“நாங்கள் சரியான பிஸி!”

“எவனுமே தனித்தீவு அல்லன்”

“No man is an island ” — John Donne.

இன்றைக்குத் தமிழர் மத்தியில் பொதுவாகவும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குறிப்பாகவும் மிக வேகமாகப் பரவிவரும் தோற்று நோய் ஒன்று உண்டு. அதுதான் “பிஸி” யாக இருப்பது.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், “பிஸி” யாக இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்வது.

நீர்வெறுப்பு நோய் வந்தவர்கள் நாய் மாதிரிக் குரைப்பது போல, “பிஸி” நோய் தொற்றியவர்கள் அடிக்கடி “பிஸி, பிஸி” என்று “குரைப்பார்கள்”.

“நீர் கோல் பண்ணினநீர் அப்பா, சரியான பிஸியாய் போச்சு, திரும்ப எடுக்க முடியவில்லை”

“உங்கடை வீட்டை வருவம் வருவம் எண்டு நினைக்கிறது, பிறகெங்கை பிஸியாய் போயிடும்”

“பிள்ளைகளோடை ஒரே பிஸி”

“இப்ப நாங்கள் பிஸி, திரும்ப எடுக்கட்டே”

இப்படி, இப்படி.

ஒருவர் எல்லாநேரமும் வேலை வெட்டி இல்லாமல் இருக்க வேண்டுமென்பதில்லை. மற்றவர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்பதுமில்லை. சிலநேரங்களில் நாங்கள் எல்லோருமே பிஸி தான். அது ஒரு நோயல்ல. உண்மையிலேயே பிஸி யாக இருப்பதற்கும் பிஸி நோயால் பீடிக்கப்பட்டிருப்பதற்கும் வித்தியாசங்கள் என்னவென்று பார்த்தால்:

  • பிஸி என்பது உண்மையில் ஒரு ஒப்பீட்டளவிலான சொல். சில நேரங்களில் பிஸி என்றால் சில நேரங்களில் பிரீ ஆகவும் இருக்க வேண்டும். ஆனால், பிஸி நோயால் பீடிக்கப்பட்டவர்கள் வருடம் முழுவதும் பிஸி. நாளின் எல்லா நேரமும் பிஸி.
  • உண்மையாக கடினமாக உழைப்பவர்கள் அநேகமாக ஒரு நேரத்தில் பல வேலைகள் செய்வார்கள். நான்கூட வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது புகையிரதத்தில் இருந்து தான் இதை எழுதுகிறேன். ஆனால் பிஸி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நேரத்தில் இரண்டு வேலை செய்ய மாட்டார்கள்.
  • ‘சாதாரண’ மக்கள் சிறிய விடயங்களில் தங்கள் நேர அட்டவணையைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளத் தயங்குவதில்லை. அதாவது காலை பல் துலக்கும்போது ஒரு வேண்டப்பட்டவர் தொலைபேசினால் தொலைபேசியை எடுப்பார்கள். ஆனால் பிஸி நோய் உள்ளவர்கள் எடுக்க மாட்டார்கள். பிறகு ஒரு நேரம் “ஐயோ போன கிழமை நீர் கோல் பண்ணின போது பிஸி யாக இருந்தநான். எடுக்க முடியேல்லை” என்பார்கள். அவர்கள் “பிஸி” யாக இருந்தது என்று சொல்வது பல் துலக்கிக் கொண்டிருந்ததை!
  • சில தமிழர்கள் “தமிழ் தெரியாது” என்று சொல்வதை பெருமையாக நினைப்பது போல பிஸி நோயாளர்களுக்கு “நாங்கள் பிஸி” என்று சொல்வது பெருமை. இது அவர்களுடன் பேசிப்பார்த்தால் புரியும். உலகில் எல்லா மனித ஜீவன்களுக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான் என்பது இவர்களுக்கு உறைப்பதில்லை. தாங்களும் “பிஸி” என்று சொல்லாவிட்டால் மற்றவர்கள் தங்களைக் குறைவாக நினைத்து விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருக்கும். இதனால் பல் துலக்குவது, வீடு கூட்டுவது முதலிய விடயங்களையும் தங்கள் “மாற்ற முடியாத நேர அட்டவணை” யில் போட்டாவது “நாங்களும் பிஸி” என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
  • சாதாரண மக்கள் கூட “பிஸி” நோயாளிகளை ஓரளவு சகித்துக் கொள்வார்கள். ஆனால் ஓரு “பிஸி” நோயாளிக்கு இன்னொரு “பிஸி” நோயாளியைச் சகித்துக் கொள்ளவே முடியாது. பொத்துக்கொண்டு வந்து விடும்!

பிஸி நோய்க்குப் பல காரணங்கள். சில பேரால் உண்மையாகவே வாழ்க்கையின் பல பரிமாணங்களைச் சமாளிக்க முடிவதில்லை. மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு, பல விடயங்களில் அவர்களின் திறமையின்மையும், வெளிநாட்டு வாழ்வின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள் கூட “ஆசை பற்றிப்” புலம்பெயர்வதும் காரணங்கள் ஆகலாம்.

ஆனால், பெரும்பாலானவர்களின் “பிஸி” நோய்க்கு வரட்டுக் கௌரவமே காரணம். மற்றவர்கள் முன்பு தாங்கள் படு “பிஸி” என்று காட்டிக்கொள்ளாவிட்டால் தங்களை மற்றவர்கள் குறைவாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தினால் தங்களை மிக “பிஸி” யாகக் காண்பித்துக் கொள்வார்கள். தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதாக நடிப்பவனை எழுப்ப முடியாது என்பதுபோல உண்மையாகப் பல வேலை உள்ளவர்களிடமும் பேசி விடலாம், இந்த “பிஸி” யாக நடிப்பவர்களைப் பிடிக்கவே முடியாது.

நான் பார்த்தளவில் வாழ்க்கையிலே பல சாதனைகளைச் செய்பவர்களும் உண்மையாகவே பலதரப்பட்ட கருமங்களில் முன்னின்று உழைப்பவர்களும் இந்த “பிஸி” என்ற வார்த்தையைப் பாவிப்பது குறைவு. அப்படிச் சொன்னாலும் அவர்கள் தாங்கள் வழக்கத்தை விட
“பிஸி” என்கிற போதுதான் அந்த வார்த்தையைப் பாவிப்பார்கள். வருடம் முழுவதும் அதையே சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால், பெரும் கருமங்களை ஒப்பேற்றுவதற்கு மனிதர்களுடனான நல்லுறவு முக்கியம் என்பதையும் சக மனிதனுக்கு நேரம் ஒதுக்காமல் எதையும் சாதித்து விட முடியாது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் தொலைபேசி அழைப்பை முடிந்தவரை எடுப்பார்கள். எடுக்க முடியாவிட்டால் திரும்ப அழைத்து மன்னிப்புக் கேட்ப்பார்கள். செய்திகளுக்கு உடனே பதிலளிப்பார்கள். பொது இடங்களில் மனிதர்களைத் தேடிச்சென்று பேசத் தயங்க மாட்டார்கள். இவர்களே வாழ்க்கையிலே வெல்கிறார்கள்.

மாறாகக் கடுமையான “பிஸி” நோய் பிடித்தவர்கள் – அதாவது நாங்கள் “பிஸி” என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் – தாய்நாடுகளிலோ புலம்பெயர் தேசங்களிலோ பெரிதாக எதுவும் செய்து கிழித்ததாக நான் கண்டது மிகவும் அருமை. அப்படி ஏதாவது செய்திருந்தாலும் அது பணம் சம்பாதிப்பதாக மட்டும்தான் இருந்திருக்கும். சமூகத்துக்கோ நாட்டுக்கோ உருப்படியாக எதுவும் செய்திருக்க மாட்டார்கள். தங்களது குடும்பத்துக்குக் கூட பணம் சம்பாதித்துக் கொடுப்பது தவிர வேறேதும் உருப்படியாகச் செய்திருக்க மாட்டார்கள். இதனால் இவர்களின் வாழ்வு சந்தோஷமாக அமைவது அருமை. பணம்கூட இவர்களிடம் அதிக நாள் நிற்காது.

மனிதன் ஒரு சமூக விலங்கு. எந்த மனிதனும் ஒரு தனித் தீவாக இருக்க முடியாது. “பிஸி” நோய் பிடித்தவர்கள் வரட்டுக் கௌரவத்திற்காக சக மனிதர்களுடன் உறவாடும் சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள். இது நாளைடைவில் அவர்களது உளவியலைக் கடுமையாகப் பாதிக்கிறது. மேலும் பெற்றோரின் “பிஸி” நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள். மேல்நாடுகளில் “பிஸி” யான பெற்றோரின் பிள்ளைகள் அநேகமாக நாள் முழுவதும் கணனி, தொலைக்காட்சி, ஐபாட், கைத்தொலைபேசி இவற்றோடு செலவழித்துக் கண்பார்வையையும் உள, உடல் ஆரோக்கியத்தையும் பழுதாக்கிக் கொள்கின்றன. தனிமையாக உணர்கின்றன. இது நாளடைவில் பெற்றோரையும் பாதிக்கும்.

இவ்வளவுநேரமும் நான் எழுதியதை வாசித்த பலர் உங்களுக்குள் நான் சொன்னதெல்லாவற்றையும் ஆமோதித்து இருப்பீர்கள். “பிஸி” நோய் பிடித்த பலரை உங்களுக்குத் தெரியும் என்று கூட நினைத்திருப்பீர்கள். நான் எழுதுவது அதற்காக அல்ல. “பிஸி” நோயை மற்றவர்களிடம் காண்பது சுலபம். ஆனால், நமக்குள்ளே கூட நமக்குத் தெரியாமல் அது இருக்கலாம். எனக்குக் கூடக் கொஞ்சம் இருக்கலாம். முடிந்த வரை அதைத் தவிர்க்கப் பார்க்கிறேன். இம்மாதிரி நாங்கள் எல்லோரும் சுய பரிசோதனை செய்துகொள்வதே “பிஸி” நோயை ஒழிப்பதற்கான நல்ல வழி.

உங்களது “பிஸி” யான “ஷெடூல்” இற்குள்ளும் நேரத்தை ஒதுக்கி இவ்வளவு வரை இதை வாசித்த உங்களுக்கு நன்றி! உங்களுக்கு “பிஸி” நோய் அவ்வளவு இல்லையென்பதே இதன் பொருள். வாழ்த்துக்கள்!

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

2 கருத்துக்கள்

  1. பசிப்பிணி போல அல்ல இந்த ‘பிஸி’ ப் பிணி! அதைவிடக் கொடுமையானது.
    நல்லவை ஆற்றாமல் இருக்கக் கூறும் ‘பலி ஆட்டு’ ‘அலிபை’! ((alibi)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.