கங்கை கொண்ட தளபதிகள்

கங்கை கொண்ட தளபதிகள்

ஒரு படை போர்க்களத்தில் அடையும் வெற்றிகளுக்கு அதன் முதலாம் நிலைத் தலைமைத்துவம் (அதாவது அரசியல் தலைவர்கள் அல்லது மன்னர்கள்) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு இரண்டாம் நிலைத் தலைமைத் துவமும் முக்கியம் (அதாவது தளபதிகள், ஜெனரல்கள்) என்பது அனைவரும் அறிந்ததே. நவீன காலத்தில் உலகின் தலைவிதியைத் தீர்மானித்த யுத்தங்களில் பங்குபற்றிய தளபதிகள் பொதுவாக அறியப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். உதாரணமாக இரண்டாம் உலகயுத்தத்தை எடுத்துக்கொண்டால் ஜெர்மனியின் ரொம்மேல், குடாரியன், ரன்ஸ்டட், சோவியத்தின் சுக்கோவ், பிரிட்டனின் மோண்ட் கோமரி, அமெரிக்காவின் பட்டன், மக் ஆர்தர், இவர்களைப் பற்றியெலாம் எல்லோரும் அறிந்திருப்பார்கள். மன்னர் காலப்போர்களில் மன்னர்களின் தனிப்பட்ட ஆளுமையை முன்னிறுத்துவதும் புகழ் பாடுவதும் முக்கியமாக இருந்ததால் தளபதிகளின் பெயர்கள் அவ்வளவு தூரம் முன்னிலைப்படுத்தப் படவில்லை.

இற்றைவரை, தமிழர்களின் ஆவணப்படுத்தப்பட்ட போரியல் சாதனைகளின் உச்சமாகவும், தமிழர்களின் சாம்ராஜ்ஜிய விரிவாக்கத்தின் உயர்புள்ளியாகவும் (high watermark) கருதப்படக்கூடியவை சோழர்களின் கங்கை, கடாரப் படையெடுப்புகள். கங்கை கொண்ட சோழன் யாரென்றால் ராஜேந்திர சோழனென்று அடிப்படை வரலாறு தெரிந்த தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். ஆனால் இராஜேந்திர சோழன் கங்கை வரை வெல்வதற்கு, பொதுவாக தமிழர்கள் கற்பனை செய்து கொள்வதுபோல, அவனது தனிப்பட்ட ஆற்றலும் அவனது படைகளின் வீரமும் மட்டும் காரணங்களல்ல. இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் நினைப்பதுபோல, அவனது ஆட்பலமும் தனியே காரணமல்ல. சோழர்களின் சிறந்த இராஜதந்திரம், போரியல் உபாயங்கள், ஆயுத மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை (dominance ), இவற்றோடு
ஆற்றலும் அனுபவமும் மிகப்பெற்ற தளபதிகள் இருந்ததும் காரணங்களாகும். இந்தத் தளபதிகளைப்பற்றி இன்று எமக்குத் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் சோழர்களல்ல. அன்று மன்னராட்சி நடைபெற்ற வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சோழர்கள் தங்கள் தளபதிகளுக்கு அதிகமான முக்கியத்துவமே கொடுத்து கல்வெட்டு சாசனங்களில் பொறித்திருக்கிறார்கள். அவற்றைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது எமது கடமை. எனவே, முதலாம் ராஜராஜன் / முதலாம் ராஜேந்தரன் காலத்தில் வாழ்ந்த முக்கியத்
தளபதிகளைப்பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

வல்லவரையன் வந்தியத் தேவன்

பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகனான இவனைப்பற்றிப் பல பேர் நிறையவே கேள்விப்பட்டிருந்தாலும், கல்கியின் வந்தியத்தேவனைப்பற்றிய பாத்திரப் படைப்பானது பெரும்பாலும் கற்பனையையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும். ஆனாலும், வந்தியத் தேவன் என்றொரு சிற்றரசன் வாழ்ந்ததும் அவன் சோழர் படைகளின் முக்கிய தளபதியாக இருந்ததும் வரலாற்று உண்மைகள். வந்தியத்தேவன் வாணர் அல்லது பாணர் குலத்தவன் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். வாணர்கள் வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பேரரசொன்றை ஆண்டவர்கள் என்பதும், முதலாம் பராந்தகன் காலம்வரை சோழர்களுக்கு எதிராக இருந்தவர்கள் என்பதும் வரலாற்று உண்மைகள். எனவே வந்தியத் தேவன் சோழர் படையில் சடுதியாக மிக உயர்ந்த பதவியை அடைந்தது ஆச்சரியமே. இதை வைத்துத் தான் கல்கி அனாதையாக வந்த வந்தியத்தேவன், குந்தவையைக் காதலித்து மணந்து அதனாலும் அவனது சொந்த ஆற்றலாலும் சோழர்களின் நம்பிக்கையைப் பெற்றதாகக் கற்பனை செய்துள்ளார். வந்தியத்தேவன் இராஜராஜனின் தமக்கையான குந்தவையை மணந்தது வரலாற்று உண்மை. வந்தியத்தேவன், இராஜராஜனின் தமைக்கையான குந்தவையை மணந்தவனாவான். இதற்கு, தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் “இராஜராஜத் தேவர் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்” எனும் கல்வெட்டு ஆதாரமாகும். எனவே வந்தியத்தேவன், இராஜேந்திரனுக்கு மாமனாவான். இராஜேந்திரன் காலத்தில் ஓரளவு வயதில் முதிர்ந்தவனாகிய இவன் சாமந்த நாயகனாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. அதாவது இவன் தளபதிகள், அமைச்சர்களுக்கு முதல்வனாவான். ஒருவழியில் இது பேரரசருக்கு அடுத்த பதவியாகும். வாணர் குலம் சோழச் சிற்றரசுகளுக்குள் பிரதானமானதல்ல என்றாலும் தனிப்பட் ட ஆற்றலாலும், மணவினைத் தொடர்பாலும், வயது, அனுபவ முதிர்ச்சியாலும் இராஜேந்திரன் காலத்தில் வந்தியத்தேவன் இந்த ஸ்தானத்தை அடைந்திருக்க வேண்டும். கங்கைப்படையெடுப்பில் வந்தியத்தேவன் பங்குபற்றியிருக்கலாம். அப்படிப்பங்கு பற்றியிருந்தால் அவனது பங்களிப்பு தந்திரோபாய வழிகாட்டல் என்ற மட்டத்திலேயே இருந்திருக்க வேண்டும். முன்னணிப்படைகளை அவன் நடத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை.

அரையன் இராஜராஜன்

கங்கை வரை சோழர் படைகளை நடத்திச் சென்று வெற்றி கொண்டதால் தமிழர்கள் வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற, ஒப்பாரும் மிக்காரும் அற்ற தளபதி அரையன் ராஜராஜன். ஆனால், இவனது சொந்த வரலாறு குழப்பமும் மர்மமும் மிகுந்ததாக இருக்கிறது. இவனது பட்டப்பெயர்கள் விக்கிரமச் சோழியவரையன், வேல்பிடி வீமன் முதலியன. இவனது பெயரிலிருந்து இவன் எந்தச் சிற்றரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. “இராஜராஜன்” என்பது இவன் இராஜராஜரின்கீழ் சேவைசெய்தவன் என்பதற்கு அடையாளமாகலாம். பொதுவாக அக்காலத்தில் சோழர் தளபதிகள் மட்டுமல்ல முதலமைச்சர்கள், சிற்பிகள், ஏன் படைப்பிரிவுகள் கூட தாம் சேவை செய்த அரசரின் பெயரைக் கவுரவப்பட்டமாகச் சூட்டிக்கொள்ளுதல் வழக்கமே. ஆனால், பேரின் மற்றைய பகுதியில் “பழுவேட்டரையன், சம்புவரையன்” என்று வராமல் வெறுமனே அரையன் என்று இருக்கிறது. இவனது தோற்றுவாயைப்பற்றி நான்கு  வெவ்வேறு கோட்பாடுகள் சொல்லலாம். அவற்றை, அவற்றின் சாத்தியப்பாடுகளுடன் கீழே தருகிறேன்.

— இவன் முத்தரைய வம்சத்தைச் சேர்ந்தவன்.

இது சில வரலாற்றாசிரியர்கள் கருத்து. எனக்கும் இது சாத்தியம் என்று படுகிறது. ஏனெனில், வாணர் போலவே முத்தரையரும் சோழர்களுக்குப் பரம்பரைப்பகைவர். விஜயாலயன் முத்தரையரிடம் இருந்து தஞ்சைக் கோட்டையைக் கைப்பற்றினான். அதன்பிறகு முத்தரையர் சிற்றரசு தலையெடுக்க முடியாதபடி அழிந்து விட்டது. எனவே முத்தரைய வம்சத்தில் வந்த ஒருவன் சோழர்களிடம் பணி செய்வதை நடைமுறைச் சாத்தியமான ஒரு மாற்றாக ஏற்றிருக்க முடியும். ஆனால், “முத்தரையன்” என்று சொல்லிக் கொள்வதில் அவன் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எனவே தன் குலத்தைச் சொல்லாமல் வெறுமனே அரச குலத்தவன் என்று பொருள்படும் “அரையன்” என்று பாவித்திருக்கலாம். இவனது விருதுப்பெயர்கள் சிலவும் முத்தரையர் விருதுகளுடன் ஒத்துப்போகின்றன.

— இவனும் ஜெயம் கொண்ட சோழ மூவேந்த வேளானும் ஒருவரே

இப்படியும் சில வரலாற்றாசிரியர்கள் சொல்லி உள்ளனர். கொடும்பாளூர் வம்சம் சோழநாட்டின் பிரதான சிற்றரசுகளுள் ஒன்று. சோழர்களுடன் நெருக்கமான திருமண உறவுகளும் கொண்டது. எனவே, கொடும்பாளூர்த் தளபதிக்கு மிக முக்கியமான கங்கைப் படையெடுப்புத் தலைமை அளிக்கப்படச் சாத்தியங்கள் அதிகம். ஆனால், கொடும்பாளூர்ச் சிற்றரசர் எவரும் “வேளான்” என்ற சொல்லை வெறெந்தக் கல்வெட்டிலும் விட்டுவிடவில்லை. எனவே அவர்களது குலப்பெயர் இங்கே குறிப்பிடப் படாமல் விடுபட சாத்தியங்கள் குறைவு.

— இவன் அரச குலத்தைச் சேராத சாதாரணப் பொதுமகன்

இது அதிகம் சாத்தியமில்லை. ஏனெனில், சிற்றசர் குலத்தைச் சாராத சோழ தளபதிகள் அதிகமில்லை. ஆனால், அறவே சாத்தியமில்லை என்று கூற முடியாது. உதாரணமாக, நரசிம்மவர்மனின் வாதாபி கொண்ட தளபதியான பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்) வீர வகுப்பைச் சேர்ந்தவரானாலும் சிற்றரசர் குலத்தவரல்ல.

— இவன் சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவன்

இவன் ராஜேந்தரனின் சகோதரனாகவோ மகனாகவோ இருக்கலாம். அப்படி இருப்பின், இப்படியான முக்கியமான படைத்தலைமை இவனுக்கு வழங்கப்படச் சாத்தியங்கள் அதிகம். ஆனால், அப்படி இருக்கும் பட்சத்தில் கல்வெட்டுகளில் அந்த உறவுமுறை குறிப்பிடாமல் விடப்படுவதற்குச் சாத்தியங்கள் மிகக் குறைவு.

எப்படியிருந்தாலும், அரையன் இராஜராஜன் ராஜேந்திரனின் காலத்தில் வட திசை மாதண்ட நாயகனாக இருந்தான். வரலாற்றுப்பெருமை மிக்க கங்கைப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கிச் சென்றான். முதலில் கீழைச் சாளுக்கிய நாட்டுக்கு (வேங்கி ) படையெடுத்துச் சென்று அங்கே ராஜராஜ நரேந்திரன் என்னும் சோழர்களுக்குச் சார்பான இளவரசனை அரசனாக்கினான். பிறகு வடதிசையில் படையெடுத்துச் சென்று வங்காளம் வரை கைப்பற்றினான். ராஜேந்திர சோழன் கங்கைப்படையெடுப்பில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. அரையன் ராஜராஜன் வேங்கியில் இருந்து மேலும் வடக்கே சென்றபோது ராஜேந்திர சோழன் தலைமையிலான இன்னொரு சோழப்படை வேங்கியில் வந்து நிலைகொண்டது. மேலைச் சாளுக்கியர்களின் தாக்குதல்களில் இருந்து அரையன் ராஜராஜனின் முதுகைப் பாதுகாப்பதற்காக இது செய்யப்பட்டிருக்க வேண்டும். முடிக்குரிய இளவரசன் இராஜாதிராஜனும், பிரம்ம மாராயன் முதலிய தளபதிகளும் அரையன் ராஜராஜனின் கீழ் வடக்கே படையெடுத்துச் சென்றனர்.

கிருஷ்ணன் ராமன்

சோழர் காலத்தில் அந்தணர்கள் பலர் போர்த்தளபதிகளாகப் பதவி வகித்தனர். இவர்களில் கிருஷ்ணன் ராமன் ஒருவர். இவர் உண்மையில் ஒரு தளபதியா, அமைச்சரா அல்லது இரண்டுமா என்பதில் ஐயங்கள் நிலவுகின்றன. இவர் ராஜராஜ சோழனின் காலத்தில் முக்கிய பதவிகளில் இருந்திருக்கிறார். ராஜேந்திர சோழனால் இவருக்கு “ராஜேந்திர சோழப் பிரம்மராயர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரைப்பற்றிய விபரங்கள் முக்கியமாகத் தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் ஏனைய கோவில் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கின்றன. இவர் படைத்தளபதியாக இருந்திருக்கும் பட்சத்தில், கங்கைப் படையெடுப்பில் இவர் நேரடியாகக் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.

அருள்மொழிப்பட்டன் / பிரம்ம மாராயன்

அருள்மொழிப் பட்டனும் பிரம்ம மாராயனும் ஒருவரா அல்லது இல்லையா என்பது தெளிவில்லை. அருள்மொழிப் பட்டன் அல்லது மாராயன் அருள்மொழி என்பவர் கிருஷ்ணன் ராமனின் மகனாவார். தந்தையைப்போலன்றி, இவர் ஒரு படைத்தளபதி என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகத் தெரிகிறது. இவர் கங்கைப் படையெடுப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் இவர் கோயில் திருப்பணி செய்தமைக்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கங்கைப் படையெடுப்பு நடந்த காலத்திலேயே இவர் அங்கே சென்றிருக்க வேண்டும்.

பிரம்ம மாராயர் (இவர் வடமொழிச் சாசனங்களில் ‘ராஜராஜ பிரும்ம மஹராஜ்’ என்று சிறப்பிக்கப்படுகிறார் ) கங்கைப் படையெடுப்பில் பங்குகொண்ட முக்கியமான தண்ட நாயகர். தற்போதைய ஒடியா, மத்தியப்பிரதேசம், வங்காளம் முதலிய பிரதேசங்களில் சோழப்படை நடத்திய போர்களில் இவர் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இவரும் ஒரு அந்தணர் என்பது தெளிவு. இவர் கிருஷ்ணன் ராமனாகவோ, மாராயன் அருள்மொழியாகவோ, அல்லது இன்னுமொரு தளபதியாகவோ இருக்கலாம். பெயரொற்றுமை மற்றும் வயதுப் பொருத்தத்தை வைத்துப் பார்க்கும் போது இவர் கிருஷ்ணன் ராமனாக இருப்பதை விட அவர் மகன் மாராயன் அருள்மொழியாக இருக்கச் சாத்தியங்கள் அதிகம். அருள்மொழி என்று தமிழில் எழுதியதை, அந்தப்பெயர் யார் நினைவாக வைக்கப்பட்டது என்பது கருதி, ‘ராஜராஜ’ என்று வடமொழியில் ‘மொழிபெயர்த்திருக்கலாம்’.

ஜெயம் கொண்ட சோழ மூவேந்த வேளான் அல்லது மதுராந்தக இளங்கோவேள்

இராஜராஜன் / ராஜேந்திரன் காலத்தில் கொடும்பாளூர் வேளார்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதல் மரியாதைக்குரிய சிற்றரசர்களாக இருந்தார்கள். தளபதி இளங்கோவேள் (இவன் அக்காலத்தில் இருந்த பெரிய வேளானின்அதாவது கொடும்பாளூர் சிற்றரசனின் மகனாகவோ அல்லது தம்பியாகவோ இருந்திருக்கலாம்) ராஜேந்திரன் சார்பில் இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அக்காலத்தில் இராஜரட்டை சோழ ஆதிக்கத்தில் இருந்தாலும் ஆறாம் மகிந்தன் ரோஹணத்தில் சுதந்திர மன்னனாக இருந்தான். இளங்கோவேள் இலங்கையை முழுதாகக் கைப்பற்றி, மகிந்தனையும், அவனது மனைவி பிள்ளைகளையும் சிறைப்பிடித்து, அவர்களிடம் பாண்டிய மன்னன் அடைக்கலமாக வழங்கியிருந்த பாண்டிய மணிமுடியையும் ரத்ன ஹாரத்தையும் கைப்பற்றி, சோழ நாடு கொண்டு சென்றான். ஆறாம் மகிந்தன் சோழ நாட்டில் போர்க்கைதியாக இறந்தான். இக்காலமுதல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் முழு இலங்கையும் சோழர் கட்டுப்பாட்டில் இருந்தது. வட இலங்கை இன்னும் அதிக காலம் சோழர் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, தென்னிந்தியாவில் சோழர்கள் வீழ்ந்த போது சுதந்திர யாழ்ப்பாண அரசாயிற்று.

இந்த வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளிலும் ராஜேந்திரன் மெய்க்கீர்த்திகளிலும் நிறைய ஆதாரங்கள் உள்ளதோடு, இலங்கை மன்னாரில் திருக்கேதீச்சரத்தில் மீட்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சான்று பகர்கிறது. அது, “ஈழமுழுவதும் கொண்டு, ஈழத்தரசரும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொண்டுபோன அதிகாரத் தண்டநாயகனார், ஜெயங்கொண்ட சோழ மூவேந்த வேளார், மாதோட்டமான இராச இராசபுர” என்பதாகும்.

கங்கைப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கிச் சென்ற அரையன் ராஜராஜனும் மதுராந்தக இளங்கோவேளும் ஒருவரே என்று சில வரலாற்றாசிரியர் கருதுவர்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.