தமிழ் பௌத்தம்

தமிழ் பௌத்தம்: இது ஒரு மிகப்பெரிய விடயப் பரப்பு. உண்மையிலே, தமிழுக்கும் அல்லது தமிழருக்கும் பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்விடயத்தைப்பற்றி என்னைவிட அதிகம் அறிந்த பல அறிஞர்கள் நூல்களும் நீண்ட கட்டுரைகளும் எழுதியுள்ளனர்.

ஆகவே என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருவதோ ஊகிப்பதோ அல்ல. அப்படியானால் ஏன் இதை எழுதுகிறேன் என்று கேள்வி எழலாம். இதற்குப்பதில் என்னவெனில், இன்றைக்குத் தமிழர்களில் பலருக்கு, ஒருகாலத்தில் தமிழர்கள் பலர் பௌத்தர்களாக இருந்தனர் என்ற அடிப்படையான உண்மைகூடத் தெரியவில்லை. எமது இந்து / சைவ கல்விப்பாரம்பரியம் திட்டமிட்டே இவ்வுண்மையை மறைத்து விட்டது. இது இந்துக்களுக்கு / சைவர்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழ் இனத்திற்கு நன்மை அல்ல. தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தனர் என்ற உண்மை மறுக்கப்படுவது, பௌத்த சின்னங்கள் தமிழ்ப்பகுதிகளிலே கண்டுபிடிக்கப்படும்போது வேற்றினத்தவர் அவற்றுக்கு உரிமை கொண்டாட வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஆகவே பௌத்தமும் தமிழரும் பற்றி அடிப்படையான சில விடயங்களை ஒவ்வொரு தமிழரும் அறிந்திருப்பது அவசியம். அவற்றைச் சொல்லி இவ்விடயம் பற்றி மேலும் வாசிப்பையும் ஆராய்ச்சியையும் தூண்டுவதே எனது நோக்கம்.

தோற்றுவாய்:

பௌத்தம் எவ்வாறு தமிழரிடத்தில் முதன்முதலில் வந்தது? கௌதம புத்தர் காலத்திலோ அதற்குச் சில நூற்றாண்டுகள் பின்வரையிலோ பௌத்தம் வட இந்தியாவிலேகூட ஒரு முதன்மையான மதமாக இருக்கவில்லை. சனாதன இந்து மதத்தில் அன்று நிலவிய பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான ஒரு புரட்சியாகவே பௌத்த சமயத்தைச் சித்தார்த்த கௌதமர் முன்வைத்தார். அன்றைய சனாதன இந்து மதமானது பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் கூட்டுச்சேர்ந்து ஏனைய சாதாரண மக்களை அடக்கி வைத்திருப்பதற்குப் பயன்படுத்திய முக்கியமாக சாதனமாக இருந்தது. இதனால் அது மன்னர்களின் பரிபூரண ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் கட்டுப்பாடுகளை முறித்தெழுந்த பௌத்த மதம் இயல்பாகவே மன்னர்களின் ஆதரவை உடனடியாகப் பெறவில்லை. மன்னர்களின் ஆதரவின்றி ஒரு மதம் வேகமாகப் பரவுவதோ பெருமளவிலான மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படுவதோ சிரமம். ஆகவே பௌத்த மதம் ஒரு சிறுபான்மை மதமாகவே அசோக சக்கரவர்த்தி காலம்வரை நீடித்தது. பௌத்த மதத்திற்கு அரச இயந்திரத்தின் அங்கீகாரம் அளித்து அதன் பரம்பலுக்கு வழிவகுத்த பெரு மன்னர் அசோகர். இதற்கு அவருக்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருந்தன.

“சண்ட அசோகர்” என்று அறியப்பட்ட அசோக சக்கரவர்த்தி கலிங்கத்தைக் கைப்பற்ற நடத்திய போரின்பின்னர் யுத்தத்தின் கொடுமைகளைக் கண்டு மனம் வெறுத்துத் “தர்ம அசோகராக”மாறியதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது. இந்தக் கதையை நான் நம்பவில்லை. கலிங்கம் என்பது இன்றைய ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் அமைந்திருந்தது. அதற்கு நேர் தெற்கே இருந்தது சங்ககாலத் தமிழகம். அசோகர் கலிங்கப் போரின் பின்னர் பௌத்தராக மாறினாரோ இல்லையோ, அவர் போரை நிறுத்தவில்லை என்பதற்கும் கலிங்கத்திற்குத் தெற்கே இருந்த தமிழகத்தைக் கைப்பற்ற முயன்றார் என்பதற்கும் சான்றுகள் பலவுண்டு. தமிழகத்தைக் கைப்பற்ற முயன்ற மௌரியப்படைகள் வட தமிழகத்தில் இருந்த சில சிற்றரசர்களை வென்றதன்பின்னர் சோழ / பாண்டிய / சேர மன்னர்களின் கூட்டணியால் முறியடிக்கப்பட்டன. இதற்குச் சங்க இலக்கியங்களும் ஊர்ப்பெயர், ஆட்பெயர்களும் சான்றாக விளங்குகின்றன. உதாரணமாக

“…வென்வேல்
மாரி அம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!”

என்னும் அகநானூற்றுப்பாடலில் “வல்லத்துப் போர்க்களத்தில் சோழர்களின் விற்படைக்கு ஆற்றாமல் ஆரியர் படை உடைந்தது போல என் முன்கையில் உள்ள வளையல்கள் உடையட்டும்” என்று தலைவி சொல்கிறாள். இங்கு “வல்லம்” எனப்படுவது பின்னாளில் வல்லவரையன் வந்தியத்தேவன் வாழ்ந்த வல்லமாகலாம். அவ்வாறெனின் அது வட தமிழகத்தின் எல்லையில் உள்ளது. இதேபோன்று

“ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ” என்ற நற்றிணைப் பாடலில் வாட்படை மிகுந்த ஆரியரை முள்ளூர் எனுமிடத்தில் முறியடித்த மலையமான் திருமுடிக்காரியின் வீரம் போற்றப்படுகிறது. மலையமான் வாழ்ந்த திருக்கோவலூரும் வட தமிழகத்தில் உள்ளதே. இதேபோல,

“…வெல்கொடி
துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மாபெருந்தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய…”

என்ற சங்கப்பாடலில் மௌரியர் பெரும் படைகளுக்கு மோகூர் பணியாமை குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கே “ஆரியர்” என்ற பொதுச்சொல்லின்றி அசோகரின் அரச வம்சமான மௌரிய வம்சத்தின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்.

இதேபோல “ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன்” என்ற பாண்டிய மன்னனின் பெயர் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. “அசோகபுரம்” என்றொரு ஊரும் தமிழ் நாட்டிலுண்டு. இவ்வூரில் அசோகரின் ஜெயஸ்தம்பம் ஒன்று இருந்ததாக கல்கி “சிவகாமியின் சபதம்” நாவலில் கூறுவார். இது அவரின் கற்பனையா அல்லது உண்மையிலேயே அங்கோர் அசோக ஸ்தம்பம் உண்டா என்று தெரியவில்லை. எவ்வாறிருந்தாலும் அசோகபுரம் என்றொரு ஊர் இன்றும் உண்டென்பது உண்மையே.

இவ்வாறான ஆதாரங்கள் பலவாலும் அசோக சக்கரவர்த்தி கலிங்கத்துடன் தனது போர் முயற்சிகளை நிறுத்தவில்லை என்பதும், தமிழ்நாட்டையும் கைப்பற்ற முயன்று தோல்வி அடைந்தார் என்பதும் பெறப்படும். எனவே அவரது “தர்ம அசோகர்” அவதாரம் தமது தோல்வியின் அவமானத்தை மறைப்பதற்கான ஒரு அரசியல் உத்தியும், புத்த மதத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து யுத்தத்தால் நிலைநிறுத்த முடியாத தமது மேலாதிக்கத்தைப் புத்தத்தால் நிலைநிறுத்துவதற்கான ஒரு தந்திரமும் ஆகுமென்றே நான் நினைக்கிறேன். பிற்காலத்தில் மறுபடியும் ஒரு முறை தமிழகத்தின்மீது படையெடுத்தால் அங்கிருக்கும் பௌத்தர்கள் மத விசுவாசத்தால் தமக்கு உதவுவார்கள் என்ற எண்ணங்கூட அவருக்கு இருந்திருக்கலாம்.

எனவே அசோக சக்கரவர்த்தி பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டு அதனைப் பரப்புவதன்மூலம் தமது கலாசார ரீதியான மேலாதிக்கத்தைத் தமிழகத்திலும் இலங்கைத் தீவிலும் நிறுவுவதில் ஈடுபட்டார். அதனாலேயே தமது சொந்த பிள்ளைகளையும் அதில் ஈடு படுத்தினார். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தார். இந்த வெற்றிக்கு ஒரு காரணம் அன்றைக்கு தமிழ்நாட்டில் நிலவிய மத நம்பிக்கைகளை விட பௌத்தமானது உண்மையிலேயே பரந்த நோக்கம் கொண்ட ஒரு சமயம் என்பதுமே. இதனால் தமிழர்கள் பலர் பௌத்தராகினர். அன்றிலிருந்து, பக்தி இயக்கம் முன்னெடுக்கப்பட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் பௌத்தம் தமிழர்களின் முக்கிய மதங்களில் ஒன்றாக இருந்தது. அதேபோல ஜைனமும் (சமணம்) செல்வாக்குப் பெற்றிருந்தது.

பௌத்தத்தின் செல்வாக்கு

சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்த்திலும் சிற்றரசர் குடும்பங்கள், வணிகர் குடும்பங்கள் முதலிய பல செல்வாக்கு மிகுந்த தமிழ்க்குடும்பங்கள் பௌத்த, சமண மதங்களை சார்ந்திருந்தன. பௌத்த சமணத் துறவிகள் பொதுவாக இந்து / சைவ / வைணவக் குருமாரை விட கல்வியறிவில் (தமிழறிவு உள்ளடங்கலாக) மேம்பட்டவர்களாயிருந்தனர். தமிழின் தலைசிறந்த ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று கூட இந்து மதத்தைச் சேர்ந்தனவல்ல. இவற்றில் மூன்று சமணம் சார்ந்தனவாகவும் இரண்டு பௌத்தம் சார்ந்தனவாகவும் இருக்கின்றன. திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் கடும் வாதப் பிரதி வாதங்கள் இருந்தாலும் அவரின் திருக்குறளில் சமண சமயக் கருத்துக்களே தலைதூக்கிக் காணப்படுகின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. அக்காலத்தில் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை முதலிய கருத்தியல்களைப் பெரிதும் வலியுறுத்தியவர்கள் சமண பௌத்தர்களே. பிற்காலத்திலேயே இவ்வாறான கருத்தியல்கள் சனாதன இந்து சமயத்தில் உள்வாங்கப்பட்டன.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று”

என்று வள்ளுவர் சொல்கிறபோது, இங்கே அவர் புலால் உண்ணாமையை இந்து சமயத்தின் சார்பாக வலியுறுத்துவதாகத் தோன்றவில்லை. மாறாக, பிராமணர்களின் வேள்வி முறைகளைப் பார்த்து நகைப்பதான தன்மையே காணப்படுகிறது. “வேள்வி செய்கின்ற உங்கள் சமயத்தைவிடக் கொல்லாமையை வலியுறுத்தும் எங்கள் சமயம் உயர்ந்தது” எனும் தொனிப்பொருளே தெரிகிறது.

பக்தி இயக்கம் மேலோங்கிய பல்லவர், சோழர் காலங்களில் கூடச் சமண, பௌத்தர்கள் குறிப்பிட்டளவில் தமிழர்களிடையே இருந்தனர். சிற்சில அரசர்கள் சமயப் பொதுநோக்கு உடையவர்களாகவும் இருந்தனர். உதாரணமாக, முதலாம் ராஜராஜ சோழன் பௌத்தர்களின் நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்தை ஆதரித்தான் என்பது கல்வெட்டுகள் கூறுகின்ற செய்தி. அவனது தந்தையாகிய சுந்தர சோழன் நலமாக வாழவேண்டும் என்று புத்த பிக்குகள் புத்த பெருமானைப் பிரார்த்தனை செய்ததாக

“போதியந் திருநிழல் புனித! நிற் பரவுதும்
மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்பும்
திண்மையும் உலகில் சிறந்து வாழ்கெனவே!”

என்ற பாடல் கூறுகிறது. அதேபோல, இராசராச சோழனின் பேரனாகிய வீர ராஜேந்திர சோழனின் காலத்தில் இயற்றப் பட்ட “வீர சோழியம்” என்ற இலக்கண நூல் பௌத்தர்களால் இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் பொன்பற்றியூர்ச் சிற்றரசர் அல்லது நிலக்கிழாரான புத்த மித்திரர் (இவரது பெயரே “புத்தரின் நண்பர்” என்ற அர்த்தமுள்ளது). வீர ராஜேந்திர சோழனின் பட்டப் பெயரான “வீர சோழன்” என்ற பெயரே இந்த நூலுக்கு வைக்கப்பட்டுள்ளது (மன்னர்களின் பெயர்களை நூற்பெயராக வைக்கும் வழக்கம் உண்டு; பரராஜசேகரம், செகராஜசேகரம் என்று பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் எழுந்த நூல்கள் போல). வீர சோழியம் நூலின் காப்புப்பாடல்

“மிக்கவன் போதியின் மேதக்கு இருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர ஒண்ணாதவன் தூயன்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழ் உரைக்கப்
புக்கவன் பைம்பொழில் பொன்பற்றி மன் புத்தமித்திரனே”

என்று புத்தரைப் போற்றுகிறது. (இதைக் குறிப்பாக இங்கே சொல்வதற்குக் காரணம், சைவர்களின் நம்பிக்கைப்படி அந்த முருகப்பெருமானே இந்தப் பௌத்த நூலான வீர சோழியம் நூலை அங்கீகரித்து மேற்கோள் காட்டியுள்ளார்: கச்சியப்பர் வரலாறு காண்க!).

ஆகவே, சோழர் காலத்தின் இறுதிவரை தமிழகத்தின் பல பகுதிகளிலும், இலங்கைத்தீவின் தமிழர் வாழ்ந்த இடங்களிலும் தமிழ் பௌத்தரின் விகாரைகளும் வணக்க ஸ்தலங்களும் இருந்தன. கந்தரோடை இப்படியான ஒரு இடமாகும். எனவே கந்தரோடை முதலிய இடங்களில் உள்ள புராதன சின்னங்கள் பௌத்தத்துடன் தொடர்பு பட்டவை என்பதை மறுக்க முடியாது என்றபோதும், அவை தமிழ் பௌத்தத்தின் சின்னங்கள் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

சோழத் தளபதியும் யாழ்ப்பாண இராச்சியத்தை நிறுவியவனுமான உக்கிர சிங்கன் தொடக்கத்தில் கந்தரோடையைத் தனது தலைநகராகக் கொண்டிருந்தான். இவனை “சிவத்துரோகி” என்று முதலாம் குலோத்துங்க சோழன் ஏசியதோடு அவனை அடக்கக் கருணாகரத் தொண்டைமானை அனுப்பி இருக்கிறான். பிற்காலத்தில் உக்கிர சிங்கன் மாருதப் புரவீக வல்லி என்ற சோழ இளவரசியை மணந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலை அமைக்க உதவியதோடு தனது தலைநகரத்தைச் சிங்கைநகர் என்ற வல்லிபுரத்திற்கு மாற்றி விட்டான். எனவே உக்கிரசிங்கன் – சோழ மன்னர்கள் முறுகலில் மத ரீதியான பரிமாணமும் இருந்ததா? அதாவது உக்கிர சிங்கன் ஒரு கட்டத்தில் பௌத்தனாக இருந்து பின்பு “நயத்தாலும்” (மாருதப்புரவீக வல்லி) “பயத்தாலும்” (கருணாகரத் தொண்டைமான்) வழிக்குக் கொண்டுவரப்பட்டு சைவ சமயத்திற்கு வந்தானா? அப்படி வந்ததின் பின், பௌத்தர்கள் நிறைந்த கந்தரோடையில் தலைநகரை வைத்திருக்க விரும்பாமல் அல்லது அனுமதிக்கப்படாமல்தான் வல்லிபுரத்திற்குத் தலைநகரை மாற்றினானா என்பதெல்லாம் யோசிக்கப்பட வேண்டிய கேள்விகள்.

தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சி

நான் முன்பு குறிப்பிட்டதுபோல பௌத்த சமயம் அடிப்படையில் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரானது. சமத்துவத்தையும் மனிதர்களின் ஒருமைப் பாட்டையும் அன்பையும் போதிப்பது. சதா போரில் ஈடுபடவேண்டியவர்களும் மக்களை அடக்கி ஆள வேண்டியவர்களும் தேசிய இன உணர்வை வளர்க்க வேண்டியவர்களும் உயர்வு தாழ்வுகளைப் பாதுகாக்க வேண்டியவர்களுமான அரச வம்சத்தினர் பௌத்தர்களாக இருப்பது எளிதல்ல. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழியான அக்காலத்தில் அரச வம்சங்களின் ஆதரவு இன்றி பௌத்தம் சாதாரண மக்களின் முக்கியமான சமயமாக நீடிப்பதும் இலகுவாக இருக்கவில்லை. இதனால் இந்திய உபகண்டத்திலும் இலங்கையிலும் பௌத்தம் காலப்போக்கில் இரண்டு தெரிவுகளைச் சந்தித்தது.

1 – கௌதம புத்தரின் உண்மையான போதனைகளில் இருந்து விலகி, உயர்வு தாழ்வுகள், விக்கிரக வழிபாடுகள், சாதியம், சோதிடம், கிரியைகள், போன்றவற்றை உள்வாங்கிக்கொண்டு, அரசியல் மயப்பட்டு, தேசிய இன உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டு, அரசர்களின் ஆதரவைப் பெற்று, ஒரு பிரதான சமயமாகத் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வது.

2 – புத்தரின் போதனைகளைத் தொடர்ந்து பின்பற்றி, அகிம்சையை மேற்கொண்டு, அரச ஆதரவை இழந்து, அதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து, ஒரு சிறு சமயப்பிரிவாக மாறுவது.

இந்திய உப கண்டத்தைப் பொறுத்தவரையில் பௌத்தம் இரண்டாவது வழியிலேயே சென்றது. அதனால் காலப்போக்கில், அதிகம் பேர் பின்பற்றும் ஒரு சமயம் என்ற நிலையை இழந்தது. முக்கியமாக, இஸ்லாமிய படையெடுப்புகள் இந்தியாவிற்குள் நுழைந்தபிறகு அகிம்சையை வலியுறுத்தும் இந்திய மதங்கள் இந்தியாவில் நிலைக்க முடியவில்லை. இந்து மதத்தின் போர்க்குணமிக்க பிரிவுகளே மேலோங்கலாயின.

இலங்கையிலே பௌத்தம் இதற்கு எதிர்மாறான திசையில் சென்றது. அதனால் நிலைத்தது.

வட இலங்கையைக் குறிப்பாக எடுத்துக்கொண்டால், தமிழ் பௌத்தரின் சின்னங்கள் அழிவதற்கு கலிங்க மாகனின் படையெடுப்பு பெரிதும் காரணமாக அமைந்தது. கலிங்க மாகோன் அல்லது விஜய காலிங்கன் அல்லது கூழங்கைச் சக்கரவர்த்தி அல்லது குளக்கோட்டன் அல்லது சோழகங்க தேவன் என்றும் அழைக்கப்படும் கலிங்க மாகன் வரலாறு பற்றி வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பல குழப்பங்கள் இருப்பினும் என்னுடைய கருத்துக்கள் அல்லது ஊகங்களை பல ஆதாரங்களுடன் கட்டமைத்திருக்கிறேன். அவற்றையே கீழே தருகிறேன். மாகன் சோழகங்க வம்சத்தைச் சேர்ந்தவன். மத்திய இந்தியாவின் கலிங்க / கங்க வம்சத்தைச்சேர்ந்த அரசன் முதலாம் இராஜராஜனை (சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் வேறு!) வீர ராஜேந்திர சோழனின் மகள் ராஜசுந்தரி மணந்ததால் உருவானது சோழகங்க வம்சம். ராஜசுந்தரியின் மகன்தான் கலிங்கத்துப்பரணியில் முதலாம் குலோத்துங்க சோழனின் எதிரியான அனந்தவர்மன் (இவன் முதலாம் குலோத்துங்கனுக்கு உறவினன் என்பதைக் கலிங்கத்துப்பரணி சௌகரியமாக மறைத்து விட்டது!). கலிங்க மாகன் அநேகமாக அனந்தவர்மனின் பேரன் அல்லது பூட்டன். சோழர்களுக்குப் பெண்வழி உறவினன்.

கலிங்கமாகன் காலத்தில் சோழ கங்கர்கள் வடக்கேயிருந்து வந்துகொண்டிருந்த முஸ்லிம்களுடன் போரில் ஈடுபட்டிருந்தார்கள். முஸ்லிம்கள் வங்காளத்தைக் கைப்பற்றிக்கொண்டு மேலும் தெற்குநோக்கி வந்துகொண்டிருந்தார்கள். கண்ணில்பட்ட கோயில்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் சோழகங்கர்கள் சமயவெறி மிகுந்த வீர சைவர்களாக மாறி வந்தார்கள். பழிக்குப்பழியாகப் பிற சமயக்கோயில்களை இடிக்கும் வெறி மாகனின் மனத்தில் மூண்டிருந்தது.

கிபி 1208 அளவில் சோழகங்க அரசன் இரண்டாம் இராஜராஜன் முஸ்லிம்களிடம் தோல்வி அடைந்தான். இக்காலத்திற்கு முன்னாகவோ பின்னாகவோ மாகன் தனது பெண்வழி உறவினர்கள் இருந்த சோழநாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அடைக்கலம் தேடிக்கூட அவன் வந்திருக்கலாம். அக்காலத்தில் சோழப்பேரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன். இவன் பாண்டிய நாட்டில் நடத்திய போர்களில் மாகன் உதவி செய்திருக்கலாம். இப்போர்களில் சோழர்கள் வழமையை விடக் கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி. மாகன் படைத்தலைமை வகித்ததும் இதற்கு ஒரு காரணமாகலாம். எவ்வாறாயினும், யாழ்ப்பாண வைபவ மாலையின்படி மாகன் சோழப்பிரதிநிதியாக மதுரையில் இருந்திருக்கிறான். கிபி 1215 அளவில், இலங்கையின்மீது படையெடுப்பதற்காக மாகனைச் சோழர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

காரைநகரில் வந்து இறங்கிய மாகன் அநேகமாகச் சோழிய புரத்தில் (தற்போது சுழிபுரம் ) முகாமிட்டிருக்க வேண்டும். அதன் பிறகு வல்லிபுரம் சென்று அதனை விடுவிக்கிறான். பிறகு, வாளும் நெருப்புமாக இராஜரட்டை நோக்கி முன்னேறுகிறான். பொலன்னறுவையில்
ஆட்சி செய்துகொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை ( பராக்கிரமபாகுவின் தாய் / மனைவி வழி உறவினன்) கண்களைப் பிடுங்கிக் கொடூரமாகக் கொல்கிறான். கண்ட இடமெங்கும் பௌத்த விகாரைகளை இடிக்கிறான்.

சமய அடிப்படைவாதத்தால் உந்தப்பட்டவனும், முழுத் தமிழன் அல்லாதவனுமான மாகன் தமிழ் பௌத்த சின்னங்கள், ஏனைய இனத்தவரின் பௌத்த சின்னங்கள் என்று பேதம் ஏதும் பார்த்திருக்க மாட்டான். அவனது காலத்தில் வட இலங்கையின் தமிழ் பௌத்த சின்னங்கள் முழுவதுமாக அழிகின்றன.

அதேவேளை, கிபி 1233 ஆம் ஆண்டு கோணேசர் கோயிலுக்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்ததோடு, கந்தளாய்க் குளத்தையும் வெட்டுவிக்கிறான் மாகன்.

எனவே, முடிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் மூன்று.

1 – பௌத்தம் ஒரு காலத்தில் தமிழர்களின் பிரதான சமயங்களில் ஒன்றாக இருந்ததோடு தமிழ் பௌத்தரின் கட்டடங்கள், மத சின்னங்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்துள்ளன. கந்தரோடை முதலிய இடங்களில் இன்றுமுள்ளவை அவற்றின் சிதைவுகளே.

2 – பௌத்தத்தில் இருந்து பல நல்ல விடயங்கள் இந்து / சைவ சமயத்திற்கு வந்ததோடு இந்து சமயத்தின் சில பிற்போக்கான விடயங்களைப் பௌத்தம் உள்வாங்கியிருக்கிறது. இது இந்து சமயத்திற்கு ஒன்றும் கேவலமல்ல. இந்து சமயத்தின் மீதான விமர்சனமும் அல்ல. புத்தர் பிறக்கும்போது இதுவாகத்தான் பிறந்தார்; பௌத்தராக அல்ல. அவரை, இந்து சமயத்தின் சீர்திருத்துனர்களுள் ஒருவராக நாம் கருதிக் கொள்ளலாம். விஷ்ணுவின் அவதாரமாகக் கூடக் கருதினாலும் தப்பில்லை. ஆர் குத்தினாலும் அரிசியாகட்டும் என்பதுபோல, நம்பிக்கை எதுவாக இருந்தாலும் நல்ல விடயங்களை நாம் பின்பற்றுவது நன்றே.

3 – தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் இலக்கியச் செழுமையிலும் பௌத்த சமயத்தினரின் பங்களிப்பு முக்கியமானது.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

1 கருத்து

  1. புத்தர் இந்துவாகத்தான் பிறந்தார் என்பதையே வரலாறும் சொல்கிறது. பௌத்தம் சிக்களவர்களுடையது மட்டுமல்ல; உலகத்தில் பலர் அதைப் பின்பற்றுகின்றனர். இலங்கையில் எத்தனையோ கிறிஸ்தவ கோயில்கள் இருந்தாலும் அவை வெள்ளைக்காரருக்குச் சொந்தமாகி விடாது. அது போலத்தான் இதுவும்.
    அழகாக விளக்கியுள்ளீர்கள். இதைச் சிங்களவர்களும் உணர வேண்டும். மன்னன் மகான் போலவே சமகாலத் தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்த சில விகாரைகளை அழித்தனர்.
    கதிர்காமத்தில் சிங்களவர்கள் வந்து வழிபாடு செய்வதைப் போல நாங்களும் விகாரைக்கு போய் வழிபாடு செய்தால் நல்லது. தமிழர்களும் இதை உணர வேண்டும்.
    இக்கட்டுரை ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்தால் இன்னும் பல பேரைச் சென்றடையும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *