அருந்ததியும் ரோகிணியும்

தமிழரது திருமணச் சடங்குகளில், மணமகன் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட வேண்டும் என்பது ஒன்று உண்டு. அருந்ததி பெண்களின் கற்புக்கு முன்னுதாரணம், வரைவிலக்கணம் என்று சொல்லுகிறார்கள். அது உண்மையோ, இல்லையோ, இரவு வானத்தில் அருந்ததியைப் பார்ப்பது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஒரு இலவசக் கண் பரிசோதனையாக அமைந்தது என்று நினைக்கிறேன். ஏனெனில், அருந்ததி நட்சத்திரம் கூர்மையான கண்பார்வை உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.இப்போது திருமணங்களில் பகலிலேயே அருந்ததி காட்டுகிறார்கள்; பார்க்கிறார்கள். சூரியன் பிரகாசிக்கும் நீல வானத்தையோ, அல்லது கூரை சீலிங்கையோ பார்த்துவிட்டு அருந்ததியைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள். எத்தனை பேர் உண்மையில் அருந்ததியைப் பார்த்திருப்பார்கள், எத்தனை பேருக்கு அருந்ததி எங்கிருக்கிறது என்று தெரியும் என்று தெரியவில்லை.

அருந்ததி நட்சத்திரம் வடக்கு வானத்தில், சப்தரிஷி மண்டலம், பெரிய கரடி (Ursa Major), அல்லது பெரிய கலப்பை (Great Dipper) என்று அறியப்படுகிற உடுத்தொகுதியில் உள்ளது. “மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொழு மரபின் எழுமீன் போல” என்று சங்க இலக்கியம் இவ்வுடுத்தொகுதியைப் பேசும். ஆங்கிரஸ், அத்ரி, க்ரது, மரீசி, புலஹர், வசிஷ்டர், புலஸ்தியர் என்பவை சப்தரிஷிகளின் பெயர்கள். ஆகவே, சப்தரிஷி மண்டலத்தில் உள்ள உடுக்களுக்கும் இவை பெயர்களாகும். ஆங்கிலத்தில் இவ்வுடுக்களின் பெயர்கள் Dubhe (Alpha Ursae Majoris), Merak (Beta Ursae Majoris), Phecda (Gamma Ursae Majoris), Megrez (Delta Ursae Majoris), Alkaid (Eta Ursae Majoris), Mizar (Zeta Ursae Majoris), Alioth (Epsilon Ursae Majoris) என்பன.

பெரிய கலப்பை அல்லது சப்தரிஷி மண்டலம். BreakdownDiode, CC BY-SA 4.0 https://creativecommons.org/licenses/by-sa/4.0, via Wikimedia Commons

சப்தரிஷி மண்டலத்திலுள்ள ஏழு விண்மீன்களில் ஆறாவது (அதாவது கரடியின் வாலில் நடுவாக உள்ள) விண்மீனை வசிட்டர் என்றும், அதை இணைபிரியாத விண்மீனைக் கற்பிற் சிறந்த அருந்ததி என்றும் உருவகிக்கிறோம். ஆங்கிலத்தில் அகத்தியர் விண்மீனை Mizar அன்றும் அருந்ததி விண்மீனை Alcor என்றும் சொல்வார்கள். உண்மையில் இவை அரபுமொழிப் பெயர்களாகும். அருந்ததியை வடவரைக்கோளத்தில் மட்டும், அதுவும் வருடத்தின் சில காலங்களில் மட்டும் காணலாம்.

வசிட்டரும் அருந்ததியும். Image via ESO Online Digitized Sky Survey.

பழந்தமிழ் இலக்கியங்களில் அருந்ததி நட்சித்திரம் பற்றிய குறிப்புக்கள் உண்டு. இவ்விண்மீன் ‘சாலி’ என்றும் அழைக்கப் பட்டது. சிலப்பதிகாரத்தில் கோவலன் – கண்ணகி திருமணத்தை விவரிக்கும்போது,

“மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்….”

என்று இளங்கோவடிகள் கூறுவார். மேலும் அப்பாடலில்

“காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கென வேத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்..”

என்று வருதலால், முன் குறிக்கப்பட்ட விண்மீன் அருந்ததியே என்பது விளங்கும்.

உண்மையில், அருந்ததி நட்சத்திரத்தைக் கற்பிற் சிறந்த அருந்ததியாக உவமிப்பது பொருத்தமற்றது. வசிட்டர் நட்சத்திரத்தோடு இணைபிரியாமல் விளங்கும் தன்மை பற்றியே அருந்ததி விண்மீன் கற்பிற் சிறந்த அருந்ததியாக உவமிக்கப் பட்டது. ஆனால், வசிட்டர் என்பது உண்மையில் ஒரு விண்மீன் அல்லவென்றும், இரண்டு விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் இரட்டை உடுத்தொகுதி என்றும் சில காலத்திற்கு முன் விண்ணியலாளர்கள் கண்டறிந்தனர். இரட்டை உடுத்தொகுதி (binary system) என்பது, இரண்டு விண்மீன்கள் தமது பொதுவான ஈர்ப்பு மையத்தைப்பற்றி ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும். இன்னும் ஆராய்ந்ததில், இவ்விரட்டை உடுத்தொகுதியின் ஒவ்வொரு விண்மீன்களும் தனித்தனியே இரட்டை உடுத்தொகுதிகள் என்று தெரியவந்தது. அதாவது, வசிட்டர் விண்மீனாக நாம் காண்பது உண்மையில் மொத்தம் நாலு விண்மீன்கள்.

இவ்வாறு, அருந்ததியென்பதும் ஒரு இரட்டை விண்மீன் தொகுதியென்று கண்டறிந்துள்ளனர். ஆகவே வசிட்டர்- அருந்ததி ஜோடியென்று நாம் கருதுவது உண்மையில் ஆறு விண்மீன்களின் தொகுதி! கிட்டப் போய்ப் பார்க்கும்போது தான் விண்மீன்களின் வண்டவாளமும் தெரிகிறது.

தமிழர் திருமணச் சடங்குகளோடு சம்பந்தப்பட்ட இன்னுமொரு விண்மீன் ரோஹிணி. பழந்தமிழர் ரோகிணி நட்சத்திர நாளன்று தமது திருமணங்களை முன்னெடுத்தனர். இவ்விண்மீன் “சகடம்” என்றும் அழைக்கப் பட்டது. எனவேதான் “வானூர் மதியஞ் சகடணைய” என்று இளங்கோ குறிப்பிட்டார்.

வானத்தில் ரோகிணி என்பது இருபத்தேழு நட்ஷத்திரங்களில் நாலாவதாக, கார்த்திகை விண்மீன் கூட்டத்துக்கு அடுத்ததாக உள்ளது. இது ஆங்கிலத்தில் Aldebaran எனப்படுகிறது. உண்மையில், சிவப்பு நிறத்தில் அழகான ஒரு விண்மீன்தான் இது. இடப ராசியில் இடபத்தின் தலையில் அல்லது தலைக்கொம்பு ஒன்றில் இந்த விண்மீன் விளங்குகிறது. இதற்கு அண்மையில் பிரசித்தமான வேட்டைக்காரன் உடுத்தொகுதியையும் காணலாம்.

இந்துமதப் புராணக்கதைகளின்படி இருபத்தேழு நட்ஷத்திரங்கள் தக்ஷனின் புதல்வியர். பிரம்மாவின் மகனான தக்ஷன் தனது இருபத்தேழு புதல்வியரையும் சந்திரனுக்கே மணமுடித்து வைத்தானாம். ஆனால், சந்திரன் ரோஹிணி என்பவளிடம் அதிக அன்பு பாராட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சந்திரனின் மற்றைய மனைவியர் தமது தந்தையான தக்ஷனிடம் முறையிட, அவன் சந்திரனைத் தேய்ந்து கொண்டு செல்லுமாறு சபித்தானாம். சாபம் பலித்ததும், அதைக்கண்டு பயந்துபோன தக்ஷனின் மனைவிகள் சாபத்தைக் குறைக்குமாறு அல்லது மாற்றிக்கொள்ளுமாறு தக்ஷனை வேண்ட, அவன் சந்திரன் பதினான்கு நாட்கள் தேய்ந்த பிறகு மறுபடியும் பதினான்கு நாட்கள் வளருமாறு சாப விமோசனம் கொடுத்தான் என்பது புராணக்கதை.

இது வெறும் கதையானாலும் இதற்குப்பின் ஏதாவது தத்துவம் இருக்கலாம். சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றிவர சுமார் 27 நாள்களும் ஏழு மணித்தியாலங்களுக்கு எடுக்கின்றன. இந்தக் காலத்தில் ஒருமுறை அமாவாசையும் ஒருமுறை பௌர்ணமியும் ஏற்பட வேண்டுமாதலால், இந்தக் காலத்தில் பாதிக்கு நிலவு தேய்வதாகவும் மற்றைய பாதிக்கு வளர்வதாகவும் நமது வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும். சந்திரன் பூமியைச் சுற்றிவர இருபத்தேழு நாட்கள் எடுப்பதுபற்றியே எம் முன்னோர் வானத்தை இருபத்தேழு பகுதிகளாகப் பிரித்தனர். இவ்வொரு பகுதியும் அப்பகுதியில் பிரதானமாயிருந்த உடு அல்லது உடுத்தொகுதியின் பெயரால் அழைக்கப்பட்டது. ஒவ்வொருநாள் இரவும் இவற்றில் ஒவ்வொரு விண்மீனுடன் சந்திரன் சேர்வதாகத் தோன்றும். (எனவே, கொஞ்சம் அதிக மனைவிகள் மாதிரித் தோன்றினாலும், இருபத்தேழு உடுக்களுடனும் இரவுக்கு ஒருவராகச் சந்திரன் சேர்வது என்பது வெறும் கற்பனையல்ல!). இருந்தாலும், இருபத்தேழு நாள்கள் தவிர ஏழு மணிநேரம் சொச்சம் இருப்பதால் சந்திரன் ஏதுமொரு உடுத் தொகுதியில் சற்றுத் தாமதித்து நகர்வதாகத் தோன்றியிருக்கலாம். ரோகிணி உடு அல்லது உடுத்தொகுதி வானில் சற்று அகலமாக இருந்திருந்தால், இந்த சொச்சம் ஏழு மணி நேரத்தை ரோஹிணிக்கு ஒதுக்கி இருக்கலாம். இதிலிருந்துதான் இந்தக் கதை வந்ததோ என்னவோ தெரியவில்லை.

பழந்தமிழர் ரோகிணி நாளில் தமது திருமணங்களை வைத்துக் கொண்டதற்கும் இந்தக் கதைக்கும் ஏதும் தொடர்புண்டா தெரியவில்லை. ஆனால், சகடம் என்று அவர்கள் அழைத்த ரோகிணி நாளிலே அவர்கள் திருமணங்களை நடத்துவது குறித்துப் பல சங்கப் பாடல்களும் பேசுகின்றன. உதாரணமாக, விற்றூற்று மூதெயினனார் பாடிய அகநானூற்றுப் பாடலில், தலைவன் தனது திருமண நாளை நினைவு கொள்ளும்போது,

மைப்பு அறப் புழுக்கிய நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து, இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து..”

தன் திருமணம் நடந்ததாகக் கூறுகிறான். அவ்வாறே, நல்லாவூர் கிழார் செய்த அகநானூற்றுப்பாடலில் திருமண நாளினைப்பற்றிப் பேசும்போது,

பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்,
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென”

என்று கூறுகிறார். இங்கே “கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென” என்பதற்கு, “தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவைக், குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில்..” என்று உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். எனவே, ரோகிணி நட்ஷத்திரமும், அருந்ததி போலவே, தமிழர் திருமணங்களில் பல காலமாக முக்கியம் பெற்றே வந்திருக்கிறது.

ரோஹிணியுடன் நிலவு சேர்தல். வலப்புறத்தில் சிவப்பு நிறத்தில் சிறிதாகத் தெரியும் புள்ளிதான் ரோஹிணி. வெற்றுக்கண்ணாற் பார்க்கும்போது நிலவின் பிரகாசம் அத்துடன் சேரும் விண்மீனை அந்த நாளில் மறைத்துவிடும்.

Christina Irakleous, CC BY-SA 4.0 https://creativecommons.org/licenses/by-sa/4.0, via Wikimedia Commons

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

  1. மிக அருமையான விளக்க்ம், விழிமைந்தன் அவர்களே! வசிஷ்டரும், அருந்ததியும் இரட்டை உடுக்கைகள் என்று மட்டுமே அறிந்திருந்தேன் இதுவரை. அவை ஒவ்வொன்றும் இரட்டைகள் என்பது வியப்பான புதிய தகவல்! மிக்க நன்றி.

    கார்த்திகை பற்றி நான் பகிர்ந்ததையும் சரியா என ஆய்ந்து, விளக்கமாக எழுதுங்கள். என் ஆய்வுகள் ஒரு நிலையில் நின்று விட்ட்டன (பல வருடங்கள் முன் படித்ததை வைத்து நான் எழுதிய கருத்துகள் அவை. இப்போது இன்னமும் தெளிவான உண்மைகள் அறியப் பெற்றிருப்போம்.
    உங்கள் பணி சிறப்புடன் தொடர, என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    1. மிக நன்றி. கார்த்திகை பற்றி நான் அறிந்திராத பல விடயங்களை உங்கள் பதிவின்மூலம் அறிந்து கொண்டேன். இன்னும் கொஞ்சம் தேடிப் பார்க்கிறேன். தொடர்ந்து கற்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.