இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் 
தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:
“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் 
காட்டுப் பாலைக் கானல் வெளியில் 
கால்கள் இரண்டு கண்டேன்: அவையோ
சாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, 
உடலோ எதுவும் இணைக்கப்பெறாது, 
நெடிதே நின்றன தனியே: அவற்றின் 
பக்கம் தனிலே, பாதி மணலில் 
சிக்கிப் புதைந்து, சிதறிய தலையொன்று 
இருந்தது ஆங்கே. இதன்மேல் சிற்பி 
வருந்திச் செதுக்கிய வண்மையால், ஒருவன் 
அகந்தை முகமும், ஆணவச் சிரிப்பும்,
மிகுந்த செருக்கில் விடைத்ததோர் வாயும்,
ஆணையிட்டு உலகை ஆள்கிற நோக்கும் 
காணுதல் முடியும் இன்றும்; கல்லிற்  
செதுக்கியதாயினும், சிற்பியின் திறமை 
மிதப்புடை வேந்தன் வீரிய வடிவைக் 
கண்களால் அளந்து கரத்தினால் அமைத்த 
திண்தலை, காலச் சிதைவுகள் தாங்கிக் 
கிடக்கிறது இன்னும்; தின்றது காலம் 
படைத்தவன் பெயரை. படைப்பின்னும் உளதே!
சிலைநிலை நின்ற பீடம் தன்னில் 
கலைநயம் மிகுந்த எழுத்துக்கள் கண்டேன்.
“என்பேர் இராமன்; இராஜ ராஜன் நான்.
வன்போர் வரிவில் மாப்பரமேசன்;
என்முன் வரும் நீ எவனாயினும், என் 
வன்மையில் எழுப்பிய மாநகர் இதனைக் 
கண்டு நீ வியந்து, என் கழல் தொழுவாயே!”
இருந்ததோ வேறேதும் இல்லை. அந்த
நொருங்கிய சிலையைச் சுற்றிலும், நான்கு 
மருங்கிலும் முடிவிலது ஆகி 
விரிந்தது பாலை வெறுமணல் வெளியே! “.

(மொழிபெயர்ப்பு – மூலம்: “Ozymandius” – Percy Shelley)

Picture: https://commons.wikimedia.org/wiki/File:RamsesIIEgypt.jpg#/media/File:RamsesIIEgypt.jpg

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.