மனதின் உயரம்

வரலாற்று நாவல் ஒன்று எழுத வேண்டும் என்பது என் மனதில் இருக்கிற ஒரு நீண்டகால ஆசை. அதிலுள்ள சிரமங்கள் பல. தமிழர் வரலாறு என்பது இன்றைக்கும் பல மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அங்கும் இங்கும் சில வெளிச்சப்புள்ளிகளை மிகச்சிரமத்தின் மத்தியில் ஆராய்ச்சியாளர் கண்டிருக்கிறார்கள். மீதி இன்றைக்கும் இருள்தான்.

பல பேர் “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று எழுதிவிட்டுப்போகிறார்கள். அதுபோல எழுத நான் விரும்பவில்லை.சில சில பாத்திரங்களையும் சம்பவக் கோர்வைகளையும் என் மனதில் உருவாக்கி வருகிறேன். அதே நேரம் பொறுமையாக வரலாற்றை ஆய்ந்து துப்புத்துலக்கி வருகிறேன்.

இங்கே பதியப்பட்டுள்ளவை ஒற்றைப்பதிவுகள். இவை எனது நாவலில் இடம்பெறலாம். இடம்பெறாமலும் போகலாம். நாவலையே நான் எழுதாமலும் போகலாம். அவசரக்காரர்கள் இந்த ஒற்றைப்பதிவுகளைப் படித்துப் பாருங்கள். உங்கள் அபிப்பிபிராயங்களும் நான் நாவலை எழுதும்போது சறுக்கி விடாமல் இருக்க உதவும்.

கோதாவரிக் கரையில்

அப்போது தான் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த பிறை நிலவின் வெளிச்சமானது பிராண ஹிதா நதியின் நீர்ப்பரப்பை ஒளியுறுத்துவதற்கு அதிகம் உதவவில்லை என்றாலும், கிழக்கில் எழுந்திருந்த விடிவெள்ளி ஆனது சீக்கிரத்திலேயே அந்த நதியை உருக்கிய தங்கம் போலப் பளபளக்கச் செய்துகொண்டு ஆதவன் எழுவான் என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தது. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த பிராண ஹிதா நதி, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பரந்து விரிந்து வந்த கோதாவரி நதியில் கலப்பதற்கு முன்னராக அந்த இடத்தில் சற்றே ஒடுங்கிச் சென்றதால், மிகுந்த வேகத்தை அந்த இடத்தில் அடைந்திருந்த போதும் ஒரு அம்பு பாயும் தூரம் அளவு அகலமே இருந்ததால், நதியைக் கடப்பதற்குக் கோதாவரி மீனவர்கள் அந்த இடத்தைப் பயன் படுத்துவது வழக்கமாக இருந்தது. நதியின் இரு புறங்களிலும் நாணற் பற்றைகளும் குட்டிச் செடிகளும் அடர்ந்திருந்தாலும், நதிக் கரையில் இருந்து தென்கிழக்கே கொஞ்ச தூரத்தில் சிறிய கிராமம் ஒன்றும் அதல் மத்தியில் காலேஸ்வர சுவாமி சந்நிதியும் இருந்ததால் அந்த இடம் ஓரளவு துப்பரவாகவே இருந்தது. காலனும் ஈசுவரனும் ஒரே பீடத்தில் இரு லிங்கங்களாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் காலேஸ்வரம் என்று பெயர் பெற்றதும் தெலுங்கு நாட்டின் உண்மைப் பெயரான ‘திரி லிங்க நாடு’ என்ற பெயரைக் கொடுத்த மூன்று ஈஸ்வரங்களில் ஒன்றுமான அந்த ஸ்தலத்தின் கீர்த்தியினால், அந்த ஸ்தலத்தின் வடக்கே பிராண ஹிதா நதியின் ஒடுங்கிய இடத்தில் இருந்த சிறிய தோணித் துறையை யாத்ரீகர்கள் அடிக்கடி பயன் படுத்துவது வழக்கமாக இருந்ததால், சில சிறு படகுகள் அங்கே கட்டி வைக்கப் பட்டிருந்தன. தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த இரண்டொரு படகோட்டிகளின் இல்லங்களில் எவ்வித விளக்குகளும் தெரியவில்லை. சில் வண்டுகளின் சத்தத்தை தவிர எங்கும் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

அந்த இரவின் அமைதிக்கு மத்தியிலே மெல்லிய சர சர சத்தத்தை எழுப்பிக் கொண்டு, ஒரு பெரிய படகு மட்டும் ஆற்றங்கரை மண்ணிலே நகர்ந்து கொண்டிருந்தது. பிறை நிலவை மேகங்கள் மறைத்தன. நட்சத்திர வெளிச்சத்திலே சற்று உற்றுப் பார்த்தால், முக்காடிட்ட சில மனிதர்கள் அந்தத் தோணியை ஆற்றை நோக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவரும். முடிந்த வரை சத்தம் செய்யாமலும், தோனியின் மட்டத் திற்கு மேல் எழுந்து நிற்காமலும் மிக மெதுவாக அந்தத் தோணியை அவர்கள் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் தோணியை ஆற்றில் நகர்த்தி விட்டு, சற்றுத் தூரம் போனதும் அவர்களும் அதில் ஏறிக் கொண்டார்கள். எல்லாமாக ஆறு பேர். நெருக்கி அடித்தே அவர்கள் அந்தப் படகினுள் உட்கார வேண்டி இருந்தது. இருவர் கோல் போட்டுத் தோணியை வலிக்கவும் ஆரம்பித்தார்கள். பிராண ஹிதா நதியின் நீரைக் கிழித்தது கொண்டு தெற்கு நோக்கி தோணி மெதுவாகச் சென்றது.

பிள்ளைப் பிறை நிலவு மேகங்களுக்கு வெளியே தலை நீட்டவும், மெல்ல அவர்களது முகங்கள் புலப் பட்டன. அவர்களில் மூன்று பேர் நடுத்தர வயதானவர்கள். கரிய நிறமும், தடித்த மீசைகளும். உரமான உடற்கட்டும் கொண்டு போர் வீரர்கள் போல விளங்கினார்கள். இடுப்பில் நாலு முழ வேட்டிகள் அணிந்து, அதன் மேல் நிறச் சால்வைகளைப் பட்டி போல இறுக்கிக் கட்டி இருந்தார்கள். இடைக் கச்சைகளுக்குள் தலை நீட்டியபடி கத்திப் பிடிகள் தெரிந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துணி மூட்டையை வெற்று முதுகில் இறுக்கிக் கட்டி இருந்தார்கள். அவர்களில் இருவர் கோல் போட்டுப் படகைச் செலுத்தினார்கள்.

மற்றைய மூன்று பேரும் வாலிபப் பிராயத்தினராகத் தோன்றினார்கள். சிறுவர்கள் என்று கூட அவர்களைக் கூறலாம். ஒருவன் பூணூல் தரித்த அந்தண இளைஞன். சுமார் பதினைந்து வயது மதிக்கத் தக்க அவன் சிவந்த நிறமும், சற்றே பருமனான தேகமும் பெற்றிருந்தான். வாய் நிறைய வெற்றிலையை மென்று கொண்டிருந்தான். பருத்தித் துணித் தலைப்பகைக்குக் கீழ் அவனது தலை மொட்டை அடிக்கப் பட்டிருந்தது தெரிந்தது. காதில் பருமனான குண்டலங்களும், கையோன்றில் தங்கக் காப்பும், விரல்களில் மோதிரங்களும் அணிந்திருந்தான்.

இரண்டாவது பையனுக்கும் ஏறக்குறையப் பதினைந்து வயது தான் இருக்கும். இருந்தாலும் நல்ல உயரமாகவும் கறுப்பாகவும் இருந்தான், மெல்லிய உடல் மிகக் கட்டுமஸ்தாக இருந்தது. அரும்பிய மீசையோடு ஆட்டுத் தாடியும் இருந்தது. கண்களில் நெஞ்சுறுதியும் முரட்டுத் துணிச்சலும் தெரிந்தன.

மூன்றாவது பையனுக்குப் பத்து வயது கூட இராது.

முகம் பொது நிறமாக இருந்தாலும், அவனது முகத்தில் அபூர்வமான களை இருந்தது. கண்கள் அமைதியாகவும் ஆழமாகவும் சுற்றுப் புறத்தை அளவெடுத்துக் கொண்டிருந்தன. மெல்லியவனாகவும் அளவான உயரத்தோடும் இருந்தான். ஒரு கையில் சுருட்டிய சிறு பாய் மாதிரியான பொருள் ஒன்றை வைத்திருந்தான். இடுப்பில் எழுத்தாணியும், சில தூரிகைகளும், சிறு கத்தி ஒன்றும் செருகப் பட்டிருந்தன. திரும்பிய போது, அவனது வெற்று முதுகுப் புறத்திலே, இடது தோளில் இருந்து வலப் பக்கமாக ஓடிய காய வடு ஒன்று தெரிந்தது.

நட்சத்திரங்கள் பிரதிபலித்த நீர்ப் பரப்பிலே தோணி போய்க் கொண்டிருந்தது. மூன்றாவது பையன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானத்தில் அவன் பார்வை சென்ற இடத்திலே விசித்திரமான ஒரு நட்சத்திரம் இருந்தது. அதற்கு பிரகாசமான தலையும் அதில் இருந்து புறப் பட்ட ஒளி பொருந்திய வாலும் இருந்தன. வால் மேற்குத் திசையில் நீண்டு படர்ந்திருந்தாது. வானத்தில் ஐந்தில் ஒரு பங்கு வரையில் வியாபித் திருந்தது. ஆம்! அது ஒரு தூமகேது!

மூன்றாவது பையன் பிராமணப் பையனைப் பார்த்து “என்ன அருள்மொழி ? தூமகேதுவின் தோற்றம் பற்றி உன் தந்தை என்ன சொல்லுகிறார்? சுந்தர சோழரின் காலம் போல ஏதும் துர்ச்சம்பவம் நிகழ வாய்ப்பு இல்லையே?” என்று கேட்டான்.

“இதே போன்றதொரு தூமகேது தனது பாட்டனார் காலத்தில் ஏற்பட்டதாகவும், பின்னர் எந்தத் தீங்கும் இன்றி விலகிச் சென்று விட்டது என்றும் தந்தை சொல்லுகிறார். சுந்தர சோழர் காலத்தில் வந்தது போலல்ல இது. ஜாதக ரீதியிலோ, அல்லது நேரடியாக நிலத்தில் வந்து மோதுவதாலோ, எந்தத் தீங்கையும் இது செய்ய வாய்ப்பில்லை என்பது தான் தந்தையின் அபிப்பிராயம். ஆயிரம் பிறைகளுக்கு ஒரு முறை இந்தத் தூமகேது தோன்றும் என்று அவரது பாட்டனார் அவருக்குச் சொன்னாராம்,” என்றான் பிராமணனாகத் தோன்றிய பையன்.

“இருந்தாலும், நமது கனவு ….” என்று கூறி மூன்றாவது பையன் பெருமூச்செறிந்தான்.

கறுத்த பையன் அவனைப் பார்த்து, “வயதிற்கு மீறிய பேச்சுடா உனக்கு, சுட்டி. கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு. உடையாருக்கு ஒன்றும்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினான். பிராமணப் பையனுடைய கை அவனது வாயைப் பொத்திற்று. அவனது கண்ணில் தணல் பறந்தது.

“கவனித்துப் பேசு மாறா! சுட்டிக்கு இருக்கும் அறிவு கூட உனக்கு இல்லை. யாரைப் பற்றி என்ன பேசுகிறாய்?” என்று சீறினான் அவன்.

மாறன் எதோ சமாதானம் சொல்லத் தொடங்கினான். அதே நேரத்தில், இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வட திசையில் இருந்து குதிரைக் குளம்புச் சத்தங்கள் எழுந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் ஆற்றின் வட கரையிலே பந்தங்கள் தென்பட்டன. குழப்பமான கூச்சல்கள் கேட்டன.

“நம்மைப் பார்த்து விட்டார்கள். கோல் போடு விரைவாக!!” என்று சுட்டி கூவினான்.

படகு செலுத்திய வீரர்கள் பலம் கொண்டமட்டும் துடுப்பை வலித்தார்கள். மத்திய வயதான அந்த வீரர்கள் மூவரும் தங்களுடன் வந்த சிறுவர்களிடம் பய பக்தி உடையவர்களாகவும் அவர்களது உத்தரவை ஏற்றுச் செயல் படுபவர்களாகவும் தோன்றினார்கள். அருள்மொழி என்று அழைக்கப் பட்ட பையன் அவர்களின் ஒருவனின் துடுப்பைப் பற்றி வலிக்கப் போனான். அதே நேரம் கரையில் இருந்து “விஷ்” சத்தத்துடன் ஒரு அம்பு பாய்ந்து வந்தது. துடுப்பை வலித்தவனின் முதுகுப் பக்கத்தில் அது ஓசை இன்றித் தைத்தது. துடுப்பு வலித்தவன் படகினுள் சரிந்தான்.

“அருள்மொழி!!” என்று மாறன் கூவினான்.

“எனக்கு ஒன்றுமில்லை. விரைவாக!!! இதோ கரை வந்துவிட்டது” என்று அருள்மொழி கத்தினான்.

படகு பிராண ஹிதா நதியின் தென்புற மணல் மேட்டில் மோதி நின்றது. அம்பு பட்டவனைத் தவிர மற்ற ஐவரும் அதிலிருந்து இறங்கி ஓடினார்கள். சுட்டி என்று அழைக்கப்பட்ட பையன் திரும்பிப் பார்த்தான். அம்பு பட்டவன் படகில் கிடக்கக் கண்டான். திரும்பி ஓடி வந்தான்.

“ஐயா! நீங்கள் போங்கள்!” என்று கத்தினான் காயம் பட்டவன்.

சுட்டியின் தலைக்கு ஒரு விரற்கடை மேலே இன்னொரு அம்பு பாய்ந்து சென்றது.

“இல்லை அர்ச்சுனா!! உன்னால் வர முடியும்! வா!! என்று சுட்டி கத்தினான். தோணியின் அணியத்திட்கு மேலால் கையைப் போட்டு அம்பு பாய்ந்தவனை இழுத்தான். அவன் தட்டுத் தடுமாறி எழுந்தான். அவனை இழுத்துக் கொண்டு சுட்டி ஓடினான். ஆறு பேரும் தெற்குக் கரையோர நாணட்காடுகளில் அடுத்த கணம் புகுந்து மறைந்தார்கள்.

அதே நேரம், ஆற்றின் வடக்கு பகுதியில் பத்துப் பதினைந்து குதிரைகள் நதியில் இறங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குதிரையிலும், வாளும் வேலும் தாங்கிய வீரர்கள் இருந்தார்கள்.

திருமகளும் நில மகளும்

பிரகிருதி தேவி தனது பூரண அழகுடன் கொலு வீற்றிருந்த அந்தக் குறிஞ்சி மலைப் பிரதேசம் மனிதக் காலடி படாத அடர்ந்த காடுகளால் மூடப் பட்டிருந்தது. வன விலங்குகளின் பயங்கரமான கர்ஜனை அடிக்கடி இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு எழுந்தது. வானுற ஓங்கி நின்ற மரங்களிலே கன்னங்கரேலேன்று பளபளக்கும் தோலை உடைய கரு நாகங்கள் ஊர்ந்து சென்றன. அந்தப் பிரதேசத்தின் பயங்கர அழகை அதிகப் படுத்தியவாறு வளைந்து வளைந்து சென்றது ஒரு காட்டாறு. சமுத்திரத்தின் சல சல சத்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. ஆனால், எந்தத் திசையில் கடல் இருந்தது என்பது அனுமானிக்கக் கூடவில்லை.

காட்டாறு முழங்கை வளைவாகத் திரும்பிச் சென்ற இடத்திலே ஆற்றின் கரையைச் சுற்றிக் கருவேல மரங்களும் அதற்கப்பால் மூங்கில்களும் அடர்ந்து வளர்ந்திருந்தன. உற்றுப் பார்க்கிறவர்களுக்கு, இந்த மரங்கள் அங்கே தானாக வளர்ந்திருக்கவில்லை என்பதும் ஒழுங்கமைவுடன் மனிதர்களால் நட்டு வளர்க்கப் பட்டிருந்தன என்பதும் தெரிய வரும். இன்னும் உற்றுப் பார்த்தால், ஓங்கி வளர்ந்திருந்த மூங்கில் காடுகளின் மறைவில் ஒரு கோட்டையின் கல்லாலான மதில் சுவர்கள் வளைந்து செல்வது தெரியும். வடக்கிலும் வட கிழக்கிலும் வானுற ஓங்கிய மலைத் தொடர்களால் அந்தக் கோட்டை பாதுகாக்கப் பட்டிருந்தது. மூன்று பக்கங்களில் வளைந்து சென்ற காட்டாறு அந்தக் கோட்டைக்கு இயற்கையான அகழி ஒன்றை அளித்தது. அதைச் சுற்றிக் காடுகளும் அடர்ந்திருந்ததால் தென் கிழக்குப் பக்கத்தில் இருந்து மட்டுமே அந்தக் கோட்டையை யாரும் அணுக முடியும். அந்தப் பக்கத்திலும் காட்டா றின் இரு முனைகளைத் தொடுத்து அமைக்கப் பட்ட செயற்கை அகழி அந்தக் கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்தது. அகழிக்குக் கிழக்கிலும் தெற்கிலும் வெகுதூரத்திற்கு முள் மரங்களால் ஆன காவற் காடு இருந்தது. அகழியின் மேல் அகலமான பாலம் ஒன்றும் அதற்கு நேராகக் கோட்டை வாசலும் இருந்தன. வேறு வாசல்கள் அந்தக் கோட்டைக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வட மேற்கிலும் மேற்கிலும் சிறிய திட்டி வாசல்கள் இருந்தன. கோட்டையின் சுவர்கள் சதுர வடிவிலோ வேறெந்த ஒழுங்கான வடிவத்திலோ அமைந்திருக்கவில்லை. காட்டாற்றின் போக்கிற்குத் தக்கவாறு அவையும் நெளிந்து வளைந்து சென்றன.

கோட்டை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாகத் தோன்றியது. எந்த விதமான கொடியோ பதாகையோ அங்கு பறந்து கொண்டிருக்கவில்லை. முழு நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே காவல் வீரர்கள் நடமாடியது தெரிந்தது. மற்றும் படி எங்கும் நிசப்தம்.

கோட்டையின் வட பகுதிலே மட்டும் ஓரிடத்தில் தீவர்த்திகளின் வெளிச்சம் வந்தது. அங்கே மரங்களால் மூடப் பட்டிருந்த ஒரு புல் திடலில் இருபது இளைஞர்கள் சம்மணம் கொட்டி உட்கார்ந்திருந்தார்கள். ஆசிரியர் போல் தோன்றிய ஒருவர் அவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அரையில் பஞ்ச கச்சமும், மழித்த தலையில் முன் குடுமியும், சந்தனத்தில் குழைத்துப் போட்டிருந்த நாமமும், முப்புரி நூலும் அவரைச் சேர தேசத்து நம்பூதிரி அந்தணர் என்று காட்டின. தும்பைப் பூவென நரைத்த வெண்தாடி காற்றில் மெலிதாக அலைந்தது. கண்களில் அறிவொளியும், வித்தைச் செருக்கும் சுடர்விட்டன. உலக விவகாரங்களில் அலைப்புற்றதானால் ஏற்படும் தெளிவோடு விவரிக்க முடியாத ஒரு குரூரமும் அந்தக் கண்களில் இருந்தது. அவருக்கு அருகில் இன்னொரு முன்குடுமி அந்தணர் பணிவோடு நின்றார். மரத்தால் ஆன ஒரு பீடத்தில் சில பழைய ஓலைச் சுவடிகள் இறைந்து கிடந்தன.

அவருக்கு எதிரில் உட்கார்ந்திருந்த இளைஞர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு வயது வரை இருக்கலாம். பல தேசங்களில் இருந்து வந்தவர்களாகத் தோன்றினார்கள். சிவந்த மேனியை உடையவர்களும், கருத்த திருமேனியர்களும், பிராமணர்களும், ஷத்திரியர்களும், அந்தக் கூட்டத்திலே கலந்திருந்தார்கள். சிலர் வட இந்தியர் போலவும் தோன்றினார்கள். அந்தக் கூட்டத்தில் முன்வரிசையில் இருந்த சிலர் நாம் முன்பு பார்த்தவர்கள் போலத் தோன்றுகிறார்கள்! ஆம்! கோதாவரிக் கரையில் படகில் இருந்து இறங்கி ஓடிய மூன்று சிறுவர்கள் தான் அவர்கள். மூவருமே சிறிது வளர்ந்திருந்தார்கள். சுட்டி என்று அழைக்கப் பட்ட பையன் அடையாளம் தெரியாதபடி வளர்ந்திருந்தான். முகத்தில் இள மீசை அரும்பத் தொடங்கி இருந்தது.

முதிய நம்பூதிரி பாடத்தைத் தொடர்ந்தார். “சோழ சைனியத்தின் அமைப்பு முறை வித்தியாசமானது. பல உட்பிரிவுகளும், சமாந்தர வகுப்புகளும் நிறைந்தது. சீனர்களின் ஆலோசனை சோழ சைனிய ஒழுங்கமைப்பிடிகுப் பெறப் படுவதாகவும் அறிகிறேன். சோழர்கள் படை சதுரங்க சேனை அல்ல. யானை, குதிரை, தேர், காலாள் என்று அவர்கள் படையைப் பிரிப்பதில்லை. சேனைகள் அல்லது தண்டு என்று கூறுவார்கள். ஒவ்வொரு சேனையிலும் பல தளங்கள் இருக்கும். ஒரு தளத்தின் தலைவனைத் தளபதி என்பார்கள். ஒவ்வொரு தளத்திலும் யானை, குதிரைப் படைகளும், வில்லாளிகளும், காலாட் படைகளும் இருப்பார்கள். ஒரு தளத்திலே மூன்று அணிகள் இருக்கும். பொதுவாக ஒரு அணியிலே ஒரு யானைப் படையும் ஒரு குதிரைப் படையும் இரண்டு காலாட் படைகளும் இருக்கும். யானைப் படையில் இருநூறு யானைகள் வரை இருக்கலாம். குதிரைப் படையில் ஐநூறு குதிரைகள் இருக்கும். ஒரு காலாட் படையில் இரண்டாயிரம் வீரர்கள் வரை இருப்பார்கள். யானை, குதிரைப் பாகர்கள் தவிர! காலாட் படையில் உள்ளவர்களும் சில சமயம் யானைகள் மேலேறி யுத்தம் செய்வார்கள். காலாட் படையானது தேவைக்கேற்ப விற்படையாகவோ வாட்படையாகவோ இருக்கலாம். ஒரு படையானது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது சிற்றரசைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொறுக்கி அமைக்கப் பட்டதாக இருக்கும்.”

வகுப்பில் இருந்த பெரும்பாலான இளைஞர்கள் விரிந்த கண்களுடன் நம்பூதிரி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நம்பூதிரி மேலும் தொடர்ந்தார். “ஆகமொத்தம் ஒரு தளம் என்பது மூன்று யானைப் படை, மூன்று குதிரைப் படை, ஆறு காலாட் படைகளைக் கொண்டிருக்கும். இதைத் தவிர தளப் படை என்று ஒன்றை தற்காப்புக் காக வைத்திருப்பார்கள். இதில் இன்னும் இரண்டாயிரம் வீரர்கள் இருக்கலாம். ஒரு தளத்திற்கேன்று சுமார் இருநூறு மருத்துவர்களையும் உதவியாளர்களையும் கொண்ட மருத்துவப் படை இருக்கும். சில தளங்களில் ஊசிப் படை என்று சொல்லப் படுகிற விசேட தாக்குதற் படைகளும் இருக்கும். மொத்தமாக ஒரு சோழ தளத்தில் குறைந்தது பதினையாயிரம் வீரர்களாவது இருப்பார்கள். போர் முனையில் உள்ள தளங்களில் தளம் ஒன்றிற்கு இருபதாயிரம் வீரர்களுக்கு மேல் கூட இருக்கலாம்”.

இளைஞன் ஒருவன் கை உயர்த்தினான். நம்பூதிரி பேசுவதை நிறுத்தினார். “என்ன” என்று கண்களால் கேள்வி கேட்டார்.

கை உயர்த்திய இளைஞன் கறுப்பாகவும் நெடுநெடுவென்று உயரமாகவும் இருந்தான். இளமீசை எண்ணை தடவி முறுக்கி விடப் பட்டிருந்தது. முகத்தில் உயர்குடிப் பிறப்பிற்குரிய செழுமை இருந்தாலும் , அறிவு துலங்கவில்லை. ஒரு முரட்டுத் தனம் இருந்தது. விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தான்.

“அய்யன், நால்வகைப் படை உடைய அரசர்கள் தமது படைகளை ரத, கஜ, துரக, பதாதிகளாக வகுப்பதே பண்டைக் காலத்தில் இருந்து வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய படை உடைய மன்னர்கள் இந்த ஒவ்வொரு படையிலும் உட்பிரிவுகளையும் வைத்திருப்பார்கள். போர் முனையில் நால்வகைப் படைகளும் சேர்ந்து எதிரிகளைத் தாக்கும். இவ்வாறிருக்கச் சோழர்கள் மட்டும் வித்தியாசமாகப் படைகளை அணிவகுக்கும் காரணம் என்ன? வெறுமனே புதுமைகளைப் புகுத்தும் நோக்கம் தானா? அல்லது இந்த அணிவகுப்பில் ஏதும் சிறப்பு உண்டா?” என்று அந்த இளைஞன் கேட்டான்.

நம்பூதிரி சிரித்தார். அருள்மொழியைக் குறிப்பாகப் பார்த்தார்.

வகுப்பில் ஒரு அசாதாரணமான மௌனம் கவிந்தது.

“சீர்மாற! உனது கேள்வியிலேயே பதில் இருக்கிறது!” என்றார் நம்பூதிரி. “உண்மையிலே பார்த்தால், நீ சொல்வது மாதிரியான அமைப்பு முறை சோழ சைநியத்திலும் இருக்கிறது. சுந்தர சோழப் பெரும்படை, அரிஞ்சய சோழப் பெரும்படை என்ற பெயர்கள் கேள்விப் பட்டிருக்கிறாயா? சோழர் காலாட் படையின் பெரிய பிரிவுகள் அவை. பல படைகள் ஒரு தலைவனின் கீழ் ஒன்றாக இருக்கும் போது, அற்றைப் பெரும்படை என்று சொல்வார்கள். ஒரு பெரும்படை யில் இருபதினாயிரம் வீரர்கள் வரை இருக்கலாம. இவை தனியே காலாள், குதிரை அல்லது யானைப் படைகளாக இருக்கும். சோழ நாடு, நடு நாடு, திரு முனைப் பாடி நாடு முதலிய இடங்களில் இருந்த சோழ சைனியங்கள் இந்த முறையிலே பிரித்து வைக்கப் பட்டிருந்தன. ஆனால் சோழர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கும் திட்டங்களுக்கும் இந்த அமைப்பு முறை பொருந்தாது” இப்படிச் சொல்லி விட்டு, நம்பூதிரி மறுபடியும் அருள்மொழியைக் குறிப்பாகப் பார்த்தார்.

“சீர்மாற! பாண்டியர்கள் ஒரு நேரத்தில் வடக்கே சோழர்களையும் தெற்கே இன்னொரு எதிரியையும் எதிர்க்க வேண்டி ஏற்படுகிறது என்று வைப்போம். படைகளை எப்படிப் பிரிப்பீர்கள்? ஒரு எதிரியை நோக்கிக் காலாட்படைகளையும், இன்னொரு எதிரியை நோக்கிக் குதிரை, யானைப் படைகளையும் அனுப்புவீர்களா? அத்தைகைய போர்முறையால் வெற்றி ஏற்படுமா?” என்று நம்பூதிரி கேட்டார்.

“இல்லை. ஒவ்வொரு படையையும் பாதி பாதியாகப் பிரித்து, பாதி யானைப் படையையும், பாதி குதிரை மற்றும் காலாட் படைகளையும் வடக்கே அனுப்புவது தான் உசிதம். எஞ்சியவற்றைத் தெற்கே அனுப்பலாம். பாதி என்று இல்லாவிட்டலும் எதிரியின் பலத்துக்குத் தக்க படி பிரித்துக் கொள்ளலாம்.” என்றான் சீர்மாறன்.

“அது தான் விஷயம். இன்றைக்குச் சோழர் படைகளிலே மூன்று சேனைகளும், ஒவ்வொரு சேனைகளிலும் பல தளங்களும், ஒவ்வொரு தளத்திலும் யானை குதிரை காலாட் படைகளும் இருக்கின்றன என்றால் இதன் அர்த்தம் என்ன என்று நீயே ஊகித்துக் கொள். அகலக் கால் வைக்க நினைக்கிறார்கள் சோழர்கள். ஏற்கனவே வடக்கிலும் தெற்கிலும் அவர்களது குறி இருக்கிறது. கிழக்கே கடல். மிஞ்சி இருப்பது மேற்கு. மேற்கே இருப்பவர்கள்… நாங்கள்!” – நம்பூதிரியின் முகம் திடீரென்று சிவந்தது.

“தங்கள் திட்டங்கள் யாருக்கும் தெரியாது என்று சோழர்கள் நினைக்கிறார்கள். சேர தேசப் பிராமணர்களின் புத்திக் கூர்மை அவர்களால் குறைத்து மதிப்பிடப் பட்டிருக்கிறது. கடிகையை அவர்கள் நிம்மதியாக இயங்க விடப் போவதில்லை.. இது எனக்குத் தெரியும். தனித்துவமாகவும் நடு நிலையாகவும் இருக்க விரும்புகிறோம் நாங்கள். இற்றை வரை சோழ மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லி வருகிறோம். இன்னும் எத்தனை நாளைக்கு? சீக்கிரத்தில் ஏதாவதொரு வியாஜத்தில் சோழ தூதர்களை எதிர்பார்க்கிறேன். இன்றைக்குத் தென்னாட்டில் யாரும் கண்டு அஞ்சும் பலம் அவர்களுடையது…” என்று கூறி நம்பூதிரி நிறுத்தினார். மறுபடியும் அவரது பார்வை அருள்மொழியின் முகத்தை ஊடுருவியது.

அருள்மொழியும் சுட்டியும் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தனர்.

“ஆனால் ஒரு விடயம்!” என்றார் நம்பூதிரி. “கடிகையை அவர்கள் அறியவில்லை. சேரர் போர்முறையையும் அறியவில்லை. உடையார் எல்லாம் உடையாராக ரொம்ப நாள் இருக்க முடியாது. மலை நாட்டில் அகலக் கால் வைக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இலகுவாக வெற்றியடைய எதிர்பார்க்க முடியாது. திருமகளும் நில மகளும் எப்போதும் ஒருவருக்கு மட்டும் சொந்தமாக இருப்பதில்லை. சேர வேண்டியவர்களுக்கு இந்தச் செய்தி சேரும் என்று நினைக்கிறேன்.” என்று நம்பூதிரி கர்ஜித்து, நெருப்பைச் சிந்தும் விழிகளால் அருள்மொழியைப் பார்த்தார். “போய்ச் சொல்!!” என்ற செய்தி அவருடைய முக பாவத்திலும் கண்களின் நெரிப்பிலும் ஸ்பஷ்டமாக வெளியாயிற்று.

அருள்மொழி கோபம் கொப்புளிக்கும் முகத்துடன் அமைதி காத்தான்.

சுட்டியோ தலை குனிந்திருந்தான். அவன் முகம் கல்லாக இறுகி இருந்தது. “திரு மகளும் நில மகளும் இன்று தென்னாட்டில் ஒருவருக்குத் தான் சொந்தம். இது சீக்கிரத்தில் புரியும் உமக்கு!” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

தேன்மொழி

மாமல்லபுரத்திற்குத் தெற்கே பாலாறு கடலில் கலக்கின்ற பிரதேசமானது, அந்த மாலை நேரத்தில் ஆளரவமின்றி அமைதி பெற்றுத் திகழ்ந்தது. மேலைக் கடலிலே மறைந்து கொண்டிருந்த சூரியன், தங்க நிறமும் செங்குருதி நிறமும் சேர்ந்து தகதகவென்று ஜொலித்ததன்றி, உற்றுப் பார்ப்பவர் கண்களுக்கு மரகதப் பச்சை நிறமும் கொண்டு விளங்கினான். வானம் நிர்மலமாயிருந்தது. ஆங்காங்கே பறந்து சென்ற சிறிய மேகத் துணுக்குகள் ஆதவன் மறைவால் செம்பஞ்சுக் குழம்பு நிறம் பெற்று விளங்கின. பாலாற்றின் முகத்துவாரத்தின் இரு புறமும் தென்னைகள் ஓங்கி வளர்ந்திருந்தன. அவற்றின் உச்சிகள் தங்க நிறம் பெற்று ஒளிர்ந்தன.

அந்த நாளில் பாலாறு அதன் முகத்துவாரத்திலிருந்து உள்ளே சில காதங்கள் வரை நன்றாக ஆழப் படுத்தப் பட்டிருந்தது. மரக்கலங்கள் வருவதற்கும் போவதற்கும் வசதியாகச் சோழ மன்னர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். ஆற்றின் இரு புறமும் தென்னைகளும், மா, வேம்பு முதலிய பயன்தரு விருட்சங்களும் ஓங்கி வளர்ந்திருந்தன. ஆறு கடலோடு கலக்குமிடத்திற்கு இரு காதங்கள் மேற்கே ஆற்றின் தெற்குப் புறமாக ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியும் நன்றாக அழப் படுத்தப் பட்டு ஆற்றோடு இணைக்கப் பட்டிருந்தது. ஆற்றின் முகத் துவாரத்தில் இருந்து ஏரிக் கரை வரையில் மரங்களால் அடர்த்தியாக மூடப் பட்டிருந்தாலும், தரை ஆனது செடி கொடிகள் அதிகமின்றித் துப்பரவாயிருந்தது. ஆங்காங்கே சில குடிசைகளும் வேலைச் சாலைகளும் இருந்தன.

அந்த அந்தி மயங்கும் நேரத்தில் கடற்கரையிலிருந்து ஆற்றங்கரை மணலோடு ஒரு பையனும் ஒரு யுவதியும் மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் அக்கா தம்பி என்று சொல்லும்படி இருந்தது. அதாவது, அந்த யுவதியைப் பார்த்தபின் கண்ணெடுத்து அந்தப் பையனைப் பார்த்தவர்கள் இந்த முடிவுக்கு வருவார்கள். கண்ணெடுத்துப் பார்க்கிற காரியம் அவ்வளவு சுலபமானது அல்ல! அந்த யுவதியைப் பார்த்தவர்கள் உடனடியாக அப்பால் பார்ப்பது என்பது ஏது?

ஆம்! பார்க்கிறவர்களைப் பிரமிக்கச் செய்யும் அற்புத சௌந்தரியம் அந்தப் பெண்ணிடத்தில் வாசம் செய்தது. காற்றில் பறந்த அந்தப் பெண்ணின் நீண்ட கருங்கூந்தல் , வந்து கொண்டிருக்கிற இரவானது இவளது கூந்தலில் போய்க் குடிகொண்டதால் தான் இன்னும் இருளாமல் இருக்கிறதோ என்று சொல்லும்படி கறுத்து அடர்ந்திருந்தது. அகன்ற அவள் கண்கள் தாமரை மலர்களின் இதழ்களைப் போல் அமைந்து விஷமத்தையும் சிரிப்பையும் அள்ளித் தெளித்தன. காதளவோடிய அவள் நயனங்களைப் பார்த்துக் கடலையும் பார்க்கின்ற போது , பிற்காலத்தில் சோழர்களைப் போற்ற வந்த ஜெயங்கொண்டான் “காதளவு அளவெனும் மதர்விழிக் கடலமுது அனையவள்” என்று பாடியது இவளைத் தானோ என்று தோன்றியது. அவளது கூர்மையான நாசி எந்தச் சவாலுக்கும் சளைக்காதவள் இவள் என்று பறை சாற்றிக் கொண்டிருந்தது. கடற்கரை மணலின் நிறம்போன்று அவளது பால் வண்ண மேனியிலே மஞ்சள் நிறம் கலந்து மிளிர்ந்தது. பெண்மையின் இயற்கையான நளினத்தை மிஞ்சி, நிகரற்ற கம்பீரம் அவளது நடையில் இருந்ததால், குடிசையில் வந்து வாழ்கிற அரச குளத்து நங்கையோ இவள் என்று தோன்றியது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அவளைச் சாதாரணப் பெண்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிய இன்னொரு அம்சம் இருந்தது. அது அவள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த, மின்னல் ஒளி வீசிக் கண்களைப் பறித்த ஒரு நீண்ட வாள்!

“தேன்மொழி!இதோ வந்து விட்டோம்!! இன்றாவது வாட்போரிலே உன்னை வெல்லாமல் விட மாட்டேன்!” என்றான் அந்தப் பெண்ணின் தம்பியாகத் தோன்றிய சிறுவன்.

சற்று நேரத்திற்கெல்லாம் தென்னை மரங்கள் வட்டமாக அமைந்து நிழல் கொடுத்த ஒரு பயிற்ச்சிக் களத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். தேன்மொழியின் தம்பியாகத் தோன்றிய சிறுவனும் இடையில் ஒரு வாள் அணிந்திருந்தான். அது தேன்மொழியின் வாளைப் போல் அன்றி அதிக வேலைப் பாடு அற்றதாகவும் சற்றுத் துருப் பிடித்ததாகவும் இருந்தது. சிறுவன் வாளைச் சுழற்றத் தொடங்கினான். தேன்மொழி எதுவும் பேசாமலே அவன் முன்பு வந்து நின்றாள்.

சேலையின் முந்தானையை இடையைச் சுற்றி வரிந்து கட்டிக் கொண்டாள். உறையின்றிக் கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வாளை அவிழ்த்து எடுத்து ஓங்கினாள். வலசாரியாக ஒருமுறை சுற்றி வந்தாள்!

“மீசை முளைக்காத ஆண்பிள்ளையே! இன்றாவது கொஞ்சம் வீரம் காட்டு பார்க்கலாம்!!” என்றாள்.

சிறுவன் வாளை ஓங்கியவாறு அக்காவின் மேல் பாய்ந்தான். அவனது ஒவ்வொரு வீச்சையும் தேன்மொழியி வாள் அநாயாசமாகத் தடுத்தது. சிறுவன் சுற்றிச் சுற்றி வந்து போரிட்டான் . தேன்மொழி நின்ற இடத்திலேயே அனாயசமாக அவன் வாளைத் தட்டி வந்தாள். சிறுவன் ஒரு குதி குதித்துப் பாய்ந்து, தேன்மொழியின் தலையைத் தனது வாளால் தொட முயன்றான். தேன்மொழி அவன் முழங்கால் முட்டியைப் பார்த்து ஒரு உதை விட்டாள். சிறுவன் குப்புறக் கீழே விழுந்தான். அவன் விழும்போது தேன்மொழி அவனது மொட்டை வாளைத் தனது வாளால் தட்டி விட்டாள். அது ‘டணார் ‘ என்ற சத்தத்தோடு பக்கத்துப் புதரில் போய் விழுந்தது.

முட்டி சிரைத்துக் காயம் பட்ட சிறுவன் தரையில் அமர்ந்து கோபம் பொங்க அக்காவைப் பார்த்து, “மந்தி! நீயெல்லாம் வாட்போர் பயின்று என்ன செய்யப் போகிறாய்? எவனுக்காவது வாழ்க்கைப் பட்டு அடுப்பு ஊதுகிறவள் தானே!! சீக்கிரம் போய்ச் சமையலைப் படி போ!!” என்றான்.

தேன்மொழி கல கல என்று சிரித்தாள். வீணையின் கம்பிகளை மெல்விரல் ஒன்று ஒருசேர மீட்டியதென அவள் சிரிப்பு ஒலித்தது. புதரில் மலர்ந்து கொண்டிருந்த முல்லையுடன் போட்டியிட்டுக் கொண்டு அவள் பற்கள் ஒளி வீசின.

“அப்படி எல்லாம் நீ கனவு காண வேண்டாம். நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. உன்னை மாதிரிப் பொறாமைக் கார ஆண்பிள்ளைகள் ஒரு வீரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவா போகிறார்கள்? நான் கப்பல் ஏறிக் கடல் கடந்து யுத்தத்திற்குப் போகப் போகிறேன்! என் தந்தையால் முடியாததை நான் சாதித்துக் காட்டப் போகிறேன்! நீ வேண்டுமானால் வீட்டிலிருந்து எனக்குச் சமைத்துப் போடு” என்றாள்.

“ஹஹஹா! சோழர் கடல் படையிலே பெண்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்; அப்பாவின் கனவை நனவாக்க அவர் வாரிசு நான் இருக்கிறேன். முருகமூர்த்திக் கரையர் மகன் கலபதியாக வரத் தான் போகிறான். வீண் ஆசையை வளர்த்துக் கொள்ளாதே! சோழர் கடல்படையில் இருக்கும் பெண்கள் நாலே நாலு பேர்தான்! தேன்மொழி என்ற பெயர் உள்ளவர்கள் அதில் இருக்க முடியாது!!” என்றான் சிறுவன்.

“அப்படியா? சோழர் கடல்படையில் நாலு பெண்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்??” என்று தேன்மொழி பரபரப்புடன் கேட்டாள். அவளது சிற்பி செதுக்கியது போன்ற அழகிய முகத்தில் அப்போது நிகரற்ற ஆவல் மிளிர்ந்தது.

“யாரா? தாரணி, லோலா, வஜிரா, திரிசடை இவர்கள் தான்!! வேறு எந்தப் பெண்ணும் இல்லை! இருக்கவும் முடியாது!!” என்று சிறுவன் ஏகத் தாளம் செய்தான்.

தேன்மொழியின் முகம் சாம்பியது. “சீ..போ!” என்றாள்.

அதே நேரம், ஆற்றின் மேற்குப் புறம் இருந்து துடுப்புகளைத் துளாவும் சத்தம் எழுந்தது. பெரிய கலங்கள் நதியில் வருவனபோல் ஆற்றில் சிற்றலைகள் உண்டாகிக் கரையை மோதத் தொடங்கின. பையனும் பெண்ணும் ஆற்றங்கரைக்கு ஓடிப் போய்ப் பார்த்தார்கள்.

அந்த அந்தி மயங்கும் நேரத்தில் பாலாற்றுக் குள்ளிருந்து கடலை நோக்கிப் போர்க்கலங்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன. ஒன்றன் பின் ஒன்றாக வந்த அவற்றின் தளங்களில் பெரு வேல்களும், யந்திர வில்களும் இன்னும் பல வகைப் போர்க் கலங்களும் இருந்தன. தீப்பந்தங்களும் வாண வெடிகளும் குப்பல் குப்பலாக அடுக்கப் பட்டிருந்தன. அவற்றின் துடுப்புகள் யந்திரங்களால் இயக்கப் படுவன போன்று ஒரே சீராக அசைந்தன . ஒன்றன் பின் ஒன்றாக இளைஞனையும் யுவதியையும் தாண்டிச் சென்ற அவை பாலாற்றின் முகத்துவாரத்தை அடைந்து, பின்னர் வடக்கே திரும்பி மாமல்ல புரத்தை நோக்கி விரைந்து சென்றன.

“இதோ இருபது தாரணிகள் போகிறார்கள் பார்! சோழர் கடற்படை யில் இருக்கும் பெண்கள் இவர்கள் தான்!!” என்றான் சிறுவன்.

அதே நேரம் ஆற்றங்கரையில் குதிரைக் காலடிச் சத்தம் எழுந்தது. சிறுவனும் பெண்ணும் திரும்பிப் பார்த்தார்கள். ஆஜானுபாகுவான ஒரு மனிதர் குதிரையில் வந்து இறங்கினார். அவரது ஒரு கை முழங்கையோடு துண்டிக்கப் பட்டிருந்தது. முகத்தில் தாடியும் மீசையும் கறுத்து அடர்ந்திருந்தன. “அப்பா” என்றவாறு தேன்மொழி அவர் அருகே ஓடினாள்.

“அம்மா தேன்மொழி!! மாமல்லபுரத்திலிருந்து அவசரச் செய்தி வந்திருக்கிறது. நாளைக் காலை சூரியோதய வேளையில் போர்க்கல அணிவகுப்பு நடக்கப் போகிறதாம். புதிதாகக் கட்டிய கலங்களைப் பார்ப்பதற்குத் தலைநகரிலிருந்து அரசகுலத்தவர்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. நான் உடனே கிளம்புகிறேன். தம்பியைப் பார்த்துக் கொள்!” என்றார் அந்த மனிதர்.

மனதின் உயரம்

‘பெரிய கோயில்’ என்று உலகெல்லாம் பெருமை அடையப் போகிற தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் உருவாகிக் கொண்டிருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோயிலுக்கான அஸ்திவாரம் போடப் பட்டதில் இருந்து, ஆயிரக் கணக்கான சிற்பிகளும் மகா சிற்பிகளும் தச்சர்களும் இரவு பகலாக வேலையில் முனைந்திருந்தார்கள். தஞ்சாவூர் எங்கும் கல்லுளிகளின் ‘கல் கல்’ சத்தமும் ரம்பங்களின் ‘சர் சர் ‘ சத்தமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. தஞ்சையில் நிலை கொண்டிருந்த வேளக் காரப் படை, கேரளாந்தகத் திருமெய்க் காவற் படை, அணுக்கர் படை , மும்முடிச் சோழ ஆனைப் பாகர் படை ஆகியவற்றைச் சேர்ந்த பதினாயிரக் கணக்கான வீரர்கள் கோயில் அமைப்புப் பணிகளுக்கு ஒத்தாசை செய்து வந்தார்கள். இருந்தாலும் கோயில் கட்டும் புண்ணிய கைங்கரியத்திற்கு ஆட்கள் போதாமலே இருந்தது. இக்காரணத்தால் தஞ்சையைச் சுற்றி இருந்த கைகால் உரமுள்ள அத்தனை ஆண் மக்களுக்கும் கூலிக் காரராகவோ சிற்றாள்களாகவோ கோயில் நிர்மாணம் நடந்து கொண்டிருந்த இடத்தில் வேலை கிடைத்து வந்தது. இதனால் வயலில் வேலை செய்வதற்கு ஆட்களைப் பிடிப்பதே முடியாமல் இருப்பதாகத் தஞ்சையின் பொன் விளையும் பூமிகளை உரிமையாக வைத்திருந்த பெருந்தனக்காரர்கள் குறை சொல்லும்படி இருந்தது. உடல் உரம் கொண்ட ஆண் மக்கள் மட்டு மன்றிக் குடியானவப் பெண்களும் சிறு பையன்களும் கூடச் சிற்றாள்களாகவும் சிற்பிகள் தச்சர்களின் உதவியாளர்களாகவும் பணியாற்றி வந்தார்கள். இதனால் தலை நகரிலிருந்த வறிய குடும்பங்களுக்கு அதிகப் படி வருமானம் கிடைத்தது மட்டுமன்றி, வரலாற்றில் வாழப் போகும் ஒரு மகத்தான சிவாலயப் பணியில் தாங்களும் பங்கு பெறுகிறோம் என்கின்ற பெருமித உணர்ச்சியும் அவர்களிடையே பரவி வந்தது.

சேர நாடிலிருந்து வந்த நூற்றுக் கணக்கான யானைகள் காவிரிக் கரையிலிருந்து கோயில் நோக்கி மண்ணினால் ஆன மகத்தான சாய்தளம் ஒன்றை அமைத்து வந்தன. சில காத தூரம் நீளமான அந்த சாய்தளம் அப்போது தான் பாதி பூர்த்தி அடைந்திருந்தாலும், ஏற்கனவே கோயில் பக்கத்தில் அரைப் பனை உயரம் வரை வளர்ந்திருந்தது. பெரும் பெரும் பாறைகளை அந்தச் சாய்தளத்தில் வைத்து இழுக்கக் கூடிய வரையில் கெட்டியான களிமண்ணையும் சுண்ணக் கல்லையும் சேர்த்து அதை நிர்மாணித்து வந்தார்கள். அந்த சாய்தளம் என்ன தேவைக்காக உபயோகிக்கப் படப் போகிறது என்பது பற்றிப் பல விதமான வதந்திகள் மக்களிடையே உலாவி வந்தன.

கோயிலின் சுவர்கள் உருவாகி வந்த இடங்களைச் சுற்றி இருந்த மர நிழல்களில் நூற்றுக் கணக்கான மகா சிற்பிகள் வேலை செய்து வந்தார்கள். இரவும் பகலும் மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது அவர்கள் உழைத்து, கோயில் சுவர்களில் பதிப்பதற்கென்று அருமையான சிற்ப வடிவங்களை உருவாக்கி வந்தார்கள். இப்படிச் சிற்ப வேலை செய்பவர்களைச் சனங்கள் மொய்த்துக் கொண்டு நின்று அவர்களது கைவண்ணத்தில் உருவாகும் சிலைகளைப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. சிற்பிகள் செய்யும் வேலையில் குறுக்கிடக் கூடாதென்று மணியக் காரர்கள் சனங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லி வந்த போதிலும், தம்மைச் சுற்றி ஆட்கள் நிற்பதைச் சிற்பிகள் பொருட்படுத்தாத வரையில் சனங்களை அதிகமாகக் கண்டிக்காமலே விட்டிருந்தார்கள். சிற்பிகளுக்கோ, தம்மைச் சுற்றி யாராவது நிற்பதே பல சமயம் தெரிவதில்லை. அவ்வளவு தூரம் தங்களது வேலையிலும் அது சம்பந்தமான கற்பனைகளிலும் அவர்கள் மூழ்கிப் போய் இருப்பார்கள்.

உருவாகி வந்த கோயிலின் மேற்கு வீதியில் உள்ள ஒரு மகிழ மரத்தடியில் இப்படி வேடிக்கை பார்ப்பதற்காக ஜனங்கள் அதிகமாகவே சேருவது வழக்கம். அந்தக் கோயில் கட்டுவதற்கே பொறுப்பான மகா சிற்பி அங்கே தமது கைப்படச் சில உயிர் வடிவங்களைச் செதுக்குவதுண்டு. சிற்பம் மட்டுமன்றிக் கட்டடக் கலையிலும் தச்சுத் தொழிலிலும் நிபுணராக இருந்ததால் இராசராசப் பெருந்தச்சன் என்ற விருதைப் பெற்றிருந்த அந்த மாமேதைக்குக் கோயில் அமைப்புப் பணிகள் ஏராளமாக இருந்தாலும் தமது கைப்படச் செதுக்கிய சிற்பங்கள் சில அந்தக் கோயிலில் என்றும் நிலைத்து வாழவேண்டும் என்ற ஆசையும் அதிகமாகவே இருந்தது. அதனால். கட்டட வேலைகள் சுமுகமாக நடப்பதை உறுதி செய்து கொண்டபின், பெரும் பாலும் மதியம் திரும்பிய மாலை வேளைகளில் அவர் அந்த மகிழ மரத்தடிக்கு வந்து உட்கார்ந்த்து பார்ப்போர் வியக்கும் ஜீவ வடிவங்களைச் செதுக்குவார். பெருந்தச்சரின் கைவண்ணம் தெரிந்த படியால் சாதாரண மக்கள் மட்டுமன்றி அங்கு வரும் அரண்மனை அதிகாரிகள் கூட அவரின் வேலையை நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். பெருந்தச்சர் வேலை செய்யும் போது அடிக்கடி வெற்றிலை போடுவதுண்டு. அவரின் ஓரிரு சீடர்களும் சிற்றாள்களும் அடைப்பக் காரனும் அந்தச் சிற்ப சக்கரவர்த்தியின் ஏவலை எதிர்பார்த்து எப்போதும் அருகில் நிற்பார்கள்.

அன்றும் அவ்வாறே பெருந்தச்சர் மகிழ மரத்தடியில் உட்கார்ந்து தம் வேலையில் முனைந்திருந்தார். மதியம் திரும்பிச் சிறிது நேரமே ஆன படியால் போலும் அவரைச் சுற்றி அவ்வளவாகச் சனக் கூட்டம் இல்லை. சிற்றாள்களும் துணைச் சிற்பிகளும் கூட மதிய உணவுக்காகப் போயிருந்தார்கள். ஒரே ஒரு மனிதர் மட்டும் சிற்பியின் பின்னால் நின்று அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிற்பியை நோக்கி நின்றதால் கோயில் வீதியில் நின்று பார்ப்பவர்களுக்கு அந்த மனிதரின் முகம் தெரியவில்லை. நல்ல உயரமாகவும் கம்பீரமாகவும் சிவந்த நிறத்துடனும் விளங்கிய அவர் இடுப்பில் சாதாரணமான வேட்டி ஒன்றே அணிந்திருந்தார். முதுகில் முப்புரி நூலும் கழுத்தில் மகர கண்டிகை ஒன்றும் தெரிந்தன. இமையா நாட்டத்துடன் அவர் பெருந்தச்சர் வேலை செய்வதைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்தார்.

பெருந்தச்சர் அன்றைக்கு வேலை செய்த கருங்கற்சிலை கல்வியின் அதி தேவதையான சரஸ்வதியின் சிலையாக அமைந்திருந்தது. வெள்ளை மலரணை மேல் வீணையும் கையும் விரிந்த முகமலருமாய் அந்தத் தேவி வீற்றிருந்தாள். தேவியின் ஒரு பக்கத்தில் கையில் மத்தளத்துடன் காளை மாட்டின் முகம் கொண்ட நந்தி பகவான் நின்று கொண்டிருந்தார். மறு புறத்தில் கையில் தம்புரா ஏந்தி வியாக்கிர பாத முனிவர் நின்றார். தேவியின் இரு கரங்களில் ஏட்டுக் கட்டும், தாமரை மலரும் இருந்தன. மற்றைய இரு கரங்களால் தேவி வீணையை மீட்டி உலகை உயிர்த்தெழச் செய்யும் தேனிசையை எழுப்பினாள். சிலை முக்காற் பங்கு பூர்த்தியாயிருந்தது. பெருந்தச்சர் அப்போது சரஸ்வதியின் முகத் தாமரையைச் செதுக்கிச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்.

சரஸ்வதி தேவியின் புருவங்களிலேஅவர் தமது கல்லுளியை வைத்துச் சில முறை பொழிந்தார். பின்பு கன்னங்களிலும் மூக்கருகிலும் வேலை செய்தார். திருப்தியின்மைக்கு அறிகுறியாக அவர் புருவங்கள் நெரிந்தன. தேவியின் முகத்திலே கருணையும் அறிவும் ததும்பின. ஆனால் பெருந்தச்சர் எதிர்பார்த்த ஏதோ ஒரு அம்சம் அந்த முகத்தில் இன்னும் வரவில்லை என்று தோன்றியது. பெருந்தச்சர் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்தார். சற்று வெற்றிலை போட்டால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

பின்புறம் திரும்பிப் பாராமலே, “அடைப்பக் காரா! கொஞ்சம் தாம்பூலம் கொண்டுவா!” என்று கட்டளை இட்டார்.

பெருந்தச்சரின் பின்னால் நின்ற மனிதர் சுற்று முற்றும் பார்த்தார். சற்றுத் தூரத்தில் ஒரு வெற்றிலைத் தட்டமும், அதனுள் சில வெற்றிலைகளும் பாக்குச் சீவல்களும் சுண்ணாம்பும் இருந்தன .அதற்கப்பால் ஒரு மண்குடத்தில் தண்ணீர் இருந்தது. உடனே தாம்பூலத் தட்டை எடுத்து வந்தார். மண்குடத்தில் இருந்து கையில் தண்ணீர் அள்ளிச் சுண்ணாம்பினுள் விட்டார். தாம்பூலத்தினுள் பாக்குச் சீவலும் சுண்ணாம்பும் போட்டு மடித்து, ஒன்றும் பேசாமல் பெருந்தச்சரின் கையில் கொடுத்தார். பெருந்தச்சர் எங்கோ நினைவாகத் தாம்பூலத்தை வாங்கித் தரித்துக் கொண்டார். மறுபடியும் சிலையின் முகத்தைப் பார்த்தார். சிற்றுளியைக் கையில் எடுத்தார்.

கருங்கல்லிலே அவரது கைகள் நர்த்தனம் புரிந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் சிலையின் முகத் தோற்றம் மாறியது. கண்களின் பார்வையும், உதட்டின் சுழிப்பும் மாறின. அந்த முகத்திலே இப்போது வெறும் கருணை இல்லை!கலையை அனுபவிக்கும் போது உண்டாகும் சுகம் இருந்தது. இசையை மீட்டும் போது உருவாகும் தெய்வீகக் களிப்பு அங்கே சுடர் விட்டது. கனவில் தோய்ந்த கண்களும், இளம் புன்னகை மலர்ந்த இதழ்களும், கபோலங்களின் பொலிவும் சேர்ந்து தெய்வீகக் கலைப் பரவசம் கலை மகளின் முகத்திலே தாண்டவம் ஆடியது. சிற்பி திருப்தியுடன் தலையை அசைத்தார். பின்னர் வாயிலிருந்த தம்பூலச் சாற்றைத் துப்ப நினைத்தார். கலைத் தேவியின் முன்னாலா தாம்பூலம் துப்புவது ! தமக்குப் பின்னால் இருந்த, அடைப்பக் காரன் என்று தான் நினைத்த மனிதரைப்பார்த்து “அடைப்பக் காரா! எச்சிற் படிக்கத்தை எடுத்த்துக் கொண்டு வா!” என்றார். பின்னால் நின்ற மனிதரும் பக்கத்தில் கிடந்த எச்சிற்படிக்கத்தை எடுத்துச் சிற்பியின் முகத்தின் முன்னே நீட்ட, சிற்பி தான் செய்து முடித்த கலைமகளின் திருவுருவையே பார்த்து ஆனந்தித்தவராய் வெற்றிலைச் சாற்றைத் தட்டிலே துப்பி விட்டு நிமிர்ந்தார்.

அப்போது சற்றுத் தூரத்தில் வந்து கொண்டிருந்த இளமங்கை ஒருத்தி அவர் கவனத்தைக் கவர்ந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதுக்கு மேல் இருக்காது. யௌவனத்தின் வாசற்படியில் நின்ற அந்த இளம் யுவதியின் ஆடை ஆபரணங்களும் முகத்தில் துலங்கிய பேரழகும் அவள் ராஜ குடும்பத்துப் பெண் என்பதைப் பறை சாற்றின. அவர் இருந்து வேலை செய்து கொண்டிருந்த மகிழ மரத்தடியை நோக்கியே அவள் வந்தாள். கூர்வேலெனத் திகழ்ந்த அவள் கண்கள் மின்வெட்டுப் பார்வைகளை நாலாபுறமும் வீசிக் கொண்டிருந்தன. சிறிது தட்டையாக வளுவளுவென்றிருந்த அவளது நாசி அனிச்சம்பூவை நினைவூடிற்று. அரச குடும்பத்தவர்களுக்குரிய கம்பீரமும் பெண்மைக்குரிய நளினமும் அவள் நடையில் கலந்திருந்தன. கைவளைகள் ஒலிக்கப் பாதச் சிலம்புகள் கொஞ்ச அவள் அருகில் வந்தபோது, அவள் இளவரசி கல்யாணி என்பதைக் கண்டார் பெருந்தச்சர். தனது மூத்த சகோதரர்களான மதுராந்தகத் தேவருக்கும் இளவரசி குந்தவைக்கும் பத்துப் பதினைந்து பிராயங்கள் இளையவள் அவள். அரண்மனையின் செல்லக் குழந்தை! ஆர்வத்தோடு அவள் அருகில் வந்து பெருந்தச்சர் செதுக்கி முடித்திருந்த கலைமகளின் திருவுருவத்தைப் பார்த்தாள்.

“தேவி! என்ன இது ?? தனியாகவா வந்தீர்கள்? உடன் பரிவாரங்கள் யாரும் வரவில்லையா?” என்று திகைப் போடு கேட்டார் பெருந்தச்சர்.

கல்யாணி தேவி “கல கல” என்று நகைத்தாள். “ஐயா! நான் தனியாக வரவில்லை. தகப்பனாரோடு தான் வந்தேன்!அதோ உங்கள் பின்னால் திரும்பிப் பாருங்கள்” என்று கூறி, வெண்டைப் பிஞ்சை நிகர்த்த தனது மென்காந்தள் விரல்களால் சிற்பிக்குப் பின்னே சுட்டிக் காட்டினாள்.

பெருந்தச்சர் திடுக்கிட்டு விதிர் விதிர்த்துத் திரும்பிப் பார்த்தார். அங்கே, வரலாற்றில் வாழப் போகும் உயிர் வடிவங்களைக் கருமமே கண்ணாகச் செதுக்கிக் கொண்டிருந்த தனது சிற்பிக்கு எச்சிற் படிக்கம் ஏந்தி நின்றான், தென்னாடு அன்று வரை தந்த மகா சக்கரவர்த்திகளுக்குள்ளே ஈடு இணை அற்றவனும், கைகளில் சங்கு சக்கரங்களோடு பிறந்து திருமகளையும் இருநில மடந்தையையும் தனக்கே உரிமையாக அடைந்தவனும், மணிமுடி மன்னர் வந்து பணிகின்ற திருவடித் தாமரைகளை உடையவனுமான, ஸ்ரீ ராஜ ராஜன்!

பாலைவனப் புயல்

காலைச் சூரியனின் செங்கிரகணங்கள் தஞ்சை அரண்மனையின் வானுயர்ந்த கோபுரங்களிலே வீழத் தொடங்கியிருந்தன. கறி காய் தயிர் மோர் விற்பவர்களும், அரச உத்தியோகத்தர்களும், வணிகர்களும், வெளியூர்களிலிருந்து வேலையாகத் தலை நகருக்கு வந்திருந்தவர்களும், அப்போது தான் நகருக்குள் பிரவேசிக்கத் தொடங்கி இருந்தார்கள். கோட்டை வாயில்கள் அகலத் திறந்திருந்தாலும், வழமையை விடப் படைவீரர்கள் பிரசன்னம் அதிகமாகவே இருந்தது. கோட்டை வாசலுக்கு வெளியிலும் உள்ளும் சற்றுத் தூரத்திற்குக் கையில் வேல் பிடித்த குதிரை வீரர்கள் வீதியின் இரு மருங்கிலும் அணிவகுத்து நின்று கொண்டிருந்தார்கள். கோட்டை வாசலின் மேல் இருந்த கொத்தளத்திலும் அதற்கருகாமையிலும் கோட்டைச் சுவர் மீதும் நூற்றுக் கணக்கான வில்லாளிகள் நிலை எடுத்திருந்தார்கள். அணுக்கர் படையின் ஆயிரவர் பிரிவொன்று கோட்டை வாசலுக்குச் சற்று வெளியே வீதியோரமாக அணிவகுத்து நிறுத்தப் பட்டிருந்தது. ஆயினும் கோட்டைக்குள்ளே வந்த ஜனங்களை வீரர்கள் யாரும் தடுக்கவில்லை. வீரர்களின் முகங்களிலும் எச்சரிக்கை தெரிந்ததே அன்றிக் கவலையோ பரபரப்போ காணப் படவில்லை. கோட்டைக்குள்ளே ஏதோ முக்கியமான சம்பவம் நடை பெறப் போகிறது என்று மட்டும் தோன்றியது.

அரண்மனைக்குச் செல்லுகின்ற பாதைகள் எல்லாம் ‘ஜே ஜே’ என்று கூட்டமாக இருந்தது. முக்கியமான மனிதர்களாகத் தோன்றிய பலர் அந்தக் காலை வேளையிலே அரண்மனையின் அத்தாணி மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அத்தாணி மண்டபம் ஏற்கனவே நிறைந்திருந்தது. சில வருடங்களுக்கு முன்பே புதிதாகக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தின் இருபுறமும் சோழ நாட்டின் புகழ்பெற்ற மன்னர்கள் கருங்கற் சிலைகளாக நின்று கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் சுவரானது பளபளப்பான முத்துச் சுண்ணாம்பு பூசப்பெற்றுச் சித்திரங்கள் எதுவுமின்றிச் சுத்தமாக இருந்ததது. கருங்கற் தரை காலுக்குக் குளிர்ச்சியை அளித்தது. மண்டபத்தின் ஒரு பக்கத்தில் இருந்த மேடையில் சோழ குலத்தின் வீர சிங்காதனமும் அதற்கு ஒரு படி கீழே வேறு சில சிங்காசனங்களும் இருந்தன. சிங்காசனத்தின் மேல் வெண் கொற்றக் குடை நிழல் செய்தது. சபையின் முன் வரிசையில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அதிகாரிகளும் சிற்றரசர்களும் வீற்றிருந்தார்கள். சோழப் பேரரசு நாளுக்கு நாள் தழைத்து ஓங்குவதற்குக் காரணமாக இருந்துவந்த கொடும்பாளூர் வேளிர், பழுவேட்டரையர், சம்புவரையர், மழவரையர், வாண கோவரையர், வைதும்பராயர் , பல்லவரையர், முனையரையர், மலையமான்கள், படையாட்சியார் முதலிய சிற்றரசர்களும் அவர்களது முடிக்குரிய இளவரசர்களும் அங்கே பிரசன்னமாயிருந்தனர். சோழ குல சிம்மாசனத்திற்குக் கீழே இருந்த ஒரு சிம்மாசனத்தில் திருமந்திர ஓலை நாயகமும் பேரமைச்சருமான கிருஷ்ணன் ராமன் வீற்றிருந்தார். அந்தண குலத்தில் தோன்றியவரானாலும் பல போர்களைக் கண்டவரான அவரது அழகிய முகத்தையும் தோள்களையும் காய வடுக்கள் அலங்கரித்தன. அவருக்கருகில் பெரிய குந்தவையாரை மணந்த வல்லவரையர் வந்தியத் தேவர் வீற்றிருந்தார். முதிய வயதிலும் அவரது மெலிந்த உடலானது இரும்பையொத்த வலிமையை உடையதாக இருந்தது. கண்களில் குறும்பும் விவேகமும் மட்டுமன்றிப் பல வருடங்கள் தந்த முதிர்ந்த அனுபவமும் சுடர்விட்டன. குறுந்தாடி வெள்ளை வெளேரென்று நரைத்திருந்தது. அவருக்கு மறுபுறத்தில் அப்போதுதான் கொடும்பாளூர்ச் சிம்மாசனம் ஏறியிருந்த மதுராந்தக வேளார் தமது பெரிய கறுத்த மீசையைத் தடவியவாறு அமர்ந்திருந்தார்.

இவர்களுக்கு மறுபுறத்தில் சற்றுத் தூரமாகப் போடப் பட்டிருந்த சிம்மாசனம் ஒன்றில் அரச குலத்தவனாகத் தோன்றிய இளைஞன் ஒருவன் வீற்றிருந்தான். அவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவனாகத் தோன்றவில்லை. அவனது அழகிய முகத்தில் சற்றே துன்பத்தின் சாயல் படர்ந்திருந்தது. நெற்றியில் இளவரசுக் கிரீடம் ஒன்று அணிந்திருந்தான். அவனது கண்கள் அடிக்கடி அத்தாணி மண்டபத்தின் புறத்தில் அரச குடும்பத்தவர்கள் நுழைவதற்காக இருந்த வாயிலை நோக்கின.

சபைக்குள் சற்றே துழாவினால், நமக்கு முன்பே தெரிந்த முகங்கள் அங்கே இருந்தன என்பதைக் காணலாம். கோதாவரி நதிக் கரையில் நாம் முதலில் சந்தித்த இளைஞர்கள் தான் அவர்கள். இன்றோ அவர்கள் முறுக்கேறி வளர்ந்து முழு ஆண் மக்களாக ஆகியிருந்ததுடன் ஆடை ஆபரணங்களாலும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். அருள்மொழி தன் முகத்தை அழுத்தமாகச் சவரம் செய்து, அந்தணர்களுக்குரிய ஆடை ஆபரணங்களைப் பூண்டிருந்தான். ஆயினும் அவன் வெறும் அந்தணன் இல்லை என்பதை அவன் முறுக்கேறிய தோள்களும் நீண்ட கரங்களும் விற்பயிற்சியினால் உரமேறிய கைகளும் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவன் அருகில் வீற்றிருந்த சுட்டியோ எளிமையாக உடை அணிந்திருந்தான் ஆயினும், அவன் கண்களின் ஒளியும் முகத்தின் கம்பீரமும் இப்போது பலமடங்கு வளர்ந்து , பார்க்கிறவர்களை எல்லாம் வசீகரித்துக் கொண்டிருந்தன. அவன் அருகில் வீற்றிருந்த மாறனோ கடைந்தெடுத்த கருங்கற் சிலை போல் வலிமையின் மொத்த உருவமாக விளங்கினான். சபையில் ஓரளவு முற்பகுதியிலேயே, சிற்றரசர்களின் வரிசைகளை அடுத்து, அவர்கள் அமர்ந்திருந்ததிலிருந்து அவர்கள் சோழ நாட்டின் சேவையில் கணிக்கத் தக்க நிலையை அடைந்திருந்தார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

சுட்டியின் காலடியில், மண்டபத்தின் தரையில் இருந்தான் பனை போல ஓங்கி வளர்ந்திருந்த வாட்ட சாட்டமான ஒரு மனிதன். கீழே அமர்ந்திருந்த நிலையிலேயே அவன் தலையானது சுட்டியின் தோள் மட்டத்திற்கு இருந்தது. கருநாகத்தின் நிறம்போல வழுவழுப்பான கறுத்த தோலும், தடையான மூக்கும் சுருண்ட தலைமுடியும் அவனை மேற்திசையில் வெகுதூரத்தில் இருந்த கறுப்பர்களின் நாடுகளிருந்து வந்தவனாகக் காட்டின. ஆனாலும், சுற்றி இருந்தவர்களின் சம்பாஷணையை அவன் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததிலிருந்து அவனுக்குத் தமிழ்மொழி ஓரளவேனும் தெரிந்திருந்ததாகப் பட்டது. இடுப்பில் மெல்லிய பருத்தி வேட்டியன்றி வேறொன்றும் அவன் அணிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் ஏதோ சொல்ல வாய் எடுத்தான். அதே சமயத்தில் சக்கரவர்த்தி சபைக்கு வருவதற்கு அறிகுறியாகப் பேரிகை முழக்கமும் கொம்புகளின் நாதமும் எழுந்தன. அடுத்த கணம் தலைமைக் கட்டியக் காரன் சபைக்குள் வந்தான். சபையில் அமைதி குடி கொண்டது.

“பராக்!பராக்! திரிமண்டல சக்கரவர்த்தி, மும்முடிச் சோழர், கேரளாந்தகர், சிவபாத சேகரர், தெலுங்க குல காலர், சோழ நாட்டின் மாமன்னர், அருள்மொழித் தேவரான ஸ்ரீ இராஜ ராஜத் தேவர், குமார சக்கரவர்த்தி மதுராந்தகத் தேவர் மற்றும் அரச குடும்பத்தினர் சபைக்கு வருகிறார்கள்” என்று முழங்கினான் கட்டியக் காரன்.

அடுத்த கணம் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக இராஜராஜத் தேவர் சபைக்குள் பிரவேசித்தார். அவர் பின்னால் முடிக்குரிய இளவரசரும், இளவரசிகள் குந்தவையும் கல்யாணியும் வந்தனர். குந்தவை நுழைந்ததைப் பார்த்ததும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த வேற்று நாட்டு இளவரசனின் முகம் மலர்ந்தது. சபையினர் அனைவரும் எழுந்து நின்றனர். மாமன்னரும் இளவரசரும் அமர்ந்ததும் எல்லோரும் தமது இடங்களில் உட்கார்ந்தனர்.

மாமன்னர் சிம்மாசனத்தில் உட்கார்ந்த அடுத்த கணமே திருமந்திர ஓலை நாயகர் கிருஷ்ணன் ராமானுக்குக்குச் சைகை செய்ய, அவர் எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசலுற்றார். “சபையோர்களே! நேரத்தை விரயம் செய்யச் சக்கரவர்த்திகள் விரும்பவில்லை. மிக முக்கியமான காரணத்துக்காக இன்று சபை கூட்டியிருக்கிறோம். இந்தப் புண்ணிய பாரத பூமியிலே இன்றைக்கு எத்தனையோ அரசர்கள் தத் தமது பகுதிகளில் ராஜ்ய பாரம் செய்து வருகிறார்கள். ஆனாலும் இந்த ராஜ்யங்களுக்கிடையே தொடர்புகள் அதிகமில்லை. தென்னாட்டிலே இன்று சோழ சாம்ராஜ்யமானது மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது. அதன் பெருமையும் புகழும் உத்தர பாரதம் வரை சென்று எட்டியிருக்கின்றன . வடக்கே சளுக்கர்கள் நம் சோழப் பேரரசின் சிறப்பைப் பார்த்துப் பொறாமையால் புழுங்கினாலும் அதற்கும் வடக்கே உள்ள எத்தனையோ மன்னர்கள் நம் சாம்ராஜ்யத்தின் மேல் நன்மதிப்பும் நல்லெண்ணமும் வைத்திருக்கிறார்கள். கூர்ஜர நாட்டை ஆளும் போஜ மகாராஜாவின் தூதர்கள் நமது நட்பைக் கோரி இன்றைய தினம் தஞ்சை நகருக்கு வந்திருக்கிறார்கள். போஜ மகாராஜாவின் நல்லெண்ணத்தையும் மரியாதையையும் அவர்கள் சக்கரவர்த்திகளுக்குத் தெரிவிப்பதோடு போஜரின் சார்பில் மிக அவசரமான செய்தியையும் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கிற படியால், அவர்களைச் சக்கரவர்த்தியின் முன் பிரசன்னமாகும்படி அழைக்கிறேன்!”

இப்படிப் பிரம்மராயரான கிருஷ்ணன் ராமன் கூறி நிறுத்தியதும் கூர்ஜர தூதுவர்கள் உள்ளே நுழைந்தார்கள். செக்கச் செவேலென்ற செந்தாமரை நிறம் பெற்று விளங்கிய அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றவர்களாகத் தோன்றினார்கள். அச்சமயம் விருந்தினர் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த புதிய உடைகளை அவர்கள் அணிந்திருந்த போதிலும் அவர்கள் முகங்களில் வாட்டமும் சோர்வும் தெரிந்தன. அவர்களின் தலைவன் முன்னே வந்து இராஜ ராஜ சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தினான். அவன் பேசுவதை மொழிபெயர்ப்பதற்காக வடமொழியும் கூர்ஜரமும் தெரிந்த பண்டிதன் ஒருவன் முன்னே அழைத்து வரப் பட்டான்.

“கூர்ஜர நாட்டுப் போஜ மகாராஜாவின் தூதரே! தமிழகத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகுக! அவரசமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் கூறியதன் பேரில் சிறிய அவகாசத்தில் இந்தச் சபையைக் கூட்டி இருக்கிறோம். தாமதம் வேண்டாம்! தங்களின் செய்தி என்ன?” என்று இராஜ ராஜர் கேட்டார்.

தூதுவன் செய்தியைச் சொன்னான். அது அந்தச் சபையில் யாருமே எதிர்பார்க்காத பயங்கரச் செய்தியாக இருந்தது.
*************************

கூர்ஜர மகராஜாவின் தூதன் இராஜராஜரைப் பணிந்து தனது செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழகத்திற்கு வட மேற்கே பல ஆயிரம் காத தூரத்திற்கப்பால் பரந்து விரிந்து கிடந்த பாலை வனத்திலே, சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைவிதியை மட்டுமன்றிப் பாரத வர்ஷத்தினது தலைவிதியையுமே நிருண யிக்கப்போகும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

காலைக் கதிரவன் தனது வெங்கதிர்களைப் பரப்பிப் பாலைவன மணலைச் சூடாகிக் கொண்டிருந்த அந்த வேளையிலே அந்தப் பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி இடையர்கள் கூட்டம் கூட்டமாகத் தெற்கு நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டும் கூடாரங்களைச் சுருட்டிக் கொண்டும் பேயைக் கண்டவர்கள் போல அப்படி ஓடினார்கள். அவர்களோடு வாழ்ந்த மிருங்கங்கள் அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டும் சில வேளையில் அவர்களையே மிதித்துத் துவைத்துக் கொண்டும் ஓடின. நாய்கள் குரைத்துக் கொண்டு ஓடின. ஓடியவர்கள் எல்லோரும் யாரோ தங்களைத் துரத்தி வருவதுபோல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடினார்கள். பெண்கள் அழுது கூக்குரலிட்டுக் கொண்டு ஓடினார்கள். தெற்கே பாலைவனத்தின் அடிவானத்தில் எதோ ஒரு நகரத்தின் தங்கக் கலசங்களும் கோபுரங்களும் வெயில் ஒளியில் மின்னித் தெரிந்தன. அதை நோக்கி அந்த இடையர்கள் கூட்டம் ஓடியது.

அதே வேளையில் வடமேற்குத் திசையில் அடிவானத்தில் பாலைவனமே சினங்கொண்டு எழுந்தது போல ஒரு பெரிய புழுதிப் படலம் எழுந்தது. பூகம்பத்துக்கு முன்னால் ஏற்படுவது போன்ற பயங்கரத் தொனியுடன் நிலம் அதிர்ந்தது. சூரிய வெயிலில் மின்னிய மணல் துகள்கள் மேலெழுந்து சண்டமாருதமாகச் சுழன்றன. அந்தப் புழுதிப் படலத்தைக் கிழித்துக் கொண்டு ஒற்றைக் குதிரை வீரன் ஒருவன் தோன்றினான்.

அந்தக் குதிரை வீரனின் கையில் ஒரு வேலும், வேலின் மேல் மேலிருந்து கீழாக அதிக நீளமும் குறைந்த அகலமும் கொண்ட ஒரு பச்சை நிறக் கொடியும் இருந்தன. வேலின் கூர்முனை இளம்பிறை வடிவமாக இருந்தது. கொடியில் படங்கள் எதுவும் இல்லை; சில எழுத்துகள் மட்டும் மங்கலாகத் தெரிந்தன. வாயில் நுரை தள்ளிய தனது வெள்ளைக் குதிரையின் தலைக் கயிற்றை அவன் இழுத்து நிறுத்தியதும், அது கனைத்தவாறு தன் பின்னங்கால்களில் எழுந்தது.

கேட்டவர்கள் நடுநடுங்கும் படியான பயங்கரக் குரலில் “ஆண்டவனே பெரியவன்! இறைவனுக்கு வெற்றி உண்டாகட்டும்!” என்று, அந்த வீரன் கர்ஜித்தான்.

அடுத்த கணம், அவனுக்குப் பின்னால், புழுதிப் புயலைக் கிழித்துக் கொண்டு குதிரையின் மேல் வீற்றிருந்த ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தோன்றினர். காற்றிலும் கடிய வேகத்துடன் அவர்கள் குதிரைகளை நடத்திக் கொண்டு வெள்ளமெனப் பாய்ந்து வந்தனர். அவர்களின் சங்கிலிக் கவசங்களும் இரும்புத் தொப்பிகளும் காலை வெயிலில் மின்னித் திகழ்ந்தன. குதிரைகளின் வாயில் பால்வண்ண நுரை தள்ளியது. குளம்படிச் சத்தத்தினால் பாலை வனம் கிடுகிடுத்து நடுங்கியது. ஊழிக்காலத்தில் உலகை அழிக்க வேகம் கொண்டெழும் சண்ட மாருதமென அவர்கள் தெற்குத் திசை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தனர்.

அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்த குதிரையில், ஓங்கிய வாளுடனும், கறுத்துத் திரண்ட பெரு மீசையுடனும், நெருப்பை உமிழும் கண்களுடனும் ஒருவன் வீற்றிருந்தான். அவன் பெயர் கஜனி முகம்மது!

எலிக்கும் அரிக்கும் உறவா?

அரண்மனையைச் சுற்றி இருந்த வானுயர்ந்த தென்னஞ் சோலைகளின் மத்தியில், பூத்துச் செழித்திருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளத்திற் கருகே, வானத்தில் சுடர் விட்டு ஒளிர்ந்த விண் மீன்களைப் பார்த்தவாறு சுட்டி படுத்திருந்தான்.

அரண்மனையில் அன்று பயங்கர நிசப்தம் குடி கொண்டிருந்தது. தலை நகரம் முழுவதுமே களை இழந்து அடங்கிப் போயிருந்தது. வசந்த காலமான போதிலும் தெருவுக்குத் தெரு நாடகங்கள் நடத்தப் படவில்லை. அதி காலை வேளைகளில் காவிரிக் கரையில் நடன மங்கையரின் பாதச் சிலம்பொலி கேட்கவும் இல்லை. தெருவில் நடந்து சென்ற நகர மாந்தர் எல்லோரும் சோகம் நிறைந்த முகத்துடனே தோன்றினார்கள். அவர்களின் முகத்தைப் போலவே சுட்டியின் மனத்திலும் அன்று கவலையே ஆதிக்கம் செலுத்தியது. வானத்தில் அடுக்கடுக்காக உலாவிய முகில்கள் போல அவன் மனதிலும் பல எண்ணங்கள் பலப்பல படைகளாக வந்து போய்க் கொண்டிருந்தன. இரண்டாம் சாமம் நிறைவு பெற்றுக் கொண்டிருந்த நேரத்திலும் அவன் தூக்கம் பிடிக்காமல் வானத்தை வெறித்தவாறு படுத்துக் கிடந்தான்.

ஆம்! மகா சக்கரவர்த்தியான ராஜ ராஜர், சோழ மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருள்மொழி வர்மர், அப்போது அரண்மனைக்குள்ளே மரணத் தறுவாயில் இருந்தார்!

கடந்த பல மாதங்களாகவே சக்கரவர்த்திகளின் உடல்நலம் சீர்கெட்டிருந்தது. இராஜ வைத்தியர்கள் தங்களால் முடிந்ததை எல்லாம் செய்தும் அவரின் தேக நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதை விட முக்கியமாக, தமது காலம் வந்துவிட்டது என்று சக்கரவர்த்தியே கருதியதாகத் தோன்றியது. கடந்த இரு வருடங்களாக அவர் இளவரசர் மதுராந்தகத் தேவர் கையில் சாம்ராஜ்யத்தை ஆளும் பொறுப்பை ஒப்படைத்து விட்டிருந்தார். கல்வெட்டு சாசனங்களைத் தமது பெயரில் வழங்கும் உரிமையையும் அவருக்கு அளித்திருந்தார். ஆனாலும். இளவரசர் மதுராந்தகத் தேவர் உட்படக் குடிகள் அனைவருக்குமே, ராஜராஜத் தேவர் தவிர இன்னொருவரைச் சக்கரவர்த்தியாக நினைக்கவும் முடியாமல் இருந்தது. மாமன்னர் தெய்வாம்சம் பொருந்தியவர் என்று சாதாரண மக்களில் அநேகர் நம்பினார்கள். தம் கண்களுக்கு முன்னால்அவர் பூத உடலை நீத்துப் புகழ் உடல் அடைவதைப் பார்ப்பதற்கு யாரும் தயாராக இருக்கவில்லை.

உடையார் மேல் சுட்டி விசேடப் பிரேமை கொண்டிருந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. சந்திர லேகை எனும் சிற்றூரிலே முத்தரையர் எனும் சிற்றரசர் குலத்து வாரிசாக அவன் பிறந்தான். பல்லவ சக்கரவர்த்திகள் காலத்திலே முத்தரையர்கள் செல்வாக்கு மிகுந்த சிற்றரசர்களாக இருந்ததோடு சுதந்திரக் குறுநில மன்னர்களாகவும் சிலசமயம் இருந்தார்கள். பல்லவர்களுக்கு முன்பு தமிழ் நாட்டை ஆண்ட களப்பிரர் வம்சத்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டார்கர். தனஞ்சயர் என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்த அவர்கள் கீழைச் சோழ நாட்டில் காவிரி நதி தீரத்தில் தனஞ்சய ஊர் எனும் நகரை நிறுவினார்கள். பின்னாளில் திரிபடைந்து தஞ்சாவூர் என்று வழங்கிய அந்த நகரம் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வர்த்தகப் பட்டினமாகவும் வலுவுள்ள கோட்டையாகவும் அபிவிருத்தி அடைந்தது. சோழர்களின் துறைமுகப் பட்டினமான பூம்புகார் பொலிவிழந்து சிற்றூராகப் போன போது, சோழர் தலைநகரமான உறையூரின் புகழ் மங்கிய போது, அடிமைப் பட்டுக் கிடந்த சோழ நாட்டின் பிரதான நகரமாகத் தஞ்சாவூர் அபிவிருத்தி அடைந்தது.

ஆசிரியர் நக்கன் சாத்தனாரின் குரல் மந்திர ஸ்தாயியில் தாள லயத்துடன் ஒலித்தது. “அரசர்களாக உள்ளவர்கள் வலிமை மிகுந்தவர்களிடம் மட்டுமல்ல… வலிமை குறைந்தவர்களிடமும் சிநேகிதத்துடன் இருக்கவேண்டும். ஆபத்துக் காலத்தில் யாருடைய நட்பு உதவும் என்று சொல்ல முடியாது. சிங்கத்தை எலி காப்பாற்றிய கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.”

சோழர் குலத்தின் புகழை நிலை நிறுத்த வந்த விஜயாலய சோழருக்குப் பிரதான தடையாக இருந்தது தஞ்சாவூரில் முத்தரையர்களின் பிரசன்னம். அஞ்சாத நெஞ்சம் படைத்த பெரும்பிடுகு முத்தரையரைத் தமது பரம வைரியாக விஜயாலயர் கருதினார். காஞ்சிச் சக்கரவர்த்திக்கன்றிக் குறுநில மன்னரான தஞ்சையர் கோனுக்கும் கோழியர் கோன் பயந்து வாழ வேண்டி இருந்தது அவரது வன்மத்தை வளர்த்தது. பல்லவ சக்கரவர்த்தி குறுக்கே வர மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பின் இறுதியாக ஒருநாள் விஜயாலயர் போர் தொடுத்தார். முத்தரையர் வசம் இருந்த தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்களின் துணையுடன் கைப் பற்றினார். அன்றிலிருந்து முத்தரையர்களின் புகழ் மங்கியது. பல்லவ அபராஜித வர்மனை முறியடித்து ஆதித்த சோழன் சக்கரவர்த்தி ஸ்தானத்திற்கு உயர்ந்த பின் முத்தரையர் நிலை மிகப் பராதீனமடைந்தது. தமக்குக் கீழே குறுநில மன்னர்களாக இருந்தாலும் முத்தரையர்களைச் சோழர்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்கினார்கள். விஜயாலய சோழரைக் கண்டதும் பெரும்பிடுகு முத்தரையன் என்ற எலி பீதி கொண்டு மாண்டு மறைந்தது என்று கவிகள் கவி புனைந்தார்கள். முத்தரையர்களும் தமது பங்கிற்குச் சோழர்களின் எதிரிகளான பாண்டியர்களுடன் சேர முயன்றாகள். இதனால் சோழர்களின் விரோதம் முற்றியது.

சுட்டியின் தந்தை காலத்தில் முத்தரையர் குடும்பத்திற்குக் கடைசி இடி வீழ்ந்தது. சுட்டியின் சிறிய தந்தை இரவோடு இரவாகச் சந்திர லேகையை விட்டு நீங்கிப் பாண்டிய மன்னரோடு சென்று சேர்ந்து கொண்டார். இதனால் கொலு மண்டபத்தில் வைத்தே சுட்டியின் தந்தை மீது மற்றச் சிற்றரசர்கள் காறி உமிழ்ந்தார்கள். “எலியின் வம்சத்தில் வந்த எலி பாலைவன வளையில் ஒளிந்து கொள்ளப் போயிருக்கிறது” என்று நிந்தித்தார்கள். அவமானம் பொறுக்க முடியாத சுட்டியின் தந்தை அரையர் என்ற தமது பட்டப் பெயரை நீக்கிக் கொண்டு சாதாரண பொதுமகனாக வாழத் தொடங்கினார். அதன் பிறகு அதிக காலம் அவர் உயிரோடிருக்கவில்லை.

“மிகப் பசியோடு இருந்த சிங்கம் எலியை அறைந்து கொல்ல முயன்ற வேளையில் அந்த எலியானது, “மகாராஜா, என்னை விட்டு விடுங்கள்! உங்கள் பசிக்கு நான் தகுந்தவன் அல்ல. என்னை உயிரோடு விட்டு விட்டீர்கள் ஆனால் என்றாவது ஒருநாள் என் உதவி உங்களுக்குக் கிடைக்கும்” என்று வேண்டிக் கொண்டது. சிங்கமும் அதற்கு இணங்கித் தன் வழியே சென்றது”

சுட்டி பிறந்தபோது அவர் பெற்றோர்கள் அவனுக்கு வீமசேன முத்தரையன் என்று நாம கரணம் செய்தார்கள். “மாறன்” அல்லது “சாத்தன்” என்ற பட்டப் பெயரைத் தரித்துக் கொள்ளும் முத்தரையர் வம்ச வழக்கத்திற்கு அமைய “வீமன் சாத்தன்” என்றும் சுட்டி அழைக்கப் பட்டான். சுட்டியின் தந்தை இறந்த பிறகு அவன் குடும்பத்தின் புகழ் முற்றாக அழிந்தது. சுட்டியின் தாயாரும் சில வருடங்களின் தந்தையைத் தொடர்ந்து செல்லவே ஐந்து வயதில் சுட்டி அநாதை ஆனான். ஊர் மக்களின் பழிப்புக்கும் தூற்றலுக்கும் இலக்காகி வளர்ந்த அந்தப் பாலகன் முத்தரைய வம்சத்தின் சின்னங்களைத் தன் பெயரிலே தாங்க விரும்பவில்லை. சீக்கிரத்தில் தன பெயரை வெறுமனே “வீமன்” என்று தெரிவித்துக் கொள்ளத் தொடங்கினான்.

சுட்டியின் ஒன்பதாவது வயதிலே அவனது வாழ்க்கையை மாற்றி அமைத்த இன்னுமொரு சம்பவம் நடந்தது. சிறுவயதில் இருந்தே ஆயுதப் பயிற்சியில் மிகுந்த திறமையும் ஆர்வமும் கொண்டிருந்த சுட்டி சந்திர லேகையில் இருந்த மற்றப் பையன்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாட்போருக்கு அழைத்து அவர்களைத் தோற்கடித்து வந்தான். ஒரு கோடை நாள் மத்தியான வேளையிலே வீதி முனை ஒன்றில் அவனை ஐந்து பையன்கள் வளைத்துக் கொண்டார்கள். சுட்டியை வாட்போருக்கு அழைத்த அவர்கள் அவனைத் துரோகிகளின் குடும்பத்தில் பிறந்தவன் என்றும் எலி என்றும் ஏசியதுடன் அவனைக் காயப் படுத்துவதில் நாட்டம் உள்ளவர்களாகத் தோன்றினார்கள். சுட்டி அவர்களுடன் தீரத்தோடு போராடினாலும் நேரம் ஆக ஆகக் களைப்படைந்து வந்தான். விதி வசத்தால் அன்று மாறு வேடம் புனைந்து ஊர் சுற்றி வந்த சக்கரவர்த்தியான ராஜராஜத் தேவர் இந்தக் காட்சியைக் கண்டார். பால்மணம் மாறாத பாலகனின் வாட்பயிட்சியையும் வீரத்தையும் கண்டு வியப்படைந்த அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மூலம் அவன் குடும்ப வரலாற்றையும் அவன் தற்போது தனது சிறிய தாயாருடன் வளர்கிறான் என்பதையும் அறிந்து கொண்டார். அவனைத் தம்மோடு தஞ்சைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார். இளம் வீமன் சாத்தனைப் பார்த்து ‘அடே சுட்டிப் பையா!
இங்கே வா!” என்று ராஜ ராஜ உடையார் அழைத்த படியால் அவன் பெயர் அன்றிலிருந்து சுட்டி ஆயிற்று. சுட்டியும் தலை நகர வாசி ஆனான்.

“வலையில் சிங்கம் அகப்பட்டிருந்ததைக் கண்ட எலி, தனது பற்களால் வலையை வெட்டித் தள்ளிச் சிங்கத்தை விடுவித்தது. சிங்கமும் எலியைப் புகழ்ந்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. சிங்கமும் எலியும் அதன்பிறகு மிகுந்த நட்புடன் வாழ்ந்து வந்தன”.

தஞ்சை புரியிலே சுட்டி மாமன்னரின் பாதுகாப்பில் வளர்ந்தான். சிற்றரசர் குலப் பிள்ளைகளின் கூட்டுறவும் நட்பும் அவனுக்குக் கிடைத்தன. முதன் மந்திரி கிருஷ்ணன் ராமனின் மகனான அருள்மொழி அவனுக்கு இணை பிரியாத சிநேகிதன் ஆனதுடன் மற்றப் பிள்ளைகளின் புண்படுத்தும் சொற்களில் இருந்து அவனைப் பாது காத்து வந்தான். வயது ஏற ஏற, ஆயுதப் பயிற்சியில் சுட்டிக்கிருந்த திறமையும், அவனது நுண்ணறிவும், கூரிய ஞாபக சக்தியும், அவதான சக்தியும் அவனது ஆசிரியர்கள் யாவரையும் வியக்கும் படி செய்தன. சுட்டியும் அருள்மொழியும் சம்புவரையர் மகனான மாறனும் காந்தளூர்ச் சாலைக் கடிகைக்குச் சென்று படைத் தொழில் நுணுக்கங்களையும் அரசியல் நெழிவு சுழிவுகளையும் கற்றுத் தேர்ந்தார்கள். தஞ்சை அரண்மனையிலும் சோழ நாட்டின் எதிர்காலச் சொத்தான அந்த இளங்குமாரர்களுக்குச் சிறந்த ஆசிரியர்களை அமைத்து இலக்கிய இலக்கணங்களையும் பாஷைகளையும் அரச நீதியையும் கற்று கொடுப்பதற்கு சக்கரவர்த்தியும் முதன்மந்திரி கிருஷ்ணன் ராமனும் ஏற்பாடு செய்தார்கள். இப்படித் தஞ்சையிலே பாடங்கள் கற்று வரும்போது தான் சுட்டியின் வாழ்க்கையிலே தாங்கவொண்ணா இன்பத்தையும் பின்பு வேதனையையும் அளித்த அந்தச் சம்பவம் நடந்தது.

தாமரை மலரின் மென்மையும், காட்டுத் தீயின் ஜொலிப்பும், மானின் பார்வையும், மயங்க வைக்கும் கம்பீரமும் அந்தப் பெண்ணிடம் இருந்தன. தோகை விரித்தாடும் மயில் போல எந்தக் கவலையும் இன்றி எதேச்சையாக நடமாடிய அந்தப் பெண்ணின் எழில் சுட்டியின் இளநெஞ்சில் அவனை அறியாமலே நுழைந்தது. தன்னுடைய நிலையிலே தான் மனத்தினாலும் நினைக்கத் தகாதவள் அவள் என்று தெரிந்தும் கூட அவளது கண் வேல்களின் தாக்குதலால் சுட்டி தனது நெஞ்சிலே காயங்கள் பட்டவன் ஆனான். அவன் பாடம் கேட்ட வகுப்புகளுக்குச் சில சமயங்களில், அத்தி பூத்தாற்போல அவள் வந்தாள். அவள் வந்திருக்கின்ற வேளைகளில் வகுப்பிற்கே ஒரு புதிய களை வந்ததாகச் சுட்டிக்குத் தோன்றியது. முதலில் அவள் இயல்பாக அவனோடு பேசிப் பழகினாலும் பருவ உந்துதலால் தன்னை அறியாமலே தன நெஞ்சை அவள் மலர்ப் பாதங்களின் பின்னே போக விட்ட சுட்டி காலம் போகப் போக நிராகரிப்பையே அவளது கண்களில் கண்டான்.

நக்கன் சாத்தனாரின் குரல் ஓய்ந்ததோ இல்லையோ வகுப்பில் ஒரு பெண்ணின் சிரிப்பொலி எழுந்தது. சாதாரணமாகக் கிண்கிணி நாதமாக ஒலித்திருக்கக் கூடிய அந்தச் சத்தம் அன்று ஏனோ நாராசமாகச் சுட்டியின் காதுகளில் ஒலித்தது. வலிந்து உருவாக்கிக் கொண்ட அந்தச் சிரிப்பில் ஏளனமும் பரிகாசமும் கலந்திருந்ததுடன், ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புவதாகவும் அந்தச் சிரிப்பு ஒலித்தது. “எலிக்கும் அரிக்கும் சினேகிதமா? ஒன்றாக வாழ்ந்து வந்தனவா? இது சாத்தியம் தானா, சாத்தனாரே?” என்று கேட்டு விட்டு அவன் மனங்கொண்ட தேவி மீண்டும் சிரித்தாள்.

************************************************************

நடு நிசி ஆகி விட்டிருந்தது. வானத்திலே பவனி வந்து கொண்டிருந்த கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை இமை கொட்டாது சுட்டியின் கண்கள் வெறித்தன.

பெரும்பிடுகு முத்தரையன் என்ற எலி பீதி கொண்டு மாண்டு மறைந்தது………………….

எலியின் வம்சத்தில் வந்த எலி………………..

எலிக்கும் அரிக்கும் உறவா?…………….

எலிக்கும் அரிக்கும் சிநேகிதம் இருக்க முடியாது தான். ஆனால் எலிக்கும் இதயம் வலிக்கும். இதோ வலிக்கிறதே!

நக்கன் சாத்தனாரின் அந்த வகுப்பு நடந்து பல வருஷங்கள் ஆகி விட்டிருந்தன. இந்தக் காலப் பகுதியில் சுட்டி சோழர் படைகளின் வளர்ந்து வரும் இளம் சேனாதிபதிகளில் ஒருவன் என்ற நிலையை அடைந்திருந்தான். பல போர்களில் முன்னணியில் நின்று போர் செய்து மாமன்னரினதும் தண்ட நாயகர்களினதும் நன் மதிப்பைப் பெற்றிருந்தான். ஏளனம் நிறைந்த அந்தச் சிரிப்பொலி மட்டும் அவன் காதுகளை விட்டுப் போகவில்லை. அவன் இதயமும் அதன் பின்பு அவனை விட்டு யாரிடமும் போகவில்லை.

இப்போது… மாமன்னர், ராஜராஜர், சோழ நாட்டுக்கெல்லாம் உடையார், மரணப் படுக்கையில் இருக்கிறார்.

தேசத்தில் என்ன நடக்கும்? அடுத்த பட்டத்திற்கு யார் வருவார்கள் என்பது பற்றி எந்தக் குழப்பமும் ஏற்பட இடம் இருக்கவில்லை. இளவரசர் மதுராந்தகர் ஏற்கனவே சாம்ராஜ்ய அதிகாரங்களை பொறுப்பேற்றிருந்தார். இருந்தாலும், ராஜாராஜரின் மறைவால் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படத் தான் செய்யும். அவர் இருந்தாலே அரச அதிகாரிகளும் ஊழியர்களும் பம்பரமாக வேலை செய்வார்கள். அவரது ஆளுமையையும் தேஜஸ்சையும் பிரதியீடு செய்வது எளிதா? வடக்கே சாளுக்கியர்கள் சோழ சாம்ராஜ்யத்தின் மேல் பாயச் சமயம் பார்த்திருக்கிறார்கள். தெற்கே இருந்தும் ஆபத்துகள் வருமா? தந்தைக்குத் தந்தையாக இருந்த ராஜராஜர் போன பின்பு அனாதையான தன் நிலை என்ன ஆகும்?

சுட்டி அரண்மனைப் பக்கம் நோக்கினான். சற்று முன்பு நிசப்தமே உருவாக இருந்த அரண்மனையில் இப்போது சற்றுச் சல சலப்பு ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. தீபங்கள், பந்தங்கள் ஆகியவற்றின் நடமாட்டத்துடன் மெல்லிய பேச்சொலிகளும் கேட்டன. சுட்டி புல்லைத் தட்டிக் கொண்டு எழுந்தான். அரண்மனையை நோக்கி நடந்தான்.

Historical Notes about the one-shots

A number of readers who read my series of one-shots have given feedback to include more historical details. While I have certainly given a lot of thought about the history and times in which this plot is being developed, I have avoided explicitly giving too much historical detail for the following reason. These one shots – as I have been repeatedly saying – are not a novel yet, and merely prequels, which I write to gauge the reaction from the readers, arouse their appetite, and most importantly, to help me to visualize the times in which the story is set. Therefore I do not want to spoil it for the reader by explicitly including too much historical detail. I instead prefer to give hints and let the reader guess about the meaning of these hints in terms of history. This style will change if and when I start writing this as a proper novel.

Meanwhile, for those who are interested in history, here are some teasers. By trying to answer these, you might be able to glimpse some historical facts behind this developing plot.

1. In shot I, a comet appears in the sky. It is mentioned that these are after Chundara Chola’s times, and also that this particular comet appears once in every thousand mooncycles. What comet could this be? Consequently, in which year this shot is taking place?

2. What is the name of the place in which the second shot occurs? It seems to be some sort of academy in the Chera country. Where is it? What is the significance of the line “Thirumakalum iru nila madanthaiyum”? Who is being referred to as “Udaiyar”?

3. The Arulmozhi in shots 1,2, and 5 is a historical character. Form shot 5, it is obvious however, that he is not Raja rajan. Besides, it is mentioned that he is of Brahmin appearance. Who is he?

4. Chuddy also is a historical character, but the name Chuddy is not the name by which he is known in history. He is known only by a title, which could not have been his real name. He seems a close friend of the younger arulmozhi. He is, in fact, going to be our hero. who is he?

5. Who is the ‘Mathuranthaka Thevar’ mentioned in shot 5? He is also a very famous person, but known in history by his titles….

6. ‘Koorjara’ is present day Gujrat. What could be the message that the Gujrati King sent to Raja raja? What is the war cry of the horseman in his ‘original language’, which has been translated as “ஆண்டவனே பெரியவன். இறைவனுக்கு வெற்றி உண்டாகட்டும்!”?

7. Who is the foreign prince at Raja rajan’s court? He seems to have an interest in Kunthavai the princes…..

In trying to answer these questions, you may able to find some historical details, and have some guesses about how the story is going to pan out 🙂

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published. Required fields are marked *