கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I

பொதுவாக, தமிழர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள் மத்தியில் ஒரு குறை பாட்டைக்காணலாம். அதாவது, அவர்கள் ஓர் அகவயமான நிலையில் நின்று, பெருமளவு அகச்சான்றுகளை வைத்துக்கொண்டு வரலாற்றைக்கூற முற்படுவார்கள். அதாவது, தமிழர்களின் பார்வையில் இருந்து, தமிழர்களால் எழுதப்பட்ட அல்லது தமிழ் மொழியிலான ஆதாரங்களை வைத்துக்கொண்டு வரலாற்றை ஆய முயல்வார்கள். இதனால் முழு வரலாறு எப்போதும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த அகவய வரலாற்றுப்பார்வை வெறுமனே தமிழர்களின் பார்வையில் இருந்து மட்டுமல்ல, தமிழ்ச்சமுதாயத்தின் பல உப பிரிவுகளின் பார்வைகளில் இருந்தும் அமையும். உதாரணமாக, சைவ இலக்கியங்களில் பேணப்பட்டிருக்கும் வரலாறு பல சமயங்களில் தமிழ் அரசியல் வரலாற்றுடன் முரண்படும். அதேபோல, இலக்கிய அறிஞர்கள் மத்தியில் பேணப்பட்டிருக்கும் வரலாறு தமிழ் வரலாற்றறிஞர்களின் வரலாறுடன் முரண்படும். இதற்கு இரண்டு நல்ல உதாரணங்கள் மாருதப்புரவீகவல்லி என்கிற இளவரசியின் வரலாறும், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற கவிஞர்களின் வரலாறும். அதாவது மாருதப்புரவீக வல்லியின் தந்தை என்று குறிக்கப்படும் திசையுக்கிர சோழன், தமிழ் அரசியல் வரலாற்றில் எங்கும் காணப்படவில்லை. அதேபோல, சோழ மன்னனுக்காக ‘பாண்டிய மன்னனிடம்’ ஒட்டக்கூத்தர் பெண் கேட்டுச் சென்றதும், கம்பர் சோழனுடன் முரண்பட்டு அவனை விடப் ‘பெரிய’ அரசை ஆளும் சேர மன்னனிடம் போனதும், தமிழ் இலக்கிய வரலாற்றிலே இருக்கின்ற போதும், தமிழ் அரசியல் வரலாற்று ஆதாரங்களின்படி கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் சோழப்பேரரசை விட வேறு அரசுகள் தமிழகத்தில் காணப்படவில்லை. இந்த முரண்களைபற்றிப் பின்னர் விவரமாக எழுதுகிறேன். இங்கே நான் சொல்லவருவது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை ஆராயும்போது அதனைப்பற்றிய புறவயமான (external) ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ளாத தன்மையும், ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வம் உடையவர்கள் அந்தத்துறைக்கு வெளியிலே சிந்திக்காத தன்மையுமே இந்த முரண்களுக்கும், அதனால் விளையும் நம்பகத்தன்மைக் குறைவுக்கும் காரணம்.

தமிழரது சாம்ராஜ்யக் கட்டுமானத்தின் உச்சம் இராஜேந்திர சோழன் ‘கங்கையும், கடாரமும்’ கொண்டது என்பது தமிழார்வலர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த நிகழ்வைப்பற்றியும் ஒரு அகவயமான பார்வையே தமிழர்களிடத்தில் இருக்கிறது. அதாவது, ராஜேந்திரன் எந்த எந்த இடங்களைக்கைப்பற்றினான் என்று கேட்டால், விபரம் அறிந்தவர்கள் கூடத் தமிழ் மற்றும் ( மிஞ்சிப்போனால்) வடமொழி மூலங்களில் இருந்தே ஆதாரங்களைத் தேடுகிறார்கள். அதன்விளைவாகக் கிளிப்பிள்ளை போலச் சில நாடுகள் மற்றும் ஊர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். அந்த நாடுகள் எவ்வளவு பெரியவை, அவற்றின் வலிமை என்ன, ராஜேந்திரன் படையெடுப்புகளின் முக்கியத்துவம் எவ்வளவு, அதற்குப்பின்னால் இருந்த தந்திரோபாயங்கள் யாவை, அப்பைடையெடுப்பக்களின் நீண்டகால விளைவுகள் யாவை இவற்றையெல்லாம் ஆராய்வதற்கு இந்த அகவயமான பார்வை பொருந்தாது. புறவயமான பார்வை ஒன்று வேண்டும்.

முக்கியமாக, ராஜராஜன் / ராஜேந்திரன் காலத்தில் உலகில் இருந்த அரசியல் புறநிலைகள் பற்றி அறிந்து கொள்ளாமல், ராஜேந்திரனின் சாதனைகளின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அளவிட முடியாது. எனவே, அக்காலத்தில் இருந்த உலக அரசியல் சூழ்நிலையைப்பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். ராஜேந்திரன் முடிசூடிய ஆண்டு கி.பி 1012. ஆகவே, இந்த ஆண்டில் உலக, ஆசிய, இந்திய அரசியல் நிலைகளை முதலில் பார்க்கலாம்.

உலக அரசியல் நிலை:

கி.பி. 1012 இல் உலகின் வட அமெரிக்க, தென் அமெரிக்க, அவுஸ்திரேலிய, அந்தாட்டிக்க, மற்றும் சஹாராவுக்குக்கீழான ஆப்பிரிக்காவில் முக்கிய அரசுகளோ நாகரீகங்களோ இருக்கவில்லை. ஐரோப்பாவைப்பொறுத்தவரை ரோமப்பேரரசு இரண்டாகப்பிரிந்து மத்திய ஐரோப்பாவில் புனித ரோமப்பேரரசும், கிழக்கு ஐரோப்பாவில் பைஸாந்தியப் பேரரசும் இருந்தன. இதைத்தவிர இங்கிலாந்து,பிரான்சு, ஹங்கேரி, ரஷ்யா என்பவை ஓரளவு வலிமையான ஆனால் அதிகம் நாகரிக முன்னேற்றமடையாத அரசுகளாக இருந்தன. மிஞ்சிய ஐரோப்பா பல சிற்றரசுகளாகச் சிதறுண்டிருந்தது.

மத்திய கிழக்கில் முஸ்லீம் கலீபாக்கள் ஆட்சி செய்து வந்தனர். கலீபாக்களின் பொற்காலம் மங்கோலியர்கள் படையெடுப்பால் சிதறடிக்கப்பட்டு விட்டாலும் எகிப்தை மையமாகக்கொண்டு பாதிமியக் கலீபாக்கள் பேரரசொன்றை வைத்திருந்தனர். ஆகவே உலகைப்பொருத்தவரை ரோம சாம்ராஜ்ஜியத்தின் இரண்டு பிரிவுகளும், பாதிமியக் கலீபா அரசும், சீனாவும் மட்டுமே வல்லரசுகள் என்ற நிலையில் இருந்தன. (படம் 1 காண்க)

படம் 1

 

 

ஆசிய அரசியல் நிலை:

ஆசியாவைப்பொறுத்தவரை மத்திய ஆசியாவில் மங்கோலிய இனக்குழுக்களும், மேற்கு ஆசியாவில் அவர்களுக்கு இரத்த சம்பந்தம் உடைய ஆனால் இஸ்லாம் மதத்தைத் தழுவிய துருக்கிய இனக்குழுக்களும் புல்வெளிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. குதிரைகளின் இருந்து சண்டையிடும் மூர்க்கம் மிகுந்த இந்த இனத்தவர்கள் போர்க்களத்தில் வலிமையானவர்களாக இருந்தாலும் அரசுக்குரிய கட்டுமானங்களை அதிகளவில் கொண்டிருக்கவில்லை. துருக்கி இனத்தைச்சேர்ந்த கஜினி முகம்மது ஆப்கானிஸ்தானில் பேரரசொன்றை நிறுவி வளமான இந்தியத் துணைக்கண்டத்தினுள் நுழையத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்.

நாகரிக வளர்ச்சியடைந்த அரசுகளுக்குள்ளே சீனாவின் சோங் பேரரசு மிகப்பெரியதாக இருந்தது. ஜப்பானியர் நாகரீக வளர்ச்சி உற்றிருந்த போதிலும் தம் நாட்டுக்குள் அடங்கியிருந்தன. இந்தியத்துணைக்கண்டத்துக்கு வெளியே சொல்லும்படியான வேறு பேரரசுகள் ஸ்ரீவிஜயமும் கெமர் அரசும் மட்டுமே. இவற்றுள் கம்பூச்சியாவை மையமாகக்கொண்ட கெமர் அரசானது சோழர்களுடன் நட்புறவுடன் இருந்தது. இதன் அரசர்கள் சைவ மதத்தினர். அவர்களின் பெயரிலிருந்து அவர்களில் தமிழ் இரத்தம் இருந்திருக்கலாம் என்றும் சொல்லும்படி இருக்கிறது. ஸ்ரீவிஜய அரசர்கள் பௌத்தர்கள். ஸ்ரீவிஜயம் மலேசியா மற்றும் இந்தோனேசிய நாட்டுப்பிரதேசங்களை அடக்கி இருந்தது. இன்றைய பலிம்பாங் அதன் தலைநகரம். (படம் 2 காண்க)

படம் 2

 

இந்திய அரசியல் நிலை:

இந்தியத்துணைக்கண்டத்தின் வட பகுதியிலே அன்று பெரிய பேரரசுகள் இருக்கவில்லை. ஆனால், ஐரோப்பா போலச் சிற்றரசுகளாகச் சிதறிக்கிடக்கவும் இல்லை. மத்திய அளவுள்ள அரசுகள் இருந்தன. சோழர்களின் பரம எதிரியான மேலைச்சாளுக்கியப் பேரரசே அன்று நிலப்பரப்பைப் பொறுத்தவரை துணைக்கண்டத்தின் மிகப்பெரிய அரசாக இருந்தது.

வடமேற்கிலிருந்து பார்த்துக்கொண்டு வந்தால், கஜினி முகம்மதுவின் ஆதிக்கத்துக்கு வெளியே, காஷ்மீர், குஸ்தார், சிந்து ஆகியவை தனி அரசுகளாக இருந்தன. கூர்ஜர – பிரதிகார வம்சத்தினர் கன்யாகுப்ஜத்தை (கன்னோஜ்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தாலும் அவர்களின் வலிமை குன்றத்தொடங்கி இருந்தது. அரசன் ராஜபாலன் பலவீனப்பட்டிருந்தான். வட மத்திய இந்தியாவில் சௌஹான்களும் குஜராத்தில் சோலங்கி வம்சத்தினரும் ஆண்டு வந்தனர்.

மத்திய இந்தியாவில் மூன்று அரசுகள் இருந்தன. வலிமையான பரமார அரசை புகழ்பெற்ற போஜன் (1010 – 1055) ஆண்டு வந்தான். இவனது அரசு வலிமையானதாக இருந்தாலும் வடக்கே முஸ்லீம் படையெடுப்புகளையும் தெற்கே சாளுக்கியர்களையும் கிழக்கே போர்க்குணம் மிக்க அயல் ராஜ்ஜியங்களையும் சமாளிக்க வேண்டி இருந்தது. இவனுக்குக்கிழக்கே சந்தேல வம்சத்தைச்சேர்ந்த வித்தியாதரனும் (1003 – 1035) கால சூரி வம்சத்தைச்சேர்ந்த கோக்கல்லன் (990-1015), காங்கேயத்தேவன் (1015 – 1041) ஆகியோரும் ஆண்டு வந்தனர். கால சூரிகள் சிற்சில வேளைகளில் போஜனுக்கு அடங்கி அவனுக்குப் படை உதவி செய்தும், வேறு சமயங்களில் அவனுடன் முரண்பட்டுக் கொண்டும் இருந்தனர்.

போஜராஜனின் பிரதான எதிரிகள் சாளுக்கியர்கள். அதேநேரம், வடக்கே இருந்து வந்துகொண்டிருந்த முஸ்லீம் படையெடுப்புகள் பற்றி அவனுக்குப் பயம் இருந்திருக்கலாம். இதனால், சாளுக்கியர்களின் எதிரிகளான சோழர்களுடன் அவன் நட்புறவை விரும்பினான்.

வங்காளத்தைப் பொறுத்த வரை அங்கே பால சாம்ராஜ்யம் பரவியிருந்தது. ஆனால், கி. பி. 1012 அளவில் அங்கே பல அரசர்கள் பால சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டும் படாமலும் ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. லாடம் அல்லது ராதா நாடு (மேற்கு வங்கம் ) வடக்கு, தெற்கென இரண்டாகப் பிரிந்து உத்தர லாடத்தில் மட்டும் பால மன்னனாகிய மகிபாலனின் (977-1027) நேரடி ஆட்சி இருந்ததாகத் தெரிகிறது. தக்கண லாட நாட்டை ரணசூர மன்னன் ஆண்டு வந்திருக்கிறான். இவன் என்ன வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதோ, இவன் மகிபாலனுக்குக் கீழ்ப்பட்டவனா அல்லது சுதந்திர அரசனா என்பதோ தெளிவாகத் தெரியவில்லை. அதைத்தவிர, நவீன கோரக்பூர் பகுதிகளை சுற்றி இருந்த தண்டபுத்தி நாட்டை காம்போஜ மரபைச்சேர்ந்த தர்மபால மன்னன் ஆண்டிருக்கிறான். காம்போஜ மரபு வடமேற்கு இந்தியாவைச்சேர்ந்ததாயினும் அந்த வம்சத்தின் கிளை வம்சமொன்று வங்கத்தின் பகுதிகளை ஆண்டிருக்கிறது. அதேபோல கிழக்கு வங்கத்தை (தற்போதைய வங்காள தேசம்) சந்த வம்சத்தைச் சேர்ந்த கோவிந்த சந்தன் ஆண்டிருக்கிறான். காம்போஜ வம்சத்தினரும் சந்த வம்சத்தினரும் பொதுவில் பால வம்சத்தினரின் எதிரிகளாயினும் கி. பி. 2012 இல் இந்த அரசர்கள் மத்தியில் இருந்த உறவுகள் பற்றிய விபரங்கள் தெளிவாயில்லை.

தண்டபுத்திக்குத் தெற்கே இருந்த ஒட்ட விஜய (தற்போதைய ஒடியா ) நாட்டை சோமவம்சி வம்சத்தைச் சேர்ந்த இந்திர ரத்தன் அல்லது நகுஷன் (1005 – 1021) எனும் மன்னன் ஆண்டு வந்தான். ‘சோமவம்சி’என்பது பொதுவாக ‘சந்திர வம்சத்தவன்’ என்பதைக் குறிக்குமாயினும் இந்தக் குறிப்பிட்ட அரச வம்சத்திற்குச் சிறப்புப்பெயராக இருந்தது. சோமவம்சிகள் பூர்வீகத்தில் கோசல நாட்டைச் சேர்ந்தவர்கள். கிபி 1012 இல் அவர்கள் மகாநதிக்கரையில் அமைந்த யயாதி நகரைத் தலைநகராகக் கொண்டு ஒட்ட நாட்டை ஆண்டு வந்தனராயினும் தென் கோசல நாடும் (சத்தீஸ்கர்) அவர்களின் ஆட்சியில் இருந்ததாகத் தெரிகிறது. வட கோசல நாடு கால சூரிகளின் பிடியில் இருந்தது.

தக்கண பீடபூமியின் பெரும்பகுதியை (மகாராஷ்ட்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ) உள்ளடக்கிப் பரந்திருந்தது மேல் சாளுக்கியப் பேரரசு. இதை விக்கிரமாதித்தன் (1008 – 1015), ஜெயசிம்மன் (1015 – 1042) ஆகியோர் ஆண்டனர். கீழைச் சாளுக்கியர் வேங்கியை (ஆந்திரா ) ஆண்டனர். இவர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு (இரண்டாம் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்தனன் மூலம்) மேல் சாளுக்கியரில் இருந்து பிரிந்த வம்சமாயினும் கிபி 1012 இல் வேங்கியை ஆண்ட விமலாதித்தன் இராஜேந்திர சோழனின் தங்கை குந்தவையை மணந்த மைத்துனனாய் இருந்தான். இவனுக்கு மேலைச்சாளுக்கிய அரசி ஒருத்தியும் இருந்தாள். அவள் மூலம் விஜயாதித்தன் எனும் மகனும் குந்தவை மூலம் ராஜராஜ நரேந்திரன் எனும் மகனும் இருந்தனர் (இவை அவர்களின் பிறப்புப் பெயர்களாக இருக்கச் சாத்தியம் குறைவு. அவர்கள் பின்னாளில் இப்படி அறியப்பட்டனர் அவ்வளவே. கிபி 2012 இல் அவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் என நாமறியோம்).

சோழப்பேரரசிற்குத் தெற்கே இலங்கையில் ரோகணப் பகுதியில் ஐந்தாம் மகிந்தன் (982- 1017) அரசனாக இருந்தான். (படம் 3)

குறிப்பு: இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களுக்கு நான் காப்புரிமை கோரவில்லை. அவை வீடியோக்களில் இருந்து எடுக்கப்பட்ட நிலைப்படங்கள் அல்லது புகைப்படங்கள் ஆகும். அதேவேளை அவற்றில் சிலவற்றில் நான் மாற்றங்களும் செய்துள்ளேன். அவை எனக்குக்கிடைத்த வேறு ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட மாற்றங்கள்.

பகுதி  II சீக்கிரம் வரும்.

படம் 3

 

 

இப்பதிவின் இரண்டாம் பாகத்தைக் காண இங்கே அழுத்துக.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

4 கருத்துக்கள்

  1. உங்கள் பதிவுகளை மிக ஆர்வத்துடன் பார்வையிடுகின்றேன். மிக நுண்ணியதான உங்களது ஆய்வுகளுக்குப் பாராட்டுக்கள். தர்க்க ரீதியாகவும் எளிமையான மொழிநடையுடனும் ஒரு தேர்ந்த வரலாற்றறிஞர் போல உங்கள் ஆய்வுகள் அமைகின்றமை மிக சிறப்பான அம்சமாகும்.

    1. நன்றி உங்கள் கருத்துக்கு. தொடர்ந்தும் வாசியுங்கள். மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் தயங்காமல் அறியத்தாருங்கள்!

  2. அருமையான பதிவு, அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்

    1. நன்றி. இதன் தொடர்ச்சியான பதிவுகளும் வேறு பல பதிவுகளும் என் இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவேறியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *