“சுத்தத்” தமிழ் சாத்தியமா?

சில தசாப்தங்களாகவே, `வடமொழிச் சொற்கள் கலவாத சுத்தத் தமிழைப் பாவிக்க வேண்டும்’ என்ற வலுவான எண்ணப்பாடு பல தமிழர்களிடையே இருந்தாலும் கூட, கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளாக அது இன்னும் வலிமையடைந்து வருகிறது. இது சாத்தியமா? என்பது பற்றி வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இது அவசியமா, அல்லது அர்த்தமுள்ளதா என்பது எத்தனை பேரால் கேள்விக்கு உட்படுத்தப் படுகிறது என்று தெரியவில்லை. உட்படுத்துபவர்களும், உணர்ச்சியலைகள் பெரிதாக எழக் கூடிய இவ்விடயத்தில் மௌனவிரதம் காப்பதாகவே படுகிறது. தமிழ் (மட்டுமே) உலகின் மிக ஆதியான மொழி என்ற நம்பிக்கை, இவ்விடயத்தில் எழுப்பப்படும் கோஷங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. சமய சம்பந்தமான விடயங்களில் “தமிழ் மட்டும்” என்ற கோஷம் வலியுறுத்தப் படும்போது, உணர்ச்சிகள் இன்னும் கூர்மை அடைகின்றன. இவ்விடயத்தில் வடமொழி தமிழுடன் கலப்பதை அல்லது வழிபாட்டு மொழியாக இருப்பதைத் தடுப்பதில் காட்டப்படும் ஆர்வம் ஆங்கிலம், அல்லது முக்கியமாக அரபு மொழி தமிழுடன் கலந்து பேசப்படுவதைத் தடுப்பதில் காட்டப்படுகிறதா என்றும் ஒரு பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர். மொழிகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல், இது எதற்கும் தீர்வு கண்டுவிட முடியாது. எனவே, உணர்ச்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, மிக அவசியமான உண்மைகள் சிலவற்றைச் (நம்பிக்கைகள் அல்ல, நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகள்) சுருக்கமாகப் பார்ப்போம்.

லகில் மனித இனம் (genus) தோன்றியது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்வரை. இவர்கள் மனிதக் குரங்குகளில் இருந்து கூர்ப்பு மூலம் உருவானார்கள். ஹோமோ சேப்பியன் என்று சொல்லப்படும் நவீன மனித இனக்குழு (species) தோன்றியது கிட்டத்தட்ட 200,000 வருடங்களுக்கு முன்வரை.

ஹோமோ இரெக்டசு, நியாண்டதால் முதலிய ஏனைய மனித இனக்குழுக்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்திருந்தாலும் கூட, ஹோமோ சேப்பியன் எனப்படும் நவீன மனித இனக்குழு ஆப்ரிக்காவிலேயே தோன்றியது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இவர்கள், கிட்டத் தட்ட 70,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, உலகின் மற்றைய பாகங்களுக்குப் பரவிச் சென்றார்கள். சென்றபோது அந்த இடங்களில் முன்பு வாழ்ந்த நியாண்டதால் முதலிய ஏனைய மனித இனக்குழுக்களை பெரும்பாலும் கொன்றொழித்ததோடு, சிறியளவில் இனக்கலப்பும் செய்தார்கள்.

ந்தியா, இலங்கை முதலிய தமிழ் பேசப்படும் தெற்காசிய நாடுகளுக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பும், ஐரோப்பாவுக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்பும், வட அமெரிக்காவுக்கு 20,000 ஆண்டுகளுக்கு முன்பும் ஹோமோ சேப்பியன் மனிதர்கள் சென்றடைந்ததாகக் குத்து மதிப்பாகச் சொல்லலாம்.

திலே “மொழி” தோன்றியது எப்போது? சிலவகை மனிதக் குரங்குகள் எழுப்பும் சத்தங்களிலே “சிறுத்தை”, “பாம்பு”, “மழை” முதலிய விடயங்களுக்குத் தனித்தனி ஓசைகள் அல்லது “சொற்கள்” இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஒருவகை மொழி. இது மனித குலம் உருவாவதற்கு முன்பே இருந்தது.

ஹோமோ சேப்பியன்களுக்கு முன் வாழ்ந்த நியாண்டதால்கள் நிச்சயமாகப் பேச்சு மொழி ஒன்றைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களது மொழியானது கட்டளைகள், பெயர்ச்சொற்கள், உணர்வுகளை அதிகம் கொண்டதாக இருந்ததே ஒழிய விஸ்தாரமான வாக்கிய அமைப்புக்கோ விவரணைகளுக்கோ இடமிருக்கவில்லை.

ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறும்போது நிச்சயமாக அவர்களிடம் வளர்ச்சியடைந்த பேச்சு மொழியொன்றும், அடிப்படையான விடயங்களைக் குறியீடு மூலம் காட்டவல்ல திறமையும் (அதாவது மிக அடிப்படை எழுத்துக்களும்) இருந்தன. மொழிகளை ஒப்பியல் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கெல்லாம் ஆதியான மொழி (Proto-Sapiens language) 160, 000 தொடக்கம் 80,000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் உருவாகியிருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இக்காலத்தில் ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவில் தான் இருந்தனர். அதன் பிறகுதான் அவர்களின் பரவல் இடம்பெற்றது. எனவே, இன்றைக்கு உலகில் பேசப்படும் மொழிகள் எல்லாமே ஆப்ரிக்காவில் ஆதி ஹோமோ சேப்பியன்கள் பேசிய மொழியின் தொடர்ச்சிகளே. ஆனால், நிச்சயமாக இன்று பேசப்படும் தமிழையோ அல்லது வேறெந்த மொழியையோ அன்றைக்கு அவர்கள் பேசியிருக்க முடியாது. 2000 ஆண்டுகளில் தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும்போது பல பத்தாயிரம் ஆண்டுக் காலத்தில் மொழி எவ்வளவு வளர்ந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமல்ல. ஆகவே ஆதி ஹோமோ சேப்பியன்கள் பேசிய மொழிக்கு இன்று வழங்கும் மொழியொன்றின் பெயரைக் கொடுக்க முடியாது.

ஆகமொத்தம், இன்றுள்ள எல்லா மொழிகளும் எமது மூதாதையர் 80,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பேசிய மொழியில் இருந்து கூர்ப்படைந்து தோன்றியவையே. அவற்றில் இன்று வாழும் மொழிகளுள் ஆதியான மொழிகளில் தமிழ் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மனிதர்கள் பூமியில் குறுக்கும் நெடுக்கும் சென்றபோது இரத்தக் கலப்பு ஏற்பட்டு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தது போலவே, இரண்டு இனத்தவர் சந்திக்கும் போது சொற் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் மொழிகள் வளம்பெறுதல் காலம்காலமாக நடந்துதான் வருகிறது. எனவே தூய இனமென்றும் ஒன்றும் கிடையாது. தூய மொழியென்றும் ஒன்றும் கிடையாது. அதற்காக நமது அடையாளத்தை இழந்துவிட வேண்டுமென்று சொல்லவில்லை. நமது சுய அடையாளத்தை மதிப்போம். வேண்டுமென்று யாரும் அதை அழிக்க இடம் கொடாமல் இருப்போம். ஆனால், இயல்பாக ஏற்படும் மொழிக்கலப்பை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை. அது எல்லா நேரங்களிலும் ஒரு விரும்பத் தகாத விடயமும் அல்ல. மற்ற மொழிகளில் இருந்து சொற்களைக் கடன்பெறுவதால் “கடன்வாங்கும் மொழி” என்று அறியப்பட்ட ஆங்கிலத்தை மொழியாக உடையவர்கள்தான் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உலகத்தில் நிறுவி ஆண்டனர். ஆங்கிலத்தில் பெரும்பான்மை பழைய பிரஞ்சு என்று பிரஞ்சுக் காரர்கள் எவ்வளவுதான் சொன்னாலும், உலகின் சர்வதேச மொழி இன்றைக்கு ஆங்கிலம் மட்டும்தான். பிரஞ்சு என்று யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.