தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-I

ஓம் ஓம் ஓம் ……

கன்னங்கரேலென்ற காரிருள். எதையும் காண முடியா ஒரு தனிப் பேரிருள். ஊழி தோறும் நின்று வந்த அந்த ஒரு தனிப் பேரிருளை ஊடறுத்து ஒரு தனிப் பேரொலி. ஓம் … ஓம் …. ஓம்.

ஒரே ஒரு அணு உடைந்து தகர்கிறது. காணும் திசை எங்கும் சக்தி விரிகிறது. சிவத்தில் இருந்து சக்தி. எங்கும் சக்தியின் நடனம். சக்தியில் இருந்து சிவம். எங்கும் சிவம், சிவம், சிவம்…. எல்லாம் சிவமயம்.

ஓம் ஓம் ஓம் ஓம் … தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஓம் ஓம் ஓம் ஓம் … தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஓம் ஓம் ஓம் ஓம் … தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஓம் ஓம் ஓம் ஓம் … தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஓம் ஓம் ஓம் ஓம் …

நின்றது ஒரு அணு தனியாய் – மிக
நீண்டதோர் வெறுமையின் நுனியாய்
மெல்லத் தனி அணு நின்று சுழன்றிட
வெகு வெகு விரைவென வேகம் எடுத்திட
விண்டது பல பல துகளாய்.

உள்ளில் உறங்கிய சக்தி – கணக்
கொன்றும் இலாப் பெரும் சக்தி
வெள்ளமெனப் பெருகிப் பல சார்பினில்
மின்னும் அனற் பெரும் ஆறென ஓடியே
துள்ளித் திரிந்தது பலவாய்.

பச்சை நிறப் பெரும் தீவு – செம்
பருத்தி நிறத்தொரு கோளம்
இச்சைப் படி பெரும் சக்தி அலைந்திட
எங்கும் எங்கும் புதுக் கோலம் விளைந்திடத்
துச்சமடைந்தது ராவு.

ஊதா நிறக் கழுகொன்று – மிக
ஊதிய அப்பங்கள் ரண்டு
காதை நிமிர்த்திய மாத்தலை ஒன்றுடன்
காணும் திசையெங்கும் பற்பல ரத்தினம்
போதுமெனச் சிதறுண்டு.

கண்கள் திறந்தன விண்மீன் – ஒளி
காலி எழுந்தன கோடி.
பொன்னொடு வெள்ளியும் முத்தொடு ரத்தினம்
போலப் பலபல கோடி ஒளிர்ந்திட
விண்ணும் அடைந்தது நீலம்

கோள்கள் அனற்பிழம்பாக – மீன்
சுற்றி வெளியெங்கும் போக
நாள்கள் கடந்திட ஆறிக் குளிர்ந்தன
நல்ல வளி முகில் ஆடை அணிந்தன
தாமும் பல நிறம் ஆக.

இன்னும் அனல் குளிர்வு எய்த – வளி
எங்கும் கன அணு மிஞ்ச
கண்கள் களித்திடும் வண்ணம் ஒளிர்ந்தது
விண்ணின் நிறம் தனைத் தன்னில் அடக்கிய (து)
எங்கும் நிறைந்தது தண்ணீர்!

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.