தமிழ் மாதங்களுக்குப் பெயர் வந்தது எப்படி?

தற்போது வழங்கும் தமிழ் மாதங்களுக்குப் பெயர்கள் எவ்வாறு உண்டாயின என்று கொஞ்சம் தேடிப் பார்த்ததில், மாதங்களின் பெயர்கள் சந்திர நாள்காட்டியை அடிப்படையாக வைத்து, அதாவது சந்திரன் ராசிகளுக்கூடாகப் பயணிப்பதை ஆதாரமாக வைத்து உருவானவை என்று நிச்சயமாகத் தெரியவந்தது. இதுபற்றி நான் அவதானித்தவற்றைக் கீழே பகிர்கிறேன்.

இங்கே ஒரு விடயம் கூறவேண்டும். இங்கே “தமிழ்” மாதங்கள் என்று நான் கூறும் பெயர்களுக்கும் வடமொழியில் மாதங்களுக்கு வழங்கும் பெயர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. அதுபற்றி ஆராய நான் இங்கே முயலவில்லை. தற்போது வழங்கும் பெயர்களைப் பற்றியே பேசுகிறேன்.

1. தமிழ் மாதங்களின் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி (புரட்டாசி), ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.

2. வடமொழி மாதங்களின் பெயர்கள் சைத்ரா, வைசாகா, ஜெயேஷ்தா, ஆஸாதா, ஷ்ரவனா, பாத்ரபதா, அஷ்வினா, கார்த்திகா, மார்கசீரிஷா, பவுஸா, மகா, பல்குணா.

3. சித்திரை மாதத்தில் மேஷ ராசி சூரியனோடு பயணம் செய்யும். ஆகவே, ராசிச் சக்கரத்தில் அதற்கு எதிரேயுள்ள துலா ராசி சூர்யாஸ்தமன நேரத்தில் உதயமாகும். முழுமதி நாளன்று சந்திரனும் சூரியன் மறையும் நேரம் உதயமாவதால், சித்திரை மாத முழுமதி துலா ராசியோடு வானில் பயணம் செய்து மறையும்.

4. இவ்வாறே அதற்கடுத்த வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் விருச்சிகம், தனு, மகர ராசிகள் முழுமதியோடு பயணம் செய்யும். தொடர்ந்து வரும் மாதங்களுக்கும் இவ்வாறே கணிக்குக.

5. இப்போது இவ்வொவ்வொரு ராசியிலும் இருக்கும் முக்கியமான விண்மீன்களைப் பார்க்கலாம். துலா ராசியில் சித்திரை விண்மீனின் மூன்றாம், நாலாம் கால்கள் (அதாவது, குறித்த விண்மீன் அல்லது உடுத்தொகுதி வானத்தில் அமைந்துள்ள பகுதியை ராசிச் சக்கரத்தில் நாலாகப் பிரித்தால் அதில் கடைசி இரண்டு பகுதிகள்) அமைவதால், சித்திரை மாத முழுமதி அநேகமாக சித்திரை நட்சத்திர நாளுக்கு முன்பின்னாக ஏற்படும். சித்திரை நட்ஷத்திரத்தில் முழுமதி தோன்றுவதால் அதை சித்திரை மாதம் என்கிறார்கள்.

6. இவ்வாறே, விசாக நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் அம்மாதத்தை வைகாசி என்கிறோம். (வடமொழியில் வைசாகா, தமிழில் சகரமும் ககரமும் இடம் மாறின). பௌத்தர்கள் இம்முழுமதி நாளை “வெசாக்” என்பதும் அது விசாக நட்சத்திரத்தில் வருவது பற்றியே. பூரட்டாதி நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் பூரட்டாதி மாதம். அச்சுவினி நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் ஐப்பசி மாதம் (வடமொழியில் அஷ்வினா). கார்த்திகை நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் கார்த்திகை மாதம்.

7. ஏனைய மாதங்களின் பெயர்கள் இவ்வளவு வெளிப்படையாக அமையவில்லை. ஆனால் அவையும் சந்திர நாள்காட்டியின் அடிப்படையில் அமைந்தவையே. உதாரணமாக ஆனி மாதம் தமிழில் அனுஷ நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் ஆனி எனப்படுகிறது. வடமொழியில் அனுஷத்திற்கு அடுத்த கேட்டை நட்ஷத்திரத்தை வைத்து ஜெயேஷ்தா என்கிறார்கள் (வடமொழியில் கேட்டை விண்மீனின் பெயரும் ஜெயேஷ்தா. விண்ணியலில் Antarus). ஆடி மாத முழுமதி பூராடம் (பூர்வ ஆடம்), உத்தராடம் (உத்தர ஆடம்) நாள்களுக்கு அருகாக அமைகிறது. வடமொழியில் இவ்விண்மீன்களைப் பூர்வ ஆஸாதா, உத்தர ஆஸாதா என்றும் மாதத்தை ஆஸாதா என்றும் அழைக்கிறார்கள். ஆவணி திருவோணம் (ஓணம்) நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் அப்படி அழைக்கப்படுகிறது, வடமொழியில் விண்மீன், மாதம் இரண்டும் ஸ்ராவனா எனப்படுகின்றன (ஸ்ர + ஆவனா).

மார்கழி வடமொழியில் மார்கசீரிஷா எனப்படுகிறது. இது மிருகசீரிட நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றுவதால் அப்பெயர் பெறுகிறது (அதற்கு அடுத்த விண்மீன் திருவாதிரை). தை மாதத்தில் பூச நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றும். அதற்கும் தை என்ற பெயருக்கும் தொடர்பில்லா விட்டாலும் வடமொழியில் இம்மாதம் பௌஸா எனப்படுகிறது. மாசி மாதத்தில் மக நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றும். வடமொழியில் இம்மாதத்தின் பெயர் மாகா. பங்குனியில் உத்தர நட்ஷத்திர நாளுக்கு அருகாக முழுமதி தோன்றும். வடமொழியில் இந்த விண்மீனின் பெயர் பல்குணா. எனவே மாதமும் பல்குனி என்றே அழைக்கப்படுகிறது. தமிழில் விண்மீன் உத்தரம் என்று அழைக்கப்பட்டாலும் மாதத்தின் பெயர் பல்குனி, பங்குனி ஆகிவிட்டது.

முக்கிய குறிப்புகள்

1. சூரியன், சந்திரன் என்பவை ராசிச் சக்கரத்தினூடாக நகர்கின்றன என்று சொல்லும்போது பூமியில் இருந்து பார்க்கையில் அவை நகர்வதாகத் தோன்றுவதையே குறிக்கிறேன். உண்மையில் சந்திரன் பூமியைச் சுற்றிவர, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. விண்மீன்கள் நம்மைச்சுற்றி வெகு தூரத்தில் உள்ளன. ஆனால், வேகமாக ஓடும் காரில் இருந்து பார்ப்பவர்களுக்கு வீடுகள் பின்னுக்கு ஓடுவதாகத் தோன்றுவது போல, விண்பொருள்கள் எல்லாம் நம்மைச் சுற்றி ஓடுவதாக எமக்குத் தோன்றுகிறது அவ்வளவே.

2. இராசிச் சக்கரம், உடுத்தொகுதிகள் என்பன மனிதனால் எழுந்தமானமாக வகுக்கப்பட்டவை. சம்பந்தப்பட்ட உடுக்கள் உண்மையில் வானத்தில் இருந்தாலும் அவை மீனம், இடபம் என்று கூட்டமாக அமைந்திருக்கவில்லை. சிலவேளை, ஒரு உடுத் தொகுதியில் உள்ள உடுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். சந்திரனுக்கு முன்னால் எமது கையைப் பிடித்துக் கொண்டு சந்திரனைப் பிடித்திருப்பதாக நாங்கள் செல்பி எடுப்பதில்லையா? அதுபோல, எமது பார்வைக் கோணத்தில் அவை ஒன்றாக இருப்பதாகத் தோன்றும் உடுக்களை நாம் உடுத்தொகுதிகளாக வகுத்திருக்கிறோம்.

3. தொலைக்காட்டி ஊடாகப் பார்க்கும்போது மேலதிக உடுக்களை நாம் காணக்கூடியதாக இருப்பதால் உடுத்தொகுதிகளின் தோற்றமே மாறிவிடும்.

4. விண்பொருள்களின் நகர்வை அல்லது தோற்ற நகர்வை விஞ்ஞான அடிப்படையில் அச்சொட்டாகக் கணிக்கலாம். அந்த அடிப்படையிலேயே நான் மேலுள்ள பதிவை எழுதியிருக்கிறேன். ஆனால், இந்த நகர்வுகள் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. அப்படிப் பாதிப்பதாகச் சொல்லும் சோதிட சாத்திரத்தில் எந்தவித உண்மையும் கிடையாது. அது வெறும் மூடநம்பிக்கை மட்டுமே.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

  1. மிகச் சரியான பதிவு.
    முழுமதியோடு உதயமாகும் தாரகைகளின் பெயர்களில், பலவற்றிற்கு, தூய தமிழ்ப் பெயர் காணக் கிடைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது. நம் சங்க இலக்கிய நூல்களில் இருந்து அவற்றைக் கண்டெடுத்தவர்கள் உண்டெனப் படித்திருக்கிறேன். ஆனால், அந்த விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
    முடிந்தால், அவற்றை அறிய முற்படுங்கள். தமிழ்ப் பெயர்களிலிருந்து அவை வட மொழிக்கு மாற்றம் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டனவா என கண்டுபிடிக்க அவை உதவும். மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.