விண்ணகத்தின் ஒரு பாதி

செங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும்
சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும்
அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை
அழகென்ன? ரதிதேவி மகளோ இப்பெண்?
செங்கமல முகத்தினிலே நாணம் வந்து
சிவப்பேற்ற, என்னுயிரும் சிலிர்ப்பதென்ன?
பைங்கிளியின் நடையழகில் எந்தன் நெஞ்சம்
பஞ்சாகப் பறப்பதென்ன? பாவிப்பெண்ணே!

இவ்வாறு கவிதைபல நாங்கள் செய்தோம்
இடையழகும் நடையழகும் மிகவும் சொன்னோம்
செவ்விதழில் தேன்குடமும், நூலைப் போலச்
சிற்றிடையும், சேலைப்போல் விழியும் கொண்டு
நல்விதமாய் ஆண்மகனைப் பேணி, அன்னான்
நலமே உன் நலமாகக் கொண்டு வாழ்ந்தால்
பெய்யெனவே நீ சொல்ல மழையும் பெய்யும்
பெண்ணரசி நீ என்று பெருமை சொன்னோம்.

கலைமலிந்த சிற்பமென உன்னைச் செய்து
சமையலறைப் புகையினிலே நிறுத்தி வைத்தோம்
விலைபேசி உனை நாங்கள் விற்ற போது
விற்றவனே விலையினையும் கொடுக்க வைத்தோம்
கலைகற்றும் தொழில் கற்றும் கல்வி கற்றும்
சரித்திரங்கள் பல நாங்கள் படைத்தபோது
உலைமூட்டி நீ சமைத்துப் போட்டாய் கண்ணே
உயிர் உருக்கி நீ மௌனம் காத்தாய் பெண்ணே

வீரமெனப் போருக்கு நாங்கள் சென்றால்
விழிக்குளங்கள் நீர்பெருக நீயும் நின்றாய்
மாரிகளும் கோடைகளும் சென்ற போது
வாசலிலே தவமாகி வழியைப் பார்த்தாய்
காரண காரியங்களினை மிகவும் ஆய்ந்து
கணிதம் விஞ்ஞானம் பல் கலைகள் தேர்ந்து
தாரணியை நாம் மாற்றி அமைத்த போது
கண்ணே நம் வெற்றியிலே மகிழ்ந்தாய் நீயும்

விண்பரப்பில் அறிவென்னும் கதிரோன் வந்து
வெருட்டுகிறான் இருள்தன்னை. விழித்துப் பாராய்.
விண்கலத்தில் வான்வெளிக்கு ஒருபெண் சென்றாள்
வெந்துயரம் தீர்ப்பவளாய் ஒருபெண் வந்தாள்
நுண்கணிதம் விஞ்ஞானம் ஒருபெண் தேர்ந்தாள்
‘லோ’ படித்து ஒருநாட்டை ஒருபெண் ஆண்டாள்.
என்னடி நீ செய்கின்றாய் எந்தன் பெண்ணே
இலங்கும் பொன் விலங்கினிலே மகிழ்வாயோடி.

கண் மையும், இதழ்ப்பூச்சும், முகத்தின் பூச்சும்,
கவினழகும் மட்டுமா உன் தகுதியம்மா?
இன்னும் நீ ஆண்மகனைக் கவர்தல், வாழ்வின்
இலட்சியமாய்க் கொண்டுன்னை இழப்பதென்ன?
உன் பார்வை இமயத்தின் சிகரம் மட்டும்
ஊடுருவிச் செல்லட்டும்! உயர்க மாதர்!!
விண்ணகத்தின் ஒருபாதி நீதான் பெண்ணே.
வெல்லட்டும் மானிடம் என்று எழுக தோழி!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.