சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது!

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது!

சோழ அரச வம்சத்தினர் சூரிய வம்சத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள். சோழ மரபிலே “ஆதித்தன்” என்ற பெயர்கொண்ட மூவர் இருந்தார்கள். மூவருமே இணையில்லாத வீரர்கள். ஒருவர் (ஆதித்த சோழர்) அரசாக இருந்த சோழ ராஜ்யத்தைப் பேரரசாக ஆக்கிய பிறகு இயற்கை மரணம் எய்தினார். இன்னொருவர் (இராஜாதித்யர்), பேரரசாக வந்துவிட்ட சோழ சாம்ராஜ்யத்தைப் பெரும் பேரரசு ஆக்கும் தருவாயில் போர்க்களத்தில் வீழ்ந்தார். மூன்றாமவர் (ஆதித்த கரிகாலர்) போர்க்களத்தில் பெரும் வீரச்செயல்களை நிகழ்த்தி எதிரிகளைச் சிதறடித்த பிறகு விருந்து சென்ற இடத்தில் வஞ்சனையால் கொல்லப்பட்டார். இக்கட்டுரை அவர்கள் மறைவைப் பற்றியதல்ல. சோழ சாம்ராஜ்யம் எனும் சூரியனின் மறைவைப்பற்றிய கட்டுரை இது.

சோழப்பேரரசைப்பற்றி விமர்சனங்கள் உடையவர்கள் கூட, தமிழர்களின் படைத்துறை வளர்ச்சி, கடலாதிக்கம், அரசியல்-பொருளாதார-இராணுவ வலிமை ஆகியவற்றின் உச்சம் பிற்காலச் சோழர் காலத்திலேயே (கிபி 9ம் – 12ம் நூற்றாண்டுகள்) அடையப்பட்டது என்பதைக் கொஞ்சமேனும் மறுத்து விட முடியாது. இவ்வாறு பெரு வலிமை படைத்திருந்த சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைவதற்கு நீண்ட காலக் காரணிகளும் உடனடிக் காரணிகளும் பல. இவற்றை ஒவ்வொன்றாக இங்கே பார்க்கலாம். அதற்கு முன்பு, பொதுவாக சோழர் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுவதும், ஆனால் உண்மையில் காரணம் இல்லாததுமான ஒன்றைப் பார்த்து நீக்கி விடுவோம். அதுதான் விஜயாலய சோழரின் மரபு அற்றுப் போனதென்பது. இதைச்சொல்பவர்கள், கிபி 1070 இல் விஜயாலய சோழரின் மரபு அழிந்து சாளுக்கிய சோழனான முதலாம் குலோத்துங்கன் பட்டத்திற்கு வந்ததுடன் சோழப்பேரரசர் மரபின் வீரரத்தம் அற்றுப்போய் விட்டது என்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஏனெனில், முதலாம் குலோத்துங்கன் தந்தை வழியில் சாளுக்கியன் ஆனாலும் முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப்பேரன். வீரம் சம்பந்தமான அல்லது ஏனைய நல்ல அரசியல்புகள் சம்பந்தமான மரபணுக்கள் ஆண்வழியிலேயே கடத்தப்படும் என்று விஞ்ஞானம் கூறவில்லை. மேலும், வேங்கிச் சாளுக்கியர் தந்தை வழித்தொடர்பு காரணமாக இறுதிவரை ஓரளவுக்கேனும் சோழ சாம்ராஜ்யத்த்துக்கு விசுவாசமாக இருந்ததோடு, “தெலுங்குச் சோழர் / சோடர் ” என்று தங்களைச் சொல்லிக்கொள்ளவும் தொடங்கினர். எனவே, விஜயாலய சோழனின் ஆண்மரபு பட்டத்துக்கு வரத்தவறியது சோழர்களின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமல்ல.

சோழ சாம்ராஜ்யம், ஒரு பேரரசராக 1216 யிலும், ஒரு அரசாக 1279 யிலும் வீழ்ச்சி கண்டது. ஆனால், இதற்கான நீண்ட காலக் காரணங்கள் கிபி 1060 களிலேயே விதைக்கப்படத் தொடங்கி விட்டன என்பது உண்மையே. அவற்றுள் சில:

– வீர ராஜேந்திர சோழரின் தவறான அரசியல் கணிப்பு: வீரராஜேந்திரன் மேலைச் சாளுக்கியர்களை கிட்டத் தட்ட முழுவதுமாக முறியடித்து தற்போதைய மகாராஷ்ட்டிரா வரையில் கைப்பற்றியிருந்தான். ஆனால், சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தனை தனக்கு மருமகனாக்கி, தான் கைப்பற்றிய கர்நாடகப்பகுதிகளை அவனுக்கு விட்டுக்கொடுத்து மன்னன் ஆக்கி வைத்தான். அன்றைய நிலையில் அவன் செய்தது தவறல்ல. சாளுக்கிய நாட்டில், மூத்த இளவரசனும் வலிமையற்றவனுமான சோமேசுவரனுக்கும், இளைய இளவரசனும் ஆனால் திறமையானவனுமான விக்கிரமாதித்தனுக்கும் இடையில் பதவிப்போட்டி ஏற்பட்ட நிலையில், வீரராஜேந்திரன், மேலைச் சாளுக்கியர்களை நிரந்தரமாகவே இரண்டாகப்பிரித்து விட்டால் பிறகு அவர்களில் ஒரு பாதியைச் சோழ ஆதிக்க வட்டத்தினுள் கொண்டுவந்து மேலைச்சாளுக்கியரை நிரந்தரமாகப் பலவீனப்படுத்தி விடலாம் என்று (அதாவது கீழைச்சாளுக்கியத்தில் செய்ததை மறுபடியும் செய்யலாம் என்று) கருதியே விக்கிரமாதித்தனை ஆதரித்து இருக்க வேண்டும். அவனைப்பொறுத்தவரை அது ஒரு diplomatic masterstroke. அநேகமாக அது சரிவந்தும் இருக்கும். ஆனால், சோழர்களின் அல்லது தமிழர்களின் தலைவிதி என்று சொல்லத்தக்க விசித்திரமான நிகழ்வுகளின் கலவை ஒன்றால் அது சரிவராமல் போயிற்று. அடிப்படையில், வீரராஜேந்திரன் எதிர்பார்க்காத இரண்டு விடயங்கள் அங்கே நிகழ்ந்தன. 1) அரசுரிமைப்போட்டியில் சோமேசுவரன் அடியோடு தோற்று, விக்கிரமாதித்தன் தன் அண்ணனின் இராச்சியத்தை முழுதாக விழுங்கி விடுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. 2) தன் மகனின் கடும் சைவ வெறியானது சோழ நாட்டில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, விக்கிரமாதித்தன் தலையிடுவதற்கு வழி கோலும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டில் ஒன்று நடக்காமல் விட்டிருந்தால் கூட வீர ராஜேந்திரன் கணக்கு சரிவந்திருக்கும். ஏனெனில், விக்கிரமாதித்தன் முழுத்துரோகியாக மாறவில்லை. அவன் இறுதிவரை தனது மைத்துனன் அதிராஜேந்திரனுக்கு விசுவாசமாயிருந்தான். ஆனால், மைத்துனன் மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட்து சோழ நாட்டில் தலையிடுவதற்கு விக்கிரமாதித்தனுக்குச் சந்தர்ப்பம் கொடுத்தது. இந்தத்தலையீட்டை தொடர்ந்து ஆட்சி
பீடமேறிய குலோத்துங்கன் அவனை முறியடித்தாலும் கூட, வீர ராஜேந்திரன் விட்டுக்கொடுத்த கன்னடப்பகுதிகளை மீட்க முடியவில்லை. மறுவளமாக, அதிராஜேந்திரனுக்குப்பின் குலோத்துங்கன் ஆட்சி பீடமேறினாலும் சோமேசுவரன் சற்று ஆற்றலுள்ளவனாக இருந்திருந்தால் வீரராஜேந்திரன் கணக்கு தப்பியிருக்காது. அணிகள் மாறியிருக்குமேயன்றி, மேலைச்சாளுக்கியத்தில் ஒரு துண்டு சோழர் பக்கம் என்ற நிலை மாறியிராது. குலோத்துங்கன் ஒரு பக்கமும் சோமேசுவரன் மறு பக்கமுமாக விக்கிரமனை நசுக்கி இருக்கலாம். ஆனால், இப்படி இருமுனைப்போர் ஆரம்பமான போது சோமேசுவரன் மிக மிக விரைவாகவே தோற்றுப்போய் விட்டதால் குலோத்துங்கனுக்கு அவனால் உதவ முடியவில்லை. எனவே, சிக்கலான நிகழ்வுத் தொகுதி ஒன்றின் காரணமாக வீரராஜேந்திரனின் அதிபுத்திசாலித்தனமான கணக்குத்தவறி விட்டது. அதைவிட, வீரராஜேந்திரன் சாளுக்கிய அரியணைப் போட்டியில் தலையிடாமல், கைப்பற்றிய கர்நாடகப்பகுதிகளைத் தன்வசம் வைத்திருந்து இருந்தால், நீண்டகால நோக்கில் சோழர்களின் வீழ்ச்சி தாமதம் அடைந்திருக்கும்.

— சோழ மன்னர்கள் சிலரின் சமய அடிப்படைவாதம்: குறிப்பாக வீரராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் முதலியோரின் சைவ சமய அடிப்படை வாதத்தால் வைணவ மக்களின் வெறுப்பைச் சோழர்கள் சம்பாதித்தது. இதனால் வைணவப் படைத்தளபதிகள், சிற்றரசர்கள், போர்வீரர்கள் முதலியோரின் விசுவாசம் சோழர்களுக்கு இல்லாமல் போனது.

— மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடந்த போர்களில் சோழ நாட்டுச் சிற்றசர்களின் ஆண்பிள்ளைகள் பலர் போர்க்களங்களில் மடிந்ததால், 1200 களின் தொடக்கத்தில் சிறந்த தளபதிகளும் சிறந்த இரண்டாம் நிலைத் தலைமைத்துவமும் இலலாமல் போனது. குறிப்பாகப் பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளிர் முதலிய சிற்றசரர் குலங்கள் முழுவதுமாகவே அழிந்து போனது. இதனால், வீரம் மற்றும் தலைமைத்துவ ஆற்றல் மிக்க மரபணுக்கள் சோழநாட்டில் அருகிப் போனது.

— அதேபோல, சாதாரண வீரர்களிலும் சிறந்த வீரர்கள் போர்க்களத்தில் மடிந்ததால் வீர ரத்தம் சோழ நாட்டில் வற்றிப்போனது. அதாவது, ஒவ்வொரு தலைமுறையிலும் சிறந்த வீரர்கள் பலர் போர்க்களத்தில் இளமையிலேயே, சந்ததி இன்றி இறந்திருப்பார்கள். மிஞ்சியவர்கள் திருமணம் செய்து குழந்தை குட்டி பெற்றுக்கொள்வார்கள். அப்பிள்ளைகளிலும் வீரம் மிகுந்தவர்கள் பலர் இளமையிலேயே இருந்திருப்பார்கள். இது மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும்போது சோழர் மத்தியில் வீர மரபணுக்கள் மிகக் குறைந்திருக்கும்.

— பாண்டிய நாடு ஒப்பீட்டளவில் அமைதியோடு இருந்ததால், அந்நாட்டின் மக்கள் தொகையும் விவசாயம் முதலிய தொழில்களும் பெருகியது. பாண்டிய மன்னர்கள் அடிக்கடி சோழர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோதும், இக்கிளர்ச்சிகளில் சாதாரண மக்கள் அதிகம் பங்கெடுத்ததாக இல்லை. இதனாலேயே சோழர்கள் அவற்றை இலகுவாக அடக்க முடிந்தது. பாண்டிய மக்களில் மிகப்பெரும்பான்மையினர் மூன்று நூற்றாண்டுகளாக சோழர்களுக்குக்கீழே அமைதியோடு வாழ்ந்ததால் அவர்களின் மக்கள் தொகையும் பொருளாதாரமும் வளம் பெற்றமை.

–சோழ மன்னர்களும் மேல்தட்டு வர்க்கத்தினரும் உல்லாச வாழ்வுக்குப் பழக்கப்பட்டமை: ராஜேந்திர சோழர் முதலியவர்களின் படையெடுப்புகளால் சோழ நாட்டில் பெரும்செல்வம் கொண்டுவந்து குவிக்கப்பட்டாலும், அது சாதாரண மக்களின் மத்தியில் பரவி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. மாறாக அரண்மனைகளிலேயே தேங்கிக்கிடந்தது. அரச குடும்பத்தினரும் மேல்தட்டு வர்க்கத்தினரும் உல்லாச வாழ்வுக்குப் பழகிக் கொண்டார்கள். இதனால் அவர்களின் போர்க் குணம் குறைந்தது. தமிழின்பம், பெண்ணின்பம், சமய வெறி ஆகியவற்றிலும் அவர்கள் அதிகமாக மூழ்கத் தொடங்கினார்கள்.

— வெல்லப்பட முடியாதவர்கள் என்ற எண்ணம். பல தலைமுறைகளாகப் பெற்று வந்த வெற்றிகளின் காரணமாக நம்மை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் அதனால் விளைந்த கவனயீனமும் சோழ சாம்ராஜ்யத்தில் மிகுந்தன. இதுவும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.

குறுகிய காலக் காரணங்கள்:

— மூன்றாம் ராஜராஜனின் திறமையின்மை: கிபி 1216 இல் மூன்றாம் குலோத்துங்கன் அரச கட்டிலை விட்டு நீங்க அவன் மகன் மூன்றாம் ராஜராஜன் சிம்மாசனம் ஏறினான். இவன் வீரம் குறைந்த, சுகபோகங்களில் விருப்புள்ள, அரசியல் தந்திரங்கள் தெரியாத ஓர் அரசனாக இருந்தான்.

— மாறவர்மன் சுந்தரபாண்டியனின் திறமை: இவனுக்கு எதிர்மாறாக, சோழர்களுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த பாண்டிய நாட்டில் அரசேறிய சுந்தர பாண்டியன் வீரமும், அரசியல் அறிவும், போர்த்திறமையும், உள்ள மன்னனாக இருந்தான். தொகையில் பெருகி, ஆனால் போர்க்குணமற்றுச் சோம்பியிருந்த பாண்டிய மக்களைத் தன்பின்னால் அணிதிரட்டும் ஆளுமையும் அவனுக்கு இருந்தது.

– சோழச் சிற்றரசர்கள் சிலரின் துரோகம்: சுதந்திர மன்னர்களாக ஆகும் ஆசையால், காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் முதலிய சோழச் சிற்றரசர்கள் பாண்டியனுடன் சேர்ந்து கொண்டது.

— சுந்தர பாண்டியனின் சரியான போர்த்தந்திரம்: அவனுக்கு முந்திய பாண்டிய மன்னர்கள்சோழர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும்போது பெரும்பாலும் தற்காப்புப் போர்முறையைக் கடைப்பிடித்தனர். அதாவது, மதுரையை விடுவித்து மீனக்கொடியை ஏற்றிச் சுதந்திர அரசைப்பிரகடனம் செய்துவிட்டு சோழநாட்டில் இருந்து சோழப்படைகள் வரும்வரை காத்திருந்து, தற்காப்புப்போர் செய்தனர். பொதுவாகப் ப்படைப்பலம் கூடிய எதிரிகளுக்கு எதிராக இப் போர்முறை சரியானதே. ஆனால், சோழர்கள் படையெடுத்து வருமுன் தகுந்த தயாரிப்புகளை செய்துகொள்ள இது அவகாசம் கொடுத்தது. ஒவ்வொரு கிளர்ச்சியின் போதும், சோழர்கள் பெரும்பாலும் சில ஆண்டுகள் எடுத்துத் தகுந்த தயாரிப்புகளின்பின்னரே பாண்டிய நாட்டின் மீது மறுபடியும் பாய்ந்து அடக்கினர்.

சுந்தர பாண்டியன் இந்தப்போர்முறையை மாற்றினான். அவன் இரகசியமாகத் தனது தயாரிப்புகளை செய்து பெரும் படை திரட்டிய பின்னரே மதுரையை விடுவித்துச் சுதந்திரப்பிரகடனம் செய்தான். செய்தபின்னர் சோழர்கள் வருவதற்கு காத்திராமல் துணிந்து சோழ நாட்டின்மீதே பாய்ந்தான். இந்தத் தாக்குதல் போர் அவனுக்கு சடுதிச் சாதகத்தைக் கொடுத்தது.

— ஹொய்சாளரின் நயவஞ்சகம்: ஹொய்சாளப் பேரரசர்கள் பெயரளவில் சோழர்களின் நண்பர்களாகவும் உறவினராகவும் இருந்தனர். ஆனால், அவர்களின் உள்நோக்கம், தமிழகத்தில் சமவலிமையுடைய இரண்டு அரசுகள் இருந்தால் ஒன்றிற்க்கெதிராக இன்னொன்றைப் பாவித்துத் தமது மேலாதிக்கத்தைத் தமிழகத்தில் ஊன்றலாம் என்பதாக இருந்தது. இதனால் அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே மூன்றாம் இராஜராஜனுக்கு உதவுவதில் தாமதித்தனர்.

நிகழ்வுகளின் தொடர்:

— மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 – 1216) பல தடவை பாண்டியர்களின் கிளர்ச்சியை அடக்குகிறான். இறுதியாக, 1205 இல் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கியபோது பாண்டிய முடிசூட்டு மண்டபத்தை இடித்தழிக்கிறான். இதனால் பாண்டிய மக்கள் மனதில் வஞ்சினம் மூள்கிறது.

— அவனது திறமையற்ற மகனாகிய மூன்றாம் இராஜராஜன் 1216 இல் பட்டத்திற்கு வருகிறான். (குலோத்துங்கனின் சரியான இறப்புத் திகதி தெரியவில்லை).

— அதற்குச் சற்று முன்பாகப் பாண்டிய நாட்டில் மாற வர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களின் சிற்றரசனாக அரியணை ஏறுகிறான். அரியணை ஏறியதில் இருந்தே அல்லது அதற்கு முன்னிருந்தே இரகசியமாகப் பெரும்படை திரட்டுகிறான். சோழச் சிற்றரசர்கள் சிலருடன் இரகசியத் தொடர்புகளையும் ஏற்படுத்துகிறான்.

— 1216 இன் பிற்பகுதியில் பாண்டிய நாட்டைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்கிறான். உடனடியாகவே சோழ நாட்டின்மீது படையெடுத்து வருகிறான்.

— அதேவேளை சோழச் சிற்றரசன் காத்தவராயன் கோப்பெருஞ்சிங்கன் சேந்த மங்கலத்தில் கலகக்கொடியை உயர்த்துகிறான். சிங்களவர் படையுதவியும் அவனுக்குக் கிடைக்கிறது.

— சுந்தரபாண்டியன் உறையூர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவற்றைக் கைப்பற்றித் தரைமட்டமாக்குகிறான்.

— மூன்றாம் இராஜராஜன் வடக்கே, அநேகமாகத் தனது உறவினர்களாகிய தெலுங்குச் சோழர்களின் நாடுகளை நோக்கித் தப்பி ஓடுகிறான். வழியில் கோப்பெருஞ்சிங்கனால் சிறைப்படுத்தப்படுகிறான்.

– ஹோய்சாளப்படைகள் தமிழகத்தில் நுழைகின்றன. தண்டநாயகர்கள் அப்பண்ணா, கொப்பையா ஆகியோர் வட தமிழகத்தில் பல கொடுமைகளைச் செய்வதோடு மூன்றாம் இராஜராஜனை விடுக்கின்றனர். அதேவேளை ஹோய்சால பேரரசன் இரண்டாம் வீர நரசிம்மன் சுந்தர பாண்டியனை காவேரிக்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் முறியடிக்கிறான். மூன்றாம் ராஜராஜனை மறுபடியும் சோழ நாட்டுக்கு அரசன் ஆக்குகிறான். ஆனால், பாண்டியர்கள் சுதந்திர அரசை ஆள அனுமதிக்கப்படுகின்றனர். சோழப்பேரரசு அஸ்தமிக்கிறது.

– கிபி 1246 வரை மூன்றாம் ராஜராஜனின் திறமையற்ற ஆட்சி தொடர்கிறது. அதன்பின் அவன் சகோதரன் / மகன் மூன்றாம் ராஜேந்திரன் அரசனாகிறான்.

— மூன்றாம் ராஜேந்திரன், தெலுங்குச் சோழ மன்னன் கண்ட கோபாலனின் உதவியுடன் சோழ சாம்ராஜ்யத்தை மறுபடியும் ஸ்தாபிக்க முயல்கிறான். பாண்டியர்களைப் போர்க்களத்தில் முறியடிக்கிறான். ஆனால், மதுரையைத் தாக்குவதற்கிடையில் ஹொய்சாளர்கள் கட்சி மாறுகின்றனர். ஹோய்சால வீர சோமேஸ்வரன் தற்காலிகமாகப் பாண்டியர் பக்கம் சேர்ந்து, தமிழகத்தில் ஒரு சாம்ராஜ்யம் உருவாவதைத் தடுக்கிறான்.

— கிபி 1250 அளவில் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையில் அரசு கட்டில் ஏறுகிறான். பிற்காலப்பாண்டியர்களுள் மிகச்சிறந்த மன்னனாகிய இவன் தலைமையில் பாண்டியர்கள் உச்சப் பலத்தை அடைகின்றனர்.

— ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வட திசையில் பெரும் படையெடுப்பை ஆரம்பிக்கிறான். சேர மன்னன் வீரராவி உதயமார்த்தாண்ட வர்மனைப் போர்க்களத்தில் கொன்று சேர நாட்டை இணைத்துக்கொள்கிறான். ஹோய்சால வீர சோமேஸ்வரனை முறியடித்துத் துரத்துகிறான். பின்னர் கிபி 1279 இல் கங்கை கொண்ட சோழபுரத்தின்மீது படையெடுத்து அதைக் கைப்பற்றி நேரடியாகத் தனது அரசுடன் இணைத்துக் கொள்கிறான். இம்முறை ஹொய்சாளர்கள் முன்பே முறியடிக்கப்பட்டதால் பாதுகாக்க வெளிச் சக்திகள் இல்லாத நிலையில் சோழ ராஜ்ஜியம் ஒரு அரசாக அஸ்தமனம் எய்துகிறது. ஜடாவர்மன் வீரபாண்டியன் வடக்கே ஆந்திர நாடுவரையில் கைப்பற்றி, எம்மண்டலமும் கொண்டருளிய தேவர்’ என்ற பட்டம் பெறுகிறான்.

— கிபி 1279 இன் பின்னர் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. சீனாவின் தலைநகராக அப்போதிருந்த குவாங்சௌ நகரில் இக்காலத்திற்குப் பிற்பட்ட சிவாலயங்களின் இடிபாடுகள் கிடைத்துள்ளன. இவை சோழக்கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதோடு அவ்வாலயங்களில் தமிழ்-சீன இருமொழிக் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. எனவே மூன்றாம் ராஜேந்திரன் அல்லது அவன் மகன் சீனத்துக்குத் தப்பிச்சென்று சோங் வம்ச சக்கரவர்த்திகளின் பாதுகாப்பில் வாழ்ந்தானா?

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.