மேகதூதம்

மேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள்

சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்
ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;
பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கே
பாங்குறு மதிமுகம் படைத்தனை; பொய்ச்சினம் காட்டும்
வாங்கிய வரிசிலைப் புருவங்கள் இரண்டினை வளைத்தாய்.

வெள்ளிப் பனி இமயத்தினில் வீசிடும் காற்று
அள்ளிக்கொணர்ந்தது தென்திசை நோக்கி, என் அன்பே,
மெள்ள முளைவிடும் தேவ தருத் தளிர் வாசம்!
கிள்ளைச் சிறுமொழிக் கள்ளி, உன் மேனிச் சுகந்தம்
மெல்ல முகர்ந்து, நான் அள்ளி அணைத்திட வேண்டும்!

உன்தனை எண்ணியே வாழ்பவன் ஆயினும், உருகி
என்கதி எண்ணி நீ ஏங்கிடாதிரு, மட மானே!
இன்பமோ துன்பமோ நிரந்தரம் இல்லை, இவ்வாழ்வில்;
விண்ணகம் தொட்டிடும் மிகப்பெரும் ராட்டினம் ஏறும்
அன்னவர் போல, நம் எழுகையும் வீழ்கையும் அமையும்.

மோனத் திருக்க முடிவு செய்தாள் என்று அறிந்ததனால்
நான் எப் பதிலையும் வேண்டிடவில்லை; எம் நட்பதுவோ
தானே தனக்கோர் பதிலை அளிக்கும் தகைமையதாம்;
கானப் பறவை களிக்கக் கனமழை கொண்டுவரும்
வான முகிலே! என் செய்தியை மட்டும் வழங்கி விடு!

மூலம்: காளிதாசன்

ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜோன் ஹோல்கோம்ப்

தமிழ் மொழிபெயர்ப்பு: விழிமைந்தன்

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.