ஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா?

இன்னுமொரு தலைப்பு: அவுட்-ஒஃ ப்- ஆபிரிக்காகவும், ஆரியரும், ஆநிரையும்

ஆநிரை கவர்தல் என்றால் என்ன என்பதையே பலர் அறியாமல் இருக்கலாம். எதிரிகளுக்குச் சொந்தமான கால்நடைகளைப் பலவந்தமாக ஓட்டிக்கொண்டு வருவதையே அல்லது கைப்பற்றி வைத்திருப்பதையே ஆநிரை கவர்தல் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எதிரிகள் தமக்குச் சொந்தமான கால்நடைகளைத் திரும்பப் பெறவே பார்ப்பார்களாதலால் இரு தரப்புக்கும் போர் மூளும். எனவே ஆநிரை கவர்தலென்பது ஒரு வன்னடவடிக்கை (aggressive act) அல்லது போருக்கு அறைகூவுதல் (declaration of war) ஆகும். சங்க இலக்கியங்களில் ஆநிரை கவர்தல் பற்றிய குறிப்புகள் பலவுண்டு.

இக்காலப் போர்களில் எவரும் ஆநிரை கவர்வதில்லை. எனவே ஆநிரை கவர்தலைப்பற்றி இப்பொழுது யோசிக்க வேண்டிய / எழுதவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழலாம். சமீபத்தில், மிருகப்பலி, வேள்வி என்பவற்றுக்கு எதிராக நான் எழுதிய பதிவின் ஓர் அங்கமாக வேள்வியென்பது உண்மையில் தமிழர்களின் பாரம்பரியமல்ல; ஆரியர்களின் வழக்கம். ஆகவே, தமிழர்களின் பாரம்பரியம் என்று அதை நியாயப்படுத்த முடியாது என்று விளக்கியிருந்தேன். எனவே, வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுடன் தொடர்புபட்ட இன்னொரு வழக்கமாகிய `ஆநிரை கவர்தலின்’ மூலங்கள் பற்றி அடுத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அதைவிட முக்கியமான காரணமும் ஒன்றுண்டு. அதாவது, ஆநிரை கவர்தலின் மூலங்களைப்பற்றி அறிந்துகொள்வதற்குத் தமிழர்களின் / திராவிடர்களின் வரலாற்றில், ஏன் மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் பின்னோக்கிப் போக வேண்டியிருக்கிறது. இதன்மூலம் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய புரிதல்கள் பல பிரச்சினைகளைப்பற்றி ஆழமாக அறிந்துகொள்வதற்குப் பயன்படும். எனவேதான் ஆநிரை கவர்தல் என்பதுபற்றி நோக்குகிறோம்.

ஆநிரை கவர்தல் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமா?

சங்க இலக்கியங்களில் ஆநிரை கவர்தல் பற்றிக் கூறப்பட்டுள்ளது உண்மையே. வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளைக் கூறுகின்றன. தொல்காப்பியமும் இவற்றை விவரித்துள்ளது. ஆநிரை கவர்வோர் வெட்சிப்பூவும், ஆநிரைகளை மீட்ப்போர் கரந்தைப்பூவும் அணிந்து போருக்குச் செல்வர். இவ்வாறு நாடுகளைக் கைப்பற்றல், கோட்டைகளை முற்றுகையிடல் முதலிய போர்களில் ஈடுபடுபவர்களுக்கும் தனித்தனிப் பூக்கள் இருந்தன. எனவே, “ஆநிரை” கவர்தல் என்பது சங்ககாலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போர்முறையாக இருந்தது என்பது தெளிவு.

ஆனால், ஆநிரை கவர்தல் பழங்காலத்துத் தமிழர்களுக்கு மட்டுமேயுரிய வழக்கமா என்று பார்த்தால், இல்லையென்று உடனடியாகக் காணலாம். வட இந்தியாவில் எழுந்த இலக்கியங்களும் ஆநிரை கவர்தலை ஒரு போர்முறையாகக் கூறுகின்றன. முக்கியமாக சங்க இலக்கியங்களுக்குச் சமகாலத்தது அல்லது முற்பட்டதாகிய மகாபாரதத்தில் இப்போர்முறை விவரிக்கப்பட்டுள்ளது. விராட நாட்டில் பாண்டவர்கள் மறைந்துரைக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக துரியோதனன் முதலியோர் அந்நாட்டின் ஆனிரைகளைக் கவர்ந்ததாகவும், விராடனின் மகனுக்கு உதவியாக அருச்சுனன் சென்று போரிட்டு அவற்றை மீட்டதாகவும் விரிவாக வருணிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு அல்ல, விராடர்களைப் போருக்கு இழுத்து அங்கே பாண்டவர்கள் இருக்கிறார்களா என்பதை அறிவதே துரியோதனனுடைய நோக்கமாக இருந்ததால் அந்த இடத்தில் ஆநிரை கவர்தலென்பது சரியான உபாயமாகவும் இருந்திருக்கிறது. எனவே ஆநிரை கவர்தலென்பது வடநாட்டின் ஆரியரிடமிருந்து தமிழருக்கு வந்த ஒரு வழக்கமா? அல்லது தமிழரிடம் இருந்து ஆரியருக்குச் சென்ற வழக்கமா? அல்லது இரண்டு இனங்களிலும் தனித்தனியாக உருவாக்கிய மரபா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்குரிய நல்ல பதிலை உய்த்துணர்வதற்கு ஆரியர் என்றால் யார், தமிழர் அல்லது திராவிடர் என்றால் யார் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வரலாற்றில் மிகவும் பின்னோக்கி – அதாவது மனித குலத்தின் தொடக்க காலத்திற்கே – செல்லவேண்டி இருக்கிறது.

ஆபிரிக்காவில் இருந்து வந்தோர் கொள்கை

நவீன மனிதன், அதாவது ஹோமோ சேபியன் மனிதன், ஆபிரிக்காவிலேயே கூர்ப்பின் மூலம் உருவாகினான் என்பது இன்றைக்கு விஞ்ஞானம் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். இதை ‘ஆபிரிக்காவில் இருந்து வந்தோர் கொள்கை’ (Out of Africa theory) என்பார்கள். கிழக்காபிரிக்காவில், கிட்டத்தட்ட 200,000 – 100,00 வருடங்களுக்கு முன்பு, இவ்வாறு கூர்ப்பின் மூலம் உருவாக்கிய ஹோமோ சேபியன் மனிதர்களே பிற்காலத்தில் உலகின் எல்லாப் பாகங்களுக்கும் பரந்து சென்றார்கள். இவ்வாறு பரந்துசென்ற மனிதர்களை, அவர்களது குடிபெயர்வின் அடிப்படையில், மனிடவியலாளர்கள் மூன்று பெரும்பிரிவாக வகுக்கின்றனர். மொங்கோலோயீடுகள் (மஞ்சள் மனிதர்கள்), கொக்கோசோயிடுகள் (வெள்ளை மனிதர்கள்), மற்றும் நீக்ரோயிட்டுகள் (கருப்பு மனிதர்கள்). இவர்களுள் முதன்முதலில் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி அதிக தூரம் பயணித்தவர்கள் மொங்கோலோயீடுகள் ஆவர். ஆப்பிரிக்காவில் உருவானபோது எல்லா மனிதர்களது தோல்நிறமும் கருமை கலந்த மண்ணிறமாகவே இருந்தது. அதாவது தாமிரம் அல்லது செப்பின் நிறம்போல. குரங்குகள் போலல்லாமல் காலப்போக்கில் மனிதர்களில் உடலில் உரோமம் குறைவடையத்தொடங்கியதால், சூரிய ஒளி நேரடியாகப் பட்டதனால் அவர்களது சருமம் இன்னும் கறுத்திருக்கும். ஆனால், மொங்கோலோயீடுகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியதும், அவர்கள் ஆசியாவின் ஊடாகப்பயணம் செய்து கிழக்காசியப் பிரதேசங்களைச் சென்றடைந்து அங்கே குடியேறினர். இது 100,000 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இங்கே ‘பயணம் செய்கிறது’ என்று சொல்லும்போது, கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிக் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு நடையாய் நடந்து, சீனா வந்ததும் அங்கே குடிசை போட்டுக்கொண்டு தங்கி விட்டார்கள் என்பதல்ல. ஆப்பிரிக்காவில் இருந்த மனிதர்களில் ஒரு பகுதியினர், அங்கே ஏற்பட்டுக்கொண்டிருந்த காலநிலை மாற்றங்களாலும், மக்கட் தொகைப் பெருக்கத்தினாலும், நல்ல காலநிலையைத் தேடியும், வேட்டை விலங்குகள் நிறைய உள்ள இடங்களைத் தேடியும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்திருப்பார்கள். அப்பன் குடிசை போட்டிருந்த இடத்திற்குச் சில கிலோமீட்டர்கள் தள்ளி மகன் குடிசை போட்டிருப்பான். இப்படி நகர்ந்த மக்களில் ஒரு பெரும்பகுதியினர், நல்ல காலநிலையையும் உணவையும் தேடியவாறு பல நூறு தலைமுறைகளின் பின்னர் கிழக்கு ஆசியா வந்து சேர்ந்தனர். அங்கே நிலவிய சற்றே குளிரான காலநிலையில் இவர்களது தோல்நிறம் பல ஆயிரம் ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணிறம் கலந்த மஞ்சளாக மாறியது. இவர்களே மொங்கோலோயீடுகள்.

இரண்டாவது பெரும்பிரிவினர் கொக்கோஸோயிடுகள். இவர்களும் அநேகமாக மொங்கோலோயீடுகளுடன் சேர்ந்து ஆப்ரிக்காவை விட்டு வெளியேறியவர்கள் தான். ஆனால், சீனாய் தீபகற்பத்தைக் கடந்து அரேபியாக் குடாநாட்டுக்குள் வந்ததும் (இன்றைக்கு 170,000 – 150,000 வருடங்களுக்கு முன்பு) இவர்கள் சற்றே தாமதித்தனர். மொங்கோலோயீடுகளுடன் சேர்ந்து முன்னோக்கி நகரவில்லை. பனி யுகமொன்றின்போது அரேபியாவில் சற்றே இதமான காலநிலை நிலவியதால் அவர்கள் அங்கே தாமதித்திருக்கலாம். எனவே அவர்கள் மொங்கோலோயிடுகளை விட்டுப்பிரிந்து கொக்கேசியர் என்ற தனிப்பிரிவு ஆயினர்.

இங்கே ஒரு விடயம் கவனிக்க வேண்டும். நான் சொல்லுகிறபடி இவ்வாறாக முதன்முதலில் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறி அரேபியாக் குடாநாட்டில் வந்து சேர்ந்த ஆதி மனிதர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. ஒரு சிறு குழுவினரே. அவர்களிலும் பலர் அரேபியாக் குடாநாட்டில் மடிந்து போயினர். சீனாயைக்கடந்து அரேபியாக் குடாநாட்டிற்குள் வந்து சேர்ந்த சில நாட்களுக்குள் அவர்களில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. மிகுந்த புத்தி சாதுரியமும், உடல் வலிமையும் உடைய குழந்தை. தொடர்ந்த பயணத்தாலும், காலநிலை மாற்றத்தாலும், நோய்களாலும் அவளது சிறு குழுவில் இருந்த மனிதர்கள் பலர் மடிந்து கொண்டிருந்த்னர். இப்படியான சிரமமான சூழலில் அவள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து பருவகாலத்தில் இணைசேரலில் ஈடுபட்டுத் தன்னைப்போலவே திடகாத்திரமான புதல்வர்கள், புதல்விகள் பலரை ஈன்றாள். எஞ்சியிருந்த மனிதர்களுடன் அந்தப் புத்திர புத்திரிகள் இனக்கலப்பில் ஈடுபட்டு மனித இனத்தைப் பெருக்கினர். நாளடைவில் கடினமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் அவர்களது இனக்குழுவின் எல்லாரும் அழிந்துவிட அந்தப் பெண்ணின் வம்சத்தில் வந்த மிகச்சிலரே எஞ்சினர். அவர்களின் வம்சத்தினரே இன்றைக்கு ஆபிரிக்காவுக்கு வெளியிலே வாழ்கின்ற பில்லியன் கணக்கான மனிதர்களாகிய நாமெல்லோரும். ஆம்! கொக்கேசியர்கள், மொங்கோலோயீடுகள் அனைவருக்கும் பொதுவான ஆதித் தாய் ஒருத்தி உண்டென்று மரபியல் ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்! எனவே ஆதாம் உண்டோ இல்லையோ, நமக்கெல்லாம் பொதுவான ஏவாள் ஒருத்தி உண்டு (கறுப்பர்கள் தவிர!). அவள் வாழ்ந்த இடம் இன்றைய சீனாய்ப் பாலைவனம். ஆபிரிக்காவில் இருந்து வெளியேறி அரேபியவைத் தாண்டுகையில் ஒருகட்டத்தில் மனித சனத்தொகை எவ்வளவு குறைவாக இருந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

பனி யுகம் நீங்கியபோது அரேபியா பாலைவனமாக மாறியதால் அங்கே வாழ்ந்த மனிதர்களில் பெரும்பாலோர் குடிபெயர நேர்ந்தது. ஒரு பிரிவினர் வடக்கே சென்று ஐரோப்பாவுக்குள் நுழைந்தனர். இன்னொரு பிரிவினர் கிழக்கே நகர்ந்து இந்தியத் தீபகர்ப்பத்தினுள் பரவினர். ஐரோப்பாவுக்குள் நுழைந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கே வேறொரு வகை மனிதர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்தனர்! ஆனால் அவர்கள் ஹோமோ செபியன்கள் அல்ல. கூர்ப்பில் அவர்களுக்கு முற்பட்டவர்களான நியாண்டதால் மனிதர்களே அவர்கள். நியாண்டதால் மனிதர்கள் ஹோமோ செபியன்களை விட உயரமானவர்களாகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்களுக்குப் புத்திக்கூர்மை குறைவாக இருந்தது. அத்தோடு, குழுவாக இயங்குவதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை.

ஹோமோ செபியன்கள் ஐரோப்பாவினுள் நுழைந்த சில ஆயிரம் வருடங்களிலேயே நியண்டதால்கள் கிட்டத்தட்ட அழிந்தொழிந்து போனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? ஹோமோ செபியன்கள் நியாண்டதால்களைக் கொன்றழித்து விட்டதாகச் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நியாண்டதால்கள் பலமிக்க தனி மனிதர்களாக இருந்தாலும் கூட்டமாக இயங்கவல்ல ஹோமோ செபியன்கள் அவர்களை அழித்திருக்கலாம். அதைவிடச் சாத்தியமான காரணம் என்னவெனில், நேரடிப் போரில் ஹோமோ செபியன்கள் வெல்லாவிட்டாலும் உணவுக்கான போட்டியில் அவர்கள் வென்றிருக்கலாம். நியாண்டதால்களின் வேட்டை விலங்குகளையும் பழங்கள் கிழங்குகளையும் தந்திரமிக்க, கூட்டமாக இயங்கும் ஹோமோ செபியன்கள் தின்று தீர்த்து விட்டதால் உணவின்றி அவர்கள் அழிந்திருக்கலாம். எவ்வாறோ ஹோமோ செபியன்கள் நியாண்டதால்களை ஒழித்துக் கட்டி விட்டனர். சிற்சில வேளைகளில் அவர்களுக்குள் இனக்கலப்பும் நிகழ்ந்தது. இவ்வாறு சொற்ப நியாண்டதால் இரத்தத்தை உடைய கொகேஷியன்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் குடியேறிய பின், அங்கு நிலவிய குளிரான காலநிலையால் அவர்கள் தோல் வெள்ளையாயிற்று. அவர்களின் சந்ததியினரே இன்றைய வெள்ளையர்.

இந்தியாவிற்குள் நுழைந்த மற்றப் பிரிவினர், அங்கு நிலவிய வெப்பமான காலநிலையால், தமது கருமையான / செப்புநிறத் தோலைத் தக்க வைத்துக்கொண்டனர். இவர்கள் ஆதி கொகேஷியர் எனப்படுகின்றனர். இவர்களே இன்றைய திராவிடர்களின் மூதாதையர். ஆனால் இவர்கள் உடனடியாகத் தென் இந்தியாவுக்குள் வரவில்லையென்றும் வட இந்தியாவிலேயே தங்கினரென்றும் சில விஞ்ஞானிகள் கருதுவர். இவர்கள் பின்பு தென்கிழக்கு ஆசியாவினுள் பரவினர். அடுத்து வந்த பனி யுகத்தில் இந்தோனேஷியாவைச் சூழ்ந்திருந்த கடல்கள் கெட்டிப் பட்ட போது இவர்கள் அவுஸ்திரேலியாவையும் சென்றடைந்தனர். இவ்வாறு இவர்கள் அவுஸ்திரேலியாவை அடைந்தது இன்றைக்கு 60,000 – 40,000 வருடங்களுக்கு முன்பாகும். இவர்களே அபோரிஜினிகள் எனப்படுகின்றனர். அதேவேளையில் திராவிடர்கள் கிமு 40000 வரையில் தென்னிந்தியாவிற்குள்ளும் கிமு 10000 வரையில் இலங்கையினுள்ளும் பரவினர் என்பது சில விஞ்ஞானிகளின் கருத்து. எனவே அபோரிஜினிகளுக்கும் இன்று தென்னிந்தியாவில் வாழும் திராவிடருக்கும் இனரீதியான நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பது உண்மையே. மேலும் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில், மனித இனத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும்போது கொக்கேசியர் என்ற பிரிவிலேயே வெள்ளையர் (அவர்களின் உபபிரிவான ஆரியர் உட்பட), திராவிடர், அவுஸ்திரேலிய அபோரிஜினிகள் யாவரும் அடங்குகின்றனர்.

கொக்கேசியரும் மொங்கோலோயிடுகளும் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களுக்கு இடையூறாக இருந்த பெரிய மிருகங்களைக் கொன்றழித்தனர். இவ்வாறு ஹோமோ செபியன்கள் குடியேறிய சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, பிறகு அமேரிக்கா ஆகிய இடங்களில் இருந்த பெருவிலங்குகள் (megafauna) முழுவதுமாக அழிந்தன. கம்பளி யானை, வாட் பல்லுப் புலி, தட்டைமுகக்கரடி என்பன அவற்றில் சில. இவ்வாறு இவ்விலங்குகள் அழிந்து போனாலும் திராவிடர் மத்தியில் யாளி, சீனர் மத்தியில் டிராகன், அபோரிஜினர் மத்தியில் கனவுப்பாம்பு என்று இவ்விலங்குகளின் நினைவுகள் இலக்கியங்களில் சிதைந்துபோன வடிவில் பேணப்பட்டு வருகின்றன.

எங்கேயும் போகாமல் ஆப்பிரிக்காவிலேயே தங்கிவிட்ட மினிதர்கள் நீக்ரோயிட் எனப்பட்ட மூன்றாவது பெரும்பிரிவு ஆயினர். இவர்களின் தோல், ரோமங்கள் காலப்போக்கில் நீங்கவே, வெப்பமான காலநிலையால் இன்னும் கருப்பாகி முழுக்கறுப்பு ஆயிற்று.

( ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் உருவாகி, மூன்று கிளைகளாகப் பிரிந்து அவர்களில் இரு கிளையினர் நெடும்பயணம் செய்து, கறுப்பர்கள் மட்டும் தோன்றிய இடத்திலேயே தங்கிய இந்தச் சரிதத்தை, இலக்கிய ரசிகர்கள், ஆங்கில இலக்கியமான Lord of the Rings கதைத்தொகுதியில் Elves இன் உருவாக்கம், பயணங்களுடன் ஒப்பிட்டு ரசிக்கலாம். )

எனவே கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பிரதேசங்கள் தவிர பூமிப்பந்தின் வேறெந்தப் பிரதேசத்திற்கும் மனிதர்கள் யாரும் முற்றுமுழுதாகச் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. நாங்கள் எல்லோரும் வந்தேறிகளே! இருபது வருடம் முன்போ இருநூறு வருடம் முன்போ, இரண்டாயிரம் வருடம் முன்போ இருபதாயிரம் வருடம் முன்போ, அறுபதாயிரம் வருடம் முன்போ ஒரு லட்சம் வருடம் முன்போ, நாங்கள் எல்லோரும் வந்தேறிகள் தான்! நம்மில் பெரும்பாலோர் பேசுகிற மொழிகளும் சீனாய்ப் பாலைவனத்தில் வலிமை மிகுந்த மகளைப் பெற்றெடுத்த அந்த ஆதித்தாய் பேசிய மொழியில் இருந்து வந்தவையே!

திராவிட நாகரிகத்தின் தோற்றம்

இவ்வாறு பூமியின் பல பகுதிகளிலும் குடியேறிய ஹோமோ செபியன்கள் ஆரம்பத்தில் வேடர்கள் – தேடர்களாகவே (hunter – gatherers ) இருந்தனர். ஆனால், ஒவ்வொரு பிரதேசத்திலும் மாறி மாறி வந்த பனி யுகங்களாலும் வெப்ப காலங்களாலும் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. காடுகள் சமவெளிகளாயின. சமவெளிகள் காடுகளாயின. இதற்கிடையில், மிருகங்களைப் பழக்குவதற்கும் வளர்ப்பதற்கும் ஹோமோ செபியன்கள் கற்றுக்கொண்டனர். வேட்டையாடப்பட்ட மிருகங்களின் கழிவுகளை உண்பதற்காக மனிதர்களின் வாழிடங்களுக்கு அருகிலே தங்கிய நாய் முதலில் வீட்டு மிருகம் ஆனது. பின்பு குதிரைகள், மாடுகள், ஆடுகள் முதலியனவும் வீட்டு மிருகங்கள் ஆயின. பரந்த புல்வெளிகளில் வாழ்ந்த மக்கள் பெரிய மந்தைகளை வைத்து மேய்த்து அவற்றில் இருந்து பாலும் இறைச்சியும் பெற்று வாழ்வதற்கு கற்றுக்கொண்டனர். இவ்வாறு மனித இனக்குழுக்களில் சில வேடர் – தேடர் வாழ்க்கை முறையிலிருந்து மேய்ப்பர் வாழ்க்கை முறைக்கு மாறின. இவ்வாறு மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு மக்கட்கூட்டம் தான் ஆரியர். இவர்கள் வெள்ளைத்தோலும் நீலக் கண்களும் பொன்னிறத் தலைமையிரும் படைத்திருந்தனர். இவர்களுக்கு நிரந்தரமான நாடோ நிலமோ இருக்கவில்லை. தமது மந்தைகளோடு இடத்திற்கிடம் சென்றுகொண்டிருந்தனர்.

இதற்குச் சற்றுப் பிற் பட்ட காலத்திலே, முக்கியமாக பூமத்திய கோட்டிற்கு அண்மையாக இருந்த நதிப்படுகைகளிலே, இன்னொரு விடயத்தை மனிதர்கள் கண்டு பிடித்தனர். அதாவது, தன்படுவானாக வளர்ந்திருந்த நெல், கோதுமை, சோளம் முதலிய தானியங்களை சேர்த்துக் கொண்டிருந்த தேடர்கள் (gatherers), வழியில் அவை தவறி விழுந்தால், அப்படி விழுந்த வழிகளில் முளைத்து வளர்வதை அவதானித்தனர். பிறகு வேண்டுமென்றே தாம் சேகரித்த தானியங்களில் கொஞ்சத்தைக் குறிப்பிட்ட இடங்களில் சிந்தவிட்டு, அவற்றை வளர்த்தனர். இவ்வாறு பயிர்ச்செய்கை உருவாயிற்று. பின்வந்த காலங்களில் உழுதல், நீர் பாய்ச்சுதல் ஆகியவை சேர்ந்து கொண்டதாலும், வீட்டு மிருகங்கள் ஆக்கப்பட்ட மாடு, எருமை முதலியவற்றின் உதவியினாலும், விவசாயம் வளர்ந்தது. வளரவே, மனிதர்கள் நாடோடிகளாக அலைவதை விட்டு, தாம் பயிர்செய்த நிலங்களுக்குப் பக்கத்தில் நிரந்தரமான குடியிருப்புகளை அமைத்து வாழக் கற்றுக்கொண்டனர். நைல் நதி, எயூப்ரடீஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதி முதலிய வெப்பவலய நதிக்கரைகளிலேயே இது நடந்தது. குளிர் தேசங்களில் வாழ்ந்த மக்கள் பயிர்ச்செய்கையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்கு வசதியான காலநிலை இருக்கவில்லை.

பயிர்ச்செய்கை தொடங்கப்பட்டதன்பின் மனிதர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கும் என்று பொதுவாக நினைப்போம். ஆனால், உண்மையில் இதற்கு எதிர்மாறாகவே நடந்ததென்பது யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) முதலிய வரலாற்றாளர்களின் அபிப்பிராயமாகும். ஏனெனில், புரதம் மிகுந்த மாமிச உணவையும் பல பழங்கள் கிழங்குகளையும் உட்கொண்ட வேடர் – தேடர்கள் விவசாயிகளாக மாறியபோது தானிய உணவில் மட்டும் தங்கியிருக்கத் தொடங்கினர். இது அவர்கள் சுகநலத்தைப் பாதித்தது. பல மில்லியன் ஆண்டுகளாகக் குரங்கில் இருந்து கூர்ப்படைந்து வந்த மனிதர்களின் உடல்கள் ஓடுதல், ஆடுதல், தாவுதல் முதலியவற்றை இலகுவாகச் செய்யக்கூடியதாக இருந்தன. இவை வேட்டையில் பயன்பட்டன. விவசாயத்திலோ, முதுகு வளைத்து நாற்று நடல், முழங்காலில் இருந்து தானியம் அரைத்தல் முதலிய, மனித உடலுக்கு இயல்பற்ற வேலைகளைச் செய்யவேண்டி இருந்தது. இதனால் முதுகு வலியும் முழந்தாள் வலியும் உண்டாயின. வேட்டையாடிய மனிதனுக்கு நாளில் பல மணிநேரம் ஓய்வு கிடைத்தது. இதை அவன் ஆடல் பாடல்களில் கழித்தான். அதோடு ஒப்பிடுகையில் விவசாயம் முதுகை முறிக்கும் வேலையாக இருந்தது. ஓய்வு என்பதே இல்லை. ஆகமொத்தம் விவசாயம் என்ற நவீன ‘தொழில்நுட்பத்தினால்’ மனிதனுக்கு மகிழ்வு அதிகரிக்கவில்லை.

இப்படியெல்லாம் இருந்தும், மனிதன் வேடர் – தேடர் வாழ்கைக்குத் திரும்பிச்செல்லவில்லை. எதனால்? ஏனெனில், வாழ்க்கையில் இருந்த நிச்சயமற்ற தன்மையை விவசாயம் அல்லது மந்தைமேய்த்தல் குறைத்தது. வேடர் – தேடர் வாழ்வில் ஈடுபட்ட மனிதன் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் அதிக ஓய்வுநேரத்துடனும் இருந்தாலும் அடுத்தவேளை ‘சோறு’ எங்கிருந்து வருமென்று தெரியாதவனாக இருந்தான். வேட்டையில் விலங்குகள் கிடைத்தால் இன்றைக்குச் சந்தோஷமாக இருந்தான். நாளைக்கு விலங்கு கிடைக்காமல் போனால் பட்டினி கிடந்தது செத்தான். காட்டில் திரிதலும் வேட்டையாடுதலும் அபாயம் மிகுந்தனவாக இருந்தன. ஒப்பீட்டளவில் விவசாயம் செய்தவன் நூறுமூட்டை தானியத்தை சேமித்து வைத்தால், அல்லது மந்தை வளர்த்தவன் நூறு ஆடுகளை வைத்திருந்தால், அடுத்த வருஷத்திற்கு உணவுக்குப் பஞ்சமில்லை என்பது நிச்சயமாயிருந்தது. நாளைக்குச் சோறு கிடைக்கும் என்ற நிச்சயம் வந்தது. இப்படி நாளையைப்பற்றிய நிச்சயமின்மையைக் குறைத்துக்கொள்வதற்காக மனிதன் தனது சந்தோஷத்தை அடகுவைத்து மண்ணுக்கு அடிமையாக வாழப் பழகிக் கொண்டான். நிறைய உணவு கிடைத்ததால் சனத்தொகையும் பெருகலாயிற்று.

இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னளவில் சிந்து முதலிய இந்திய நதிகளின் கரைகளில் வாழ்ந்த திராவிடர் இந்த நிலையை அடைந்திருந்தனர். மக்கள் தொகை அதிகரித்ததனால் அவர்கள் பெரிய நகரங்களை அமைத்திருந்தனர். இந்நகரங்களில் நீர்ப்பாசனம் முதலிய வசதிகள் இருந்தன. எழுதவும் வாசிக்கவும் அவர்கள் தொடங்கி இருந்தனர். தானியங்களைச் சேமிக்கும் வசதி, நில உடைமை என்பன ஏற்பட்டதால் சமூகத்தில் உடையவன் / இல்லாதவன் பிரிவுகள் தோன்றியிருந்தன. உடையவர்கள் சமூகத்தின் தலைவர்களாகவும், அதேநேரம் மிகுந்த சோம்பேறிகளாகவும் இருந்தனர்.

அதேவேளை மத்திய ஐரோப்பாவில் மந்தை மேய்ப்பவர்களாகத் திரிந்து கொண்டிருந்த ஆரியர்கள் இவ்வளவு தூரம் நாகரிகம் அடைந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் மாமிச உண்ணிகளாகவும், கடுமையான காலநிலைகளுக்குப் பழகியவர்களாகவும், குதிரையேற்றத்தில் மிக வல்லவர்களாகவும், போர்க்குணம் மிக்கவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கிடையில் உடையவன், இல்லாதவன் வேறுபாடு அதிகமாக இருக்கவில்லை. ஆகவே அவர்களது தலைவர்கள் சோம்பேறிகளாக இருக்கவும் இல்லை.

இவ்வாறு வாழ்ந்த ஆரியர்கள் காலப்போக்கில் தெற்கு நோக்கி நகர்ந்து வந்ததாக ‘ஆரியக் குடிவரவுக் கொள்கை’ (Aryan migration theory) கூறுகிறது. இது இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே முன்வைக்கப்பட்டது. ராகுல சாங்கிருத்யாயன் தனது மிகப்பிரபலமான ‘வோல்காவில் இருந்து கங்கை வரை’ என்ற நூலில் இதைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். இடைக்காலத்தில் மரபியல் ஆய்வுகள் இந்தக்கொள்கையைப் பொய்ப்படுத்துவதாக இந்தியாவில் சிலர் கூறிவந்தனர். என்னைப்பொறுத்தவரை இக்கொள்கையைப்பற்றி அதிகமான ஐயம் எப்போதுமே இருக்கவில்லை. சமீபத்திய மரபியல் ஆய்வுகள் ஆரியக்குடிவரவுக் கொள்கையை ஐயந்திரிபற நிரூபித்துள்ளன.

ஆரியக் குடிவரவுக் கொள்கை

ஆரியக் குடிவரவுக் கொள்கையின்படி, கிமு 4000 அளவில் வோல்கா முதலிய நதிக்கரைகளிலும் ஸ்டேப் புல்வெளிகளிலும் வாழ்ந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் காலப்போக்கில் தென்கிழக்காக நகர்ந்திருக்கிறார்கள். காலநிலை மாற்றங்களால், வளமான புல்வெளிகள் தெற்கு நோக்கி நகர்ந்தமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதிக வெப்பமான காலநிலையை அவர்களது மந்தைகள் விரும்பியதும் காரணமாக இருக்கலாம். கிமு 3000 அளவில் அவர்கள் மத்திய ஆசியாவின் ஆக்ஸஸ் (அமுதார்யா) நதிக்கரைக்கு வந்திருந்தனர். அங்கிருந்து கைபர் கணவாய் ஊடாக அலை அலையாக இந்தியாவுக்குள் பிரவேசித்தனர். இக்காலத்தில் சிந்துநதிக்கரையில் வாழ்ந்த திராவிடர்களுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். முதலில் அவர்கள் திராவிடருடன் பண்டமாற்று வியாபாரங்களைக் கூடச் செய்து வந்திருக்கலாம். காலப்போக்கில் திராவிடர்களுடன் அவர்களுக்குப் பகைமை ஏற்பட்டது. இதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். பண்டமாற்று வியாபாரத்தில் ஏற்பட்ட பிணக்குகளோ, திராவிடர்களின் நிலங்களில் முக்கியமாக நதிக்கரைகளில் தமது மந்தைகளை மேய்க்க ஆரியர்கள் விரும்பியதோ, திராவிடத் தலைவர்களின் பெண்ணாசையோ, தோல் நிற வேறுபாடோ, இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கலாம். என்ன காரணமாக இருப்பினும், அரேபியப் பாலைவனத்தில் வடக்கும் கிழக்குமாகப் பிரிந்து சென்ற ஆரிய / திராவிட மக்கட் கூட்டத்தினர் (இவர்கள் இரு பிரிவினரும் கொக்கேசியப் பெரும்பிரிவின் கிளைகளே) பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் மறுபடி சந்தித்தனர். சிறு பொறிகள் பல பகைமைத்தீயை மூட்டின.

போர் என்று வந்தபிறகு ஆரியருக்குப் பல சாதகங்கள் இருந்தன. திராவிடர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்களாகவும் தொழில்நுட்பத்தில் மேம்பட்டவர்களாகவும் இருந்தாலும் நகரங்களில் நிலையாக வாழ்ந்ததால் சோம்பேறிகளாகிப் போயிருந்தனர். முக்கியமாக அவர்களது தலைவர்கள் பலவீனமானவர்களாகவும் சுக வாழ்வுக்குப் பழகியவர்களாகவும் இருந்தனர். மாறாக ஆரியர்கள் கடுமையான காலநிலைகளில் இருந்து வந்ததால் உடல் வலு மிகுந்தவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் போர்க்குணம் மிகுந்தவர்களாகவும் இருந்தனர். முக்கியமாக அவர்களது தலைவர்கள் முன்னணியில் நின்று போர் செய்யக்கூடியவர்களாக இருந்தனர்.

இப்போர்களே பிற்கால இந்துப் புராணங்களில் தேவ- அசுர யுத்தங்களாக வர்ணிக்கப்பட்டன. இவ்வர்ணனைகளில் கோட்டைகளும் மாய மந்திரங்களும் அசுரர்களுக்கே சொந்தமாக இருந்ததைக் காட்டப்பட்டிருப்பது காணலாம். இவை திராவிடரின் ஒப்பீட்டளவில் உயர்வான நாகரிகம் குறித்து ஆரியரின் பொறாமையையும் பீதியையும் குறித்தன. ஆரியர்களின் போர்த்தலைவர்கள் “இந்திரர்” எனப்பட்டனர். பிற்காலத்தில் இந்திரன் ஒரு தெய்வமாக்கப்பட்டாலும் “இந்திர பதவி” என்பது ஒரு பதவியென்றும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அதை அடைந்துள்ளனர் என்றும் புராணங்கள் ஒத்துக்கொள்வதையும் காணலாம்.

தேவ-அசுர யுத்தங்களில் பெரும்பாலும் ஆரியரே வென்றனர். திராவிடர் அவர்களுக்கு அடிமைகள் ஆயினர் அல்லது இந்தியாவின் தென்பகுதிகளுக்குப் பின்வாங்கினர். இந்தியாவின் வட பகுதியில் சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்து அதைவிடப் பிற்பட்டதாகிய (primitive) வேதக்கலாசாரம் (Vedic culture ) நிலைபெறுவதாயிற்று.

நாகரீகத்தில் முன்னேறிய இனமொன்றை நாகரீகத்தில் பிற்பட்ட இனமொன்று வென்றடக்கும்போது காலப்போக்கில் அடிமைகளிடம் இருந்து எஜமானர்கள் கற்றுக்கொள்வது இயல்பே. இவ்வாறு காலப்போக்கில் பல நல்ல விடயங்களையும், அவற்றோடு சேர்ந்து வரும் கெட்ட விடயங்களையும் கூட ஆரியர்கள் திராவிடரிடம் இருந்து கற்றுக்கொண்டனர். பயிர்த்தொழில், நிலையான குடியிருப்புகள், நகரங்கள் அமைத்தல், நீர்ப்பாசனம், எழுதுதல், வாசித்தல் முதலியவற்றை ஆரியர் திராவிடரிடம் இருந்தே கற்றுக்கொண்டனர். அத்தோடு உடையவன், இல்லாதவன் பேதங்களும், நில உரிமை பற்றிய எண்ணக்கருவும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் திராவிடரிடம் இருந்து ஆரியருக்குள் புகுந்தன. இப்படிச் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆரியர் திராவிடரிடம் இருந்து கற்றுக்கொண்டாலும், தங்களால் அடக்கப்பட்ட திராவிடரைத் தமது புதிய சமூக ஒழுங்கின் கடைநிலையிலேயே வைத்தனர். ஆரியத்தலைவர்கள் திராவிடத்தலைவர்களின் சோம்பேறித்தனத்தையும் சுகசீவியத்தையும் கற்றுக்கொண்டனர்.

எனவே, திராவிடர்களை வென்று அடக்கிய ஆரியர் நாளடைவில் திராவிடர் போலவே தாமும் வாழத் தலைப்பட்டனர். திராவிட – ஆரிய இனக்கலப்பும் அதிகம் நேர்ந்தது. அநேகமாக ஆரிய எஜமானர்கள் திராவிட அடிமைப்பெண்களுடன் வாழ்ந்ததால் இது நேர்ந்திருக்கலாம். பரம்பரைஅலகு ரீதியில் ஆதிக்கம் குறைந்த இயல்புகளான நீலக் கண்கள், பொன்னிறக் கூந்தல் என்பன சீக்கிரம் இல்லாதொழிந்தன. தோல் நிறம் வெண்மையும் தாமிர நிறமும் கலந்து பலவிதமான மண்ணிறங்களாயிற்று. ஆரியர்கள் திராவிடர்கள் போலச் ‘சுகசீவியம்’ விடத் தலைப்பட்டதால் திராவிடர்களுக்கு முன்பிருந்த பலவீனங்கள் அவர்களுக்கும் வந்து சேர்ந்தன. போர்க்குணம் ஒழிந்தது. அடுத்ததாகக் கைபர் கணவாய் ஊடாகப் போர்க்குணமிக்க “ஹூணர்கள்” நுழைந்தபோது ஆரியர் தயாராக இருக்கவில்லை.

வளம் மிகுந்த இந்திய நதிக்கரைகளில், மிதமான காலநிலையில், வசதியோடும் செல்வத்தோடும் அதனால் விளைந்த சோம்பேறித் தனத்தோடும் வாழுகிற ஒரு இனத்தை, வடக்கில் இருந்து, கடுமையான காலநிலைகளைத் தாண்டி, போர்க்குணத்தோடு வரும் ஒரு இனம் வென்று அடக்குவதும், அப்படி அடக்கி முந்தைய இனத்தின் வளங்களைச் சுரண்டுவதால் அதன் சோம்பேறித்தனத்தையும் சேர்த்துப் பெற்றுக்கொள்வதும் இந்திய உபகண்ட வரலாற்றில் மறுபடி மறுபடி நடந்த விடயங்கள். இப்படி ஆரியர்கள், ஹூணர்கள், பட்டாணியர்கள், மொகலாயர்கள், ஐரோப்பியர்கள் என்று அலை அலையாக வந்த ஒவ்வொரு இனமும் அதற்கு முந்தியிருந்த இனத்தின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு இந்திய வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்தை எழுதியிருக்கின்றன.

ஆரியரும் ஆநிரையும்

ஆரியர் ஸ்டேப் புல்வெளியிலும் பின்பு மத்திய ஆசியாவிலும் வாழ்ந்த காலங்களில் அவர்கள் நதிக்கரைகளில் மந்தை மேய்த்து வாழ்ந்தனர். வோல்கா, சிர்தார்யா, அமுதார்யா முதலிய நதிக்கரைகளில் வளர்ந்த பச்சைப் புல்லையே அவர்கள் தமது மந்தைகளின் உணவாக நம்பியிருந்தனர். இவற்றுள் பிந்தைய இரண்டு நதிகளும் மத்திய ஆசியாவின் ஏரல் கடலினுள் சென்று விழுவன. கிர்கிஸ்தான், உஸ்பேக்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்கிஸ்தான் முதலிய நாடுகளினூடாகப் பாய்வன. (அவற்றின் பெயர்களில் இன்றைக்கும் “ஆர்யா” என்ற சொல்லிருப்பது காண்க!. இது பாரசீக மொழிச்சொல் என்று சொல்லப்படினும் ஆரியர்கள் இவ்வாறுகளைச் சுற்றி வாழ்ந்த காலத்திற்கும் இப்பெயர்களுக்கும் ஏதும் தொடர்பிருத்தல் கூடும். ). ஆரியர்களின் மத்தியில் பல இனக்குழுக்கள் (tribes) இருந்தன. குரு வம்சம், புரு வம்சம் என்பன அவற்றுள் சில. பிற்காலத்தில் இந்தக்குரு வம்சத்தின் தொடர்ச்சியாகவே மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் தோன்றினர் (மகாபாரதம் உண்மையும் கற்பனையும் சேர்ந்த ஒரு இதிகாசமானாலும் கௌரவர்கள் வாழ்ந்தது உண்மை என்று எடுத்துக்கொண்டால்). ஆரியர்களின் மந்தைகளில் இருந்த முக்கியமான மிருகம் குதிரையாகும். ஆடு, மாடுகளையும் அவர்கள் மேய்த்திருக்கலாம். பாலுக்கும் சரி, இறைச்சிக்கும் சரி, ஏறிப் பயணம் செய்வதற்கும் சரி, வண்டி இழுப்பதற்கும் சரி, தெய்வங்களுக்குப் பலி கொடுப்பதற்கும் சரி, குதிரை, மாடு முதலிய கால்நடைகளையே அவர்கள் நம்பியிருந்தனர். இவ்வாறானதொரு கலாசாரத்தில் ஒரு மனிதனின் செல்வம் அவன் வைத்திருந்த கால்நடைகளைக்கொண்டு அளவிடப்பட்டது இயல்பேயாகும். அதாவது, நூறு குதிரை வைத்திருந்தவன் பணக்காரனாகவும் பத்து ஆடு வைத்திருந்தவன் ஏழையாகவும் இருந்தான். பெண்களுக்குச் சீதனமும் மந்தைகளாகவே கொடுக்கப்பட்டது (அவர்களது கலாசாரத்தில் மாப்பிள்ளை தான் பெண்ணின் தகப்பனுக்குச் சீதனம் கொடுத்துப் பெண்ணை ‘வாங்குவார்’). அழகில்லாத பெண்ணின் ‘விலை’ பத்துக்குதிரைகள் என்றால் அழகான பெண்ணுக்கு நூறு குதிரைகள் கொடுக்கவேண்டும்! அவர்களிடம் பணப்புழக்கம் இருக்கவில்லை.

இப்படியானதொரு வாழ்க்கையில், இரண்டு இனக்குழுக்களிடையில் சண்டை மூழுகிற போது ஒருவரின் மந்தைகளை மற்றவர் கவர்வது இயல்பானதே. நாடோடி இடையர்களாக வாழ்ந்த ஆரிய இனக்குழுக்கள் மத்தியில் நிரந்தரமான தேச எல்லைகள் இருக்கவில்லை. ஓரிடத்தில் மந்தைகள் மேய்ந்து முடிந்ததும் கூடாரங்களை பெயர்த்துக்கொண்டு இன்னொரு இடத்திற்குப் போய்விடுவார்கள். மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சிறிதாகவும் ஸ்டெப் வெளி முடிவற்றதாகவும் இருந்ததால் ஒருவரின் நிலத்தை இன்னொருவர் ஆக்கிரமிப்பதில் அர்த்தம் இருக்கவில்லை. புரு இனத்தவனின் நிலத்தைக் குரு இனத்தினர் ‘ ஆக்கிரமித்தால்’ புரு இனத்தவர் சிரித்துவிட்டு வேறிடத்திற்குப் போய்விடுவார்கள். முடிவற்ற புல்வெளி இருக்கும்போது ஒரு துண்டு நிலத்திற்கு ஏன் சண்டை போட வேண்டும்?

ஆனால், கால்நடைகளைக் கைப்பற்றுவது அப்படியல்ல. புரு இனத்தினரின் கால்நடைகளைக் குரு இனத்தவர் ஓட்டிக்கொண்டு வந்துவிட்டால் புரு இனத்தினர் துரத்திக்கொண்டு வந்து அவற்றை மீட்கவே பார்ப்பார்கள். அப்படி மீட்பதற்காக வரும் அவர்களை ஒரு பொறிக்குள் வரவழைத்துச் சுற்றி வளைத்துத் தாக்கி அழிப்பதும் சாத்தியம். இவ்வாறுதான் “ஆநிரை கவர்தல்” என்பது ஆரியர் மத்தியில் ஒரு போர்முறையாக உருவாயிற்று. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த காலத்திலேயே அவர்கள் மத்தியில் இந்தப் போர்முறை இருந்தது.

மாறாக, சிந்துவெளி முதலிய பிரதேசங்களில் வாழ்ந்த திராவிடர் மத்தியில் ஆநிரை கவர்தல் ஒரு போர்முறையாக இருந்திருக்க முடியாது. அவர்களது பிரதான தொழில் விவசாயம். அவர்கள் நகரங்களில் வாழ்ந்தவர்கள். அவர்களின் மக்கள் தொகையும் அதிகமாக இருந்தது. நாகரிகத்திலும் அவர்கள் மேம்பட்டவர்கள். எனவே, தற்காலத்தைப்போன்று, நில உரிமையும், நிலத்தைப்பாதுகாப்பதும், அவர்களது சமூக அமைப்பில் முக்கியமாக இருந்திருக்க வேண்டும். எனவே அவர்களது தேசிய அரசுகள் மத்தியில் நில அடிப்படையிலான நிரந்தர எல்லைகள் இருந்திருக்கும். மொகெஞ்சதரோவின் படைகள் ஹரப்பா எல்லையைத்தாண்டி ஒரு அடி வைத்தால் கூட அதுவே ஒரு போருக்கான அறைகூவல்தான். பசுக்களைக் கொண்டுவந்துதான் ஆக வேண்டுமென்பதில்லை. அதைவிட எதிரி நகரத்திற்கு அல்லது எதிரியின் வயல்களுக்குத் தீ வைப்பதன்மூலம் அதிக சேதத்தை விளைவிக்க முடியும். அதிக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

எனவே, இந்தியாவிற்குள் அலை அலையாக வந்த ஆரியர்கள் திராவிட நாகரிகங்களை வென்று அடிமைப்படுத்திய போது அவர்களிடம் இருந்து திராவிடர்கள் கற்றுக்கொண்ட வழக்கங்களில் ஒன்றுதான் ஆநிரை கவர்தலாக இருக்க முடியும். சிந்துவெளி நாகரிகம் அழிக்கப்பட்டு வட இந்தியாவியல் வேதக் கலாசாரம் பரவிய சிலபல நூற்றாண்டுகளுக்குப்பிறகு தமிழகத்தில் மறுபடியும் திராவிட அதாவது தமிழ் நாகரிகம் தலைதூக்குகிறது. சிந்துவெளிக்கும் பாண்டிய நாகரிகத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் திராவிடர்களுக்கு என்ன நடந்தது என்பதில் ஆராய்ச்சியாளர் மத்தியில் தெளிவில்லை. அவர்கள் வடக்கே ஆரியர்களால் நெருக்கப்பட்டுத் தெற்கே குடிபெயர்ந்து வந்து வேறு நாகரிகங்களை உண்டாக்கினார்களா, அல்லது சிந்துவெளி அழிந்தபிறகு பாண்டிய நாட்டில் சுயாதீனமாக வேறு திராவிட நாகரிகங்கள் உருவாயினவா என்பது தெளிவில்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகத்திற்கும் ஆதிப் பாண்டிய நாகரிகத்திற்கும் பல ஒற்றுமைகள் இருந்ததென்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்று ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாகவே சிந்துவெளியில் ஆரியரிடம் இருந்து கடன்வாங்கப்பட்ட ஆநிரை கவரும் வழக்கம் எவ்வாறோ தெற்கே கடத்தப்பட்டு சங்ககாலத்தில் தமிழர்களின் ஆநிரை கவரும் வழக்கமாக எழுந்திருக்கிறது.

இவ்வாறு நான் சொல்வதற்குக்காரணம் தமிழர்களுக்கு உரித்தென்று சிலர் கருதும் ஒரு பாரம்பரியத்தைப் பறித்து ஆரியர்களுக்கு கொடுப்பதற்காகவல்ல. மாறாக, ஆநிரை கவர்தல் எனும் பாரம்பரியத்தில் (வேள்வி போலவே) பெருமை ஒன்றும் இல்லை என்று சொல்வதற்கே. திராவிடர்களை வென்றடக்கிய ஆரியர்கள் திராவிடரிடம் இருந்து நல்ல பல வழக்கங்களைக் கற்றுக்கொண்டார்கள். அதேவேளை, ஆரியரின் நலமில்லாத வழக்கங்கள் சில திராவிடரிடையே புகுந்தன. அதில் ஒன்றே இதுவும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

  1. A well balanced article, unlike the arya-dravida propagandas of BJP and NTK.

    However, I’m a bit skeptical about your speculations and certain facts at some points. Can you share the sources for:

    1. Indus valley people are Dravidians (pandya kingdom linked to indus)
    2. Indus valley was destroyed in a war with aryans (instead of gradual competition)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *