலாம்.

ஆனால், அதற்கு ஒவ்வொருவரும் தமது பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.அதுதான் “கீழிருந்து மேலான அபிவிருத்தி”.

வரப்புயர!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.