நாட்டுப் பாட்டு – 3

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.
நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை.

ஒப்பிடுதல் என்ற பாம்பு சுற்றித் திரியுது.
உனது நெஞ்சில் தனது நஞ்சைக் கக்கி விடுகுது.
எப்போதும் பேராசை என்ற முதலை வாழுது.
இன்னொருவன் வாழ்வைப் பார்த்து ஏங்க வைக்குது.

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.
நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை.

அழுக்காறுந்தன் நெஞ்சக் கிணற்றில் வந்து விழுகுது.
ஆசை கோபம் தீச்சொல் என்ற பாசி படருது.
வழுக்கி நீயும் விழுந்து விட்டால் மீட்சி இல்லையே.
வாழ்க்கையிலே மேலே வர வழிகள் இல்லையே.

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.
நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை.

கனக்கக் காசு டீவி லப்டாப் உடைகள் காவிக்கொண்டு
கனகம்மாவின் தமையன் நேற்றுக் கனடாவாலே வந்தான்
எனக்குக் கொடுக்க எவரும் இல்லை என்று ரோஜா நைந்து
இருக்க விடாமல் கணவன் தன்னை இழுத்துப் பேசுகின்றாள்

மாடி வீட்டில் வாழுகின்ற மாவிலங்கர் மகனோ
மதிப்பதில்லைப் புத்தகத்தை! மதிப்பு மிக்க புள்ளி
கோடிப் பக்கம் குடிசை போட்ட குப்பன் மைந்தன் பெற்றான்
குமுறுகின்றார் மாவிலங்கர் கொதிக்கும் நெஞ்சினோடு

மதிப்பு மிக்க வங்கி வேலை மழலை கொஞ்சும் பிள்ளை
வடிவு மிக்க மனைவியோடு வாழ்க்கை பெற்றும் மாறாக்
குதிப்பு மிக்க மனத்தினாலே கொள்ளையிட்டான் காசை
குமரன் இன்று வேலை போகக் குறுகிக் கோட்டில் நின்றான்

மூலை வீட்டுப் பாலையாவும் மோட்டார் சைக்கிள் வாங்க
மூளை கண்டு கொதித்ததாலே முத்துப்பிள்ளை ராசன்
வாலைக் கிளப்பிக் கொண்டு சென்று வாங்கினான் ஓர் பென்சை.
வழியும் இல்லை லீஸைக் கட்ட. குடித்து விட்டான் நஞ்சை.

வழுக்கி அழுக்கு ஆற்றில் வீழ்ந்தால் நன்மையில்லை. மற்றோர்
வாழ நீயும் தொண்டை ஆற்றில் தீமை ஏதும் இல்லை.
இழப்பதற்கு எதுவும் இல்லை; பெறுவதற்கு உலகம்
இருக்கு; உந்தன் பாதை தன்னில் இன்பத்தோடு செல்வாய்!

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை!
நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.