‘வெளிநாடு’ என்னும் வேலை

‘வெளிநாடு’ என்னும் வேலை

(புலப்பெயர்வு பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் தாயகத்தில் இருக்கும் பார்வை குறித்தான ஒரு சிறு விமர்சனம்)

“திரு சின்னத்தம்பி கந்தையா காலமானார். அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக்கணவரும், ஜெகன் (நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா), குகன் (ஆசிரியர் யா/விக்னேஸ்வர வித்தியாசாலை, துன்னாலை), வரதன் (ஜேர்மன்), குணாளன் (லண்டன்), விஜயன் (சுவிஸ்), பாமா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஈஸ்வரி, Dr. பாமினி, கனகா (ஜேர்மன்), மணிமேகலை (லண்டன்), சுபத்திரா (சுவிஸ்), ரங்கன் (கனடா) ஆகியோரின் மாமனாரும், குணதீபன், அறதீபன், மறதீபன், பிறதீபன், மஞ்சரி, குஞ்சரி, சஞ்சரி, டிலான், டுலான், டொங்கான், டிஷூம், டுஷூம், டிஸ்கோ ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவர். அன்னாரின் ஈமக்கிரியைகள் இத்தியாதி இத்தியாதி……”

இவ்வாறான அறிவித்தல்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஒரு மனிதர் இறந்துபோன அவலத்தினைப் பகிருவதால் இப்படியான அறிவித்தல்களில் “முட்டையில் மயிர் பிடுங்குவது” கௌரவமில்லை என்று கருதிப் பலரும் இவற்றை விமர்சிப்பதில்லை. ஆனால், உண்மையிலே பார்த்தால் இந்த அறிவித்தலில் அடங்கியுள்ள அபத்தங்கள் பல. அவற்றைப்பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். ஆனால், இவற்றில் முக்கியமான அபத்தம், ஒரு மனிதர் தாயகத்தில் வாழாமல் வெளிநாட்டில் வாழ்வதென்பது ஒரு “தொழிலாகவும்” ஒரு கௌரவமாகவும் குறிக்கப்படுவதே.

அதாவது, ஜெகனது தொழில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலைசெய்வது (என்ன வேலை என்று குறிக்கப்படவில்லை). குகனின் தொழில் ஆசிரியர். வரதன், குணாளன், விஜயன், பாமா ஆகியோரின் தொழில்? வெளிநாட்டில் வாழ்வது!

இப்படியான மனோபாவம் வந்ததற்குக் காரணம், வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் நன்றாக உழைக்கிறார்கள் என்று தாயகத் தமிழர்களின் மத்தியில் இருக்கும் கருதுகோளேயாகும். அதாவது, எப்படியாவது வெளிநாட்டுக்குப்போய்விட்டால் அங்கே “மரத்தில் இருந்து” பணத்தைப் பிடுங்கிக்கொள்ளலாம் என்பதே தாயகத் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. பண அடிப்படையிலான சிந்தனைப்போக்கினால், வெளிநாட்டில் வாழ்வது தாயகத்தில் வாழ்வதை விடக் ‘கௌரவமானது’ என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்களும் தாயகத்திற்குச் செல்லும்போது தமது செயற்பாடுகள் மூலம் இந்த எண்ணத்திற்கு வலுவூட்டுகின்றனர்.

“வெளிநாடு” ஒரு தொழிலாக, தகுதிப்பாடாக, கௌரவமாக பார்க்கப்படுவதானது தாயகத்தில் வாழும் சிலருக்குக் கோபத்தை ஊட்டுகிறது. சமீபத்தில் முகநூலில் பரவிய ஒரு “பகிடியில்” இந்தக்கோபம் அழகாக வெளிப்பட்டது. தாயகத்தில் ஒரு பையனும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கும்போது பெண்ணின் தந்தை வெளிநாட்டில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். காதலன் பெண்ணின் தந்தையைக்கண்டு, மாப்பிள்ளை தன்னைவிட எவ்வகையில் உயர்ந்தவர் என்று அறியும் நோக்கில், “அவர் என்ன வேலை?” என்று விசாரிக்கிறான். “அவர் சுவிச்சிலை இருக்கிறார் ” என்று பெருமையாகச் சொல்கிறார் தந்தை. “தம்பி, நீர் என்ன வேலை?” என்றும் கேட்கிறார். “நான் சண்டிலிப்பாயிலை இருக்கிறன்!” என்று சொல்கிறான் காதலன்.

இந்தக்கோபம் நியாயமானதே. ஏனென்றால் “வெளிநாடு” என்பது நிச்சயமாக ஒரு வேலையோ தகுதியோ அல்ல. ஆனால், இந்தத் தவறான கருதுகோள் “வெளிநாட்டு” வாழ்க்கைமேல் இருப்பதற்குப் புலம்பெயர் தமிழர்கள் அளவுக்கு அல்லது அவர்களை விட அதிகமாகத் தாயகத் தமிழர்கள் பொறுப்பேற்க வேண்டும். உண்மையில், புலம்பெயர்வைப் பற்றியும் புலம்பெயர் வாழ்க்கையைப்பற்றியும் தாயகத்தில் பல பிழையான கருதுகோள்கள் நிலவுகின்றன. இவற்றில் சில புலம்பெயர் வாழ்வைத் தேவையின்றி உயர்த்தியும் வேறுசில புலம்பெயர் தமிழர்களைத் தேவையின்றித் தாழ்த்தியும் வைத்திருக்கின்றன. இவற்றை ஓரளவுக்கு உடைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாவதாக ஒன்றைச் சொல்லவேண்டும். “வெளிநாடு” என்பது ஒரு தொழிலாகக் கருதப்படுவது, தாயகத்தில் வாழும் கௌரவமான ஆனால் அதிக வருமானம் தராத தொழில்களைச் செய்பவர்களுக்குத்தான் நட்டம் என்பதல்ல. வெளிநாடுகளில் வாழும் உயர்தொழில் புரிபவர்களுக்கும் அது நட்டமாகவே அமைகிறது. உதாரணமாக, தாயகத்தில் தொழில்புரியும் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரு பேராசிரியராகப் பொதுவெளியில் அறியப்படுவார். அவரிடம் அறிவுரைகள் முதலியன கேட்பதற்கு நிறையப்பேர் வருவார்கள். பாடசாலைகள் முதலிய ஸ்தாபனங்களில் அவரை உரையாற்றும்படி அழைப்பார்கள். ஆனால், அதே பேராசிரியர் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சேவைசெய்தால், தாயகத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பேராசிரியர் என்ற அடையாளத்தைவிட அவர் குறித்த நாட்டில் வாழ்பவர் என்ற அடையாளமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதாவது அவரது தொழில் “பேராசிரியர்” அல்ல; “கனடா” அல்லது “லண்டன்” அல்லது “அவுஸ்திரேலியா” தான் அவரது தொழில்! இதனால், தாயகத்தில் இருப்போர் அவரின் பரந்த அறிவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதைவிட அவரிடம் பணம் கேட்டு வாங்குவதிலேயே அதிக குறியாக இருக்கிறார்கள். இது ஒரு வகையில் அவருக்குச் செய்யும் அவமதிப்பே. எனவே வெளிநாடுகளில் உயர்தொழில் புரிபவர்களுக்கும், தங்கள் நாடு தங்கள் தொழிலாகக் கருதப்படுவது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது. தாயகத்தில் தொழிலேதும் செய்யத் தகுதியின்றி அல்லது விருப்பமின்றித் திரிந்துவிட்டு வெளிநாடு சென்று, வெளிநாடுகளில் உடலுழைப்பு அளவுக்குக் கல்வியறிவு தேவையில்லாத தொழில்களை செய்து நிறையப் பணம் சம்பாதிக்கிறவர்களுக்கே “வெளிநாடு ” என்பதை ஒரு “தொழிலாக” வெளிக்காட்டிக்கொள்வது சாதகமாக அமைகிறது. “வெளிநாடு”
என்பது பற்றித் தாயகத்தில் நிலவும் தவறான கருதுகோள்கள் தாயகத்தமிழர்களின் சுயகணிப்பை மட்டுமின்றிப் புலம்பெயர் தமிழர்களின் சுயகணிப்பையும் சிலவேளை பாதிக்கின்றன என்பதற்கே இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.

சாதாரணமாக, தாயகத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் மத்தியில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், அவர்களது வாழ்வு தொடர்பாகவும் தவறான புரிதல்கள் சில உண்டு. அவற்றை வரிசைப்படுத்திவிட்டு, அவை ஏன் தவறான புரிதல்கள் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1 – புலம்பெயர்ந்த நாடுகளின் பிரதேச அளவுகள் தொடர்பிலும், பொதுவாக தாங்கள் வாழ்கின்ற உலகத்தின் அளவு தொடர்பிலும், இந்த உலகில் உள்ள மக்கட்குழுமங்கள், அரசாங்கங்கள், இனக்குழுக்கள்,அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட (simplified ) கருத்து நிலைகளைக் கொண்டிருத்தல்.

2- புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் அகதிகளாக அதாவது மனிதாபிமான அடிப்படையிலான சட்டதிட்டங்கள் மூலமே வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் என்ற எண்ணம். இதன் தொடர்ச்சியாக, தாயகத்தில் அரசியல் நிலைமைகள் மேம்படுமாயின் இவர்களில் பலர் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற எண்ணம்.

3- புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் “நீலக் கொலர்” வேலைகளை (அதாவது, “கோப்பை கழுவுவது” மாதிரியான வேலைகளை) புலம்பெயர்ந்த நாடுகளில் செய்தே சம்பாதிக்கிறார்கள் என்ற எண்ணம்.

4. புலம்பெயர்ந்த தமிழர்கள் எவருமே இலங்கையின் அல்லது சிறீலங்காவின் சட்டபூர்வமான பிரஜைகள் அல்ல என்ற எண்ணம். இதன் தொடர்ச்சியாக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தாயகத்தின் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகளைத் தெரிவிப்பதற்குச் சட்டபூர்வமான உரிமை ஏதும் கிடையாது என்ற எண்ணம். தார்மீக ரீதியாகவும் புலம்பெயர் தமிழர்களுக்கு அந்த உரிமை கிடையாது என்ற கருத்துநிலையும் தாயகத்தில் சில தரப்புகளினால் முன்வைக்கப்படுகிறது.

முதலாவதற்கு ஒரு சின்ன வேடிக்கையான உதாரணத்தைப் பார்ப்போம். தாயகத்தில் இருக்கும் ஒருவருக்கும், புலத்தில் இருக்கும் ஒருவருக்கும் இடையிலான ஒரு உரையாடல், சிலவேளைகளில் பின்வருமாறு அமையும்.

“என்னமாதிரி ஊரிலை மழையோ?”

“இல்லை, எங்கட பக்கம் (இணுவில்) மழையில்லை. அங்காலை தெல்லிப்பழைப் பக்கம் பெய்யுதாம். அதுசரி, அமெரிக்காவிலை காட்டுத்தீயாமே?”

“ஓ, அது எங்கடை இடத்தில இல்லை. நாங்கள் நியூ யார்க். அங்காலை கலிபோர்னியப்பக்கம் தான் காட்டுத்தீ!”

இந்த உரையாடலில், தாயகத்தின் உலகப்பார்வையில் “அமெரிக்கா” என்பது இணுவில், தெல்லிப்பழை,  மாதிரி ஒரு இடம் என்ற எண்ணம் வெளிப்படுகிறது. இணுவில், தெல்லிப்பழை ஆகிய இடங்களுக்கு இடையில் உள்ள தூரம் நாலைந்து கிலோமீட்டர்கள். நியூ யார்க், கலிபோர்னியா இவற்றிற்கிடையிலான தூரம் நாலாயிரம் கிலோமீட்டர்கள். இது தெல்லிப்பளையில் இருந்து தெகரான் (ஈரானின் தலைநகர்) வரையிலுள்ள தூரமாகும். இது தாயகத்திலிருப்பவர்களுக்கு அறிவுபூர்வமாக ஓரளவு தெரிந்தாலும் சரியாக மனதில் படிவதில்லை. அதாவது தங்களை சுற்றியிருக்கும் உலகம் எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் அறிவுரீதியாக அறிந்தாலும் அது உண்மையில் அவர்களுக்கு உறைப்பதில்லை. எனவேதான் மேற்குறிப்பிட்டது போலான உரையாடல்களும் “தம்பி எந்த நாடு?” , “அவுஸ்திரேலியா”, “ஓ அப்படியே! எங்களது முத்தற்ற மூத்த மகனும் அவுஸ்திரேலியா தானே! நீ காண்கிறதில்லையே!” என்பது மாதிரியான உரையாடல்களும் நேர்கின்றன.

இன்னும் ஒரு விடயம், தமது உறவினர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்கள் என்று தாயகத்தமிழர்கள் குறிப்பிடுவது: பொதுவாக இந்தப்பட்டியல் “கனடா, சுவிச், பிரான்சு, யேர்மன், லண்டன், நோர்வே, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், டுபாய், ஓமான், சவூதி.. ” என்று நீளும். இவற்றில் “லண்டன், டுபாய், பஹ்ரைன்” முதலியவை நாடுகள் அல்ல என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. “யாழ்ப்பாண அகராதி” யில் இவை நாடுகள்.

இது வெறும் நகைச்சுவைக்கான விடயமல்ல. தாயகத்தமிழர்கள் அக்கறை செலுத்தாமல் விடக்கூடிய விடயமும் அல்ல. ஏனெனில், இந்த “உலகத்தின் அளவு” பற்றிப் புரிதல் இல்லாத தன்மையானது வெறும் பௌதீக நீள அகலங்களைக் கடந்து, உலகத்தின் சிக்கல்நிலை (Complexity) வரையில் நீளுகிறது. உலகம் எவ்வளவு சிக்கலானது, பல்விதமானது (diverse) என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாது விடுதல் தாயகத்து தமிழர்களின் நாளாந்த வாழ்வை உண்மையில் பாதிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் “சண்டிலிப்பாய், சங்கானை, கோப்பாய், கொழும்பு, கண்டி, லண்டன், துபாய், பஹ்ரைன், பிரென்ச், ஜெர்மன், அமேரிக்கா”என்பவை தாயகத் தமிழர்கள் பலருக்கு ஒரே மட்டத்தில் உள்ள பிரதேச அலகுகள் (regional units). இதுவும் இதனால் எழும் பொதுமைப்படுத்தல்களும் புலம்பெயர் வாழ்வு பற்றித் தாயகத் தமிழர்களின் புரிதலைப் பாதிக்கின்றன.

உதாரணமாக, இரண்டு பேர் திண்ணையில் இருந்து அரசியல் பேசுவதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு உள்ளூர் அரசியல் கட்சிகள், அவற்றின் உட்பிரிவுகள், தனிநபர்கள், இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் விலாவாரியாகத் தெரிந்திருக்கும். சிலவேளைகளில், சில அரசியல் தலைவர்களின் மனத்திற்குள் இருக்கிற பிளவுகளைக்கூட விளங்கி வைத்திருப்பார்கள் (“அவர் இதைச் செய்ய விரும்பியிருக்க மாட்டார்; ஆனால் அவற்றை இன்ன உறவினர்தான் செய்யச் சொல்லி இருப்பர்”) அல்லது (“அவளுக்கு பிறப்பாலை இனவாதம் அதிகம். பிறகு வெளிநாட்டுப் படிப்பால கொஞ்சம் மனமாற்றம்”). இப்படி உள்ளூர் நிலைமைகளை மிக நுணுக்கமாக வடிவமைக்கத் தெரிந்தவர்கள் வேறு நாடுகளைப்பற்றி பேசும்போது “அமேரிக்கா இப்படி யோசிக்குது, சீனா இப்படிச் செய்யுது, லண்டன்(!) அழுத்தம் குடுக்குது” என்று இலகுவாகச் சொல்லி விடுவார்கள். அதாவது, இரண்டு பெரிய கட்சிகளையும், பலவிதமான அரசியல் தலைவர்களையும், ஜனாதிபத்யம் (precidency), காங்கிரஸ், செனட் என்று பலவகையான அரசியல் கட்டமைப்புகளையும் கொண்டதும், இவர்களைத்தவிர அதிகாரிகள், உளவு நிறுவனங்கள், தூதுவர்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்று பலப்பல காரணிகளால் கட்டமைக்கப்படுவதும், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருப்பதுமான அமெரிக்காவின் சிக்கல்மிகு வெளிநாட்டுக்கொள்கையை ஒரு “(அமெரிக்கா என்ற) தனிநபர்” முடிவெடுப்பதாகவே இவர்கள் காண்கிறார்கள். அதனால், அதைச் சரியானபடி முன்கணிப்புச் (prediction) செய்யத் தவறுகிறார்கள். இப்படி இந்தச் சிக்கல்தன்மையைப் புரிந்துகொள்ளத் தவறுவது தாயகத்து தமிழர்களுக்குப் பல பின்னடைவுகளைக் கடந்த காலத்தில் கொடுத்திருக்கிறது; இனியும் கொடுக்கும்.

ரண்டாவது – புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு வெளிநாட்டுக்குச் சென்றார்கள் என்பது பற்றித் தாயகத்தில் நிலவும் எண்ணப்பாடுகள். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் “புகலிடக் கோரிக்கையாளர்களாக” வே வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்பது உண்மையே. ஆனால், எல்லோரும் அப்படிச் சென்றவர்கள் அல்ல. தாயகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த வழிமுறைகளை பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. புகலிடக்கோரிக்கையாளர்களாக அல்லது ஏதிலிகளாகச் சென்றவர்கள். இவர்களில் (i) செல்லும்போதே புகலிடக்கோரிக்கையாளர்களாக சென்றவர்கள் (ii) வேறு விசாக்களில் சென்று பிறகு ‘கையைத் தூக்கியவர்கள்’ அதாவது தாங்கள் தாயகம் திரும்ப முடியாது என்று தெரிவித்துப் புகலிடம் கோரியவர்கள் என்று இரண்டு உப பிரிவுகள் உண்டு. முதலாவது பிரிவில் (a) விமானம் மூலம் பயணம் செய்தவர்கள் (b) கப்பல் மூலம் பயணம் செய்தவர்கள் என்று மேலும் இரண்டு உப-உப பிரிவுகள் உண்டு. இந்த உப-உப பிரிவுகள் சட்டரீதியில் அதிகம் வித்தியாசப்படாதவை ஆனாலும் சில நாடுகள் ஏதிலிகளை நடத்தும் முறையில் அவர்கள் வந்திறங்கும் முறை செல்வாக்குச் செலுத்துகிறது. உதாரணமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் ஏதிலிகள் கப்பல் மூலம் பயணம் செய்யுமிடத்து அவர்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும்வரை அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள தீவுகளில் தங்கவைக்கப்படுகின்றனர் (அவர்கள் வரும் கப்பல்களை அநேகமாக நடுக்கடலிலேயே அவுஸ்திரிரேலிய சுங்கத்துறை கைப்பற்றி விடுவதால் இது சாத்தியம்). மாறாக விமானத்தில் வருபவர்கள் அவுஸ்திரெலியாவுக்கு உள்ளே உள்ள முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர்.

இரண்டாவது உபபிரிவில் அநேகமாக எல்லோருமே விமானம் மூலம் பயணம் செய்தவர்களாக இருப்பார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியதொரு முக்கியமான விடயம் என்னவென்றால் ஏதிலிகளாக இன்னொரு நாட்டுக்குச் சென்று தஞ்சம் கோருவதென்பது, அது விமானத்தில் சென்றாலென்ன அல்லது கப்பலில் சென்றாலென்ன, சர்வதேச சட்டத்தின்படி ஒரு குற்றமல்ல. அது ஒரு குற்றமாகவிருந்தால் உலக நாடுகளெதுவும் அப்படிப்பட்ட ஏதிலிகளுக்குத் தஞ்சம் வழங்கவும் மாட்டா. உண்மையாக ஏதிலிகளாக வருவோர் எந்தவிதமான விசாவுமின்றியே ஒரு நாட்டில் சென்று இறங்கிப் புகலிடம் கோருவதற்குச் சர்வதேச சட்டத்தில் இடமுண்டு. சர்வதேச சட்டத்தை எல்லா நாடுகளுமே மதிக்கக் கடமைப்பட்டவை. ஆகவே இவ்வாறு ஒரு நாட்டுக்குள் நுழைபவர்கள் “சட்டவிரோத” குடியேறிகள் அல்ல.

பிரச்சனை எங்கே வருகிறதென்றால், யார் ஏதிலிகள் என்று தீர்மானிப்பதில்தான். உண்மையாக ஏதிலி இல்லாதவொருவர் விசா இன்றி ஒரு நாட்டுக்குள் நுழைவாராயின் அது சட்டப்படி குற்றமே. எனவேதான் விசா இன்றி ஒரு நாட்டுக்குள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோருவோர், அவர்கள் ஏதிலிகள் என்று நிரூபிக்கப்படும் வரையிலும், குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர். இந்த விடயத்தில், “குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி” என்ற சட்டத்தின் அடிப்படையைப் பல அரசாங்கங்கள் (தமது அரசியல், பொருளாதார காரணங்களால்) கடைப்பிடிக்க மறுக்கின்றன. அது எவ்வாறிருந்தாலும் ஒரு நாட்டுக்குள் விசா இன்றி நுழைந்து தமது “அகதி அந்தஸ்தை” நிரூபித்தவர்கள் பின்னோக்கிப்பார்க்கும்போது (in retrospect) சட்டபூர்வமாக அந்நாட்டில் குடியேறியவர்களே. அப்படி நிரூபிக்க முடியாதவர்கள் அந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பார்கள். எனவே, புகலிடக்கோரிக்கையாளர்களாக அல்லது ஏதிலிகளாகச் சென்றவர்கள் “சட்டவிரோதக் ” குடியேறிகள் என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாயை தவறு.

ஆனால், தார்மீக ரீதியாக, ஏதிலிகளாகச் சென்று குடியேறியவர்கள் அனைவரும் ஏதிலிகள் தானா என்று கேட்டால், இது மிகச் சிக்கலான விவாதத்திற்குரிய விடயம். இதைப்பற்றி நிறையப் பேசலாம். அநேகமான இவ்வகைப் புலம்பெயர் தமிழர்கள், பலவகைப்பட்ட காரணங்களின் தொகுதிகளினாலேயே வெளிநாடு சென்றவர்கள் என்பதையும், இவற்றில் சில மட்டுமே தாயகத்தில் இவர்கள் எதிர்நோக்கிய சிரமங்களோடு தொடர்புடையவை என்பதையும் கூறி மேலே செல்வோம். ஒரே அளவில் கஷ்டங்களை அனுபவித்த நூறு தமிழ் இளைஞர்கள் இருந்தால், இவர்களுக்குள் கல்வியில் பின்தங்கியவர்கள், அதனால் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்டவர்கள், பொருளாசை சற்று அதிகம் உள்ளவர்கள், வெளிநாடுகளில் உறவினர்கள் உள்ளவர்கள், முதலிய வகையறாக்களில் வரும் ஐம்பது இளைஞர்களே வெளிநாடு செல்லும் தெரிவை அதிகமாக மேற்கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் தாம் வெளிநாடு செய்யும் முடிவை எடுக்கும்போது தாம் “ஏதிலிகள் / புகலிடக்கோரிக்கையாளர்” என்ற ரீதியிலே தான் அங்கு சென்று நுழையப்போகிறோம் என்பதை யோசிப்பது கூட இல்லை. ஆனால், இவர்கள் பெரும்பாலும் தாயகத்தில் ஒரு குறிப்பிட்டளவு கஷ்டங்களை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பது உண்மையே. எனவே, தார்மீக ரீதியில் இவர்கள் ஏதிலிகளா என்பது நிறைய விவாதிக்க வேண்டிய விடயமும் ஆளுக்காள் வேறுபடுவதும் ஆகும்.

2. “குடும்ப இணைவு” விசாக்களில் சென்றவர்கள்: இவர்களில், ஏற்கனவே ஏதிலிகளாகச் சென்று குடியுரிமை பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் திருமணம் செய்ய (மனைவிகளாக அல்லது கணவன்களாக) செல்பவர்கள், பெற்றோர் விசாவில் செல்பவர்கள் என்போர் அடக்கம். ஒருவர் குடும்ப இணைவு விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான மேல்நாடுகளில் ஏற்கனவே அங்கே இருப்பவர் என்ன அடிப்படையில் வந்தார் என்பது விசாரிக்கப்படுவதில்லை. அவருக்கும் விண்ணப்பிப்பவர்களுக்கும் உள்ள உறவு உண்மையா என்பதே ஆராயப்படுகிறது. ஆகவே இதைப்பயன்படுத்தி ஒட்டகம் மூக்கை நுழைத்ததுபோல ஒருவர் ஏதிலியாகச் சென்றபிறகு மாமன் மச்சான் என முழுக்குடும்பத்தையும் அழைத்துக்கொண்ட கதைகள் பலவுண்டு.

3. தொழில் அடிப்படைக் குடிவரவு (skilled migration ) முறையினால் சென்றவர்கள் – இவர்கள் குடியேறுகின்ற நாட்டில் இருக்கின்ற தொழில் வெற்றிடங்களின் தேவைக்கேற்ப அந்நாட்டினால் உள்வாங்கப்பட்டவர்கள். சட்டரீதியிலும், தார்மீக ரீதியிலும் இவர்கள் குடியேறிய முறைமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது (இவர்களில் பலர் தாய்நாட்டில் இலவசக்கல்வியைப் பெற்றுக்கொண்ட பிறகு வெளிநாட்டில் குடியேற எடுத்த முடிவு தார்மீக ரீதியில் சரியானதா என்பது வேறு விடயம். இங்கே நான் அவர்கள் குடியேறிய “முறை”யின் தார்மீக அடிப்படை சந்தேகமற்றது எனவே சொல்கிறேன்)

4. மாணவர் விசாக்களில் சென்று நிரந்தர வதிவுரிமை பெற்றவர்கள்: இவர்களும் ஒருவகையில் மூன்றாம் பிரிவினரே. இவர்கள் தொழில் அடிப்படைக் குடிவரவுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்கனவே தாங்கள் கல்விகற்ற வெளிநாட்டில் இருப்பார்கள் என்பதே ஒரே வித்தியாசம். இவர்கள் தாய்நாட்டில் இலவசக் கல்வியைக் குறைந்தளவுக்கே (அதாவது பல்கலைக்கழகத்திற்கு முன்பு வரை) பெற்றிருப்பார்கள் என்பது இன்னுமொரு தார்மீக வித்தியாசம்.

அநேகமாக ஆங்கிலமொழி பேசாத மேலைத்தேய நாடுகளில் முதலாம், இரண்டாம் வகைப் புலம்பெயர் தமிழர்களே மிகப்பெரும்பாலோர் என்றாலும் ஆங்கிலம் பேசும் அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூ சிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் மூன்றாம், நான்காம் வகையினரும், அவர்களின் குடும்ப உறுப்பினராகச் சென்ற இரண்டாம் வகையினரும் குறிப்பிட்டளவில் வாழ்வதை மறுக்க முடியாது. எனவே, “புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் அகதிகளாக அதாவது மனிதாபிமான அடிப்படையிலான சட்டதிட்டங்கள் மூலமே வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள்” என்ற எண்ணப்பாடு சரியல்ல.

மூன்றாவது, புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் “கோப்பை கழுவுகிறார்கள் ” (அல்லது “கழிவறை கழுவுகிறார்கள்”) என்று தாயகத்தில் நிலவும் ஒரு எண்ணம். இதை எல்லோரும் நம்புகிறார்களோ இல்லையோ, புலம்பெயர்ந்த தமிழர்களை ஏதாவதொரு காரணத்திற்காக இழிவுபடுத்திப் பேசவேண்டிய நேரத்தில் இப்படியான வசனங்களைப் பாவிக்கிறார்கள். இங்கே ஒரு விடயத்தை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கோப்பை கழுவுவதில் அல்லது கழிவறை கழுவுவதில் இழிவு ஒன்றும் இல்லை. நேர்மையாக, ஏமாற்றாமல், மற்றவனை ஏய்க்காமல்,  உழைத்து வருமானம் பெறும் தொழில்கள் யாவும் கௌரவமான தொழில்களே. இருந்தாலும், உண்மை நிலை எதுவென்று பார்த்தால் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலோர் இப்படியான வேலைகளைச் செய்வதில்லை. நான் முன்னே குறிப்பிட்டதுபோல தொழிற்திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பாலோர் தங்களது படிப்புக்கேற்ற வேலைகளைச் செய்கிறார்கள். மேலை நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகளும் மிகவும் பரந்துபட்டவை. ஆகவே, தாயகத்தில் இருந்து உயர்கல்வித் தகுதி இன்றிப் புலம்பெயர்ந்தவர்கள் பலர்கூடக் காலகதியில் வெளிநாடுகளில் உயர்கல்வித் தராதரங்கள் பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பொருத்தமான தொழில்களை மேற்கொள்கின்றார்கள். இந்த வழியில் போகாதவர்களில் மிகப்பலர் வர்த்தகம், முயற்சியாண்மை சம்பந்தப்பட்ட தொழில்களை மேற்கொண்டு முதலாளிகளாக விளங்குகிறார்கள்.

இரண்டாவது தலைமுறையினரைப் பொறுத்தவரை அவர்களில் மிக மிகப் பெரும்பான்மையானோர் உயர்கல்வி கற்று உயர்தொழில் (profession என்ற அர்த்தத்தில்) புரிபவர்களாக இருக்கிறார்கள். எனவே, கோப்பை கழுவுவது மாதிரியான தொழில்களை நிரந்தரமாகச் செய்து வயிறு கழுவுபவர்கள் மிகச் சிறுபான்மையினரே. எனவே புலம்பெயர்ந்த தமிழர்களைக் “கோப்பை கழுவுபவர்கள்”என்று அழைப்பது உண்மையுமில்லை; உண்மையாக இருப்பினும் அதில் சிறுமையொன்றுமில்லை. பல நேரங்களில், புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார ரீதியிலான நன்னிலை மீதெழும் வெறும் பொறாமையே இப்படி வெளிப்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதில் நகைமுரண் என்னவென்றால், “இழிவான” தொழில்களைச் செய்யும் புலம்பெயர் தமிழர்கள் பலருண்டு. இங்கே “இழிவான” தொழில்கள் என்று நான் குறிப்பிடுபவை கிரெடிட் கார்ட் மோசடி, சட்டவிரோத வியாபாரம், போதைமருந்து வியாபாரம் போன்ற தொழில்கள். மற்றவரின் பணத்தைப் பறித்துக்கொண்டு அவர்களின் வாழ்வை அழிக்கும் இத்தொழில்கள் உண்மையில் இழிவானவையே. எனவே, புலம்பெயர் தமிழர்களை “க்ரெடிட் கார்டு மோசடியாளர்கள்” என்று தாயகத்தில் இழித்துரைத்தால், பெரும்பாலானவர்கள் அப்படியில்லாதபோதிலும் அது ஒரு இழி தொழில் என்பதையாவது ஒத்துக்கொள்ளலாம். ஆனால், புலம்பெயர்ந்தவர்களைக் “கழிவறை கழுவுபவர்கள்” என்று அழைப்பவர்கள் அவர்களைக் “க்ரெடிட் கார்டு மோசடியாளர்கள்” என்று அழைக்காமல் இருத்தல் தாயகத்தில் நிலவும் பிற்போக்குத் தனத்தையும் போலிக் கௌரவத்தையுமே பிரதிபலிக்கிறது.

மேலும், “கோப்பை கழுவுதலை” (அல்லது “கழிவறை கழுவுதலை”) ஒரு இழிதொழிலாக நினைக்கின்ற தாயகத் தமிழர்கள் பலர் அப்படிக் கோப்பை கழுவி வந்த பணத்தை அனுபவிக்கத் தயங்குவதில்லை என்பது இன்னுமொரு நகைமுரண். இந்த இடத்தில் தாயகத்தமிழர்கள் பலர் “நாய் விற்ற காசு குரைக்காது; மீன் விற்ற காசு மணக்காது” என்பதை அப்படியே பின்பற்றுகின்றனர். தாயகத்தில் இருக்கும் பல குடும்பங்கள் (எல்லோரும் அல்ல), இன்று பிள்ளைகளுக்கு உணவில்லை என்றாலும் முதுகை வளைத்து நேர்மையாக வேலை செய்யப் போகமாட்டார்கள். தாம் விரும்பும் அல்லது தமது கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றால் “வேலை கிடைக்கவில்லை. என்ன செய்வது?” என்று சொல்லிக்கொண்டு ‘சும்மா’ இருப்பார்கள். பல்கலைக்கழகப் பட்டதாரிகள், என்னதான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டாலும் ஒரு உணவகத்தில் “கோப்பை” கழுவுவதை அல்லது ஒரு வயலில் கூலி வேலைக்குப் போவதைக் கனவிலும் கருதமாட்டார்கள். அதைவிட, தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நிறுவனங்களூடாகவோ புலம்பெயர்ந்த தமிழர்களிடம் கையேந்துவதைக் கௌரவமாக நினைக்கிறார்கள். அப்படி உதவி பெறும்போது தாம் பெற்றுக்கொள்ளும் பணம், தாம் செய்யத் தயங்கும் தொழில்களை மற்றவர்கள் செய்வதனால் அனுப்பப்படுகிறது என்பதை இவர்கள் யோசிப்பதில்லை என்பது சிரிப்புக்கும் வேதனைக்கும் உரியது.

“தொண்டரென் றோர்வகுப் பில்லை, தொழில் சோம்பலைப் போல் இழிவில்லை!!” என்று அழுத்தி உரைத்தான் பாரதி.  பதினெட்டு வயதைத்தாண்டிய ஒரு ஆண்மகனுக்குப் படு கேவலமாக இருக்கக்கூடியது ஒரு மாதமேனும் தனது வருமானமின்றி இன்னொருவரின் வருமானத்தில் சாப்பிடுவதே. அதோடு பார்க்கும்போது நேர்மையான எந்தத் தொழிலையும் செய்து உண்பதில் கௌரவக் குறைவு ஒன்றுமில்லை. இது தாயகத்தில் இருக்கும் இளைஞர்களில் பலருக்குப் புரியாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் இதைப் பெரும்பாலும் புரிந்துகொண்டு நடப்பது நல்லதென்றே கூற வேண்டும்.

நாலாவது எண்ணக்கருவை எடுத்துக்கொண்டால், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் சட்டபூர்வப் பிரஜாவுரிமை நிலையினை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

1. சிறீலங்காவின் பிரஜைகள்: இவர்களுள் கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று தங்கியிருக்கும் தமிழர்களும், நிரந்தர பதிவுரிமை (Permanent Residency) பெற்றுக்கொண்டு ஆனால் பிரஜாவுரிமை (Citizenship) பெற்றுக்கொள்ளாமல் வெளி நாடுகளில் வாழ்பவர்களும் அடங்குவர்.

2. வெளிநாட்டுப் பிரஜைகள்: புலப்பெயர்வின் பின் “உள்ளூராக்கப்படல்” (Naturalization) முறைகளில் வெளிநாட்டுப்பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டவர்களும், வெளிநாடுகளில் பிறந்து பிறப்பின்மூலம் (By birth) வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட இரண்டாம் தலைமுறைத் தமிழர்களும் இவர்களில் அடங்குவர்.

3. இரட்டைக் குடியுரிமை உடையோர்: வெளிநாடுகளில் Naturalization முறையில் குடியுரிமை பெறும்போது Retention முறையில் தங்களது ஸ்ரீலங்காக் குடியுரிமையைத் தக்க வைத்துக்கொண்டவர்களும், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றபோது ஸ்ரீலங்காக் குடியுரிமையை இழந்து பின்னர் Redemption முறையில் மீளப் பெற்றுக் கொண்டவர்களும் இவர்களில் அடங்குவர்.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் 2ம் வகையைச் சார்ந்தோரே எனினும் 1ம் மற்றும் 3ம் வகையினர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்காச் சட்டப்படி ஸ்ரீலங்காவின் பிரஜைகள். ஸ்ரீலங்காவின் பிரஜைகளுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் உடையவர்கள் (3ம் வகையினர் தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் முடியாது). அதாவது தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை, ஸ்ரீலங்காவின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ்கள் முதலியன வைத்திருக்கும் உரிமை, முதலிய அனைத்து உரிமைகளும் 1ம் மற்றும் 3ம் வகைப் புலம்பெயர் தமிழர்களுக்குச் சட்டப்படி உண்டு. ஆகவே, தாயகத்தில் நடக்கும் எந்த விடயங்கள் பற்றியும் தமது கருத்துக்களைக் கூறவும் அவர்கள் சட்டபூர்வமான உரிமை உடையவர்கள்.

2ம் வகையினருக்கு சட்டபூர்வ உரிமைகள் ஸ்ரீலங்காவில் இல்லாதபோதும் அவர்களுக்கும் தார்மீக உரிமைகள் உண்டு. இவர்கள் தாயகத்தை விட்டு “ஓடிப்போனவர்கள்” அல்லது சுயநல நோக்கத்துடன் தங்களை மட்டும் காப்பாற்றிக்கொள்ளவும் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளவும் புலம்பெயர்ந்து சென்றவர்கள் என்பதனால் இவர்கள் தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தமது கருத்துக்களை முன்வைக்க உரிமையற்றவர்கள் என்பது மாதிரியான ஒரு கருத்துநிலை இன்று சிலரால் முன்வைக்கப்படுகிறது. இதை ஏற்பதற்கில்லை. ஏனெனில், ஒருவர் தாயகத்தில் வாழ்கின்றார் என்பதனால் மட்டும் அவர் பொதுநலவாதியல்ல. புலம்பெயர்ந்து விட்டதால் மட்டும் அவர் சுயநலவாதியுமல்ல. அவரது சுயநலமும் பொதுநலமும் அவர் தாயகத்திற்கு நல்கும் பங்களிப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக பெரும்பாலான புலம்பெயர் இளைஞர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்கள் வாழ்வுக்காக என்பதைவிட குடும்பப்பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவே வெளிநாடு சென்றிருப்பார்கள். அவர்கள் அனுப்பும் பணம் அவர்கள் குடும்பங்களுக்குப் பயன்படுவதோடு மறைமுகமாக வேறு பலருக்கும் பயன்படுகிறது (ஓட்டோ சாரதி, உணவக உரிமையாளர், வீடு கட்டும் கொம்பனிகள் இப்படி இப்படி…). உண்மையில் இன்று தாயகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி வைத்திருப்பது புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் நிதிப்பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. இது ஆரோக்கியமானது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது யதார்த்தம். எனவே புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்திற்கு எந்தப்பங்களிப்பும் செய்யாத சுயநலமிகள் என்று யாரும் சொல்லிவிட முடியாது. “எங்களது குடும்பம் புலம்பெயர்ந்தவர்கள் பணத்தில் வாழவில்லை” என்றும் யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் தாயகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பொருளாதார மேம்பாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர்கள் நிதிப்பங்களிப்பு உதவுகிறது. ஏனெனில் தொழில்முயற்சியாளர்கள் புலம்பெயர்ந்தோர் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தை அல்லது புலம்பெயர் ‘உல்லாசப்பயணிகளின்’ வரவை நம்பியே பல தொழில்களை மேற்கொள்ளுகின்றனர். இவர்கள் கொடுக்கும் வரிகள் தான் சிறிலங்கா அரசின் திறைசேரியை ஓரளவுக்கு நிரப்புகின்றன. அதிலிருந்துதான் அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம்கூட வருகிறது.

இன்றைக்கு, புலம்பெயர் தமிழர்கள் செய்யும் நிதிப்பங்களிப்பு சடுதியாக நிறுத்தப்பட்டால் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பொருளாதாரமும், பொதுவாக ஸ்ரீலங்காவின் பொருளாதாரமும் கூட அதலபாதாளத்திற்குச் செல்லும் என்பதும், ஸ்ரீலங்காவில் சட்டபூர்வக் குடிகளாக வாழும் ஒவ்வொருவரும் (இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால்) இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதும் மறுக்க முடியாத யதார்த்தங்களாகும். இவ்வுண்மையை ஸ்ரீலங்காவின் அரசாங்கங்கள் கூட அறிந்திருப்பதனால்தான் இரட்டைக்குடியுரிமை முதலிய சலுகைகளைப் புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்குகின்றன. எனவே தாயகத்தில் இருந்து ஒலிக்கும் சில தமிழ்க்குரல்கள் இதை மறுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

அதேவேளை, தாயகத்தில் வாழ்ந்துகொண்டு தன் சம்பளம், தன் குடும்பம், தன் வீடு என்று சமூகப்பணிகள் எதுவும் செய்யாமல் வாழும் ஒருவர் தாயகத்திற்குப் பெரிய சேவை செய்கிறார் என்று சொல்லிவிட முடியாது. அவர் செய்யும் ஒரேயொரு சேவை அவரது “இருப்பு” மட்டும்தான். இது ஒரு சேவைதான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் “இருப்பு” இல்லாமற்போய்விட்டால் அதை மீளப்பெற்றுக்கொள்வது மிகக்கடினம். யூதர்களைக் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஆனால் இந்த “இருப்பு” என்ற சேவையானது பல புலம்பெயர் தமிழர்கள், அமைப்புகள் செய்யும் சேவையைவிடச் சிறந்தது என்றோ, அதனால் மட்டும் அவருக்குத் தாயக நிலைகள் பற்றிச்சொல்லும் தார்மீக உரிமை புலம்பெயர்ந்தவர்களைவிட அதிகரித்து விடுகிறது என்றோ எடுத்தவுடன் சொல்லிவிட முடியாது.

உதாரணமாக, தாயகத்திலேயே வாழ்ந்து தமது தொழிலைச் செய்து வரும் வைத்திய நிபுணர்களை எடுத்துக் கொள்வோம். இவர்களில், கண்கண்ட தெய்வங்களாக விளங்கிப் பல கஷ்டங்களுக்கிடையில் சேவைகள் செய்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றிவரும் பல வைத்திய நிபுணர்கள் உண்டு. இலாபத்தை மட்டுமே மனதில் வைத்து, ஒரு வைத்தியர் செய்யக்கூடாத விடயங்களைச் செய்து தமது உன்னதமான தொழிலுக்கு அபகீர்த்தி தேடித்தரும் வைத்திய நிபுணர்களைப் பற்றியும் நிறையக் கேள்விப்படுகிறோம். இந்த இரண்டாவது பிரிவினர் தாயகத்தில் வாழ்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் செய்வதைச் “சேவை” என்றோ, தாயகத்திலுள்ள பிரச்சனைகள் பற்றிப் பேசுவதற்கு அவர்களுக்குச் சிறப்பான “தார்மீக உரிமை” உண்டு என்றோ சொல்லிவிட முடியுமா? மேலும், அவர்கள் நோயாளிகளிடம் பெருந்தொகையாக அறவிடும் பணம் உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்புவது அல்லவா? புலம்பெயர் சமூகம் இல்லாவிட்டால் தாயகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வைத்திய நிபுணர்களின் கட்டணங்களைக் கொடுக்க முடியுமா? பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவத்தைத் தவிர்த்து அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கே போயிருப்பார்கள். எனவே முதலாவது பிரிவு வைத்திய நிபுணர்கள் தாயகத்தில் சேவை செய்பவர்களாக இருக்கும் அதேவேளை, இரண்டாவது பிரிவினர் சேவை எதுவும் செய்யாததோடு மறைமுகமாகப் புலம்பெயர்ந்தவர்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களாகவே உள்ளனர்.

இதேவேளை, கொழும்பு முதலிய பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கு, முக்கியமாக அவர்கள் யாழ்ப்பாணம் முதலிய பிரதேசங்களில் இருந்து “இடம்பெயர்ந்து” சென்றவர்களாக இருந்தால், புலம்பெயர்ந்த தமிழர்களை “ஓடிப்போனவர்களாக” வர்ணிக்கும் தார்மீக உரிமை உண்டா என்பது இன்னுமொரு பெரிய விவாதம். ஏனெனில் பங்களிப்புகள் ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ‘ஓடுவதற்கும்’ யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ‘ஓடுவதற்கும்’ அடிப்படையில் வித்தியாசமுண்டா என்பது பெரிய விவாதத்திற்குரியது. இதில் ஒன்றை ‘இடம்பெயர்தல்’ என்றும் இன்னொன்றைப் ‘புலம்பெயர்தல்’ என்றும் லேபல் ஒட்டலாமா என்பதும் விவாதத்திற்கு உரியதே.

எனவே, சுருக்கமாகப் பார்ப்பின் தாயகத்திற்குப் பிரயோசனமான, பொருத்தமான சேவைகளைச் செய்கின்றவர்கள் சிலர் தாயகத்தில் வாழ்கிறார்கள்; புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிலர் வாழ்கிறார்கள். அதேபோல, தமது சமூகத்தின் நன்மையைப் பற்றிக் கவலையின்றிச் சுயநலமிகளாக வாழ்கின்றவர்கள் பலர் தாயகத்தில் வாழ்கின்றார்கள்; புலம்பெயர்ந்த நாடுகளிலும் அப்படிப் பலர் வாழ்கின்றார்கள். சமூகத்திற்கு, தாயகத்திற்குப் பயனுள்ள சேவைகளை செய்கின்றவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தாயகத்தில் நடைபெறும் விடயங்கள் குறித்துத் தமது கருத்துக்களைக் கூறத் தார்மீக உரிமை உண்டு என்பதும், தம் நலத்தையே கவனித்துக்கொண்டு சுயநலமிகளாக வாழ்கின்றவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தாயக நிகழ்வுகள் பற்றி அபிப்பிராயம் சொல்லும் தார்மீக உரிமை இல்லையென்பதும் வெளிப்படை. ஆகவே, கருத்துக்களைச் சொல்லும் தார்மீக உரிமையானது ஒருவர் தாயகத்திற்குச் செய்யும் சேவைகளைக் குறித்தே தீர்மானிக்கப் படுகின்றதன்றி அவர் எங்கே வாழ்கின்றார் என்பதைக் குறித்தல்ல. எனவே, புலம்பெயர் தமிழர்களில் பலருக்குத் தாயகத்தில் நிகழும் நிகழ்வுகள் பற்றி கருத்துகள், ஆலோசனைகள், அபிப்பிராயங்களை முன்வைக்கும் சட்டபூர்வமான உரிமை அல்லது தார்மீக உரிமை அல்லது இரண்டும் உண்டு.

புலம்பெயர் தமிழர்களைப்பற்றித் தாயகத்தில் நிலவும் சில தவறான அபிப்பிராயங்களைப்பற்றியும், அவற்றில் சில எவ்வாறு புலம்பெயர் தமிழர்களைத் தேவைக்கு மேல் உயர்த்தியும் வேறு சில அவர்களைத் தேவைக்குமேல் தாழ்த்தியும் வைத்திருக்கின்றன என்பதையும் மேலே கண்டோம். சுருக்கமாகச் சொன்னால் “வெளிநாடு” என்பது சொர்க்கமும் அல்ல; நரகமும் அல்ல. இந்தப் பரந்த உலகத்தின் மிகப்பெரும் பகுதியை “வெளிநாடு” என்ற எண்ணக்கருவிற்குள் அடைத்துவிட்டு உலகின் மிகமிகச் சிறிய பகுதியான தாயகத்தில் வாழ்பவர்கள் அதைப்பற்றிப் பொதுமைப்படுத்தப்பட்ட கருதுகோள்களை உருவாக்குவதே தவறானது. புலம்பெயர் தமிழர்களின் புலப்பெயர்வு அனுபவங்களும், வாழ்பனுபவங்களும், தகுதிப்பாடுகளும் பல்வகையானவை. அவற்றின் பல்வகைத்தன்மையைத் (diversity) தாயகத் தமிழர்கள் விளங்கிக்கொள்வது அவசியம். அதேபோல, புலம்பெயர் தமிழர்கள் பணம் அனுப்புவதால் மட்டும் தாயகத்தமிழர்களுக்கு எஜமானர்கள் அல்ல. புலம்பெயர் நாடொன்றில் வாழ்வது விசேட தகுதியுமல்ல. அதேவேளை, புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களுக்குச் சேவைசெய்யும் அடிமைகளல்ல. தங்கள் கருத்துக்களைச் சொல்ல உரிமையற்ற “ஓடிப்போனவர்க”ளுமல்ல. அவர்கள் தாயகத்தின் வளர்ச்சியிலும் வாழ்விலும் அக்கறை கொண்ட,  உரிமைகளும் கடமைகளும் உடைய, சமத்துவமான பங்காளிகள். புலம்பெயர் தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் இந்தச் சமத்துவ அடிப்படையில் பரஸ்பர மரியாதையோடு இடம்பெறுவது பயன்தரும்.

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.